October

October

சத்திர சிகிச்சை நிபுணர் மஹ்பூப் திடீர் மரணம்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர் பி. எம். எம். மஹ்பூப் (52) நேற்றுக்காலை மாரடைப்பால் காலமானார்.

நேற்றுக்காலை 8 மணியளவில் காத்தான்குடியிலுள்ள அவரது வீட்டில் வைத்து மாரடைப்பு ஏற்பட்டபோது சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும்வேளை அவர் மரணமடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

தென்மாகாணம்: புதிய அமைச்சர்கள் தெரிவு பூர்த்தி

11upfa.jpgதென் மாகாண சபைக்கான அமைச்சர்களை தெரிவு செய்யும் பணி பெருமளவு நிறைவடைந்துள்ளதாக அமைச்சர் சுசில் பிரேம் ஜெயந்த் கூறினார்.

இவர்கள் விரைவில் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.இதேவேளை தென் மாகாண சபை முதலமைச்சராக முன்னாள் முதலமைச்சரே மீண்டும் நியமிக்கப்படலாம் என கட்சி வட்டாரங்கள் கூறின.

வாகன விபத்துக்கள் – 24 மணி நேரத்தில் ஐவர் உயிரிழப்பு

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் ஐவர் கொல்லப்பட்டதோடு பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவர்களில் ஒரு சிறுவனும் மூன்று பெண்களும் அடங்குவதாகவும் பொலிஸார் கூறினர்.

கடவத்தை பகுதியில் நேற்றுக் காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் கொல்லப்பட்டதோடு 5 பேர் காயமடைந்துள்ளனர். கடவத்தை 13 ஆவது மைக்கல் பகுதியில் வைத்து பாதுகாப்புப் படையினரின் டிபெண்டர் ரக, வாகனமொன்றும் மோட்டார் சைக்கிளொன்றும் போதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளோட்டி இறந்துள்ளார்.

விபத்துக்குள்ளான டிபெண்டரின் மீது பின்னால் பயணித்த லொறியொன்றும் காரொன்றும் மோதியதில் ஐவர் காயமடைந்ததாக பொலிஸார் கூறினர். இதேவேளை ஹெட்டன், நோட்டன், பிரிட்ஜ் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு பெண்கள் கொல்லப்பட்டதோடு பலர் காயமடைந்துள்ளனர். குறித்த வாகனத்தின் சாரதி, குடிபோதையில், வாகனம் ஓட்டியதாலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

வாகனம் பள்ளத்தில் விழுந்துள்ளதோடு சாரதியின் மனைவியும் மற்றொரு பெண்ணுமே இறந்ததாக பொலிஸார் கூறினர். இதேவேளை கட்டான பகுதியில் வைத்து டிரக்டர் ஒன்றில் மோதி 3 வயதுச் சிறுவர் ஒருவன் நேற்று முன்தினம் இறந்துள்ளார்.

வீதியை கடந்து செல்ல முயன்ற சிறுவன் மீது வேகமாக வந்த டிராக்டர் மோதியதில் சிறுவன் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார். களுத்துறை மக்கொனை பகுதியில் ஆட்டோ ஒன்றும் வேனொன்றும் நேருக்கு நேர் மோதியதில் பெண் ஒருவர் கொல்லப்பட்டார். இந்த விபத்து நேற்று முன்தினம் (17) மாலை இடம்பெற்றது.

இதேவேளை களுத்துறை பகுதி கடலில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி இறந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இருவர் நீராடிக்கொண்டிருந்தபோது ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். இறந்தவர் பயாகலை, மொரகொட பகுதியை சேர்ந்தவர் என அடையாளங் காணப்பட்டுள்ளது.

