09

09

பகிடிவதைக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை – அமைச்சர் விஸ்வ வர்ணபால சபையில் அறிவிப்பு

viswa-999.jpgஉயர் கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் 2015ம் வருடம் வரை உதவி ஒத்துழைப்புகளை வழங்க உலக வங்கி முன்வந்துள்ளதாக உயர் கல்வியமைச்சர் விஸ்வ வர்ணபால பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

தற்போது உயர் கல்வித்துறையில் 60ற்கு மேற்பட்ட கருத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதுடன் இதற்கென 10,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அத்துடன் பல்கலைக்கழகங்களிலிருந்து பகிடி வதைகளை முற்றாக ஒழிக்க உரிய நடவடிக்கைகளை எடுக்கவும் அதற்கெதிரான சட்ட நடவடிக்கைகளை கடுமையாக்கவும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று பல்கலைக்கழகங்கள் திருத்தச் சட்ட மூலத்தைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அதன் மீதான விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் தமதுரையில் மேலும் தெரிவிக்கையில்;

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் சேவை வயதெல்லையை 55 லிருந்து 57 ஆக அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வயதெல்லை பல நிபந்தனைகளுடன் அறுபதாகவும் நீடிக்கப்படலாம். அத்துடன் பல்கலைக்கழக அனுமதியை மேலும் அதிகரிப்பதற்கும் அடுத்த வருடம் முதல் 25,000 பேரை பல்கலைக்கழகங்களில் இணைத்துக்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் நடவடிக்கையை விரிவுபடுத்துவதுடன் கல்விசாரா ஊழியர்களுக்கு சேவை வாய்ப்பை நீடிப்பதற்காகவும் இந்தத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இலங்கை பல்கலைக்கழக நடைமுறையை உலக வங்கி பாராட்டியுள்ளது. உயர் கல்விக்காக அரசாங்கம் பெரும் வாய்ப்பை வழங்கியுள்ளதுடன் மேலும் 2015ம் ஆண்டு வரை அவ்வங்கி எமக்கு உதவ முன்வந்துள்ளது. இதன் மூலம் உயர் கல்வித்துறையில் பல முன்னேற்றமான மாற்றங்களை மேற்கொள்வதுடன் கட்டிடங்கள் ஆளணிகள் குறையையும் நிவர்த்தி செய்யத் திட்டமிட்டுள்ளோம்.

இருபதாயிரத்து எண்ணூற்று நாற்பத்தாறு மாணவர்கள் 2008ம் ஆண்டு பல்கலைக்கழகங்களுக்கு சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார்கள். அடுத்த ஆண்டில் 25 ஆயிரம் மாணவர்களை இணைத்துக்கொள்வதே எமது எதிர்பார்ப்பு. பாடத்திட்டங்களை நவீன மயப்படுத்துவதுடன் கடந்த 60 வருட பாரம்பரிய கற்கைகளை விடுத்து நவீன பாடத் திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளோம். 2006, 2007ம் ஆண்டுகளில் பல புதிய பாடங்களும் 2008ல் பல புதிய துறைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மாணவர்களின் நன்மை கருதியே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கல்விசார் அபிவிருத்தியைப் பொறுத்தவரை இரண்டு புதிய கல்வி பீடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இத்தகைய முன்னேற்றங்கள் மூலம் வெளிவாரிக் கற்கைகளை ஆரம்பித்து மேலும் பெருமளவு பட்டதாரிகளை உருவாக் கவுள்ளோம். தேசிய தகைமை அமைப்பொன்றை உருவாக் கவும் நடவடிக்கை எடுக்கப்படும். சில தொழிற்சாலைகள் கூட போலிப் பட்டங்களை வழங்கும் நிலை இன்றுள்ளது.

