September

September

இலங்கை விவகாரம் குறித்து ஐ.நா. செயலாளருடன் சொல்ஹெய்ம் பேச்சு

banki-moon.jpgநோர் வேக்கு விஜயம் செய்துள்ள ஐ.நாவின் செயலாளர் பான் கீ மூன், இலங்கை விவகாரம் தொடர்பில் அந்நாட்டின் பிரதமர் ஜோன் ஸ்ரோடன் பேர்க் மற்றும் சர்வதேச அபிவிருத்தி அமைச்சரும் இலங்கைக்கான முன்னாள் சமாதானத் தூதுவருமான எரிக் சொல்ஹெய்ம் ஆகியோரைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். நேற்றுக் காலை இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது. காலநிலை மாற்றம் குறித்து ஆராய்வதற்காக இருநாள் விஜயமொன்றை மேற்கொண்டுள்ள பான் கீ மூனுக்கு நோர்வேயின் அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் இலங்கை விவகாரம் குறித்து எடுத்துக் கூறியுள்ளார். இச் சந்திப்பினையடுத்து ஐ.நா.வின் செயலாளர் பான் கீ மூனும் நோர்வேயின் பிரதமர் ஜோன் ஸ்ரோடன் பேர்க்கும் இணைந்து செய்தியாளர் மாநாடொன்றினை நடத்தினர்.

இந்தச் செய்தியாளர் மாநாட்டில் இலங்கை குறித்து ஐ.நா.வின் செயலாளர் கருத்து தெரிவிக்கையில், இலங்கை விவகாரம் தொடர்பில் இணைத்தலைமை நாடுகளுடன் இணைந்து ஐ.நா. பணியாற்றி வருகின்றது. நோர்வேயும் இதில் பங்காற்றி வருகின்றது. சர்வதேச சட்டங்களை இலங்கை மீறக்கூடாது. மனித உரிமை நியமனங்களின் அடிப்படையில் இலங்கை அரசாங்கம் செயற்பட வேண்டும். இலங்கை விவகாரம் தொடர்பில் அந்த நாட்டின் ஜனாதிபதியுடன் நான் தொடர்பு கொண்டுள்ளேன். தொலைபேசியில் நான் பல தடவை அவருடன் பேசியுள்ளேன். இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வினை உள்ளடக்கிய அரசியல் ர்வு முன்வைக்கப்பட வேண்டும். இலங்கையில் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ள போதும் அரசியல்ரீதியான தீர்வு வழங்கப்படவில்லை. எனவே இவ்விடயத்தில் இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

நோர்வேயின் தலைநகரான ஒஸ்லோவில் இந்தச் சந்திப்பை நடத்திய ஐ.நா.வின் செயலாளர் பான் கீ மூன், காலநிலை மாற்றம் குறித்து ஆராய்வதற்காக நேற்று நோர்வேயின் வடதுருவப் பகுதிக்கு விஜயம் செய்துள்ளார். இன்று அவர் மீண்டும் அமெரிக்கா திரும்பவுள்ளார்.

லிபியாவில் ஜனாதிபதிக்கு மகத்தான வரவேற்பு!

president_libiya_.jpgலிபியாவின் 40ஆவது சுதந்திரதினக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்வதற்காக நேற்று அந்நாட்டுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மகத்தான வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.

லிபியத் தலைவர் கேர்னல் முஅம்மர் அல்கடாபியின் அழைப்பின் பேரில் அங்கு சென்றுள்ள ஜனாதிபதியை அந்நாட்டின் திட்டமிடல் அமைச்சர் அப்துல் ஹபீத் அல்-ஸ்லாட்னி திரிபோலி நகரிலுள்ள மடிகா விமானநிலையத்தில் வரவேற்றார். இந்த நிகழ்வில் எகிப்துக்கான இலங்கைத் தூதுவர் அன்ஸாரும் கலந்துகொண்டார்.
 