லண்டனில் அமைச்சர் திஸ்ஸ விதாரனவுக்கு காரசாரமான விருந்து : த ஜெயபாலன்

Tissa_Vitharana_Profஒக்டோபர் 18ல் அமைச்சர் திஸ்ஸ விதாரனவுடனான கேள்வி நேரம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கேள்வி நேரத்திற்கு முன்னர் மதிய உணவு பரிமாறப்பட்டது. மதிய உணவு காரமாக இல்லாவிட்டாலும் உணவிற்குப் பின்னர் இடம்பெற்ற கேள்வி நேரம் ‘யாழ்ப்பாண மிளகாய்த்தூள்’ போட்டது போன்ற காரத்துடன் அமைந்தது. மதிய உணவின் போதிருந்தே அமைச்சர் கேள்விகளுக்கும் கருத்துகளுக்கும் முகம் கொடுக்க வேண்டி இருந்தது. ‘இடதுசாரிப் பாரம்பரியத்தில் வந்த நீங்கள் எப்படி இனவாத சக்திகளின் கை ஓங்கியுள்ள அரசின் அங்கமாக இருக்கின்றீர்கள்?’ என்றது முதல் ‘ஏபிஆச்சி தீர்வுத் திட்டம் குப்பைக் கூடையினுள் செல்லப் போகின்றது’ என்பதுவரை பல கேள்விகள் எழுப்பப்பட்டது.

ஏபிஆர்சி குழுவில் முன்னர் அங்கம் வகித்த எஸ் தவராஜா இக்கேள்வி நேரத்திற்குத் தலைமை தாங்கினார். ராஜேஸ் பாலாவின் குறுகிய அறிமுகத்துடன் நிகழ்வு ஆரம்பமாகியது. கேள்விகளை அரசியல் தீர்வு என்ற வரையறைக்குள் வைத்திருக்க வேண்டும் என அவர் வரையறை செய்திருந்த போதும் கேள்விகள் பல அம்சங்களிலும் எழுப்பப்பட்டது. ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு, ஏபிஆர்சி தீர்வுச் செயன்முறையில் நம்பிக்கை கொள்ள வேண்டும், அரசு வன்னி முகாம் மக்களை விரைவில் மீள்குடியமர்த்துவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது, 30 ஆண்டுகால யுத்தம் அண்மையிலேயே முடிந்துள்ளதால் அரசு சமாதானச் சூழ்நிலையை ஏற்படுத்துவதற்கும் இன்னமும் காலம் அவசியப்படுகின்றது போன்ற கருத்துக்களே அமைச்சரின் பேச்சிலும் பதில்களிலும் தொனித்தது.

புலம்பெயர்ந்த தமிழர்கள் புலிகளுடைய யுத்தத்திற்கு ஆதரவு வழங்கினர், புலம்பெயர்ந்த தமிழர்கள் வன்னி முகாம்களில் உள்ள மக்களுக்கு உதவத் தவறிவிட்டனர் போன்ற குற்றச்சாட்டுகளையும் அமைச்சர் திஸ்ஸ விதாரன அங்கு தெரிவித்தார். மற்றுமொரு சமயத்தில் வெறும் விமர்சனங்களாக அல்லாமல் விமர்சனங்களை ஆரோக்கியமாக முன்வைத்து காத்திரமான முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

அமைச்சரின் கருத்துக்களில் வந்திருந்த பெரும்பான்மையினர் உடன்படாத நிலையில் ஒருவர் மாறி ஒருவராக இலங்கை அரசின் இனவாத செயன்முறைகள் பற்றியும் அரசியல் தீர்வை அரசு தட்டிக்கழிப்பதைப் பற்றியும் கேள்வி எழுப்பினர். (இங்கு தேசம்நெற் வாசகர்களால் முவைக்கப்பட்ட கேள்விகளும் அமைச்சரிடம் கேட்கப்பட்டது. கேள்வி பதில்கள் முழுமையாக விரைவில் தரப்படும்.)

மதிய உணவு முதல் ஐந்து மணிநேரம் இடம்பெற்ற இச்சந்திப்பில் அமைச்சரின் கருத்துடன் உடன்பட்டு ஒரே ஒருவரே தனது கருத்தினை முன்வைத்தார். இவர் இலங்கையில் இன சமத்துவம் என்பது கடைப்பிடிக்கவில்லை எனவும் குறிப்பாக தமிழ் தலைமைகளும் இனவாதக் கருத்துக்களை வெளியிடுவதாக அவர் குற்றம்சாட்டினார்.

