September
September
ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி பயணம் செய்த ஹெலிகொப்டர் கர்னூல் மலை உச்சி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டதாக இந்திய ராணுவ விமானப்படை அதிகாரி கூறியுள்ளார்.
நேற்று காலை 8.30 மணிக்கு கிளம்பிய ஹெலிகாப்டர், 9.30 மணிக்கு தொலைத் தொடர்பை இழந்தது. நல்லமலா வனப்பகுதியில் பறந்து கொண்டிருந்த போதுதான் காணாமல்போயுள்ளது. ஹெலிகொப்டரில் பயணித்த அதிகாரிகள் யாரிடமும் செயற்கைகோள் தொலைபேசி; இருக்கவில்லை. இதுவும் நிர்வாகத்தினருக்கு ஹெலிகொப்டரை தேடுவதில் சிக்கலை ஏற்படுத்தியது.
கர்னூலுக்கு கிழக்கே 40; மைல் தூரத்தில் உள்ள இப்பகுதியை ராணுவ ஹெலிகொப்டர்கள் சுற்றிவளைத்துள்ளன. ஹெலிகொப்டர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை இந்திய உள்துறை அமைச்சு உறுதிசெய்துள்ளது.
தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இந்த ஹெலிகொப்டர் எந்த நிலையில் உள்ளது, விமானம் விபத்தில் சிக்கியதா என்ற கேள்விக்கு விமான அதிகாரி உறுதியான தகவல் ஏதும் கூற முடியாது என்றார். ஹெலிகொப்டர் கிடக்கும் பகுதி மிக சிரமமான மலைப்பகுதி என்பதால் அங்கு செல்ல சிரமம் ஏற்படும் என கருதப்படுகிறது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளரும், உலக சுகாதார நிறுவனத்தின் வடக்கு இணைப்பாளருமான வைத்தியகலாநிதி என். சிவராஜா கடந்த ஆகஸ்ட் 24ஆம் திகதி சமூக மருத்துவத்துறை அலுவலகத்தில் வேறு இரண்டு மருத்துவபீட மாணவர்களுடன் பரீட்சையில் ஈடுபட்டிருந்த வேளையில் பல்கலைக்கழக மாணவன் ஒருவரின் கத்திக்குத்துக்கு இலக்கானமை தெரிந்ததே.
இந்த சம்பவத்தின் பின்னணியில் இருந்த வைத்திய பீட மாணவன் ரிஜி ரஜிவ் என்பவர் கலாநிதியை கத்தியால் குத்திய பின்பும் பல மணி நேரங்கள் பல்கலைக்கழக வளவினுள்ளே சுதந்திரமாக இருந்துள்ளதாகவும் அடுத்தநாளே இவர் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேறியதாகவும் நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது பற்றி மேலும் தெரிய வருவதாவது, ஆகஸ்ட் 24ஆம் திகதி மாலை 4.00 மணியளவில் வைத்தியகலாநிதி என். சிவராஜா யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் மருத்துவபீட மாணவர்களின் ஆய்வு தொடர்பாக மாணவர்களுடன் கலந்துரையாடிக் கொண்டிருந்தார். அத்தினம் 14 மாணவர்கள் வைத்தியகலாநிதியிடம் கலந்துரையாட நேரம் ஒதுக்கியிருந்தனர். சமூக மருத்துவத்துறை அலுவலகத்தில் இவ்விரு மாணவர்களாக அழைத்து பரீட்சையில் ஈடுபட்டிருந்த வேளையில் திடீரென ஒரு மாணவன் வைத்தியகலாநிதியின் அறைக்குள் நுழைந்து தங்களுடன் கதைக்க வேண்டும் என்று கோரியுள்ளார். அச்சந்தர்ப்பத்தில் தான் விரிவுரை நடத்திக் கொண்டிருப்பதாகவும், இந்த மாணவர்கள் ஏற்கனவே நேரம் ஒதுக்கியிருப்பதாகவும் எனவே தற்போது கதைக்க முடியாது நாளைய தினம் கதைப்போம் என வைத்தியகலாநிதி கூறியுள்ளார். அச்சந்தர்ப்பத்தில் பரீட்சையில் ஈடுபட்டிருந்த இரண்டு மாணவிகளையும் வெளியே செல்லும்படி அச்சுறுத்திவிட்டு வைத்தியகலாநிதியை கத்தியால் குத்த பாய்ந்துள்ளார். பேராசிரியர் தனது இருக்கையிலிருந்து எழுந்த நேரத்தில் கத்தி அவரின் வயிற்றில் பாய்ந்துள்ளது. இருக்கையிலிருந்து எழுந்திராவிடின் கத்தி நெஞ்சில் பாய்ந்திருக்குமென கூறப்படுகின்றது. மறுபடியும் வைத்தியகலாநிதியை கத்தியால் குத்த எத்தனித்த நேரத்தில் வைத்தியகலாநிதி மாணவனின் கையைப் பிடித்து தடுத்துள்ளார். கண்ணன் என்ற ஒரு உதவியாளர் கலாநிதி சிவராஜாவின் அவலக்குரல் கேட்டு உள்ளேபாய்ந்து அந்த மாணவனை வெளியேற்றியிருக்கிறார் எனத் தெரியவருகின்றது.
ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கலாநிதி என். சிவராஜா அவர்கள் தீவிர கண்காணிப்புப் பிரிவில் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இது விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கலாநிதியை கத்தியால் குத்திய மாணவன் ரிஜி ரஜிவ் எனும் பெயரையுடையவன். இவர் 1998ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்துக்கு அனுமதிபெற்றவர். தற்போது 3ம் ஆண்டில் கற்றுவரும் இவர் தொடர்ச்சியாக பல வருடங்கள் பரீட்சையில் சித்தியடைய தவறியுள்ளார். அதேநேரம், இந்த மாணவன் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்ட ஒருவன் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இதற்காக வேண்டி வைத்திய சிகிச்சைகள் பெற்றுள்ளதுடன், தனக்கு எந்தவித வியாதியும் இல்லையென மருந்துகள் அருந்துவதை தவிர்த்துள்ளார் என்றும் கூறப்படுகின்றது. சம்பவ தினம் இந்த மாணவன் மருத்துவபீட விரிவுரையாளர்களையும் துறைத்தலைவரையும் தேடித்தேடிவந்து கடைசியில் சமூக மருத்துவத்துறை அலுவலகத்தில் இருந்து மாணவர்களுடன் பரீட்சையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த கலாநிதி சிவராஜாவிடம் தனது கைவரிசையைக் காட்டியுள்ளான். மருத்துவபீடத்தினை தொடர்ந்தும் யாழ்ப்பாணத்தில் இயங்க வைப்பதற்கு டாக்டர் நந்திபோன்ற பேராசிரியர்களின் வழியையொற்றி கலாநிதி சிவராஜா பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
கலாநிதியை கத்தியால் குத்திய பின்பு சுமார் 1மணிநேரம் சமூக மருத்துவத்துறை அலுவலகத்தினருகே இம்மாணவன் சுதந்திரமாக நடமாடியுள்ளதாகவும் அந்நாள் இரவு அந்த மாணவன் மாணவர் விடுதியில் தங்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கத்தியால் குத்திய மாணவனை பிடித்து பொலிஸில் ஒப்படைக்க ஏனைய மாணவர்களோ அங்குள்ளவர்களோ நிர்வாகத்தினரோ முனையவில்லை எனவும் அந்த மாணவன் மிகவும் சுதந்திரமான முறையிலே நடமாடியதாகவும் மேலும் தெரியவருகின்றது.
