07

07

பிலிப்பைன்ஸில் பயணிகள் படகு மூழ்கியதில் 10 பேர் பலி 58 பேரைக் காணவில்லை!

ship7777.jpgபிலிப் பைன்ஸ் அருகே சுப்பர் பெர்ரி- 9 என்ற பயணிகள் படகு கடலில் மூழ்கியதில் அதில் பயணம் செய்த 968 பேரில் 58 பேரைக் காணவில்லை. 10 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன் 900 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60ஐத் தாண்டும் என அஞ்சப்படுகிறது.

சாண்டோஸ் பகுதியில் இருந்து இலாய்லோ நோக்கி சுப்பர் பெர்ரி பயணிகள் படகு புறப்பட்டது. பயணிகள் மற்றும்; ஊழியர்கள் உள்பட ஆயிரம் பேர் இந்தக்கப்பலில் பயணித்தனர். பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா அருகே ஷாம்போங்கா அருகே (மணிலாவில் இருந்து 860 கி. மீட்டர் தொலைவில்) கப்பல் திடீரென மூழ்க துவங்கியது.

அதிகாலை நேரம் படகு மூழ்க ஆரம்பித்தது. உடன் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து கடற்; படையினர்,  விமான படையினர், வர்த்தக கப்பல், மற்றும் மீனவர்கள் படகு உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

உயிருக்கு போராடியவர்கள் மீட்கப்பட்டு கரைக்கு கொண்டு வரப்பட்டனர். 900 பேர் மீட்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் இறந்த 10 உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளன. ஏனையயோர் கடலில் மூழ்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 

ship7777.jpg

மாத்தறை – அகங்கம ரயில் சேவைகள் பாதிப்பு

rail-070909.jpgருகுணு குமாரி ரயில், தண்டவாளத்தை விட்டு விலகிச் சென்றதையடுத்து மாத்தறை – அகங்கம இடையிலான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயிவே கட்டுப்பாட்டுப் பகுதி தெரிவித்துள்ளது

தென்கிழக்காசிய சுகாதார அமைச்சர்கள் மாநாடு இன்று நேபாளத்தில் ஆரம்பம்

nimalsiripaladasilva.jpgதென் கிழக்காசியப் பிராந்திய நாடுகளின் சுகாதார அமைச்சர்கள் கலந்துகொள்ளும் 27ஆவது மாநாடு இன்று நேபாளத்தின் கத்மாண்டு நகரில் ஆரம்பமாகவுள்ளது. இரண்டு நாட்களுக்கு நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக கடந்த வெள்ளிக்கிழமை அங்கு விஜயம் செய்த இலங்கையின் சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மாநாட்டில் விசேட உரையாற்றவுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை,  நேபாளத்தில் நாளை ஆரம்பமாகவுள்ள உலக சுகாதார ஸ்தாபனத்தின் தென்கிழக்காசியப் பிராந்தியக் குழுவின் 62ஆவது அமர்விலும் அமைச்சர் நிமல் சிறிபால பங்கேற்கவுள்ளார். இந்த இரு நிகழ்வுகளினதும் இணை அங்குரார்ப்பண வைபவம் கத்மாண்டு நகரிலுள்ள சோல்ட்டீ க்ரவுன் ப்ளாஸா ஹோட்டலில் இன்று நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

மீனவர்கள் மிகுந்த கவனத்துடன் செயற்படவேண்டும் – வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை

070909.jpgநாட்டில் தற்போது காற்றின் வேகம் சற்று அதிகரித்துள்ளதால்  கிழக்கு,  தென் கிழக்கு,  மற்றும் மன்னார் குடா கடற்பரப்புக்களில் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் மிகுந்த கவனத்துடன் செயற்படவேண்டுமென வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சீன கடற்பரப்பில் உருவாகியுள்ள சுறாவளி காரணமாகவே இலங்கையில் காற்றின் வேகம் அதிகரித்திருப்பதாக வானிலை அவதான நிலையத்தின் வானிலையாளர் சமிந்த டி சில்வா தெரிவித்தார். இந்த நாட்களில் இலங்கைக்கு தென்மேற்காக காற்று வீசுகின்றது. மணித்தியாலயத்திற்கு 40 – 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசுகின்ற காற்றின் வேகம்  சில சமயம் 60 – 70 கிலோ மீட்டர் வரையும் அதிகரிக்கக் கூடும்;.

