September

September

இருபது-20 போட்டி: பாண்டிங் ஓய்வு அறிவிப்பு

iricky-ponting.jpgசர்வதேச இருபது-20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆஸ்ட்ரேலிய அணித் தலைவர் ரிக்கி பாண்டிங் அறிவித்துள்ளார். சிட்னியில் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்த அவர், இருபது-20 போட்டிகளில் இருந்து தாம் ஓய்வு பெற்றாலும், ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஆஸ்ட்ரேலிய அணியின் தலைவராக தொடர்ந்து செயல்படுவேன் என்றார்.

இங்கிலாந்தில் நடந்து வரும் ஒருநாள் போட்டித் தொடரில் பங்கேற்பதற்காக இன்று இங்கிலாந்து புறப்படுவதற்கு முன்பாக பாண்டிங் தனது அறிவிப்பை வெளியிட்டார். இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் ஆஸ்ட்ரேலியா தோல்வியுற்றது. இதையடுத்து துவங்கிய ஒருநாள் தொடரில் பங்கேற்காமல், ஓய்வு பெறுவதற்காக பாண்டிங் ஆஸ்ட்ரேலியா திரும்பியதால், துணைத் தலைவர் மைக்கேல் கிளார்க் தலைமைப் பொறுப்பை ஏற்றது குறிப்பிடத்தக்கது.

முக்கிய பிரமுகர்களை கொலை செய்ய 4 பெயர்களில் நடமாடிய புலி உறுப்பினர் நாவலப்பிட்டியில் நேற்று முன்தினம் கைது

முக்கியஸ் தர்களை இலக்கு வைத்து அவர்களை கொலை செய்வதற்காக நான்கு பெயர்களில் நடமாடிய புலி இயக்க முக்கிய உறுப்பினர் ஒருவரை புலிகளின் அடையாள இலக்க விபரங்களுடன் நாவலப்பிட்டி பொலிஸார் நேற்று முன்தினம் கைது செய்துள்ளனர்.

நாவலப்பிட்டி கெட்டம்புலா தோட்ட பிரதேசத்தில் விறகு மடுவமொன்றுக்குள் ஒழிந்திருந்த வேளையிலேயே பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர். மன்னார் பிரதேசத்தை பிறப்பிடமாகக் கொண்ட இவர் கொழும்பு, நீர்கொழும்பு மட்டக்குழி போன்ற இடங்களில் தற்காலிகமாக வசித்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவருகிறது. பெனடி சுஜான், கொலம்பஸ், டரிகுமார் மற்றும் கே. வை. என நான்கு பெயர்களில் இவர் நடமாடியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆயுதங்களுடன் கொல்கட்டாவில் தரையிறங்கிய ஐக்கிய அரபு நாட்டு விமானம்!

abu-dhabi-flight.jpgகொல் கட்டாவில் எரிபொருள் நிரப்ப தரையிறங்கிய ஐக்கிய அரபு நாடுகளின் விமானத்தில் ஆயுதங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்த அந்த விமானமும், அதன் விமானி மற்றும் ஊழியர்களும் பிடித்து வைக்கப்பட்டுள்ளனர். அபு தாபியில் இருந்து சீனாவிற்குப் பறந்து கொண்டிருந்த அந்த விமானம், எரிபொருள் நிரப்பிக் கொள்வதற்காக கொல்கட்டா நேத்தாஜி சுபாஸ் சந்திர போஸ் விமான நிலையத்தில் தரையிருங்க அனுமதி கோரியது. விமானத்தில் ஆயுதங்கள் ஏதும் இல்லையென்று உறுதியளித்தால் தரையிரங்க அனுமதி வழங்கப்படும் என்று கட்டுப்பாட்டு மையத்திலிருந்து நிபந்தனை விதிக்கப்பட்டது. அதனை விமானி ஏற்றுக் கொண்டதையடுத்து, கொல்கட்டா விமான நிலையத்தில் அந்த விமானம் தரையிறங்கியது.

தரையிருங்கிய பிறகு விமானத்தில் ஆயுதங்கள் உள்ளதென தலைமை விமானி கூற, சோதனையிடச் சென்ற இந்திய சுங்க இலாகா அதிகாரிகள் அதில் ஆயுதங்கள் இருந்ததைக் கண்டுபிடித்தனர். இதனையடுத்து விமானத்தை ஒடுகளத்திலேயே பிடித்து வைத்தனர். விமானியும், மற்ற ஊழியர்களும் தங்கியிருந்த விடுதியிலேயே பிடித்து வைக்கப்பட்டுள்ளனர்.

ஆயுதங்களுடன் தரையிறங்கியதற்காக ஐக்கிய அரபு நாடுகளின் விமானத்தின் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து இந்திய விமான தள ஆணையம், சுங்கத் துறை, குடியேற்றத் துறை ஆகியவற்றின் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். அபு தாபியில் இருந்து சீனத்தின் ஹான்யாங் நகருக்கு அந்த விமானம் செல்லவிருந்தது.

