17

17

நாட்டில் ஸ்திரமற்ற நிலையை ஏற்படுத்த சர்வதேச மட்டத்தில் சதி

109009dalss.jpgஎந்த வகையிலாவது நாட்டின் தலைமைத்துவத்தை மாற்றி நாட்டில் ஸ்திரமற்ற நிலையை ஏற்படுத்த சர்வதேச மட்டத்தில் சதி முன்னெடுக்கப்படுகிறது.  ராஜதந்திர சேவையில் இருந்து ஓய்வு பெற்ற இருவருடன் இணைந்து எதிர்க் கட்சியில் உள்ள இரு அரசியல்வாதிகள் இவ்வாறு சதி செய்து வருகின்றனர். இவர்கள் தொடர்பான விபரங்கள் விரைவில் வெளியிடப்படும் என அமைச்சர் டலஸ் அலஹப்பெரும தெரிவித்தார்.

மகாவலி நிலையத்தில் நேற்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, பிரிவினைவாதம் முற்றாகத் தோற்கடிக்கப்பட்ட போது வேறு உருவங்களில் இலங்கைக்கு எதிரான சதிகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. 2005 ல் ஜனாதிபதி வேட்பாளரான மஹிந்த ராஜபக்ஷவை கைது செய்யவும் அவரை தோற்கடிக்கவும் சதி செய்யப்பட்டது.

இந்த வருட முதற்பகுதியில் ஜனாதிபதியை கொலை செய்தாவது பிரபாகரனை காப்பாற்ற சதி முன்னெடுக்கப்பட்டது. இந்த சதிகள் யாவும் வெற்றிகரமாக தோற்கடிக் கப்பட்டன. ஆனால் இன்று பல்வேறு வடிவங்களில் இலங்கைக்கு எதிரான சதிகள் முன்னெடுக்கப்படுகின்றன. யுத்த குற்றச்சாட்டுக்களை முன்வைத்தும் மனித உரிமைகள் மீறப்படுவதாகவும் குற்றம்சாட்டி இலங்கைக்கு எதிராக சதி செய்யப்படுகிறது. ஐ.தே.க. தலைவர் ஒருவரும் எந்தக் கட்சிக்கும் இல்லாத அரசியல்வாதி ஒருவரும் இதில் ஈடுபட்டுள்ளனர். அரசாங்கத்தின் மீது சர்வதேச மட்டத்தில் அபகீர்த்தி ஏற்படுத்தவும் அதனூடாக நாட்டின் தலைமைத்துவத்தை மாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கை மீது அவதூறு ஏற்படுத்தவே செனல்-4 தொலைக்காட்சியினூடாக சதி செய்யப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டை நிரூபிக்குமாறு ஐ.தே.க. கோரியது. இந்தக் குற்றச்சாட்டு பொய் என நிரூபிக்கப்பட்ட நிலையில் ஐ.தே.க. அதுகுறித்து எதுவுமே வாய்திறக்காது உள்ளது.

செனல்-4 சம்பவம் தொடர்பாக பாராளுமன்றத்தில் நடத்தப்பட்ட ஒத்திவைப்பு விவாதத்தில் ஐ.தே.க. எம்.பிக்கள் எவரும் பங்கேற்கவில்லை. ரணில் விக்ரமசிங்கவின் உத்தரவின்படியே எந்த ஐ.தே.க. உறுப்பினரும் இந்த விவாதத்தில் கலந்து கொள்ள வில்லை என ஐ.தே.க. எம்.பிக்கள் சிலர் தெரிவித்தனர்.

புலிகள் கொழும்பில் விமானத்தாக்குதல் நடத்தி வந்த போது மிக்-29 ரக விமானங்களை கொள்வனவு செய்ய அரசு தீர்மானித்தது. ஆனால் இந்தக் கொள்வனவில் மோசடி இடம்பெறுவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி மிக் கொள்வனவை தடுக்க முயற்சி செய்தன.

