ஆஸ்தி ரேலியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று நடக்கிறது. 7 ஒரு நாள் போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.
டெஸ்ட் தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி அதை தொடர்ந்து பங்கேற்ற இரண்டு 20 ஓவர் கிரிக்கெட் போட்டியும் மழையால் நடைபெறாமல் போனதால் ஒரு நாள் தொடரை வென்று தரவரிசையில் தங்களது இடத்தை தக்கவைக்க போராடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
இந்த நிலையில் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 7 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் முதலாவது ஒரு நாள் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று பகல்-இரவு ஆட்டமாக நடைபெறுகிறது.
பாண்டிங்குக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருப்பதால் ஆஸ்திரேலிய அணி மைக்கேல் கிளார்க் தலைமையில் களம் இறங்குகிறது. ஆஷஸ் தொடரை இழந்ததால் அதற்கு பழிதீர்க்கும் முனைப்புடன் ஆஸ்திரேலிய வீரர்கள் தயாராகி வருகிறார்கள். ஆஷஸ் போட்டியில் வாய்ப்பு கிடைக்காத வேகப்பந்து வீச்சாளர் பிரெட்லீ, தனது இடத்தை உறுதிசெய்ய இதில் தனது முழுவேகத்தையும் காட்டுவார் என்று நம்பலாம்.
அதே சமயம் ஸ்டிராஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி ஆஷஸ் வெற்றி உற்சாகத்துடன் களம் காணுகிறது. காயத்தால் பிளின்டாப் ஆட முடியாமல் போனது அந்த அணிக்கு சற்று பின்னடைவு தான். நேற்று பயிற்சியில் ஈடுபட்டிருந்த அந்த அணியின் புதுமுக தொடக்க ஆட்டக்காரர் ஜோ டென்லிக்கு மூட்டில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் முதலாவது ஆட்டத்தில் ஆடமாட்டார் என்று தெரிகிறது.
இரு அணியும் இதுவரை 93 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் 52-ல் ஆஸ்திரேலியாவும், 37-ல் இங்கிலாந்தும் வெற்றி பெற்றிருந்தன. 2 ஆட்டம் `டை’ ஆனது. 2 போட்டியில் முடிவு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.