வன்னி முகாம் மக்களின் நிலைதொடர்பாக அங்கு எழுப்பப்பட்ட கேள்விகள் சிலவற்றுக்கு சபையில் இருந்த துணைத் தூதுவர் ஹம்சா பதிலளித்தார். வன்னி முகாம்களில் உலக உணவுத்திட்டம், ஹரித்தாஸ் போன்ற சர்வதேச என்ஜிஓ க்கள் உட்பட 53 என்ஜிஓக்கள் இலங்கையில் செயற்படுவதாகவும் மே 18க்குப் பின் பிபிசி போன்றவற்றின் ஊடகவியலாளர்கள் உட்பட 300 ஊடகவியலாளர்கள் வன்னி முகாம்களுக்கு சென்று வந்தள்ளாதாகக் கூறினார். ஆனால் இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர்களை அரசு வன்னி முகாம்களுக்குச் செல்ல அனுமதிக்கவில்லை. துணைத்தூதுவர் ஹம்சா மேலும் குறிப்பிடுகையில் 70 000 வன்னி முகாம்களில் உள்ள மக்கள் தங்கள் சொந்த இடங்களுக்கு அனுப்பப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் இவ்வாண்டு முடிவிற்குள் பெரும்பாலானவர்கள் குடியமர்த்தப்பட்டு விடுவார்கள் என்றும் அடுத்த ஆண்டின் முற்பகுதிக்குள் வன்னி முகாம்கள் மூடப்பட்டுவிடும் என்றும் தெரிவித்தார்.

நிகழ்ச்சிகளின் இறுதியாக சிங்கள ஊடகவியலாளர் ஒருவர் ஊடகவியலாளர் திஸ்ஸநாயகத்திற்கு வழங்கப்பட்ட தண்டனை பற்றிக் குறிப்பிட்டு அமைச்சர் வெளியிட்ட கருத்துக்களுடன் முரண்பட்டதுடன் ‘திஸ்ஸநாயகத்தின் மீது தொடரப்பட்ட வழக்கு முற்றிலும் சோடிக்கப்பட்ட வழக்கு’ எனக் குற்றம்சாட்டினார். மேலும் ‘திஸ்ஸநாயகம் புலிகளிடம் நிதிபெற்றதாகக் குற்றம்சாட்டப்பட்ட காலப்பகுதியில் புலிகள் இலங்கையில் தடை செய்யப்பட்டு இருக்கவில்லை’ என்றும் அவர் குறிப்பிட்டார். அவர் மேலும் தொடர்கையில் ‘ஜேவிபி தலைவர் ரோகன விஜயவீர கொல்லப்பட்ட போது அவருடைய மனைவி கொல்லப்படவில்லை. ஆனால் வே பிரபாகரன் சரணடைந்த பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டார். அவருடைய முத்த பிள்ளைகள் கொல்லப்பட்டதற்கு நியாயம் கற்பிக்கலாம். ஆனால் மனைவி மதிவதனி கொல்லப்பட்டார். 11 வயது மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்டார். இது எந்தவகையில் நியாயம்’ என அவர் கேள்வி எழுப்பியதுடன் ‘இவர்கள் தமிழர்கள் என்பதற்காகவே அவர்கள் கொல்லப்பட்டனர்’ எனவும் அவ்வூடகவியலாளர் குற்றம்சாட்டினார்.

கூட்டத்தின் இடையே இவ்வூடகவியலாளர் தனது கேள்வியை எழுப்பிய போது அவர் கூட்டவிதிமுறைகளை மீறியதாக அவர் தொடர்ந்து கேள்வியை எழுப்ப அனுமதிக்கப்படவில்லை. அதனால் பின்னர் அவருடைய கேள்வி இறுதிக் கேள்வியாக அமைந்தது. அமைச்சருடைய பதில்கள் தன்னை ஆத்திரமூட்டுவதாக அமைந்ததால் தான் இடையே குறிப்பிட்டதாகக் கூறிய அவ்வூடகவியலாளர் மேலுள்ள கேள்வியை எழுப்பினார். ஆனால் நிகழ்வுக்கு தலைமையேற்ற எஸ் தவராஜா இக்கேள்விகளுக்கு அமைச்சர் பதிலளிக்க வேண்டியதில்லை எனத் தெரிவித்தார்.