வவுனியா நலன்புரி நிலையம்: க. பொ. த. சா/த மாணவர்க்கு அடுத்த வாரம் முதல் வகுப்புகள்

வவுனியா நலன்புரி கிராமங்களிலுள்ள க. பொ. த. சாதாரண தரப் பரீசைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு அடுத்த வாரம் முதல் விசேட வகுப்புகள் நடத்தவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்தது.

இவர்களுக்கு பாட நூல்கள், பாடக் குறிப்புகள் என்பனவும் வழங்கப்படவுள்ளன. டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள க. பொ. த. சாதாரண தர பரீட்சைக்கு தயார்படுத்தும் வகையில் இந்த விசேட வகுப்புக்கள் நடத்தப்படவுள்ளன.

வவுனியா மாவட்டத்திலுள்ள தேசிய பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்கள் இந்த விசேட பயிற்சி வகுப்புகளை நடத்தவுள்ளதாக தேசிய பாடசாலைகளுக்குப் பொறுப்பான கல்விப் பணிப்பாளர் எஸ். ரோனிஸ் தெரிவித்தார்.

இதற்கு முன்னர் க. பொ. த. உயர்தர மாணவர்கள் மற்றும் புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் ஆகியோருக்கும் இவ்வாறான விசேட வகுப்புகள் நடத்தப்பட்டன.

சர்வதேச எழுத்தறிவு தினம் – International Literacy Day – புன்னியாமீன்

international-literacy-day.jpgசர்வதேச எழுத்தறிவு தினம்   International Literacy Day ஆண்டு தோறும் செப்டம்பர் 8ம் திகதியன்று உலகளாவிய ரீதியில் கொண்டாடப்பட்டு வருகிறது. அடிப்படை எழுத்தறிவை கற்றுக்கொள்ள வேண்டியதன் அவசியம் பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், எழுத்தறிவைப் பெற்றுக்கொள்ள முடியாமற் போன வளர்ந்தோருக்கு முறைசாராக் கல்வித் திட்டத்தின் மூலம் எழுத்தறிவைப் போதிக்கும் நோக்கத்துடனும் ஆண்டுதோறும் எழுத்தறிவு தினம் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.

1965 ஆம் ஆண்டு செப்டம்பர் 8ஆம் திகதி தெஹ்ரான் நகரில் உலகளாவிய கல்வி அமைச்சர்கள் மாநாடு நடைபெற்றது. இம் மகாநாட்டில் உலகளாவிய ரீதியில் எழுத்தறிவின்மையால் ஏற்படக் கூடிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுமுகமாக பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதம் 8ஆம் திகதியை  சர்வதேச எழுத்தறிவு நாளாக அனுசரிக்க வேண்டும் என்பது முக்கியத் தீர்மானங்களில் ஒன்றாகும்.

இதனடிப்படையில் 1965 நவம்பர் 17, திகதி யுனெஸ்கோ நிறுவனம் கூடியபோது  செப்டம்பர் 8ஆம் திகதியை  சர்வதேச எழுத்தறிவு தினமாகப் பிரகடனம் செய்தது. இத்தினம் 1966ம் ஆண்டு முதல் கொண்டாடப்படுக்கிறது. தனி மனிதர்களுக்கும் பல்வேறு வகுப்பினருக்கும் சமுதாயங்களுக்கும் எழுத்தறிவு எவ்வளவு முதமையானது என்பதை எடுத்துரைப்பதே இந்த நாளின் குறிக்கோள் ஆகும்.

எந்த மொழியிலும் இலகுவான வசனங்களை எழுதவும் படிக்கவும் தெரியாமையே எழுத்தறிவின்மையாகும் என ஐநாவின் சாசனம் எழுத்தறிவின்மையை வரையறுக்கிறது. பொதுவாக எழுத்தறிவு ஒரு மொழியை வாசிக்க, எழுத, பேச, கேட்டுப் புரிந்து கொள்ளக்கூடிய ஆற்றலைக் குறிக்கும். இன்று எழுத்தறிவு பல்வகைப்பட்ட தொடர்பாடல் முறைகளைப் பின்பற்றி ஒரு எழுத்தறிவுள்ள சமூகத்துடன் இணையாக பங்களிக்க கூடிய ஆற்றலைக் குறிக்கின்றது. இதில் கணித்தலும், கணினி பயன்பாடும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய நாடுகள் சபையின் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் எழுத்தறிவைப் பின்வருமாறு வரையறை செய்கின்றது: “எழுத்தறிவு என்பது, பல்வேறு சூழ்நிலைகளுடன் தொடர்புடைய அச்சிடப்பட்ட அல்லது எழுதப்பட்டவற்றைப் பயன்படுத்தி அடையாளம் காண்பதற்கும், புரிந்து கொள்வதற்கும், விளக்குவதற்கும், ஆக்குவதற்கும், தொடர்பு கொள்வதற்கும், கணிப்பதற்குமான திறனைக் குறிக்கும். எழுத்தறிவு,  ஒரு தனியாளுக்கு தன்னுடைய இலக்கை அடைவதற்கும், தனது அறிவையும், தகுதியையும் வளர்ப்பதற்கும், பரந்த சமுதாயத்தில் முழுமையாகப் பங்குபற்றுவதற்குமான ஆற்றலைப் பெறுவதற்குரிய தொடர்ச்சியான கல்வியைப் பெறுவதோடு தொடர்புடையது. “தற்காலத்தில் எழுத்தறிவுப் பிரச்சினை என்பது கல்வியால் தீர்க்கப்படவேண்டிய சமூகப் பிரச்சினையாக நோக்கப்படுகின்றது.

