September

September

சாரணியர் இயக்கம் ஆரம்பித்து 100 ஆண்டுகள்

சாரணியர் இயக்கத்தின் நூற்றாண்டு விழா சனிக்கிழமையன்று கொண்டாடப்பட்டுள்ளது.

ராபர்ட் பேடன் பவல் பெண்கள் சாரணர் இயக்கத்தை உருவாக்கிய போது, பெண்கள் பிரிவை கைட்ஸ் பிரிவு என்று பெயரிட்டார். இராணுவத்தில் ராபர்ட் பேடன் போவல் பணிபுரிந்த போது அவருடன் இணைந்து பணியாற்றிய இந்திய கைடுகளின் பெயரை கொண்டு அவர் இந்த பெயரை சூட்டினார்.

இவ்வாறு வேறு பெயர் சூட்டினால், பெண்கள் இயக்கம் தனியாக தெரியும் என்றும், பெண்கள் கல்யாணமாகாத முரட்டுவாதிகளாக மாறி விடுவார்கள் என்ற பெற்றோரின் அச்சத்திற்கும் ஒரு முற்றுப்புள்ளி வைத்த்து போல இருக்கும் என்றும் ராபர்ட் பேடன் பவல் எண்ணினார்.

சாரணியாக இருந்தால், பெண்களுக்குள் ஒரு அனுகூலமான மாற்றம் ஏற்படுகிறது என கைட் தலைவராக இருக்கும் ஏஞ்சலா மிலன் கூறுகின்றார்.

இந்த நூறு ஆண்டுகளில் பெண் சாரணர் இயக்கம் உலகம் முழுவதும் பரவி விட்டது. இதில் கிட்டதட்ட 1 கோடி பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இவர்களிடையே தன்னம்பிக்கையை மேம்படுத்துவதற்காக கூடாரம் அமைப்பது, யோகாசனம் செய்வது, வீடியோ கேமராக்கள் இயக்குவது உள்ளிட்ட பல விஷயங்களை சொல்லித் தருகிறார்கள்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் ஊடகவியலாளர்களைத் தண்டிக்கக் கூடாது : இலங்கை பத்திரிகை ஸ்தாபனம்

slpi-2222.jpgபயங்கர வாத தடைச்சட்டத்தின் கீழ் ஊடகவியலாளர்கள் தண்டிக்கப்படக் கூடாது. நாட்டின் சாதாரண சட்டத்தின் கீழ் அவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

இவ்வாறு இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் வலியுறுத்தியுள்ளது.

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படக் கூடிய சந்தர்ப்பங்களில் மட்டும் பயங்கரவாதத் தடைச் சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டுமென அது தெரிவித்துள்ளது.

1979ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதன் பின்னர் முதல் தடவையாக ஊடகவியலாளர் திஸ்ஸாநாயகம் மட்டுமே இந்த சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்டுள்ளார்.

யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில் ஊடகவியலாளர் தொடர்பான வழக்குகளுக்குச் சாதாரண சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறும் இலங்கைப் பத்திரிகை ஸ்தாபனம் அரசாங்கத்திடம் கோரியுள்ளது. 

இந்திய மருத்துவக்குழு 10இல் நாடு திரும்புகிறது

இடம்பெயர்ந்த மக்களுக்கென சேவையாற்றிய இந்திய மருத்துவக் குழு தனது பணியை முடித்துக்கொண்டு எதிர்வரும் 10ம் திகதி நாடு திரும்பவுள்ளது. இந்திய மருத்துவக் குழுவினரைப் பாராட்டும் நிகழ்வு எதிர்வரும் 9ம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது.

கொழும்பு தாஜ் சமுத்திராவில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பிரதம அதிதியாக கலந்து கொள்வார். மருத்துவக் குழுவினரை பாராட்டும் இந்த நிகழ்வில், இந்தியா 25 மில்லியன் ரூபா பெறுமதியான மற்றொரு தொகுதி மருந்துப் பொருட்களை இலங்கைக்குக் கையளிக்கவுள்ளது.

