September

September

ஜனாதிபதிக்கும் பாதுகாப்பு செயலருக்கும் கெளரவ பட்டம் – கொழும்பு பல்கலை வழங்கியது

777mainpic.jpgஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குக் கொழும்பு பல்கலைக்கழகம் நேற்று கெளரவ சட்டக் கலாநிதி பட்டம் வழங்கி கெளரவித்தது. கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம் பெற்ற பட்டமளிப்பு நிகழ்வில் பல்கலைக்கழக வேந்தர் பேரருட்திரு ஒஸ்வோல்ட் கோமிஸ் ஆண்டகை ஜனாதிபதிக்கு இக் கெளரவ பட்டத்தை வழங்கி கெளரவித்தார்.

இந் நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவுக்கும் கெளரவ இலக்கியக் கலாநிதி பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்டது. பயங்கரவாதத்திலிருந்து நாட்டைப் பாதுகாத்து ஐக்கிய இலங்கையைக் கட்டியெழுப்புவதில் அர்ப்பணிப்புடனும் தூரதரிசனத்துடனும் செயற்பட்டமையைப் பாராட்டியே கொழும்பு பல்லைக்கழகம் இவர்களுக்கு இந்த கெளரவ கலாநிதிப் பட்டத்தை வழங்கிக் கெளரவித்தது.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நேற்றுப் பிற்பகல் பல்கலைக்கழக வேந்தர் பேரருட்திரு ஒஸ்வோல்ட் கோமிஸ் ஆண்டகையின் தலைமையில் நடைபெற்றது. சிரேஷ்ட அமைச்சர்கள், கல்விமான்கள், முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இந் நிகழ்வில் தாய்நாட்டுக்காக ஜனாதிபதி ஆற்றிய சேவை மற்றும் அவரது குடும்பத்தினர்களின் சேவையும் எடுத்துக் கூறப்பட்டதுடன் ஜனாதிபதியின் தூரதரிசனமும் சிறந்த தலைமைத்துவம் பற்றியும் பாராட்டப்பட்டது.

நேற்றைய இந் நிகழ்வில் மேலும் 20 பேர் தத்துவக் கலைமாணி மற்றும் முதுகலை மாணி பட்டங்களை ஜனாதிபதியிடமிருந்து பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

திருமலையிலிருந்து 880 மா மூடைகளுடன் கொழும்பு வந்த லொறி குருநாகலில் மாயம்

nimal_madiwaka.jpgதிரு கோணமலையிலிருந்து 880 மா மூடைகளை ஏற்றிக் கொண்டு கொழும்பு நோக்கி வந்து கொண்டிருந்த லொறியை குருநாகல் பிரதேசத்தில் வைத்து இனந்தெரியாத குழுவினர் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

கொள்ளையிடப்பட்ட மா மூடைகளின் பெறுமதி 18 இலட்சத்து 47 ஆயிரம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிமல் மெதிவக்க தெரிவித்தார்.

லொறியின் சாரதி கடுமையான தாக்குதல்களுக்கு உள்ளான நிலையில் மீரிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது :-

திருமலையிலிருந்து மா மூடைகளை ஏற்றி வந்துகொண்டிருந்த லொறியை குருநாகல், கதுருகஸ் சந்தியில் வைத்து இரவு 10.00 மணியளவில் வான் ஒன்றில் வந்த குழுவினர் வழிமறித்து சோதனைக்குட்படுத்தியுள்ளனர். சாரதியுடன் லொறியை எடுத்துச் சென்றவர்கள் சிறிது தூரம் சென்ற பின்னர் சாரதியை கடுமையாக தாக்கி கீழே வீசிவிட்டு லொறியை எடுத்துச் சென்றுள்ளனர்.

கந்தானை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான லொறியே இவ்வாறு மாயமாகியுள்ளது.இந்தச் சம்பவத்தில் காயமடைந்த சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மக்கா செல்ல 100 இலவச விசாக்கள்; சவூதி வழங்கியுள்ளது

ரமழான் மாத காலத்தில் உம்றா கடமையை நிறைவேற்றுவதற்கு மக்கா செல்வோருக்காக சவூதி அரேபிய அரசாங்கம் 100 விசாக்களை இலவசமாக வழங்கியுள்ளது. வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகமவின் வேண்டுகோளுக்கு அமையவே கொழும்பிலுள்ள சவூதி அரேபிய தூதரகம், உம்றா கடமைமை நிறைவேற்றச் செய்யும் 100 ஆண்கள் மற்றும் பெண்களுக்கான விசாக்களை வெளிவிவகார அமைச்சிடம் வழங்கியுள்ளது.