உலகில் சுமார் 776 மில்லியன் வயது வந்தோர் அடிப்படை எழுத்தறிவு அற்றவர்களாக இருக்கிறார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது வயது வந்தவர்களில் 5 பேரில் ஒருவருக்கு எழுதப்படிக்கத்தெரியாது. இவர்களில் மூன்றில் இரு பகுதியினர் பெண்கள். அத்துடன், சுமார் 103 மில்லியன் சிறார்கள் பாடசாலை வசதிகள் அற்ற நிலையில் உள்ளார்கள்.படிப்பை பாதியில் நிறுத்திவிட்டவர்கள், அரைகுறையாக பள்ளிகள் செல்பவர்கள் ஏராளம். இதனால் இவர்கள் அடிப்படைக் கல்வியான எழுத, வாசிக்க, எண்ணத் தெரியாதவர்களாக இருக்கிறார்கள்.
உலகமயமாக்கத்தில் விழிப்புடன் செயற்பட்டு வரும் காலத்தில் எழுத்தறிவின்மை என்பது வெட்கப்படக்கூடிய  விளைவு தான் என்றால் பிழையாகாது. அதி நவீன தொழில்நுட்ப திறனும் கணிணிப்பயன்பாடும் இன்றைய உலகை ஆக்கிரமித்திருக்கும் இந்தக் காலகட்டத்தில் எந்தவொரு நாடும் தனது மக்கள் எழுத்தறிவில் பின்தள்ளப்பட்டுள்ளனர் என்று கூற வெட்கப்பட்டே ஆக வேண்டும்.

இவ்வாறாக எழுத்தறிவைப் பெற்றுக் கொள்ள முடியாமைக்கான காரணங்களாக உள்ள சமூக நிலைகள் பற்றியும் கவனத்தில் கொள்ள வேண்டும்.வறுமை, போஷாக்கின்மை,  அரசியல் நெருக்கடிகள்,  கலாசார பாகுபாடு,  அடிமைப்படுத்தல் போன்ற பல்வேறு காரணங்களால் எழுத்தறிவின்மை உலக நாடுகளில் இன்றும் காணப்படுகின்றது என்பதை ஏற்றாக வேண்டியுள்ளகல்வியறிவு அல்லது எழுத்தறிவின் முக்கியத்துவம் தான் என்ன? தேசிய ரீதியிலும், சர்வதேசரீதியாக இது தொடர்பான செயற்றிட்டங்கள் எவ்வாறு முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன? இவற்றை கொண்டு செல்வது யார் என்ற வினாக்களுக்கு நாம் விடை காணவேண்டியதாக உள்ளோம்.

எழுத்தறிவு என்பது மனித உரிமைகளுடன் தொடர்புபட்ட ஒரு அம்சம். தனிநபர் ஆளுமையிலிருந்து சமூக மனித வள அபிவிருத்தி மற்றும் கல்வி செயற்பாடுகள் அதற்கான சந்தர்ப்பங்கள் என்பன எழுத்தறிவிலேயே தங்கியுள்ளன. எழுத்தறிவின்மை எனும் போது எந்த ஒரு மொழியிலும் இலகுவான வசனங்களை எழுதவும் படிக்கவும் தெரியாமல் இருத்தலாகும் என ஐக்கிய நாடுகள் சபை எழுத்தறிவின்மையை தனது சாசனத்தில் வரையறை செய்துள்ளது.

எழுத்தறிவின் பயனை அறிந்த பெற்றோர் தான் தமது பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்புகின்றனர். எழுத்தறிவு பெற்றோர் கல்வி வாய்ப்புக்களை இலகுவாக பெற்றுக்கொள்கின்றனர், மேலும் ஒரு கல்வி கற்ற சமுதாயமானது அபிவிருத்தி இலக்குகளை இனங்கண்டு சவால்களை எதிர்கொள்ளும் திறன் கொண்டது. ஆனால் உலகில் இன்று பல நாடுகள் பல பிரச்சினைகள் காரணமாக எழுத்தறிவை பெறமுடியாதுள்ளனர்.