இந்திய உயர் ஸ்தானிகர் ஆலோக் பிரசாத் இதனை வழங்குவார். 60 பேர் கொண்ட இந்திய மருத்துவக் குழு புல் மோட்டையில் மருத்துவமனை அமைத்துச் செயற்பட்டு வந்தது.  பின்னர் வவுனியா நிவாரணக் கிராமங்களில் தனது பணிகளைத் தொடர்ந்தது. மெனிக் பாம் உட்பட பல நிவாரணக் கிராமங் களில் மூன்று மாத காலத்தில் சுமார் 42 ஆயிரம் நோயாளருக்குச் சிகிச்சையளிக்கப்பட்டுள்ளதாக இந்திய உயர் ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய அறிக்கையின் படியே ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைத் திட்டம் நீடிக்கப்படும்

ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகைத் திட்டம் தொடர்பான இறுதித் தீர்மானம் இந்த மாத இறுதியில் முன்வைக்கப்படும் எனவும், ஐரோப்பிய ஒன்றியத்தின் இறுதி அறிக்கையின் அடிப்படையிலேயே  நீடிப்பு குறித்து  இறுதித் தீர்மானம் வழங்கப்படும் என்றும்  சிங்களப் பத்திரிகையொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
 
ஆடைக் கைத்தொழில்துறைக்கு பெரும் உதவியாக அமையப் பெற்றுள்ள ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகைத் திட்டத்தை நீட்டிப்பது குறித்த இறுதித் தீர்மானம் மாத இறுதியில் அறிவிக்கப்படும் எனக் குறிப்பிடப்படுகிறது.
 
ஊடக சுதந்திரம், நல்லாட்சி மற்றும் மனித உரிமைகள் போன்ற துறைகள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் கவனம் செலுத்திய பின்னரே இந்த சலுகைத் திட்டம் நீடிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
 
இதன்படி இலங்கையின் கடந்த கால மனித உரிமை நிலவரம், ஊடக சுதந்திரம் மற்றும் ஜனநாயக ஆட்சி முறைமை குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
ஐரோப்பிய ஒன்றியத்தின் இறுதி அறிக்கையின் அடிப்படையிலேயே ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைத் திட்டம் தொடர்பிலான இறுதித் தீர்மானம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஐரோப்பிய ஒன்றியத்தினால் ஏற்கனவே அறிக்கை ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த அறிக்கை தொடர்பில் பதிலளிப்பதற்கு எதிர்வரும் 17ம் திகதி வரையில் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

சாமிமலையில் மின்சாரம் தாக்கி ஒருவர் மரணம்

electricity.jpgசாமிமலை ஸ்டெஸ்பி ஒமிடெல் தோட்டத்தில் மின்சாரம் தாக்கியதில் ஒருவர் மரணமாகியுள்ளார். ஒமிடெல் தோட்டத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளுக்குத் தந்தையான, 24 வயதான பி.ஜெயக்குமார் என்பவரே இவ்வாறு மரணமானவராவார்.

இந்தச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது :

ஒமிடெல் தோட்ட முதலாம் இலக்க தேயிலை மலையில் கையில் அறுந்து விழுந்த மின்சாரகம்பியுடன் நபர் ஒருவர் இறந்து கிடப்பதைக் கண்டுள்ளனர். இவ்வாறு இறந்தவர் இந்தத் தோட்டத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் என்று தோட்ட மக்கள் இனங்கண்டு மஸ்கெலியா பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

ஒமிடெல் தோட்ட அதிகாரியின் பங்களாவுக்கு மின்சாரம் வழங்கும் மின்கம்பியே அறுந்து விழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மின்சார கம்பிகள் பாதுகாப்பற்ற முறையில் இணைக்கப்பட்டுள்ளதாகத் தோட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

19 ஆம் திகதி புத்தக கண்காட்சியும் விற்பனையும்

சர்வதேச புத்தக கண்காட்சியும், விற்பனையும் இம்மாதம் 19 ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமாகவுள்ளது. ஒன்பது தினங்களுக்கு நடைபெறும் இக் கண்காட்சியை கல்வியமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த பிரதம அதிதியாக கலந்து கொண்டு ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

பதினோராவது ஆண்டாக நடைபெறும் சர்வதேச புத்தக கண்காட்சியில் உள்ளூர் புத்தக வெளியீட்டாளர்களும், விற்பனையாளர்களுமாக 360 கண்காட்சி கூடங்களில் காட்சிப்படுத்த உள்ளதுடன் 40 வெளிநாட்டு வெளியீட்டாளர்களின் கண்காட்சி கூடங்களும் அமைக்கப்படவுள்ளன.

இவ்வாண்டு எதிர்பார்க்கப்படும் பெருந்திரளான மக்களை உள்ளடக்கக்கூடியதாக மிகவும் நுட்பமான முறையில் விற்பனைக் கூடங்களை அமைப்பதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக புத்தக கண்காட்சியின் பொதுச் செயலாளர் உபாலி வணிகசூரிய தெரிவித்துள்ளார்.

