03
03
இலங்கை யின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் போலியாகத் தயாரித்து பிரித்தானியாவின் செனல்-4 தொலைக்காட்சி சேவை ஊடாக ஒளிபரப்பப்பட்ட வீடியோ காட்சி குறித்து அரசாங்கம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாகவும் இது தொடர்பான எந்த விசாரணைக்கும் முகம்கொடுக்க அரசு தயார் என்றும் தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாபா தெரிவித்தார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று முற்பகல் நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
முதல்கட்ட நடவடிக்கையாக இந்த வீடியோ காட்சி குறித்து அரசாங்கம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. எனினும் அடுத்த கட்ட நடவடிக்கையை நாம் மேற்கொள்ளவுள்ளோம். அது குறித்து தற்போதைக்கு எதுவும் கூற முடியாது.
இதேவேளை, குறிப்பிட்ட வீடியோ காட்சிகள் போலியாகத் தயாரிக்கப்பட்டவை என வெளிநாட்டுச் சஞ்சிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளதாக எமது உள்நாட்டுப் பத்திரிகையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.
பிலியந்த லையில் கடத்தப்பட்ட சிறுவனைப் பொலிஸார் மீட்டுள்ளனர். ஆட்டோ சாரதி ஒருவர் கொடுத்த தகவலையடுத்து சிறுவனை மீட்ட பொலிஸார், சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
விளையாடுவதற்குப் பட்டம் ஒன்றை வாங்கித் தருவதாகக் கூறி ஆசைகாட்டி மேற்படி சிறுவனை இனந்தெரியாத நபர்கள் அழைத்துச் சென்றுள்ளனர். பிலியந்தலை இல. ஒன்று சிங்கள கனிஷ்ட பாடசாலையில் கல்வி கற்றுவரும், பெத்தும் மினிந்த எனும் 9 வயது சிறுவனே நேற்று முன்தினம் பிற்பகல் 1.30 மணியளவில் கடத்திச் செல்லப்பட்டிருந்தார்.
சம்பவ தினத்தன்று, பிலியந்தலை கனேவத்தை தேவாலயத்தில் பிற்பகல் வேளையில் தனது நண்பர்களோடு பட்டம் விட்டு விளையாடிக் கொண்டிருந்த போது, தேவாலயத்தில் கூலி வேலை செய்வதற்காக வந்திருந்த இருவர் பட்டம் வாங்கித் தருவதாகக் கூறி சிறுவனை பிலியந்தலை நகரத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
விளையாடச் சென்ற சிறுவன் மாலையாகியும் வீடு திரும்பாததால் அவரது பெற்றோர் பிலியந்தலை பொலிஸில் முறைப்பாடு செய்தனர். இதனையடுத்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே சிறுவன் கடத்தப்பட்ட விடயம் வெளியானது.
தொலைக்காட்சிச் செய்தியில் சிறுவனது புகைப்படத்தைப் பார்த்த ஆட்டோ சாரதி ஒருவர், அவரை ஒரு நபருடன் கண்டதாகப் பொலிஸாருக்குத் தகவல் தெரிவித்திருந்தார். இதனையடுத்து குறித்த இடத்துக்குச் சென்ற பொலிஸார் சிறுவனை மீட்டதோடு சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
லிபியப் புரட்சியின் 40 ஆவது வருட நினைவு வைபவங்களில் கலந்துகொள்வதற்காக லிபியாவுக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று அதிகாலை நாடு திரும்பினார். லிபியாவின் தலைவர் முஅம்மர் கடாபியின் விசேட அழைப்பின்பேரில் அங்கு சென்ற ஜனாதிபதிக்கு பெரும் வரவேற்பளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வுகளில் இடம்பெற்ற படையினரின் அணிவகுப்பில் இலங்கைப் படை வீரர்களும் பங்கு கொண்டனர். மஹிந்த ராஜபக்ஷ இலங்கை ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட பின்னரே லிபியாவுடனான உறவுகள் பலமடைந்தன. லிபியாவுடன் நெருக்கமான நட்பு நாடுகளின் தலைவர்களே விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
இவ்விழாவில் கலந்துகொண்ட சுமார் 40 நாடுகளின் தலைவர்களுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரு தரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.
ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தில் முதல் முறையாக மருத்துவபீடம் ஆரம்பிக்கப்படவுள்ளது. பாதுகாப்பு அமைச்சில் நேற்று ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகம் றுஹ{ணு பல்கலைக்கழகத்துடன் இது தொடர்பான உடன்படிக்கை கைச்சாத்திடும் வைபவம் இடம்பெற்றது.