வறுமையை ஒழித்தல்,  சிறுவர் இறப்பு வீதத்தை குறைத்தல்,  சனத்தொகை அதிகரிப்பை கட்டுப்படுத்தல்,  பால் சமத்துவத்தை கட்டியெழுப்பல்,  முறையான அபிவிருத்தியை உறுதி செய்தல் சமாதானம் மற்றும் ஜனநாயகம் போன்ற பல விடயங்களின் அபிவிருத்தியையும் எழுத்தறிவு அபிவிருத்தியுடன் இணைத்து நோக்க வேண்டியுள்ளது. எழுத்தறிவு என்பது கல்விக்கு எந்தளவில் முக்கியமான ஒரு மையப்புள்ளியாக விளங்குகிறது என்பதற்கு பல நல்ல வழுவான உதாரணங்களைக்கூறலாம். ஒரு சிறந்த அடிப்படை கல்வியானது மக்களுக்கு வாழ்க்கைக்கு எந்தளவிற்கு முக்கியமோ அதேயளவிற்கு ஏனைய பிற தேவைகளுக்கும் காரணகர்த்தாவாக இருக்கின்றன.

யுனெஸ்கோவின் “அனைவருக்கும் கல்வி பற்றிய உலக அறிக்கை (2006)” அறிக்கையின்படி தெற்கு மற்றும் மேற்கு ஆசியாப் பகுதிகளிலேயே மிகக் குறைந்த வீதமானோர் (வயது வந்தோரில்) (58.6 %) படிப்பறிவில்லாமல் உள்ளனர். அதற்கு அடுத்த படியாக உள்ள பகுதிகள் ஆபிரிக்கா (59.7 %), அரபு நாடுகள் (62.7 %). எழுத்தறிவின்மைக்கும் நாடுகளின் வறுமைக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.

2009 சர்வதேச எழுத்தறிவு தினத்தை முன்னிட்டு  ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலர் பான்-கி-மூன்  வெளியிட்டுள்ள அறிக்கையில், எழுதுவதும், படிப்பதும் மட்டுமே எழுத்தறிவு பெற்றதாக ஆகிவிடாது. வாய்ப்புகளைக் கண்டறிவதுடன், வளர்ச்சியை மையமாகக் கொண்டதாகவும் அந்தக் கல்வியறிவு இருக்க வேண்டும்.

ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினர்களாக உள்ள நாடுகள் அனைத்தும் சர்வதேச அளவில் அனைவரும் எழுத்தறிவு பெறுவதை இலக்காகக் கொண்டு அதற்குரிய நடவடிக்கைகளை எடுத்தல் அவசியம். இதற்கு உறுதுணையாக தேவையான உதவிகளை அளிப்பதோடு உண்மையான வளர்ச்சிக்குத் தேவையான வளங்களை உருவாக்க வேண்டும்.
உலகில் மிகுந்த அளவில் வளம் உள்ளது. இந்த உலகில் வாழ கல்வியும், அறிவும்தான் பாஸ்போர்ட் போன்றவை.

ஆனால் உலகில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 77.60 கோடி பேர், பெரும்பாலான பெண்கள் அடிப்படை வசதிகளின்றி, எழுத்தறிவு இல்லாதவர்களாக வாழ்கின்றனர். அத்துடன் 7.5 கோடி குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாமல் இருப்பது மிகவும் கவலையளிக்கும் விடயமாகும். பாதியிலேயே பள்ளிக் கல்வியை கைவிடும் குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது வருத்தமளிக்கிறது.

குறைந்தபட்ச கல்வி மூலம் ஒரு மனிதனின் வாழ்க்கையில் எத்தகைய மாற்றங்கள் ஏற்படுகிறது என்பதை பிரபல கல்வியாளர் டாக்டர் லாலகே குறிப்பிட்டுள்ளார். அவரது கூற்றை அனைவரும் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். இதை மனதில் கொண்டு இந்த ஆண்டு கல்வியறிவு இயக்கத்தை முழுவீச்சில் செயல்படுத்த வேண்டும் என்று பான்-கி-மூன் வலியுறுத்தியிருந்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின்  2000ம் ஆண்டுக்கான மனித அபிவிருத்தி அறிக்கையில் உலகில் 90 மில்லியன் குழந்தைகளுக்கு எந்தவிதமான கல்வியும் ஆரம்பக் கல்வியும் மறுக்கப்பட்டுள்ளது. 232 மில்லியன் குழந்தைகளுக்கு குறைந்த பட்சம் இரண்டாம் நிலைக் கல்வியைக்கூட பெறமுடியாத நிலை உள்ளது.

