03

03

தொழிலாளர் ஒத்துழையாமை போராட்டம் வெற்றியளித்துள்ளது என்கிறது இ.தொ.கா

pluckers.jpgசம்பள உயர்வினை வலியுறுத்தி பெருந் தோட்டத் தொழிலாளர்கள் நேற்று ஆரம்பித்துள்ள ஒத்துழையாமைப் போராட்டம் அனைத்துத் தோட்டங்களிலும் வெற்றிகரமாக நடைபெற்றதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்தது.

மத்திய, ஊவா, மாகாணங்களில் மட்டுமன்றி தென்மாகாணத்தின் பல பகுதிகளிலும் தேயிலை, இறப்பர் தோட்டத் தொழி லாளர்களும் இவ்வொத்துழையாமை போராட்டத்தில் ஈடுபட்டதாக இ.தொ.கா. வின் நிர்வாகப் பொறுப்பாளர் சந்திரன் தெரிவித்தார்.

இதனால், பெரும்பா லான தோட்டங்களிலிருந்து தேயிலை விற்பனைக்காக எடுத்துச் செல்லப்படுவது தடைப்பட்டதாகவும் தேயிலைத் தூள் ஏற்ற வந்த லொறிகள் தொழிற்சாலைகளுக்கு முன்பாக நிறுத்தப்பட்டிருந் ததாகவும் இதனால் அனைத்துத் தோட்டங்களினதும் பல்வேறு செயற்பாடுகள் தடைப்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

எவ்வாறெனினும் 500 ரூபா சம்பள உயர்வு கிடைக்கும் வரை தோட்டத் தொழிலாளர்களின் ஒத்துழையாமைப் போராட்டம் தொடருமெனவும் பெருந்தோட்ட தொழிற்சங்க முக்கியஸ்தர்கள் தெரிவிக்கின்றனர்.

தோட்டத் தொழிலாளர்க ளின் சம்பள உயர்வு குறித்த பேச்சுவார்த்தை கடந்த 31 ஆம் திகதி இடம் பெற்ற தெனினும் தொழிற் சங்கங் களுக்கும் முதலாளிமார் சம்மேளனத்திற்கு மிடையில் இடம் பெற்ற இப்பேச்சுவார்த்தை தோல்வியிலேயே முடிந்தது.

மீண்டும் எதிர்வரும் 7 ஆம் திகதி பேச்சுவார்த்தை க்கு வருமாறு முதலாளி மார் சம்மேளனம் தொழிற் சங்கக் கூட்டுக் கமிட்டிக்கு அழைப்பு விடுத்துள்ளது. 7 ஆம் திகதி 500 ரூபா சம்பள உயர்வு வழங்குவது என்ற தீர்மானத்துடனேயே முதலாளிமார் சம்மேளனம் பேச்சுக்கு வரவேண்டும் என இ.தொ. கா. தெரிவித்தது.

யாழ்ப்பாணத்தில் 138 மில்.ரூபா செலவில் நீர்ப்பாசனத் திட்டம்

north-governor.jpgயாழ்.  மாவட்டத்திலுள்ள நீர்ப்பாசன திட்டங்களை வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் செயற்படுத்துவதற்கென 138 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளதாக வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி தெரிவித்தார். வழுக்கை ஆறு நீர்ப்பாசன திட்டத்தின் கீழ் ஆற்றின் பிரதான வாய்க்கால் கட்டுமான பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உப்பு நீரை வேறுபடுத்தும் நன்னீர் திட்டத்தின் கீழ் 11 திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. இதற்கு 28.66 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளது.  3.4 மில்லியன் ரூபா செலவில் யாழ். குடாநாட்டிலுள்ள சிறிய குளங்களின் புனரமைப்பு வேலைகள் மேற்கொள்ளப்பட வுள்ளன. என ஆளுநர் மேலும் தெரிவித்தார். 

