இலங் கையும் மெக்ஸிக்கோவும் ஊடகவியலாளர்களுக்கு மிகவும் ஆபத்தான நாடுகள் என எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது. காணாமற் போன ஊடகவியலாளர்கள் தொடர்பான 26 ஆவது சர்வதேச தினம் நினைவு கூரப்படுவதையொட்டி விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருடக்கணக்காக காணாமற் போனோர் தொடர்பாக எதுவும் அறியப்படவில்லை. அதே போல் கடத்தப்பட்ட அல்லது கைது செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் எங்கு வைக்கப்பட்டுள்ளார்கள் என்பதும் தெரியவில்லை எனவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரச முகவர்களால் இத்தகைய செயல்கள் மேற்கொள்ளப்படுகின்றனவா? அல்லது உள்ளூர் பயங்கர குற்றவாளிகள் தமது வெற்றிகளுக்காகக் கடத்துகிறார்களா?
ஊடக சுதந்திரத்திற்கு எதிரானவர்களாலேயே அநேக காணாமற் போன சம்பவங்கள் நிகழ்ந்துளளன என்பது தெளிவாகியுள்ளது. காணாமற்போன ஊடகவியலாளர்களின் குடும்பங்களுக்காக நாம் கவலை கொள்கிறோம். அவர்களின் துயரத்தில் பங்கு கொள்கிறோம். நிச்சயமற்ற நிலையில், அவர்களின் விதி என்ன என்பது புரியாத சூழ்நிலையில் அவர்கள் காத்து
இருக்கிறார்கள் என்று சுதந்திர ஊடக உலக அமைப்பு தெரிவித்துள்ளது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காணாமற் போனோர் தொடர்பில் முறையான நடவடிக்கைகளை மேற்கொண்டு அதற்கு பொறுப்பானவர்களை தண்டனைக்கு உட்படுத்த வேண்டுமென நாம் வற்புறுத்துகிறோம். பலவந்தமாகக் கடத்தப்படுவோரின் பாதுகாப்புக்கான சர்வதேச மாநாட்டில் கையெழுத்திட்ட நாடுகள் சட்டத்தை விரைவாக நடைமுறைப்படுத்தி சாத்தியமான நடவடிக்கைகளை உடன் மேற்கொள்ள வேண்டுமெனவும் நாம் கோருகிறோம் என்று அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
மெக்ஸிக்கோவில் 2000 ஆம் ஆண்டு முதல் எட்டு ஊடகவியலாளர்கள் காணாமல் போயுள்ளனர். ஊடகவியலாளர்களுக்கு ஆபத்தான நாடாக இது விளங்குகிறது.
மொரிசியோ எஸ்ட்ராடா சாமோரா எனும் ஊடகவியலாளர் 2008 பெப்ரவரி 12 முதல் காணாமல் போயுள்ளார். வாரப் பத்திரிகையொன்றின் ஆசிரியர் 20 நவம்பர் 2006 இல் காணாமல் போயுள்ளார். கைத்தொலைபேசி மூலம் இரவு 7.15 மணிக்கு கிடைத்த அழைப்பொன்றின் பேரில் ஒருவரைச் சந்திக்கச் சென்றவர் மாயமானார். 7.30 மணிக்கு அவரது மகனுக்கு அழைப்பொன்று வந்தது. ஆனால் சில குரல்கள் அதனை தடை செய்யுமாறு கூறுவது அவரது மகனுக்குக் கேட்டது. அதற்கு மேல் எவ்விதத் தகவலும் இல்லை.
2009 ஜனவரியில் சர்வதேச சுதந்திர ஊடக அமைப்பின் குழு இலங்கையின் கடத்தல், காணாமல் போதல் தொடர்பான கலாசாரத்தைக் கண்டனம் செய்தது. ஊடகவியலாளர் சுப்பிரமணியம் இராமச்சந்திரன் இராணுவத்தால் கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்ட 2007 பெப்ரவரி 15 முதல் எவ்விதத் தகவலும் அவரது குடும்பத்தாருக்குத் தெரியவில்லை. இராணுவம் இதில் சம்பந்தப்படவில்லை என மறுத்தது. வடிவேல் நிமலராஜன் இவர் உதவி ஆசிரியராகக் கடமை புரிந்தவர். 2007 நவம்பர் 17 முதல் காணாமற் போனார். கடத்தப்பட்டதாக நண்பர்கள் நம்புகிறார்கள்.
ஈரானில் பிரோஸ்தவானி எனும் ஆசிரியர் 1998 ஆகஸ்ட் இறுதியில் வீட்டிலிருந்து சென்றவர் திரும்பி வரவில்லை. அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கைகள் மேற்கொண்டதாக அறிகுறி இல்லை.
2000 ஆம் ஆண்டு நவம்பர் இறுதியில் ஊடகவியலாளர் அக்பர் கான்ஜி மாயமானார். கொலையொன்றில் அமைச்சரின் தொடர்பு குறித்து இவர் எழுதியிருந்தார்.
காம்பிரியாவில் எப்லிமா மன்னே எனும் ஊடகவியலாளர் 2006 ஜூலை 7 முதல் காணாமல் போனார். அன்று முதல் அவர் குறித்த தகவல் இல்லை. ஆபிரிக்கக் கண்டத்தின் எரித்திரியாவில் பல ஊடகவியலாளர்கள் 2001 முதல் கைது செய்யப்பட்டனர். அவர்களின் இருப்பிடம் எங்கே என்பது குறித்தோ அவர்களது நிலைமை என்ன என்பது பற்றியோ எதுவித தகவலும் அவர்களது குடும்பத்தாருக்குத் தெரியாது. தலைநகர் அஸ்மாராவில் உள்ள அதிகாரிகள் இவ்விடயத்தில் “மௌனம்’ சாதிக்கிறார்கள்.