இது போன்ற சம்பவம் நிகழுமிடத்து பல்கலைக்கழக நிர்வாகம் உரிய விடயத்தை உடன் பொலிஸிக்கு அறிய கொடுக்க வேண்டிய நிலையுள்ளது. ஆனால், இந்த விடயம் குறித்து உடனடியாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்படவில்லை என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கலாநிதி என். சிவராஜா 72 வயது நிரம்பியவர். தனது 65ஆவது வயதில் ஓய்வுபெற்ற பின்பும் உலக சுகாதார நிறுவனத்தின் வடக்கு இணைப்பாளராக பணியாற்றிவந்தார். அதேநேரம், யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்களுக்கு எதுவித ஊதியங்களும் பெறாமல் சேவையடிப்படையில் வருகை விரிவுரையாளராக விரிவுரைகள் நடத்தி வந்துள்ளார். இப்படிப்பட்ட நிலையில் தனது விரிவுரையாளர் தாக்கப்பட்ட நேரத்தில் பல்கலைக்கழக நிர்வாகம் அசமந்தப் போக்குடன் நடந்து கொண்டமை அனைவரினதும் விமர்சனங்களுக்கு உட்பட்டுள்ளது. குறித்த மாணவன் மறுதினம் வவுனியா காவலரங்கை பாதுகாப்பாக தாண்டிய பிற்பாடே முறைப்பாடு செய்யதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மறு புறமாக இந்த மாணவன் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேற இவ்வளவு விரைவாக எவ்வாறு அனுமதி பெற்றான் என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.
பொலிஸ் தரப்பில் இது தொடர்பாக உடனடியாக முறைப்பாடு செய்யப்படவில்லை என்றும் கலாநிதி கத்தியால் குத்தப்பட்ட விடயம் குறித்த முறைப்பாட்டினை கடிதம் மூலமாகவே பல்கலைக்கழக நிர்வாகத்தால் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பிட்ட சிலரினால் மறுதினம் இந்த விடயம் தொடர்பாக கொழும்பிலுள்ள பொலிஸ் தலைமையக உயர் அதிகாரிகளுடன் தொடர்பு கொள்ளப்பட்டு கொழும்பிலிருந்து யாழ்ப்பாண பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட பின்பே பொலிஸார் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அதுவரை உத்தியோகபூர்வமான முறைப்பாடுகள் பொலிஸாருக்கு பல்கலைக்கழக நிர்வாகத்தால் மேற்கொள்ளப்படவில்லை என்றும் கூறப்படுகின்றது. இது விடயமாக உண்மை நிலை அறிந்து கொள்ள பல்கலைக்கழக நிர்வாகத்துடன் தொடர்பு கொண்ட போதிலும்கூட தொடர்பினை ஏற்படுத்திக் கொள்ள முடியவில்லை. தற்போது அந்த மாணவன் எங்குள்ளார் என்று தெரியவில்லை. அவரை தேடும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும் கூட பல்கலைக்கழக விரிவுரையாளரை கத்தி குத்துக்கு இலக்காக்கிய ஒரு மாணவனுக்கு பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருக்க எவ்வாறு இடம் வழங்கப்பட்டது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இவ்விடயத்தில் நிர்வாகம் ஒத்துழைத்ததா என்ற கேள்வி ஏற்படுகின்றது. மறுபுறமாக இந்த சம்பவங்களை வைத்துப்பார்க்கும் போது மாணவர்கள் எதிர் காலத்தில் விரிவுரையாளர்களை அச்சுருத்தியே தமது சித்தியை அடைந்து கொள்ள முனைவார்கள் என்ற நிலை ஏற்பட மாட்டாது என்பதை உறுதிப்படுத்த முடியுமா? என்ற சந்தேகமும் எழுகின்றது.
இலங் கையுடனான முதல் இருபது20 சர்வதேச போட்டியில் கடைசி பந்துவரை போராடிய நியூஸிலாந்து அணி 3 ஓட்டங்களால் வெற்றியீட்டிக்கொண்டது. இதன்மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான இரண்டு போட்டிகளைக் கொண்ட இருபது 20 தொடரில் நியூஸிலாந்து 1-0 என முன்னிலை பெற்றது.
ஆர்.பிரேமதாச மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 20 ஓவர்களுக்கும் 8 விக்கெட்டுகளை இழந்து 141 ஓட்டங்களை பெற்றது. மத்திய வரிசையில் வந்து பொறுப்புடன் ஆடிய ரொஸ் டெய்லர் 45 பந்துகளுக்கு 5 பௌண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடங்கலாக 60 ஓட்டங்களை பெற்றார்.
பந்துவீச்சில் லசித் மாலிங்க 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு நுவன் குலசேகர, அன்ஜலோ மத்தியூஸ், அஜந்த மெண்டிஸ் மற்றும் மாலிங்க பண்டார ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை பதம்பார்த்தனர்.
