September

September

உ/த பரீட்சை வினாத்தாள் திருத்தும் 2ம் கட்டம் ஆரம்பம் – ஆறாயிரம் பேர் பணியில்

150909students.jpgக. பொ. த. உயர்தரப் பரீட்சை வினாத்தாள் திருத்தும் இரண்டாம் கட்ட நடவடிக்கைகள் நேற்று முதல் ஆரம்ப மானதுடன் ஆறாயிரம் பேர் இதற்கென ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இம்மாதம் 25 ஆம் திகதி வரை இவ்வினாத்தாள் திருத்தும் நடவடிக்கைகள் தொடருமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அனுர எதிரிசிங்க தெரிவித்தார்.

நாடளாவிய 15 நகரங்களிலுள்ள 20 நிலையங்களில் இந்நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதுடன் இதற் கென ஆறாயிரம் பேரை நியமித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அத்துடன், வினாத்தாள் திருத்தும் முதலாம் கட்ட நடவடிக்கைகள் ஆகஸ்ட் 30 ஆம் ஆரம்பமாகி நேற்று முன்தினம் 13 ஆம் திகதியுடன் நிறைவு பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த வருடம் க. பொ. த. உயர்தரப் பரீட்சை வினாத் தாள் திருத்தும் நடவடிக்கைகள் இரண்டு மாதங்கள் தாமதமடைந்தன. இதற்கு சில ஆசிரிய தொழிற்சங்கங்கள் மேற்கொண்ட தொழிற்சங்க நடவடிக்கைகளே காரணம் எனத் தெரிவித்த அவர், இம்முறை சகல ஆசிரியர்களும் பூரண ஒத்துழைப்பை வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அதனால் இம்முறை பரீட்சை முடிவுகளை குறிப்பிட்ட தினத்தில் வெளியிட முடியுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அமெரிக்க பகிரங்க டென்னிஸ்: கிலிஸ்டர்ஸ் சாம்பியன்

150909kilista.jpgஅமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டியின் பெண்களுக்கான இறுதிப் போட்டியில் பெல்ஜியம் வீராங்கனை லிஸ்டர்ஸ் சம்பியன் பட்டம் பெற்றார். அதன் விபரம் வருமாறு:

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயோர்க் நகரில் நடைபெற்று வருகிறது. பெண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டி நேற்றுக் காலை நடந்தது. இதில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான கிம்கிலிஸ்டர்ஸ் (பெல்ஜியம்), 9ம் நிலை வீராங்கனையான கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்) மோதினார்கள்.

கிலிஸ்டர்சின் தாக்குதல் ஆட்டத்துக்கு கரோலினால் ஈடுகொடுத்து விளையாட முடியவில்லை. கிலிஸ்டர்ஸ் 7-5, 6-3 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று சம்பியன் பட்டம் பெற்றார்.

அவர் கைப்பற்றிய 2வது கிராண்ட்சிலாம் பட்டம் இதுவாகும். இதற்கு முன்பு 2005 ஆம் ஆண்டு அமெரிக்க பகிரங்க பட்டத்தை வென்று இருந்தார்.

வீதி விபத்தால் படுகாயமடையும் ஒருவருக்கு…ரூ. 10 இலட்சம் முதல் ஒரு கோடி வரை அரச ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைச் செலவு

திடீர் வீதி விபத்து காரணமாக வருடா வருடம் இலங்கையில் 2000-3000க்கும் இடைப்பட்ட எண்ணிக்கையானோர் உயிரிழப்பதாகத் தெரிய வந்துள்ளது. அதேநேரம் திடீர் வீதி விபத்தினால் சுமார் ஐம்பதினாயிரம் பேர் வருடாந்தம் காயமடைவதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

திடீர் வீதி விபத்துகளில் பெரும்பாலானவற்றுக்கு சாரதிகளின் கவனயீனமே காரணம் என்பதும் தெரிய வந்துள்ளது. வீதி விபத்துகளினால் காயமடைகின்ற ஒருவருக்கு அரசாங்க ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கவென பத்து இலட்சம் முதல் ஒரு கோடி ரூபா வரை செலவாகுவதாக அரசாங்க சுகாதாரத் துறை யினால் கணக்கிடப்பட்டிருக்கின்றது.

இதன் காரணத்தினால் சாரதிகளின் கவனயீனத்தால் காயமடைகின்றவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு செல வாகின்ற செலவுத் தொகையை சாரதிகளிடமோ,  அல்லது வாகன உரிமையாளர்களிடமோ இருந்து அறவிடுவது குறித்து சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை கவனம் செலுத்தியுள்ளது.

