06

06

அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக முதலாம் கட்டப் பணி 2010 இல் பூர்த்தி

hambantota_harbour.jpgஅம்பாந் தோட்டை சர்வதேச துறைமுகத்தின் முதலாம் கட்டப்பணிகள் அடுத்த வருட இறுதியில் பூர்த்தி செய்யப்படவுள்ளன. முதற்கட்டத்தின் மூலம் 20 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் தொழில் வாய்ப்பு கிடைக்க உள்ளதாக ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக பணிகளுக்குப் பொறுப்பான பிரதம பொறியியலாளர் ஜானக குருகுலசூரிய தெரிவித்தார். ஹம்பாந்தோட்டை துறைமுக பணிகள் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

அம்பாந்தோட்டை சர்வதேச விமான நிலையத்தின் முதற்கட்டப் பணிகள் 50 வீதம் பூர்த்தியடைந்துள்ளன. முதலாம் கட்டப் பணிகள் 2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட்டதோடு 2011 ஜனவரியில் பூர்த்தி செய்ய திட்டமிடப்பட்டது. ஆனால் நிர்மாணப் பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்படுவதால் அடுத்த வருட இறுதியில் முதற்கட்டப் பணிகள் பூர்த்தியடையும். முதற் கட்டத்தின்போது 3 பெரிய கப்பல்களை துறைமுகத்தில் நிறுத்த முடியும். முதலாவது கப்பல் 2011 ஜனவரியில் நங்கூரமிடப்படும்.

கடலை மறித்து நிர்மாணிக்கப்பட்டு வரும் கல்வேலி பணிகளும் 90 வீதம் பூர்த்தியடைந்துள்ளன. 17 மீட்டர் ஆழத்துக்கு நிலத்தை தோண்டும் பணிகளும் 45 வீதம் நிறைவடைந்துள்ளன. நிர்வாகக் கட்டிடம் நிர்மாணிப்பதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முதலாம் சட்டத்தின்போது 600 மீட்டர் நீளமான இறங்குதுறையொன்றும் 310 மீட்டர் நீளமான இறங்குதுறையொன்றும் அமைக்கப்படும். 600 மீட்டர் நீள இறங்குதுறை நிர்மாணிக்கும் பணிகள் பெருமளவு பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

முதற்கட்டத்தின் மூலம் 5 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும் 15, 000 பேருக்கு மறைமுகமாகவும் தொழில் வாய்ப்பு கிடைக்கவுள்ளது.

மழை காரணமாக கடலில் ஆழத்துக்குத் தோண்டும் பணிகளும் சில நிர்மாணப் பணிகளும் சற்று பாதிக்கப்பட்டுள்ளபோதும் முதற்கட்டப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்படுகின்றன என்றார்.

கேரள சாப்பாட்டு போட்டி – தொண்டையில் பாண் சிக்கி இளைஞர் உயிரிழப்பு

கேரளாவில் நடைபெற்ற சாப்பாட்டுப் போட்டியில் பங்கேற்ற இளைஞர் ஒருவர் தொண்டையில் பாண் சிக்கி மூச்சுத் திணறி இறந்துள்ளார்.

ஓணம் பண்டிகையையொ ட்டி கேரளாவில் பல்வேறு அமைப்புகள் சார்பில் விளையாட்டு போட்டிகள் உட்பட பல்வேறு போட்டிகள் நடப்பது வழக்கம். கோழிக்கோடு கொடுவள்ளி பகுதியில் உள்ள ஓர் இளைஞர் அமைப்பு சார்பில் சாப்பாடு போட்டி நடத்தப்பட்டது.

இந்த போட்டியில், 2 நிமிடத்தில் அதிக அளவில் பாண் சாப்பிடுபவருக்கு ரூ. 1,000 பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த சசி (35) என்பவர் உட்பட 15 பேர் கலந்து கொண்டனர். போட்டியைக் காண அந்த பகுதியைச் சேர்ந்த ஏராளமானவர்கள் திரண்டிருந்தனர்.

போட்டியில் பங்கேற்ற இளைஞர்கள் வேக வேகமாக சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென சசியின் தொண்டையில் பாண் சிக்கியது. இதில் மூச்சு திணறிய அவர் மயங்கி விழுந்தார். அவரை கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் இறந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இது குறித்து பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.