மிக்-29 ரக விமானங்களை கொள்வனவு செய்வதால் புலிகளுக்குப் பாதிப்பு ஏற்படும் என்பதாலே எதிர்க் கட்சியிலுள்ள சிலர் செயற்கையான முறையில் சதி செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள புலி முக்கியஸ்தர் ஒருவர் வாக்கு மூலம் வழங்கியுள்ளார். இதனுடன் தொடர்புடையோரின் விபரங்கள் விரைவில் பகிரங்கப்படுத்தப்படும்.

செனல்-4 தொலைக்காட்சியின் பொய்யான குற்றச்சாட்டுக்கு எதிராக பிரித்தானியாவில் இலங்கையர் போராட்டம் நடத்தினர். இதற்கு அங்குள்ள இலங்கை ஊடகவியலாளர்கள் உரிய பிரசாரத்தை வழங்கினர்.

அத்தகைய ஊடகவியலாளர்களில் ஒருவரான ஜனக அலஹப்பெருமவுக்கு ஐரோப்பாவில் இயங்கும் புலிகள் கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். இவரை அச்சுறுத்தி 139 தொலைபேசி அழைப்புக்கள் கிடைத்துள்ளன. இதில் 26 அழைப்புகள் பொலிஸாரினால் அடையாளங் காணப்பட்டுள்ளன. அரசியல் தேவைகளுக்காக நாட்டை காட்டிக்கொடுப்பதையும் நாட்டில் ஸ்திரமற்ற நிலையை ஏற்படுத்தவும் ஐ.தே.க. தலைவர் முயற்சி செய்கிறார்.

அரசியல் ரீதியில் விவாதிக்கப்படுவதையும் விமர்சிப்பதையும் முகம்கொடுக்க நாம் தயாராக உள்ளோம். ஆனால் நாட்டைக் காட்டிக்கொடுத்து ஆட்சி பீடமேற முயல வேண்டாமென ஐ.தே.க. தலைவரை கோருகிறோம் என்றார்.

அம்பாறையில் இன்று காலை போக்குவரத்து தடை : அதிரடிப் படையால் நிலைமை சீரடைந்தது

அம்பாறை மாவட்ட தமிழ் பிரதேசங்களில் இன்று காலை வீதிகளில் டயர்கள் போட்டு எரிக்கப்பட்டும் கற்கள் மற்றும் மண் குவிக்கப்பட்டும் ஒரு குழுவினரால் போக்குவரத்து தடை ஏற்படுத்தப்பட்டது. எனினும் விசேட அதிரடிப் படையினர் சில மணித்தியாலங்களுக்குள் இவற்றை அகற்றியதால் நிலைமை சீரடைந்தது.

அக்கரைப்பற்றில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் அலுவலகம் திறக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரனின் ஆதரவாளர்கள் என கூறப்படுபவர்களே இந்த போக்குவரத்துத் தடைகளை ஏற்படுத்தியிருக்கலாம் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக காலையில் அக்கரைப்பற்று – கல்முனை வீதி, சம்மாந்துறை – நாவிதன்வெளி வீதி, அக்கரைப்பற்று – பொத்துவில் வீதி ஆகிய பிரதான வீதிகளில் போக்குவரத்து சில மணித்தியாலங்கள் தடைப்பட்டிருந்தன.

இருப்பினும பொத்துவில் – அக்கரைப்பற்று வீதியில் தொடர்ந்தும் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக இ.போ.ச. அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இவ்வீதியில் திருக்கோவில் ஊடாக போக்குவரத்து சேவைகள் இடம்பெறுவதை ஒரு குழுவினர் தடுத்து வருவதாகவும் இதனையடுத்தே இச்சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவ் அதிகாரி மேலும் குறிப்பிட்டார். 