அதனால் கிழக்கு,  தென் கிழக்கு மற்றும் மன்னார் குடாவில் மீன்பிடிப்பவர்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையோடு நடந்துகொள்ள வேண்டும். இந்த நிலைமை அடுத்துவரும் இரண்டொரு தினங்களுக்கு நீடிக்க முடியும் என மேலும் தெரிவித்தார்

ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையையும் மீறி சிறிலங்காவுக்கு ஆயுதங்கள் விற்றது செக் குடியரசு

சிறிலங்காவுக்கு ஆயுதங்களை விற்க வேண்டாம் என ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்திருந்தபோதும் செக் குடியரசு நான்காம் கட்ட ஈழப் போரின் முக்கிய காலப் பகுதியில் சிறிலங்காவுக்கு ஆயுதங்களை விநியோகம் செய்தது எனத் தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக ரி-55 ரக டாங்கிகள் நாற்பதை அது வழங்கியுள்ளது. செக் குடியரசைச் சேர்ந்த ஆயுத விற்பனை முகவரான மிச்சல் சிமாஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.

வெளிப்படையான சண்டை நடைபெறும் இடங்களுக்கு ஆயுதங்களை விற்பனை செய்யக்கூடாது என ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்துள்ளது. செக் குடியரசு ஒன்றியத்தின் உறுப்பு நாடாகையால் இந்தத் தடை அதற்கும் பொருந்தும். இதன் அடிப்படையில் சிறிலங்கா அரசுக்கும் அது ஆயுதங்களை விற்பனை செய்ய முடியாது.

ஆனாலும் இவற்றை எல்லாம் மீறி நான்காம் ஈழப் போர் கால கட்டத்தில் செக் குடியரசு சிறிலங்காவுக்கு வெளியே தெரியாமல் ஆயுதங்களை விற்பனை செய்தது என்பதை மிச்சல் சிமாஸ் உறுதிப்படுத்தினார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி நோர்வே மற்றும் சுவீடன் நாடுகள் சிறிலங்காவுக்கான செக் குடியரசின் ஆயுத விற்பனையைத் தடுக்க முயற்சித்தன எனவும் அவர் குற்றம் சாட்டினார்.  அதிகரித்து வந்த அழுத்தம் காரணமாக இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் சிறிலங்காவுக்கு ஆயுதங்களை விற்பதற்கான அனுமதிகள் எவையும் வழங்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

விடுதலைப் புலிகள் அமைப்புக்கு தமது நாடு ஒருபோதும் ஆயுதங்களை விற்பனை செய்ததில்லை எனக் கூறிய அவர், மியான்மர் (பர்மா) அல்லது வடகொரியா போன்ற இரண்டாம் தரப்புக்கள் மூலமாக கொள்வனவுக் கட்டளைகளைச் சமர்ப்பித்து அவர்கள் ஆயுதங்களைப் பெற்றிருக்கலாம் எனவும் தெளிவுபடுத்தினார்.

விடுதலைப் புலிகளிடம் இருந்த செக் தயாரிப்பான இரு சிலின் ரக வானூர்திகள் குறித்துக் கேட்டதற்கு, அதன் தொடர் இலக்கங்களை வைத்து தாம் மேற்கொண்ட விசாரணையில் அவை முன்னர் கனடாவைச் சேர்ந்த வானூர்தி செலுத்துனர் பயிற்சிப் பள்ளி ஒன்றிடம் இருந்தவை என்பதைக் கண்டறிந்துள்ளனர் என்றார்.

ஜனாதிபதிக்கும் பாதுகாப்பு செயலருக்கும் கெளரவ பட்டம் – கொழும்பு பல்கலை வழங்கியது

777mainpic.jpgஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குக் கொழும்பு பல்கலைக்கழகம் நேற்று கெளரவ சட்டக் கலாநிதி பட்டம் வழங்கி கெளரவித்தது. கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம் பெற்ற பட்டமளிப்பு நிகழ்வில் பல்கலைக்கழக வேந்தர் பேரருட்திரு ஒஸ்வோல்ட் கோமிஸ் ஆண்டகை ஜனாதிபதிக்கு இக் கெளரவ பட்டத்தை வழங்கி கெளரவித்தார்.