ஜனாதிபதி அண்மையில் லிபியாவுக்குச் சென்றிருந்தபோது இரு நாடுகளுக்குமிடையில் இணக்கம் காணப்பட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அந்நாட்டு உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவாரென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விழாவில் பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களும் கலந்துகொள்ளவுள்ளதோடு அவர்களுடனும் ஜனாதிபதி பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, லிபியாவின் 40ஆவது சுதந்திரதின நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த விசேட குழுவொன்றும் அங்கு சென்றுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

ஸ்ரீ தலதா மாளிகையில் சர்வதேச பௌத்த தொல்பொருள் காட்சியகம்

daladamaligawa.jpgசர்வதேச பௌத்த தொல்பொருள் காட்சி நிலையம் கண்டி, ஸ்ரீ தலதா மாளிகையில் நிர்மாணிக்கப்படவுள்ளது. இந்த நிலையத்தின் முதற்கட்டப் பணிகள் ,ஆரம்பித்து வைக்கப்பட்டதாக தலதா மாளிகையின் தியவதன நிலமே தெரிவித்துள்ளார்.
 
13 சர்வதேச பௌத்த நாடுகளின் ஒத்துழைப்புடன் நிர்மாணிக்கப்படவுள்ள இந்த நிலையத்தில் பௌத்த மதத்தின் தோற்றம் உட்பட பௌத்த மதம் தொடர்பான அனைத்து அம்சங்களும் உள்ளடங்கியிருக்கும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். 

கதிர்காமம் தேவாலயங்களின் ரன்தோலிப் பெரஹர இன்று ஆரம்பம்!

வரலாற்றுப் பெருமைமிக்க கதிர்காமம் எம்பெக்க தேவாலயம் மற்றும் தேவத பண்டார தேவாலயம் ஆகியவற்றின் முதலாவது ரன்தோலிப் பெரஹர இன்று ஆரம்பமாகவுள்ளதாக இரு தேவாலயங்களினதும் பஸ்நாயக்க நிலமே தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 5ஆம் திகதி வரை தினமும் நடைபெறவுள்ள இப்பெரஹர நிகழ்வுகளில் புராதன கண்டி ஓவியங்கள் மற்றும் நடனம் ஆகியவற்றுடன் காவடி ஆட்டம் மற்றும் யானைகளின் வீதி அணிவகுப்பு என்பனவும் இடம்பெறவுள்ளன. இப்பெரஹரவின் இறுதி வைபவம் செப்டம்பர் மாதம் 6ஆம் திகதி நடைபெறும் நிகழ்வுகளுடன் முடிவடையவுள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டார்.

கதிர்காமம் எம்பெக்க தேவாலயத்தில் மூன்றாம் விக்ரமபாகு மன்னனின் காலத்தில் கட்டப்பட்ட மரத்தினாலான கட்டிடக் கலை அம்சங்கள் காணப்படுவதால் இந்த தேவாலயம் உலகப் பிரசித்தி பெற்றதாகக் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

ஜே எஸ் திஸ்ஸநாயகத்திற்கு 20 வருட கடுழியச் சிறை : இலங்கை அரசுக்கு எதிராக உள்ளேயும் வெளியேயும் போர்க் கொடி : த ஜெயபாலன்

Hakeem SLMC Leaderபத்திரிகையாளர் ஜே எஸ் திஸ்ஸநாயகத்துக்கு கொழும்பு மேல்நீதிமன்றம் ஓகஸ்ட் 31ல் இருபது வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியதை சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் வன்மையாகக் கண்டித்துள்ளார். ”இலங்கையில் கருத்துச் சுதந்திரத்திற்குக் கிடைத்த பலத்த அடி – critical blow to freedom of expression in Sri Lanka” என அவர் இதனை வர்ணித்துள்ளார்.

ஓகஸ்ட் 31ல் லண்டனில் நடைபெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அ அமிர்தலிங்கம் அவர்களின் ஞாபகார்த்த நிகழ்வில் நினைவுப் பேருரை வழங்குகையிலேயே அவர் இதனைத் தெரிவித்து இருந்தார். ‘அ அமிர்தலிங்ம் நினைவுப் பேருரை’ யை வழங்க ஓகஸ்ட் 29ல் லண்டன் வந்திருந்த சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவசரகாலச் சட்டத்தின் தேசிய பாதுகாப்பு விதிமுறைகள் அங்குள்ள மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை மீறுவதாக உள்ளதாகவும் குற்றம்சாட்டினார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்டுள்ள முதலாவது ஊடகவியலாளர் ஜே எஸ் திஸ்ஸநாயகம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜே எஸ் திஸ்ஸநாயகத்திற்கு வழங்கப்பட்டுள்ள தண்டணை இலங்கையின் நீதித்துறையை சர்வதேச ரீதியில் அம்பலப்படுத்துவதற்கு மிகுந்த வாய்ப்பை அளித்துள்ளது. சர்வதேச ஊடக அமைப்புகள் சர்வதேச உரிமை அமைப்புகள் மகிந்த ராஜபக்ச சகோதரர்களின் ஆட்சிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி உள்ளன. ஜே எஸ் திஸ்ஸநாயகத்திற்கு இலங்கை அரசு தண்டனை வழங்கியதற்கு எதிராக சர்வதேச ஊடக அமைப்புகள் சிறந்த ஊடகவியலாளருக்கான உயர் விருதுகளை ஜே எஸ் திஸ்ஸநாயகத்திற்கு வழங்கி அவரை கௌரவித்துள்ளதுடன் தங்கள் சகோதரத்துவத்தை வெளிப்படுத்தி உள்ளன.