கண்களிலிருந்து வடியும் ரத்தம் – தவிக்கும் யு.எஸ். சிறுவன்

05-inman.jpgஅமெரிக் காவைச் சேர்ந்த 15 வயதான கால்வினோ இன்மேன் என்ற சிறுவனின் கண்களிலிருந்து ரத்தம் வழிகிறது. இந்தக் கொடுமையிலிருந்து மீள வழி தெரியாமல் தவித்து வருகிறான் அந்த சிறுவன். கடந்த மே மாதம் முதல்தான் இந்த கொடுமையை சந்தித்து வருகிறான் இன்மேன். ஒரு மாலை நேரத்தில் முகம் பார்க்க கண்ணாடி முன் நின்றபோது கண்களிலிருந்து தாரை தாரையாக ரத்தம் வடியவே பீதியடைந்தான் இன்மேன்.

டென்னஸ்ஸி மாநிலம் ராக்வுட் நகரைச் சேர்ந்தவன் இன்மேன். தனது நிலை குறித்து அவன் கூறுகையில், எனக்கே என்னைப் பார்த்தால் பயமாக இருக்கிறது. சாகப் போகிறேனோ என்ற பீதி வருகிறது என்றான். இன்மேனின் தாயார் டேமி மைனாட் கூறுகையில், கண்களிலிருந்து கண்ணீர் போல ரத்தம் வடியத் தொடங்கவே அவனை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம். ஆனால் அங்கு போனதும் ரத்தம் வடிவது நின்று விட்டது. நாங்கள் என்ன சொல்கிறோம் என்பதை முதலில் டாக்டர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.

பின்னர் வீட்டிற்குத் திரும்பினோம். ஆனால் சில நாட்கள் கழித்து மீண்டும் ரத்தம் கொட்டவே மறுபடியும் மருத்துவமனை சென்றோம். ஆனால் அப்போதும் ரத்தம் நின்று விடவே டாக்டர்களிடம் நாங்கள் விளக்கியும் அவர்களுக்குப் புரியவில்லை. இப்படி இதுவரை எந்த நோயாளியும் எங்களிடம் வந்ததே இல்லை என்கிறார்கள் டாக்டர்கள்.

இருப்பினும் எனது மகனுக்கு எம்.ஆர்.ஐ, சிடி மற்றும் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டது. ஆனால் அதில் எல்லாமே நார்மல் என்றுதான் வருகிறது.  இப்போது எனது கவலையெல்லாம் எனது மகனின் துயரத்தை எப்படித் தீர்க்கப் போகிறேன் என்பதுதான் என்கிறார் வேதனையுடன்.

டென்னஸ்ஸி ஹேமில்டன் கண் மருத்துவ பல்கலைக்கழகத்தின் இயக்குநர் டாக்டர் பாரட் ஹெய்க் கூறுகையில், இந்தப் பிரச்சினைக்கு ஹீமோலேக்ரியா (haemolacria) என்று பெயர். அதீத மனத் துயரம், சோர்வு, தலைக் காயம் ஆகியவற்றை சந்திக்கும் நபர்களுக்கு இப்படிப்பட்ட பிரச்சினைகள் வருவது சாதாரணமானதுதான். ஆனால் இன்மேன் விவகாரத்தைப் பொறுத்தவரை இப்படி எதையும் அந்த சிறுவன் சந்திக்கவில்லை. அப்படி இருந்தும் கண்களிலிருந்து ரத்தம் கொட்டுவது புதிராக உள்ளது. மேலும் இந்த சிறிய வயதில் இப்படி ஒரு பிரச்சினை இன்மேனுக்கு வந்திருப்பது கவலைக்குரியதாக உள்ளது.

கடந்த 1992ம் ஆண்டு முதல் இப்படி இதுவரை 4 கேஸ்கள் மட்டுமே உலக அளவில் ரிப்போர்ட் ஆகியுள்ளதாம். இது மிக மிக அரிய பிரச்சினை என்பதால் இன்மேன் பல்வேறு வகையான சோதனைகளுக்கு உட்பட வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ரத்தம் தொடர்பான சிறப்பு நிபுணர்கள், கண், காது, மூக்குத், தொண்டை நிபுணர்கள் என பலரிடமும் அவன் ஆலோசனை பெற வேண்டும் என்பது அவர்களது கருத்து.

தற்போது ஹேமில்டன் கண் மருத்துவக் கழகத்தின் நிபுணரான டாக்டர் ஜேம்ஸ் பிளமிங், இன்மேனுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினையை சரி செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

ஆந்திர முதல்வர் நியமனத்தில் இழுபறி; ரெட்டியின் மகனுக்கு 148 பேர் ஆதரவு

ராஜசேகர ரெட்டியின் உடல் அடக்கம் முடிந்த கையோடு அங்கு தற்போது முதல்வர் பதவியைப் பிடிக்கும் முயற்சிகள் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளன. ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஆதரவாக 148 எம். எல். ஏக்கள் அணி திரண்டுள்ளனர்.

