September

September

அமெரிக்க பகிரங்க டென்னிஸ்; பெடரர், வீனஸ், செரீனா 3 வது சுற்றுக்கு தகுதி

serena-williams.jpgஅமெரிக்கப் பகிரங்க டென்னிஸ் போட்டியில் பெடரர், வீனஸ், செரீனா, நடால், ஜிலிஸ்டர்ஸ் ஆகிய முக்கிய வீரர்கள் 3 வது சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளனர். அதன் விபரம் வருமாறு,

உலகின் முதல் நிலை வீரரும், நடப்பு சாம்பியனுமான ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) 3 வது சுற்றுக்கு தகுதி பெற்றார். அவர் 6-3, 7-5, 7-5 என்ற நேர்செட் கணக்கில் ஜெர்மனியை சேர்ந்த சைமனை தோற்கடித்தார். மற்ற ஆட்டங்களில் மார்ட்டின் டெல போட்ரோ (அர்ஜென்டினா) லைடன் ஹெவிட் (அவுஸ்திரேலியா) டேவிட் பெரர் (ஸ்பெயின்) ஆகியோர் வென்றனர். 3 ம் நிலை வீரரான ரபெல் நடால் 2 வது சுற்றுக்கு முன்னேறினார்.

வில்லியம்ஸ் சகோதரிகளான வீனஸ், செரீனா 3 வது சுற்றுக்கு தகுதி பெற்றனர். இரண்டாம் நிலை வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) 6-1, 6-1 என்ற நேர் செட்கணக்கில் மெலின்டாவை (ஹங்கேரி) தோற்கடித்தார்.

மூன்றாம் நிலை வீராங்கனையான வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா) 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் சக நாட்டைச் சேர்ந்த பெதானியை வீழ்த்தினார். மற்ற ஆட்டங்களில் முன்னாள் முதனிலை வீராங்கனையான கிம் கிலிஸ்டர்ஸ் (பெல்ஜியம்), ஜூவானேரவா (ரஷ்யா) டேனிலா (சுலோவாக்கியா) ஆகியோர் வென்றனர்.

இந்தியாவின் முன்னணி வீராங்கனையான சானியா மிர்சா 2 வது சுற்றில் தோல்வி அடைந்தார். அவர் 0-6, 0-6 என்ற கணக்கில் உலகின் 10 ஆம் நிலை வீராங்கனையான பிளவியாவிடம் தோற்றார். இதேபோல 17 ஆம் நிலை வீராங்கனையான அமெய்லி மவ்ரஸ்மோவும் அதிர்ச்சி கரமாக தோற்றார்.

உலகப் புலனாய்வு அதிகாரிகள் சுற்றுலாப் பயணிகளைப் போன்று நாட்டிற்குள் ஊடுருவியுள்ளனர்

உலகப் புலனாய்வு அமைப்புக்களைச் சேர்ந்த சில அதிகாரிகள் சுற்றுலாப் பயணிகளைப் போன்று நாட்டிற்குள் பிரவேசித்துள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.  அண்மையில் அமெரிக்காவிற்கு சென்ற நபர் ஒருவர் இந்த புலனாய்வு அதிகாரிகளை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 
இதற்கு முன்னரும், ரஸ்ய ஆயுத விநியோகஸ்தர்கள் சுற்றுலாப் பயணிகளைப் போன்று இலங்கைக்குள் பிரவேசித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
தமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டமை மற்றும் இடம்பெயர் முகாம்களில் மக்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நாடுகளைச் சேர்ந்த புலனாய்வு அதிகாரிகளே இவ்வாறு நாட்டிற்குள் பிரவேசித்துள்ளதாகவும், இலங்கைக்கு எதிரான தகவல்களை திரட்டும் நோக்கில் இவர்கள் ஊடுருவியுள்ளதாககவும் குறிப்பிடப்படுகிறது.

வெளிநாடுகளில் தலைதூக்கியிருக்கும் புலி செயற்பாடுகளை ஒடுக்க வேண்டும் – ஜாதிக ஹெல உறுமய

வெளிநாடுகளில் தலை தூக்கியிருக்கும் தமிழீழ விடுதலைப் புலி செயற்பாட்டாளர்களை ஒடுக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஜாதிக ஹெல உறுமய சுட்டிக்காட்டியுள்ளது. சில மேற்குலக நாடுகளுடன் இணைந்து புலி செயற்பாட்டாளர்கள் நாட்டிற்கு எதிராக செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
குறிப்பாக சில மேற்குலக நாடுகள் இலங்கையின் உள் விவகாரத்தில் தலையீடு செய்யும் நோக்கில் புலி செயற்பாட்டாளர்களுக்கு ஆதரவளித்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சர்வதேச ரீதியாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு கிடைக்கப் பெறும் ஆதரவு ஆரோக்கியமானதல்ல என கட்சியின பொதுச் செயலாளர் எல்லாவல மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார்.
 