Hakeem_AndrewLove‘அ அமிர்தலிங்கம் நினைவுப் பேருரை’யில் மு கா தலைவர் இலங்கை அரசு மீதான தனது குற்றச்சாட்டை வைத்த போது பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் அன்ரூ லவ் ம் உடனிருந்தார். அன்ரு லவ் இலங்கைக்கான பிரித்தானிய பாராளுமன்றக் குழுவின் தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அன்ரூ லவ் தனது கருத்துக்களை புரிந்தகொள்ள வேண்டும் என்ற வகையில் மு கா தலைவர் ஹக்கீம் தனது கண்டனத்தை ஆங்கிலத்திலேயே குறிப்பிட்டார். ”மிகவும் கரிய மேகங்கள் இலங்கைக்கு மேல் படிகின்றது. மிகவும் அபத்தான போக்கு ஒன்று உருவாகின்றது” என்ற அச்சத்தையும் மு கா தலைவர் ஹக்கீம் வெளியிட்டார்.

ஓகஸ்ட் 31ல் தண்டனை வழங்கப்பட்ட ஜே எஸ் திஸ்ஸநாயகத்திற்கு ‘2009 International Press Freedom Award – சர்வதேச பத்திரிகைச் சுதந்திர விருது 2009’ யை வழங்கி உள்ளது அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கும் Committee to Protect Journalists (CPJ) என்ற ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் அமைப்பு. ”ஜே எஸ் திஸ்ஸநாயகத்திற்கு வழங்கப்பட்டு உள்ள தண்டனை எவ்வளவு மோசமானது என்பதனை வெளிக் கொண்டுவருவதற்காக அவருக்கு இவ்விருதினை அறிவித்து உள்ளோம்” என CPJ இயக்குநர் ஜோல் சைமன் தெரிவித்துள்ளார்.

2008 மார்ச் 7ல் ஜே எஸ் திஸ்ஸநாயகம் (45) பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார். பயங்கரவாத தடுப்புச்சட்டம் மற்றும் அவசரகால சட்டம் ஆகியவற்றின் விதிகளின் கீழ் சட்டமா அதிபரினால் திஸ்ஸநாயகத்துக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. திஸ்ஸநாயகத்துக்கு எதிராக கொழும்பு மேல்நீதிமன்றத்தில் சட்டமா அதிபரினால் தொடரப்பட்டிருந்த வழக்கில் அவருக்கு எதிரான மூன்று குற்றச்சாட்டுக்களில் அவர் குற்றவாளியென மேல்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

2006 யூன் க்கும் 2007 யூன் க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் குற்றங்கள் புரிந்துள்ளதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு இருந்தது. கிழக்கு மாகாணத்தில் அரச படைகள் இனப்படுகொலைகளில் ஈடுபட்டதாக கட்டுரையை எழுதியது, அதனை வெளியிட்டது, அதன் மூலம் அரசபடைகளுக்கு அவதூறு ஏற்படுத்தியது, அதன் மூலம் இனங்களுக்கிடையே பகைமைய வளர்க்கத் திட்டமிட்டது என சட்டமா அதிபர் திஸ்ஸநாயகம் மீது குற்றம் சுமத்தி இருந்தார். 