கண்காட்சி ஆரம்ப நிகழ்வின் போது சமூக, கலை, கலாசார பாரம்பரியங்களை எடுத்தியம்பும் விதத்தில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. சிறந்த சிங்கள நூலுக்கு வழங்கப்படும் சுவர்ணா புத்தக விருது நிகழ்வும் அன்றைய தினம் நடைபெறவுள்ளது. முதல் சிறந்த நூலுக்கு 5 இலட்ச ரூபாவும் ஏனைய ஐந்து நூல்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபா வீதமும் வழங்கப்படவுள்ளதாக புத்தக வெளியீட்டாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக முதலாம் கட்டப் பணி 2010 இல் பூர்த்தி

hambantota_harbour.jpgஅம்பாந் தோட்டை சர்வதேச துறைமுகத்தின் முதலாம் கட்டப்பணிகள் அடுத்த வருட இறுதியில் பூர்த்தி செய்யப்படவுள்ளன. முதற்கட்டத்தின் மூலம் 20 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் தொழில் வாய்ப்பு கிடைக்க உள்ளதாக ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக பணிகளுக்குப் பொறுப்பான பிரதம பொறியியலாளர் ஜானக குருகுலசூரிய தெரிவித்தார். ஹம்பாந்தோட்டை துறைமுக பணிகள் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

அம்பாந்தோட்டை சர்வதேச விமான நிலையத்தின் முதற்கட்டப் பணிகள் 50 வீதம் பூர்த்தியடைந்துள்ளன. முதலாம் கட்டப் பணிகள் 2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட்டதோடு 2011 ஜனவரியில் பூர்த்தி செய்ய திட்டமிடப்பட்டது. ஆனால் நிர்மாணப் பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்படுவதால் அடுத்த வருட இறுதியில் முதற்கட்டப் பணிகள் பூர்த்தியடையும். முதற் கட்டத்தின்போது 3 பெரிய கப்பல்களை துறைமுகத்தில் நிறுத்த முடியும். முதலாவது கப்பல் 2011 ஜனவரியில் நங்கூரமிடப்படும்.

கடலை மறித்து நிர்மாணிக்கப்பட்டு வரும் கல்வேலி பணிகளும் 90 வீதம் பூர்த்தியடைந்துள்ளன. 17 மீட்டர் ஆழத்துக்கு நிலத்தை தோண்டும் பணிகளும் 45 வீதம் நிறைவடைந்துள்ளன. நிர்வாகக் கட்டிடம் நிர்மாணிப்பதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முதலாம் சட்டத்தின்போது 600 மீட்டர் நீளமான இறங்குதுறையொன்றும் 310 மீட்டர் நீளமான இறங்குதுறையொன்றும் அமைக்கப்படும். 600 மீட்டர் நீள இறங்குதுறை நிர்மாணிக்கும் பணிகள் பெருமளவு பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

முதற்கட்டத்தின் மூலம் 5 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும் 15, 000 பேருக்கு மறைமுகமாகவும் தொழில் வாய்ப்பு கிடைக்கவுள்ளது.

மழை காரணமாக கடலில் ஆழத்துக்குத் தோண்டும் பணிகளும் சில நிர்மாணப் பணிகளும் சற்று பாதிக்கப்பட்டுள்ளபோதும் முதற்கட்டப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்படுகின்றன என்றார்.

கேரள சாப்பாட்டு போட்டி – தொண்டையில் பாண் சிக்கி இளைஞர் உயிரிழப்பு

கேரளாவில் நடைபெற்ற சாப்பாட்டுப் போட்டியில் பங்கேற்ற இளைஞர் ஒருவர் தொண்டையில் பாண் சிக்கி மூச்சுத் திணறி இறந்துள்ளார்.

ஓணம் பண்டிகையையொ ட்டி கேரளாவில் பல்வேறு அமைப்புகள் சார்பில் விளையாட்டு போட்டிகள் உட்பட பல்வேறு போட்டிகள் நடப்பது வழக்கம். கோழிக்கோடு கொடுவள்ளி பகுதியில் உள்ள ஓர் இளைஞர் அமைப்பு சார்பில் சாப்பாடு போட்டி நடத்தப்பட்டது.

இந்த போட்டியில், 2 நிமிடத்தில் அதிக அளவில் பாண் சாப்பிடுபவருக்கு ரூ. 1,000 பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த சசி (35) என்பவர் உட்பட 15 பேர் கலந்து கொண்டனர். போட்டியைக் காண அந்த பகுதியைச் சேர்ந்த ஏராளமானவர்கள் திரண்டிருந்தனர்.