டென்னிஸ்: தரவரிசையில் கிலிஸ்டர்சுக்கு 19வது இடம்

150909kilista.jpgபெல்ஜியம் வீராங்கனை 26 வயதான கிம்கிலிஸ்டர்ஸ் குழந்தை பெற்றுக்கொண்டு இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு கடந்த மாதம் டென்னிசுக்கு திரும்பினார். நீண்ட நாள் டென்னிசை விட்டு விலகியதால் அவர் தரவரிசையில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்த நிலையில் மீண்டும் டென்னிசுக்கு திரும்பிய அமெரிக்க ஒபனை வென்று சாதனை படைத்த அவருக்கு தரவரிசையில் 19வது இடம் வழங்கப்பட்டுள்ளது. மீண்டும் டாப் 10க்குள் நுழைவதை அவர் குறிக்கோளாக கொண்டிருக்கிறார்.

ரஷியாவின் தினரா சபீனா முதலிடத்திலும், அமெரிக்காவின் செரீனா, வீனஸ் முறையே அடுத்த இரு இடங்களிலும் உள்ளனர். இந்திய நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா 74வது இடத்தில் இருந்து 63வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார்.

ஆண்கள் தர வரிசையில் பெடரர் தொடர்ந்து நம்பர் – 01 அரியணையில் உள்ளார். 2வது இடத்தில் இருந்த இங்கிலாந்தின் அன்டி முர்ரே 3வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

அமெரிக்க பகிரங்கத்தில் 4வது சுற்றிலேயே வெளியேறியதால் முர்ரேவுக்கு இந்த சரிவு ஏற்பட்டிருக்கிறது- 3வது இடத்தில் இருந்த ஸ்பெயினின் ரபெல் நடால் மீண்டும் 2வது இடத்துக்கு வந்துள்ளார். அமெரிக்க பகிரங்கத்தில் பட்டத்தை வென்ற ஆர்ஜன்டினாவின் டெல்போட்ரோ ஒரு இடம் முன்னேறி 5வது இடத்தை பெற்றுள்ளார்.

அமெரிக்க பகிரங்க ஆண்கள் இரட்டையர் பட்டத்தை வென்ற இந்தியாவின் லியாண்டர் பயசின் தரவரிசையில் எந்த மாற்றமும் இல்லை. அவர் தொடர்ந்து 8 வது இடத்திலேயே நீடிக்கிறார். அவருடன் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த மற்றொரு இந்திய வீரர் மகேஷ் பூபதி 6வது இடத்தில் உள்ளார்.

தோட். தொழிலாளர் சம்பள அதிகரிப்பு கூட்டு ஒப்பந்தம் நேற்று கைச்சாத்து

080909teawomen.jpg* 405 ரூபா சம்பள அதிகரிப்பு
* 6 மாத சம்பள நிலுவையை 3 கட்டங்களாக வழங்க முடிவு
* மருத்துவ சிகிச்சையில் சலுகை
* ஞாயிறு, போயா தினங்கள் விடுமுறை தினங்களாக கருதப்படும்

தோட்டத் தொழிலாளர்களுக்கு அதிகரிக்கப்பட்ட 405 ரூபாவை வழங்குவதற்கான கூட்டு ஒப்பந்தம் நேற்று கைச்சாத்திடப்பட்டது. தொழிற்சங்க பிரதிநிதிகளும், முதலாளிமார் சம்மேளன பிரதிநிதிகளும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

2009 ஏப்ரல் முதலாம் திகதி முதல் சம்பள அதிகரிப்பு அமுலுக்கு வரும் விதத்தில் இவ்வொப்பந்தம் நேற்று ராஜகிரியவிலுள்ள முதலாளிமார் சம்மேளன அலுவலகத்தில் கைச்சாத்தானது.