ஜே எஸ் திஸ்ஸநாயகத்தால் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரணசிங்க என்பவருக்கு வழங்கப்பட்டதாக கூறப்படும் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் சுயாதீனமாக வழங்கப்பட்டதென கொழும்பு மேல்நீதிமன்றம் ஏற்கனவே தீர்மானித்து. அதனை அடிப்படையாக கொண்டு ஜே எஸ் திஸ்ஸநாயக்துக்கு எதிரான வழக்கை விசாரணை செய்தது.  இதன்படி வழக்கு விசாரணை செய்த கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி தீபாலி விஜேசுந்தர, திஸ்ஸநாயகத்தின் மூன்று குற்றச்சாட்டுகளுக்கும் 20 வருட கடுழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.

”இன்று திஸ்ஸநாயகம் என்னத்தை எழுதினாரோ பேசினாரோ அதையே அன்று அண்ணன் அமிர்தலிங்கமும் செய்தார். வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை வலியுறுத்தி எழுதினார் பேசினார். அன்றைக்கு அதற்காக அண்ணன் அமிர்தலிங்கம் துன்புறுத்தப்பட்டார். அது தான் இன்றும் நடைபெறுகின்றது” என்று கூறிய மு கா தலைவர் ஹக்கீம் ”இலங்கை அரசியல்வாதிகளுடைய சிந்தனைமுறை மாறவில்லை. அவர்களுடைய நடத்தைகள் மாறவில்லை. ஆட்சியாளர்கள் மட்டுமே மாறி உள்ளனர்” எனக் குற்றம்சாட்டினார். மு கா தலைவரின் இக்கருத்திற்கு சபையோர் பலத்த கரகோசம் வழங்கி தங்கள் ஆதரவைத் தெரிவித்துக் கொண்டனர். 

ஜே எஸ் திஸ்ஸநாயகம் சார்பாக ஆஜரான சட்டத்தரணி அனில் டி சில்வா ”திஸ்ஸநாயகம் ஒரு இனவாதி அல்லவென்றும் சிங்கள மக்களுக்கு ஆதரவான வகையில் பல்வேறு போராட்டங்களுக்கு அவர் தலைமை தாங்கியுள்ளhர்” என்றும் தெரிவித்தள்ளார். ”அரசியல் அமைப்பில் கருத்து வெளியிடும் சுதந்திரம் மட்டுமல்ல இனஇ மத ரீதியின்றியும் பாரபட்சமின்றியும் நியாயமானதொரு வழக்கு விசாரணைக்கு அதிகாரம் வழங்கியுள்ள போதிலும் அவருக்கு எதிரான வழக்கில் இந்த நியாயம் வழங்கப்பட்டதா என்பது ஒரு கேள்விக்குறியான விடயம்” என்றும் சட்டத்தரணி அனில் டி சில்வா நீதிமன்றத்தில் ஓகஸ்ட் 31ல் தெரிவித்துள்ளார். இத்தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு செய்யப் போவதாகவும் சட்டத்தரணி அனில் டி சில்வா தெரிவித்திருந்தார்.

Tissanayagam_S_Jஇவ்வாண்டு மே யில் இடம்பெற்ற உலக பத்திரிகைச் சுதந்திரதினத்தை முன்னிட்டு அமெரிக்க அதிபர் வழங்கிய உரையில் ‘குறியீட்டு உதாரணமானவர்கள் – emblematic examples’ என்ற வரிசையில் இலங்கையில் ஜே எஸ் திஸ்ஸநாயகத்தை சுட்டிக்காட்டி இருந்தார். இன்று அவருக்கே இந்த 20 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனையை இலங்கை நீதிமன்றம் விதித்துள்ளது.

ஜே எஸ் திஸ்ஸநாயகத்திற்கு தண்டனை வழங்கப்பட்டு சில மணி நேரங்களிற்கு ள்ளாகவே அதற்கு எதிரான கண்டனங்கள் வர ஆரம்பித்து உள்ளது. ஏற்கனவே யுத்தக் குற்றங்கள், மக்களை மனிதாபிமானமற்ற வகையில் முகாம்களில் தடுத்து வைத்திருப்பது தொடர்பாக கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ள இலங்கை அரசு மீண்டும் தனது தவறான நடவடிக்கைக்காக உலக அளவில் பேசப்படுவதற்கு இடமளித்துள்ளது.

