September

September

சரணடைந்த புலி உறுப்பினர்களைப் புனர்வாழ்வு முகாமில் சேர்க்குமாறு நீதிமன்றம் உத்தரவு

999.jpgஇராணு வத்தினரிடம் சரணடைந்திருக்கும் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களைப் புனர்வாழ்வு முகாமில் சேர்க்குமாறு கொழும்பு நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன்படி வன்னியில் விடுதலைப் புலிகளிடம் இராணுவப் பயிற்சி பெற்றதாகக் கூறப்படும் 49 புலி உறுப்பினர்களை வெலிக்கந்தை புனர்வாழ்வு முகாமில் சேர்க்குமாறு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை இராணுவம் தனது கட்டுபாட்டின்கீழ் கொண்டுவந்த போது, கடந்த மே மாதம் இராணுவத்தினரிடம் சரணடைந்தததாகக் கூறப்படும் 49 விடுதலை புலிகள் உறுப்பினர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்

ஸ்வைன்: இந்தியாவில் 154 பலி

swine.jpgபன்றி காய்ச்சல் நோய்க்கு நேற்று மகாராஷ்டிராவில் 5, கர்நாடகாவில் 4 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து இந்தியாவில் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 154 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் நேற்று நாடு முழுவதும் சுமார் 176 பேருக்கு பன்றி காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் அதிகபட்சமாக 68 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கர்நாடகாவில் 32, மகாராஷ்டிராவில் 26, தமிழகத்தில் 19 மற்றும் ஹரியானாவில் 14 பேருக்கு பரவியுள்ளது. இதையடுத்து இந்தியா முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,611 ஆக அதிகரித்துள்ளது.

கேமராமேனை அடிக்கவில்லை: ஹர்பஜன் சிங் விளக்கம்

கேமராமேனை நான் அடிக்கவில்லை என்று இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கூறினார். ஹர்பஜன் சிங், புதன்கிழமை பெங்களூர் விமான நிலையத்துக்கு வந்தபோது கேமராமேனை அடித்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து வியாழக்கிழமை அவர் கூறியதாவது: நான் கேரமாமேனை அடிக்கவில்லை. விமானநிலையத்துக்கு நான் வந்து காரிலிருந்து இறங்கியபோது எனது தலையில் வேகமாக ஏதோ பட்டது. அது கேமரா என்று அறியாமலேயே அதை நான் தள்ளிவிட்டேன். நான் அவரை அடிக்கவில்லை என்றார் அவர்.

மக்கள் விடுதலை முன்னணி வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. – அவசர காலச் சட்டம் 87 மேலதிக வாக்குளால் நிறைவேற்றம்!

26parliament.jpgஅவசர காலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிப்பதற்கான பிரேரணை 87 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டது. அவசரகாலச் சட்டத்துக்கு ஆதரவாக 100 வாக்குகளும் எதிராக 13 வாக்குகளும் செலுத்தப்பட்டன.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரேரணைக்கு எதிராக வாக்களித்ததுடன் மக்கள் விடுதலை முன்னணி வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.

ஓமந்தையில் 27 கி.மீற்றரில் கண்ணி அகற்றல் பூர்த்தி – 26,734 மிதிவெடிகள், பெருமளவு ஆயுதங்கள் ஓமந்தையில் மீட்பு

100909kanni.jpgபுலிகளின் பாரிய ஆயுதக் களஞ்சியம் ஒன்றை வவுனியா, ஓமந்தை பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நேற்றுக் காலை கண்டுப்பிடித்துள்ளனர். இந்தப் பிரதேசத்தில் மேற்கொண்ட பாரிய தேடுதல்களின் போது புலிகளால் நிலத்திற்கு அடியில் புதைத்துவைக்கப்பட்டிருந்த 26 ஆயிரத்து 734 மிதிவெடிகள், 90 கிலோ எடையுள்ள அதிசக்திவாய்ந்த கிளேமோர் உட்பட பெருந்தொகையான ஆயுதங்களை மீட்டெடுத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

