September

September

நீர்மூழ்கிகளுக்கான சுரங்கப் பாதையைக் கட்டியமைக்க ஜப்பான் நிபுணர்கள் குழு புலிகளுக்கு உதவியது.

2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆழிப்பேரலையினால் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளுக்குச் செல்வதற்கு அனுமதிக்கப்பட்ட ஜப்பானிய நிபுணர்களின் குழு ஒன்றே நீர்மூழ்கிக் கப்பல்களைப் பயன்படுத்துவதற்கான சுரங்கப்பாதை ஒன்றைக் கட்டியமைப்பதற்கான உதவிகளைச் செய்தது என கொழும்பில் இருந்து வெளிவரும் ஆங்கில நாளேடு ஒன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கடனட்டை மோசடி சந்தேக நபர்களை 9ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

கடனட்டை மோசடி தொடர்பிலான இரண்டு கைதிகளை எதிர்வரும் 9 ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க, கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. போலியான ஆவணங்களை சமர்ப்பித்து கடனட்டைகளை பெற்று, நிதி மோசடிகளை பெற்றதாக, வீரதுங்க ருவான் சுஜீவ மற்றும் ருமேஷ் கிரிஷ்டோ பெர்ணான்டோ ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களுக்கு எதிராக ஹட்டன் நெசனல் வங்கி மேற்கொண்ட முறைபாட்டை அடுத்து, குற்றப் புளனாய்வு பிரிவினர் தாக்கல் செய்த அறிக்கையை அடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் போலியான ஆவனங்களை சமர்ப்பித்து, 1.2 மில்லியன் ரூபாய் நிதி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

‘மக்கள் ஓரணி திரண்டால் என்னால் வழிகாட்ட முடியும்’ – அமைச்சர் டக்ளஸ்

epdp.jpgபதின் மூன்றாவது திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வருமானால் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு 60 வீத தீர்வு கிட்டும். மக்கள் ஓரணி திரண்டால் இதற்குத் தம்மால் வழிகாட்ட முடியுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

ஆனந்த சங்கரியுடன் தமக்கு எந்தவித கோபமுமில்லையெனத் தெரிவித்த அமைச்சர், தமிழ் மக்களின் பிரச்சினைக்கு விரைவான தீர்வொன்றைக் காண்பதற்கு ஒரு இணக்கப்பாட்டுக்கு வருமாறு அவருக்கு அழைப்பு விடுப்பதாகவும் தெரிவித்தார்.

13வது திருத்தம் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியுமென நம்பிக்கை தெரிவிக்கும் அமைச்சர் ஜனாதிபதியும் அதனை ஆதரிப்பதாகவும் தெரிவித்தார். சமூக சேவை, சமூக நலன்புரி அமைச்சில் நேற்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டின் போது இது குறித்து கருத்துத் தெரிவித்த அமைச்சர் தேவானந்தா மேலும் தெரிவிக்கையில்;

அரசியல் வரலாற்றினை நோக்கும்போது இலங்கை- இந்திய ஒப்பந்தத்திற்குப் பின்னர் அரசாங்கங்களில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டன. ஜனாதிபதி பிரேமதாசவிலிருந்து இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வரை தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. எனினும் புலிகள் இவை எதனையும் ஏற்கவில்லை.

திம்பு பேச்சுவார்த்தை கூட தமிழ் மக்களின் அபிலாஷைகளையும் உரிமைகளையும் வெளிக்கொணரும் ஒன்றாகவே அமைந்திருந்தது. எனினும் அன்று அதற்குத் தலைமை தாங்கிய தலைவர்களே இன்றில்லை.

இலங்கை- இந்திய ஒப்பந்தம் தமிழ் மக்களின் பிரச்சினைத் தீர்வுக்கு ஒரு பொன்னான வாய்ப்பாகும். அதனைத் தமிழ்த் தலைவர்கள் தவறவிட்டுவிட்டனர். இந்த விடயத்தில் நான் இந்தியப் படையையோ இலங்கைப் படையினரையோ குறைகூறமாட்டேன். புலிகள் தாமும் அழிந்து தமது மக்களையும் அழியவிட்டுள்ளனர்.  புலிகளின் பிரச்சினை வேறு, தமிழ் மக்களின் பிரச்சினை வேறு எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

