12

12

மாலபேயில் உயிரி தொழில்நுட்ப மத்திய நிலையம்

நாட்டின் விவசாய உற்பத்திப் பொருட்களை கெட்டுப்போகாமல் நீண்டநாட்கள் வைத்துக்கொள்வதற்கான ஆய்வுகளை மேற்கொள்வதற்குத் தேவையான உயிரி தொழில்நுட்ப மத்திய நிலையம் ஒன்றை மாலபேயில் அமைப்பதற்கான ஆரம்பககட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நாட்டின் விவசாய உற்பத்திப் பொருட்களை கெட்டுப்போகாமல் நீண்டநாட்கள் வைத்துக்கொள்வதற்கான ஆய்வுகளை மேற்கொள்வதற்குத் தேவையான உயிரி தொழில்நுட்ப மத்திய நிலையம் ஒன்றை மாலபேயில் அமைப்பதற்கான ஆரம்பககட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மாலபே தகவல் தொழில்நுட்பப் பூங்காவில் அமைக்கப்படும் இதற்கு ஜப்பான் ஒத்துழைப்புக்கான திட்டத்தின் கீழ்; ஜப்பான் அரசாங்கம் 600 மில்லியன் ரூபாவை நிதியுதவியாக வழங்குகிறது. இதனை அமைப்பதற்கான காணியை நகர அபிவிருத்தி அதிகார சபை வழங்கியுள்ளது.

சகல வசதிகளையும் கொண்ட முழுமையான ஆய்வுகூடமாக அமைக்கப்படும் இதன் நிர்மானப்பணிகளை 2011 ஆம் ஆண்டில் பூர்த்தி செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. 

இதுவரை 19 ஆயிரத்து 360 பேர் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைப்பு – பசில் ராஜபக்ஷ

basil-raja.jpgவவுனியா இடைத்தங்கல் முகாம்களில் இருந்து யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 9920 பேரை அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகள் 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  வவுனியா நகரசபையின் கலாசார மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஜனாதிபதியின் ஆலோசகரும், வடக்கின் வசந்தம் திட்டத்தின் தலைவருமான பசில் ராஜபக்ஷ,  இடைத்தங்கல் முகாம்களிலிருந்து சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட இருப்பவர்களின் விபரங்கள் அடங்கிய பட்டியலை அந்தந்த மாவட்ட அரச உயரதிகாரிகளிடம் வைபவ ரீதியாகக் கையளித்தார்.

அங்கு உரையாற்றிய பசில் ராஜபக்ஷ,  “ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும் அரசாங்கத்திற்கும் இடம்பெயர்ந்து வந்துள்ள மக்களை இடைத்தங்கல் நிவாரண கிராமங்களிலேயே வைத்திருக்க வேண்டிய தேவை கிடையாது.  அவர்களை எவ்வளவு விரைவாக அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்ப முடியுமோ அவ்வளவு விரைவாக அவர்களை அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இதுவரை 19 ஆயிரத்து 360 பேர் அவர்களுடைய சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள்” எனத் தெரிவித்தார்.

இந்த வைபவத்தின்போது வெளியிடப்பட்ட ஒரு புள்ளிவிபரப் பட்டியலின்படி, 1474 குடும்பங்களைச் சேர்ந்த 4585 பேர் இரண்டு தொகுதிகளாக யாழ். மாவட்டத்தி்ற்கும் 49 குடும்பங்களைச் சேர்ந்த 159 பேர் அம்பாறை மாவட்டத்திற்கும், 520 குடும்பங்களைச் சேர்ந்த 1896 பேர் இரண்டு தொகுதிகளாக மட்டக்களப்பு மாவட்டத்திற்கும், 166 குடும்பங்களைச் சேர்ந்த 553 பேர் திருகோணமலை மாவட்டத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களைவிட, 751 பேர் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 7334 முதியவர்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அத்துடன், 121 இந்து மற்றும் கிறிஸ்தவ குருமார்களும், அரச அதிகாரிகளான 7 குடும்பங்களைச் சேர்ந்த 13 பேருமாக இதுவரையில் 19 ஆயிரத்து 360 பேர் முகாம்களில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கு மேலதிகமாக 9920 பேரை சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைகள் வெள்ளியன்று ஆரம்பமாகி, அடுத்தடுத்த தினங்களில் தொடர்ந்து இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கிளைக் காரியாலயங்கள்

110909passport.jpgகுடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கிளைக் காரியாலயங்கள் வடக்கு,  கிழக்கு மாகாணங்களில் விரைவில் அமைக்கப்படவுள்ளதாக திணைக்கள ஆணையாளர் பீ.பி. அபயகோன் தெரிவித்துள்ளார்.