இது விடயமாக சட்ட மா அதிபருடன் ஆலோசனை நடத்துமாறு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இதனடிப்படையில் தேவைப்படும் பட்சத்தில் சட்டத்தில் திருத்தமும் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சின் அதிகாரியொருவர் நேற்று கூறினார்.

வவுனியாவில் இருந்து திரும்பிய அகதிகள் இரு தினங்களில் விடுவிக்கப்படுவார்கள் – அமைச்சர் முரளிதரன்

140909karuna.jpgவவுனியா இடைத்தங்கல் முகாம்களில் இருந்து மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கு கொண்டுவரப்பட்டு, இதுவரை விடுதலை செய்யப்படாமல் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மக்களை இரு நாட்களுக்குள் விடுதலை செய்வதாக கிழக்கு மாகாண ஆளுநர் உறுதி வழங்கியுள்ளதாக தேசிய நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

வவுனியா முகாம்களில் இருந்து விடுதலை செய்யப்பட்டு மட்டக்களப்பு மாவட்டத்துக்கு கொண்டுவரப்பட்ட சில இடம்பெயர்ந்த குடும்பங்கள், விடுவிக்கப்படாமல் மட்டக்களப்பில் இடைத்தரிப்ப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ளனர். அதேபோல அம்பாறை மாவட்டத்துக்கு கொண்டுவரப்பட்ட சில குடும்பங்கள் முதலில் விடுவிக்கப்பட்டாலும், பின்னர் மீண்டும் அழைக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து முரளிதரனிடம் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இவர்களுக்கான சில பதிவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதாகவும், அதற்காகவே பாதுகாப்பு தளபதியின் வேண்டுகோளுக்கிணங்க அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், இருந்தபோதிலும், அவர்கள் இரு தினங்களில் விடுவிக்கப்படுவார்கள் என்று ஆளுனர் உறுதி கூறியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அரசின் முக்கிய அரசியல் பிரமுகரை படுகொலை செய்யும் திட்டம் அம்பலம்

அரசாங்கத்தின் முக்கிய அரசியல் பிரமுகர் ஒருவரைப் படுகொலை செய்ய முயற்சிகளை மேற்கொண்டிருந்த பெரும்பான்மை இன சர்வதேச நபர் ஒருவரை கொழும்பு பயங்கரவாத ஒழிப்பு விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

மேற்படி சந்தேக நபர் தென் மாகாண சபை தேர்தல் நடவடிக்கைகளில் ஒத்துழைப்பு வழங்கும் போர்வையில் இத்தகைய திட்டத்தைத் தீட்டியுள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளன.

தென் மாகாண சபை தேர்தல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சமயம் மேற்படி விசாரணைப் பிரிவினர் கடந்த 12ம் திகதி அந்நபரைக் கைது செய்துள்ளனர்.

ஏற்கனவே பயங்கரவாத ஒழிப்பு விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள புலி சந்தேக நபரிடம் விசாரணை செய்தபோதே அவர் மேற்படி பெரும்பான்மை இன சந்தேக நபர் சம்பந்தமான தகவல்களை வெளியிட்டுள்ளார்.

பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த அந்த சந்தேக நபர் தென் மாகாண சபை தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர் ஒருவருக்கு ஒத்துழைப்பு வழங்கும் தோரணையில் செயற்பட்டுள்ளார். இவர் வேறொரு கொலைக்கும்பலின் கைக் கூலியாக முக்கிய அரசியல் பிரமுகர் ஒருவரைக் கொலை செய்வதற்கான ஒப்பந்தத்தைப் பொறுப்பேற்றுள்ளார் எனவும் விசாரணைகளிலிருந்து தெரியவருகிறது.

பயங்கரவாதம், பாதாள உலகக் கோஷ்டி போன்றவற்றை ஒழித்து நாட்டில் அமைதியை ஏற்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் அரசியல் பிரமுகர்களைப் படுகொலை செய்வதற்கு சர்வதேச மற்றும் தேசிய ரீதியில் அமைப்புகள் செயற்பட்டு வருவதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.