இந்த இலவச விஸாக்கள் இன்று லக்ஷ்மன் கதிர்காமர் கற்கை நிலையத்தில் வைத்து அமைச்சர் போகொல்லாகமவினால் தெரிவு செய்யப்பட்ட முஸ்லிம் யாத்திரிகர்களுக்கு வழங்கப்படும். முஸ்லிம்களுக்கு ரமழான் மாதத்தில் இலவச விசாக்களை வழங்கியமைக்காக அமைச்சர் போகொல்லாகம சவூதி அரேபிய அரசாங்கத்துக்கும் சவூதி அரேபியத் தூதுவர் ஜமாசுக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்ளும் அதேவேளை, இது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் சவூதி அரேபிய அரசாங்கம் வைத்துள்ள நம்பிக்கைக்கு சிறந்த எடுத்துக்காட்டு எனவும் கூறியுள்ளார்.

ரமழான் மாதத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் உம்றா கடமையை நிறைவேற்றுவதற்காக மக்கா செல்வது வழக்கம். பல்வேறு காரணங்களுக்காக சவூதி அரசாங்கம் இம்முறை உலக நாடுகளிலிருந்து உம்றா கடமைக்காக வரும் யாத்திரிகர்களின் எண்ணிக்கையினை குறைத்திருந்தது. இதனடிப்படையில் இலங்கையிலிருந்து செல்லும் யாத்திரிகர்களின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டிருந்தது. இதனைக் கேள்வியுற்ற அமைச்சர் போகொல்லாகம இது குறித்து விசேட கவனம் செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து சவூதி அரேபிய தூதுவர், அமைச்சர் கேட்டுக் கொண்டதற்கிணங்க முதற் தடவையாக இலவச விசாக்களை வழங்கவிருப்பதாக கூறினார். அமைச்சரினால் தெரிவு செய்யப்பட்டு பெயர் வழங்கப்பட்ட, முதல் தடவையாக உம்றா கடமையில் ஈடுபடுவதற்காக செல்லும் 100 பேருக்கே இந்த இலவச விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன.

இன்று புகழாரம் பாடுபவர்கள் நாளை அரசியல் அநாதைகளாகவும் அரசியல் கோமாளிகளாகவுமே மாறப் போகின்றனர் – ஜே.வி.பி.

777anura_kumara_dissanayake.jpgஆரம்பக் கொள்கைகளை மறந்து தமது சுய இலாபத்திற்காக அரசாங்கத்துடன் ஒட்டிக் கொண்டு புகழாரம் பாடுபவர்கள் உண்மையிலேயே பஸ்களில் ஏறி சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு பிச்சை எடுப்பவர்களுக்கு ஒப்பானவர்கள் என்று ஜே. வி. பி.யின் பாராளுமன்றக் குழுத் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். இன்று புகழாரம் பாடுபவர்கள் நாளை அரசியல் அநாதைகளாகவும் அரசியல் கோமாளிகளாகவுமே மாறப் போகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஜே.வி.பி.யின் விசேட செய்தியாளர் மாநாடு ஞாயிற்றுக்கிழமை பத்ரமுல்லையில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற போதே பாராளுமன்றக் குழுத் தலைவர் அநுரகுமார திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்

தலைவர் பிரபாகரனுக்கு சிகிச்சை வழங்கிய தாதி கைது – விமான நிலைய புலனாய்வுப் பிரிவினர்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு மருத்துவ சிகிச்சைகளை வழங்கிய தாதி அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  முல்லைத்தீவைச் சேர்ந்த பாலகுமாரன் சண்முகநாதன் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சிங்கப்பூருக்கு செல்வதற்காக பண்டாரநாயக்க விமான நிலையத்திற்கு சென்ற போது, விமான நிலைய புலனாய்வுப் பிரிவினரால் இவர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வவுனியா இடம்பெயர் முகாம் ஒன்றில் தஞ்சமடைந்திருந்த குறித்த நபர், ஒரு லட்ச ரூபா லஞ்சமாக வழங்கி அங்கிருந்து கொழும்புக்கு தப்பிச் சென்றதாக விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது.

வவுனியா நிவாரண கிராமம் – 10 ஆயிரம் பேர் காணாமல் போனதாக உத்தியோகபூர்வ தகவல்கள் இல்லை

வவுனியா நிவாரண கிராமங்களிலிருந்து 10 ஆயிரம் பேர் தப்பிச் சென்றதாக பரப்பப்படும் செய்தி ஆதார மற்றதெனவும், மாவட்ட செயலக வட்டாரங்களினால் எந்தவொரு ஊடகத்துக்கோ அல்லது அமைப்புக்கோ இது பற்றி எந்தவித தகவல்களும் வழங்கப்படவில்லை எனவும் வவுனியா மாவட்டச் செயலாளர் கூறுகின்றார்.

