September

September

நாள்தோறும் 12 பேர் தற்கொலை செய்வதாக ஸ்ரீலங்கா சுமித்ரயோ தகவல்

rope-0000.jpgஇலங் கையில் நாள்தோறும் 12 பேர் தற்கொலை செய்து கொள்வதாக ஸ்ரீலங்கா சுமித்ரயோ என்ற அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.  மேலும் நாள் தோறும் சுமார் 120 பேர் தற்கொலை முயற்சிகளை மேற்கொள்வதாகவும் பல்வேறு மன உலைச்சல்களினால் பாதிக்கப்படுவதாகவும் அது தெரிவிக்கின்றது.

கடந்த காலங்களைவிட தற்போது, தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ள போதிலும் பெண்கள் அதிகமாக தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுவதாகக் குறிப்பிடப்படுகிறது. எவ்வாறெனினும் தற்கொலை செய்து கொள்வதில் அதிகமாக ஆண்களே முன்னிற்பதாகவும் அந்த அமைப்பு மேலும் குறிப்பிடுகிறது.

ஆப்கன் அதிபர் தேர்தலில் ஹமீத் கார்சாய் முன்நிலை

ஆப்கானிஸ்தானின் அதிபர் தேர்தலுக்கான வாக்கெடுப்பில், தற்போதைய அதிபர் ஹமீத் கர்சாய் அவர்கள், தற்போது 54 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளதாக அந்த நாட்டின் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அவருக்கு அடுத்த படியாக அதிக வாக்குகளைப் பெற்றுள்ள, அப்துல்லா அப்துல்லா அவர்கள் 28 வீதத்துக்கும் சற்று அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளதாகவும் ஆணையம் தெரிவித்துள்ளது.

அதேவேளை முறைகேடுகள் குறித்த ஆதாரங்கள் காரணமாக 600 வாக்குச் சாவடிகளின் முடிவுகள் வெளியிடப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, எந்தவொரு வேட்பாளருக்கும் 95 வீதத்துக்கும் அதிகமான வாக்குகள் கிடைத்த சாவடிகளில் மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடத்தப்படும் என்றும் வாக்களிப்பு குறித்த பரிசோதனை நடத்தப்படும் என்றும், தேர்தல் முறையீட்டு ஆணையம் அறிவித்திருந்தது.

695 ரயில் கடவைகளை திருத்த அரசு நடவடிக்கை இந்த வருட இறுதிக்குள் பூர்த்தி – அமைச்சர் லசந்த

26parliament.jpgஇந்த வருட இறுதிக்குள் நாடளாவிய ரீதியில் உள்ள 695 பாதுகாப்பற்ற ரயில் கடவைகளையும் திருத்தி இயங்க வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென பயணிகள் போக்குவரத்து அமைச்சர் லசந்த அழகியவன்ன பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று ஜே. வி. பி. எம்.பியொருவர் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கை யிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

தற்போது நாட்டில் உள்ள ஐம்பது வீத பாதுகாப்பற்ற ரயில் கடவைகளின் பணிகள் தடைப்பட்டுள்ளன. இவற்றில் பணிபுரிந்தோர் தமக்கான சம்பளம் போதாது என்ற நிலையில் சுயவிருப்பத்தின் பேரில் தொழிலிலிருந்து விலகிச் சென்றுள்ளனர். இப்பிரச்சினைக்குத் தீர்வுகண்டு மீண்டும் இதே ரயில் கடவைகளை இயங்க வைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

பாராளுமன்றம் நேற்று சபாநாயகர் டபிள்யூ. ஜே. எம். லொக்கு பண்டாரவின் தலைமையில் கூடியது. வழமையான நடவடிக்கைகளுக்குப் பின் வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில் ஜே. வி. பி. எம்.பி. லக்ஷ்மன் நிபுணஆரச்சி கேள்வியொன்றை எழுப்பினார்.