நாட்டில் பயங்கரவாதம் முடிவடைந்துள்ள நிலையில் அரச நிருவாக சேவைகளை வடக்கு,  கிழக்குப் பகுதிகளுக்கு விஸ்தரிக்கும் நோக்குடனும் அப்பகுதி மக்கள் கடவுச் சீட்டுக்களைப் பெறுவதற்காக கொழும்புக்கு நீண்ட தூரம் பிரயாணம் செய்து சிரமப்படுவதைத் தவிர்க்கும் நோக்குடனுமேயே அங்கு இந்த கிளை அலுவலகங்கள் திறக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் பொதுமக்களுடன் தொடர்புடைய பல்வேறு அரசாங்க காரியாலயங்கள் வடக்கு, கிழக்கு பகுதிகளில் அமைக்கப்பட் வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

40 கோடியை இழந்தேன் : நடிகர் கமல் வேதனை

09-kamal-marmayogi.jpgபிரமிட் சாய்மீரா பட நிறுவனம் கமலஹாசனை வைத்து மர்மயோகி என்ற திரைப்படத்தை தயாரிக்க ஒப்பந்தம் செய்திருந்தது. பின்னர் இத்திட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில், மர்மயோகி படம் கைவிடப்பட்டதால், தாங்கள் வழங்கிய அட்வான்ஸ் தொகையான 10 கோடியே 90 லட்சத்தை வட்டியுடன் அளிக்க வேண்டும் என கமலஹாசனுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இந்நிலையில், செய்தியாள்ர்களிடம் பேசிய கமலஹாசன், மர்மயோகி திரைப்படம் முடியும் வரை வேறு படங்களில் நடிக்கக்‌கூடாது என்ற நிபந்தனையினால், தமக்கு 40 கோடி இழப்பு ‌ஏற்பட்டதாகவும், சட்டரீதியான நடவடிக்கையிலிருந்து தப்புவதற்காகவே, சாய்மீரா நிறுவனம் தன் மீது திட்டமிட்டு பொய்பிரசாரம் செய்வதாகவும் கூறியுள்ளார். மேலும் அந்நிறுவனம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்து வருவதாவும் தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாவட்டத்தில் எலிக்காய்ச்சலில் 17 பேர் மரணம்

ratss.jpgகொழும்பு மாவட்டத்தில் 17 பேர் எலி காய்ச்சல் காரணமாக இறந்துள்ளதாக மேல் மாகாண பிரதி விவசாய அத்தியட்சகர் ஐ.டப்ளியூ. மெண்டிஸ் கூறினார். கொழும்பு மாவட்ட விவசாயக் குழு கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எலிக்காய்ச்சலால் இது வரை மொத்தமாக 81 பேர் இறந்துள்ளனர். கடந்த 8 மாதங்களில் (ஜனவரி முதல் ஒகஸ்ட் வரை) கொழும்பு மாவட்டத்தில் மட்டும் 17 பேர் இறந்துள்ளனர்.

இவர்கள் 35ற்கும் 55 வயதிற்கும் இடைப்பட்ட விவசாயிகளென அவர் சுட்டிக்காட்டினார். விவசாயக் காணிகளில் காட்டு எலி அதிகம் காணப்படுவதால், விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடும் விவசாயிகள் முன்கூட்டியே சுகாதார பரிசோதகர்களின் அறிவுரைகளைப் பெற்றுக் கொள்ளுமாறு அத்தியட்சகர் மெண்டிஸ் மேலும் கேட்டுக் கொண்டார்.

‘வரலாறு தெரியாத ராகுல், அறியாமை ராகுல்’!

