September

September

காலி டின்மீன் உற்பத்திக் கம்பனியின் நிர்மாணப்பணி ஒக்டோபரில் ஆரம்பம் நியூசிலாந்துடன் ஒப்பந்தம்; 50 மில். அ. டொலர் முதலீடு

இலங்கையின் முதலாவது டின் மீன் உற்பத்தி கம்பனி காலி, கதுருதுவ வத்தையில் அமைக்கப்பட உள்ளதோடு, இதற்கான நிர்மாணப் பணிகள் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தென் மாகாண அபிவிருத்தி அதிகார சபை தலைவர் சட்டத்தரணி ஏ. பி. எஸ். ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த அவர், டின் மீன் கம்பனி அமைப்பது தொடர்பாக நியூசிலாந்து நாட்டு கம்பனியொன்றுடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு 50 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீடு செய்யப்படவுள்ளது. இதனூடாக 1500 பேருக்கு நேரடியாக தொழில்வாய்ப்பு கிட்டும்/ இந்த கம்பனி அமைக்க 20 ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்கு முதலீட்டு சபை, அமைச்சரவை என்பவற்றின் அனுமதி கிடைத்துள்ளன.

 இங்கு உற்பத்தி செய்யப்படும் டின் மீன்கள் நியூசிலாந்து, இத்தாலி மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். கம்பனி நிர்மாணப் பணிகள் ஒக்டோபரில் ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடத்தில் பூர்த்தி செய்யப்படும். கம்பனிக்குத் தேவையான இயந்திரங்களும் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. அடுத்த வருட இறுதிக்குள் முதலாவது டின் மீன் சந்தைக்கு விடப்படும். இதனூடாக இறக்குமதி செய்யும் டின் மீன்களின் விலைகள் குறைவடையும்.

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி ஆரம்ப விழா பங்களாதேசில்

2nd-test.jpg2011 ஆம் ஆண்டுக்கான உலக கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் தொடக்க விழா பங்களாதேசில் பெப்ரவரி 17 ஆம் திகதி நடைபெறும் என்று ஐ.சி.சி. அறிவித்துள்ளது.

2011 ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான மத்திய அமைப்பு குழுக் கூட்டம் மும்பையில் நடந்தது.

ஐ.சி.சி. துணை தலைவர் சரத்பவார் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) தலைமை செயல் அதிகாரி ஹாரூன் லார்கட், போட்டியை நடத்தும் இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் ஆகிய கிரிக்கெட் சபைகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் தொடக்க விழாவை பங்களாதேசில் பெப்ரவரி 17 ஆம் திகதி நடத்துவது என்றும் தொடக்க ஆட்டத்தை அங்கு பெப்ரவரி 19 ஆம் திகதி நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. முதலில் பெப்ரவரி 19 ஆம் திகதி தொடக்க விழா மற்றும் தொடக்க ஆட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

போட்டி அட்டவணை முழு விவரம் நவம்பர் 9 ஆம் திகதி வெளியிடுவது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. போட்டி நடைபெறும் இடங்கள் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஆய்வு செய்வது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கூட்டம் முடிந்ததும் போட்டி அமைப்பு குழு இயக்குனர் ரத்னாகர் ஷெட்டி கூறுகையில், ‘பயன் அளிக்கக் கூடிய கூட்டம் இதுவாகும். போட்டி சிறப்பான முறையில் நடைபெற வேண்டிய நடவடிக்கை முழு வீச்சில் எடுத்து வருகிறோம். போட்டியை நடத்தும் எல்லா நாடுகளும், ஐ.சி.சி. யும் உற்சாகமான ஒத்துழைப்பு எடுத்து வருகிறன’ என்றார்.