இந்நிலையில் 142 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலெடுத்தாடிய இலங்கை அணி முக்கியமான தருணங்களில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. எனினும் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக வந்து அதிரடியாக ஆடிய டி. எம். டில்ஷான் 28 பந்துகளில் 8 பௌண்டரிகளும் 2 சிக்ஸர்களும் அடங்கலாக 57 ஓட்டங்களை பெற்றார்.
இதன்போது அவர் 23 பந்துகளில் அரைச்சதம் அடைந்து இருபது 20 போட்டிகளில் அதிவேக அரைச்சதம் பெற்றோர் வரிசையில் 4 ஆவது இடத்தை பகிர்ந்துகொண்டார். இதில் முன்னணி வீரர்களான சனத் ஜயசூரிய (01), சங்கக்கார (13), மஹேல ஜயவர்தன (03) சோபிக்க தவறினர். இறுதியில் இலங்கை அணி கடைசி இரண்டு ஓவர்களுக்கும் 13 ஓட்டங்களை பெறவேண்டி ஏற்பட்டது.
இந்நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் நியூஸிலாந்து அணிக்கு திரும்பிய ஷேன் பொன்ட் மற்றும் ஜகப் ஓரம் ஆகியோரின் அபார பந்துவீச்சால் இலங்கை கடைசி 12 பந்துகளுக்கு 10 ஓட்டங்களையே பெற முடிந்தது. இறுதியில் இலங்கை அணி 20 ஓவர்களுக்கும் 9 விக்கெட்டுகளை இழந்து 138 ஓட்டங்களையே பெற்றது.
நியூஸிலாந்து சார்பில் ஜகப் ஓரம் 3 விக்கெட்டுகளையும் இயன் பட்லர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதில் அணித்தலைவர் டானியல் விட்டோரி 4 ஓவர்களுக்கும் 11 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
NEW ZEALAND:
B. McCullum run out 9
J. Ryder c Bandara b Kulasekara 13
M. Guptill c Kapugedara b Bandara 29
R. Taylor c Kulasekara b Mathews 60
J. Oram c Kulasekara b Mendis 8
N. Broom not out 5
P. McGlashan run out 1
K. Mills b Malinga 7
D. Vettori b Malinga 0
I. Butler not out 0
Extras: (b3, lb3, w3) 9
Total (for 8 wkts, 20 overs) 141
Did not bat: Shane Bond.
Fall of wickets: 1-14 (McCullum), 2-26 (Ryder), 3-79 (Guptill), 4-117 (Oram),
5-126 (Taylor), 6-127 (McGlashan), 7-136 (Mills), 8-136 (Vettori).
Bowling: Kulasekara 4-0-21-1,
Malinga (w1) 4-0-21-2,
Mathews 2-0-19-1,
Mendis 4-0-25-1,
Bandara 4-0-25-1 (w1),
Jayasuriya 2-0-24-0 (w1).
SRI LANKA:
T. Dilshan c Ryder b Butler 57
S. Jayasuriya c Bond b Mills 1
M. Jayawardene run out 3
K. Sangakkara c McCullum b Vettori 13
G. Rupasinghe lbw b Vettori 15
C. Kapugedara b Butler 3
A. Mathews c and b Oram 21
N. Kulasekara c Broom b Oram 12
M. Bandara c McCullum b Oram 7
L. Malinga not out 4
A. Mendis not out 0
Extras: (lb2) 2
Total (for 9 wkts, 20 overs) 138
Fall of wickets: 1-22 (Jayasuriya), 2-43 (Jayawardene), 3-67 (Sangakkara),
4-75 (Dilshan), 5-85 (Kapugedara), 6-109 (Rupasinghe), 7-122 (Mathews),
8-133 (Bandara), 9-133 (Kulasekara).
Bowling: Bond 4-0-27-0,
Mills 4-0-36-1,
Butler 4-0-29-2,
Oram 4-0-33-3,
Vettori 4-0-11-2.