ஆனால் அவசரப்பட்டு அடுத்த முதல்வரைத் தீர்மானிக்க விரும்பாமல் நிதானமாக முடிவெடுக்க காங்கிரஸ் மேலிடம் திட்டமிட் டுள்ளது.

உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுப் பதை விட ஆந்திர நலனுக்கும், கட்சிக்கும் உகந்த முடிவை எடுக்க ஆர்வமாக உள்ளதாம் காங்கிரஸ் தலைமை. தற்போது ஆந்திர நிலையை கட்சி மேலிடம் உன் னிப்பாக கவனித்து வருவதாகவும் தெரிவிக் கப்படுகின்றது. இதன் காரணமாகவே ரோசய்யாவை உடனடியாக இடைக்கால முதல்வராக கட்சி மேலிடம் அறிவித்து அவரை உடனடியாக பதவியேற்கவும் செய்தது. எனவே நிதானமாக அடுத்த முதல்வரைத் தேர்ந்தெடுக்க முடியும் என்பது காங்கிரஸின் எண்ணம்.

2004ம் ஆண்டு காங்கிரஸ் மீண்டும் ஆந்திராவில் ஆட்சியைப் பிடிக்கக் காரணமே ராஜசேகர ரெட்டியின் அணுகுமுறைதான்.

அதுவரை பல்வேறு கோஷ்டிகளாக பிளவுபட்டுப் போயிருந்த காங்கிரஸை ஒன்றுபடுத்தி அனைவரையும் ஓரணியில் நிற்க வைத்தவர் ராஜசேகர ரெட்டி. ஒரே கட்சி, ஒரே கோஷ்டி என்ற அளவுக்கு காங்கிரஸை ஆந்திராவில் கட்டுக் கோப்பான கட்சியாக கடினப்பட்டு மாற்றி வைத்திருந்தார் ரெட்டி. இப்போது அவரது வாரிசைத் தேர்வு செய்யும் போது கட்சிக்குள் குழப்பமாகி, மறுபடியும் கட்சியில் பூசல்கள் வெடித்து விடாமல் இருக்க வேண்டும் என காங்கிரஸ் தலைமை யோசிக்கிறதாம்.

இருப்பினும், இப்போதைக்கு ஜெகன் மோகன் ரெட்டியின் கரம் தான் கட்சியில் ஓங்கியிருப்பதாக தெரிகிறது. அவரைத் தவிர வேறு யாரும் தெளிவான, வலுவான தலைவராக தெரியவில்லை. அதேசமயம், ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஆதரவாக தீவிரமாக செயல்படுபவர்கள் இளம் எம்.பிக்கள், எம். எல். ஏக்கள்தான். அவர்களில் பெரும்பாலானோர் ராஜசேகர ரெட்டியால் அரசியல் அங்கீகாரம் தரப்பட்டவர்கள்.

மற்றபடி மூத்த தலைவர்களோ அல்லது மூத்த எம். எல். ஏ. எம். பியோ யாரும் ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஆதரவாக இவ்வளவு தீவிரமாக இல்லை என்றும் கூறப்படுகிறது. இதன் மூலம் ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஆந்திர காங்கிரஸ் முழு ஆதரவுடன் இல்லை என்பதும் தெளிவாகியுள்ளது. தற்போது ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஆதரவாக 36 அமைச்சர்கள் உட்பட 148 எம். எல். ஏக்களின் ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது. இதைத் தெரிவித்து கட்சித் தலைமைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாம்.

தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தால் 40 கோடி ரூபா நட்டம் : அமைச்சர் ஜயரட்ன

pluckers.jpgதோட்டத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் வாரம் 40 கோடி ரூபா நட்டம் ஏற்படும் என பெருந்தோட்டத்துறை அமைச்சர் டி.எம். ஜயரட்ன தெரிவித்துள்ளார்.  500 ரூபா சம்பள உயர்வு கோரி தோட்டத் தொழிலாளர்கள் போராட்டங்களை ஆரம்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் 7ஆம் திகதி முதலாளிமார் சம்மேளனத்திற்கும், தொழிற்சங்கங்களுக்கும் இடையில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைகள் சுமுகமாக அமைய வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். இரு தரப்பினருக்கும் இடையிலான போராட்டம் நீடித்தால் அரசாங்கம் தலையீடு செய்ய நேரிடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாளை நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைகள் வெற்றியளிக்காவிட்டால் போராட்டம் முன்னெடுக்கப்படும் என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

15 பேரை திருமணம் செய்து ஏமாற்றிய நெல்லை பெண் கைது

திருநெல்வேலியில் 15 வாலிபர்களை ஏமாற்றி திருமணம் செய்து, 50 பவுன் நகைகளை கொள்ளையடித்த இளம் பெண்ணை போலீசார் கைது செய்தனர்.  திருநெல்வேலி மற்றும் தாழையுத்து பகுதிகளில் மீனா என்ற இளம்பெண் ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு அவர்களிடம் இருந்து நகை, பணத்தை பறித்து கொண்டு மாயமாகி விட்டார்.