110909rahul_gandhi.jpgதேசிய நதிகளை இணைப்பது சுற்று சூழலுக்கு ஆபத்தானது என்று ராகுல் காந்தி கூறியிருப்பதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகேவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியனும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சென்னையில் நிருபர்களிடம் பேசிய காங்கிரஸ்  பொதுச் செயலாளர் ராகுல்காந்தியிடம் தேசிய நதிகளை இணைக்கும் திட்டம், பேப்பரில் மட்டும்தான் உள்ளது. இந்தத் திட்டத்தை செயல்படுத்த எந்த ஒரு முயற்சியும் எடுக்கப்படவில்லையே? என்று நிருபர்கள் கேட்டனர்.

அதற்கு அவர் பதிலளிக்கையில், தேசிய நதிகளை இணைப்பது என்பது மிகப் பெரிய அழிவை ஏற்படுத்தும் யோசனையாகும் என்பது எனது தனிப்பட்ட கருத்து. இது இந்த நாட்டின் சுற்றுப்புற சூழலை மிகவும் ஆபத்தான பாதைக்கு கொண்டு செல்லும் திட்டமாகும். இந்தத் திட்டத்தை தனிப்பட்ட முறையில் நான் ஆதரிக்க மாட்டேன். இயற்கை மிகவும் பலம் வாய்ந்தது. அதற்கு முரணான பெரிய காரியங்களை செயல்படுத்துவது நல்லதல்ல என்றார்.

ஆனால், உங்கள் கூட்டணியில் உள்ள முதல்வர் கருணாநிதி , இத் திட்டத்தை வலியுறுத்துகிறாரே என்று சுட்டிக் காட்டியபோது, இது எனது தனிப்பட்ட கருத்து என்று பதிலளித்தார் ராகுல். மேலும் நீர்ப்பாசனத்துக்காக உள்ளூர் நதிகளை இணைப்பது தவறல்ல. ஆனால் தேசிய அளவில் பெரிய நதிகளை இணைப்பது ஆபத்தானது என்றார்.

ராகுலின் இந்தக் கருத்துக்கு தா.பாண்டியன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் இன்று நிருபர்களிடம் பேசிய அவர், தேசிய நதிகளை இணைப்பது மிக அவசியமானது. பல நிபுணர்களும் ஆய்வு செய்து தான் தேசிய நதிகளை இணைக்கலாம் என்று கூறியுள்ளனர். நதிகள் இணைப்பு பல நாடுகளிலும் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் ராகுல் காந்தி அறியாமையால் பேசுகிறார் என்றார்.

வரலாறு தெரியாத ராகுல்-வை‌கோ:

ராகுலின் பேச்சு மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் கண்டனம்  தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ,
நதி நீர் இணைப்புத் திட்டம் என்பது நேரு காலத்திலேயே துவங்கப்பட்டது; முன்னாள் பிரதமர் இந்திரா காலத்திலும் இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. வரலாறு தெரியாமல் பேசும் ராகுலின் பேச்சு வேடிக்கையாக உள்ளது. இலங்கை தமிழர்களை காக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்திருப்பதாக ராகுல் கூறியது முற்றிலும் தவறான தகவல் என்றார்.

செமென்யா சர்ச்சை கையாளப்படும் விதம் கவலையளிக்கிறது: தென்னாப்பிரிக்க அமைச்சர்

caster_semenya_testosterona.jpgதென்னா பிரிக்க ஓட்டப் பந்தய வீரங்கனையான காஸ்டர் செமென்யா சூழ்ந்துள்ள அவரது பாலினம் குறித்த சர்ச்சை, அருவருக்கத்தக்க வகையிலும் தார்மீகமற்ற முறையிலும் கையாளப்பட்டுள்ளது என்று தென்னாபிரிக்க விளையாட்டுத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

தடகள சம்மேளனங்களின் சர்வதேச அமைப்பின் உத்தரவின் பேரில் நடத்தப்பட்ட சோதனைகள், பெர்லின் சர்வதேச தடகளப் போட்டிகளில் தங்கம் வென்ற செமென்யாவின் உடலுக்குள் ஆண் விரைகள் இருப்பதையும், அவருக்கு சூலகம் இல்லாதிருப்பதையும் காண்பிப்பதாக ஆஸ்திரேலிய ஊடகங்களில் வெளியான செய்திகள் கூறுகின்றன.  ஆனால், இது தொடர்பாக தென்னாபிரிக்காவுக்கு எந்தவிதமான தகவலும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை என்று தென்னாபிரிக்க அமைச்சர் மக்கென்கெஸி கூறியுள்ளார்.