இந் நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவுக்கும் கெளரவ இலக்கியக் கலாநிதி பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்டது. பயங்கரவாதத்திலிருந்து நாட்டைப் பாதுகாத்து ஐக்கிய இலங்கையைக் கட்டியெழுப்புவதில் அர்ப்பணிப்புடனும் தூரதரிசனத்துடனும் செயற்பட்டமையைப் பாராட்டியே கொழும்பு பல்லைக்கழகம் இவர்களுக்கு இந்த கெளரவ கலாநிதிப் பட்டத்தை வழங்கிக் கெளரவித்தது.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நேற்றுப் பிற்பகல் பல்கலைக்கழக வேந்தர் பேரருட்திரு ஒஸ்வோல்ட் கோமிஸ் ஆண்டகையின் தலைமையில் நடைபெற்றது. சிரேஷ்ட அமைச்சர்கள், கல்விமான்கள், முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இந் நிகழ்வில் தாய்நாட்டுக்காக ஜனாதிபதி ஆற்றிய சேவை மற்றும் அவரது குடும்பத்தினர்களின் சேவையும் எடுத்துக் கூறப்பட்டதுடன் ஜனாதிபதியின் தூரதரிசனமும் சிறந்த தலைமைத்துவம் பற்றியும் பாராட்டப்பட்டது.

நேற்றைய இந் நிகழ்வில் மேலும் 20 பேர் தத்துவக் கலைமாணி மற்றும் முதுகலை மாணி பட்டங்களை ஜனாதிபதியிடமிருந்து பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

திருமலையிலிருந்து 880 மா மூடைகளுடன் கொழும்பு வந்த லொறி குருநாகலில் மாயம்

nimal_madiwaka.jpgதிரு கோணமலையிலிருந்து 880 மா மூடைகளை ஏற்றிக் கொண்டு கொழும்பு நோக்கி வந்து கொண்டிருந்த லொறியை குருநாகல் பிரதேசத்தில் வைத்து இனந்தெரியாத குழுவினர் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

கொள்ளையிடப்பட்ட மா மூடைகளின் பெறுமதி 18 இலட்சத்து 47 ஆயிரம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிமல் மெதிவக்க தெரிவித்தார்.

லொறியின் சாரதி கடுமையான தாக்குதல்களுக்கு உள்ளான நிலையில் மீரிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது :-

திருமலையிலிருந்து மா மூடைகளை ஏற்றி வந்துகொண்டிருந்த லொறியை குருநாகல், கதுருகஸ் சந்தியில் வைத்து இரவு 10.00 மணியளவில் வான் ஒன்றில் வந்த குழுவினர் வழிமறித்து சோதனைக்குட்படுத்தியுள்ளனர். சாரதியுடன் லொறியை எடுத்துச் சென்றவர்கள் சிறிது தூரம் சென்ற பின்னர் சாரதியை கடுமையாக தாக்கி கீழே வீசிவிட்டு லொறியை எடுத்துச் சென்றுள்ளனர்.

கந்தானை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான லொறியே இவ்வாறு மாயமாகியுள்ளது.இந்தச் சம்பவத்தில் காயமடைந்த சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மக்கா செல்ல 100 இலவச விசாக்கள்; சவூதி வழங்கியுள்ளது

ரமழான் மாத காலத்தில் உம்றா கடமையை நிறைவேற்றுவதற்கு மக்கா செல்வோருக்காக சவூதி அரேபிய அரசாங்கம் 100 விசாக்களை இலவசமாக வழங்கியுள்ளது. வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகமவின் வேண்டுகோளுக்கு அமையவே கொழும்பிலுள்ள சவூதி அரேபிய தூதரகம், உம்றா கடமைமை நிறைவேற்றச் செய்யும் 100 ஆண்கள் மற்றும் பெண்களுக்கான விசாக்களை வெளிவிவகார அமைச்சிடம் வழங்கியுள்ளது.