இதனை தேசம்நெற் ஆசிரியர் த ஜெயபாலன் உடனடியாகக் கண்டித்ததுடன் அவருடைய கேள்விக்கு பதிலளிக்க வேண்டியது அவசியம் என்ற கோரிக்கையையும் வைத்தார். அதற்குள்ளாக மண்டபம் கையளிக்கப்பட வேண்டிய நிலையில் கூட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. பலரும் இக்கேள்விக்கு பதிலளிக்காமல் தட்டிக்கழிக்கப்பட்டதைக் கண்டித்தனர். எஸ் தவராஜாவின் அந்த முடிவு விமர்சனத்திற்குள்ளானது.

மதிய உணவில் 25 வரையானோரும் கேள்வி நேரத்தில் 70 வரையானோரும் கலந்துகொண்டனர். பொதுவாக விடுக்கப்பட்ட அழைப்பிற்கு தங்கள் வரவை உறுதிப்படுத்தியவர்கள் மட்டும் நிகழ்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர். அமைச்சருக்கான பாதுகாப்பு ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டு இருந்தது. இந்நிகழ்வு ரி கொன்ஸ்ரன்ரைன் ராஜேஸ் பாலா எஸ் தவராஜா ஆகியோரால் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் நிகழ்வின் ஆரம்பத்தில் லிற்றில் எய்ட் ஏற்பாடு செய்ததாக அறிவிக்கப்பட்டது தன்னுடைய தவறு என்றும் அதற்கு வருந்துவதாகவும் ரி கொன்ஸ்ரன்ரைன் தெரிவித்தார்.

வழமையாக கேள்விகளுக்கு முகம்கொடுக்காத கேள்வி கேட்கப்படுவதை அசௌகரியமாகக் காண்கின்ற ஒரு சூழலே தமிழ் மக்கள் மத்தியில் காணப்பட்டு வந்தது. குறிப்பாக தமிழ் அரசியல் தலைமைகள் எப்போதும் தங்களை கேள்விக்கு உட்படுத்துவதைத் தவிர்த்தே வந்திருந்தன. தாங்கள் பதிலளிக்க விரும்பாத கேள்விகள் கேட்கப்படுவதை அவர்கள் விரும்புவதில்லை. ஆனால் அமைச்சர் திஸ்ஸ விதாரனவை லண்டன் தமிழர்கள் கேள்விக்கு உட்படுத்தியதுடன் அரசு பற்றிய தங்கள் அச்சத்தையும் நம்பகத் தன்மையின்மையையும் உறுதிபடத் தெரிவித்தனர். இலங்கை அரச பிரதிநிதிகள் தமிழ் மக்களது கேள்விக்கு நேரடியாக முகம்கொடுக்க வைப்பது அவசியமாகின்றது. ஊடகவியலாளர்கள் தங்கள் தொழில்சார்ந்து அரசைக் கேள்விக்கு உட்படுத்தும் அதே சமயம் சாதாரண பொதுமகனும் தனது உணர்வு சார்ந்து அவர்களைக் கேள்விக்கு உள்ளாக்கும் வாய்ப்புகள் இதன் மூலம் ஏற்படுத்தப்படுகின்றது.

இலங்கைக்கு மேலும் ரூ. 500 கோடி: ப.சிதம்பரம்

18-pc-karuna.jpgஇலங் கையில் முகாம்களி்ல் உள்ள தமிழர்களை மீள் குடியமர்த்துவது குறித்து முதல்வர் கருணாநிதியுடன் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இன்று ஆலோசன நடத்தினார்.

சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் பேசிய சிதம்பரம், அண்மையில் தமிழக எம்.பிக்கள் குழு இலங்கை சென்று, முகாம் தமிழர்களை சந்தித்து நிலவரங்களை அறிந்து வந்துள்ளது. அவர்கள் ஆய்வறிக்கையும் வழங்கியுள்ளனர். இது தொடர்பாக டெல்லியில் ஆலோசனை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து முதல்வர் கருணாநிதியுடன் இன்று ஆலோசனை நடத்தினேன். இலங்கை தமிழர் மறுவாழ்வு மற்றும் அவர்களை சொந்த இடங்களுக்கு குடியமர்த்த என்னென்ன அறிவுரை இலங்கை அரசுக்கு வழங்க வேண்டும் என்பது குறித்துப் பேசினோம்.