இந்நிலையை மாற்றி சட்டப்படியான தகைமை களை உறுதி செய்வதற்கு இவ்வமைப்பின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இந்திய நீதிமன்றங்களில் பகிடிவதையை மனித உரிமை துஷ்பிரயோகமாகத் தீர்ப்பளித்து தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளதை இங்கு நாம் குறிப்பிடவேண்டும். மாணவ ர்களில் தீவிரமான சிலர் அரசியல் பின்னணி யுடன் பகிடி வதைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவை நிறுத்தப்ப டும். அதற்காக கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள ப்படுமெனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

முரண்பாடுகள் பேச்சுவார்த்தைகளூடாக தீர்க்கப்படுமென்கிறார் ஜப்பான் ஜனநாயகக் கட்சியின் தலைவர்

japan-new-pri.jpgஅரசாங் கத்தை அமைப்ப தற்கான பேச்சுவார்த்தைகள் இன்னும் ஓரிரு தினங்களில் வெற்றிகரமாக முடிவடையு மென ஜப்பான் ஜனநாய கக் கட்சியின் தலைவர் யுகியோ ஹற்றோயாமா தெரிவித்தார்.  இவர் எதிர் வரும் 16 ஆம் திகதி பிரதமராகப் பதவியேற்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் தேர்தலில் வெற்றியீட்டிய ஜனநாயகக் கட்சி ஐம்பது வருடங்களின் பின் ஆட்சியைக் கைப்பற்றியது. அரசாங்கத்தை அமைப்பதற்காக இரண்டு கட்சிகளுடன் பேச்சுக்களை நடத்தி வரும் யுகியோ ஹற்றோயாமா அமைச்சரவை நியமனங்கள் பற்றியும் அக்கறை காட்டுகின்றார்.

வெளிநாட்டுக் கொள்கை பாதுகாப்பு போன்ற முக்கிய விடயங்களில் சோசியல் சமூகக் கட்சியும் மக்கள் புதிய கட்சியும் வேறு பட்ட நிலைப்பாட்டிலுள்ளன. இவ்விரண்டு கட்சிகளையும் சேர்த்தே புதிய அரசாங்கம் அமைக்கப்படவுள்ளது. பேச்சுவார்த்தைகள் முழுமையாக முடிவடையாததால் அமைச்சர்களின் நியமனங்களை ஒத்திவைக்கும்படி ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் அழுத்தம் கொடுத்துள்ளனர்.

சோசியல் சமூகக் கட்சி, மக்கள் புதிய கட்சியின் ஆதரவின்றி ஜப்பான் பாராளுமன்றத்தின் மேல்சபையை அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியாது. எனவே இவ்விரண்டு கட்சிகளின் கோரிக்கைகளையும் ஏற்க வேண்டிய நிலையில் பிரதான கட்சியான ஜனநாயகக் கட்சியுள்ளது. பாராளுமன்றத்தின் கீழ் சபையில் போதியளவு பெரு ம்பான்மை இக்கட்சிக்கு ள்ள போதும் மேல் சபை யில் இவ்விரண்டு சிறிய கட்சிகளின் ஆதரவும் தேவை ப்படுகின்றது.

சோமாலியக் கடற் கொள் ளையர்களைத் தோற்கடிக் கும் பணியில் ஈடுபட்டுள்ள இரண்டு ஜப்பான் கப்பல் களை திருப்பி அழைத்து அவற்றுக்குப் பதிலாக காவ ற்படகுகளை அனுப்புமாறும் ஆப்கானிலுள்ள அமெரிக்கப் படைகளுக்கு எரிபொருள் வழங்க இந்து சமுத்திரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கப்பலை 2010 ஜனவரியில் மீள அழைக்கும் படியும் அக்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

இவ்வொப்பந்தங்கள் அடுத்த ஆண்டு ஜனவரியில் முடிவடைவதால் இவற்றை மீண்டும் புதுப்பிக்கக் கூடாதென்றும் அக்கட்சிகள் வலியுறுத்தியுள்ளதுடன் இது குறித்து எழுத்து மூலம் உறுதிப்படுத்த வேண்டுமென் றும் நிபந்தனை விடுத்துள்ளன. இவை அனைத்தும் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்கப்பட்டு ஓரிரு நாட்களில் இணக்கம் காணப் படுமென பிரதமராகப் பதவி யேற்கவுள்ள யுகியோஹற் றோயாமா நம்பிக்கை தெரிவித்தார்.