இவ்வைபவத்தில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ, பல்கலைக்கழக ஆணைக்குழுத் தலைவர் பேராசிரியர் காமினி சமரநாயக்க, சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழ உபவேந்தர் மேஜ ஜெனரல் மிலிந்த பீரிஸ் மற்றும் றுஹ{ணு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் திலக் விரசிங்க ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இங்கு கருத்துதெரிவித்த பாதுகாப்பச் செயலாளர், இப்பயிற்ச்சி நெறிக்கு தெரிவு செய்யப்படும் படை அதிகாரிகள் நாட்டுக்கு இராணுவ அதிகாரியாகவும் மருத்துவராகவும் சேவைசெய்யும் வாய்ப்பைப் பெறுவார்கள் எனத் தெரிவித்தார். இவ்வாறு தெரிவு செய்யப்பட்டிருக்கும் 25 படை அதிகாரிகளுக்கும் அடிப்படை இராணுவப்பயிற்சி முடிவடைந்ததும் றுஹ{ணு பல்கலைக்கழக மருத்துவபீடத்துடன் இணைக்கப்டுவர்.
வியட்நாமிய குடியரசின் 64 தேசிய தின வைபவம் இரத்தினபுரியில் இன்று நடைபெறவுள்ளது. இரத்தினபுரி நவநகரிலுள்ள சமுர்தி மண்டபத்தில் நடைபெறும் இவ்வைபவத்தில் வியட்நாம் தூதுவர் க்வேன்ஹோன் சோன் விஷேட அதிதியாக் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
இலங்கை-வியட்நாம் ஒத்துழைப்பு சங்கம் ஏற்பாடு செய்துள்ள இவ்வைபவத்தில் அமைச்சர்களான பேராசிரியர் திஸ்ஸ வித்தாரண, டியூ குணசேகர, சாலிந்த திஸாநாயக்கா, டாக்டர் ராஜித சேனாரத்ன, ஜனாதிபதியின் ஆலோசகர் வாசுதேவ நாணயக்கார, சப்ரகமுவ மாகாண சபை உறுப்பினர் அசோக ஜயவர்தன, சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ். சுதசிங்க உட்பட பலர் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.
இந்திய அணி இலங்கைக்கு சென்று கிரிக்கெட் தொடரில் பங்கேற்க கூடாது என கோரி தொடுக்கப்பட்ட வழக்கை மதுரை உயர்நீதிமன்ற கிளை 6 வாரத்துக்கு ஒத்திவைத்துள்ளது. இதையடுத்து வழக்கை வேறு நீதிபதிகளை கொண்ட பெஞ்ச்க்கு மாற்ற வேண்டும் என மனுதாரர் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்தியா, இலங்கை, நியூசிலாந்து அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இலங்கையில் வரும் 8ம் தேதி துவங்குகிறது. இலங்கையில் தமிழர்கள் ரத்தம் சிந்தி வரும் நிலையில் இந்திய அணி அங்கு சென்று கிரிக்கெட் விளையாட கூடாது என கோரி மதுரையில் வக்கீல் ஜோயல் பவுல் அந்தோணி என்பவர் உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடுத்தார்.
அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், கிரிக்கெட் வாரியத்துக்கு பேக்ஸ் மூலம் நோட்டீஸ் அனுப்பியதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த வழக்கை 6 வாரத்துக்கு ஒத்திவைக்கிறேன் என்று அறிவித்தனர்.மனுதாரரின் வக்கீல்கள், சிவில் சட்டமுறை சட்டத்தில் பேக்ஸ் மூலம் அனுப்பும் நோட்டீஸை முறையான நோட்டீஸாக எடுத்து கொள்ளும் வழி வகை இருப்பதாக கூறினார். ஆனால், நீதிபதிகள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.
இதையடுத்து மனுதாரர் ஜோயல் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பேக்ஸ் மூலம் ஒரு மனு அனுப்பினார். அதில், இந்திய அணி, இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்யக்கூடாது என தொடுக்கப்பட்ட வழக்கை தற்போது நீதிபதிகள் 6 வாரத்துக்கு ஒத்தி வைத்துள்ளனர். ஆனால், அதற்குள் இந்த தொடர் முடிந்துவிடும்.
தொடர் வரும் 8ம் தேதி துவங்குகிறது என்பது தெளிவாக தெரிந்த நிலையிலும் விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தொடர் முடிந்த பின்னர் அந்த தொடரில் பங்கேற்க அணியை அனுப்புவதா வேண்டாமா என்பது குறித்து பேசுவதற்கு கூட இடமில்லை. இதனால் எங்கள் கோரிக்கை நிறைவேறாமல் போய்விடும்.
தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம் என்பதை கருத்தில் கொண்டு இந்த வழக்கு வேறு நீதிபதிகளை கொண்ட பெஞ்ச் மூலம் 7ம் தேதிக்கு முன்பு விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
சமூக அபிவிருத்தி மற்றும் சமூக அநீதி ஒழிப்பு அமைச்சரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான பெ. சந்திரசேகரனின் வீட்டு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மின் கட்டணத்தை உரிய முறையில் செலுத்தாத காரணத்தினால் அவரது மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் சந்திரசேகரன் கடந்த 8 மாதங்களான மின்சார கட்டணத்தை செலுத்தவில்லை எனவும், இலங்கை மின்சார சபைக்கு சுமார் 736,172 ரூபா நிலுவை செலுத்த வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஒரு தடவை மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட போது குறித்த நிலுவைப் பணத்தை நான்கு தவணைகளில் செலுத்துவதாக அமைச்சர் தெரிவித்த போதிலும், ஒரு லட்ச ரூபா மட்டுமே அவர் செலுத்தியதாக லக்பிம பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இதன் காரணமாக கடந்த 31ம் திகதி மீண்டும் அமைச்சர் வீட்டு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
இலங் கையில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஊடகவியலாளர் ஜே.எஸ்.திஸ்ஸநாயகத்திற்கு ஆதரவாக லண்டனில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
பயங்கரவாத குற்றச்சாட்டுக்களின் பேரில் கடந்த திங்கட்கிழமை அன்று திஸ்ஸநாயகத்திற்கு 20 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனையை இலங்கை மற்றும் சர்வதேச ஊடக அமைப்புக்கள் கண்டித்திருந்தன.
பிரிட்டிஷ் பாராளுமன்றத்திற்கு வெளியே நடத்தப்பட்ட இந்த போராட்டத்தை அம்னெஸ்டி இண்டர்நேஷனல் என்கிற மனித உரிமை அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தங்கள் வாய் மீது கறுப்புத்துணியை கட்டியிருந்தனர்.
ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி மற்றும் அவருடன் பயணித்த நால்வரின் உடல்களும் கருகிப் போன நிலையில் கண்டுபிடிக்கப்பட்டன. இன்னும் உடல்கள் மலைப் பகுதியிலிருந்து மீட்கப்படவில்லை என்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
ராஜசேகர ரெட்டியினம் மரணச் செய்தியை ஆந்திர அரசு அறிவித்தவுடன், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் மத்திய அமைச்சரவை கூடியது. இக்கூட்டத்திற்குப் பின்னர் அமைச்சர் ப.சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், சற்று முன்புதான் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி மற்றும் அவருடன் பயணித்த நால்வரின் மரணச் செய்தியை ஆந்திர அரசு அறிவித்தது. இதை பிரதமரிடம் சோகத்துடன் தெரிவித்தோம்.
இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் உடல்கள் இருந்த இடத்தையும், ஹெலிகாப்டரையும் கண்டுபிடித்தது. காலை 8.35 மணிக்கு ஹெலிகாப்டர் விழுந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டது. கர்னூலிலிருந்து 48 நாட்டிக்கல் மைல் தொலைவில் உள்ள மலைக் குன்றில் ஹெலிகாப்டர் விழுந்திருந்தது. இதையடுத்து மேலும் பல ஹெலிகாப்டர்கள் அங்கு சென்றன. பாரா கமாண்டோக்கள் கயிற்றின் மூலம் கீழே இறங்கி ஹெலிகாப்டரை நெருங்கினர்.
பின்னர் உடல்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. உடல்கள் கருகிப் போயுள்ளன. ஹெலிகாப்டர் 7 பாகங்களாக சிதறியுள்ளது. அந்த இடத்திற்கு டாக்டர்களைக் கொண்டு செல்ல முயற்சி நடக்கிறது.
உடல் பாகங்களை சேகரித்து கர்னூல் கொண்டு செல்லும் முயற்சியில் விமானப்படை ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டுள்ளன. பின்னர் பிரேதப் பரிசோதனை முடிந்ததும் உடல்கள் ஹைதராபாத் கொண்டு செல்லப்படும். இந்தப் பணி எப்போது முடிவடையும் என்பதைச் சொல்ல முடியாது.
இன்று மாலை 3 மணிக்கு காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி கூட்டம் கூடுகிறது. அப்போது ராஜசேகர ரெட்டிக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படும்.
மிகச் சிறந்த முதல்வர், மிகப் பெரிய தலைவர். ராஜசேகர ரெட்டியின் மறைவால் அனைவரும் அதிர்ந்தும், உறைந்தும் போயுள்ளோம் என்றார் ப.சிதம்பரம்.