தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 7 பேர் கொண்ட உயர் மட்டக் குழு இன்று திங்கட்கிழமை மாலை 4.30 மணியளவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்கவுள்ளது. இதன்போது பிரதானமான ஐந்து விடயங்கள் குறித்து கலந்துரையாடுவதென கூட்டமைப்பினர் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தலைமையில் மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், ஸ்ரீகாந்தா, இமாம், தங்கேஸ்வரி மற்றும் சிவசக்தி ஆனந்தன் ஆகியோரே இன்று ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர்.
இச்சந்திப்பின்போது வன்னி அகதிகளின் மீள் குடியமர்வுப் பிரச்சினைக்கு முதலிடம் அளிக்கப்படும் என்றும் இனப் பிரச்சினைத் தீர்வுக்கான இலங்கை அரசின் உத்தேசத் திட்டத்தை மேலும் காலதாமதப்படுத்தாமல் உடனடியாக முன்வைக்குமாறும் வலியுறுத்தப்படும் என்றும் தமிழத்தேசியக் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில நிலக்கண்ணிவெடிகள் புதைக்கப்படாத இடங்களில் மக்களை பகுதி பகுதியாக மீள்குடியேற்றம் செய்யவேண்டும். அங்கு அவர்களுக்கு தற்காலிகமான இருப்பிடங்களை அமைத்துக் கொடுப்பதன் மூலமாக அம் மக்களுக்கு ஓரளவு நிம்மதி ஏற்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதியிடம் தமிழ்க் கூட்டமைப்பு வலியுறுத்தவுள்ளது.
வன்னி மக்களின் மீளக்குடியமர்வைத் துரிதப்படுத்துதல்,
1990 இல் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களின் மீள் குடியேற்றம், சிறைச்சாலைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரம், வடக்குக் கிழக்கில் நடைபெற்றுவரும் அத்துமீறிய குடியேற்றம் வடக்குக் கிழக்கில் அதி உயர் பாதுகாப்பு வலயம் காரணமாக இடம்பெயர்ந்த மக்களை சொந்த இடங்களில் குடியமர்த்துவது ஜனாதிபதியுடனான சந்திப்பில் பிரதானமாக கலந்துரையாடுவதென நேற்று முன்தினம் நடைபெற்ற கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது தெரிந்ததே.
இதேவேளை, முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு ஒரு நபருக்கு ஒரு தடவையில் 20 லீற்றர் தண்ணீர் மட்டுமே வழங்கப்படுகிறது. அடுத்த 20 லீற்றர் தண்ணீரும் மூன்று நாட்களுக்குப் பின்னர், அதுவும் வரிசையில் நின்றே பெறவேண்டும். முகாம்களிலுள்ள பல்கலைக்கழக மாணவர்களுக்கு இதுவரை பல்கலை அனுமதி கிடைக்கவில்லை.
முகாம்களிலிருந்து வேறுபடுத்தப்பட்டிருக்கும் முன்னாள் போராளிகளுக்கு எந்தவித கல்விச் செயற்பாடுகளும் நிவர்த்தி செய்யப்படவில்லை போன்ற விடயங்கள் ஜனாதிபதியிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் சுட்டிக்காட்டப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.