ஜஸ்வந்த் சிங் புத்தகத்திற்கு குஜராத் முதல்வர் மோடி அரசு விதித்த தடையை அம்மாநில மேல் நீதிமன்றம் நீக்கியுள்ளது. தடை விதிக்கப்பட்டதில் சட்ட விதிமுறைகள் சரியாகப் பின்பற்றப்படவில்லை என்றும் கூறியுள்ளது.
பா. ஜ. மூத்த தலைவராக இருந்த ஜஸ்வந்த் சிங் சமீபத்தில், “ஜின்னா – இந்தியா, பிரிவினை, சுதந்திரம்” என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை வெளியிட்டார். இதையடுத்து, கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அவரது புத்தகத்திற்கு, குஜராத் முதல்வர் மோடி தலைமையிலான அரசு தடை விதித்தது.
இந்தத் தடையை எதிர்த்து, மணீஷி ஜானி, பிரகாஷ் ஷா ஆகியோர் குஜராத் மேல் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்தனர். மனுவை, தலைமை நீதிபதி ராதாகிருஷ்ணன் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட குழு விசாரித்தது.
குஜராத் அரசு விதித்த தடையை நீக்கிய நீதிபதிகள், தங்கள் உத்தரவில் கூறியதாவது:- ஜஸ்வந்த் சிங் புத்தகத்திற்கு தடை விதித்து அறிக்கை வெளியிட்டதில், உரிய சட்ட விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. புத்தகத்தில் உள்ள விவரங்கள் தேசிய நலனுக்கு எதிரானவை மற்றும் மக்களை திசை திருப்புபவை எனக் கூறி, இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 95 ன் கீழ் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தடை மூலம், ஒரு குடிமகனின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளது. எந்த அடிப்படையில், புத்தகத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்பதை அறிக்கையில் குறிப்பிடவில்லை. மேலும் புத்தகத்தை படிப்பதன் மூலம், எந்த வகையில் மாநிலத்தின் அமைதி பாதிக்கப்படும் என்பதையும் தெரிவிக்கவில்லை.
அதே நேரத்தில், புதிதாக ஒரு அறிக்கையை வெளியிட குஜராத் மாநில அரசு தீர்மானித்தால், அதற்கு தடையில்லை. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர். தன் புத்தகத்திற்கு மோடி அரசு விதித்த தடையை குஜராத் மேல் நீதிமன்றம் நீக்கியுள்ளதை ஜஸ்வந்த் சிங் வரவேற்றுள்ளார். தீர்ப்பு, தனக்கு எழுச்சியை உண்டாக்கியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். பாரதீய ஜனதாக் கட்சியின் ஆட்சியிலுள்ள ஏனைய மாநிலங்களில் இந்தப் புத்தகத்திற்குத் தடைவிதிக்கப்படவில்லை.