”ஜே எஸ் திஸ்ஸநாயகத்திற்கு வழக்கப்பட்டுள்ள மிகக் கடுமையான தண்டனை, இலங்கை நீதிபதிகள் சிலர் பழிவாங்குவதையும் நீதியையும் போட்டுக் குழுப்புகின்றார்கள் என்ற தோற்றப்பாட்டைக் கொடுக்கின்றது” என Reporters Without Borders – எல்லைகளற்ற ஊடகவியலாளர் என்ற பிரான்சைத் தளமாகக் கொண்டு இயங்கும் அமைப்பு தெரிவித்துள்ளது. அத்துடன் எல்லைகளற்ற ஊடகவியலாளர் Global Media Forum இணைந்து ‘Peter Mackler Prize’  என்ற விருதை ஜே எஸ் திஸ்ஸநாயகத்திற்கு வழங்கி உள்ளனர். இவ்வாண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ள இவ்விருது, ஊடக சுதந்திரத்திற்கு மதிப்பளிக்கப்படாத நாடுகளில் தொழில் நேர்மையுடனும் துணிவுடனும் இயங்கும் ஊடகவியலாளர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.

Tissanayagam_S_J_Arrest”ஜே எஸ் திஸ்ஸநாயகத்திற்க வழங்கப்பட்ட தண்டனை கொடியது மனிதாபிமானமற்றது” என்று குற்றம்சாட்டியுள்ள International Federation of Journalists (IFJ) என்ற சர்வதேச ஊடக அமைப்பு, இலங்கை ஆட்சியாளர்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை துஸ்பிரயோகம் செய்வதாகவும் விமர்சனங்களை மௌனிக்க வைக்கவே முற்படுவதாகவும் குற்றம்சாட்டி உள்ளது. இது பற்றி கருத்த வெளியிட்டுள்ள IFJ செயலாளர் ஏய்டன் உவைற் ”அரசாங்கத்தை பொறுப்பாக்கியதற்காகவும் சட்டபூர்வமான அல்லது விமர்சனமான குரலை வழங்கியதற்காகவும் ஜே எஸ் திஸ்ஸநாயகம் பாதிக்கப்பட்டு உள்ளார். இத்தண்டனை சீரற்றது கொடியது மனிதாபிமானமற்றது. இது சுயாதீனமான ஊடகவியலாளர்களுக்கு இலங்கை எவ்வளவு ஆபத்தானது என்பதை அபாயத்துடன் ஞாபகமூட்டுகின்றது” என்று தெரிவித்து உள்ளார்.

2007 முதல் இலங்கையில் எட்டு ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். இன்னும் பல மடங்காணோர் இலங்கையை விட்டு வெளியேறி உள்ளனர்.

எஸ் ஜே திஸ்ஸநாயகத்தின் இந்நிலைக்கு காரணமான எழுத்துக்கள்:

Providing security to Tamils now will define northeastern politics of the future It is fairly obvious that the Government is not going to offer them any protection. In fact it is the state security forces that are the main perpetrator of the killings.
 
July 2006, North Eastern Monthly

With no military options Government buys time by offering watered-down devolution Such offensives against the civilians are accompanied by attempts to starve the population by refusing them food as well as medicines and fuel.

November 2006, North Eastern Monthly

Source: Committee to Protect Journalists

ஜப்பான் பாராளுமன்றத் தேர்தலில் 50 வருட ஆட்சிக்கு முற்றுப்புள்ளி – ஜனநாயகக் கட்சி 301 ஆசனங்கள் லிபரல் கட்சிக்கு 119 மட்டுமே

japan-new-pri.jpgஜப்பானில் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி பெரு வெற்றியீட்டியது. மொத்தமாக உள்ள 480 ஆசனங்களில் 301 ஆசனங்களை ஜனநாயகக் கட்சி வென்றது. ஆட்சியிலிருந்த பிரதமர் ரரோ அசோவின் லிபரல் கட்சி 119 ஆசனங்களை மட்டுமே பெற்று தோல்வியடைந்தது.

இதையடுத்து ஜப்பானை ஐம்பது வருடங்களாக ஆண்டு வந்த லிபரல் கட்சி எதிர்க்கட்சியாக மாறியது. தோல்வியை ஏற்றுக்கொண்ட பிரதமர் ரரோ அசோ பதவி விலகப் போவதாக அறிவித்தார். ஜனநாயகக் கட்சியின் தலைவர் யுகியோ ஹற்றோயாமா (வயது 62) புதிய பிரதமராகப் பதவியேற்பார். புதிய அரசாங்கத்தை அமைக்கும் முயற்சிகளில் கட்சியின் முக்கியஸ்தர்கள் ஈடுபட்டுள்ளனர்.