அவர் தமது கேள்வியின் போது, ரயில் பாதைகளுக்குக் குறுக்காகச் செல்லும் பல பாதைகளில் புகையிரதத்தால் ஏற்படும் விபத்துக்களைத் தடுப்பதற்கு போக்குவரத்து அமைச்சு எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என வினவினார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் சமுர்த்தி அதிகார சபையுடன் இணைந்து இதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமெனத் தெரிவித்தார். இது தொடர்பில் சமுர்த்தி அதிகார சபையுடன் நான்கு சுற்று பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளதாகவும் ஓரிரு தினங்களில் இறுதிப் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதெனவும் தெரிவித்தார்.

போதைப்பொருட்களுடன் மற்றுமொரு பாக்.பிரஜை கைது

nimal_madiwaka.jpgபோதைப் பொருட்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கு முயற்சித்த பாகிஸ்தானைச் சேர்ந்த மற்றுமொருவரை காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.

மூன்று கிலோ ஆறு கிராம் போதைப்பொருட்களுடன் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அபுதாபியில் இருந்து வருகை தந்த ஒருவரே கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான நிமால் மெதிவக்க விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

சு. க. முக்கியஸ்தர் ரவூப் ஹாஜியார் காலமானார்

ஸ்ரீல. சு. கட்சியின் நீண்ட கால அங்கத்தவரும் மத்திய மாகாண சபையின் முன் னாள் உறுப்பினருமான எம். ரி. எம். ரவூப் ஹாஜியார் (58) நேற்றுக் காலமானார். இவரது ஜனாஸா வெலம்பொடை முஸ்லிம் மையவாடி யில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

சில காலம் சுகவீனமடைந்து வீட்டில் இருந்த சமயமே ரவூப் ஹாஜியார் காலமானார்.

மறைந்த மத்திய மாகாண அமைச்சர் மர்ஹும் எம். ரி.எம். அமீனின் சகோதரராவார்.

ரவூப் ஹாஜியார் கண்டி மாவட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைப்பாளர்களுள் ஒருவராகும். இவரது பாரியாரான ஜனாபா ஆயிஷா முனவ்வரா மத்திய மாகாண சபை உறுப்பினராகவும் சில காலம் இருந்துள்ளார்.

வெலம்பொட ஜும்மா பள்ளிவாசலின் பிரதமகர்த்தாவாகத் தொடர்ந்து 20 வருடங்கள் அவர் இறக்கும் வரையும் பணியாற்றிவந்தார்.

சிறிலங்காத் தூதரகத்தை முற்றுகையிடச் சென்ற பத்திரிகையாளர்கள் கைது

img080909.jpgதமிழ் பத்திரிகையாளர் ஜே.எஸ். திசைநாயகத்தை பயங்கரவாத சட்டத்தின் கீழ் தண்டித்து சிறையில் அடைத்துள்ள சிறிலங்கா அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பத்திரிகையாளர்கள், சிறிலங்காத் துணைத் தூதரகத்தை முற்றுகையிடச் சென்றுபோது காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை ஒடுக்க அவர்கள் மீது போர் தொடுத்த சிறிலங்க அரசு, முகாம்களில் தஞ்சமடைந்த மக்களுக்கு உணவு கூட கொடுக்காமல், உணவையே போர் கருவியாக்கி தமிழர்களை ஒடுக்குகிறது என்று பத்திரிக்கையாளர் திசைநாயகம் எழுதினார். இதற்காக அவர் மீது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர்ந்து 20 ஆண்டுக் கால கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

திசைநாயகத்திற்கு விதிக்கப்பட்ட தண்டனையைக் கண்டித்து தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் ரவீந்திர தாஸ் தலைமையில் சென்னையிலுள்ள சிறிலங்காத் துணைத் தூதரகம் முன்பு இன்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான பத்திரிக்கையாளர்கள் கலந்து கொண்டனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலர் தா.பாண்டியன், துணைச் செயலர் சி.மகேந்திரன், இலட்சியத் திமுக தலைவர் டி. இராஜேந்தர், சி.ஐ.டி.யு. பொதுச் செயலர் செளந்தரராசன், பத்திரிக்கையாளர்கள் பாஸ்கரன், அய்யநாதன் ஆகியோர் சிறிலங்க அரசின் மனித உரிமை மீறல்களையும், பத்திரிக்கையாளர்களுக்கு எதிராக அது மேற்கொண்டு வரும் ஒடுக்குமுறை நடவடிக்கைகளையும் கண்டித்துப் பேசினர்.

ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் தமிழர்களை இனப் படுகொலை செய்துவரும் ராஜபக்ச அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பிக் கொண்டே பத்திரிக்கையாளர்கள் அனைவரும் சிறிலங்கத் துணைத் தூதரகத்தை நோக்கி முன்னேறினர். அவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். அப்போது ராஜபக்ச அரசைக் கண்டித்து பத்திரிக்கையாளர்கள் ஆவேசமாக முழக்கங்களை எழுப்பினர்.

அவர்களை மேற்கொண்டு செல்ல விடாமல் தடுத்து நிறுத்திய காவல் துறையினர், பத்திரிகையாளர்களை காவல் துறை வாகனங்களில் ஏற்றிச் சென்று தேனாம்பேட்டையில் உள்ள சமூக நலக் கூடத்தில் தங்க வைத்தனர்..

டி. இராஜேந்தர், பாஸ்கரன், பாஸ்கர தாஸ் ஆகியோர் உட்பட ஏராளமான பத்திரிக்கையாளர்கள் கைது செய்யப்பட்டு, சிறிது நேரத்திற்குப் பின் விடுவிக்கப்பட்டனர்.

நன்றி ;வெப்துனியா

கதிர்காமர் கொலை வழக்கு : பிரபாகரன்,பொட்டு அம்மான் பெயர்களை நீக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு

00000court.jpgமுன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் படுகொலை வழக்கில் அதனுடன் தொடர்புடையவர்கள் எனக் கூறப்பட்ட முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மான் ஆகியோரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.

விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மான் எனப்படும் சண்முகநாதன் சிவசங்கர் ஆகிய இருவரும் இறந்துள்ளமை உறுதி செய்யப்பட்டமையினால் அவர்களின் பெயரை வழக்கிலிருந்து நீக்குமாறு இன்று உயர் நீதி மன்ற நீதவான் குமுதினி விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

தடுப்பு காவல் கைதிகள் காணாமல் போனவர்கள் தொடர்பில் கொழும்பில் அடுத்த வாரம் மாநாடு – மனோ கணேசன்

mono.jpgபோர் ஓய்வுக்கு வந்துவிட்ட நிலையில் நீண்டகாலமாக தடுப்பு காவலிலே வைக்கபபட்டுள்ள கைதிகள் மற்றும் கடந்த மூன்று வருடங்களிலே கடத்தப்பட்டு காணாமல் போனவர்கள் ஆகிய இரண்டு பிரிவினர் தொடர்பில் உரிய தீர்வுகளை காணவேண்டிய வேளை வந்துள்ளது.

இந்த இரண்டு தரப்பினரின் பிரச்சினைகள் சம்பந்தமாக எதிர்வரும் செப்டம்பர் 16ஆம் திகதி புதன்கிழமை காணாமல் போனவர்கள் மற்றும் தடுப்பு காவல் கைதிகள் ஆகியோரது குடும்பத்தவர்களை அழைத்து கொழும்பிலே ஒரு மாநாட்டை நடத்துவதற்கு மக்கள் கண்காணிப்புக்குழு தீர்மானித்துள்ளதாக குழுவின் தலைவர் சிறிதுங்க ஜயசூரியவும், ஏற்பாட்டாளர் மனோகணேசனும் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளதாவது.

கடந்த 25 ஆண்டுகளாக நடைபெற்று வந்த போர் முடிவுக்கு வந்துவிட்டதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்நிலையில் வன்முறை நடவடிக்கையில் ஈடுபட்ட பல்லாயிரக்கணக்கான போராளிகள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு புனருத்தாபன பயிற்சி வழங்கப்படுகின்றது. அதேபோல் வடக்கில் சுமார் மூன்று இலட்சம் தமிழ் மக்கள் அகதி முகாம்களில் தடுத்து வைக்கப்பட்ட நிலையில் அவர்களது மீள் குடியேற்றம் இன்று முதன்மை பிரச்சினையாக கருதப்படுகின்றது.