ஓமந்தை பிரதேசத்தில் நிலைகொண்டிருந்த பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து அந்தப் பிரதேசத்தில் பாரிய தேடுதல்களை மேற்கொண்டுள்ளனர். இதன் போதே நிலத்துக்கடியில் புலிகளால் ஆயுதக் களஞ்சியம் ஒன்று அமைக்கப்பட்டிருந்ததை கண்டுப் பிடித்துள்ளனர். இந்த களஞ்சிய சாலையில் 26,734 மிதிவெடிகளை புலிகள் மறைத்து வைத்துள்ளனர். இதேவேளை அந்தப் பிரதேசத்தின் மற்றுமொரு பகுதியிலிருந்து ரி.என்.ரி. ரக அதி சக்திவாய்ந்த வெடிமருந்துகள் நிரப்பப்பட்டிருந்த 90 கிலோ எடையுள்ள கிளேமோர் குண்டு-01, 20 அடி உயரமும், 20 அடி சுற்றளவையும் கொண்ட சக்தி வாய்ந்த குண்டு- 01, ரி-56 ரக துப்பாக்கிகள்-46, எஸ்.எல்.ஆர். துப்பாக்கிகள்-05, ரி-81 ரக துப்பாக்கிகள் உட்பட பல வகையான பொருட்களை மீட்டெடுத்துள்ளனர்.

இந்த ஆயுதக் களஞ்சியத்தை பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்து மீட்டெடுத்ததன் மூலம் பாரிய அழிவுகளை தவிர்க்க முடிந்துள்ளது என்றும் பிரிகேடியர் மேலும் தெரிவித்தார். எஞ்சிய பிரதேசங்களில் இதுபோன்ற ஆயுதங்கள் மற்றும் அதிசக்தி வாய்ந்த குண்டுகள் புதைத்து அல்லது மறைத்து வைக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டுப்பிடிக்கும் பொருட்டு விசேட அதிரடிப் படையினர் அந்தப் பிரதேசத்தில் தொடர்ந்தும் தேடுதல்களை மேற்கொண்டுள்ளதாகவும் பிரிகேடியர் உதய நாணயக்கார மேலும் குறிப் பிட்டார்.

ஓமந்தை- மணலாறு (வெலிஓயா) வீதியில் 27 கி. மீ. தூரத்திற்கு கண்ணி வெடிகள் அக ற்றும் பணிகள் பூர்த்தியடைந்துள்ளதாக விசேட அதிரடிப்படையினர் அறிவித்துள்ளனர்.

வடக்கு வசந்தம் திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்டத்தில் கண்ணிகளை அகற்றும் பொறுப்பு விசேட அதிரடிப்படையினரிடம் ஒப்படைக்கப் பட்டிருந்தது. 27 கி. மீ. தூரத்தை கண்ணிகள் அற்ற பிர தேசமாகப் பிரகடனப்படுத்தியுள்ள விசேட அதிரடிப்படையினர் புளியங்குளம் நோக்கிய ஓமந்தை பணிக்கணை வீதியில் மீட்புப் பணிகளை ஆரம்பித்துள்ளனர்.

இதன்படி, ஆலங்குளம், நாவக்குளம் சந்தி, சின்னப்பிள்ளையார் குளம், கோவில் சந்தி, புளிந்தகுளம், நெடுங்குளம் பகுதிகள் பாதுகாப்பான பிரதேசங்களென விசேட அதிரடிப்படையினர் அறிவித்துள்ளனர். இதேவேளை விமானங்களுக்கு பயன் படுத்தப்படும் ஐந்து கலன் எரிபொருள்கள் மற்றும் எம். ரி. ரக 189 காஸ் சிலிண்டர்களை பாதுகாப்புப் படையினர் மீட்டெடுத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். மீட்டெடுக்கப்பட்ட ஒவ்வொரு கலன்களிலும் 18.9 லீட்டர் எரிபொருள் வீதம் 100 லீட்டர் எரிபொருட்களை இராணுவத்தினர் மீட்டெடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

குப்பிளான் பிரதேசத்திலிருந்து எரிபொருள் கலன்களையும் சுதந்திரபுரம் பிரதேசத்திலிருந்து காஸ் சிலிண்டர்களையும் படையினர் மீட்டெ டுத்துள்ளனர். 29.5 கிலோ கொள்ளளவைக் கொண்ட சிலிண்டர்கள் – 34, 13.5 கிலோ கொள்ளளவைக் கொண்ட காஸ் சிலிண்டர்கள்– 150 மற்றும் 2.5 கிலோ கொள்ளளவைக் கொண்ட 5 சிலிண்டர்களையுமே படையினர் மீட்டெடுத்துள்ளனர் என்று பிரிகேடியர் குறிப்பிட்டார்.