மேற்குலக நாடுகள் புலம்பெயர் தமிழர்களை பயன்படுத்தி இலங்கைக்கு எதிரான செயற்பாடுகளை மேற்கொள்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யுத்தத்தில் ஊனமுற்ற படைவீரர்களை பராமரிக்கும் பொறுப்பை அரசாங்கம் ஏற்கும் – கோதபாய ராஜபக்ஷ

யுத்தம் காரணமாக ஊனமுற்ற படைவீரர்களை பராமரிக்கும் முழுப் பொறுப்பையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் என கோதபாய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார். நாட்டை பாதுகாக்கும் நோக்கில் அர்ப்பணிப்புக்களை மேற்கொண்ட படைவீரர்களை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசாங்கம் கைவிடாதென குறிப்பிட்ட அவர், ஊனமுற்ற படைவீரர்களை வாழ் நாள் முழுவதும் பராமரிப்பதற்கான விசேட செயற் திட்டமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
 
படைவீரர்களுக்காக அமைக்கப்பட்ட வீடுகளை ஒப்படைக்கும் விழாவில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத் தீர்ப்பு ஊடக சுதந்திரத்துக்கு எதிரானதல்ல – ஊடகத்துறை அமைச்சர் விளக்கம்

anurapriyadarsanayapa.jpgதிஸ்ஸ நாயகம் ஓர் ஊடகவியலாளர் என்பதை நாம் ஏற்றுக்கொள்கிறோம். எனினும் அவருடைய செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது. நீதிமன்றத்தால் அவருக்கு வழங்கப்பட்ட 20 வருட கடூழிய சிறைத் தண்டனை ஊடக சுதந்திரத்துக்கு எதிரானதல்ல என தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷய யாபா தெரிவித்தார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற  அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். அமைச்சர் அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. நாட்டில் சட்டம் யாருக்கும் பொதுவானது. அனைவருக்கும் பார்க்கக்கூடிய வகையில் பகிரங்கமான முறையிலேயே அவருக்கெதிரான விசாரணைகள் நடைபெற்றன.

பயங்கரவாதத்துக்கு ஒத்துழைப்பு வழங்கிய குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அவர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டது. அந்த விசாரணையின் அடிப்படையிலேயே அவருக்கு தற்போது சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து அவர் மேன்முறையீட்டு மனுத் தாக்கல் செய்துள்ளார். அவருக்கு இதற்கு மேலும் மேன்முறையீடுகளைச் செய்யலாம். அந்த அளவுக்கு நாட்டில் நீதிச் சுதந்திரம் உள்ளது.

சட்டத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பை வைத்துக்கொண்டு அது ஊடக சுதந்திரத்தை பாதிப்பதாகக் கூறுவதை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. நாட்டில் ஊடகச் சுதந்திரத்துக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்பதை திட்டவட்டமாகக் கூற முடியும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

கி.மா. இறைவரி திணைக்களத்தின் அம்பாறை பிராந்திய அலுவலகம் திறந்துவைப்பு

epcm.jpgகிழக்கு மாகாண இறைவரித் திணைக்களத்தின் அம்பாறை பிராந்திய அலுவலகத்தை கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் அண்மையில் திறந்து வைத்தார்.கிழக்கு மாகாண சபையில் இறைவரி தொடர்பான சட்டம் நிறைவேற்றப்பட்;டதையடுத்து மூன்று  மாவட்டங்களிலும் இவ் அலுவலகம் தற்போது திறக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான நிகழ்வில் மாகாண அமைச்சர்களான எம்.எஸ். உதுமாலெப்பை, துரையப்பா நவரட்ணராஜா மற்றும் இறைவரித் திணைக்கள அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

கடந்த நாட்களாக அம்பாறை மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ விஜயததை மேற் கொண்டுள்ள முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் அக்கரைப்பற்று கல்வி வலய பாடசாலை அதிபர்களுடனான சந்திப்பொன்றில் கலந்து கொண்டார். அவ் வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளில் கல்வி அபிவிருத்தி மற்றும் பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக இச் சந்திப்பின் போது அவர் கேட்டறிந்து கொண்டார்.

மேலும் அம்பாறை மாவட்ட உள்ளுராட்சி சபைகளின் நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆரர்யும் கூட்டமொன்றிலும் அவர் கலந்து கொண்டு உரையாற்றினார். இக் கூட்டத்தில் உள்ளுராட்சி சபைத் தலைவர்கள் ,உறுப்பினர்கள் ,அதிகாரிகள் மற்றும் மாகாண அமைச்சர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புற்று நோய் பிரிவு

nimalsiripaladasilva.jpgமட்டக் களப்பு போதனா வைத்தியசாலையில் புற்று நோய் பிரிவொன்றை அமைக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. இதற்கான பிரேரனையை சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா முன்வைத்திருந்தார்.