புதிய அரசாங்கம் கடுமையான சவால்களை எதிர்கொள்ள நேரிடுமெனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடி, இயற்கை அனர்த்தங்களால் பாதிப்புற்ற மக்களின் மறுவாழ்வு என்பவை புதிய அரசாங்கத்துக்கு முன் உள்ள சவால்களாகும். ஜப்பானுடன் உறவுகளைத் தொடர விரும்புவதாக தென் கொரியா அறிவித்துள்ளதுடன் பல நாடுகள் புதிய அரசாங்கத்துக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளன.

புதிய பிரதமராக பதவியேற்கவுள்ள யுகியோ ஹற்றோயாமா கட்சியின் வெற்றி குறித்து வானொலியில் உ¨யாற்றினார். முன்னய அரசாங்கம் பின்பற்றிய கொள்கைகளை அடியோடு மாற்றப் போவதில்லை.

பொறுமையாக இருந்து இக்கொள்கைகளைப் படிக்க வேண்டும் ஆராய வேண்டும். மக்களின் எதிர்பார்ப்பையும் தேவைகளையும் கருத்தில் கொண்டு இக்கொள்கைகள் சிலவற்றை மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனக் கூறினார்.

மக்கள் புதிய கட்சி, சமூக ஜனநாயகக் கட்சி ஆகிய இரண்டு கட்சிகள் புதிய அரசாங்கத்தில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளன.

இன்னும் இரண்டு வாரங்களின் பின்னர் பாராளுமன்றத்தில் புதிய பிரதமர் பதவியேற்கவுள்ளார்.

சரணடைந்த, கைதான புலி உறுப்பினர்களின் புனர்வாழ்வு நடவடிக்கைக்கு 20 நிலையம்

புலிகள் இயக்கத்திலிருந்து பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்த மற்றும் மனிதாபிமான நடவடிக்கையின்போது கைது செய்யப்பட்டவர்களின் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கென 20 புனர்வாழ்வு நிலையங்கள் புதிதாக நிறுவப்படவுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் தயாரத்னாயக்க நேற்றுத் தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கின் பல்வேறு பிரதேசங்களில் இந்த 20 புனர்வாழ்வு நிலையங்கள் நிறுவப்படவுள்ளன.

ஐநூறு பேர் வீதம் 20 நிலையங்களில் இவர்களுக்கு புனர்வாழ்வளிக்கப்படவுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஷேட பணிப்பின் பேரில் தற்பொழுது பத்தாயிரம் பேருக்கும் உச்சகட்ட புனர்வாழ்வு வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். உறுப்பினர்களின் தனித்தனி விபரங்களை சேகரிக்கும் நடவடிக்கைகள் தற்பொழுது பூர்த்தி செய்யப்பட்டுள்ளது என்றும் இத ற்கு சுமார் மூன்று வாரங்கள் செலவிடப் பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

10 ஆயிரம் பேர்களில் 1777 பெண் உறுப்பினர்களும 565 பாடசாலை பருவ மாணவர்களும் அடங்குவர். இவர்களில் பாடசாலை செல்லும் வயதுடைய மாணவர்கள் தமது கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான சகல செயற்பாடுகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆணையாளர் தெரிவித்தார்.

தற்பொழுது 10 ஆயிரம் பேர்களும் 12 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவற்றில் நான்கு பாடசாலைகளாகும். இந்த பாடசாலைகளை கற்றல் நடவடி க்கைகளுக்காக வெகுவிரைவில் பொறு ப்புக் கொடுக்க வேண்டியுள்ளதால் தற்காலிகமாக 5 முகாம்கள் நிறுவப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த இவர்களது செயற்பாடுகளையும், சிந்தனைகளையும் முழுமையாக மாற்றியமைத்து சமாதான சிந்தனையுடன் வாழ தேவையான வகையில் உச்சகட்ட புனர்வாழ்வு வழங்குவதே பிரதான நோக்கம் என்றும் மேஜர் ஜெனரல் தயா ரத்னாயக்க குறிப்பிட்டார்.