போட்டியில் பங்கேற்ற இளைஞர்கள் வேக வேகமாக சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென சசியின் தொண்டையில் பாண் சிக்கியது. இதில் மூச்சு திணறிய அவர் மயங்கி விழுந்தார். அவரை கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் இறந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இது குறித்து பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.

கண்களிலிருந்து வடியும் ரத்தம் – தவிக்கும் யு.எஸ். சிறுவன்

05-inman.jpgஅமெரிக் காவைச் சேர்ந்த 15 வயதான கால்வினோ இன்மேன் என்ற சிறுவனின் கண்களிலிருந்து ரத்தம் வழிகிறது. இந்தக் கொடுமையிலிருந்து மீள வழி தெரியாமல் தவித்து வருகிறான் அந்த சிறுவன். கடந்த மே மாதம் முதல்தான் இந்த கொடுமையை சந்தித்து வருகிறான் இன்மேன். ஒரு மாலை நேரத்தில் முகம் பார்க்க கண்ணாடி முன் நின்றபோது கண்களிலிருந்து தாரை தாரையாக ரத்தம் வடியவே பீதியடைந்தான் இன்மேன்.

டென்னஸ்ஸி மாநிலம் ராக்வுட் நகரைச் சேர்ந்தவன் இன்மேன். தனது நிலை குறித்து அவன் கூறுகையில், எனக்கே என்னைப் பார்த்தால் பயமாக இருக்கிறது. சாகப் போகிறேனோ என்ற பீதி வருகிறது என்றான். இன்மேனின் தாயார் டேமி மைனாட் கூறுகையில், கண்களிலிருந்து கண்ணீர் போல ரத்தம் வடியத் தொடங்கவே அவனை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம். ஆனால் அங்கு போனதும் ரத்தம் வடிவது நின்று விட்டது. நாங்கள் என்ன சொல்கிறோம் என்பதை முதலில் டாக்டர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.

பின்னர் வீட்டிற்குத் திரும்பினோம். ஆனால் சில நாட்கள் கழித்து மீண்டும் ரத்தம் கொட்டவே மறுபடியும் மருத்துவமனை சென்றோம். ஆனால் அப்போதும் ரத்தம் நின்று விடவே டாக்டர்களிடம் நாங்கள் விளக்கியும் அவர்களுக்குப் புரியவில்லை. இப்படி இதுவரை எந்த நோயாளியும் எங்களிடம் வந்ததே இல்லை என்கிறார்கள் டாக்டர்கள்.

இருப்பினும் எனது மகனுக்கு எம்.ஆர்.ஐ, சிடி மற்றும் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டது. ஆனால் அதில் எல்லாமே நார்மல் என்றுதான் வருகிறது.  இப்போது எனது கவலையெல்லாம் எனது மகனின் துயரத்தை எப்படித் தீர்க்கப் போகிறேன் என்பதுதான் என்கிறார் வேதனையுடன்.

டென்னஸ்ஸி ஹேமில்டன் கண் மருத்துவ பல்கலைக்கழகத்தின் இயக்குநர் டாக்டர் பாரட் ஹெய்க் கூறுகையில், இந்தப் பிரச்சினைக்கு ஹீமோலேக்ரியா (haemolacria) என்று பெயர். அதீத மனத் துயரம், சோர்வு, தலைக் காயம் ஆகியவற்றை சந்திக்கும் நபர்களுக்கு இப்படிப்பட்ட பிரச்சினைகள் வருவது சாதாரணமானதுதான். ஆனால் இன்மேன் விவகாரத்தைப் பொறுத்தவரை இப்படி எதையும் அந்த சிறுவன் சந்திக்கவில்லை. அப்படி இருந்தும் கண்களிலிருந்து ரத்தம் கொட்டுவது புதிராக உள்ளது. மேலும் இந்த சிறிய வயதில் இப்படி ஒரு பிரச்சினை இன்மேனுக்கு வந்திருப்பது கவலைக்குரியதாக உள்ளது.

கடந்த 1992ம் ஆண்டு முதல் இப்படி இதுவரை 4 கேஸ்கள் மட்டுமே உலக அளவில் ரிப்போர்ட் ஆகியுள்ளதாம். இது மிக மிக அரிய பிரச்சினை என்பதால் இன்மேன் பல்வேறு வகையான சோதனைகளுக்கு உட்பட வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ரத்தம் தொடர்பான சிறப்பு நிபுணர்கள், கண், காது, மூக்குத், தொண்டை நிபுணர்கள் என பலரிடமும் அவன் ஆலோசனை பெற வேண்டும் என்பது அவர்களது கருத்து.

