‘‘காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல்காந்தி சென்னை வருவதை முன்னிட்டு 3,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட் டுள்ளனர்’’ என்று சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறினார். ராகுல் காந்தி 3 நாள் பயணமாக இன்று தமிழகம் வருகிறார். நாளை சென்னை வருகிறார். இதுகுறித்து கமிஷனர் ராஜேந்திரன் நேற்று கூறியதாவது:
சென்னையில் 4 விழாக்களில் கலந்து கொள்ள ராகுல் காந்தி நாளை வருகிறார். 9ம் தேதி அண்ணா பல்கலைக்கழகம், சத்தியமூர்த்தி பவன், காமராஜர் அரங்கத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பிறகு, ஓட்டலில் தங்குகிறார். அடுத்த நாள், ஒரு ஓட்டலில் செய்தியாளர்களை சந்திக்கிறார். அவரது வருகையை முன்னிட்டு, சென்னை முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விழா நடக்கும் இடங்களில் 3,000 போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தியுள்ளோம். அடையாள அட்டை இல்லாதவர்கள் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடியாது.
நகரில் லாட்ஜ்கள், திருமண மண்டபங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகின்றன. பாதுகாப்பு ஒத்திகைகளை ஏற்கனவே முடித்து விட்டோம். அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. உயரதிகாரிகள் நேரடியாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நகரில் ஏற்கனவே வாகன சோதனை, இரவு ரோந்து, பகல் ரோந்து தீவிரப்படுத்தப்பட்டது. தற்போது 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளோம். இவ்வாறு கமிஷனர் கூறினார்.
அண்ணா பல்கலை. மாணவர்களுடன் கலந்துரை யாடல்: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடன் நாளை ராகுல் காந்தி கலந்துரையாடுகிறார். இதற்காக பல்கலைக்கழகத்தில் உள்ள விவேகானந்தா கலையரங்கில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆயிரம் மாணவ, மாணவிகள் மட்டுமே இதில் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தேவையில்லாத கேள்விகள் கேட்டு, நேரத்தை வீணடிக்க கூடாது என்று மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கேள்விகள் எந்த துறையை சேர்ந்ததாக இருக்க வேண்டும், எப்படி கேட்க வேண்டும் என்பது குறித்தும் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேராசிரியர்களும் மாணவர்களும் சேர்ந்து நேற்று கூட்டம் நடத்தி முடிவு எடுத்துள்ளனர்.