14

14

இலங்கை தோட்டத்தொழிலாளர்கள் சம்பள உயர்வு பிரச்சனையில் முரண்பாடு

080909teawomen.jpgஇலங்கையில் பெருந்தோட்டத்தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் தோட்ட முதலாளிகள் சம்மேளனத்துடன் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளதாக முக்கிய தொழிற்சங்கமான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அறிவித்ததை ஏனைய இரு முக்கிய சங்கங்களும் நிராகரித்துள்ளன.

இலங்கை பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 500 ரூபாய்கள் வழங்கப்பட வேண்டும் என்று கோரி முக்கிய மூன்று தொழிற்சங்கங்கள் இணைந்து ஒத்துழையாமை போராட்டத்தை நடத்தி வந்தன.

இந்த சம்பள உயர்வு குறித்து பல சுற்றுக்கள் முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சுவார்த்தைகளை இந்த தொழிற்சங்கங்கள் நடத்தி வந்தபோதிலும், அவை தோல்வியிலேயே முடிந்திருந்தன.

இருந்த போதிலும், சனிக்கிழமை முதலாளிமார் சம்மேளனத்துடன் நடத்திய பேச்சு ஒன்றில் தாம் 405 ரூபாய் நாளாந்த சம்பளத்துக்கு இணக்கம் கண்டதாக அந்த மூன்று தொழிற்சங்கங்களில் ஒன்றான இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவரான ஆர். யோகராஜன் BBC தமிழோசையிடம் தெரிவித்திருந்தார்.

ஆனால், இந்த இணக்கத்தை ஏற்க முடியாது என்று ஏனைய இரு சங்கங்களான இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் மற்றும் பெருந்தோட்டத்துறை தொழிற்சங்கக் கூட்டமைப்பு ஆகியன கூறியிருக்கின்றன.

அபிவிருத்தி பணிக்கு ஒதுக்கப்படும் நிதியை முழுமையாக பயன்படுத்த ஜனாதிபதி பணிப்பு

laxman_yapa_abeywardena.jpgஅபிவி ருத்திப் பணிகளுக்கென ஒதுக்கப்படும் நிதிகளை இந்த வருடம் முதல் நூறு வீதம் முழுமையாகப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட் தரப்பினருக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக தகவல், ஊடகத்துறை அமைச்சரும் தேசிய அபிவிருத்தி தொடர்பான ஊடக மத்திய நிலைய ஊடகப் பேச்சாளருமான லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

அமைச்சரவை அனுமதியுடன் உத்தியோகபூர்வமாக அமைக்கப்பட்டுள்ள தேசிய அபிவிருத்தி தொடர்பான ஊடக மத்திய நிலையம் மாத்தறையில் நடத்திய ஊடகவியலாளர்கள் மாநாட்டிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். ஒவ்வொரு பகுதிகளிலும் உள்ள குறைபாடுகளை ஊடக மத்திய நிலையத்துக்கு அறிவிக்க முடியும் எனவும் அது குறித்து உரிய அமைச்சு அல்லது அரச நிறுவனத்துக்கு அறிவித்து அதனை நிவர்த்திக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ஊடகங்களினூடாக சுட்டிக் காட்டப்படும் குறைபாடுகள் முறைகேடுகள் குறித்தும் ஊடக மத்திய நிலையம் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவிக்கும். அபிவிருத்திக்காக வழங்கப்படும் வெளிநாட்டு நிதிகள், உரிய முறையில் பயன்படுத்தப்படாததால் அவை திருப்பி அனுப்பப்படுகிறது. சில பகுதிகளில் 50 வீதமான பணமே பயன்படுத்தப்படுகிறது.

எனவே அபிவிருத்திப் பணிகளுக்காக ஒதுக்கப்படும் நிதிகளை இந்த வருடம் முதல் முழுமையாக பயன்படுத்த வேண்டும் என ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார். மாத்தறை மாவட்டத்தில் பல பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. கொடகமையில் ரூ. 6100 மில்லியன் செலவில் 1500 கட்டில்களுடன் கூடியதாக வைத்தியசாலையொன்று அமைக்கப்பட்டு வருகிறது.

இது தவிர மாத்தறை நகரிலுள்ள சகல அரச நிறுவனங்களையும் கொடகமைக்கு மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாத்தறை – கதிர்காமம் இடையிலான ரயில் பாதை 2 கட்டங்களாக அமைக்கப்படவுள்ளது.