தற்போது ஹேமில்டன் கண் மருத்துவக் கழகத்தின் நிபுணரான டாக்டர் ஜேம்ஸ் பிளமிங், இன்மேனுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினையை சரி செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

ஆந்திர முதல்வர் நியமனத்தில் இழுபறி; ரெட்டியின் மகனுக்கு 148 பேர் ஆதரவு

ராஜசேகர ரெட்டியின் உடல் அடக்கம் முடிந்த கையோடு அங்கு தற்போது முதல்வர் பதவியைப் பிடிக்கும் முயற்சிகள் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளன. ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஆதரவாக 148 எம். எல். ஏக்கள் அணி திரண்டுள்ளனர்.

ஆனால் அவசரப்பட்டு அடுத்த முதல்வரைத் தீர்மானிக்க விரும்பாமல் நிதானமாக முடிவெடுக்க காங்கிரஸ் மேலிடம் திட்டமிட் டுள்ளது.

உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுப் பதை விட ஆந்திர நலனுக்கும், கட்சிக்கும் உகந்த முடிவை எடுக்க ஆர்வமாக உள்ளதாம் காங்கிரஸ் தலைமை. தற்போது ஆந்திர நிலையை கட்சி மேலிடம் உன் னிப்பாக கவனித்து வருவதாகவும் தெரிவிக் கப்படுகின்றது. இதன் காரணமாகவே ரோசய்யாவை உடனடியாக இடைக்கால முதல்வராக கட்சி மேலிடம் அறிவித்து அவரை உடனடியாக பதவியேற்கவும் செய்தது. எனவே நிதானமாக அடுத்த முதல்வரைத் தேர்ந்தெடுக்க முடியும் என்பது காங்கிரஸின் எண்ணம்.

2004ம் ஆண்டு காங்கிரஸ் மீண்டும் ஆந்திராவில் ஆட்சியைப் பிடிக்கக் காரணமே ராஜசேகர ரெட்டியின் அணுகுமுறைதான்.

அதுவரை பல்வேறு கோஷ்டிகளாக பிளவுபட்டுப் போயிருந்த காங்கிரஸை ஒன்றுபடுத்தி அனைவரையும் ஓரணியில் நிற்க வைத்தவர் ராஜசேகர ரெட்டி. ஒரே கட்சி, ஒரே கோஷ்டி என்ற அளவுக்கு காங்கிரஸை ஆந்திராவில் கட்டுக் கோப்பான கட்சியாக கடினப்பட்டு மாற்றி வைத்திருந்தார் ரெட்டி. இப்போது அவரது வாரிசைத் தேர்வு செய்யும் போது கட்சிக்குள் குழப்பமாகி, மறுபடியும் கட்சியில் பூசல்கள் வெடித்து விடாமல் இருக்க வேண்டும் என காங்கிரஸ் தலைமை யோசிக்கிறதாம்.

இருப்பினும், இப்போதைக்கு ஜெகன் மோகன் ரெட்டியின் கரம் தான் கட்சியில் ஓங்கியிருப்பதாக தெரிகிறது. அவரைத் தவிர வேறு யாரும் தெளிவான, வலுவான தலைவராக தெரியவில்லை. அதேசமயம், ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஆதரவாக தீவிரமாக செயல்படுபவர்கள் இளம் எம்.பிக்கள், எம். எல். ஏக்கள்தான். அவர்களில் பெரும்பாலானோர் ராஜசேகர ரெட்டியால் அரசியல் அங்கீகாரம் தரப்பட்டவர்கள்.

மற்றபடி மூத்த தலைவர்களோ அல்லது மூத்த எம். எல். ஏ. எம். பியோ யாரும் ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஆதரவாக இவ்வளவு தீவிரமாக இல்லை என்றும் கூறப்படுகிறது. இதன் மூலம் ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஆந்திர காங்கிரஸ் முழு ஆதரவுடன் இல்லை என்பதும் தெளிவாகியுள்ளது. தற்போது ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஆதரவாக 36 அமைச்சர்கள் உட்பட 148 எம். எல். ஏக்களின் ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது. இதைத் தெரிவித்து கட்சித் தலைமைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாம்.