12

12

ரணிலின் தலைமையில் எதிர்க்கட்சி கூட்டமைப்பு: மங்கள சமரவீர

mangala2222.jpgஎதிர்க் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் எதிர்வரும் ஒரு மாதத்திற்குள் எதிர்க்கட்சி கூட்டமைப்பு அமைக்கப்படவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மக்கள் பிரிவு ஏற்பாட்டாளர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.  இந்த கூட்டமைப்பே அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய அரசாங்கத்தை தோற்கடிக்கும் நோக்கிலேயே இந்த கூட்டமைப்பு உருவாக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஜே வி பி இந்த கூட்டமைப்புக்குள் இணைத்துக்கொள்ளப்படமாட்டாது என அவர் தெரிவித்துள்ளார். இதே மங்கள சமரவீர 2000 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் ஜனாதிபதி சந்திரிகாவுடன் ஜே.வி.பி கூட்டு சேர்வதற்கு முன்னிலை வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  

சி.என்.என்., அல் ஜசீரா, பி.பி.சி. ஊடகவியலாளர்கள் புலிகளிடம் பணம் பெற்றுள்ளனர்: அமைச்சர் மஹிந்த அமரவீர

26parliament.jpgசனல் 4 தொலைக்காட்சி புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டதுடன் சீ.என்.என்., பி.பி. சி. மற்றும் அல் ஜசீரா ஊடகங்களின் ஊடகவியலாளர்கள் புலிகளிடமிருந்து பணம் பெற்றுள்ளமை இன்று வெளியாகி இருக்கின்றது என்று அமைச்சர் மஹிந்த அமரவீர நேற்று சபையில் தெவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை கொண்டு வரப்பட்ட “”சனல் 4” தொலைக்காட்சி விவகாரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை வழிமொழிந்து உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெவித்தார்.

அவர் இங்கு மேலும் கூறுகையில், “”சனல் 4” வீடியோ காட்சி தொடர்பிலான அனைத்து கட்ட நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக குரல் கொடுத்திருக்கும் அந்தத் தொலைக்காட்சியில் வெளிப்படுத்தப்பட்ட காட்சிகள் உண்மையற்றதும் போலித் தயாரிப்புகளால் ஆனதுமாகும்.

பயங்கரவாதத்தை முறியடிக்கும் வகையில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரை தடுப்பதற்கும் அதன் மூலம் பிரபாகரனை பாதுகாப்பதற்கும் சர்வதேசம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. தற்போது பயங்கரவாதம் முறியடிக்கப்பட்டுள்ள நிலையில் இம்மாதியான போலித் தயாரிப்புகளை வெளிப்படுத்தி அரசுக்கு களங்கத்தை விளைவிக்க முற்பட்டிருக்கின்றது. இது உண்மைக்குப் புறம்பானது என்பதை நிரூபித்துக் காட்டிய பின்னரும் அதன் பொறுப்பை குறித்த நிறுவனம் ஏற்க மறுக்கின்றது.

குறித்த வீடியோ காட்சி “”சனல் 4” நிறுவனத்துக்கு கிடைக்கப் பெற்றதாலேயே ஒளிபரப்பியதாக அந்த நிறுவனம் கூறுகின்றது. ஆனால், அது எங்கிருந்து கிடைக்கப் பெற்றது என்ற தகவலை வெளியிட மறுக்கின்றது.  குறிப்பிட்ட வீடியோ காட்சியில் சுடப்படுபவர் சிங்களத்தில் பேசுகின்ற அதேவேளை துப்பாக்கிதாரியாக சித்தரிக்கப்பட்டிருப்பவர் தமிழில் பேசுகிறார். இது போன்ற பல்வேறு குழப்பங்கள் அதில் அடங்கியுள்ளன. இந்தக் காட்சி பொய்யென நிரூபிக்கப்பட்டதன் பின்னர் அந் நிறுவனத்தின் நம்பிக்கை இழக்கப்பட்டுள்ளது.