இதற்கு 6600 மில்லியன் ரூபா உள்நாட்டு முதலீடும் 24000 மில்லியன் ரூபா வெளிநாட்டு முதலீடும் பெறப்படவுள்ளது. ஹக்மனை நகரம் 3500 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்யப்படுகிறது. மாத்தறை மாவட்டத்திலுள்ள சகல வீடுகளுக்கும் 2010 முடிவுக்குள் மின்சாரம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 4 வருட காலத்தில் மாத்தறை மாவட்டத்தில் 1000 கோடி ரூபா பெறுமதியான அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறன என்றார்.

மீள்குடியேற அனுப்பப்பட்ட மக்கள் இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைப்பு

101009displacedidps.gifஇலங்கை வவுனியா இடைத்தங்கல் முகாமிலிருந்து மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மீள் குடியேற்றத்திற்காக அனுப்பி வைக்கப்பட்ட 123 குடும்பங்களைச் சேர்ந்த 367 பேரும் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள இடைத்தங்கல் முகாம்களில் தொடர்ந்தும் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மாகாண சபை உறுப்பினர் இரா.துரைத்தினம் குற்றம் சுமத்துகின்றார்

வெள்ளிகிழமை விடுவிக்கப்பட்டு சனிக்கிழமை அதிகாலை மட்டக்களப்பை வந்தடைந்த இக்குடும்பங்கள் சிங்கள மகா வித்தியாலயத்திலும் குருக்கள் மடம் கலைவாணி வித்தியாலயத்திலும் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.

முன்னர் அழைத்து வரப்பட்ட ஒரு தொகுதியினர் சில மணித்தியாலங்களுக்குள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டதை சுட்டிக் காட்டும் அவர், இது தொடர்பாக அரசாங்க அதிபரின் நேரடிக் கவனத்திற்கு கொண்டு வந்த போது இது பாதுகாப்பு தரப்பினர் சம்பந்தப்பட்ட விடயம் என்று பதிலளித்ததாக கூறுகிறார் துரைரட்ணம்.

இம்முறை அழைத்து வரப்பட்டவர்களின் விபரங்கள் பதிவு செய்யப்பட்ட பின்பு அவர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டதாகவும் இரா .துரைரத்தினம் குறிப்பிடுகின்றார்

வெற்றி நமதே …- யாழ். குடாநாட்டின் உயர்ச்சியை வெளிப்படுத்தும் திரைப்படம்

cinema.jpgசிங்கள மற்றும் தென்னிந்திய தமிழ் கலைஞர்கள் நடிக்கும் வீடியோ கலாமினியின் வெற்றி நமதே திரைப்படம் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களின் சகோதரத்துவத்தினை வெளிப்படுத்தும் வகையில் தயாரிக்கப்படவிருக்கும் வெற்றி நமதே திரைப்பட ஆரம்ப விழா அச்சுவேலி இராஜமாணிக்கம் கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது.

தமிழ், சிங்கள, ஆங்கில மொழிகளில் 4 கோடி ரூபா செலவில் தயாரிக்கப்படவுள்ள வீடியோ கலாமினி அச்சுவேலியூர் மாணிக்கம் சிவமூர்த்தியின் இயக்கத்திலும், கதை, வசனம், பாடல்களுடன் வெற்றி நமதே திரைப்படம் தயாரிக்கப்படவுள்ளது.

விஜய அபயசேகரவின் தயாரிப்பில் கோண்டாவில் புலவர் வீடியோ ரமேஸின் படப்பிடிப்புடன் வெற்றி நமதே திரைப்படம் தயாரிக்கப்படுவதுடன் உலக சாதனையை நிலைநாட்டும் வகையில் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறும் வகையில் இத் திரைப்படம் வெளியிடப்படவுள்ளது.

வெற்றி நமதே திரைப்படம் ஊடாக சுமார் 6 கோடி ரூபா வசூலை எதிர்பார்ப்பதாக தயாரிப்பாளர் தெரிவித்தார். சமூக, சமய, இனங்களிடையிலான பேதங்களை எடுத்துக் காட்டும் வகையில் யாழ்.

குடாநாட்டு நாயகன் ஒருவரையும் தென்னிலங்கை நாயகி ஒருவரையும் மையமாகக் கொண்டு காதல் உவப்புடன் ஏழை பணக்காரன் என்ற பாகுபாட்டினை வெளிப்படுத்தும் வகையிலும் யாழ். குடாநாட்டின் கல்வி மேம்பாடு, விவசாய உயர்ச்சி என்பவற்றினை பிரதிபலிக்கும் வகையில் இத்திரைப்படம் தயாரிக்கப்படவுள்ளது.