பாடசாலை மாணவர்களுக்கான இலவச பாடப்புத்தக விநியோகம் இன்று முதல் ஆரம்பிக்கப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது. எதிர்வரும் நவம்பர் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் விநியோக நடவடிக்கைகளை பூர்த்திசெய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 1054 புத்தக விநியோக மத்திய நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.
9662 அரசாங்கப் பாடசாலைகளில் உள்ள மாணவர்களுக்கு இவ்வாறு இலவச பாடப் புத்தகங்கள் விநியோகிக்கப்படவுள்ளன. இதேவேளை அரச பாடத்திட்டங்களை அமுல் நடத்தும் தனியார் பாடசாலைகளுக்கும் இந்தப் புத்தகங்களைப் பெற்றுக்கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அடுத்த வருடம் 30 மில்லியன் பாடப் புத்தகங்களை பாடசாலை மாணவர்களுக்கு விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளதுடன் இதற்கென அரசாங்கம் 2700 மில்லியன் ரூபாவை செலவு செய்துள்ளது.
கல் முனையிலிருந்து கொழும்பு நோக்கி வந்து கொண்டிருந்த பஸ் வண்டியும் கொழும்பிலிருந்து பிபிலை நோக்கி சென்று கொண்டிருந்த பஸ் வண்டியும் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் ஸ்தலத்தில் கொல்லப்பட்டுள்ளார்.
கண்டி, முல்கம்பளை பிரதேசத்தில் நேற்று அதிகாலை 2.30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்துச்சம்பவத்தில் சுமார் 17 பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் கண்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் கல்முனை கொழும்பு தனியார் பஸ் வண்டியின் உரிமையாளரான கல்முனைக்குடியைச் சேர்ந்த உவைஸ் (34) என்பவரே ஸ்தலத்தில் கொல்லப்பட் டுள்ளார். இவரே இந்த பஸ் வண்டியை விபத்து இடம்பெற்ற சமயம் செலுத்தி வந்துள்ளார். இந்த விபத்து தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது:-
27 பயணிகளை ஏற்றிக் கொண்டு கல்முனையிலிருந்து கொழும்பு நோக்கி வந்து கொண்டிருந்த பஸ்வண்டி கண்டி பழைய வீதியில் ஒருவரை இறக்கி விட்டு கொழும்பு நோக்கி வந்துள்ளது. இதன் போது கொழும்பிலிருந்து பிபிலை நோக்கிச் சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் வண்டி வேகமாக வந்துள்ளது.
இ.போ.ச. பஸ் வண்டியின் சாரதி வேகத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையில் பஸ்ஸை குறுக்கு வழியில் செலுத்த முற்பட்ட போது அந்த பஸ் வண்டி தனியார் பஸ் வண்டியுடன் வேகமாக சென்று நேருக்கு நேர் மோதுண்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் தனியார் பஸ் வண்டியின் சாரதி தலையில் கடும் காயங்களுக்குள்ளான நிலையில் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார்.
இரு பஸ் வண்டிகளின் முன்புரம் முற்றாக சேதங்களுக்குள்ளாகி உள்ளன. தனியார் பஸ் வண்டியில் பயணம் செய்த 10 பேரும், இ.போ.ச. பஸ் வண்டியில் 7 பேரும் படுகாயமடைந்த நிலையில் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் இ.போ.ச. பஸ் வண்டி சாரதியின் கால்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
இதேவேளை இந்த சம்பவம் தொடர்பாக விபத்துக்குள்ளான கல்முனை – கொழும்பு தனியார் பஸ் வண்டியின் மற் றுமொரு சாரதியான கே. எம். எம். நதீர் இந்த விபத்து தொடர்பாக விபரிக்கையில்,
“இரவு 2.30 மணி இருக்கும் எமது பஸ்ஸில் பயணித்துக் கொண்டிருந்த சகலரும் உறக்கத்தில் இருந்தனர். எமது பஸ் உரிமையாளரே வாகனத்தை செலுத்தி வந்து கொண்டிருந்தார். நான் பஸ்ஸின் 3 ஆம் இலக்க ஆசனத்தில் அமர்ந்திருந்தேன். கண்டியில் ஒருவரை இறக்கி விட்டு எமது பஸ் வண்டி சென்று கொண்டிருந்தது. அப்போது எமது பஸ்வண்டிக்கு எதிரே இ.போ.ச. பஸ் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. பாதையில் குழி ஒன்று இருந்ததை அடுத்து இ.போ.ச. சாரதி வேகத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையில் குறுக்கு வழியில் பஸ்ஸை செலுத்தியதும் பாரிய சத்தத்துடன் எமது பஸ் வண்டியுடன் மோதுண்டது. சற்று நேரம் ஒன்றும் விளங்கவில்லை. பின்னர் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதே தெரிந்தது என்றார்.