“”சனல் 4” இன் முயற்சியானது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் முப்படைத் தளபதிகளும் யுத்தக் குற்றவாளிகள் என்று சித்தரிப்பதற்கானதாகும் என்றார்.

மாயாவதி சிலைகள்: கட்டுமானப் பணிகளை நிறுத்த இந்திய உச்சநீதிமன்றம் உத்தரவு

120909mayawatistatue.jpgஇந்தி யாவின் உத்திரப் பிரதேச மாநில முதல்வர் மாயாவதி மற்றும் அவருடைய முன்னோடிகளாக கருதப்படும் தாழ்த்தப்பட்ட மக்களின் நலனுக்காக போராடிய தலைவர்களின் சிலைகளை அமைக்கும் பணியை மாநில அரசாங்கம் நிறுத்த வேண்டுமென இந்தியாவின் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிலைகள் அமைக்கப்பட்டுவரும் நினைவகங்களில் கட்டிடப் பணிகள் இன்று வெள்ளிக்கிழமை மாலையோடு நிறுத்தப்பட வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்தது.

கட்டிடப்பணி நிறுத்தப்படும் என்று கடந்த செவ்வாய்க்கிழமை அன்று மாநில அரசாங்கம் உத்திரவாதம் வழங்கியிருந்தும் பணி நிறுத்தப்பட்டிருக்கவில்லை என்று நீதிமன்றம் தெரிவித்திருந்தது. தலித் சமூகத்தை சேர்ந்தவரான முதல்வர் மாயாவதி, தற்பெருமைக்காக அளவுக்கதிகமாக செலவுசெய்து சிலைகளை அமைக்கிறார் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.

பிரிட்டிஷ் விசா வழங்கலில் அரசியல் தலையீடு எதுவும் கிடையாது- தூதரகம்

110909passport.jpgவிசா விண்ணப்பங்களை கையாள்வதில் அரசியல் பாரபட்சம் காண்பிக்கப்படுவதாக அண்மையில் பத்திரிகைகளில் வெளியான செய்திகளுக்கு பதிலளிக்கு முகமாக பிரிட்டிஷ் பதில் உயர்ஸ்தானிகர் மார்க் கூசிங் பத்திரிகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த அறிக்கையில் எந்தவொரு சம்பவம் குறித்தோ அரசியல் பாரபட்ச குற்றச்சாட்டுபற்றியோ நேரடியாக எதுவும் குறிப்பிடப்படாத போதிலும், பதவியிலிருந்து விலகும் வெளிவிவகாரச் செயலாளர் கலாநிதி பாலித கோஹனவுக்கு கொழும்பிலுள்ள பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகராலயம் விசா வழங்க மறுத்துவிட்டது என்ற செய்தி வெளியான மறுநாளே இந்த பத்திரிகை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

எங்கள் விசா வழங்கல் நடைமுறைகளில் பாரபட்சம் காண்பிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் எதுவித ஆதாரமும் அற்றவை. தனிப்பட்ட விசா விண்ணப்பங்கள் குறித்து நாங்கள் கருத்துத் தெரிவிப்பதில்லை. ஆனால், பல விண்ணப்பங்கள் குறித்து வெளியான விபரங்கள் முற்றுமுழுதாகத் தவறானவை. இலங்கையிலிருந்து வருவோரை பிரிட்டன் வரவேற்கிறது. ஒரு மாதத்தில் 1,000 க்கும் அதிகமான இலங்கையர்கள் பிரிட்டனுக்கு விஜயம் செய்ய நாம் விசாக்களை வழங்குகிறோம். கொழும்பில் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களில் பெரும்பாலானவற்றுக்கு நாம் விசா வழங்குகிறோம். இலங்கையிலிருந்தும் ஏனைய நாடுகளிலிருந்தும் விசா கோரி விண்ணப்பிக்கும் சிரேஷ்ட அரசியல்வாதிகளுக்கும் உத்தியோகத்தர்களுக்கும் நாம் துரிதமாகவே விசாக்களை வழங்குகிறோம். பிரிட்டிஷ் குடிவரவு விதிகளுக்கு அமையவே நாம் இந்த விசாக்களை வழங்குகிறோம். அதாவது, உதாரணமாக, தனிப்பட்ட விஜயங்களுக்கு இலவச விசாக்களை எம்மால் வழங்கமுடியாது. முக்கிய புள்ளிகளின் சகல விஜயங்களையும் பொறுத்த வரையில், சுமுகமான சேவையை உறுதிப்படுத்தும் முயற்சியில், உயர்ஸ்தானிகராலயம் வெளிவிவகார அமைச்சுடன் நெருங்கி செயற்படுகிறது. இந்த ஒத்துழைப்பை மேலும் தொடரவே நாம் விரும்புகிறோம்.