கிழக்கு ஐரோப்பாவிலும், முன்னைய சோவியத் யூனியன் நாடுகளிலும் பாடசாலைக் கல்வி 1989ல் இருந்ததை விட வீழ்ச்சி கண்டுள்ளது. எழுத்தறிவின்மை மீண்டும் தலைதூக்கியுள்ளது. இந்தியாவில் ஆரம்ப கல்வி வழங்கப்பட்டாலும், 1996ம் ஆண்டு வட மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் 60 வீதமான பாடசாலைகள் ஒழுகும் கூரைகளைக் கொண்டுள்ளன. 89 வீதமான பாடசாலைகளில் மலசலகூட வசதி இல்லை 59 வீதமான பாடசாலைகளில் குடிநீர் இல்லை.
1991ல் இந்தியாவில் 7 வயதிற்கு கூடிய மக்களில் 52 சதவீதமானவர்களுக்கு எழுத்தறிவு இருந்தது.

இதில் இந்திய பிராந்திய அரசுகளில் கிராமிய பெண்களில் 16 சதவீதமானவர்களுக்கு எழுத்தறிவு உள்ளதாகவும் அறிக்கை குறிப்பிடுகின்றது. ராஜஸ்தான் மாநிலத்தில் இது 4 சதவீதமாகும். உலக ரீதியாக 100 கோடிக்கு அதிகமானோர் எழுத்தறிவு இல்லாதவர்களாகும். கல்வியறிவுக் குறைபாட்டாலும் பரந்த எழுத்தறிவின்மையாலும் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் 250 மில்லியன் சிறுவர்கள் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இதில் 140 மில்லியன் சிறுவர்களும் 110 மில்லியன் சிறுமியர்களாகும். 18 வயதிற்கு குறைந்த 1.2 மில்லியன் பெண்களும் சிறுமியர்களும் வருடாந்தம் விபச்சாரத்தில் ஈடுபடத் தள்ளப்படுகின்றனர் என்றும் கூறப்பட்டிருந்தது.

உலக நாடுகளின் எழுத்தறிவு விகிதங்கள்

1998 ஆம் ஆண்டு ஐ.நாவின் கணிப்பீட்டின் படி உலக சனத்தொகையில் 20வீதமானோர் எழுத்தறிவற்றவர்களாக இருந்தனர்.இந்தத்தொகையினர் எந்த மொழியிலும் அமைந்த மிக இலகுவான வாக்கியங்களை எழுதவோ வாசிக்கவோ முடியாதவர்கள். எனினும் அமெரிக்க மத்திய புலனாய்வுத்துறை முகவர் அமைப்பின் (C.I.A) 2007 அறிக்கையின் படி தற்போது உலக சனத்தொகையின் எழுத்தறிவு வீதம் 82 ஆகும்.

மனித அபிவிருத்தி உள்ளடக்க 2007/2008 புள்ளி விபரப்படி   (Human Development Index 2008 Statistical Update Human Development Report 2007/2008, p. 226 Human Development Report 2007/2008) உலகில் 100 சதவீத எழுத்தறிவை பெற்றுள்ள நாடு என்ற பெருமையை ஜோர்ஜியா பெற்றுள்ளது. இரண்டாவது இடத்தில் முறையே எஸ்ட்டோனியா 99.8,   லாட்வியா 99.8,  கியூபா 99.8  ஆகிய நாடுகள் உள்ளன. 99 வீத எழுத்தறிவை உள்ள நாடுகளில் மேற்படி பட்டியலில் 49 நாடுகள் காட்டப்பட்டுள்ளன. 98 வீத எழுத்தறிவை உள்ள 8 நாடுகளும்,  97 வீத எழுத்தறிவை உள்ள 10 நாடுகளும்,  96 வீத எழுத்தறிவை உள்ள 6 நாடுகளும்,  95 வீத எழுத்தறிவை உள்ள 2 நாடுகளும்,  94 வீத எழுத்தறிவை உள்ள 06 நாடுகளும்,  93 வீத எழுத்தறிவை உள்ள 08 நாடுகளும், 92 வீத எழுத்தறிவை உள்ள 05 நாடுகளும்,  91 வீத எழுத்தறிவை உள்ள 05நாடுகளும்,  90 வீத எழுத்தறிவை உள்ள 04 நாடுகளும் காட்டப்பட்டுள்ளன.

இப்பட்டியலின் படி இலங்கை இப்பட்டியலில் 99ஆவது இடத்தைப்பிடித்துள்ளது. எழுத்தறிவு விகிதம் 90.8 ஆகும். இலங்கையில் பெருந்தோட்டப்பகுகளில் எழுத்தறிவு விகிதம் குறைவு காரணமாக தேசிய ரீதியில் இவ்விகிதம் குறைந்து காணப்படுகிறது.அதே நேரம் தெற்காசியாவுடன் ஒப்பிடும் போது இலங்கை முதலிடத்தில் உள்ளது.

