மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்திலுள்ள தொழுவ பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஹாலியத்த, நாரங்விட்ட மற்றும் முல்கம ஆகிய பிரதேசங்களிலுள்ள விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் டி.எம். ஜயரத்ன சமர்ப்பித்திருந்தார்.
25
25
தரவரி சையில் இந்திய அணி முதல் இடத்தை பிடித்தாலும் சம்பியன்ஸ் கோப்பையை வெல்ல அவுஸ்திரேலிய அணிக்கே வாய்ப்பு இருப்பதாக இந்திய வீரர் ராகுல் டிராவிட் கணித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் ‘அவுஸ்திரேலியா மிகவும் அபாயகரமான அணி. சமீபத்தில் அவர்கள் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை 6-1 என்ற கணக்கில் கைப்பற்றினார்கள்.
கடந்த சில ஆண்டுகளாக கிரிக்கெட் உலகில் அவர்களின் கைதான் ஓங்கி இருக்கிறது. எனவே அவர்களுக்கு தான் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக நான் நினைக்கிறேன் என்றார்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக திருத்தச் சட்டமூலம் திருத்தங் கள் எதுவுமின்றி நேற்று பாராளுமன்றத்தில் நிறை வேறியது.
1985 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகச் சட்டமூலத்தை திருத்துவதற்கான சட்டமூலத்தை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
சபாநாயகர் வி. ஜே. மு. லொக்குபண்டார தலைமையில் பாராளுமன்றம் கூடியபோது அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சட்டமூலத்தை சமர்ப்பிக்க முற்பட்டார். இதனைத் தடுப்பதற்காக ஐ. தே. க வினர் முயற்சிகளை மேற்கொண்டனர்.
நீதிமன்றத்தில் வழக்கொன்று இருப்பதால் இதனை சமர்ப்பிக்க முடியாதென சபையில் தெரிவித்தனர். இதனால் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு சுமார் ஒருமணி நேரம் வாக்குவாதங்கள் இடம்பெற்றன. சட்டமூலத்தை சமர்ப்பிக்க இடமளிக்காதிருப்பதற்காக ஐ.தே. க எடுத்த முயற்சிகள் யாவும் வீணானதுடன் அமைச்சர் கெஹலிய திருத்தச் சட்டமூலத்தை சமர்ப்பித்தார்.
சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும்போதும் ஐ.தே.க எம்பிக்களான ஜோசப்மைக்கல் பெரேரா, ரங்கே பண்டார ஆகியோர் திருத்தங்களைக் கொண்டு வந்தனர். இத்திருத்தங்களை எவ்வகையிலும் பெற்றுக்கொள்ள முடியாதென சபை முதல்வர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்ததுடன் திருத்தங்கள் எதுவுமின்றி ஐ.தே.க வினரின் எதிர்ப்புக்கு மத்தியில் திருத்தச் சட்டமூலம் சபையில் நிறைவேறியது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புத் திருத்தச் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதை தடுப்பதற்காக ஆரம்பத்திலும் இறுதியிலும் ஐ.தே.கவினர் எடுத்த முயற்சிகள் அனைத்தும் நிராகரிக் கப்பட்டுவிட்டன.
பயிர்ச் செய்கைக்கான விதைகள் ஆராய்ச்சி ஆய்வுகூடம் நிறுவும் சார்க் நாடுகளின் திட்டத்தின் கீழ் இலங்கையிலும் ஓர் ஆய்வுகூடத்தை அமைப்பதற்கு இந்திய அரசாங்கத்துடன் இலங்கை அரசு புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை விவசாய அபிவிருத்தி மற்றும் கமநல சேவைகள் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன சமர்ப்பித்திருந்தார்.
இத்திட்டத்துக்கு இந்திய அரசாங்கம் 7.7 மில்லியன் ரூபாவை இலங்கைக்கு வழங்குகிறது.