சிறைகளை கண்காணிக்க புலனாய்வு பாதுகாப்புப் பிரிவு

_jail_.jpgசிறைச் சாலைகளுக்குள் இடம் பெறுவதாக கூற ப்படும் சட்ட விரோத செயற்பாடுகளை கட்டுப் படுத்தி, அதனை கண்காணிக்கும் பொருட்டு விசேட புலனாய்வு பாதுகாப்பு பிரிவு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இதன் பரீட்சார்த்த நடவடிக் கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த சிறை ச்சாலை ஆணையாளரும் ஊடகப் பேச்சாளரு மான கெனத் பெர்னாண்டோ, இந்த பிரிவுக்கு முழு அதிகாரங்கள் வழங்கப் பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். 45 சிறைச்சாலை அதிகாரிகள், ஊழியர்களைக் கொண்டு இந்தப் புலனாய்வு பாதுகாப்பு பிரிவு தமது செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்த அவர், இந்தப் பிரிவின் நடவடிக்கைகளை வெகு விரைவில் நாடளாவிய ரீதியில் அமுல் படுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் வி. ஆர். சில்வாவின் வழிகாட்டலில் ஆணையாளர்களான ஹப்பு ஆராய்ச்சி மற்றும் லக்ஷ்மன் சில்வா ஆகியோரின் தலைமையில் இந்த பரீட்சார்த்த நடவடிக்கைகள் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தற்போது கொழும்பிலுள்ள சிறைச்சாலைகளிலும் பரீட்சார்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தப் புலனாய்வு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு எந்தவொரு சிறைச்சாலைக்கும் திடீரென விஜயம் செய்யவும் சிறைக்கைதிகள் மற்றும் அதிகாரிகளை சோதனையிடவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த விசேட புலனாய்வுப் பாதுகாப்பு பிரிவை நாடளாவிய ரீதியில் நிறுவுவதற்கென ஆயிரம் சிறைச்சாலை ஊழியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தேவையான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

சிறைச்சாலைக்குள் பாதாள உலக கோஷ்டியினரின் செயற்பாடுகள் காணப்படுவதாகவும், சட்ட விரோத செயற்பாடுகள், கையடக்கத் தொலைபேசி மற்றும் போதைவஸ்துக்கள் கைமாறப்படுவதாகவும் குற்றஞ் சாட்டப்படுவதையடுத்தே இதனைக் கட்டுப்படுத்தும் நோக்குடனேயே இந்த பிரிவு நாடளாவிய ரீதியில் உருவாக்கப்படவுள்ளதுடன் தற்பொழுது இதன் பரீட்சார்த்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்தப் பிரிவின் பரீட்சார்த்த செயற்பாடுகள் வெற்றியளிக்கும் பட்சத்தில் நாடளாவிய ரீதியில் இந்தப்புலனாய்வுப் பாதுகாப்பு பிரிவு அமைக்கப்பட்டு அதன் செயற்பாடுகளை விஸ்தரித்த பின்னர் கண்டி, காலி, அநுராதபுரம், பொலன்னறுவை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலும் சேவையை முன்னெடுக்க முடியும் என்றும் கெனத் பெர்னாண்டோ மேலும் குறிப்பிட்டார்.

இந்தப் பிரிவின் செயற்பாடுகளின் மூலம் சிறைச்சாலைக்குள் இடம் பெறும் சட்ட விரோத செயற்பாடுகளை இலகுவாகக்கட்டுப்படுத்த முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இது குறித்து நீதி மற்றும் மறுசீரமைப்பு அமைச்சில் நேற்று மாலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் பிரதியமைச்சர் வீ. புத்திரசிகாமணி தெரிவிக்கையில், சிறைச்சாலையில்ஒழுங்கை கடைப்பிடிப்பதற்காக எதிர்காலத்தில் பல கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளோம்.

அண்மையில் கூட சிறைச்சாலைகளிலிருந்து 18 கையடக்கத் தொலைபேசிகளை கைப்பற்றியிருந்தோம். நியமிக்கப்பட்டுள்ள புலனாய்வு பாதுகாப்பு அதிகாரிகள் தமது கடமைகளை சரிவர முன்னெடுப்பார்களென்ற நம்பிக்கை உண்டு எனவும் தெரிவித்தார்.

செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட சிறைச்சாலை ஆணையாளர் மேஜர் ஜெனரல் வி.ஆர். சில்வா நாட்டில் தற்போது 30 ஆயிரம் சிறைக்கைதிகள் இருப்பதாகவும் அவர்களுள் 50 சதவீதமானவர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும்ஏனையோரில் 251 பேர் மரணதண்டனை விதிக்கப்பட்டவர்களெனவும் தெரிவித்தார். நாட்டில் 03 பிரதான சிறைச்சாலைகளும் 19 விளக்கமறியல்களும் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்காவில் 8 மாதங்களில் 84 வங்கிகள் மூடல்

us-flag.jpgஅமெரிக் காவில்  கடந்த 8 மாதங்களில்  84 வங்கிகள் மூடப்பட்டுள்ளன. பொருளாதார தேக்க நிலையின் தாக்கம் அமெரிக்காவை கடுமையாகத் தாக்கியுள்ளது. மிகப் பெரிய வங்கிகளே ஆட்டம் கண்டு மூடப்பட்டுள்ள வேளையில் சிறிய மற்றும் நடுத்தர வங்கிகள் மாதம்தோறும் மூடப்பட்டு வருகின்றன.
 
அஃபினிடி வங்கி,  மெயின்ஸ்டிரீட் வங்கி,  பிராட்ஃபோர்ட் வங்கி ஆகிய மூன்றும் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை மூடப்பட்டன.  இந்த ஆண்டில் கடந்த 8 மாதங்களில் 84 வங்கிகள் மூடப்பட்டன. இது கடந்த ஆண்டில் மூடப்பட்ட வங்கிகளின் எண்ணிக்கையை விட மூன்று மடங்கு அதிகம். கடந்த ஆண்டு இதே காலத்தில் 25 வங்கிக் கிளைகளே மூடப்பட்டன.
 
ஜூன் வரையிலான காலாண்டில் போதிய நிதி வசதியின்றி அவதிப்படுவதாக 416 வங்கிகள் தெரிவித்துள்ளதாக வங்கிகளைக் காப்பீடு செய்துள்ள ஃபெடரல் வைப்பீட்டுக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
 
பொருளாதார தேக்க நிலை மாறி மீட்சியடைந்து வருவதாக தகவல்கள் வெளியானபோதிலும்,  வேலையிழப்பு அதிகரித்துள்ளது. இதனால் கடனைத் திரும்பச் செலுத்தாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன்காரணமாக சிறிய நிதி நிறுவனங்கள்ää சிறிய வங்கிகள் போதிய நிதி வசதியின்றி மூடப்படுவதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜூலை மாதத்தில் மட்டும் மிகவும் அதிகபட்சமாக 24 வங்கிகள் மூடப்பட்டுள்ளன.

ஆங்கில மொழிப் பயிற்சி; இலங்கை – இந்தியா இன்று ஒப்பந்தம்

இலங்கை- இந்திய ஆங்கில மொழிப் பயிற்சி மத்திய நிலையமொன்றை நிறுவுவதற்கான உடன்படிக்கை கைச்சாத்து இன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.

மேற்படி உடன்படிக்கைச்சத்து நிகழ்வில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவும் கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்திய அரசாங்கத்தின் சார்பில் இந்திய உயர்ஸ்தானிகர் ஆலோக் பிரசாத் மற்றும் இந்திய மொழி ஆய்வு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் தலைமையில் துறை சார்ந்த முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்தது.

அரசாங்கம் இந்த ஆண்டை ஆங்கில மொழிப் பயிற்சி ஆண்டாக பிரகடனப்படுத்தியுள்ளதைத் தொடர்ந்து அதன் ஒரு அம்சமாகவே மேற்படி ஆங்கில மொழி பயிற்சி மத் திய நிலையம் நிறுவப்படவுள்ளது. உடன்படிக்கை கைச்சாத்தின் பின்னர் அது தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கப்படவுள்ளது.

பாகிஸ்தானில் தலிபான்கள் சரண்

taliban_gther.jpgபாகிஸ் தான் ராணுவத்தினரிடம் நூற்றுக்கும் அதிகமான தலிபான்கள் சரணடைந்துள்ளனர்.  ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்திய பின் ஆட்சியை இழந்த தலிபான்கள், பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் தஞ்சம் புகுந்தனர். பழங்குடி மக்கள் அதிகம் வசிக்கும் சுவாட் உள்ளிட்ட பகுதிகளை தலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டதால் அமெரிக்கா, பாகிஸ்தானை எச்சரித்தது.