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், லங்கா தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கப் பொதுச் செயலாளர் கே. வேலாயுதம், தொழிற்சங்க கூட்டமைப்பு செயலாளர் எஸ். இராமநாதன் ஆகியோர் முதலாளிமார் சம்மேளன பிரதிநிதிகளுடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

அதிகரிக்கப்பட்ட சம்பளத்திற்கான நிலுவைத் தொகையை மூன்றுகட்டங்களாக வழங்கவும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

எதிர்வரும் அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படும் முற்பணத்துடன் 50 வீத சம்பள நிலுவையை வழங்கவும் டிசம்பர் மாதம் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படும் முற்பணத்துடன் 25 வீத சம்பள நிலுவையையும் ஜனவரி மாதம் தைப்பொங்கலை முன்னிட்டு வழங்கப்படும் பண்டிகை முற்பணத்துடன் எஞ்சிய 25 வீதத்தை வழங்குவது என்றும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

தொழிலாளர்களின் 75 வீத வருகைக்கு ஞாயிற்றுக்கிழமை, போயா தினம் மற்றும் விடுமுறை தினங்களும் இதுவரை காலம் உள்வாங்கப்பட்டிருந்தது. இனிமேல் ஞாயிறு, போயா தினம், விடுமுறை தினங்கள் நீக்கப்பட்டுள்ளன.

தொழிலாளி ஒருவர் சுகயீனம் காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் 75 வீத வருகை இல்லாத இடத்து அவர் தொழிலுக்கு வந்தவராகவே கருதப்படுவார்.

சம்பள அதிகரிப்புடன் தோட்டத் தொழிலாளி ஒருவரின் அடிப்படைச் சம்பளம் 285 ரூபாவாகவும், 75 வீத வருகைக்கான கொடுப்பனவு 90 ரூபாவாகவும், உற்பத்தி ஊக்குவிப்பு கொடுப்பனவு 30 ரூபாவாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.  குறிப்பிட்ட தொகையைவிட கூடுதலான கொழுந்து அல்லது இறப்பர் பால் சேகரிப்பவர்களுக்கு முறையே 12 ரூபா 15 ரூபாவை வழங்குவது என்றும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

2007 ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தம் 2009 மார்ச் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்தது. இதன்படி தற்போது செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் 2009 ஏப்ரல் முதலாம் திகதி முதல் 2011 மார்ச் 31ஆம் திகதி வரை அமுலில் இருக்கும்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், லங்கா தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், தொழிற்சங்க கூட்டுக் கமிட்டி என்பன செய்து கொண்ட சம்பள அதிகரிப்பு ஒப்பந்தத்துக்கு எதிராக மலையகத்தில் ஆங்காங்கே சில இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுகின்றனவே என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவர் ஆர். யோகராஜனிடம் கேட்டபோது 90 வீதமான தோட்டத் தொழிலாளர்கள் இதனை ஏற்றுக்கொண்டுள்ளனர். 40 வீத சம்பள அதிகரிப்பு ஒன்று இன்று கிடைத்திருக்கிறது. சில தொழிற் சங்கங்கள் இதனை வைத்துக்கொண்டு அரசியல் நடத்த முயற்சி செய்கின்றன என்று கூறினார்.

வாங்கும் சக்தி எங்களுக்கு இருப்பது போன்று கொடுக்கும் சக்தி முதலாளிமாருக்கு இருக்கிறதா என்பது பற்றியும் நாம் பார்க்க வேண்டும். அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் அனைத்தையும் ஆராய்ந்த பின்னரே ஒரு முடிவுக்கு வந்தோம் என்றும் இ. தொ.கா உப தலைவர்களில் ஒருவரான ஆர். யோகராஜன் தெரிவித்தார்.

கொழும்பு கொள்ளுப்பிட்டியிலுள்ள இ. தொ. காவின் ‘செளமிய பவன்’ கட்டடத்தில் செய்தியாளர் மாநாடு ஒன்று நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசும்போதே ஆர். யோகராஜன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

காசா தாக்குதல்: இஸ்ரேல் போர்க்குற்றங்கள் செய்ததாகக் கூறுகிறது ஐ.நா.விசாரணை

170909gazaviolence.jpgகாசாவில் தாக்குதல் நடத்தும் இஸ்ரேலிய சிப்பாய்கள்
இஸ்ரேல் இந்த ஆண்டின் துவக்கத்தில் காசா நிலப்பரப்பு மீது நடத்திய தாக்குதலின்போது, போர் குற்றங்களைப் புரிந்ததாகவும், சர்வதேச மனிதநேய சட்டங்களை மீறியதாகவும் ஐ.நா.வின் விசாரணை கூறியுள்ளது.