முதல்வர் கருணாநிதியுடன் ஆலோசித்தது குறித்து மத்திய அமைச்சரவையிலும் விவாதிக்கப்படும்.

எம்.பிக்கள் குழு இலங்கை சென்று வந்த பிறகு இதுவரை சுமார் 5,000 தமிழர்கள் சொந்த ஊர்களில் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.  இது தொடக்கம் தான் என்பதால் இந்தப் பணி மெதுவாக உள்ளது. போக போக அனைவரும் வேகமாக குடியமர்த்தப்படுவார்கள் இதுபற்றி இலங்கைக்கு போதிய அறிவுரை வழங்கப்படும். இலங்கை தமிழர் மறுவாழ்வுக்காக ஏற்கனவே ரூ.500 கோடி மத்திய அரசு  வழங்கி உள்ளது. மீண்டும், இன்னும் ரூ.500 கோடி வழங்கவும் தயாராக உள்ளது.

இதுகுறித்து திட்ட அறிக்கை இலங்கை அரசிடம் இருந்து இன்னும் பெறப்படவில்லை. வந்த பிறகு தேவைப்பட்டால் நிதி ஒதுக்குவோம் என்றார் சிதம்பரம்.

குடாநாட்டு வங்கி சேவைகளை பலப்படுத்த நடவடிக்கை – மத்திய வங்கி ஆளுநர் கப்ரால் நாளை யாழ்; விஜயம்

மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் நாளை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். குடாநாட்டில் 30 வருடங்களுக்கும் மேலாக நிலைகுலைந்து போய்க் கிடக்கும் வங்கிச் சேவைகளைப் பலப்படுத்துவதே இவரது விஜயத்தின் நோக்கமாகும்.

நாளை யாழ்ப்பாணம் செல்லும் ஆளுநர் கப்ரால் தேசிய அபிவிருத்தி வங்கியின் (NDB) கிளையொன்றைத் திறந்து வைப்பார். இந்த வங்கியின் கிளை திறக்கப்படுவது வரலாற்று முக்கியத்துவமானதாகக் கருதப்படுகிறது.

அபிவிருத்திகளுக்கு நிதி வழங்குதல், வர்த்தக வங்கிகளை அமைத்தல்,  கட்டுப்பணம் வழங்குதல், வீடமைப்பு நிதி,  நிதி முகாமைத்துவம்,  சொத்துக்களை அபிவிருத்தி செய்தல், காப்புறுதி ஆகிய வங்கிச் சேவைகளை வழங்கும் நோக்குடனேயே வங்கிகள் குடாநாட்டில் பலப்படுத்தப்படவுள்ளதாக அதிகாரி ஒருவர் கூறினார்.

குடாநாடு உட்பட நாட்டின் சகல பகுதிகளிலும் அமைதி ஏற்பட்டுள்ளதால் குடாநாட்டில் வங்கிகளின் தேவை எதிர்காலத்தில் அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

யாழ்ப்பாணத்தில் அச்செழுபகுதிக்குச் செல்லும் ஆளுநர் அபிவிருத்திக்கான கடன் வழங்கும் திட்டத்தை ஆரம்பித்து வைப்பார். இதற்காக மத்திய வங்கி 1.5 பில்லியன் ஷரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளது. கடந்த ஆண்டு இதற்காக 1.5 பில்லியன் ஒதுக்கப்பட்டிருந்தது.

அதற்கு மேலதிகமாக இந்தத் தொகை ஒதுக்கப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி மேலும் கூறினார்.

ஆளுநர் கப்ரால் நாளை யாழ்ப்பாணத்தில் இலங்கை வங்கியின் இரு கிளைகளைத் திறந்து வைக்கவுள்ளார். அங்கு விவசாய உபகரணங்கள் மற்றும் படகுகளை வழங்குவார்.