உள்நாட்டிலும், கனடா, லண்டன் உட்பட வெளிநாடுகளில் படமாக்கப்படும் இத் திரைப்படம் யாழ். குடாநாட்டின் திரைப்பட சாதனையை சர்வதேசம் ஈறாக பறைசாற்ற சிறந்த திரைப்படமாக உருவாக்கப்படவுள்ளது.

வரவேற்பு பாடல் மற்றும் நடனத்துடன் ஆரம்பமான இந் நிகழ்வில் நீதிபதி ஏ. பிரேம்சங்கர், யாழ். வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி வேதநாயகம், ஈ. பி. டி. பி. யாழ். மாவட்ட பிரதி அமைப்பாளர் அலெக்சாண்டர் சாள்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வவுனியா நகர சபை: தெரிவான உறுப்பினர்கள் 11 பேரும் இன்று பதவியேற்பு

வவுனியா நகர சபைக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப் பினர்கள் பதவி ஏற்பு விழா இன்று நடைபெறும். பிரதான வைபவம் நகர சபை கலாசார மண்டபத்தில் நடைபெறும். தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா சம்பந்தன் உட்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளு மன்ற உறுப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்து கொள்வார்கள். நகர சபைத் தலைவராக முன்மொழியப்பட்டுள்ள எஸ். என். ஜி. நாதனும் சத்தியப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார்.

இலங்கை தமிழரசுக் கட்சி ஐந்து உறுப்பினர்கள், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி மூவர், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இருவர். சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒருவர் சபைக்கு உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

அமைச்சர் ரிசாட் பதிவுதீன், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், வவுனியா முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர்களும், வைபவத்திற்கு அழைக்கப் பட்டுள்ளனர்.

நடுவரை திட்டிய நடப்பு சாம்பியன் செரீனா அமெரிக்க ஓபனில் இருந்து வெளியேற்றம்

serena-williams.jpgஅமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதியில் நடப்பு சாம்பியன் செரீனா வில்லியம்ஸ் தண்டனை புள்ளியால் தோல்வியை சந்தித்தார். இதன்மூலம் இரண்டு ஆண்டுகளின் பின் டென்னிஸ் களம் திரும்பிய பெல்ஜியத்தின் கிம் கிளிஜ்ஸ்டர்ஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் 13 ஆவது நாளான நேற்று முன்தினம் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டிகள் நடைபெற்றன. இதில் அமெரிக்காவின் 2 ஆம் நிலை வீரõங்கனை செரீனா வில்லியம்ஸுடன் கிம்கிளிஜ்ஸ்டர்ஸ் பலப்பரீட்சை நடத்தினார்.

பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் கிம் கிளிஜ்ஸ்டர்ஸ் வெற்றிபெற இரண்டு புள்ளிகள் தேவைப்படும் நிலையில் செரீனா வில்லியம்ஸ் எல்லை கோட்டைத் தாண்டி விளையாடியதாக நடுவரால் அறிவிக்கப்பட்டது.

இதனால் ஆத்திரம் அடைந்த செரீனா நடுவரை மோசமான வார்த்தையால் திட்டினார். இதனைத் தொடந்து நடுவர் இது குறித்து போட்டி மத்தியஸ்தரிடம் முறையிட அவர் தண்டனை புள்ளியாக கிம் கிளிஜ்ஸ்டர்ஸுக்கு ஒரு புள்ளியை வழங்க செரீனா இறுதிப் போட்டி வாய்ப்பை இழந்தார். இதன்போது செரீனா தன்னை கொலைசெய்து விடுவதாக குறிப்பிட்டார் என்று நடுவர் குற்றம் சாட்டினார்.

ஏற்கனவே இந்த போட்டியின் முதல் சுற்றின்போது செரீனா ஆடுகளத்தில் மோசமாக நடந்துகொண்டார். இதற்காக அவர் நடுவரின் எச்சரிக்கைக்கு உள்ளான நிலையிலேயே மீண்டும் நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.இதன்படி கிம் கிளிஜ்ஸ்டர்ஸ் அமெரிக்க ஓபன் இறுதிப் போட்டியில் டென்மார்க்கின் கிரோலின் வொஸ்னிக்கை சந்திக்கவுள்ளார்.

மட்டக்களப்பு பெரியவட்டுவான் 25 கிலோ எடையுள்ள ரீ.என்.ரீ. வெடிமருந்துகள் கண்டுபிடிப்பு

udaya_nanayakkara_brigediars.jpgமட்டக்களப்பு, பெரியவட்டுவான் பிரதேசத்திலிருந்து 25 கிலோ எடையுள்ள ரி. என். ரி. அதிசக்திவாய்ந்த வெடிமருந்துகள் உட்பட பெருந்தொகையான ஆயுதங்களை படையினர் மீட்டெடுத்துள்ளனர்.