மேற்படி சந்தேக நபர் அவ்வமைப்புகளின் ஒப்பந்தக்கார ராக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரிலேயே அந் நபரிடம் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அந்நபர் தொடர்பான சகல தகவல்களையும் வெளியிடுவது தொடரும் விசாரணைகளுக்குத் தடையாக அமையலாம் என்பதால், விசாரணையின் முடிவில் முழுமையான தகவல்களை வெளியிட முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

முகாம்களில் உள்ள உறவினர்களை மீட்க இரண்டாயிரம் விண்ணப்பங்கள்

101009displacedidps.gifவவுனியா தடுப்பு முகாம்களில் உள்ள தமது உறவினர்களை மீட்டுச் செல்வதற்காக சுமார் இரண்டாயிரம் பேர் தமது விண்ணப்பங்களை பிரதேச செயலங்களுக்கு அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் அடிப்படையில் யாழ்ப்பாண செயலகத்திற்கு ஆயிரம் விண்ணப்பங்களும் வவுனியா செயலகத்திற்கு ஆயிரம் விண்ணப்பங்களும் கிடைத்துள்ளதாக குறித்த செயலக தரப்புகள் தெரிவித்துள்ளன.

சச்சின் யோசனைக்கு பாக். ஆதரவு

ஒருநாள் போட்டிகளை 4 இன்னிங்ஸ் கொண்டதாக மாற்ற வேண்டும் என்று சச்சின் டெண்டுல்கர் கூறிய யோசனைக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை ஆதரவு தெரிவித்துள்ளது.

20 ஓவர் போட்டிகளில் செல்வாக்கு காரணமாக ஒருநாள் போட்டிகள் அழிந்து விடும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஒருநாள் போட்டிகளில் ஆர்வத்தை ஏற்படுத்த மாற்றம் தேவை என்றும் 25 ஓவர்கள் கொண்ட 4 இன்னிங்ஸ்களாக ஒருநாள் போட்டிகளை நடத்தலாம் என்றும் இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் யோசனை கூறியிருந்தார்.

இந்த யோசனைக்கு பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை உள்நாட்டு போட்டி தலைவர் சுல்தான் ரானா, சச்சின் யோசனையை வரவேற்றுள்ளார்.

இந்த யோசனை மிகவும் சரியானது என்று கூறியுள்ள அவர், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அனுமதித்தால் இந்த முறையில் ஒருநாள் போட்டிகளை சோதனை முறையில் நடத்திப் பார்க்க பாகிஸ்தான் தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.

சச்சின் இந்த யோசனையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பரிசீலிக்க இருப்பதாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வவுனியா நகரசபை உறுப்பினரின் பதவி ஏற்பு விழா

வவுனியா நகரசபைக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பதவி ஏற்பு விழா நேற்று மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றது.

இங்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஐவரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவரும் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.

பிரதான வைபவம் நகர சபை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா சம்பந்தன் முன்னிலையில் இவர்கள் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.

நகர சபைத் தலைவராக முன்மொழியப்பட்ட எஸ். என். ஜி. நாதன் உட்பட உப தலைவர் மு. முகுந்தரதன், ஏனைய கூட்டமைப்பு உறுப்பினர்கள் இ. சிவகுமாரன், செ. சுரேந்திரன், ஐ. கனகசபை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் அப்துல் லத்தீப் முனைவர் ஆகியோர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற குழுத் தலைவர் சம்பந்தன் முன்னிலையில் சத்திய பிரமாணம் செய்து கொண்டனர்.

சம்பியன்ஸ் கோப்பையை வெல்வதே இலக்கு – யூனிஸ்கான் விருப்பம்

இங்கிலாந்தில் நடந்த 20 மூவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் யூனிஸ்கான் தலைமையிலான பாகிஸ்தான் அணி ‘சம்பியன்’ பட்டம் வென்றது.

தென்னாபிரிக்காவில் வருகிற 22 ஆம் திகதி தொடங்கும் சம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பாகிஸ்தான் அணி தயாராகி வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் அணி கப்டன் யூனிஸ்கான் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஒவ்வொரு கப்டனும் மனதில் சில இலக்குகளை வைத்து இருப்பார்கள். என்னை பொறுத்தமட்டில் வருகிற சம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி அல்லது 2011 ஆம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் வெல்ல வேண்டும் என்பது இலக்காகும். இந்த ஆண்டு இறுதியில் நாங்கள் அவுஸ்திரேலியா சென்று விளையாட உள்ளோம்.

நாங்கள் அவுஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்றதில்லை. இந்த போட்டித் தொடரில் அந்த குறையை போக்கும் நல்ல வாய்ப்பாகும் என்று நினைக்கிறேன் என்றார்.

சட்டவிரோத நிதி கம்பனிகள் மீது நடவடிக்கை : இலங்கை மத்திய வங்கி

central-bank-of-sri-lanka.jpgநாட்டில் சட்டவிரோதமாக இயங்கிவரும் நிதி கம்பனிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இவ்வாறு 21 சட்டவிரோதமான நிதி கம்பனிகள் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை குறித்த மதிப்பீடுகள் நீதி மன்றத்தில் சமரிப்பிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.