‘தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் ஆயுதங்களை மட்டுமே நம்பி அரசியலைத் தவவவிட்டதாலேயே வன்னிப் பேரவலம் இடம்பெற்றது’ என தமிழருவி மணியன் செப்ரம்பர் 24 மாலை லண்டன் ஈஸ்ற்ஹாமில் நடைபெற்ற கலந்துரையாடலில் தெரிவித்தார். இலங்கைப் பிரச்சினை தொடர்பாக ஏற்பாடு செய்யப்பட்ட இக்கலந்துரையாடலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களால் நிறைந்திருந்த அரங்கில் ‘இலங்கைத் தமிழ் மக்கள் எதிர்காலத்தில் ஆயுதப் போராட்டத்தால் எதனையும் சாதிக்க முடியும் என்று தான் நம்பவில்லை’ எனத் தெரிவித்தார் தமிழருவி மணியன். ‘தமிழீழ விடுதலைப் புலிகளினதும் அதன் தலைவரினதும் தியாகத்தை தான் மதிப்பதாகத் தெரிவித்த தமிழருவி மணியன் அவர் (வே பிரபாகரன்) ஆயுதங்களை மட்டும் நம்பியது மிகப்பெரிய தவறு என்றும் அது இவ்வளவு அழிவை ஏற்படுத்தி விட்டது’ என்றும் தெரிவித்தார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்ட வடிவத்தை எதிர்த்த போதும் இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையேயான யுத்தம் உச்ச கட்டத்தில் இருந்தபோது பெரும்தொகையான தமிழ் மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கையில் இலங்கை அரசை யுத்தத்தை நிறுத்தமாறு வற்புறுத்தி வந்தவர் தமிழருவி மணியன். ஆளும் காங்கிரஸ் கட்சியின் நீண்டகால உறுப்பினரான அவர் இலங்கை அரசை யுத்தத்தை நிறுத்துமாறு இந்தியா வற்புறுத்தாததையிட்டு தனது கட்சிப் பதிவியையும் உறுப்புரிமையையும் துறந்தவர். சாத்வீகப் போராட்டமே இன்றைய காலத்திற்குப் பொருத்தமானது என்று நம்புபவர்.
‘தமிழக அரசியல் வாதிகள் உணர்ச்சி பொங்களிக்க மேடைகளில் பேசிவிட்டு போய்த் தூங்கிவிடுவார்கள். அவர்களை நம்பி அரசியல் மோசம் போய்விடாதீர்கள்’ என்று எச்சரித்த தமிழருவி மணியன் அவ்வாறு ‘என்னாலும் பேச முடியும்’ ஆனால் ‘என் தமிழினம் அழிக்கப்படுவதை என்னால் தாங்க முடியாது’ என்றார். நெடுமாறன், வைக்கோ, திருமாவளவன் போன்றவர்களின் வாக்கு வங்கிகள் ஒரு சில வீதமே எனச் சுட்டிக்காட்டிய தமிழருவி மணியன் ‘பரந்து பட்ட தமிழக மக்களின் ஆதரவைப் பெறாமல் இந்திய அரசின் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது’ என்றார். ‘இவர்களது அரசியல் பேச்சுக்கள் உணர்ச்சிபூர்வமாய் இருக்கும் கைதட்டுவார்கள், விசிலடிச்சான் குஞ்சுகள் விசிலும் அடிப்பார்கள் அவ்வளவுதான் அதற்கு மேல் என்ன?’ என்று கேள்வியும் எழுப்பினார்.
தமிழருவி மணியத்தின் சிறிய பேச்சைத் தொடர்ந்து அரங்கில் இருந்தவர்கள் தமது கருத்துக்களை வழங்கவும் கேள்வி எழுப்பவும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. புலி ஆதரவு அரங்கு ஒன்றில் மாறுபட்ட கருத்துடைய ஒருவர் பிரதான பேச்சாளராக வரவழைக்கப்பட்டது இதுவே முதற்தடவையாக இருந்தது. செல்வவிநாயகர் ஆலயத் தலைவர் செல்வராஜா ‘கலைஞர் கருணாநிதியைப் பலப்படுத்தி அவரைக் கொண்டு நீங்கள் எதையாவது சாதித்திருக்க முடியாதா?’ எனக் கேள்வி எழுப்பினார். ‘என்னதான் கூறினாலும் வைக்கோ, திருமாவளவன், ராமதாஸ் போன்றவர்கள் இலங்கைத் தமிழர்களுக்காக குரல் கொடுத்தவர்கள்’ என்றார் செல்வராஜா. ‘மகிந்த ராஜபக்ச நினைக்கின்ற மாதிரி அல்ல. தலைவர் பெரும் திட்டத்தோடு வருவார்’ என்றும் ‘போராட்டம் தொடரும்’ என்றும் ஒருவர் கருத்துத் தெரிவித்தார்.