100 கட்டில்களைக்கொண்ட புதிய வார்ட் தொகுதியொன்றும் 10 கட்டில்களைக் கொண்ட தீவிர கண்கானிப்புப் பிரிவொன்றும் இங்கு நிறுவப்படவுள்ளன. இதற்கான நிதி 10 கோடி ரூபா ஒருங்கிணைக்கப்பட்ட நிதியூடாகப் பெற்றுக்கொள்ளப்படும்.

ராகம போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவு,  அறுவை சிகிச்சை நிலையம் உள்ளிட்ட சகல வசதிகளையும் கொண்ட பிரிவுகளை அமைக்கவும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. இதற்காக 85 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் கண்டி பிரதான வைத்தியசாலையில் சிகிச்சைக்கான கட்டடம் ஒன்றை அமைக்கவும் 85 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

இராக் மற்றும் சிரியாவுக்கு தண்ணீர் தர துருக்கி மறுப்பு

இராக் மற்றும் சிரியாவில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டை குறைப்பதற்காக டைக்ரிஸ் மற்றும் யுப்பிரிட்டிஸ் நதிகளில் கூடுதல் தண்ணீர் விடும்படி இந்த நாடுகள் விடுத்த கோரிக்கையை துருக்கி நிராகரித்திருக்கிறது.

துருக்கியும் வறட்சியால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அதனால் இந்த நதிகளின் நீர்ப்பாசனப்பகுதியில் இருக்கும் தனது அண்டை நாடுகளின் வேண்டுகோளின்படி கூடுதலாக விடுவதற்கு மேலதிக தண்ணீர் தம்மிடம் இல்லை என்றும் துருக்கி தெரிவித்துள்ளது.

கூடுதல் தண்ணீர் திறந்துவிடுவது தொடர்பில் துருக்கி முன்பு கொடுத்த வாக்குறுதியை மதித்து நடக்கவில்லை என்று இராக் புகார் தெரிவித்துள்ளது.

ஆனால் சட்டரீதியாக தான் திறந்துவிடவேண்டிய அளவை விட கூடுதல் தண்ணீரை ஏற்கனவே திறந்து விட்டுவிட்டதாக துருக்கி பதிலளித்துள்ளது.

யுஎஸ் ஓபன் டென்னிஸ்- சானியா தோல்வி

sania-mirza1111.jpgயுஎஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடரின் பெண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றுப் போட்டியில் இந்திய வீராங்கனை சானியா மிர்சா அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் யுஎஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடர் நடக்கிறது. பெண்கள்  ஒற்றையர் இரண்டாவது சுற்றுப் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா, இத்தாலியின் பிளாவியா பென்னட்டாவை எதிர் கொண்டார்.

இதில் தவறு மேல் தவறு செய்த சானியா முதல் செட்டை 0-6 என இழந்தார். இரண்டாவது செட்டையும் அவர் அதே செட்களில் பறி கொடுத்தார். இறுதியில் 0-6, 0-6 என ஒரு கேமை கூட கைப்பற்றாமல் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

பிரதேச வீதிகளை அபிவிருத்தி செய்வதற்காக கடன்

pr-mahi.jpgபிரதேச வீதிகளை அபிவிருத்தி செய்வதற்காக உலக வங்கியின் சர்வதேச அபிவிருத்தி நிதியத்திடமிருந்து 70.6 மில்லியன் ரூபாவை கடனாகப் பெற்றுக்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதற்கான பிரேரனையை நிதி, திட்டமிடல் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்வைத்திருந்தார். இத்திட்டத்தின்படி ஊவா பிரதேசத்தில் 200 கிலோ மீற்றர்,  கிழக்கில் அம்பாறை மாவட்டத்தில் 100 கிலோ மீற்றர் வீதியும் புனரமைக்கப்படவுள்ளது.

தெற்குப் பிரதேச பெருந்தெருக்கள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் பின்னதுவ எனுமிடத்திலிருந்து கொடகம வரைக்கும் நான்கு வழிப் பாதை அமைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியது.  இத்திட்டத்தின்படி கொட்டாவை முதல் தொடங்கொட வரை 34.3 கிலோ மீற்றரும் தொடங்கொட முதல் குறுந்துகஹ ஹெதக்ம எனுமிடம் வரை 31.7 கிலோ மீற்றரும் சர்வதேச உதவியுடன் வீதி அமைக்கப்படவுள்ளது. இத்திட்டம் 2011ஆம் ஆண்டு பூர்த்தி செய்யப்படும்.