அமெரிக்க அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகையில், அதிபர் பாரக் ஒபாமா இப்தார் விருந்து அளித்தார். அப்போது அவர் பேசுகையில், இஸ்லாமையும், அமெரிக்க முஸ்லீம்களையும் அவர் வெகுவாக புகழ்ந்தார்.
செவ்வாய்க்கிழமை இரவு இந்த இப்தார் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. ஒபாமா அதிபராகப் பதவியேற்ற பின்னர் நடத்தும் முதல் விருந்து நிகழ்ச்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.
அதிபர் ஒபாமா பேசுகையில், அமெரிக்காவுக்கும், முஸ்லீம் உலகுக்கும் இடையிலான நல்லுறவை வலுப்படுத்தும் பாலமாக நான் தொடர்ந்து செயல்படுவேன்.
நாம் (அமெரிக்கா, முஸ்லீம்கள்) இணைந்து, பரஸ்பர நம்பிக்கை, பரஸ்பர நல்லெண்ணம் ஆகியவற்றை வலுப்படுத்த வேண்டிய பொறுப்பில் இருக்கிறோம். அதிபர் பொறுப்பில் எனது முக்கியக் கடமைகளில் ஒன்றாக இதை நான் கருதுகிறேன். அமெரிக்காவுக்கும், உலகெங்கும் வாழும் முஸ்லீம்களுக்கும் இடையிலான உறவில் புதிய தொடக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த புனிதமான மாதத்தில் உறவை வலுப்படுத்தவும், புதுப்பிக்கவும் நாம் உறுதி கொள்வோம்
மாபெரும் மதத்தை நான் இன்று இரவு கொண்டாடுகிறோம். அமெரிக்க முஸ்லீம்கள் இந்த நாட்டுக்கு ஆற்றிய சேவையை, கடமையை நாம் நினைவு கூர்ந்து பாராட்டுவோம். தங்களது வாழ்க்கையின் மூலம் எண்ணற்ற அமெரிக்க முஸ்லீம்கள் நிரூபித்துக் காட்டியுள்ள பல்வேறு நல்லுதாரணங்களை நாம் நினைவு கூருவோம். இதை அடிப்டையாக வைத்து மேலும் சிறந்த, நம்பிக்கை வாய்ந்த உலகை கட்டியெழுப்ப உறுதி பூணுவோம் என்றார் ஒபாமா.
வடக்கின் வசந்தம் அபிவிருத்திக் கருத்திட்டம் தொடர்பான மீளாய்வு நிகழ்வொன்று நேற்று வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறியின் தலைமையில் வவுனியா மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றுள்ளது. குறிப்பாக வடக்கின் வசந்தம் அபிவிருத்திக் கருத்திட்டத்தின் மூலம் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்தி குறித்தும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலும் இதன்போது முக்கிய கவனம் செலுத்தப்பட்டதாக வவுனியா மாவட்டச் செயலகம் தெரிவித்தது. இது தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளதுடன் அபிவிருத்திச் செயற்பாடுகள் தொடர்பான முன்னேற்ற அறிக்கையினை சம்பந்தப்பட்ட திணைக்களத் தலைவர்கள் சமர்ப்பித்துள்ளனர்.
இம்மீளாய்வின் போது எதிர்கால வேலைத் திட்டங்கள் சம்பந்தமாகக் கவ னம் செலுத்தப்பட்டுள்ளதுடன் வவுனியா நகரை அண்டியுள்ள கிராமங்களிலிருந்து இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களை மீளக் குடியமர்த்துதல் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதாகவும் மாவட்டச் செயலகம் தெரிவித்தது.