விசா வழங்கல் நடைமுறை:

இலங்கை விசாக்களுக்கான தற்போதைய நடைமுறை நேரங்கள்:

மாணவர்கள்: 10 வேலை நாட்கள் குடியமர்வு அல்லாதவை (ஏனையவை) : 10 வேலை நாட்கள் குடியமர்வு: 42 வேலை நாட்கள் விண்ணப்பதாரர்கள் அவர்களது விண்ணப்பங்களை பூர்த்திசெய்து, குறிப்பாக விசா அதிகமாக கோரப்படும் காலங்களில் விசாக்களை விநியோகிக்க போதிய அளவு கால அவகாசத்தை எமக்கு வழங்கவேண்டும். பிரயாணம் செய்யத் திட்டமிட்டுள்ள தினத்திற்கு 3 மாதங்கள் வரை முன்னதாகவே விண்ணப்பத்தை சமர்ப்பிப்பது உசிதமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய தேசிய போக்குவரத்து கொள்கை விரைவில் அமுல் – அடுத்தவாரம் அமைச்சரவைக்கு சமர்ப்பிப்பு

26parliament.jpgபுதிய தேசிய போக்குவரத்துக் கொள்கையொன்றை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக பயணிகள் போக்குவரத்து அமைச்சர் லசந்த அழகியவன்ன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று இதுதொடர்பில் கருத்துத் தெரிவித்த அமைச்சர், அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் அதனைப் பாராளுமன்றத்திற்குக் கொண்டு வந்து நிறைவேற்றவும் நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவித்தார்.

பாராளுமன்றம் நேற்றுக்காலை 9.30 மணிக்கு சபாநாயகர் டபிள்யூ. ஜே. எம். லொக்குபண்டாரவின் தலைமையில் கூடியது. வழமையான நடவடிக்கைகளுக்குப்பின் வாய் மூல விடைக்கான வினாக்கள் வேளையின் போது ஜே. வி. பி. எம். பி. ரணவீர பதிரண எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அமைச்சர் இதுதொடர்பில் மேலும் தெரிவிக்கையில்:- மேல் மாகாணத்தில் வாகன நெரிசல்களைத் தவிர்ப்பதற்காக ‘சிட்டிலிங்’ சேவை எனும் பஸ் சேவையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக காலி வீதியூடாக கொழும்புக்குள் பிரவேசிக்கும் தனியார் வாகனங்கள் மொரட்டுவையில் தமது வாகனங்களை நிறுத்திவிட்டு அங்கிருந்து எமது பஸ் சேவையை உபயோகப்படுத்த முடியும்.

முச்சக்கரவண்டி சேவை தொடர்பில் எடுத்துள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும்வகையில் அதற்கான தனியான நிறுவனமொன்றை அமைத்து செயற்படுவது அவசியம். தற்போது நாடளாவிய ரீதியில் நான்கு இலட்சத்து இருபதினாயிரம் முச்சக்கரவண்டிகள் உள்ளன. இதற்கு முறையான நிர்வாகம் ஒன்று தேவை எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

வெளிநாடு சென்ற தொழிலாளர்களின் அதிக வருவாயைப் பெறுவது இந்தியா

workers.jpgவெளிநாடு சென்று வேலைபார்க்கும் தொழிலாளர்கள் சொந்த நாட்டுக்கு அனுப்பிவைக்கும் பணத்தின் அளவை வைத்துப் பார்க்கையில் உலகில் முதலிடம் வகிக்கும் நாடு இந்தியா தான் என்று அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வுகள் காட்டுகின்றன.