ஒத்துழையாமை போராட்டம் தீவிரம் நேற்றைய பேச்சும் தோல்வியில் முடிவு

080909teawomen.jpgதோட்டத் தொழிலாளர்களின் ஒத்துழையாமைப் போராட்டம் பத்தாவது நாளாக நேற்றும் தொடர்ந்தது. பெருந்தோட்டப் பகுதிகளில் ஒத்துழையாமைப் போராட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சில இடங்களில் பெண்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகவும், சில இடங்களில் கூட்டுப்பிரார்த்தனைகளும், பூஜை வழிபாடுகளும் நடைபெற்றதாகவும் எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

இதனிடையே தோட்டத் தொழிலாளர்களின் ஒரு நாள் சம்பளத்தை 500 ரூபாவாக அதிகரிப்பு தொடர்பாக முதலாளிமார் சம்மேளனத்திற்கும் தொழிற்சங்கக் கூட்டமைப்புக்கும் இடையே நேற்று முன்தினம் நடைபெற்ற பேச்சுவார்த்தை எதுவித இணக்கப்பாடும் எட்டாத நிலையில் முடிவடைந்தது. இந்நிலையில், எட்டாவது தடவையாக நேற்று முற்பகல் 11.00 மணிக்கு ஆரம்பமாக இருந்த பேச்சுவார்த்தை மாலை 3.30 மணிக்கே ஆரம்பமானதாகவும் பேச்சுவார்த்தை தொடர்வதாகவும் பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.

பெருந்தோட்டப் பகுதிகளில் தொழிலாளர்களின் ஒத்துழையாமைப் போராட்டம் மிகவும் அமைதியான முறையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தொழிலாளர்கள் இப்போராட்டத்திற்கு பூரண ஒத்துழைப்பை வழங்கி வருவதாகவும், போராட்டம் வெற்றிபெற வேண்டுமென கோயில்களில் பிரார்த்தனைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக முதலாளிமார் சம்மேளனத்திற்கும் தொழிற்சங்கக் கூட்டமைப்புக்கும் இடையே இரண்டு வருடங்களுக்கு ஒரு தடவை செய்து கொள்ளப்படுகிறது. தொழிலாளர்களின் சம்பளம் உட்பட அவர்களின் சேமநலன்கள் தொடர்பாக செய்து கொள்ளப்படும் இவ் ஒப்பந்தம் புதுப்பிக்கப்படுவதுடன் சம்பள உயர்வும் வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த மார்ச் மாதத்துடன் காலாவதியான இந்த கூட்டு ஒப்பந்தத்தை புதுப்பிக்கவும் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வைப் பெற்றுக்கொடுக்கவும் முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சுவார்த்தையை ஆரம்பித்தோம். ஆரம்ப கட்டப் பேச்சுகளில் அவர்கள் முதலாம் ஆண்டில் 330 ரூபாவும், இரண்டாம் ஆண்டில் 360 ரூபாவையும் தருவதாகத் தெரிவித்தனர். எனினும் எமது கோரிக்கைக்கு முதலாளிமார் சம்மேளனம் இணங்காமல் இருப்பதால் ஒத்துழையாமை போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்து வருவதாக இ. தே. தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் கே. வேலாயுதம் தெரிவித்தார்.

ஹிட்லரின் பாலியல் நடவடிக்கையை சித்திரிக்கும் எயிட்ஸ் விளம்பரத்தால் சர்ச்சை

aids-ad.jpgசர்வாதி காரி ஹிட்லர் பெண் ஒருவருடன் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை சித்திரிக்கும் புதிய ஜேர்மனிய எயிட்ஸ் விளம்பரம் ஒன்று, ஐரோப்பா எங்கும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் மேற்படி விளம்பரமானது ஜோசப் ஸ்டாலின், சதாம் ஹுசைன் ஆகியோர் பாலியல் நடவடிக்கையில் ஈடுபடுவதை சித்திரிக்கும் காட்சிகளையும் உள்ளடக்கியுள்ளது.