இப்பட்டியலில் இந்தியாவானது 159 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. எழுத்தறிவு விகிதம் 65.2 ஆகும். இந்தியாவிலுள்ள மக்கள் தொகை அதிகரிப்பே அது எழுத்தறிவு விகிதத்தில் பின்தள்ளப்பட்டுள்ளதற்குக் காரணம் என கூறப்படுகிறது. இப்பட்டியலில் ஆப்கானிஸ்தான் (28.0) 189 ஆவது இடத்திலும் பர்க்கீனா ஃவாசோ  (26.0) 190 ஆவது இடத்திலும்,  சாட் (25.7) 191 ஆவது இடத்திலும் மாலி (22.9) 192 ஆவது இடத்திலும் காணப்படுகின்றன.

இலங்கையும் எழுத்தறிவு வீதமும்

எழுத்தறிவை பொறுத்தவரை தென்னாசியாவில் இலங்கை ஒரு முக்கிய இடத்தைப்பிடித்துள்ளது.இலங்கையில் 5 தொடக்கம் 14வயது வரையான வயதெல்லை கட்டாயக் கல்விக்கான வயதெல்லையாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இலங்கையானது யுனெஸ்கோவின் கல்வி சார் அபிவிருத்தித் திட்டங்களில் இணைந்து செயற்படுவதற்காக 1949 ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் திகதி யுனெஸ்கோ அமைப்பில் இணைந்து கொண்டது.

 இன்று இலங்கையின் எழுத்தறிவு வீதமானது நகரப்புறங்களிலேயே முன்னேற்றங்கண்டுள்ளது எனலாம்.

சுதந்திரம் கிடைத்து 61வருடங்களுக்குப் பிறகும் கூட பெருந்தோட்டப்பகுதிகளில் அடிப்படை கல்வி வசதியை பெறத்தவறியுள்ளவர்கள் எத்தனையோ பேர்.

 இலங்கை குடிசன மதிப்பீட்டு புள்ளி விபர திணைக்களத்தின் அறிக்கையின் படி இலங்கையின் நகர்ப்புறங்களில் எழுத்தறிவு வீதம் 95 ஆகவும் கிராமப்புறங்களில் 93 வீதமாகவும் பெருந்தோட்டப்பகுதிகளில் 76 வீதமாகவும் உள்ளது. பால் வேறுபாட்டில் ஆண்கள் 94 சதவீத கல்வியறிவையும் பெண்கள் 91.1வீத கல்வியறிவையும் பெற்றுள்ளனர்.

யுனெஸ்கோவின் அபிவிருத்தித்திட்டங்களில் எழுத்தறிவித்தல் ஒரு முக்கிய இடத்தைப்பிடிக்கின்றது. ஒவ்வொரு நாடுகளிலும் இத்திட்டங்கள் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றமை முக்கிய அம்சம். இதில் முதியோர்களுக்கு கல்வி போதித்தல் பிரதான இடத்தை வகிக்கின்றது.

செனல் – 4 வீடியோ காட்சிகள் குறித்து 4 கட்ட விசாரணைகள் நடத்தப்பட்டன : அமைச்சர் சமரசிங்க

pree-7-9-9.jpgபிரித்தா னியாவின் செனல் 4 தொலைக்காட்சி, இலங்கை இராணுவத்திற்குப் பாரிய அபகீர்த்தியை ஏற்படுத்தும் வீடியோக் காட்சிகள் தொடர்பாக ஜனாதிபதியின் விதப்புரைக்கமைய நான்கு கட்ட விசாரணைகள் நடத்தப்பட்டன என இடர் முகாமைத்துவம் மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்தார்.

இன்று தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் பேசியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

“அண்மையில் நான் ஜெனீவாவுக்கு சென்றிருந்த போது, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினேன். பிரித்தானியாவின் செனல் 4 தொலைக்காட்சி ஒலிபரப்பிய வீடியோ தொடர்பில் ஒரு மணி நேரம் அவருடன் கலந்துரையாடினேன். செனல் 4 தொலைக்காட்சி தொடர்பில் அரசின் நிலைப்பாடு என்ன என அவர் என்னிடம் வினவினார்.

இது போலியாகச் சித்திரிக்கப்பட்ட வீடியோக் காட்சி என்று அரசு உறுதிபடக் கூறுவதாக நான் அவரிடம் தெரிவித்தேன். வீடியோக் காட்சிகள் குறித்த அறிக்கை நாளை மறுதினமளவில் வெளியிடப்படும். ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான்கீமூனிடம் அறிக்கை கையளிக்கப்படும்.

இவை போன்ற குற்றச்சாட்டுகள் எமக்கு ஒன்றும் புதிதல்ல. பல சர்வதேச ஊடகங்கள், வன்னியில் இருந்த 4 மருத்துவர்களின் அறிக்கையை வைத்துக் கொண்டு இலங்கை இராணுவத்தினருக்கு எதிராகப் பல குற்றச்சாட்டுகளை சுமத்தின. சிலியன்களை இலக்கு வைத்துத் தாக்கியதாகவும் வைத்தியசாலைகள் மீது மோட்டார் தாக்குதல் நடத்தியதாகவும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. மருத்துவர்கள் நால்வரும் விடுதலைப் புலிகளே எம்மை இவ்வாறு அறிக்கைகள் சமர்ப்பிக்குமாறு வற்புறுத்தியதாக அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் பகிரங்கமாகத் தெரிவித்திருந்தனர்.