தயவுசெய்து கவனியுங்கள்…

070909.jpgஅனர்த்த நேரகால முன்னெச்சரிக்கை கோபுரங்கள் நேற்றுக்காலை பரீட்சித்துப் பார்க்கப்பட்டன. மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அனர்த்த முன்னெச்சரிக்கை கோபுரங்களில் இருந்து நேற்றுக்காலை சரியாக 10 மணிக்கு இப்பரீட்சாத்த ஒலியும், அறிவிப்பும் இடம்பெற்றன. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் கொழும்பு தலைமையகத்திலிருந்து இப்பரீட்சாத்த நடவடிக்கை இடம்பெற்றது.

அனர்த்த முன்னெச்சரிக்கை கோபுரங்களில் இருந்து எட்டு வகையான அறிவித்தல் களும், அதேபோன்று எட்டுத்தடவைகள் ஒலிகளும் இப்பரீட்சாத்த நடவடிக்கையின் போது எழுப்பப்பட்டன.

முதலாவதாக தயவு செய்து கவனியுங்கள் சூறாவளி அபாயம் உள்ளது என்றும், மேலதிக கட்டளைகளுக்கு காத்திருங்கள் எனவும், சூறாவளி அபாயம் நீங்கிவிட்டது எனவும், கரையோர சமூகங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர அறிவுறு த்தப்பட்டுள்ளன என்றும், சூறாவளி அபாயம் நீங்கி விட்டது என்ற அறிவித்தலும் மற்றும் பலத்த நில நடுக்கம் உணரப்பட்டுள்ளது, சுனாமிக்கான வாய்ப்பும் உள்ளது மேலதிக கட்டளைகளுக்கு காத்திருங்கள் எனவும், சுனாமி எச்சரிக்கை இரத்துச் செய் யப்பட்டுள்ளது சுனாமி அச்சம் எதுவுமில்லை, சுனாமி ஏற்படலாம் கரையோர சமூகங்கள் பாதுகாப்பான இடத்துக்கு இடம்பெயர அறிவுறுத்தப்பட்டுள்ளன, சுனாமி ஆபத்து அகன்று விட்டது எனும் எட்டு வகையான அறிவித்தல்கள் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் அறிவிக்கப்பட்டன.

இக்கோபுரங்களிலிருந்து பரீட்சாத்து நடவடிக்கை இடம்பெறுவதை அவதானிப்பதற்காக அனர்த்த முகாமைத்துவ மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் கே. விமல்ராஜின் தலைமையிலான குழுவினரும் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் அனர்த்த நேரகால எச்சரிக்கைப் பிரிவினரும், கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ள இடங்களில் அவதானத்தில் ஈடுபட்டனர்.

கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் அதி காரிகளும் உரிய இடங்களில் நின்றனர். மற்றும் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் அனர்த்த நேரகால எச்சரிக்கை பிரிவுத் தொண்டர்கள் தமது முழுமையான தொண்டர் சேவையிலும் ஈடுபட்டிருந்தனர்.

இப்பரீட்சாத்த நடவடிக்கையை பார்வையிடுவதற்காக பெருந்தொகையான பொது மக்கள் இக்கோபுரங்கள் அமைக்கப்பட்டிருந்த இடத்தில் நின்றுகொண்டிருந்ததையும் காணமுடிந்தது.

தோட். தொழிலாளர் சம்பள உயர்வு பேச்சு நேற்றும் இணக்கப்பாடின்றி முடிவு – மீண்டும் இன்று கொழும்பில் பேச்சுவார்த்தை

080909teawomen.jpgதோட்டத் தொழிலாளர்களின் ஒரு நாட் சம்பளத்தை 500 ரூபாவாக அதிகரிப்பது தொடர்பாக 7வது தடவையாக நேற்று நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையும் இணக்கப்பாடின்றி முடிவடைந்துள்ளது.

முதலாளிமார் சம்மேளனத்துக்கும் கூட்டு தொழிற்சங்கங்களுக்கு மிடையில் நேற்று மாலை நடைபெற்ற பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றி முடிவுக்கு வந்ததையடுத்து ஒத்துழையாமை போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க கூட்டுத் தொழிற்சங்கங்கள் தீர்மானித்திருப்பதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் இளைஞர் வலுவூட்டல் சமூக பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

இராஜகிரியில் உள்ள சம்மேளன அலுவலகத்தில் நேற்று பிற்பகல் 4.30 மணிக்கு ஆரம்பமான இந்தப் பேச்சுவார்த்தை தொடர்ந்து சுமார் ஒரு மணித்தியாலங்கள் வரை நீடித்தது. இப்பேச்சுவார்த்தையில் முதல் வருடத்தில் ஒரு நாள் சம்பளத்தை 330 ரூபாவிலிருந்து 360 ரூபாவாக அதிகரித்துத் தருவதாக முதலாளிமார் சம்மேளனம் தெரிவித்தது.