ஜேம்ஸ் எல்டர் 21 ஆம் திகதிக்கு முன்வெளியேற வேண்டும் : அரசின் உத்தரவுக்கு பான் கீ மூன் கண்டனம்

banki-moon_elter.jpgஐக்கிய நாடுகள் சபையின் சிரேஷ்ட உயர் அதிகாரியும் யுனிசெப் அமைப்பின் இலங்கைக்கான பேச்சாளருமான ஜேம்ஸ் எல்டர் எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு முன்னர் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற அரசின் இறுதி முடிவுக்கு பான் கீ மூன் கண்டனம் தெரிவித்துள்ளார். இலங்கை அரசு இந்த இறுதி முடிவு குறித்துத் தனக்கு அறிவித்ததாக யுனிசெப் அமைப்பின் தென்னாசியாவுக்கான பேச்சாளர் சர கிறோவ், சி.என்.என். செய்திக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இலங்கையின் இந்த அறிவிப்பால் யுனிசெப் அமைப்பு ஏமாற்றமும் அதிருப்தியும் அடைந்துள்ளது என்று அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஆன் பெமெமன் தெரிவித்துள்ளார்.  “ஜேம்ஸ் எல்டர் வெளியிட்ட அறிக்கை புலிகளுக்கு ஆதரவாக அமைந்தது. அந்த அறிக்கை உண்மைக்குப் புறம்பானதாகவும் இருந்தது. ஜேம்ஸ் எல்டர் உண்மை நிலையை ஆராய்ந்து அறிக்கை வெளியிட்டிருக்கவில்லை” என அவர் மீது அரசு குற்றஞ்சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜேம்ஸ் எல்டரை வெளியேற்றும் இலங்கை அரசாங்கத்தின் உத்தரவு குறித்து ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் பான் கீ மூன் கண்டனம் தெரிவித்திருப்பதாக ஐ.நா. பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.  இந்த விடயம் குறித்து பான் கீ மூன் விரைவில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் தொடர்பு கொள்ளவுள்ளதாகவும் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் பாரிய சேவைகளை செய்து வரும் ஒரு நிறுவனம் என்ற அடிப்படையில் அதன் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டியது இலங்கை அரசாங்கத்தின் கடமை என பான் கீ மூன் குறிப்பிட்டுள்ளதாகவும் பேச்சாளர் தெரிவித்தார்.

செனல் 4 வீடியோ காட்சி : தூதுவர்கள் – உயர்ஸ்தானிகர்களுக்கு அமைச்சர் விளக்கம்

mainpic999.jpgசெனல்-4 வீடியோ காட்சிகள் குறித்த தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வு நேற்று இடர் முகாமைத்துவம் மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க தலைமையில் இடம்பெற்றது.

ஜனாதிபதி செயலகத்தில் நடந்த இந்நிகழ்வில் வெளிவிவகார செயலாளர் பாலித கோஹண, சட்டத்தரணி மொகான் பீரிஸ், சிரேஷ்ட விரிவுரையாளர் டாக்டர் சத்துர சில்வா மற்றும் உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர்.

மேற்படி வீடியோ காட்சி தொடர்பாக வெளிநாட்டுத் தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்களுக்கு அமைச்சர் விளக்கமளித்தார். இது குறித்து ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் மாநாடு ஒன்றையும் ஏற்கனவே அமைச்சர் நடத்தியிருந்தார்.

வீடியோக் காட்சிகள் தொடர்பாக ஜனாதிபதியின் விதப்புரைக்கமைய நான்கு கட்ட விசாரணைகள் நடத்தப்பட்டதாக அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்தார்.