இதே போன்று கனடாவில் உள்ள மனித உரிமைகள் அமைப்புக்கள், இவை போன்ற வீடியோக் காட்சிகளை வெளியிட்டுப் பல குற்றச்சாட்டுகளைச் சுமத்தின. இதுவும் போலியானவை என நாம் உறுதிப்படுத்தினோம். மேற்படித் தொலைக்காட்சி தொடர்பிலான விசாரணைகளை டாக்டர் சுனில் ஹே வித்தாரண ( இவர் உலகளாவிய ரீதியில் பிரசித்திபெற்ற வீடியோ பரிசோதகர் ), மொறட்டுவை பல்கலைக் கழகத்தின் தலைமை தொழில்நுட்ப விரிவுரையாளர் சத்துர டி சில்வா, சிரேஷ்ட சமிக்ஞைகள் அதிகாரி பிரசாத் சமரசிங்க, மேஜர் ஜெனரல் பி. ஏ. பண்டார போன்றோர் நடத்தினர்.

அவர்களின் அறிக்கையில், இந்த வீடியோ காட்சிகள் ‘கேம் கோடர்’ (Camcoder) மூலமாகவே ஒளிப்பதிவு செய்யப்பட்டன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கையடக்கத் தொலைபேசியில் அல்ல எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் போலியான ஒலிப்பதிவு (Audio) நவீன தொழில்நுட்பத்தின் மூலம் பதிவாக்கப்பட்டது எனவும் உறுதிப்டுத்தப்பட்டுள்ளது” 

ஐ.நா. ஊழியர்களை விடுதலை செய்யக்கோரி விரைவில் மனுத் தாக்கல்

un-7777.jpgநீண்ட காலமாகத் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் ஐ.நா. ஊழியர்கள் இருவரை விடுதலை செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்படவுள்ளதாக இணையத் தள செய்தி ஒன்றில் தெரிவிக்கப்படுகிறது.

ஐ.நா. ஊழியர்களான சார்ள்ஸ் ரவீந்திரன், கந்தசாமி சுரேந்திரன் ஆகியோர் சட்டவிரோதமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையை ஆட்சேபித்து இந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் அடுத்த வாரம் தாக்கல் செய்யப்படும் என்றும் இம்மனுக்களைத் தாக்கல் செய்வதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் பூர்த்தியாகும் நிலையில் உள்ளன என்றும் மனித உரிமைகள் சட்டத்தரணிகளில் ஒருவரான எஸ்.செலஸ்டின் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

ஐ.நா. ஊழியர்கள் இருவரும் ஜூன் மாத நடுப்பகுதியில் வவுனியாவில் வைத்து இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்களால் அழைத்துச் செல்லப்பட்டார்கள் என்றும், தற்போது இவர்கள் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவுப் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும் ஐ.நா. வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளிவந்துள்ளன. 

இலவச உம்றா விசாக்கள் அமைச்சர் ரோஹித்த போகொல்லாகமவினால் இன்று கையளிப்பு

visa.jpgரமழான் மாத காலத்தில் உம்றா கடமையை நிறைவேற்றுவதற்கு மக்கா செல்வதற்காக சவூதி அரேபிய அரசாங்கம் வழங்கிய 100 இலவச விசாக்கள் இன்று வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகமவினால் தெரிவு செய்யப்பட்ட முஸ்லிம் ஆண், பெண் யாத்திரிகர்களுக்கு வழங்கப்பட்டன.
 
இது தொடர்பான வைபவம் கொழும்பிலுள்ள லக்ஷ்மன் கதிர்காமர் கற்கை நிலையத்தில் இன்று முற்பகல் நடைபெற்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் ரமழான் மாதத்தில் முஸ்லிம்களுக்கான இலவச விசாக்களை வழங்கியமையானது, ஜனாதிபதி மீது சவூதி அரேபிய அரசாங்கம் வைத்துள்ள நம்பிக்கைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும் எனத் தெரிவித்துள்ள அமைச்சர் சவூதி அரேபிய அரசாங்கத்துக்கும் சவூதி அரேபியத் தூதுவர் ஜமாசுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

