22

22

நிறமூர்த்தங்கள் மாற்றியமைக்கப்பட்டதால் மனிதருக்கு உணவாகும் பருத்தி விதை.

cotton-buds.jpg7000 வருடங்களுக்கு மேலாக மனிதரினால் பயிரிடப்படும் பருத்தி இன்று 20 மில்லியன் (million) விவசாயிகளினால் 80 நாடுகளில் பயிரிடப்படுகின்றது.

உலகில் 40 சதவிகிதமான உடுபுடவைகள் பருத்தியினாலே தயாரிக்கப்படுகின்றது. ஆனால் 23 சதவிகித புரட்டீனைக் கொண்ட இப்பருத்தி விதைகள் மனிதரினால் உண்ணப்படுவதில்லை. காரணம் இந்த விதைகளில் உள்ள நச்சுத் திரவத்தை மனித உடலால் கட்டுப்படுத்த முடியாதிருந்தது.

பருத்தி விதையை பறவைகள், பன்றியிடமிருந்து பாதுகாக்கும் பொருட்டுள்ள இந்த நச்சுத்திரவம் (Toxin) ஆடு, மாடு போன்ற இரை மீட்டு உண்ணும் பிராணிகளால் மட்டுமே உட்கொள்ளக் கூடியதாக இருந்தது.

Texas A&M University இந்த நச்சுத்திரவம் சுரந்து கொள்ள முடியாதவாறு பருத்தி விதைகளின் நிறமூர்த்தங்களில் (RNA யில்) மாற்றங்களை ஏற்படுத்தி புதிய பருத்தி விதைகளை உருவாக்கியுள்ளனர். இதன்மூலம் வருடாந்தம் 44 மில்லியன் தொன் உற்பத்தி செய்யப்படும் பருத்தி விதைகள் மிகவும் பெறுமதிமிக்க புரட்டீன்களை மனிதருக்கு உணவாக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.

0.5 பில்லியன் (Billion)உற்பத்தி செய்யப்படும் பருத்தி விதைகள் மனித உணவாக பயன்படுத்தப்பட்டு மனிதர்களின் உணவுத் தட்டுப்பாட்டில் பெரும்பகுதிப் பிரச்சினைகள் தீர்க்கப்படக் கூடியதாகவும் உள்ளது.

இந்த நிறமூர்த்தங்களினால் மாற்றம் செய்யப்பட்ட பருத்தி விதைகள் கடலை போன்ற சுவையுடையதாக கூறப்படுகிறது.

கடல் உள்வாங்கி சேற்றில் சிக்கி இறந்த மீன்கள்

தூத்துக்குடி கடல் பகுதியில் திடீரென கடல் உள்வாங்கியதால் ஆயிரக்கணக்கான மீ்ன்கள் கடலோரத்தில் உள்ள சேற்றில் சிக்கி இறந்தன. இந்த மீன்களை மீனவர்கள் அள்ளிச் சென்றனர். தூத்துக்குடி பீச்ரோட்டில் உள்ள கடல் பகுதியில் நேற்று காலை கடல்நீர் திடீரென உள்வாங்கியது. நீண்ட தூரத்துக்கு கடல் உள்வாங்கி காணப்பட்டதால் அந்த பகுதி, வற்றிய குளம் போல காட்சி அளித்தது.

பச்சை வயல்வெளி போல காணப்பட்டது. சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு தண்ணீர் இல்லாததால் ஏராளமான மீன்கள் சகதியில் சிக்கி கிடந்தன. இதனை கொத்த பறவைகள் குவிந்தன. சகதிக்குள் பாம்புகளும், மீன்களும் அதிக அளவில் சிக்கியிருந்தன. இதைத்தொடர்ந்து பொது மக்கள் சகதியில் சிக்கி கிடந்த மீன்களை சேகரித்தனர். ஏராளமான மீன்களை மீனவர்களும் எடுத்துச் சென்றனர்.

செமென்யா விவகாரம் ஐ.நா.விடம் கொண்டு செல்லப்பட்டது

caster_semenya_testosterona.jpgபெர்லினில் நடைபெற்ற உலக தடகள 800மீ. ஓட்டத்தில் முதலிடம் வந்து தங்கம் வென்ற தென் ஆப்பிரிக்க வீராங்கனை கேஸ்டர் செமென்யாவின் உடலமைப்பில் கோளாறு உள்ளது, அவர் ஆணா பெண்ணா என்று தெரியவில்லை என்று கூறி அவர் மீது பாலின பரிசோதனை நடத்தப்பட்டது. இதனையடுத்து ஏமாற்றமடைந்த தென் ஆப்பிரிக்க அரசு இந்த விவகாரத்தில் நீதி வழங்குமாறு ஐ. நா.விடம் முறையிட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்க அமைச்சர் நொலுதாண்டொ மெயெந்தே சிபியா ஐ. நா.விடம் இது குறித்து புகார் செய்துள்ளார். 800மீ ஓட்டத்தில் முதலிடம் பெற்ற செமென்யாவை தென் ஆப்பிரிக்கா முழுதும் மக்களும், அரசியல் தலைவர்களும் போற்றிப் புகழ்ந்து, கொண்டாடி வருகின்றனர். நெல்சன் மன்டேலாவையும் அவர் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் செமென்யா மீது நடத்தப்பட்ட பாலின சோதனை பெண்ணினத்துக்கு எதிரானது என்றும்,  நிறவெறித்தனமானது என்றும் சாடியுள்ளது. சோதனை முடிவுகளை ஐ.ஏ.ஏ.எஃப். இன்னமும் வெளியிடவில்லை. ஆனால் முடிவுகள் செமென்யாவிற்கு சாதகமாக வராவிட்டாலும் அவரது சாதனையை திரும்பப் பெறப்போவதில்லை என்று ஐ.ஏ.ஏ.எஃப். தெரிவித்துள்ளது. ஆனால் அவர் வேறு எந்த ஓட்டப்பந்தயங்களிலும் கலந்து கொள்ள முடியாது.

இதற்கிடையே அவருக்கு ஆணுறுப்பு, பெண்ணுறுப்பு இரண்டுமே இருப்பதாக ஆஸ்ட்ரேலிய பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளதும் இந்த விவகாரத்தை சர்ச்சைக்குரியதாக்கியது. இந்த நிலையில்தான் தென் ஆப்பிரிக்க அரசு ஐ. நா.விடம் தீர்வு கோரியுள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு: போலி முகவர்களை கட்டுப்படுத்த பாராளுமன்றில் சட்டத்திருத்தம்

26parliament.jpgசட்ட விரோதமான முறையில் வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்பும் முகவர் நிலையங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது. பாராளுமன்றத்தில் விரைவில் சமர்பிக்கப்படவிருக்கும் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் தொடர்பான திருத்தச் சட்ட மூலங்களுக்கு அமையவே இவ்வேலைத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

சட்ட ரீதியாக மற்றும் சட்ட விரோதமான முறையில் வெளிநாட்டுக்கு அனுப்புவதற்கான ஆட்சேர்ப்போர் மீது கூடுதல் கவனம் செலுத்தும் வகையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் திருத்த சட்டமூலம் அமைந்துள்ளது. இந்தத் திருத்த சட்ட மூலம் எதிர்வரும் வியாழக்கிழமை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இவற்றுக்கு மேலதிகமாக, இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் போலி முகவர் நிலையங்களிடமிருந்து ஒரு இலட்சம் ரூபா வீதம் தண்டப் பணம் அறவிடவும் ஆகக் குறைந்தது மூன்று வருடங்கள் சிறைத் தண்டனை வழங்கும் வகையிலும் சட்டங்களை மீளதிருத்தியமைத்துள்ளது. இதேவேளை, சட்ட விரோதமான முறையில் வெளிநாடு செல்ல முயற்சிப்போருக்கு எதிராக விதிக்கப்படும் தண்டப்பணத்திலும் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. முன்வைக்கப்பட்டிருக்கும் புதிய கொள்கைகளின் அடிப்படையில், தகுதியுடைய ஒருவரை வெளிநாட்டுக்கு அனுப்புவதாக வாக்குறுதியளித்து ஏமாற்றிய ஒருவருக்கு 1500 ரூபா முதல் 20 ஆயிரம் ரூபா வரையில் தண்டப் பணம் அறவிடப்படும்.

இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் துப்பறிபவர்களின் உதவியுடன் தேவையான சந்தர்ப்பத்தில் அனைத்து முகவர் நிலையங்களையும் அதன் ஆவணங்களையும் சோதனையிட வேலை வாய்ப்பு பணியகம் அனுமதி வழங்கியுள்ளது. வெளிநாட்டுக்கு பணியாட்களை அனுப்புவதில் இலங்கை முதலிடத்தில் திகழ்கின்றது. தற்போது வெளிநாடுகளில் வேலை செய்யும் 1.6 மில்லியன் இலங்கைப் பணியாளர்களினால் 35 சதவீதமான அந்நியச் செலாவணி நாட்டுக்கு கிடைக்கின்றது.

தற்போது நாடளாவிய ரீதியில் வெளிநாட்டுக்கு செல்ல முயற்சிக்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப் பதனை போலி முகவர் நிலையங்கள் தமக்கு சாதகமாக பயன்படுத்தி வருகின்றன.

வவுனியாவில் மீளக்குடியேறியோருக்கு அடிப்படை வசதிகள் யாவும் இலவசம்

210909va-re-set.jpgவவுனியா தெற்கில் மீள்குடியமர்த்தப்பட்டுள்ள ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்து 320 பேருக்கும் எதிர்வரும் ஆறு மாதங்களுக்கு இலவசமாக அத்தியாவசிய உலர் உணவுகள், மின்சார இணைப்பு, நிவாரண உதவிகள் ஆகியன வழங்கப்படவிருப்பதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பீ. எஸ். எம். சாள்ஸ் தெரிவித்தார்.

மீளக் குடியமர்த்தப்பட்டுள்ள ஆயிரம் குடும்பங்களுக்கும் அவர்களது சொந்த காணிகளில் வீடுகளை அமைத்துக் கொடுப்பது தொடர்பாக கருத்திற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அது குறித்து உயர்மட்ட பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் அரசாங்க அதிபர் மேலும் கூறினார்.

பெரும்போக பயிர்ச் செய்கையை முன்னிட்டு வவுனியா வடக்கில் தற்காலிகமாக குடியமர்த்தப்பட்டிருந்த ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த மூவின மக்களும் வவுனியா தெற்கு பிரதேச செயலக பிரிவுகளிலுள்ள தமது சொந்த காணிகளில் மீளக்குடியமர்த்தப்பட்டிருப்பதாக அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

மீளக்குடியமர்த்தப்பட்டவர்கள் தமது காணிகளை சுத்திகரித்து பெரும்போக பயிர்ச் செய்கையில் ஈடுபட தயாராகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். உத்தியோகபூர்வமாக இவர்களை குடியேற்றும் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை வவுனியா கலாசார மண்டபத்தில் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ எம்.பியின் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது மீளக்குடியமர்த்தப்பட்ட குடும்பங்களுக்கு தலா 15 ஆயிரம் ரூபா பெறுமதியான மண்வெட்டி, கோடரி ஆகியன உள்ளிட்ட காணி சுத்திகரிப்பு உபகரணங்களும் தற்காலிக கூடாரங்களை அமைத்துக் கொள்வதற்கான 16 தகரங்களும் வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் கூறினார். வீதிகள், குளங்கள், ஆலயங்கள், பாடசாலைகள், கூட்டுறவுச் சங்கங்கள், சனசமூக நிலையங்கள், வைத்தியசாலைகள், தபாலகங்கள் ஆகியவை புதிதாக அமைக்கப்பட்டிருப்பதுடன் ஒவ்வொருவரது காணிகளுக்கும் நீர் மற்றும் மின் வசதிகள் பெற்றுக் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மின் இணைப்புக்கள் ஆறு மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படவிருப்பதால் கட்டணங்கள் எதுவும் அறவிடப்படமாட்டாதெனவும் அரசாங்க அதிபர் சுட்டிக்காட்டினார். இதேவேளை, இவர்களுடைய சுத்திகரிப்பு பணிகளை ஊக்குவிக்கும் முகமாக ஒரு ஏக்கர் நிலபரப்புக்கு 4 ஆயிரம் ரூபா வீதம் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சிலரது காணிகள் பற்றைக் காடுகளாக மாறியிருப்பதனால் அவற்றை சுத்திகரிக்க சிறிது காலம் தேவைபடுமென்பதனால் இந்திய அரசாங்கம் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவிகள் கோரப்பட்டிருந்தன. அந்த வகையில் ஆசிய அபிவிருத்தி வங்கி எதிர்வரும் 06 மாதகாலத்துக்கு அக்காணிகளைச் சேர்ந்தோருக்கு நிவாரணமாக குறிப்பிட்ட உதவித் தொகையை வழங்க முன்வந்துள்ளது. ணிகளில் தூர்ந்துபோன கிணறுகளை மீள வெட்டி புதுப்பிப்பதற்காக இந்திய அரசாங்கம் உதவுவதாக வாக்குறுதியளித்திருப்பதாகவும் அரசாங்க அதிபர் கூறினார்.

பெரும்போக பயிர்ச் செய்கையை முன்னிட்டு மீள்குடியேற்றம் துரிதப்படுத்தப் பட்டமையினால் இவர்களுக்கான வீடுகளை அமைத்துக்கொடுப்பது தொடர்பில் பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் எதிர்வரும் 06 மாதங்களுக்குத் தேவையான அத்தியாவசிய உலர் உணவுப் பொருட்களை வழங்கவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் மீள்குடியேற்றம்; சிவல் நிர்வாகத்தை ஏக காலத்தில் முன்னெடுக்க நடவடிக்கை

mullai-ga.jpgகிளி நொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் மக்களை மீளக்குடியமர்த்தும் அதேநேரத்தில் சிவில் நிர்வாகத்தையும் நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுவிட்டதாக முல்லைத்தீவு கிளிநொச்சி அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். இதற்கமைய துணுக்காய், ஒட்டுசுட்டான் பிரதேச செயலகக் கட்டடங்களை திருத்துவதற்கு முன்னுரிமை அடிப்படையில் நடவடிக்கை எடுத்துள்ளதாக அரச அதிபர் தெரிவித்துள்ளார்.

இந்த இரு பிரதேச செயலகப் பிரிவுகளிலும் மாவட்ட நிர்வாகத்தையும் ஏற்படுத்துவதற்கு ஏதுவாக நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தப் பகுதிகளில் சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்துவதற்கு இந்த மாதம் 25ஆம் திகதியும் அடுத்த மாதம் 15ஆம் திகதியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும், மக்களை மீளகுடியமர்த்தும் அதே சமயத்தில் சிவில் நிர்வாகமும் தோற்றுவிக்கப்படுமென அரச அதிபர் திருமதி சுகுமார் கூறியுள்ளார்.

மீள்குடியேற்றம் செய்வதற்கு முன்பதாகக் கண்ணிவெடிகளை அகற்ற வேண்டியது பாரிய சவாலான விடயமாகும். அதற்கு முன்பதாக கட்டடங்களின் அமைவிடம் குறித்து அறிந்து அவற்றுக்கான பாதைகளையும் அடையாளம் கண்டு அதன்பின்னர் கட்டடங்களை நிர்மாணிக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக அரச அதிபர் கூறியுள்ளார்..

கட்டடங்களைத் திருத்துவதற்குத் தேவையான மூலப் பொருள்களைக் கொண்டு வந்துள்ளதுடன், மக்களைக் குடியேற்றியதும் சிவில் நிர்வாகத்தையும் தோற்றுவிப்பதற்கான நடவடிக்கைகளைத் திட்டமிட்டுச் செயற்படுத்தி வருவதாகவும் அரச அதிபர் இமெல்டா சுகுமார் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கிளிநொச்சி, கரைச்சி பிரதேச செயலகத்தை மீளத் திறப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதேநேரம், கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தைத் திறப்பதற்கும் ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இலங்கைச் சிறைகளில் பல ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கைதிகள் அரசாங்கத்துக்கு கடிதம்

210909jail.jpgஇலங் கையில் பயங்கரவாதத் தடுப்பு சட்டம் மற்றும் அவசர காலச் சட்டம் ஆகியவற்றின் கீழ் பல ஆண்டுகளாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பல கைதிகள் தமக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட வேண்டும் அல்லது தாம் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று இலங்கை அரசாங்கத்துக்கு கடிதம் எழுதியிருக்கிறார்கள்.

இலங்கையில் போர் முடிவடைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தம்மை எவ்வித விசாரணையும் இன்றி தொடர்ந்து அடைத்து வைத்திருப்பது குறித்த அவர்கள் கவலை வெளியிட்டுள்ளார்கள்.

இது குறித்து தமிழோசையிடம் பேசிய இலங்கை அமைச்சர் புத்திரசிகாமணி, இவர்களின் விவகாரம் தொடர்பாக ஒரு அரசாங்ககுழு ஆராய்ந்து வருவதாகவும் அது எடுக்கும் முடிவுன் அடிப்பையில் இவர்கள் ஒவ்வொருவரது விடயமும் தனித்தனியாக கையாளப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இவர்கள் பயங்கரவாதத் தடைச்சட்டம் மற்றும் அவசரகாலச் சட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் இவர்கள் அனைவரையும் அரசியல் கைதிகள் என்று கூற முடியாது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இவர்கள் மீது எப்போது நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை உறுதியாகக் கூறமுடியாத போதிலும், விரைவில் இவர்கள் விடயம் குறித்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். 

முஸ்லிம் பாடசாலைகள் நாளையே ஆரம்பம்

school-girls.jpgநாட்டிலுள்ள சகல முஸ்லிம் பாடசாலைகளும் நாளை 23 ஆம் திகதியே ஆரம்பமாகுமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

ரமழான் நோன்பையிட்டு விடுமுறை வழங்கப்பட்டிருந்த பாடசாலைகள் இன்று 22 ம் திகதி ஆரம்பமாகுமென ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆயினும், ரம்ஸான் பெருநாள் நேற்று அனுஷ்டிக்கப்பட்டதால் முஸ்லிம் பாடசாலைகளை நாளை ஆரம்பிப்பதென கல்வியமைச்சர் சுசில் பிரேம ஜயந்தவின் ஆலோசனைக்கமைய தீர்மானித்துள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் நிமல் பண்டார அறிவித்துள்ளார்.

கிழக்கு இலக்கிய பெருவிழா 24, 25 ம் திகதிகளில்

கிழக்கு மாகாண இலக்கியப் பெருவிழா எதிர்வரும் 24 ம், 25 ம், திகதிகளில் அம்பாறை டீ. எஸ். சேனநாயக்கா கல்லூரியில் இடம் பெறவுள்ளது. கிழக்கு மாகாண கல்வித் திணைக்களமும், கல்விப் பண்பாட்டலுவல்கள் அமைச்சும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளனர். இந்த இலக்கிய விழாவையொட்டிய ஆய்வரங்கு நிகழ்வு அக்கரைப்பற்று அல்ஸிராஜ் மகா வித்தியாலயத்தில் எதிர்வரும் 24 ஆம் திகதி (24/9/2009) இடம் பெறவுள்ளதாக கலாசார உத்தியோகத்தர் க. அன்பழகன் தெரிவித்தார்.

இந்த ஆய்வரங்கில் “கிழக்கிலங்கையின் நாட்டார் நம்பிக்கைகள்” எனும் தலைப்பில் எம். எஸ். அபுல்ஹஸனும், “கிழக்கிலங்கையின் கூத்து மரபு” எனும் தலைப்பில் நடராஜரத்தினமும், “கிழக்கிலங்கையின் நாட்டார் பாடல்கள்” எனும் தலைப்பில் ரமீஸ் அப்துல்லாவும், “கிழக்கிலங்கையின் நாட்டார் பட்டப் பெயர்கள்” – எனும் தலைப்பில் த. மலர்ச் செல்வனும், “கிழக்கிலங்கையின் நாட்டாரியல் பழமொழிகள்” – எனும் தலைப்பில் எஸ்.  முத்துமீரானும், “கிழக்கிலங்கையின் நாட்டார் ஆய்வுகள் அன்றும் இன்றும்” எனும் தலைப்பில் கலாநிதி. செ. யோகராசாவும், “கிழக்கிலங்கையின் இடப்பெயர்கள்” எனும் தலைப்பில் ஜலீலும், “கிழக்கிலங்கையின் நாட்டாரியல் வாய்மொழி மொழிகள் எனும் தலைப்பில் பேராசிரியர் சண்முகதாஸ¤ம், “கிழக்கிலங்கை மக்களின் வாழ்வும் வளமும்” எனும் தலைப்பில் எம். ஏ. மஜீத்தும், “கிழக்கிலங்கையின் நாட்டார் அறிவியல் எனும் தலைப்பில் தேனூரானும், “கிழக்கிலங்கையின் கிராமிய சிறு தெய்வ சடங்கு” எனும் தலைப்பில் முருகேசு தயாநிதியும் கட்டுரைகளைச் சமர்ப்பிக்கவுள்ளனர்.