வீடியோ காட்சிகள் பற்றி டாக்டர் சுனில் ஹே வித்தாரண ( இவர் உலகளாவிய ரீதியில் பிரசித்திபெற்ற வீடியோ பரிசோதகர் ), மொறட்டுவை பல்கலைக் கழகத்தின் தலைமை தொழில்நுட்ப விரிவுரையாளர் சத்துர டி சில்வா, சிரேஷ்ட சமிக்ஞைகள் அதிகாரி பிரசாத் சமரசிங்க, மேஜர் ஜெனரல் பி. ஏ. பண்டார ஆகியோர் விசாரணை நடத்தி அமைச்சரிடம் அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்திருந்தனர்.

அந்த அறிக்கை மூலம் கிடைத்த தகவலின்படி, இந்த வீடியோ காட்சிகள் ‘கேம் கோடர்’ (Camcoder) மூலமாகவே ஒளிப்பதிவு செய்யப்பட்டவை என்றும் கையடக்கத் தொலைபேசியில் அல்ல எனவும் போலியான ஒலிப்பதிவு (Audio) நவீன தொழில்நுட்பத்தின் மூலம் பதிவாக்கப்பட்டது எனவும் அமைச்சுத் தரப்பில் கூறப்பட்டது.

தம்பலகாமத்தில் குழந்தைகளுக்கான ஆடைத் தொழிற்சாலை

திரு கோணமலை மாவட்டம் தம்பலகாமத்தில் ‘ரை ஸ்டார்’ நிறுவனத்தின் 34ஆவது ஆடைத் தொழிற்சாலையைக் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் மற்றும் மாகாண ஆளுனர் ரியல் அட்மிரல் மொஹான் விஜயவிக்ரம ஆகியோர் நேற்று வைபவ ரீதியாக திறந்து வைத்தனர். இத்தொழிற்சாலையில் அப்பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் மாகாண அமைச்சர்களான எம்.எஸ்.உதுமாலெப்பை, மாகாண அமைச்சர் துரையப்பா நவரட்ணராஜா  மத்திய அமைச்சர்களான சுசந்த புஞ்சிநிலமே எஸ்.எம். சந்திரசேன, முதலீட்டு ஊக்குவிப்பு சபைத் தலைவர் தம்மிக்க பெரேரா, பாராளுமன்ற உறுப்பினரும் கூட்டறவு அபிவிருத்தி உதவி அமைச்சருமான நஜீப் ஏ மஜீத் மற்றும் ஜனாதிபதியின் புதல்வரும் ‘இளைஞர்களுக்கு நாளை’ அமைப்பின் தலைவருமான நாமல் ராஜபக்ஷ உட்பட மாகாண சபை உறுப்பினர்களும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இத்தொழிற்சாலையில் இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான ஆடைகள் தயாரிக்கப்படும்; முதலாவது கேள்வி ஒப்பந்தம் பிரித்தானியாவிலிருந்து கிடைத்துள்ளதாக ரை ஸ்டார்’ நிறுவனத்தின் தலைவரான குமார் தேவபுர தெரிவித்துள்ளார்.

செனல் 4 விசாரணைக்காக அரச உயரதிகாரி லண்டன் செல்ல ஏற்பாடு!

ExtraJudicialKillingsஇலங்கை இராணுவத்திற்கு அபகீர்த்தி  ஏற்படுத்தும் நோக்கில் பிரித்தானியாவின் செனல் 4 ஊடக நிறுவனம் அண்மையில் வெளியிட்ட வீடியோக் காட்சி தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் நோக்கில் உயரதிகாரி ஒருவர் லண்டனுக்கு விஜயம் செய்யவுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் சக்திகள் தொடர்பில் பிரித்தானியா அரசாங்கத்திற்கு குறித்த அதிகாரி தெளிவுபடுத்தவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் போலிப் பிரச்சாரங்களை தடுப்பதற்கு சர்வதேச பொலிஸாரின் ஒத்துழைப்பு பெற்றுக் கொள்ளப்பட உள்ளதாக தேசிய பாதுகாப்பு ஊடக  மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹலுகல்ல தெரிவித்துள்ளார்.

வீதி அபிவிருத்திக்கு ரூ.11,095 மில் செலவு: 7.513 கி.மீ. நீளமான பாதைகள் புனரமைப்பு

2004ம் ஆண்டு முதல் 2009 ஆகஸ்ட் 31ம் திகதி வரையான காலப் பகுதியில் மகநெகும திட்டத்தினூடாக 7,513 கிலோ மீட்டர் நீளமான பாதைகள் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன. இதற்கு 11,095 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. ஆனால் ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சியில் 10 கிலோ மீட்டர் நீளமான பாதை கூட அபிவிருத்தி செய்யப்பட்டது. கிடையாது என தகவல் ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா தெரிவித்தார்.

தென் மாகாணத்தில் 978 வீதி அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு இதற்கு 938 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாகக் கூறிய அமைச் சர், பாரிய நெடுஞ்சாலை அபிவிருத்தித் திட்டங்களுக்காக 148,734 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

தற்போதைய ஆட்சியில் வீதி அபிவிருத்திக்கு எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என ஐ.தே.க. தலைவர் காலியில் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள அமைச்சர் மேலும் கூறியுள்ளதாவது,

தென்பகுதி உட்பட நாடு பூராவும் பாரிய வீதி அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படுவது அனைவருக்கும் தெரிந்த உண்மையாகும். ஆனால் இந்த ஆட்சியில் வீதி அபிவிருத்திக்கு எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என ஐ.தே.க. தலைவர் கூறியிருப்பது கவலைக்குரிய விடயமாகும்.

ஐ.தே.க. தலைவரின் இத்தகைய கருத்துக்களினால் மக்களின் எண்ணத்தை மாற்ற முடியாது. நாட்டிலுள்ள சகல வீதிகளையும் அபிவிருத்தி செய்ய ஐ.தே.க. திட்டமிட்டுள்ளதாக ஐ.தே.க. தலைவர் கூறியுள்ள போதும் எந்த ஒரு திட்டமும் செயற்படுத்தப்பட்டது கிடையாது. ஒவ்வொரு தேர்தலிலும் அவர் தேர்தல் விஞ்ஞாபனமொன்றை வெளியிட்டு பல திட்டங்களை முன்வைப்பார். ஆனால் அவற்றில் எதுவும் நடைமுறைப்படுத்தப்படாது.

பல பாரிய நெடுஞ்சாலைத்திட்டங்களை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. கொழும்பு -மாத்தறை நெடுஞ்சாலை திட்டம் துரிதப்படுத்தப்பட்டுள்ளதோடு 2010ல் நிர்மாணப் பணிகள் பூர்த்தி செய்யப்படவுள்ளன. கொழும்பு-கண்டி நெடுஞ்சாலை மற்றும் கொழும்பு-கண்டி மாற்று நெடுஞ்சாலை என்பன ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்துக்கு 95,244 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளது.

இது தவிர மாகாணங்களுக்கான இணைப்பு வீதி இரத்தினபுரி- பலங்கொடை ஊடக பண்டாரவளை வரையான வீதி, பதுளை கண்டி மாற்று வீதி, ஒன்பது மாகாணங்களிலுமுள்ள வீதிகளை அபிவிருத்தி செய்தல் மற்றும் வீதி விஸ்தரிப்பு, சுனாமியினால் சேதமான வீதிகளை மறுசீரமைத்தல், கண்டி-யாழ்ப்பாணம் ஏ-9 வீதியை அபிவிருத்தி செய்தல் உட்பட வீதி அபிவிருத்திக்கென 148,734 மில்லியன் செலவிடப்படவுள்ளது.

இது தவிர மத்திய அரசினூடாகவும் மாகாண சபைகளினூடாகவும் பல வீதி அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மன்னார் பாலம், கடுகஸ்தொட்ட பாலம், மனம்பிடிய பாலம், கிண்ணியா பாலம், அருகம்பை பாலம் என்பன அமைக்கப்பட்டுள்ளதோடு கொழும்பு வாகன நெரிசலை தடுக்க நுகேகொடை, களனிய மேம்பாலங்கள் என்பனவும் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. தெஹிவளை மேம்பாலம் பூர்த்தியடையும் நிலையில் உள்ளது. 17 மேம்பாலங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

வடக்கு வசந்தம், கிழக்கு உதயம் திட்டங்களின் கீழ் வடக்கு கிழக்கு மாகாணங்களிலும் வீதிகள் அபிவிருத்தி செய்யப்படுகின்றன என்றார்.

