தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இனப்பிரச்சினை தீர்விற்கும் மக்கள் நலன்சார்ந்த விடயங்களுக்கும் காட்டிய எதிர்ப்பு அவர்களின் சொந்த நிலைப்பாடல்ல. புலிகளின் கருத்தையே அவர்கள் பிரதிபலித்தார்கள். புலிகளின் பேச்சாளர்களாகவே அவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தார்கள் என சமூகசேவைகள் மற்றும் சமூகநலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறினார். கொழும்பிலுள்ள தமது அமைச்சுப் பணிமனையில் இன்று முற்பகல் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது,
இலங்கையில் தற்போது யுத்தம் வன்முறை என்பன முடிவிற்கு வந்துள்ள நிலையில் ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக தமது கடமைகளை மேற்கொள்ளக்கூடிய சுழ்நிலை உருவாகியுள்ளது. எனவே ஊடகவியலாளர்கள் தமக்கு தற்போது கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை யாருக்கும் தாரைவார்த்துவிடக்கூடாது.
கடந்த காலங்களில் பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியில் ஊடகவியலாளர்கள் பணிபுரியவேண்டிய நிலையில் காணப்பட்டனர். தற்போது நிலைமை அவ்வாறாக இல்லை. எனவே கடந்த கால தவறுகளைத்திருந்தி ஊடகவியலாளர்கள் தமது கடமைகளை நியாயமாக மேற்கொள்ள வேண்டும். ஈபிடிபி குறித்த ஆக்கபூர்வமான விமர்சனங்களை ஊடகங்கள் தாராளமாக முன்வைக்கலாம். அதனை ஏற்றுக்கொள்ள அன்றும் இன்றும் என்றும் நாம் தயாராகவே இருந்திருக்கிறோம். இருப்போம்.
யாழ்ப்பாணம் மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபைத் தேர்தல் அண்மையில் நடந்து முடிந்தது தெரிந்ததே. யாழ்ப்பாண மாவட்டத்தில்; இன்னும் மூன்று நகர சபைகளும் பதினான்கு பிரதேச சபைகளும் தேர்தல் நடைபெற வேண்டியனவையாக உள்ளன. இச்சபைகளில் மக்களின் பிரதிநிதித்துவம் இல்லாத நிர்வாகமே நடைபெறுகின்றது. இச்சபைகளுக்கான தேர்தல் விரைவில் நடத்தப்பட வேண்டும்.
இலங்கையின் ஏனைய பகுதிகளிலுள்ள உள்ளூராட்சி மன்றங்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் நிர்வாகத்தில் இயங்கும் போது வடபகுதி உள்ளூராட்சி மன்றங்கள் மாத்திரம் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாதிருப்பது இம் மன்றங்களின் அதிகார எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் வாழும் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமையை மறுதலிப்பதாகும்.
இப்போது நிலைமை மாறிவிட்டது. கிழக்கு மாகாண மக்களைப் போல வட மாகாண மக்களும் புலிகளின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கின்றார்கள். புலிகளால் மறுக்கப்பட்டிருந்த ஜனநாயக உரிமைகளை இம்மக்கள் அனுபவிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யும் கடப்பாடு அரசாங்கத்துக்கு உண்டு. இதற்கான ஆரம்பம் உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தலாக இருக்கட்டும்.
இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகாண வேண்டும் என்ற கோரிக்கையை ஆரம்பம் முதல் நாமே முன்வைத்து வந்தோம். இதற்கு நடைமுறைச்சாத்தியமான மூன்று கட்ட தீர்வுத்திட்டத்தையும் முன்வைத்துள்ளோம். எனவே இதுவரை எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் இனிமேலாவது மக்களின் நலனுக்கு முக்கியத்துவம் அளித்து பதின்மூன்றாவது திருத்தச்சட்டமும் அதற்கு மேலதிகமானதும் என்ற அடிப்டையிலிருந்து ஆரம்பமாகும் தீர்வுத்திட்டத்திற்கு ஆதரவளிக்க வேண்டும்.
இத்திட்டம் அரசியல் சாசனத்திற்கு அமைவானது. ஏற்கனவே நாட்டின் தென்பகுதியில் அமுலில் உள்ளது. இந்தியாவின் அனுசரனையினைப் பெற்றுள்ளது. பிரபாகரன் விரும்பிய தீர்வு அவருக்கு கிடைத்தவிட்டது. தனிமனிதனின் மரணத்தில் நாம் மகிழ்வடையவில்லை. ஆயினும் புலி உறுப்பினர்களுக்கு மன்னிப்பு வழங்கப்படவேண்டும். இவ்வாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.