இந் நிலையில் இன ரீதியான வெறுப்புணர்வை பிரதிபலிக்கும் இந்த விளம்பரத்துக்கு ஐரோப்பா எங்குமுள்ள ‘எயிட்ஸ்’ விழிப்புணர்வு தொண்டர் ஸ்தாபனங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ‘எயிட்ஸ் என்பது ஒரு மக்கள் கொலையாளி’ என்ற தலைப்பில் ஆங்கிலம் ஜேர்மன், மற்றும் ஸ்பானிய மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த விளம்பரம், எதிர்வரும் வாரம் தொலைக்காட்சிகளில் காண்பிக்கப்படவுள்ளது.

இந்த விளம்பரமானது எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உணர்வுகளை அலட்சியப்படுத்துவதாக உள்ளதாகவும் தமக்கு எயிட்ஸ் நோய் உள்ளதா என பரிசோதிப்பதற்கு வெட்கப்பட்டு பின்வாங்கும் நிலையை மக்கள் மத்தியில் தோற்றுவிப்பதாக உள்ளதாகவும் பிரித்தானியாவை அடிப்படையாக கொண்டு செயற்பட்டு வரும் எயிட்ஸ் விழிப்புணர்வு தொண்டர் ஸ்தாபனமான ‘ரெரன்ஸ் ஹைக்கின் டிரஸ்ட்’ குற்றஞ்சாட்டியுள்ளது.

இது தொடர்பில் மேற்படி விளம்பரத்தை தயாரித்த டாஸ் கொமிட்டி முகவர் நிலையத்தின் ஆக்க பணிப்பாளர் டிர்க் சில்ஸ் விபரிக்கையில், “இந்த விளம்பரமானது மக்களை அதிர்ச்சியடையச் செய்து ‘எயிட்ஸ் எச்சரிக்கை’ தொடர்பில் அவர்களது கவனத்தைத் திசை திருப்புவதை நோக்காகக் கொண்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட குடும்பமே மன்னித்துள்ள நிலையில், தன்னை விடுதலை செய்யக் கோரி நளினி மனு

nalini-111.jpgராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 18 வருடங்களாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் நளினி,  பாதிக்கப்பட்ட குடும்பமே மன்னித்துள்ள நிலையில், தன்னை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி சென்னை உயர்நீதிமன்றில் மனு தாக்கல் செய்துள்ளார். நளினி தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளேன். கடந்த 18 வருடமாக நான் சிறையில் உள்ளேன்.

இதற்கிடையே 14 ஆண்டுகள் முடிந்த பிறகு ஆயுள் தண்டனை கைதியான என்னை விடுதலை செய்யவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றில்  வழக்கு தொடர்ந்தேன். ஆனால் எனது விடுதலை குறித்து மறு ஆய்வு செய்யும்படி ஆலோசனை வாரியத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் ஆயுள் கைதிகளுக்கான ஆலோசனை வாரியத்தை மறுசீரமைப்பு செய்யும்படி உத்தரவிட்டது. இந்த உத்தரவு பிறப்பித்து ஒரு வருடமாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. என்னை விடுதலை செய்யவும் இல்லை. நான் ஏற்கனவே சோனியாகாந்திக்கு இது குறித்து கோரிக்கை மனு அனுப்பியுள்ளேன்.

இதற்கிடையே ராஜீவ்காந்தியின் மகள் பிரியங்கா என்னை வேலூர் சிறையில் நேரில் சந்தித்தார். அப்போது நடந்த சம்பவங்களை மறந்து என்னை மன்னித்து விட்டதாக கூறினார். பாதிக்கப்பட்ட குடும்பமே என்னை மன்னித்துள்ள நிலையில் விடுதலை செய்ய மறுக்கின்றனர்.  43 வயதான எனக்கு 18 ஆண்டுகள் சிறை வாழ்க்கை கழிந்து விட்டது. எனவே ஆலோசனை வாரியம் நியமிக்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை அமுல் படுத்த வேண்டும். என்னை முன் கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று நளினி தனது மனுவில் கூறியுள்ளார்.

இந்த மனு மீதான விசாரணை எதிர்வரும் 14 ம் திகதி திங்கட்கிழமை நடைபெறவுள்ளது