வடக்கில் மின் விநியோக விஸ்தரிப்பு – ரூ. 25 மில்லியன் செலவில் 5 மின் திட்டங்கள் ஆரம்பம்

வட மாகாணத்தில் மின்சார விநியோகத்தை விஸ்தரிக்கும் வகையில் ஐந்து மின் திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதற்கு 25 மில்லியன் செலவிடப்படுமென மின்சார சபை அதிகாரிகள் தெரிவித்தனர். வவுனியா, கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்களில் இந்த திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்படும்.

வவுனியாவில் இரண்டும் கிளிநொச்சி மாவட்டத்தில் பரந்தன் மற்றும் பூநகரி ஆகிய இடங்களில் தலா ஒவ்வொரு திட்டங்களும், மன்னாரில் மற்றொரு திட்டமும் அடுத்த சில தினங்களில் ஆரம்பித்து வைக்கப்படும். வவுனியா, மன்னார் மாவட்டங்களுக்கு தேவையான மின்சாரம் தேசிய மின்கட்டமைப்பிலிருந்து வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

பூநகரி, பரந்தன் பிரதேசத்திற்கு அதிஉயர் அழுத்தம் கூடிய மின்சாரம் கிடைக்கும்வரை மின்பிறப்பாக்கிகள் மூலம் மின்சாரம் வழங்கப்படுமென அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாக். சுல்பிகார் கப்பலை பாதுகாப்பு செயலர் பார்வை

ships000.jpgநல் லெண்ண விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்திருந்த பாகிஸ்தான் கடற்படைக்குச் சொந்த மான ‘சுல்பிகார்’ கப்பலை பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ நேற்று முன்தினம் நேரில் சென்று பார்வையிட்டார்.

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள இந்தக் கப்பலை பார்வையிடச் சென்ற பாதுகாப்புச் செயலாளரை கப்பலின் கட்டளை அதிகாரி கப்டன் சாஹித் இல்யாஸ் வரவேற்றார்.

பாதுகாப்புச் செயலாளருடன் இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் திசரசமரசிங்க, கடற்படையின் பொது நடவடிக்கைகளுக்கான பணிப்பாளர் ரியர் அட்மிரல் எஸ். ஏ. எம். ஜே. பெரேரா, இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் கேர்ணல் சயில் குர்ராம் ஹஸ்ஸான் அலாம் உட்பட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கப்பலை பார்வையிட்ட பாதுகாப்புச் செயலாளருக்கு கடற்படைத் தளபதியும் கப்பலின் கட்டளை அதிகாரியும் அந்தக் கப்பலின் வசதிகள் மற்றும் பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து விரிவாக விளக்கமளித்துள்ளனர்.

14 அதிகாரிகள் மற்றும் 188 கடற் படைவீரர்களுடன் நான்கு நாள் நல்லெண்ண விஜயத்தை மேற்கொண்டு கடந்த வெள்ளிக்கிழமை இலங்கை வந்திருந்த இந்தக் கப்பல் தனது பயணத்தை முடித்துக் கொண்டு நேற்றுக் காலை கொழும்பு துறைமுகத்திலிருந்து கராச்சி நோக்கி புறப்பட்டுச் சென்றதாக கடற்படையின் பதில் பேச்சாளர் கொமாண்டர் அதுல செனரத் தெரிவித்தார்.

மட்டு. மாந்தீவு தொழுநோய் வைத்தியசாலையில் திடீர் ‘தீ’ – விமானப்படையால் நோயாளர்கள், ஊழியர்கள் பாதுகாப்பாக மீட்பு

mhantivu.jpgமட்டக் களப்பு மாந்தீவு தொழுநோய் வைத்தியசாலை அமைந்துள்ள பிரதேசத்தில் திடீரென நேற்று அதிகாலை ஏற்பட்ட பாரிய தீவிபத்தில் சிக்கிய நோயாளர்களையும் ஊழியர்களையும் விமானப்படையினர் பாதுகாப்பாக மீட்டெடுத்துள்ளனர்.
 