இந்த இலவச விஸாக்கள் இன்று லக்ஷ்மன் கதிர்காமர் கற்கை நிலையத்தில் வைத்து அமைச்சர் போகொல்லாகமவினால் தெரிவு செய்யப்பட்ட முஸ்லிம் யாத்திரிகர்களுக்கு வழங்கப்படும். முஸ்லிம்களுக்கு ரமழான் மாதத்தில் இலவச விசாக்களை வழங்கியமைக்காக அமைச்சர் போகொல்லாகம சவூதி அரேபிய அரசாங்கத்துக்கும் சவூதி அரேபியத் தூதுவர் ஜமாசுக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்ளும் அதேவேளை, இது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் சவூதி அரேபிய அரசாங்கம் வைத்துள்ள நம்பிக்கைக்கு சிறந்த எடுத்துக்காட்டு எனவும் கூறியுள்ளார்.

ரமழான் மாதத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் உம்றா கடமையை நிறைவேற்றுவதற்காக மக்கா செல்வது வழக்கம். பல்வேறு காரணங்களுக்காக சவூதி அரசாங்கம் இம்முறை உலக நாடுகளிலிருந்து உம்றா கடமைக்காக வரும் யாத்திரிகர்களின் எண்ணிக்கையினை குறைத்திருந்தது. இதனடிப்படையில் இலங்கையிலிருந்து செல்லும் யாத்திரிகர்களின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டிருந்தது. இதனைக் கேள்வியுற்ற அமைச்சர் போகொல்லாகம இது குறித்து விசேட கவனம் செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து சவூதி அரேபிய தூதுவர், அமைச்சர் கேட்டுக் கொண்டதற்கிணங்க முதற் தடவையாக இலவச விசாக்களை வழங்கவிருப்பதாக கூறினார். அமைச்சரினால் தெரிவு செய்யப்பட்டு பெயர் வழங்கப்பட்ட, முதல் தடவையாக உம்றா கடமையில் ஈடுபடுவதற்காக செல்லும் 100 பேருக்கே இந்த இலவச விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன.

இன்று புகழாரம் பாடுபவர்கள் நாளை அரசியல் அநாதைகளாகவும் அரசியல் கோமாளிகளாகவுமே மாறப் போகின்றனர் – ஜே.வி.பி.

777anura_kumara_dissanayake.jpgஆரம்பக் கொள்கைகளை மறந்து தமது சுய இலாபத்திற்காக அரசாங்கத்துடன் ஒட்டிக் கொண்டு புகழாரம் பாடுபவர்கள் உண்மையிலேயே பஸ்களில் ஏறி சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு பிச்சை எடுப்பவர்களுக்கு ஒப்பானவர்கள் என்று ஜே. வி. பி.யின் பாராளுமன்றக் குழுத் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். இன்று புகழாரம் பாடுபவர்கள் நாளை அரசியல் அநாதைகளாகவும் அரசியல் கோமாளிகளாகவுமே மாறப் போகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஜே.வி.பி.யின் விசேட செய்தியாளர் மாநாடு ஞாயிற்றுக்கிழமை பத்ரமுல்லையில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற போதே பாராளுமன்றக் குழுத் தலைவர் அநுரகுமார திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்

தலைவர் பிரபாகரனுக்கு சிகிச்சை வழங்கிய தாதி கைது – விமான நிலைய புலனாய்வுப் பிரிவினர்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு மருத்துவ சிகிச்சைகளை வழங்கிய தாதி அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  முல்லைத்தீவைச் சேர்ந்த பாலகுமாரன் சண்முகநாதன் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சிங்கப்பூருக்கு செல்வதற்காக பண்டாரநாயக்க விமான நிலையத்திற்கு சென்ற போது, விமான நிலைய புலனாய்வுப் பிரிவினரால் இவர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வவுனியா இடம்பெயர் முகாம் ஒன்றில் தஞ்சமடைந்திருந்த குறித்த நபர், ஒரு லட்ச ரூபா லஞ்சமாக வழங்கி அங்கிருந்து கொழும்புக்கு தப்பிச் சென்றதாக விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது.