கடல் வழியாக வந்து தீவிரவாதிகள் தாக்குவதைத் தடுக்கும் வகையில், கடல் பகுதி பாதுகாப்புக்கு கூட்டுப் படை அமைக்கலாம் என பாகிஸ்தான் யோசனை தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பரில், பாகிஸ்தானின் கராச்சி பகுதியிலிருந்து கடல் வழியாக மும்பை சென்று தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 183 பேர் பலியாகினர். இந்நிலையில், கடல் கொள்ளைகளைத் தடுப்பது தொடர்பான கருத்தரங்கு, கராச்சி நகரில் திங்கள்கிழமை நடந்தது. இக்கருத்தரங்கை துவக்கிவைத்த பாகிஸ்தான் கடற்படைத் தலைவர் நோமன் பஷீர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
மும்பை தாக்குதலை அடுத்து, கடல் பகுதி பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்தும் வகையில், இந்தியா, பாகிஸ்தான் இரு நாட்டு வீரர்களையும் கொண்ட கூட்டுப் படை அமைக்கலாம் என அரசுக்கு யோசனை தெரிவித்திருக்கிறோம் என்றார்.
மும்பை தாக்குதலுக்கு தீவிரவாதிகள் பயன்படுத்திய படகுகளை, விசாரணை அதிகாரிகள் பறிமுதல் செய்திருக்கிறார்கள். அந்தப் படகுகளை ஓட்டிச் சென்றவர்களை தற்போது தீவிரமாகத் தேடி வருகிறார்கள்.
இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரை கடல் கொள்ளை அதிகமாக நடந்துள்ளது. 33 கப்பல்களை கொள்ளையர்கள் கடத்திச் சென்றுள்ளனர். 140 தாக்குதல்களை நடத்தி உள்ளனர் என்று கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.