விஜய்க்கு எதிராக கண்டன போஸ்டர்கள்

rahul_vijay.jpgநடிகர் விஜய்-க்கு எதிராக ஈரோடு,  நாமக்கல், கரூர், கோவை போன்ற மாவட்டங்களில் பல இடங்களில் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விஜய் அரசியலுக்கு வரப் போவதாக அவரே கூறியுள்ளார்.  அவரது தந்தையும், அவரும் சேர்ந்து மக்கள் இயக்கம் என்ற ஒன்றை ஆரம்பித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியில் சேரப் போவதாக கூறப்படுகிறது. இதற்காக ராகுல் காந்தியையும் விஜய் சமீபத்தில் சந்தித்துப் பேசினார். இளைஞர் காங்கிரஸ் பதவியைத் தந்தால் சேரத் தயார் என அவர் நிபந்தனை விதித்துள்ளதாகவும் ஒரு பேச்சு உள்ளது.

விஜய்யின் அரசியல் பிரவேசம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதைப் போலவே அவருக்கு கடும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. இந்த நிலையில், ஈரோடு , நாமக்கல், கரூர், கோவை போன்ற மாவட்டங்களில் பெரியார் திராவிடர் கழகம் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அதில், இளைய தளபதியே நம்பி வந்த ரசிகர்களுக்கு துரோகமா என்ற தலைப்பில், பல்லாயிரம் ரசிகர்களை திரட்டி ஈழத் தமிழர்களுக்காக போரடிய நடிகர் விஜய் அவர்களே தமிழன படுகொலைக்கு துணை போன கங்கிரஸ் கட்சியுடன் நட்புக்கரமா மனசாட்சியுடன் சிந்திப்பீர் என வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த போஸ்டர்கள் விஜய் ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

ஆஸ்திரேலியா-இங்கிலாந்து இன்று மோதல்

eng0000.jpgஆஸ்தி ரேலியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று நடக்கிறது. 7 ஒரு நாள் போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.

டெஸ்ட் தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி அதை தொடர்ந்து பங்கேற்ற இரண்டு 20 ஓவர் கிரிக்கெட் போட்டியும் மழையால் நடைபெறாமல் போனதால் ஒரு நாள் தொடரை வென்று தரவரிசையில் தங்களது இடத்தை தக்கவைக்க போராடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

இந்த நிலையில் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 7 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் முதலாவது ஒரு நாள் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று பகல்-இரவு ஆட்டமாக நடைபெறுகிறது.

பாண்டிங்குக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருப்பதால் ஆஸ்திரேலிய அணி மைக்கேல் கிளார்க் தலைமையில் களம் இறங்குகிறது. ஆஷஸ் தொடரை இழந்ததால் அதற்கு பழிதீர்க்கும் முனைப்புடன் ஆஸ்திரேலிய வீரர்கள் தயாராகி வருகிறார்கள். ஆஷஸ் போட்டியில் வாய்ப்பு கிடைக்காத வேகப்பந்து வீச்சாளர் பிரெட்லீ, தனது இடத்தை உறுதிசெய்ய இதில் தனது முழுவேகத்தையும் காட்டுவார் என்று நம்பலாம்.

அதே சமயம் ஸ்டிராஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி ஆஷஸ் வெற்றி உற்சாகத்துடன் களம் காணுகிறது. காயத்தால் பிளின்டாப் ஆட முடியாமல் போனது அந்த அணிக்கு சற்று பின்னடைவு தான். நேற்று பயிற்சியில் ஈடுபட்டிருந்த அந்த அணியின் புதுமுக தொடக்க ஆட்டக்காரர் ஜோ டென்லிக்கு மூட்டில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் முதலாவது ஆட்டத்தில் ஆடமாட்டார் என்று தெரிகிறது.

இரு அணியும் இதுவரை 93 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் 52-ல் ஆஸ்திரேலியாவும், 37-ல் இங்கிலாந்தும் வெற்றி பெற்றிருந்தன. 2 ஆட்டம் `டை’ ஆனது. 2 போட்டியில் முடிவு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

கலப்பு இரட்டையர், மகளிர் இரட்டையர் போட்டிகளில் சானியா இணை வெற்றி

sania3333.jpgநியூ யார்க்கில் நடைபெறும் யு.எஸ்.ஓபன் டென்னிஸ் கிராண்ட் ஸ்லாம் தொடரில் ஆண்/பெண் இரட்டையர் பிரிவிலும், மகளிர் இரட்டையர் பிரிவிலும் சானியா/டேனியல் நெஸ்டர் இணையும், சானியா மிர்சா/ஷியாவோன் இணையும் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.

மகளிர் இரட்டையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் தனது புதிய இத்தலிய கூட்டாளியான ஷியாவோனுடன் களமிறங்கிய சானியா மிர்சா 5- 7, 7- 5, 6- 1 என்ற செட் கணக்கில் பெலாரஸ்/செக். இரட்டையர் இணையான ஸெஹாலேவிச்- ரெனெடா வொரசொவா இணையை வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினர்.

ஆண்/பெண் இரட்டையர் பிரிவில் கனடா வீரர் டேனியல் நெஸ்டருடன் ஜோடி சேர்ந்துள்ள சானியா மிர்சா முதல் சுற்று ஆட்டத்தில் உஸ்பெகிஸ்தான்/ஆஸ்ட்ரிய இணையை 6- 3, 6- 1 என்ற செட் கணக்கில் வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.

மற்றொரு ஆண்/பெண் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் 2ஆம் தர நிலையில் உள்ள இந்திய/ஜிம்பாப்வே இணையான லியாண்டர் பயஸ்-காரா பிளாக் இணை சுவிஸ்./தென் ஆப்பிரிக்க இணையான பேட்டி ஸ்னைடர்-வெஸ்லி மூடி இணையை 6- 4, 3- 6, 11- 9 என்ற செட்களில் போராடி வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

ரெட்டி உடல் – சற்று நேரத்தில் இறுதிச் சடங்குகள்

004funeral.jpgஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் உடல் இன்று அவரது சொந்த ஊரான புலிவெண்டுலுவுக்கு கொண்டு வரப்பட்டது. இன்னும் சற்று நேரத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளன.

முன்னதாக ஹைதராபாத்தில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பாஜக தலைவர் அத்வானி, கனிமொழி எம்.பி உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

தமிழக அரசின் சார்பி்ல் மின்சாரத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி, முதல்வர் கருணாநிதியின் மகளும், திமுக ராஜ்யசபா எம்.பியுமான கனிமொழி ஆகியோர் இன்று ஹைதராபாத் சென்று ரெட்டி உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

கர்னூலிலிருந்து கொண்டு வரப்பட்ட ரெட்டியின் உடல் அடங்கிய பெட்டி, அலங்கரிக்கப்பட்ட ராணுவ டிரக்கில் அவரது முகாம் அலுவலகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு ஆயிரக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பொதுமக்கள் அஞ்சலிக்குப் பின்னர் ராஜசேகர ரெட்டியின் உடல் பேகம்பேட் விமான நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

அங்கிருந்து விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் கடப்பாவுக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் ரெட்டியின் கிராமமான புலிவெண்டுலுவை உடல் அடங்கிய அலங்கரிக்கப்பட்ட சவப்பெட்டி சென்றடைந்தது. இன்னும் சற்று நேரத்தில் இறுதிச் சடங்குகள் தொடங்கவுள்ளன.

மைக்கேல் ஜாக்சன் உடல் 2 மாதத்துக்கு பின் அடக்கம்

04-mj-laid-to-rest.jpgபாப் மன்னன் மைக்கேல் ஜாக்சனின் உடல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இறந்து சுமார் 2 மாதங்களுக்கு பின் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. இதில் அவரது உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர். பாப் உலகின் முடிசூடா மன்னனாக திகழ்ந்த மைக்கேல் ஜாக்சன் கடந்த ஜூன் மாதம் 25ம் தேதி மரணமடைந்தார். அவரது மரணத்தால் ஏற்பட்ட சர்ச்சைகள் இரண்டு மாதங்களை தாண்டியும் ஓய்ந்தபாடில்லை.

அதேபோல் தான் அவரது உடல் அடக்கத்திலும் சர்ச்சை எழுந்தது. அவரது உடல் நெவர்லேன்ட் பண்ணையில் அடக்கம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது கைகூடவில்லை. இந்நிலையில் ஜாக்சனின் உடல் அடக்கத்துக்காக லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு வடக்கே சுமார் 13 கிமீ., தொலைவில் உள்ள பாரஸ்ட் லான் கிளன்டேல் பகுதியில் இடம் வாங்கப்பட்டதாக நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் அவரது வக்கீல் தெரிவித்தார்.

