இலங் கையில் உள்ள சிங்கள அரசு தமிழர்களை துன்புறுத்தி வரும் நிலையில், இலங்கையில் நடைபெறவுள்ள முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் இந்திய அணி பங்கேற்க தடை விதிக்கக் கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வக்கீல்கள் மனு தாக்கல் செய்துள்ளனர். மதுரை லேக் ஏரியாவில் வசித்து வரும் ஏ.ஜோயல் பவுல் அந்தோணி என்ற உயர்நீதிமன்ற வழக்கறிஞர் இதுதொடர்பாக பொது நலன் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
அதில், இலங்கையில் வருகிற 8-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை முத்தரப்பு கிரிக்கெட் போட்டி நடக்க உள்ளது. இந்த போட்டியில் இந்தியாவும் கலந்து கொள்கிறது. இலங்கையில் நடக்கும் மனித உரிமை மீறல்களை பல்வேறு நாடுகள் கண்டித்துள்ளன. தென் ஆப்பிரிக்காவில் நிறவெறி பிரச்சினை இருந்த போது, அங்கு நடந்த கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி கலந்து கொள்ளவில்லை.
தற்போது உள்ள சூழ்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியை இலங்கைக்கு அனுப்பினால் சர்வதேச சமூகம் இந்தியாவை மதிக்காது. எனவே இந்திய கிரிக்கெட் அணியை இலங்கைக்கு அனுப்பக்கூடாது என்று மத்திய உள்துறை செயலாளருக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனுவுக்கான வக்காலத்தில் 513 வழக்கறிஞர்கள் கையெழுத்திட்டுள்ளனர். குறித்த மனு, இன்றைய தினம், சித்ரா வெங்கட்ராமன், துரைசாமி கொண்ட நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் குழுவினர், இது குறித்து மத்திய உள்துறை செயலர், வெளியுறவு செயலர், விளையாட்டு துறை செயலர், கிரிக்கெட் வாரியம் பதிலளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.