மாவட்ட செயலாளரின் பணிப்புரையின் பேரில் மேலதிக அரசாங்க அதிபரினால் வெளியிடப்பட்டுள்ள பத்திரிகை அறிக்கையொன்றிலேயே மேற்படி மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் இக்குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை ஒன்றை வவுனியா மாவட்ட செயலாளர் ஆரம்பித்துள்ளதாகவும், அவ்விசாரணை பூர்த்தியடைந்ததும் அது பற்றிய தகவல்கள் ஊடகங்களுக்கு தெரிவிக்கப்படுமென்றும் அவ்அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பணம் செலுத்தி தரகர்களினூடாக தப்பிச் செல்ல இடம்பெயர்ந்த மக்கள் சிலர் முயல்வதாக மாவட்ட செயலகத்துக்கு முன்னர் தகவல் கிடைத்திருந்ததாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நிவாரண கிராமங்களிலிருந்து 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் தப்பிச் சென்றதாக கூறப்படும் பிரசாரங்கள் அறிந்ததே.

சம்பூரில் அனல்மின் நிலையம் அமைக்க இந்திய குழு இலங்கை சென்றுள்ளது

777ntpc.gifஇலங் கையின் கிழக்கே திருகோணமலையின் சம்பூர் பகுதியில் இருக்கின்ற உயர்பாதுகாப்பு வலயப் பகுதியில் அனல் மின் நிலையம் அமைப்பதற்காக இந்தியாவின் தேசிய அனல் மின் நிலையத்தின் உயர்மட்ட குழு இலங்கை வந்துள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த இலங்கை மின்துறை அமைச்சர் ஜான் செனிவரத்ன, அனல் மின் நிலையத்திற்கான இடம் அடையாளம் காணப்பட்டு விட்டதாகவும் இதில் முதற்கட்ட பணிகள் இடம்பெற்று வருவதாகவும் கூறினார்.

மேலும் இந்த பகுதியில் அனல் மின் நிலையம் அமைக்கப்படும் போது, இந்த பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த மக்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கப்படும் என்றும், மக்களை மீள்குடியேற்ற அங்கு வேறு இடங்கள் ஏராளமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

எனினும் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலையில் இடைத்தங்கல் முகாம்களில் இருக்கும் சம்பூரில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் தங்களுடைய பகுதியில் அனல் மின் நிலையம் அமைப்பதற்கு தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக தாங்கள் இந்திய உயர்மட்ட குழுவை சந்தித்து நிலைமையை விவரிக்கவுள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கே. துரை ரட்ணசிங்கம் கூறினார்.

மான் இறைச்சியுடன் இருவர் புத்தளத்தில் கைது

சட்ட விரோதமாக மான் ஒன்றைக் கொன்று அதனை இறைச்சிக்காக பயன்படுத்தத் தயார் நிலையில் வைத்திருந்த சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

தமக்குக் கிடைத்த தகவல் ஒன்றையடுத்து அவ்விடம் சென்ற பொலிஸார் மான் இறைச்சியுடன் இரு சந்தேக நபர்களைப் புத்தளம் கருவலகஸ்வெல பகுதியில் கைது செய்து நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தினர்.

புத்தளம் அநுராதபுரம் வீதி தப்போவ பன்சலகல வனப்பகுதியில் வைத்தே பிரஸ்தாப சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக கருவலகஸ் பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி, பிரதான பெரிலிஸ் பரிசோதகர் அபயரத்ன தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட இருவரையும் இம்மாதம் 9 ஆம்; திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு புத்தளம் மாவட்ட நீதவான் உத்தரவிட்டார்

இலங்கை கிரிக்கெட் அணி மீதான தாக்குதலுக்கு விடுதலைப்புலிகள் தொடர்பு: பாக். பிரதமர் தெரிவிப்பு

pakistanprimeminister.jpgஇலங்கை கிரிக்கெட் அணி மீது பாகிஸ்தானில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பு இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் யூசூப் ராசா கிலானி தெவித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் பாகிஸ்தானில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் கலந்துகொள்ள சென்ற இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது கிழக்கு பாகிஸ்தான் நகரான லாஹுரில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.

மார்ச் மாதம் 3ஆம் திகதி லாஹுர் கடாபி மைதானத்திற்கருகில் இலங்கை கிக்கெட் வீரர்கள் பஸ்ஸில் சென்று கொண்டிருந்த போது அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்த 12 ஆயுத பாணிகளுக்கு விடுதலைப் புலிகள் நிதியளித்ததற்கான தகவல்கள், இச்சம்பவம் தொடர்பாக விசாரணை செய்துவரும் அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளன என்று பாகிஸ்தான் பிரதமர் கிலாணி செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்துள்ளார்.