இஸ்ரேல் பொது்மக்கள் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தி
பாலத்தீன ஆயுதக் குழுக்களும் போர் குற்றங்களைப் புரிந்ததாகவும், இந்த விசாரணைக்கு தலைமை வகித்த யுத்த குற்றங்கள் குறித்த முன்னாள் சட்ட நடவடிக்கை அதிகாரி ரிச்சர் கோல்ட்ஸ்டோன் கூறியுள்ளார்.

இந்த விசாரணையுடன் ஒத்துழைக்க இஸ்ரேல் மறுத்து விட்டது. இதற்கு உத்திரவிட்ட ஐநாவின் மனித உரிமை கவுன்சில் பாரபட்சமாக செயல்பட்டது என்று இஸ்ரேஸ் கூறியது.

ஆசிய பெண்கள் கூடைப்பந்து போட்டி சென்னையில் இன்று ஆரம்பம் – 12 நாடுகள் பங்கேற்பு

1509fiba-news203a.jpgஇந்தியா வில் 23வது ஆசிய பெண்கள் போட்டி இன்று சென்னையில் ஆரம்பமாகின்றது. இப்போட்டி இன்று ஆரம்பமாகி எதிர்வரும் 24ம் திகதி வரை சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெறு கிறது.

அதன் விபரம் வருமாறு:

ஆசிய பெண்கள் கூடைப்பந்து போட்டி 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. 2007ம் ஆண்டு இந்தப் போட்டி கொரியாவில் நடந்தது.

24வது ஆசிய பெண்கள் கூடைப்பந்து போட்டி இந்தியாவில் முதல் முறையாக நடத்தப்படுகிறது. இந்தப் போட்டி இன்று 17ந் திகதி முதல் வருகிற 24ந் திகதிவரை சென்னை நேரு உள்விளையாட்டு அரங் கில் நடைபெறுகிறது.

இந்தப் போட்டியில் மொத்தம் 12 நாடு கள் பங்கேற்கின்றன. தர வரிசையின் அடி ப்படையில் பிரிவு 1, பிரிவு 2 என இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது.

பிரிவு 1- இந்தியா, சீனா, கொரியா, ஜப்பான், சீனதைபே, தாய்லாந்து ஆகிய நாடுகளும், பிரிவு 2- கஜகஸ்தான், லெபனான், மலேசியா, பிலிப்பைன்ஸ். இலங்கை, உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளும் இடம்பெற்றுள்ளன.

பிரிவு 1ல் ஒவ்வொரு அணியும் அந்த பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும்.

புள்ளிகள் அடிப் படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும். பிரிவு 1ல் 5வது 6வது இடங்களை பிடிக்கும் அணிகளும் பிரிவு 2ல் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் 5 முதல் 8வது இடங்களுக்கான போட்டியில் விளையாடும்.

ஆசிய பெண்கள் கூடைப்பந்து போட்டி யில் இதுவரை கொரியாவே அதிகமாக ஆதிக்கம் செலுத்தி இருக்கிறது. இந்த அணி 12 முறை சாம்பியன் (தங்கப் பதக்கம்) பட்டம் பெற்றுள்ளது. 8 வெற்றியும், 2 வெண்கலமும் பெற்றுள்ளது. சீனா 9 முறையும் ஜப்பான் ஒருமுறையும் பட்டம் பெற்றுள்ளன. அணி அரை இறுதியில் நுழைய கடுமையாக போராட வேண்டும்.