நேற்றுக்காலை 6.00 மணியளவில் பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளதாகவும் சுமார் ஐந்து மணித்தியால போராட்டத்திற்கு பின்னர் தீயை பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளதாகவும் விமானப் படைப் பேச்சாளர் விங் கொமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்தார்.

இந்தச் சம்பவத்தில் எவ்வித உயிரிழப்புக்களோ பாரிய சேதகங்களோ ஏற்படவில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார். விமானப்படையினர் துரிதமாக செயற்பட்டதை அடுத்து பாதுகாப்பாக மீட்டெடுக்கப்பட்ட 13 பேரும் மட்டக்களப்பு விமானப்படைத் தளத்தில் உள்ள வைத்தியசாலையில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.

இந்த தீவிபத்துச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது :- மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நிருவாகத்தின் கீழ் இயங்கி வரும் மாந்தீவு தொழு நோய் வைத்தியசாலை பிரதேசத்தில் அதிகாலை சுமார் 5.30 மணியளவில் திடீரென தீ பிடித்துள்ளது.

வைத்தியசாலையிலிருந்து சுமார் அரை கிலோ மீற்றர் தொலைவில் மட்டு. விமானப் படைத் தளம் அமைந்துள்ளதால் தகவல் அறிந்து அங்கு உடனடியாக விரைந்த அவர்கள் தீ ஏனைய பிரதேசங்களுக்குப் பரவுவதற்கு முன்னர் விமானப் படைக்குச் சொந்தமான பெல் 212 ஹெலிகொப்டரை பயன்படுத்தி தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து அங்கு சிக்குண்டுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை, மட்டு. விமானப் படை அதிகாரி விங்.கொமாண்டர் ரி. டி. ஏ. ஹெரிசன் தலைமையிலான குழுவினர் படகுகளை பயன்படுத்தி 13 பேரை உடனடியாக மீட்டெடுத்துள்ளனர்.

இந்த விபத்து சம்பவத்தில் வைத்தியசாலையின் கட்டடத்திற்கு சிறு சேதம் ஏற்பட்டுள்ளதெனச் சுட்டிக்காட்டிய அவர் தீ விபத்துக்கான காரணங்கள் எதுவும் இதுவரை தெரியவரவில்லை என்றும் சுட்டிக்காட்டினார். மாந்தீவு தொழு நோய் வைத்தியசாலையில் ஏற்பட்ட இத்தீவிபத்தினால் இவ்வைத்தியசாலைக்கு பாரிய சேதம் எதுவும் ஏற்படவில்லையென பணிப்பாளர் டாக்டர் முருகானந்தம் தெரிவித்தார்.

இவ்வைத்தியசாலையில் நேற்று ஏற்பட்ட தீவிபத்து தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக மட்டக்களப்பு விமானப் படை அதிகாரியொருவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் எம். முருகானந்தம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ ஊழியர்கள், பொலிஸ் உயரதிகாரிகள், வைத்தியசாலையின் அதிகாரிகள் இவ்வைத்தியசாலைக்கு சென்று சம்பவத்தை நேரில் பார்வையிட்டுள்ளனர்.

இவ்வைத்தியசாலையின் கட்டடத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லையெனவும் இவ்வைத்தியசாலையைச் சுற்றி படர்ந்திருந்த பற்றைகள், புற்கள் தீப்பிடித்து எரிந்துள்ளதாகவும் வைத்தியசாலைக்குள் பரவிய தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.

இங்கிருந்து நோயாளர்கள் விமானப் படை வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டு அங்கு வைக்கப்பட்டதாகவும் விமானப்படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

(மட்டு. மாந்தீவு தொழுநோய் வைத்தியசாலையில் ஏற்பட்ட தீயை விமானப்படை ஹெலிகொப்டர் அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதை படத்தில் காண்க}