இருப்பினும், அதற்கு கூட்டுத் தொழிற்சங்கங்கள் இணங்காமையினால் இந்தப் பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றி முடிவுக்கு கொண்டு வரப்பட்டதாக செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

எமது கோரிக்கைபடி ஒரு நாட்சம்பளத்தை 500 ரூபாவாக அதிகரிக்கும்வரை முதலாளிமார் சம்மேளனத்தின் எந்தவொரு தீர்மானத்துக்கும் இணங்கப் போவதில்லையென தெரிவித்த அமைச்சர் தோட்டத் தொழிலாளிகளுக்கு 500 ரூபா சம்பளத்தை பெற்றுக்கொடுக்க முடியுமென்ற நம்பிக்கையிருப்பதாகவும் கூறினார்.

இதேவேளை, இன்று 11 ஆம் திகதி காலை 11 மணிக்கு முதலாளிமார் சம்மேளனத்துடன் மீண்டும் எட்டாவது தடவையாக பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுடன் கூட்டுத் தொழிற்சங்கம் சார்பில் கே. வேலாயுதம், பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கம், இரா. யோகராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தோட்டத் தொழிலாளிகளின் ஒத்துழையாமை போராட்டம் நேற்றும் 09வது நாளாக முன்னெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சில தோட்டங்களில் தொழிலாளர்கள் சம்பள அதிகரிப்புக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு, முதலாளிமாருக்கெதிராக கோஷங்களையும் எழுப்பினர்.முதலாளிமாருக்கும், தொழிற் சங்கங்களுக்கும் இடையிலான கூட்டு ஒப்பந்தம் கடந்த மார்ச் மாதம் 31ம் திகதியுடன் காலாவதியானது. இரண்டு வருடங்களுக்கொரு தடவை இந்த ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

கையடக்கத் தொலைபேசி மூலம் ரயில் ஆசனப் பதிவு – அமைச்சரவை அங்கீகாரம்

mobile-phone.jpgசெலியூலர் தொலைபேசியினூடாக ரயில் ஆசனப் பதிவுகளை மேற்கொள்ளக்கூடிய புதிய நடைமுறையொன்று அமுல்படுத்தப்படவுள்ளது. மொபிடெல் செலியூலர் தொலைபேசி சேவையினூடாக ஆசனப்பதிவு மேற்கொள்வதற்கு வழிவகைகள் செய்யப்பட்டுள்ளன.

மொபிடெல் நிறுவனத்துடன் இதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது. போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும இது தொடர்பாக சமர்ப்பித்திருந்த அமைச்சரவை பத்திரத்திற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் அனுரபிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

ரயில் ஆசனம் ஒன்றைப் பதிவு செல்ல வேண்டுமாயின் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னர் ரயில் நிலையத்திற்கு நேரடியாக சென்று பதிவு செய்துகொள்ள வேண்டும். இந்தியா போன்ற நாடுகளில் ஆசனப் பதிவுகள் செலியூலர் தொலைபேசியினூடாக செய்யப்படுகின்றன. இதேபோன்று தூர இடங்களுக்குச் செல்லும் பயணிகள் ரயில் நிலையத்திற்கு செல்லாமலேயே தமது கையடக்கத் தொலைபேசியினூடாகப் பதிவு செய்து கொள்ள முடியும்.

நிலையியற் கட்டளைச் சட்டத்தில் திருத்தம்

26parliament.jpgபாராளு மன்றத்தினூடாக நிதி ஒதுக்கப்படுகின்ற எனினும், கணக்காய்வாளர் நாயகத்தினால் கணக்காய்வுக்கு உட்படுத்த முடியாத நிறுவனங்களை “பொது நிறுவனங்கள் பற்றிய பாராளுமன்ற தெரிவுக்குழுவின் முன் ஆஜர்படுத்தும் வகையில் பாராளுமன்ற நிலையியற் கட்டளைச் சட்டத்தில் திருத்தங்களை செய்வதற்கு சபையில் நேற்று இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

பொது நிறுவனங்கள் பற்றிய பாராளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவர் அமைச்சர் ஜோன் செனவிரட்ன ‘கோப்’ பற்றிய அறிக்கையொன்றை சமர்ப்பித்துப் பேசினார். இதனைத் தொடர்ந்து எழுந்த சர்ச்சையையடுத்தே சபையில் மேற்படி இணக்கம் தெரிவிக்கப்பட்டது

பொது நிறுவனங்கள் பற்றிய பாராளுமன்ற தெரிவுக்குழுவின் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படும் சில நிறுவனங்களை கணக்காய்வாளர் நாயகத்தினால் கணக்காய்வுக்கு உட்படுத்த முடியாது என்பது பற்றியும் ஜே.வி.பி. எம்.பி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். அத்துடன் ஐ.தே.க பாராளுமன்ற உறுப் பினர்களான தயாசிரி ஜயசேக்கர, ரவிகருணாநாயக்க ஆகியோரும் ‘கோப்’ குழு வில் கலந்து கொண்டன நபர்கள் என்ற வகையில் கருத்துக்களை தெரிவித்தனர்.

2008 டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்ற பொது நிறுவனங்கள், தொடர்பான பாராளுமன்ற தெரிவுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாகவும் ஆனால் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு நேர் எதிரான கருத்துக்கள் பின்னர் ஊடங்களில் வெளிவந்ததாகவும் அமைச்சர் ஜோன் செனவிரட்ன குறிப்பிட்டார்.

பத்திரிகை பேரவையொன்றை அமைக்க வேண்டும். அதுவும் ஒரு மாதத்தினுள்ளேயே இதனை அமைக்க வேண்டும் எனக் கூறியவர்கள் பின்னர் அதற்கு எதிராக பேசிக் கொண்டிருக்கின்றனர் என அமைச்சர் குறிப்பிட்டார்.

இதேவேளை கம்பனிகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களை கணக்காய்வாளரின் கணக்காய்வுக்குட்படுத்த சட்டத்தில் வழிவகைகள் செய்யப்படவில்லை என்று கோப் கூட்டத்தில் பேசப்பட்டதாகவும் சபையில் நேற்று தெரிவிக்கப்பட்டது.

கோப் தலைவர் அமைச்சர் ஜோன் செனவிரட்ன அனுரகுமார திஸாநாயக்க, ரவி கருணாநாயக்க, தயாசிறி ஜயசேக்கர ஆகியோருக்கிடையே விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது சபாநாயகர் வி.ஜே.மு. லொக்குபண்டார தலையிட்டு மேற்படி பாராளுமன்றத்தினால் நிதி ஒதுக்கப்படுன்ற நிறுவனங்களை கணக்காய்வாளரின் கணக்காய்வுக்கு உட்படுத்தும் வகையில் கோப் முன்னிலையில் ஆஜர்படுத்து வதற்கென பாராளுமன்ற நிலையியற் கட்டளைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு சபையில் இணக்கமா? என கேள்வி எழுப்பினார். இதற்கு சபையிலுள்ளோர் இணக்கத்தை தெரிவித்தனர்.

இன்று கணிசமான எண்ணிக்கையினரை சொந்த இடங்களுக்கு அனுப்ப ஏற்பாடு

101009displacedidps.gifவவுனியா விலுள்ள நிவாரணக் கிராமங்களிலும் நலன்புரி நிலையங்களிலும் தங்கியுள்ள யாழ்ப்பாணம், மன்னார், திருமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த ஒரு தொகுதியினர் இன்று 11ஆம் திகதி அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர். இது தொடர்பான வைபவம் வவுனியா நகர சபையின் கலாசார மண்டபத்தில் நடைபெறவிருக்கி ன்றது.

வவுனியா நிவாரணக் கிராமங்களிலும், நலன்புரி நிலையங்களிலும் இருந்து இன்று விடுவிக்கப்படும் மக்களை அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைப்பதற்குரிய போக்குவரத்து வசதிகளை இடம்பெயர்ந்தவர்களுக்கான சர்வதேச அமைப்பு ஏற்பாடு செய்திருப்பதாக வவுனியா அரசாங்க அதிபர் அலுவலக அதிகாரியொருவர் நேற்று கூறினார்.

இவர்களுக்கு உணவு வசதியைச் செய்து கொடுப்பதற்கு யு. என். எச். சி. ஆர். நிறுவனம் முன் வந்துள்ளது எனவும் அவர் கூறினார்.

இன்று விடுவிக்கப்படுபவர்களைப் பொறுப்பெடுப்பதற்காக அந்ததந்த மாவட்ட அரசாங்க அதிபர்களின் பிரதிநிதிகள் வவுனியாவுக்கு வருகை தந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.