கிழக்கு மாகாணத்தின் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழுள்ள இராணுவத்தின் 233வது படையணியினர் நடத்திய பாரிய தேடுதல்களின் போதே இந்த வெடிமருந்துகளை மீட்டெடுத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

இதேவேளை, முல்லைத்தீவின் பல்வேறு பிரதேசங்களில் படையினர் நடத்திய தேடுதல்களில் ஆயுதங்களுடன் பெருந்தொகையான தொலைத் தொடர்பு கருவிகளையும் மீட்டெடுத்துள்ளனர்.

பெரியவட்டுவான் பிரதேசத்தில் நடத்திய தேடுதல்களில் ரி-56 ரக துப்பாக்கிகள் – 2, அதற்குப் பயன்படுத்தப்படும் ரவைகள் – 60, ஆர். பி. ஜி. குண்டுகள் – 07, கைக்குண்டுகள் – 05, மிதிவெடிகள் – 20 மற்றும் உபகரணங்களை மீட்டெடுத்துள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.

யாழ். லொறிகள் வவுனியாவில் பொருட்களை இறக்குவதற்கு ஏற்பாடு

யாழ்ப்பாணத்திலிருந்து ஏ9 வீதி வழியாக தென்பகுதிக்கு, யாழ். குடாநாட்டின் உற்பத்திப் பொருட்களை ஏற்றி வரும் லொறிகள் தம்புள்ள மற்றும் கொழும்பு சந்தைகளிலேயே அவற்றை இறக்கி வருகின்றன. இந்த லொறிகளில் இருந்து வவுனியாவில் பொருட்களை இறக்குவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் வவுனியாவில் பொருட்களை இறக்க முடியாதிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக யாழ். மாவட்ட வர்த்தகர்களின் வேண்டுகோளுக்கமைய, ஜனாதிபதியின் ஆலோசகரும், வடக்கின் வசந்தம் திட்டத்தின் தலைவருமான பசில் ராஜபக்ஷவின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு அல்லது தம்புள்ள சந்தைகளுக்குச் செல்லும் லொறிகளில் இருந்து பொருட்களை இறக்க முடியாது என்றும், வவுனியா சந்தைக்கென பொருட்களை ஏற்றி வரும் லொறிகள், அந்தப் பொருட்களை முழுமையாக வவுனியாவில் இறக்குவதற்குரிய ஏற்பாடுகளைச் செய்வதாக பசில் ராஜபக்ஷ தம்மிடம் உறுதியளித்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் தெரிவித்தார்.

கள்ள நோட்டுகளுடன் சந்தேக நபர் கைது

மூன்று இலட்சத்து 18 ஆயிரம் ரூபா கள்ள நோட்டுக்களை வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் அலவ்வ பொலிஸார் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரின் வீட்டிலிருந்து கள்ள நோட்டுக்களை அச்சிடுவதற்கு பயன்படுத்தப்பட்ட கணனி உட்பட பல்வேறு உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் நிமல் மெதிவக்க நேற்றுத் தெரிவித்தார்.

பிரதான சந்தேக நபர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் கள்ள நோட்டுக்களை அச்சிடும் செயற்பாடுகளுக்கு உதவியாக இருந்த மேலும் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை கள்ள நோட்டு அச்சிடும் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்ட கார் ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

அலவ்வை பிரதேசத்திலுள்ள சந்தையில் பொருட்களை கொள்வனவு செய்த ஒருவர் 1000/- ரூபாவை கொடுத்துள்ளார். அந்த நோட்டு தொடர்பாக சந்தேகம் எழுந்ததையடுத்து குறித்த நபரை மடக்கிப் பிடித்து அலவ்வை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

அவரை கைது செய்த பொலிஸார் அவரிடம் மேலதிக விசாரணைகளை நடத்தியுள்ளனர். தனது வீட்டில் மேலும் கள்ள நோட்டுக்கள் மறைத்து வைத்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நபரின் வாக்கு மூலத்தையடுத்து சந்தேக நபரின் வீட்டுக்குச் சென்ற பொலிஸார் போலியாக அச்சிடப்பட்ட (1000/-) ஆயிரம் ரூபா கள்ள நோட்டுக்கள் 318. (இந்த போலி நோட்டுக்களின் பெறுமதி 3 இலட்சத்து 18 ஆயிரம்) மீட்டெடுத்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அலவ்வ பொலிஸாருடன் இணைந்து இரகசிய பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.