இந்நிகழ்வினையடுத்து வட மாகாண ஆளுநர் சில கிராமங்களுக்கு விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்ததுடன் அவருடன் அதிகாரிகள் குழுவொன்றும் சென்றிருந் தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, நேற்றைய தினம் ஆண்டிய புளியங்குளம் முஸ்லிம் வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த 1300 இடம் பெயர்ந்த குடும்பங்கள் மருதமடுவ நலன் புரிநிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மேற்படி பாடசாலையை இயங்க வைப்பதற்கான முன்னோடி நடவடிக்கையாகவே இக் குடும்பங்கள் இடமாற்றப்பட்டதாக மாவட்டச் செயலக உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.
கூடுதல் டிஜிபியாக செயல்பட்டு வந்த லத்திகா சரண் பயிற்சி டிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். இதன்மூலம் தமிழகத்தின் முதல் பெண் டிஜிபி என்ற பெருமையை அவர் பெறுகிறார். இது குறித்து தமிழக உள்துறை செயலாளர் எஸ்.மாலதி வெளியிட்டுள்ள உத்தரவில்,
மாநில நிர்வாக பிரிவு கூடுதல் டிஜிபி லத்திகா சரணுக்கு டிஜிபியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. அவர் பயிற்சி டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் தமிழகத்தின் முதல் பெண் டிஜிபி என்ற பெருமை பெற்றுள்ளார்.
சம்பள உயர்வினை வலியுறுத்தி பெருந் தோட்டத் தொழிலாளர்கள் நேற்று ஆரம்பித்துள்ள ஒத்துழையாமைப் போராட்டம் அனைத்துத் தோட்டங்களிலும் வெற்றிகரமாக நடைபெற்றதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்தது.
மத்திய, ஊவா, மாகாணங்களில் மட்டுமன்றி தென்மாகாணத்தின் பல பகுதிகளிலும் தேயிலை, இறப்பர் தோட்டத் தொழி லாளர்களும் இவ்வொத்துழையாமை போராட்டத்தில் ஈடுபட்டதாக இ.தொ.கா. வின் நிர்வாகப் பொறுப்பாளர் சந்திரன் தெரிவித்தார்.
இதனால், பெரும்பா லான தோட்டங்களிலிருந்து தேயிலை விற்பனைக்காக எடுத்துச் செல்லப்படுவது தடைப்பட்டதாகவும் தேயிலைத் தூள் ஏற்ற வந்த லொறிகள் தொழிற்சாலைகளுக்கு முன்பாக நிறுத்தப்பட்டிருந் ததாகவும் இதனால் அனைத்துத் தோட்டங்களினதும் பல்வேறு செயற்பாடுகள் தடைப்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
எவ்வாறெனினும் 500 ரூபா சம்பள உயர்வு கிடைக்கும் வரை தோட்டத் தொழிலாளர்களின் ஒத்துழையாமைப் போராட்டம் தொடருமெனவும் பெருந்தோட்ட தொழிற்சங்க முக்கியஸ்தர்கள் தெரிவிக்கின்றனர்.
தோட்டத் தொழிலாளர்க ளின் சம்பள உயர்வு குறித்த பேச்சுவார்த்தை கடந்த 31 ஆம் திகதி இடம் பெற்ற தெனினும் தொழிற் சங்கங் களுக்கும் முதலாளிமார் சம்மேளனத்திற்கு மிடையில் இடம் பெற்ற இப்பேச்சுவார்த்தை தோல்வியிலேயே முடிந்தது.
மீண்டும் எதிர்வரும் 7 ஆம் திகதி பேச்சுவார்த்தை க்கு வருமாறு முதலாளி மார் சம்மேளனம் தொழிற் சங்கக் கூட்டுக் கமிட்டிக்கு அழைப்பு விடுத்துள்ளது. 7 ஆம் திகதி 500 ரூபா சம்பள உயர்வு வழங்குவது என்ற தீர்மானத்துடனேயே முதலாளிமார் சம்மேளனம் பேச்சுக்கு வரவேண்டும் என இ.தொ. கா. தெரிவித்தது.