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கடந்த வாரம் லிபியாவில் சந்தித்த போது மேற்படி தாக்குதல் சம்பவத்தில் விடுதலைப் புலிகளின் ஈடுபாடு பற்றி அவருடன் பிரஸ்தாபித்ததாகவும் கிலானி கூறியுள்ளார்.

இது சம்பந்தமாக இலங்கை புலனாய்வு அதிகாரிகளுடன் கலந்தாலோசிப்பதற்காக விரைவில் ஒரு குழுவை அனுப்பவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த தாக்குதலுக்கு தாமே பொறுப்பு என்று கடந்த ஜூன் மாதம் ரெஹ்றிக் ஈ தலிபான் பஞ்ஜாப் குழு உரிமை கோரியது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியுடன் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டத்தில் கலந்துகொள்வதற்காக இலங்கை வீரர்கள் சென்று கொண்டிருந்த போதே இத்தாக்குதல் நடத்தப்ப்டடது.

இலங்கை அணியைச் சேர்ந்த 6 வீரர்கள் இத்தாக்குதலில் காயமடைந்ததோடு 6 பாகிஸ்தான் பொலிஸாரும் இரண்டு சிவிலியன்களும் கொல்லப்பட்டார்கள். இச்சம்பவத்தை அடுத்து அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி உட்பட பல கிரிக்கெட் அணிகள் பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து பாகிஸ்தான் சுற்றுப் போட்டிகளில் கலந்து கொள்வதை ரத்துச் செய்தன.

சர்வதேச கிரிக்கெட் சபையும் பாகிஸ்தானில் நடத்தத் திட்டமிட்டிருந்த 2011ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளை ரத்து செய்துள்ளது.

ஆப்கான் தாக்குதலில் பொதுமக்கள் பலியானமைக்கு ஐரோப்பிய யூனியன் கண்டனம்

ஆப்கானிஸ்தானில் நேட்டோப் படைகள் நடத்திய வான் தாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டதை ஐரோப்பிய யூனியன் வெளிநாட்டமைச்சர்கள் கண்டித்துள்ளனர். ஆப்கான் மக்களைக் கொல்வதால் அங்கு சமாதானத்தைக் கொண்டு வரமுடியாதென சுவீடன் வெளிநாட்டமைச்சர் சொன்னார்.

தலிபான்களால் கடத்தி வரப்பட்ட இரண்டு லொறிகளும் ஜேர்மன் படையினர் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்தும் நோக்குடன் கொண்டு வரப்பட்டது. இதைத் தவிர்க்கவே லொறிகளைத் தாக்க வேண்டியேற்பட்டதாக ஜேர்மன் வெளிநாட்டமைச்சர் சொன்னார்.

தலிபான்கள் ஆறு கிலோ மீற்றர் தொலைகளுக்குள்ளே நின்று ஜேர்மன் படையினரை தாக்கப் புறப்பட்டனர். இதைத் தடுக்காவிட்டால் பெருமளவான ஜேர்மன் வீரர்கள் உயிரிழந்திருப்பர் என்றும் ஜேர்மன் வெளிநாட்டமைச்சர் குறிப்பட்டார். நேட்டோ படையினரின் தாக்குதல் மிகப் பெரிய தவறு என்று பிரான்ஸ் வெளிநாட்டமைச்சர் கண்டித்தார்.

ஆப்கானிஸ்தானில் சென்ற வெள்ளிக்கிழமை தலிபான்கள் கடத்தி வந்த இரண்டு எரிபொருள் நிரப்பப்பட்ட லொறிகள் நேட்டோப் படையினால் தாக்கப்பட்டது. இதில் சுமார் 90 பேர் பலியாகினர். இவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்களாவர்.

பொதுமக்களைப் பொருட்படுத்தாது நடத்தப்பட்ட இத்தாக்குதலுக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. இதையடுத்தே ஐரோப்பிய யூனியன் வெளிநாட்டமைச்சர்கள் இத்தாக்குதலைக் கண்டித்துள்ளனர்.

ஜேர்மன் வீரர்களே இந்த வான் தாக்குதலை நடத்தினர். இத்தாக்குதலை இத்தாலியும் கண்டித்துள்ளது. இது குறித்து பாரபட்சமற்ற விரிவான விசாரணைகள் நடத்தப்படுமென ஐரோப்பிய யூனியன் உறுதியளித்துள்ளது. ஐரோப்பிய யூனியனுக்கு சுவீடன் தலைமை தாங்குகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.