‘ஆயுதப் போராட்டமே ஒரே வழி’ என்ற கூக்குரல் ஒலிக்கத் தவறவில்லை. அதற்கு ஒருபடி மேலேசென்று ‘சுறாவளி’ போல் சுழட்டி கருத்து வெளியிட்ட சிவபாதம் என்ற முன்னால் கூட்டணி (தமிழரசுக் கட்சி) உறுப்பினர் ‘நானும் எனது மகனும் புலி. இந்தியாவுக்கு ஒரு பாடம் படிப்பிக்கிறோம்’ என்றார். கூட்டத்தின் இடையிடையே இவரது ‘குளறி’ வித்தைகள் அரங்கைக் குழப்பியது. இன்னும் ஓரிருவரும் மதுபோதையில் நின்று குளறி வித்தை காட்டியதைத் தவிர கூட்டம் சுமூகமாகவே நடந்தது.
‘நான் இங்கு உங்களை மாற்றுவதற்காக ரோவினால் அனுப்பப்ட்டவன் அல்ல. என் இன மக்கள் கொல்லப்படுவதை பார்த்துக் கொண்டிருக்க முடியாமல் யாதார்த்தமாக சில விடயங்களைப் பார்க்கும்படி சொல்கிறேன். இல்லை ஆயுதப் போராட்டம்தான் முடிவு என்று நீங்கள் நினைத்தால் அதற்கு நான் எதுவும் செய்ய முடியாது. ஆயுதம் எடுத்தால் அழிவு எதிரிக்கு மட்டுமல்ல எமக்கும் தான் என்பதனை மறந்தவிடக்கூடாது. நான் உங்களுக்கு ஏற்றமாதிரிப் பேசுவதற்காக இங்கு வரவில்லை. எனக்குச் சரியெனப்பட்டதை உங்களுக்கு சொல்கிறேன். உணர்ச்சி வசப்பட்டு முடிவுகளுக்குச் செல்லாமல் நிதானமாகச் சிந்தியுங்கள்’ எனத் தமிழருவி மணியன் அங்கிருந்தவர்களைக் கேட்டுக்கொண்டார்.
தன்னுடைய பேச்சுக்களில் இலங்கை அரசையும் அதன் இனவாதப் போக்கையும் மிகச் சரியாகவும் நேர்த்தியாவும் கண்டித்த தமிழருவி மணியன் அந்த இனவாதப் போக்கிற்கு எதிராக சாத்வீகமாகவும் ராஜதந்திர ரீதியாகவும் தொடர்ச்சியான போராட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார். ஒரு திலீபனுடன் சாத்வீகப் போராட்டத்தை நிறுத்தாமல் தொடர்ந்து இருந்திருந்தால் இந்தப் பேரவலத்திற்குச் செல்ல வேண்டி இருந்திராது என்பதையும் அவர் தனது பேச்சில் சுட்டிக்காட்டினார்.
சட்டத்தரணியும் பல்வேறு அமைப்புகளின் தலைவருமான ப சிதம்பரப்பிள்ளை தனது கருத்தைத் தெரிவிக்கையில் ‘இந்தியா இலங்கையுடன் இணைந்து தமிழ் மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டது. தேசியத் தலைவர் இந்தியாவை நம்பியதே அவர் விட்ட மிகப்பெரிய தவறு’ எனத் தெரிவித்தார். இதே கருத்தினை இன்னும் பலரும் வெளியிட்டனர். தமிழருவி மணியன் தான் கட்சியின் பதவியில் இருந்தும் உறுப்புரிமையில் இருந்தும் வெளியேறியவர் என்று கூறி இருந்தும் பலரும் மீண்டும் மீண்டும் அவரை ஒரு இந்தியப் பிரதிநிதியாக்கி கேள்விகளை தொடுத்தனர்.