பெருந்தொகையானவர்களுக்கு இது போன்ற புனர்வாழ்வு வழங்கப்படுவது உலகிலேயே இதுவே முதற் தடவை என்று குறிப்பிட்ட அவர் பயங்கரவாதத்தை முறியடித்து அரசாங்கம் முன்னெடுத்து வரும் இதுபோன்ற திட்டங்களை பாராட்டும் வகையில் உலகின் பல நாடுகள், முன்னணி அமைப்புக்கள் ஒத்துழைப்புக்களை வழங்க முன்வந்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.

ஷெல், லாப் காஸின் விலைகள் அதிகரிப்பு

shellgas.jpgகாஸ் விலை நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. “ஷெல் காஸ்’ 103 ரூபாவினாலும் “லாப் காஸ்’ 69 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டிருப்பதாக அந்த நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

இதனடிப்படையில், ஷெல் காஸ் சிலிண்டர் ஒன்றின் புதிய விலை 1550 ரூபா என்றும் இந்த அதிகரிப்பு நேற்று  நள்ளிரவு முதல் அமுலுக்கு வருவதாகவும் ஷெல் காஸ் நிறுவனத்தின் தலைவர் வேஹகபிட்டிய தெரிவித்துள்ளõர்.

இதேவேளை, லாப் காஸ் சிலிண்டர் ஒன்றின் புதிய விலை 1476 ரூபா என அந்நிறுவனத்தின் நிதிப்பணிப்பாளர் ரிமோய்ன் சல்டின் தெரிவித்தார்.

நீதிமன்ற உத்தரவின்படி உலக சந்தையில் ஏற்படுகின்ற விலை மாற்றங்களுக்கு ஏற்ப இரண்டு மாதங்களுக்கு ஒரு தடவை உள்ளூரின் காஸ் விலைகளை நிர்ணயம் செய்ய முடியும். இவ்விலை நிர்ணயத்தின்படி சமையலுக்காக பாவிக்கப்படுகின்ற காஸின் விலைகளை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இறுதியாக கடந்த ஜூலை மாதம் முதலாம் திகதி காஸ் சிலிண்டர்களின் விலை நிர்ணயத்தின் அடிப்படையில் ஷெல் காஸ் 53 ரூபாவினால் குறைவடைந்த அதேவேளை லாப் காஸின் விலை 100 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

வாஸின் மகன் உட்பட ஐவர் அடையாளம் காணப்பட்டனர்

nimal_madiwaka.jpgமாலபே தகவல் தொழில் நுட்பக் கல்லூரி மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக நேற்று நடத்தப்பட்ட அடையாள அணிவகுப்பில் வாஸ் குணவர்தனவின் மகன் உட்பட ஐவர் அடையாளம் காணப்பட்டி ருப்பதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிமல் மெத்திவக்க கூறினார்.

கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் வாஸ் குணவர்தனவின் மகன் மேற்குறிப்பிட்ட கல்லூரி மாணவனான நிபுண என்பவரை சில பொலிஸ் அதிகாரிகளின் உதவியுடன் கடத்திச் சென்று தாக்கினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் வாஸ் குணவர்தனவின் மனைவி, மகன் மற்றும் 14 பொலிஸ் அதிகாரிகள், பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு அதன் பின் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பாசிக்குடா சுற்றுலாத்துறை அபிவிருத்தி : உள்ளூர் மீனவர் விசனம்

srilanka_passikuda.jpgஇலங் கையின் கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையில் பிரபல்யம் பெற்றுள்ள பாசிக்குடா கடலோரப் பிரதேசத்தில் சுற்றுலாத் துறையை அபிவிருத்தி செய்ய மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளினால் தமக்கு தொழில் ரீதியாகப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உள்ளூர் மீனவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

பல வருடங்களாக மீன் பிடித்தொழிலில் ஈடுபட்டு வந்த மீனவர்களை அந்த இடங்களிலிருந்து வெளியேறுமாறு தற்போது அதிகாரிகள் அறிவித்துள்ள நிலையிலேயே மீனவர்கள் இது தொடர்பான தமது கவலையை வெளியிட்டுள்ளனர்.

இதன் காரணமாக கல்குடா பகுதியைச் சேர்ந்த குடும்பங்களில் 99 சதவீதமான குடும்பங்கள் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக கல்குடா மீனவர் சங்கத் தலைவர் மயில்வாகனம் சுந்தரராஜா தெரிவித்தார்.