கடந்த ஓர் ஆண்டில் வெளிநாட்டில் வேலை பார்க்கும் பிரஜைகளிடம் இருந்து இந்தியா 4500 கோடி அமெரிக்க டாலர்களைப் பெற்றுள்ளதாம். இந்தியாவுக்கு அடுத்த இடத்தில் சீனாவும் அதைத் தொடர்ந்து மெக்ஸிகோவும் இந்தப் பட்டியலில் இருக்கின்றன.

கிழக்கு உதயம் அபிவிருத்தி – நிதி திரட்டும் வகையில் சமாதான வாகன ஊர்வலம்

கிழக்கு உதயம் அபிவிருத்தித்திட்டத்திற்கென நிதி சேகரிக்கும் வகையில் சமாதான வாகன ஊர்வலம் நடத்தப்படவுள்ளது. தேசத்தை கட்டியெழுப்பும் அமைச்சும் இலங்கை விமானப் படையும் இணைந்து இதனை ஏற்பாடு செய்துள்ளன.

இதற்கான அனுசரணையினை 4×4 எட்வன்சர் கழகம் மற்றும் ஜோன் கீல்ஸ் ஓட்டோ மேஷன் தனியார் நிறுவனம் வழங்குகின்றது. இதன் மூலம் கிடைக்கப்பெறும் நிதி திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள திவுல்வெவ கிராமத்தில் சகல வசதிகள் கொண்ட பாடசாலையொன்றை நிறுவப் பயன்படுத்தப்படும். புலிகளால் பாதிக்கப்பட்டு பல. இன்னல்களுக்கு முகம் கொடுத்த 160 குடும்பங்கள் தற்பொழுது இப்பகுதியில் மீளக் குடியமர்த்தப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

மூன்று நாட்களாக நடைபெறும் இவ்வாகன ஊர்வலம், இம்மாதம் 19ம் திகதி காலை கொழும்பிலிருந்து ஆரம்பமாகி, அவிசாவளை, இரத்தினபுரி, பெல்மதுளை, எம்பிலிப்பிட்டி ஹம்பாந்தோட்டை, திஸ்ஸமஹாராம ஊடாக அறுகம்பே சென்றடையும். முதல்நாள் இரவை களிப்பதற்கென அறுகம்பே கடலோரப் பகுதியில் முகாமொன்று அமைக்கப்படும். இரண்டாம் நாள் ஊர்வலம், பொத்துவில், கோமாரி, திருக்கோவில், அக்கரைப்பற்று, கல்முனை, காத்தான்குடி, ஏறாவூர், பாசிக்குடா, மூதூர் மற்றும் கிண்ணியா ஊடாக திருகோணமலை சென்றடையும். இறுதி நாள் நிகழ்வில் ஏற்பாட்டுக்குழுத் தலைவரும், அமைச்சருமான புஞ்சிநிலமே, தேசத்தைக் கட்டியெழுப்புதல் அமைச்சின் அதிகாரிகள் உட்பட அப்பகுதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவாளர்கள் பங்கு கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.

சாட்சியங்கள் முன்வைக்கப்பட்டால் உருத்திரகுமாரனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்: அமெரிக்கா அறிவித்துள்ளதாக திவயின தகவல்

உரிய சாட்சிங்கள் முன்வைக்கப்பட்டால் உருத்திரகுமாரனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும் என அமெரிக்கா இலங்கை அரசாங்கத்திடம் அறிவித்துள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.  தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான நடவடிக்கைகளை உருத்திரகுமாரன் மேற்கொண்டு வருவதாக இலங்கை அரசாங்கம் குற்றம் சுமத்தியிருந்தது.
 
குறித்த நபரை இலங்கையிடம் ஒப்படைக்குமாறு அரசாங்கம் அமெரிக்க அதிகாரிகளிடம் கோரியுள்ளது. உருத்திரகுமாரன் எல்லைகடந்த தமிழீழ இராச்சியத்தின் தலைவராக கடமையாற்றி வருவதாக அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.