இதையடுத்து, கடந்த மே மாதம் முதல் தலிபான்களை ஒடுக்கும் நடவடிக்கையில் பாகிஸ்தான் ஈடுபட்டு வருகிறது. இந்த சண்டையில் 2,000 பேர் கொல்லப்பட்டனர். இந் நிலையில்.  சுவாட் பகுதியில் தலிபான்களின் ஆதிக்கத்தை பாகிஸ்தான் ராணுவம் ஒடுக்கியுள்ளது.105 தலிபான் பயங்கரவாதிகள்,  ராணுவத்திடம் நேற்று சரணடைந்தனர். சரணடைந்தவர்கள் தங்களிடமிருந்த நவீன ஆயுதங்களை ராணுவ அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். தங்களுக்கு தண்டனை கொடுப்பது குறித்து நீதிமன்றம்  தான் முடிவு செய்ய வேண்டும் என சரணடைந்த தலிபான்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கால்வாயில் கிடந்த பொதி வெடித்து சிறுவன் பலி – இருவர் காயம்; அச்சுவேலியில் சம்பவம்

கால்வாய் ஒன்றில் கவனிப்பாரற்ற நிலையில் கிடந்த பொதியை எடுத்து விளையாட முற்பட்ட போது அந்த பொதி வெடித்ததில் சிறுவன் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் இரு சிறுவர்கள் காயமடைந்துள்ளனர். யாழ்ப்பாணம், அச்சுவேலி பிரதேசத்திலுள்ள இராணுவத்தின் 511 வது படைப்பிரிவின் விளையாட்டு மைதானத்தில் நேற்று முன்தினம் இந்தச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கர தெரிவித்தார்.

இந்தச்சம்பவத்தில் 11 வயது சிறுவன் கொல்லப்பட்டுள்ளதுடன், ஒன்பது மற்றும் ஏழுவயதுடைய இரு சிறுவர்கள் காயமடைந்துள்ளனர் என்று அவர் மேலும் தெரிவித்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:-

அச்சுவேலி பிரதேசத்திலுள்ள இராணுவத்தின் 511வது படைப் பிரிவினரின் விளையாட்டு மைதானத்தில் சிறுவர்கள் விளையாடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அந்த மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் குழுவொன்று அங்குள்ள கால்வாயில் கவனிப்பாரற்ற நிலையில் காணப்பட்ட பொதி ஒன்றை கையில் எடுத்து விளையாட முற்பட்டுள்ளனர். இதன் போது அந்த பொதியில் இருந்த கைக்குண்டு வெடித்துச் சிதறியுள்ளது. பொதியை கையில் வைத்திருந்த சிறுவன் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். காயமடைந்த இரு சிறுவர்களும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பிரிகேடியர் மேலும் தெரிவித்தார்.

சுதந்திரக் கட்சியின் தேசிய மாநாடு நவம்பர் 15இல் – அமைச்சர் நிமல் சிறிபால தெரிவிப்பு

nimalsiripaladasilva.jpgஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய மாநாடு எதிர்வரும் நவம்பர் மாதம் 15ஆம் திகதி கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ளதாக சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். தென் மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு கொழும்பு,  மகாவலி நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

இந்த மாநாட்டை இன்று நடத்துவதற்கே முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும் தென் மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு திகதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில் வெளிநாட்டு அரசியல் கட்சிகள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள சுதந்திரக் கட்சிக் கிளைகளின் பிரதிநிதிகள் அடங்கலாக சுமார் 100 பேர் கலந்துகொள்ளவுள்ளனர்.

நாடு முழுவதிலிமிருந்து சுமார் 5000 கட்சிப் பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ள இம்மாநாட்டில் கட்சி உறுப்பினர்களுக்கு விசேட அடையாள அட்டைகளும் வழங்கப்படவுள்ளன என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.