யுரேனியம் செறிவூட்டல் வேலைகளை நிறுத்திவிட்டதாக வடகொரியா அறிவிப்பு

யுரேனியம் செறிவூட்டல் வேலைகளை நிறுத்திவிட்டதாக நேற்று வெள்ளிக்கிழமை வடகொரியா பகிரங்கமாக அறிவித்தது. சர்வதேச நாடுகளின் அழுத்தங்களையடுத்து வடகொரியா இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரியவருகின்றது. யுரேனியம் செறிவூட்டல் வேலைகளின் இறுதிக் கட்டத்தை வெற்றிகரமாக முடித்த பின்னர் வட கொரியா இவ்வாறு அறிவித்ததாக ஆசியாவுக்கான அமெரிக்காவின் விசேட பிரதிநிதி ஸ்டீபன் பொஸ் வோர்த் ஐ.நா. வுக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியதாக மற்றொரு செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும் ஐ. நா. வின் கடுமையான பொருளாதாரத் தடை காரணமாக இந்த முடிவுக்கு வந்ததாக வடகொரியா தெரிவித்துள்ளது. ஐ. நா. விதித்த கடுமையான பொருளாதாரத் தடைகளால் வட கொரியாவின் பல ஆயுத வியாபாரங்கள் தடைப்பட்டன. சர்வதேசநாடுகள் தொடர்ந்தும் வடகொரியா மீது சந்தேகத்துடனும், தனது அறிக்கைகளை நம்பாமலும் நடந்து கொண்டால் முடிவுகளை மீள் பரிசீலனை செய்யுமென வட கொரியாவின் முக்கிய நபர் ஒருவர் சொன்னார். வெள்ளிக்கிழமை வடகொரியா வெளியிட்ட அறிக்கையில் அமெரிக்கா நம்பிக்கையடையவில்லை. இதனால் ஸ்டீபன் பொஸ் வோர்த் ஐ.நா. வுக்கு கடிதம் எழுதியுள்ளதாகச் சிலர் தெரிவிக்கின்றனர்.

யுரேனியத்தை செறிவூட்டுவதனூடாக வட கொரியா அணு ஆயுதங்களை உற்பத்தி செய்வதாக அமெரிக்கா சந்தேகிப்பதால் வடகொரியா பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டது. அண்மையில் ஐ.நா.வில் தனக்கெதிராக விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளை எதிர்த்துப் பல ஆர்ப்பாட்டங்களை நடாத்தியது. இவற்றை வடகொரியா கைவிட்டுள்ளது. ஸ்டீபன் பொஸ் வோர்த் செய்த விஜயம் வெற்றியளித்துள்ள தென்பதையே வட கொரியாவின் அறிக்கை காட்டுவதாகவும் சில அவதானிகள் தெரிவிக்கின்றனர். எங்கள் நாட்டை வழிநடத்தும் பொறுப்பு ஐ.நா. விடமுள்ளது. பிழையாக வழி நடத்தினால் பாரதூரமான விபரீதங்கள் ஏற்படலாம் என வட கொரியா நிபுணர்கள் கூறினார்.

கண்டி மாவட்டத்தில் டெங்கு நோய் மீண்டும் தீவிரம்!

dengue22222.jpgகண்டி மாவட்டத்தில் டெங்கு நோய் மீண்டும் தீவிரமாகப் பரவ ஆரம்பித்துள்ளதாக டெங்கு நோய் தடுப்பு மத்திய நிலையம் எமது இணையத்துக்கு இன்று அறிவித்தது. கடந்த சில தினங்களில் டெங்கு நோய் பரவுதல் கட்டுப்பாட்டுக்குள் இருந்தபோதும் இப்பொது பெய்துவரும் மழை காரணமாக நுளம்புகள் பெருகி நோய் பரவுவது அதிகரித்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கண்டி மாவட்டத்தில் நேற்றுவரை 3249 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதுவரையில் இம்மாவட்டத்தில் 30 பேர் இந்நோய் காரணமாக  மரணமாகியுள்ளனர். நாடு முழுவதிலும் இதுவரை 24 ஆயிரத்து 984 நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர். 245 பேர் மரணமடைந்துள்ளனர்.

கேகாலை, கம்பஹ, கொழும்பு, குருநாகல்,  களுத்துறை ஆகிய மாவட்டங்களிலும் டெங்கு நோய் பரவுவதாக நோய்த் தடுப்பு மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

ரெட்டி மறைவால் அதிர்ச்சி – இதுவரை 67 ஆதரவாளர்கள் மரணம்

004funeral.jpgராஜசேகர ரெட்டியின் திடீர் மறைவால் ஏற்பட்ட அதிர்ச்சியில் ஆந்திராவில் இதுவரை 67 பேர் இறந்துள்ளனர். மாநிலம் முழுவதும் மொத்தம் 67 பேர் ரெட்டி மரணத்தைத் தாங்க முடியாமல் மாரடைப்பு ஏற்பட்டும், தற்கொலை செய்து கொண்டும் உயிரிழந்துள்ளனர். இவர்கள் குண்டூர், கிழக்கு கோதாவரி, ஹைதராபாத், ரங்காரெட்டி, பிரகாசம், மேடக், நல்கொண்டா, கரீம் நகர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