இந்நிலையில் இதே காரணங்களுக்காக கைது செய்யப்பட்டு அல்லது கடத்தப்பட்ட நிலையில் தடுப்புகாவலில் வைக்கப்பட்டிருக்கும் கைதிகளினதும், காணாமல் போனவர்களினதும் பிரச்சினைகளை நமது சமூகம் மறந்து விட முடியாது. வெளியிலே வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களின் பிரச்சினைகளுக்கு வழங்கப்படும் அதே முக்கியத்துவம் கைதிகளுக்கும், காணாமல் போனவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். 

“சனல் – 4” புதிய வீடியோப்படங்கள் – துவண்டு கிடக்கும் அகதிகளின் கோலம்

sanal4_uk.jpgவன்னியில் இடம்பெற்ற போரினால் இடம்பெயர்ந்து வவுனியாவில் உள்ள முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் எந்தளவுக்கு மோசமான நிலையில் உள்ளார்கள் என்பதை வெளிப்படுத்தும் புதிய காணொலியை பிரித்தானியாவில் இருந்து ஒளிபரப்பாகும் ‘சனல் – 4’ தொலைக்காட்சி வெளியிட்டிருக்கின்றது.

கடுமையான நோய் வாய்ப்பட்டு சிகிச்சை பெறுபவர்கள் கூட அவர்களுக்கு மருந்து ஏற்றப்படும் நிலையில் தரையில் படுத்திருப்பதை இந்த காணொலி உறுதிப்படுத்துகின்றது. வயதான, பலவீனமான ஒருவர் தனது முகத்தில் மொய்த்துக்கொண்டிருக்கும் இலையான்களை விரட்டுவதற்குக் கூட முடியாதவராக மண் தரையில் படுத்துக்கடப்பதை இதில் காண முடிகின்றது.
 
வவுனியாவில் உள்ள முகாம்களில் செல்லிடப்பேசி கமராவை பயன்படுத்தி இந்த காணொலி இரண்டு வார காலத்துக்கு முன்னர் எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.  மழை காலம் தொடங்கியிருப்பதால் இந்த முகாம்களின் நிலைமை மேலும் மோசமடையலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள ஒரு நிலையில் இந்த காணொலி வெளியாகி இருப்பது கவனிக்கத்தக்கது.

துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கும் போராட்டம் இன்று முதல் ஆரம்பம்-ஜே.வி.பி. யின் செயலாளர் அறிவிப்பு

நிறைவேற்று ஜனாதிபதி முறையினை மாற்றியமைக்க வேண்டும் எனக் கோரி இன்று முதல் துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கும் போராட்டம் ஆரம்பமாகவுள்ளது. இந்த செயற்றிட்டம் விரைவில் பொது மக்களின் போராட்டமாக மாறும் என்று ஜே.வி.பி. யின் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைக்கு எதிராக ஜே.வி.பி.யினரால் இன்று செவ்வாய்க்கிழமை மாலை கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக பொதுமக்களுக்கு விழிப்பூட்டும் வகையில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்படவுள்ளது. இது தொடர்பாக நேற்று திங்கட்கிழமை தெளிவுபடுத்துகையிலேயே ரில்வின் சில்வா மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கூறுகையில், இலங்கையில் தற்போது ஜனநாயகம் தொடர்பில் பல்வேறு வகையான கேள்விகள் எழுந்துள்ளது. சகல தரப்பினரது செயற்பாடுகளையும் கட்டுப்படுத்தக் கூடியவாறு அதிகாரம் ஒரு இடத்தில் மையப்படுத்தப்பட்ட நிலையில் காணப்படுவது மிகவும் ஆபத்தான விளைவுகளையே தோற்றுவிக்கும்.

தற்போது காணப்படும் நடைமுறை அரசியலும் அவ்வாறானதாகவே காணப்படுகின்றது. நாட்டை ஜனநாயக சூழலில் தக்க வைத்துக் கொள்வதற்கு நிறைவேற்று அதிகாரம் தடையாகவே உள்ளது. எனவே தான் இம்முøறக்கு எதிராக மக்கள் போராட்டம் ஒன்றுக்கு ஜே.வி.பி. செல்கின்றது. எதிர்வரும் நாட்களில் பொதுமக்களுடன் இணைந்து பாரியளவிலான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டியுள்ளது.