இன்று காலை 9 மணிக்கு நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் பிலிப்பைன்ஸ், மலே சியா அணிகள் மோதுகின்றன. அதைத் தொடர்ந்து லெபனான், உஸ்பெகிஸ்தான், இலங்கை, கஜகஸ்தான் அணிகள் மோதுகின்றன. தொடக்க விழா நேற்று நடைபெற்றது

ஈரான், ஐரோப்பிய யூனியன் பேச்சுவார்த்தைகள் துருக்கியில் ஒக்டோபர் 01ம் திகதி ஆரம்பமாகலாம்

170909iran-flag.jpgஈரானுடன் நடத்தப்படவுள்ள பேச்சுவார்த்தைகள் துருக்கியில் நடைபெறும் என ஐரோப்பிய யூனியன் வெளிநாட்டுக் கொள்கைகளுக்கான தலைவர் ஜாவியர் சொலனா தெரிவித்தார். பெரும்பாலும் இப்பேச்சுக்கள் ஒக்டோபர் 01ம் திகதி ஆரம்பமாகும். யுரேனியம் செறியூட்டல் வேலைகளுடன் அணுஆயுதங்களை விருத்தி செய்யும் ஈரானின் முயற்சிகளில் மேற்கு நாடுகள் அச்சம் கொண்டுள்ளன.

இவை பற்றித் தெளிவான விளக்கங்களை ஈரான் இப்பேச்சுவார்த்தையின் போது வெளியிடும். உலக வல்லரசு நாடுகளின் பிரதிநிதிகளும் ஈரான் பிரதிநிதிகளும் இப் பேச்சுக்களில் பங்கேற்பர். பேச்சு நடைபெறும் இடம்பற்றி இன்னும் இறுதி முடிவில்லை.

அரசாங்க சேவை வெற்றிடங்கள் இவ்வாண்டு இறுதிக்குள் நிரப்பப்படும்

sarath-amunugama.jpgஅரசாங்க சேவை வெற்றிடங்கள் அனைத்தும் இவ்வருட இறுதிக்குள் நிரப்பப்படுமென பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்தார்.

அரச சேவை ஆணைக்குழுவிடமிருந்து அதற்கான அதிகாரங்கள் பொது நிர்வாக அமைச்சுக்குக்கிடைத்துள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், இதற்கிணங்க நாடளாவிய ரீதியிலுள்ள கிராம சேவகர் வெற்றிடங்கள், நிர்வாக சேவை மற்றும் முகாமைத்துவ இணைந்த சேவையிலுள்ள வெற்றிடங்களும் நிரப்பப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இது தொடர்பில் விளக்கமளித்த அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், அரச சேவையில் வெற்றிடங்களை நிரப்புதல், இடமாற்றங்கள், சேவைகளுக்கான பயிற்சிகளை வழங்குதல் போன்றவற்றில் அமைச்சு தற்போது கவனம் செலுத்தி வரு கிறது.

இந்த வகையில் முகாமைத்துவ இணைந்த சேவைக்கு 3,000 பேரையும் கிராம சேவகர்களாக 1,000 பேரையும் இலங்கை நிர்வாக சேவைக்கு 300 பேரையும் நியமிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவர்களுக்கான பரீட்சைகள் நடத்துவது தொடர்பில் இம்முறை செயற்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதன்படி உள்ளகப் பரீட்சைகள், பரீட்சைகள் திணைக் களத்தினாலன்றி அமைச்சின் மூலம் இலங்கை நிர்வாக சேவை கல்வி நிறுவனத்தில் நடை பெறவுள்ளது. மேற்படி திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் கலண்டர் ஒன்றை தயார்படுத்தியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

முகாமைத்துவ சேவை தொடர்பில் கரு த்துத் தெரிவித்த அமைச்சர் அமுனுகம, அரச நிர்வாக சேவையிலிருந்து மாகாண சபைகளுக்குச் சென்றுள்ளவர்கள் அங்கு ஐந்து வருடங்களை நிறைவு செய்ததும் அவர்கள் மீள நிர்வாக சேவையில் இணைத்துக் கொள்ளத்தக்கதாக கட்டாயப்படுத்தப்படுவார்கள் எனவும் தெரிவித்தார்.