இவற்றுக்கு பதிலளித்த தமிழருவி மணியன், ‘பிரபாகரன் ஒன்றும் இந்தியாவை நம்பி இருக்கவில்லை. அமெரிக்கா கப்பல் அனுப்பிக் காப்பாற்றும் என்று நம்பித்தான் கடைசிவரை இருந்தார். இந்தியா மட்டுமல்ல புரட்சியை வென்றெடுத்த நாடுகளே ஆயுதங்களை இலங்கைக்கு வழங்கி இருந்தன. இந்தியா இந்தியா என்று சொல்லிச் சொல்லியே நீங்கள் இந்திய மக்களை எதிரிகளாக்கி உள்ளீர்கள். இந்தியா வேறு இந்திய மக்கள் வேறு. எந்தவொரு சாதாரண இந்தியப் பிரஜையாவது எமது நாட்டு பிரதமரைக் கொலை செய்திருக்கலாம் என்று குற்றம்சாட்டும் இலங்கைத் தமிழ் மக்களுக்கு உதவக் கூடாது என்று சொல்லி இருக்கிறார்களா?’ எனக் கேள்வி எழுப்பினார். அவர் தொடர்ந்தும் கூறுகையில் ‘அமெரிக்காவில் டலஸ் பகுதியில் தமிழ் சங்கத்தில் காலை ஒரு சந்திப்பு மாலை ஒரு சந்திப்பு. ஒன்று இந்தியத் தமிழர்கள் சந்திப்பு மற்றையது புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் சந்திப்பு. பாரிஸில் புதுச்சேரித் தமிழர்களும் இலங்கைத் தமிழர்களும் சேர்ந்து எதுவும் செய்வதில்லை’ இவ்வாறு தமிழருவி சொல்லிக் கொண்டிருக்கையில் ‘லண்டனிலும் அப்படித்தான். இலங்கைத் தமிழர்கள், மலேசியத் தமிழர்கள், சிங்கப்பூர்த் தமிழர்கள், இந்தியத் தமிழர்கள் என்று தனித்துத்தான் செயற்படுகிறார்கள்’ என்று ஒரு குரல் வந்தது. ‘ஏன் நாம் ஒற்றுமையாகப் போராட முடியாதவர்களாக இருக்கிறோம்’ என்றும் தமிழருவி மணியன் கேள்வி எழுப்பினார்.
‘புலம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு எப்போதும் உண்மைகளை ஏற்றுக்கொள்வதில் ஒரு பிரச்சினை உள்ளது.’ என்று தனது கருத்தை வெளியிட்ட தேசம்நெற் த ஜெயபாலன் ‘புலம்பெயர்ந்த தமிழர்கள் இன்னமும் நிஜத்திற்கு வரவில்லை. வரவும் விரும்பவில்லை. இன்னமும் கனவுலகத்திலேயே உள்ளனர். நீங்கள் இன்று வெளியிட்ட இதே கருத்துக்களை நான்கு மாதங்களுக்கு முன் வெளியிட்டு இருந்தால் உங்களை ரோ உளவாளி என்றும், தேசியத் துரோகி என்றும் அழைத்திருப்பார்கள்’ எனத் தெரிவித்தார். கூட்டத்தின் முடிவுப் பகுதியில் வெளியிட்ட இக்கருத்து மீண்டும் சிறு சலசலப்பை ஏற்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து பேசிய தமிழருவி மணியன் ‘புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் என்னால் பிளவுபட்டுக்கொள்ளத் தேவையில்லை. ஆனால் இன்று மூன்று லட்சம் மக்கள் முகாம்களில் பேரவலத்திற்கு உள்ளாகி உள்ளார்கள். அவர்களை விடுவிக்க வழிசெய்ய வேண்டும். நீங்கள் ஏதோ ஒரு வகையில் கல்வி வசதி