இவ்வாண்டுக்கான கிழக்கு மாகாண இலக்கியப் பெருவிழாவில் நாடகம், நாட்டு கூத்து வளர்ச்சிக்காக காத்திரமான பணியாற்றிவரும் பேராசிரியர் சி. மெளனகுரு தேசிய விருது வழங்கி கெளரவிக்கப்படவுள்ளார்.

இவ்விழாவில் இவ்வாண்டுக்கான கிழக்கு மாகாண முதலமைச்சர் விருது பெரும் கலைஞர்களின் விபரம் வருமாறு, அக்கரை மாணிக்கம் (வ. ஞானமாணிக்கம்)  த. தில்லைமுகிலன், ஆ. சிங்கராயர், செல்வி மணிமேகலா கார்த்திகேசு, இராமன் பிச்சை, ஏ. ஆர். ஏ. பிஷ்றுல்ஹாபி, என். மணிவாசகன், ஏ. முஸம்மில் இ. அரசகேசரி, க. தருமரெத்தினம், மா. செல்வராசா, க. செல்வத்தம்பி, பாவலர் சாந்திமுகைதீன் ஆகியோர் நாடகம், நாட்டுக் கூத்து, கவிதை, இலக்கியம், உயர் கல்வி, கைவினை, எழுத்து ஆகிய துறைகளுக்காக தெரிவு செய்யப்பட்டு கெளரவிக்கப்படுகின்றனர்.

சப்ரகமுவ மாகாண முஸ்லிம் பாடசாலைகள் 28 ஆம் திகதியே 3 ஆம் தவணைக்கு திறக்கப்படும்

school-girls.jpgபுனித ரமழான் மாத விடுமுறைக்குப் பின்னர் மூன்றாந் தவணைக் கல்வி நடவடிக்கைகளுக்காக இன்று செவ்வாய்க்கிழமை திறக்கப்படவிருந்த சப்ரகமுவ மாகாண முஸ்லிம் பாடசாலைகள் எதிர்வரும் 28 ஆம் திகதியே திறக்கப்படவுள்ளன.
முஸ்லிம் பாடசாலைகள் மூன்றாந் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்படுமென ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் முஸ்லிம் மாணவர்களின் நலன்கருதி எதிர்வரும் 28 ஆம் திகதியே இந்தப் பாடசாலைகள் ஆரம்பமாகவுள்ளன.

நோன்புப் பெருநாளைக்கு மறுதினம் ஆரம்பிக்கும் ஆறு நோன்பை நோற்பதற்கு வசதியை கருத்திற்கொண்டு மூன்றாந் தவணைக் கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் 28 ஆம் திகதி முஸ்லிம் பாடசாலைகளை ஆரம்பிக்குமாறு இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களின் முஸ்லிம் பாடசாலை அதிபர்கள் சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத், முதலமைச்சின் செயலாளர் ஹேரத், பி.குலரத்ன, மாகாணச் செயலாளர் பீ.கொடிதுவக்கு, சப்ரகமுவ மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஆர்.அபேசிங்க ஆகியோரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

இதற்கிணங்க முஸ்லிம் சமூகத்தின் சமயக் கடமைகளுக்கு மதிப்பளித்து முதலமைச்சர் இப்பாடசாலைகளை எதிர்வரும் 28 ஆம் திகதி ஆரம்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.  இதற்கமைய சப்ரகமுவ மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஆர்.அபேசிங்க இப்பாடசாலைகளுக்கான விடுமுறை நீடிப்புக் கடிதங்களை இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களிலுள்ள பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மேற்படி விடுமுறைக்குப் பதிலாக எதிர்வரும் 4 சனிக்கிழமைகளிலும் இந்தப் பாடசாலைகள் மீண்டும் நடத்தப்பட வேண்டுமெனவும் கல்விப் பணிப்பாளரின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.