மேலும் அவர் பல வீடுகளி்ல் வேலைக்கு சேர்ந்து உரி்மையாளர்களின் நம்பகத்தன்மையை பெற்று பிறகு அவர்கள் கண் அயரும் நேரத்தில் நகைகளை திருடி கொண்டு தலைமறைவாகியுள்ளார். இது தொடர்பாக அவர் மீது போலீஸில் 10 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதையடுத்து மீனாவை கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் குணசீலன், துணை கமிஷனர் அவினாஷ்குமார் ஆகியோர் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று விஎம் சத்திரம் பேருந்து நிலையத்தில் மீனா நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் விரைந்து சென்று மீனாவை கைது செய்தனர். பின்னர் அவரிடம் விசாரணை மேற்கொண்டனார். அப்போது மீனா, மேலும் பல அதிர்ச்சிகரமான தகவல்களை தெரிவித்துள்ளார்.

அவர் போலீஸாரிடம் கூறுகையில், இதுவரை 15 வாலிபர்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டுள்ளேன். அவர்களிடம் இருந்து நகைகளை திருடி விற்று ஆடம்பரமாக செலவு செய்து வாழ்ந்தேன். தற்போது பணம் காலியானதை தொடர்ந்து விஎம் சத்திரத்தில் ஒரு வீட்டில் வேலைக்கு சேர வந்தேன் என்றார்.

போலீஸார் அந்த பெண்ணிடம் இருந்து 15 பவுன் நகையை மீட்டனர். மேலும், 35 பவுன் நகைகளை விரைவில் மீட்க இருப்பதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

தடுப்புக்காவலில் உள்ள கனகரத்தினம் எம்.பி.யை, நேற்று என்.கே.ஸ்ரீகாந்தா பா.உ. பார்வையிட்டார்

குற்றப் புலனாய்வத் துறையினரால் அவசர கால சட்ட விதிகளின் கீழ் கைதாகி 6 வது மாடியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரத்தினத்தை, பாராளுமன்ற உறுப்பினர் என்.கே.ஸ்ரீகாந்தா நேற்று சென்று பார்வையிட்டு உரையாடினார்
 
தமது கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரத்தினத்தை சந்தித்து சுமார் 25 நிமிடங்கள் இயல்பாகவும் சுதந்திரமாகவும் பேச முடிந்ததாக இச் சந்திப்பு தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் என்.ஸ்ரீகாந்தா கூறுகின்றார்.

சந்திப்பையடுத்து, தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் கனகரத்தினம் தனது விடுதலையை எதிர்பார்த்திருப்பதாக என்.ஸ்ரீகாந்தா, குறிப்பிட்டுள்ளார். எனினும் நாளை திங்கட்கிழமை நடைபெறவுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதிக்குமிடையிலான சந்திப்பின் போது இவரது விவகாரம் தொடர்பான விடயததையும் பேசுவதற்கு தமது கட்சி உத்தேசித்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

சரத் பொன்சேகா முல்லைத்தீவு விஜயம்

பிரதம பாதுகாப்பு அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேகா வெள்ளிக்கிழமை முல்லைத்தீவு பிரதேசத்திற்கு பயணம் மேற்கொண்டு அங்குள்ள பாதுகாப்பு நிலைமைகளை ஆராய்ந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. அங்கு விஜயம் மேற்கொண்ட பிரதம பாதுகாப்பு அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேகாவை, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய, முல்லைத்தீவு பிரதேச படைத் தளபதி மேஜர் ஜெனரல் நந்தன உடவத்த ஆகியோர் வரவேற்றனர்.

அதைத் தொடர்ந்து சரத் பொன்சேகா படைவீரர்களினால் அணிவகுப்பு மரியாதை அளித்து கெளரவிக்கப்பட்டார்.

பின்னர் பிரதம பாதுகாப்பு அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேகா, இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜகத் ஜயசூரிய மற்றும் 59 வது டிவிசன் சிரேஷ்ட படை அதிகாரிகளுடன் முல்லைத்தீவு பிரதேசத்தில் போரின் பின்னரான பாதுகாப்பு நிலைமைகளையிட்டு கலந்துரையாடியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.