வாய்ப்புகளைப் பயன்படுத்தி இங்குவந்து ஓரளவு வளமாக வாழ்கிறீர்கள். அப்படி வாழ்ந்துகொண்டு ஆயுதப் போராட்டம் என்றெல்லாம் பேச முடியும். ஆனால் அந்த முகாம்களில் வாழும் மக்களின் நிலையென்ன. இதுவரை ஆயுதப் போராட்டத்தில் ஒரு 10 வீதம் உரிமைகளைப் பெற்றிருந்தால் இவ்வளவு மக்களை இழந்து இந்த உரிமைகளைப் பெற்றிருக்கின்றோம் என்று சொல்லலாம். அப்படிச் சொல்வதற்கு என்ன இருக்கின்றது?’ என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
நாடுகடந்த தமிழீழ அரசு பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த தமிழருவி மணியன் ‘எமக்கு முன் உள்ள உதாரணம் தீபெத். எந்த நாடு அதனை அங்கிகரித்தது? அயர்லாந்துக்கு என்ன நடந்தது?’ என்று கேள்வி எழுப்பியதுடன் ‘தமிழ் நாட்டுக்கு இந்திய அரசமைப்பில் உள்ள உரிமைகள் போன்ற உரிமைகளைக் கோரி அதனை நோக்கிச் செல்வதே தற்போதுள்ள யதார்த்தம்’ எனத் தெரிவித்தார்.
இறுதியாக கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்த வி போஸ் கருத்துத் தெரிவிக்கையில், ‘எமது போராட்டத்தில் பல தவறுகள் நடந்துள்ளது. அதனால் போராட்டம் முடிவுக்கு வந்தள்ளது. அதனை போஸ்மோட்டம் செய்து அதன் சரி பிழைகளை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். மாற்றுக் கருத்துக்களைக் கேட்டு அதன் சரி பிழைகளை ஆராய்கின்ற பக்குவம் வரவேண்டும். எத்தனையோ ஆயிரம் மக்களை இழந்திருக்கிறோம் படிப்பினைகளை கற்றுக் கொள்ள வேண்டும். நாங்கள் ஒரு காலத்தில் துரோகிகள் என்று சொல்லியவர்களுடனெல்லாம் ஒரே மேசையில் உட்கார்ந்திருந்து கதைக்கின்றோம். சாத்வீகப் போராட்டம் தோற்றுவிட்டது. ஆயுதப் போராட்டமும் தோற்றுவிட்டது. இப்போது தமிழருவி மணியன் சொல்கின்ற அறிவு வழி சிந்திக்க வேண்டும். அவர் துரோகி. இவர் துரோகி. இந்தியா துரோகம் செய்துவிட்டது என்பதை விட்டுவிட்டு யதார்த்தமாகச் செயற்பட வேண்டும்’ எனத் தெரிவித்தார்.
மூன்று மணிநேரம் வரை நடைபெற்ற இக்கலந்துரையாடலில் பெரும்பான்மையானவர்கள் யதார்தத்தை நோக்கித் தள்ளப்படுவதைக் காணக் கூடியதாக இருந்தது. நான்கு மாதங்களுக்கு முன்பு இவ்வாறான கருத்துக்கள் புலி ஆதரவு அரங்கு ஒன்றில் நினைத்துப் பார்த்திருக்க முடியாது. அடுத்த இரு தினங்களில் செப்ரம்பர் 26ல் புங்குடுதீவு நலன்புரிச் சங்கம் தொல் திருமாவளவனையும் தமிழருவி மணியனையும் பிரதம பேச்சாளர்களாக அழைத்துள்ளது. புலி ஆதரவுத் தளத்தில் தற்போது ஒரு கருத்தியல் மாற்றத்தின் அவிசியத்திற்கான தேவை உருவாகி உள்ளதையே இது வெளிப்படுத்துகின்றது.