இது தொடர்பில் எழுந்துள்ள சிக்கல்களுக்குத் தீர்வு காணும் வகையில் அரச சேவை தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நட த்தியுள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர், இவ் விடயத்தில் நடைமுறையிலுள்ள முறைமைகள் கட்டாயப்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

கிராம சேவகர்களை நியமிக்கும் விடயத்தில் சமுர்த்தி அதிகாரிகள் தத்தமது பகுதிகளில் தம்மை கிராம சேவகர்களாக நியமிக்கக் கோருகின்றனர்.  எனினும் இதுவிடயத் தில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடி முடிவொன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

வெளிநாட்டு நிதிகள் மூலம் நாட்டில் பாரிய அபிவிருத்தி பணிகள் மக்களின் சட்டைப் பைகளுக்குள் இடப்பட்டுள்ளது – லக்ஷ்மன் யாப்பா

laxman_yapa_abeywardena.jpgவெளிநாடு களிலிருந்து கிடைக்கப் பெற்ற நிதியினைக் கொண்டு பாரிய அபிவிருத்திப் பணிகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாகவும், இதன் மூலம் அந்த நிதி யாவும் மக்களின் சட்டைப் பைக்குள்ளேயே இடப்பட்டிருப்பதாகவும் ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்க கூறுவதைப் போல், வெளிநாட்டு நிதியை அரசாங்கம் பைக்குள் போட்டுக் கொள்ளவில்லை என்றும் அமைச்சர் சுட்டிக் காட்டினார்.

துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள், கிராமிய உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்காக அரசாங்கம் பெருந்தொகைப் பணத்தைப் பயன்படுத்தியுள்ளதாகவும் 2010 ஆம் ஆண்டில் நாட்டின் சகல குடியிருப் புகளுக்கும் 90% மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்யவுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

தேசிய அபிவிருத்திக்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்றுக் காலை (16) நடை பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அபிவிருத்தி நிதி அரசின் ‘பொக்கெட்டு’ க்குப் போகவில்லை. சகல வீடுகளுக்கும் மின்சாரத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கும் வெளிநாட்டு நிதியே பயன்படுகிறது. ஐந்து துறைமுகங்கள் அபிவிருத்தி செய்யப்படுகி ன்றன. 2007-2017 ஆண்டு வீதி அபிவிருத்திக்கென 484,378.5 மில்லியன் ரூபா முதலீடு செய்யப்பட்டுள்ளது.

மேல், வட மத்திய, வட மேல், ஊவா மாகாண வீதி அபிவிருத்திக் கென கடந்த வருடம் 10671 மில்லியன் செல விடப்பட்டுள்ளது. மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்ய 298065 மில்லியன் ரூபா முதலீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் போக்குவரத்துத் துறையை மேம்படுத்த 154445 மில்லியன் ரூபாவும், கிராமிய உட்கட்டமைப்புகளை மேம்படுத் தவென 35717 மில்லியன் ரூபாவும் முதலீடு செய்யப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.  துறைமுகங்களின் அபிவிருத்திக்கென ஒதுக்கப்பட்ட நிதி தொடர்பாக விபரங்களை யும் அமைச்சர் வெளியிட்டார்.

டெங்கு : இதுவரை 253 பேர் பலி

dengue22222.jpgநாடெங் கிலும் இவ்வருடம் 253 பேர் டெங்கு காய்ச்சலினால் பீடிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர் எனத் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் இது வரை 48 பேர் இறந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. கண்டி 36, கொழும்பு 30,கேகாலை 22, மட்டக்களப்பு 17, குருநாகல் 17 என்ற எண்ணிக்கையில் மாவட்ட ரீதியாக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

மேலும் தேசிய ரீதியாக இது வரை 25 ஆயிரத்து 777 பேர் டெங்கு நோயினால் பீடிக்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.  கண்டி 3507 பேர், கேகாலை 3417 பேர், கொழும்பு 3325 பேர், கம்பஹா 30233 பேர், குருனாகல் 2447 பேர் எண்ற எண்ணிக்கையில் மாவட்ட ரீதியாக டெங்கு நோயினால் பீடிக்கப்பட்டோர் தொடர்பான விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.