மாரடைப்பால் இறந்தவர்களில் சிலர், ரெட்டி அறிமுகப்படுத்திய ஆரோக்கியஸ்ரீ என்ற இலவச இருதய அறுவைச் சிகிச்சை திட்டத்தின் கீழ் இருதய அறுவைச் சிகிச்சை செய்து கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

இதையடுத்து ராஜசேகர ரெட்டி மறைவால் அதிர்ச்சி அடைந்துள்ள தொண்டர்கள் யாரும் தற்கொலை முயற்சியில் ஈடுபடக் கூடாது என்று அவரது மகன் ஜெகன் மோகன்  ரெட்டி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இதுபோன்ற செயல்களால் எனது தந்தையின் ஆத்மா சாந்தி அடையாது. அவர் எப்போதும் புன்னகை பூத்த முகத்துடன் இருந்தார். ஏழைகளின் உயர்வுக்காக பாடுபட்டார். எனவே அவரது ஆத்மா வருத்தப்படும்படியான காரியங்களில் யாரும் ஈடுபடக் கூடாது. அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை – நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 20 க்கு 20 இரண்டாவது போட்டி இன்று

20-20.jpgஇலங்கை – நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நேற்று முன்தினம் நடந்தது. 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி ‘திரில்’ வெற்றியை ருசித்தது. இப்போட்டியில் ஆட்டநாயகனாக நியூசிலாந்து அணியின் தலைவர் விட்டோரி தெரிவு செய்யப்பட்டார்.

இலங்கை அணி மோதிய மூன்றாவது இருபதுக்கு 20 போட்டிகளில் அதாவது சொந்த மண்ணில் தோல்வியுற்று இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இரண்டு அணிகளும் மோதும் இரண்டாவதும் இறுதியுமான 20 க்கு 20 போட்டி கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டு அரங்கில் இரவுப் போட்டியாக நடைபெறவுள்ளது.

வடக்கில் இடம்பெயர்ந்துள்ள மக்கள் பிச்சைக்காரர்களோ நாடோடிகளோ அல்ல – மனோ எம்.பி.

mono.jpgவடக்கில் இடம்பெயர்ந்துள்ள மக்கள் பிச்சைக்காரர்களோ நாடோடிகளோ அல்ல. தமது பாரம்பரிய பிரதேசங்களில் மிகவும் கௌரவத்துடன் வாழ்ந்தவர்கள். எனவே அவர்களை உடனடியாக மீள்குடியேற்றுமாறு அரசாங்கத்தை கோருகின்றோம்.  இது தமிழர் பிரச்சினை அல்ல. தேசிய பிரச்சினையாகும் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் தெரிவித்தார்.

தேசிய நூலக மற்றும் ஆவணாக்கல் சபை கேட்போர் கூடத்தில் வியாழக்கிழமை காலை நடைபெற்ற சுதந்திர மேடை அமைப்பின் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மனோகணேசன் எம்.பி. அங்கு மேலும் கூறியதாவது:

அகதிகள் விகவகாரத்தை பிரிவினைவாத பிரச்சினை மற்றும் பயங்கரவாத பிரச்சினை என்று கூறுவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது. ஆனால் இது தமிழ் பிரச்சினை அல்ல. தேசிய பிரச்சினை என்பதை தெரிவிக்கின்றோம். இதற்கு பின்னால் அரசியல் நிகழ்ச்சி நிரல் ஒன்று உள்ளதா? என்ற சந்தேகம் நிலவுகின்றது.

நாட்டில் ஊடகங்களின் பங்களிப்பு அளப்பரியது. மக்களின் பிரதிநிதிகளாக நாங்கள் பேசும் விடயங்கள் ஊடகங்கள் வாயிலாகவே வெளியில் செல்கின்றன. நேற்று முன்தினம் நேற்று மற்றும் இன்று நாளை என நிலைமைகள் மாறிக்கொண்டிருக்கின்றன. எமது பயணங்கள் வேகமடைகின்றன.

இடம்பெயர் மக்கள் குறித்து ஜெனீவாவில் பான் கீ மூன் அமைச்சருடன் கலந்துரையாடல்

mahinda_samarasinghe_uno.jpgஇடம் பெயர்ந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் பொது செயலாளர் பான் கீ மூன், ஜெனீவாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்கவுடன் கலந்துரையாடியுள்ளார்.

முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் தற்போதைய நிலைமைகள், மற்றும் அவர்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டியதன் அவசியம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதன் போது கலந்துரையாடப்பட்டதாக ஐக்கிய நாடுகளின் துணை பேச்சாளர் மரியா ஒகாபே தெரிவித்துள்ளார்.  அத்துடன், இடம்பெயர்ந்தோர் முகாம்களில் உள்ள மக்கள் விடுவிக்கப்பட வேண்டியமை மற்றும் முகாம்களுக்குள் தொண்டு பணியாளர்களுக்கும், பொது மக்களுக்குமான நடமாட்ட சுதந்திரம் போன்ற விடயங்கள் குறித்தும் இதன் போது கலந்துரையாடப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

அதேவேளை, இடம்பெயர்ந்தோர் முகாம்களில் இன்னமும் 3 லட்சம் பேர் வரையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறித்துக் கவலையடைவதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் ஜெனீவா தலைமையகத்தில் வைத்து செய்தியாளர்களைச் சந்தித்து உரையாற்றிய போதே பான் கீ மூன் இதனைத் தெரிவித்துள்ளார்.

முகாம் நடவடிக்கைகள் அபிவிருத்தி செய்யப்படாத நிலையில், எதிர்வரும் பருவப்பெயர்ச்சி மழை காலத்தில் முகம் கொடுக்க வேண்டிய சவால்கள் பற்றித் தாம் அச்சமடைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ்க் குடும்பங்கள் விரைவில் விடுவிக்கப்பட்டு, பிளவுபட்ட குடும்பங்கள் ஒன்றிணைக்கப்பட்டு சுதந்திரமாக வாழ்வதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என பான் கீ மூன் தெரிவித்துள்ளார்

யுனிசெவ் தொடர்பாடல் பணிப்பாளரை வெளியேறுமாறு அரசு உத்தரவு

uni4444.jpgஇடம் பெயர்ந்து வவுனியாவில் தங்கியுள்ள மக்களின் அவலநிலை குறித்த தகவல்களை வெளியிட்ட யுனிசெவ் அமைப்பின் தொடர்பாடல் பணிப்பாளரை உடனடியாக நாட்டில் இருந்து வெளியேற இலங்கை அரசு நேற்றுமுன்தினம் உத்தரவிட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள முகாம்கள் தொடர்பாக பொய்யான தகவல்களை உலகிற்கு இவர் வெளியிட்டுள்ளார் என்று அரசு குற்றம் சுமத்தியுள்ளது.

யுனிசெவ் அமைப்பின் தொடர்பாடல் பணிப்பாளர் ஜேம்ஸ் எல்டர், இடம்பெயர்ந்த மக்கள் பட்டினியால் இறக்கின்றனர் எனவும் குழந்தைகள் போஷாகின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்திருந்தார்.

இவர் தெரிவித்த விடயங்கள் உண்மைக்கு புறம்பானவை எனவும், அவர் பொய்யான செய்தியை ஐராப்பா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு வெளியிட்டுள்ளர் எனவும் அரசு குறிப்பிட்டுள்ளது. இதனையடுத்தே யுனிசெப் பணிப்பாளரை நாட்டிலிருந்து வெளியேறுமாறு இலங்கை அரசு பணித்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏ9 வீதி லொறிகளுக்கு அனுமதி ரத்தானது

2009_sep_04.jpgஏ9 பாதையூடாகப் போக்குவரத்து செய்வதற்காக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் லொறிகளுக்கு வழங்கிய அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. ஏ9 வீதியின் ஊடாக போக்குவரத்து செய்வதற்கு 854 லொறிகளுக்கு அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்ட போதிலும் அவற்றில் போக்குவரத்து நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை எனக் குறிப்பிடப்படுகிறது.

ஜூன் மாதம் ஏ9 வீதி திறக்கப்பட்ட தன் பின்னர் இதுவரை குறித்த லொறிகள் எவ்வித போக்குவரத்தையும் மேற்கொள்ளவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. ஒரு தடவை போக்குவரத்தில் ஈடுபடுவதற்கு லொறி உரிமையாளர்கள், ஒரு லட்சம் ரூபாவை கட்டணமாகக் கோருகின்றனர் என அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். எனவே, எவரும் இந்த லொறிகளை வாடகைக்கு அமர்த்த முன்வருவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.