அதிகாரியின் விசா ரத்து செய்யப்பட்டது குறித்து யுனிசெவ் விளக்கம் கோருகிறது

uni4444.jpgஇலங்கை யில் பணியாற்றும் ஐக்கியநாடுகள் சிறுவர் நிதிய பேச்சாளர் ஜேம்ஸ் எல்டரின் விசாவை ரத்து செய்வதென இலங்கை அரசாங்கம் எடுத்த தீர்மானத்திற்கு காரணம் கூறுமாறு யுனிசெவ் நிறுவனம் அரசாங்கத்திடம் கோரியுள்ளது. இலங்கையில் மிக மோசமாக இடர்களை எதிர்நோக்கியிருக்கும் பெண்கள், சிறுவர்களுக்காக ஒரு பாரபட்சமற்ற தன்னார்வ பணியாளராக எல்டர் தொடர்ந்தும் பணியாற்ற வேண்டுமென தாங்கள் திடமாக நம்புவதாக புதுடில்லியிலிருந்து பணியாற்றும் யுனிசெவ் பிராந்திய தொடர்பாடல் அதிபர் சாரா குறோவ் ஏஎப்பி செய்தி ஸ்தாதபனத்திடம் தெரிவித்தார். சிறுவர்கள் மற்றும் மிக மோசமாக ஆபத்தை எதிர்நோக்கும் நாதியற்ற மக்களின் விமோசனத்திற்காக யுனிசெவ் சார்பில் பாடுபட்டுவருபவர் எவ்டர் என்று அவர் கூறினார்.

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கெதிராக அண்மையில் நடந்து முடிந்த யுத்தம் குறித்து தெரிவித்த கருத்துக்கள் காரணமாக இலங்கையில் பணியாற்றும் சிரேஷ்ட ஐக்கியநாடுகள் அதிகாரி ஒருவரை நாட்டிலிருந்து வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளதாக அரசாங்கம் இதற்கு முன்னர் தெரிவித்திருந்தது.இலங்கையில் இரத்தக் களறியை ஏற்படுத்திவரும் இன யுத்தம் குறித்தும் இளம் பராயத்தவர்கள் மீது அதன் தாக்கம் குறித்தும் ஜேம்ஸ் எல்டர் அண்மைக் காலமாக வெளிநாட்டு தொலைக்காட்சி செய்தி அலைவரிசைகளிலும் அச்சு ஊடகங்களிலும் அடிக்கடி கருத்து தெரிவித்து வந்துள்ளார்.

செப்ரெம்பர் மாதம் 7ஆம் திகதியிலிருந்து அவரது விசா ரத்து செய்யப்பட்டதுடன் அவரை உடனடியாக நாட்டிலிருந்து வெளியேறுமாறும் உத்தரவிடப்பட்டது. ஆனால் ஐக்கியநாடுகள் ஸ்தாபனம் கால அவகாசம் கோரியதன் பேரில் செப்ரெம்பர் மாதம் 21ஆம் திகதி வரை அவரது விசாகாலம் நீடிக்கப்பட்டுள்ளது என்று குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டதிகாரி பி.பி.அபேக்கோன் தெரிவித்தார். ஜேம்ஸ் எல்டர் பாதகமான கருத்துக்களை ஊடகங்களுக்கு தெரிவித்ததால் அரசாங்கம் சில மாதங்களுக்கு முன்னரே அவரை நாட்டிலிருந்து வெளியேற்றும் தீர்மானத்தை எடுத்தது என்றும் அபேக்கோன் மேலும் கூறினார்.

இலங்கையில் பாகிஸ்தான் கப்பல்!

ships000.jpgநல் லெண்ண விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் யுத்தக் கப்பலான ‘சுல்பிகார்’ கப்பலின் கட்டளை அதிகாரிக்கும் இலங்கை கடற்படைத் தளபதிக்குமிடையில் சந்திப்பொன்று  இடம்பெற்றுள்ளது. கெப்டன் சாஹித் இல்யாஸ¤க்கும்,  இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் திஸர சமரசிங்கவுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

கொழும்பில் உள்ள கடற்படைத் தலைமையகத்தில் ‘சுல்பிகார்’ கப்பலின் கப்டன் சாஹித் இல்யாஸ_ம் இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் திஸர சமரசிங்கவும் நேற்று முன்தினம் சந்தித்து உரையாடினர். இந்த உத்தியோகபூர்வ சந்திப்பின் போது பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பாக கலந்தாலோசித்துள்ளனர்.

நான்கு நாள் நல்லெண்ண விஜயத்தை மேற்கொண்டு கடந்த வெள்ளிக்கிழமை பாகிஸ்தானின் ‘சுல்பிகார்’ கப்பல் இலங்கை வந்தது. 14 அதிகாரிகள் மற்றும் 188 கடற்படை வீரர்களுடன் வருகை தந்துள்ள சுல்பிகார் எனும் இந்தப் போர்க் கப்பல் 123 மீற்றர் நீளத்தையும், 13.2 மீற்றர் அகலத்தையும், 30.7 மீற்றர் உயரத்தையும் கொண்டது.

இந்தக் கப்பல் கொழும்பு துறைமுகத்திலிருந்து இன்று பாகிஸ்தான் நோக்கி புறப்பட்டுச் செல்லவுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கெப்டன் டி. கே. பி. தஸநாயக்க தெரிவித்தார்.