இந்நிலையில் நேற்று இரவு நடந்த அவரது உடல் அடக்க நிகழ்ச்சியில் ஹாலிவுட் நடிகை  எலிசபெத் டெய்லர், ஜாக்சனின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சுமார் 200 பேர் கலந்து கொண்டனர். 7 மணிக்கு துவங்கவிருந்த இந்த இறுதி அஞ்சலி நிகழ்ச்சி ஜாக்சனின் பெற்றோர்கள் ஜோ மற்றும் காத்ரின் ஜாக்சன் தாமதமாக வந்ததால் சற்று தாமதமாக துவங்கியது. அவர்களுடன் ஜாக்சனின் மூன்று குழந்தைகளும் வந்திருந்தனர். பின்னர் இரவு 8.30 மணிக்கு உடல் அடக்கம் செய்யப்பட்டது.

உலக நாடுகளுக்கு ஜனாதிபதி மஹிந்த சிறந்த முன்மாதிரி – வெனிசூலா ஜனாதிபதி பாராட்டு

mainpic.jpgஒரு போதும் தோற்கடிக்க முடியாதென உலக நாடுகளால் கருதப்பட்ட எல். ரி. ரி. ஈ. அமைப்பினை தோற்கடித்திருப்பதன் மூலம் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பயங்கரவாதம் நிலவும் நாடுகளுக்கு சிறந்த முன்மாதிரியாகத் திகழ்வதாக வெனிசூலா ஜனாதிபதி ஹுகோ சாவேஸ் தெரிவித்துள்ளார்.

லிபியாவின் 40வது சுதந்திர தின வைபவத்தில் கலந்து கொள்வதற்காக அந்நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேற்று முன்தினம் (02) அங்கு வைத்து சந்தித்த போதே நேற்று தனது கருத்தை மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இருவருக்குமிடையிலான பேச்சுவார்த்தை மிகவும் சுமுகமாக இடம்பெற்றது.

இலங்கையின் பொருளாதாரம் பேணப்படும் முறையை உலக நாடுகளுக்கு விளக்குவதற்கு இதுவே சிறந்த தருணமெனக் கூறிய வெனிசூலா ஜனாதிபதி, எதிர்காலத்தில் இலங்கை கனியவள உற்பத்தியில் முன்னணியில் திகழும் நாடாக வருமெனவும் இரு நாடுகளுக்குமிடையிலான பொருளாதார ரீதியான உறவு வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் இச்சந்திப்பின் போது தெளிவுபடுத்தினார்.

இலங்கை பூகோள ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த கேந்திர நிலையமாகும். அந்த வகையில் கிழக்கு மற்றும் மேற்குலக நாடுகளின் சிறந்த பொருளாதார மையமாக விளங்குவதனையும் வெனிசூலா ஜனாதிபதி சந்திப்பின் போது சுட்டிக்காட்டினார்.

இதேவேளை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெனிசூலா ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்தார். இரு நாடுகளுக்குமிடையிலான இரு தரப்பு சந்திப்பில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, மற்றும் அதிகாரிகளும் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

இலங்கை ராணுவத்தின் கொடூரச்செயல்: அமெரிக்கா கண்டனம்

susan-rice1111.jpgஇலங்கை தமிழர்களின் கைகளையும் கண்களையும் கட்டி, நிர்வாணமாக்கி சுட்டுக் கொன்ற வீடியோ காட்சிகளை இங்கிலாந்து டி.வி. சமீபத்தில் வெளியிட்டது.  இது குறித்து ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதரும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தற்போதைய தலைவருமான சூசன் ரைஸ் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர், ‘தமிழர்களை சுட்டுக் கொன்றதாக வெளியான படக்காட்சிகள் மிகவும் துயரமளிப்பவையாக உள்ளன. அவை மிகவும் கண்டனத்துக்குரியவை. அமெரிக்காவின் சொந்த தேசிய பொறுப்புணர்வின் அடிப்படையில் இது தொடர்பாக மேலும் பல தகவல்களை நாங்கள் திரட்டுவோம் என்றார்.