அதே நேரம்ää குடாநாட்டில் செயற்படும் வங்கிகளின் உயர் அதிகாரிகளையும் ஆளுநர் கப்ரால் சந்தித்துப் பேசவுள்ளார். சுமார் 200 வர்த்தகப் பிரமுகர்களை நாளை யாழ்ப்பாணத்தில் சந்திக்கும் அவர்ää அவர்கள் மத்தியில் உரையாற்றுவதோடுää அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் கலந்துரையாடவுள்ளார்.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த மத்திய வங்கியின் உதவி ஆளுநர் டபிள்யூ. எம். கருணாரத்னää வங்கிச் செயற்பாடுகளை பலப்படுத்தும் வகையில் யாழ்ப்பாணத்தில் மத்திய வங்கியின் கிளையொன்று நிறுவப்படுமெனக் கூறினார்.

அனுராதபுரம்,  மாத்தளை, மாத்தறை ஆகிய இடங்களில் மாத்திரமே மத்திய வங்கியின் கிளைகள் நிறுவப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணத்திலும் கிழக்கிலும் வர்த்தக நடவடிக்கைகள் விருத்தியடைந்து வரும் போது மத்திய வங்கியின் கிளைகள் அமைப்பது அவசியமென தெரிவித்த கருணாரத்னää முதலீட்டுச் சபை அதிகாரிகளுடன் திராட்சை தோட்டங்களைப் பார்வையிடவுள்ளதாகக் கூறினார். 

தலிபானுக்கு எதிராக முழு நேர தாக்குதல்

181009taliban.jpg பாகிஸ்தான் – ஆப்கான் எல்லைப்பகுதியில் சுமார் 30,000 பாகிஸ்தானிய ராணுவ வீரர்கள் தலிபான், அல் கய்டா தீவிரவாதிகளுக்கு எதிராக முழு நேர தாக்குதலுக்கு தயாராகியுள்ளனர்.

தெற்கு வாஜிரிஸ்தான் பகுதியில் தாலிபான் தீவிரவாத நடவடிக்கைக்கு சுமார் 175 பேர் கடந்த வாரங்களில் பலியானதால், இந்த ஒட்டுமொத்த தாக்குதல் நடவடிக்கை மேற்கொள்ளுப்பட்டு வருகிறது.

தெற்கு வாஜிரிஸ்தான் பகுதியில்தான் அமெரிக்கப் படைகள் மற்றும் நேட்டோ துருப்புகளுக்கு எதிரான தாக்குதல் மட்டுமல்லாது, பிற பகுதிகளிலும் பயங்கரவாதத் தாக்குதல் திட்டமிடப்பட்டுவதால் இந்த பகுதியில் ராணுவ நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தெற்கு வாஜிரிஸ்தானில் இந்த தாக்குதல்கள் வெற்றிகரமாக அமைந்தாலும், தீவிரவாதிகள் தப்பித்து ஆப்கானிற்கும் பிற பகுதிகளுக்கும் செல்லும் வாய்ப்பு அதிகமாக உள்ளது என்று அமெரிக்க உளவு அமைப்புகள் கணித்துள்ளன.

அம்னெஸ்டி இன்டெர்னேஷனல் அமைப்பு, இந்தப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் தொடங்கியது முதல் சுமார் 1 லட்சம் முதல் 1,50,000 வரை பொது மக்கள் பலர் தங்கள் இடங்களை காலி செய்து விட்டு புலம் பெயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல்களை பாகிஸ்தான் ராணுவம் மேலும் கடுமையாக தீவிரப்படுத்தியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பசில் ராஜபக்ஷவின் வெற்றிடத்திற்கு ஹேமால் குணசேகர நியமிக்கப்படவுள்ளார்

181009hemal_gunasekara.jpgஎதிர்வரும் 20ம் திகதி பசில் ராஜபக்ஷ தமது நாடாளுமன்ற பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாகவும், அவரது வெற்றிடத்திற்கு ஹேமால் குணசேகர தெரிவு செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கடந்த தென் மாகாணசபைத் தேர்தலில் ஆளும்கட்சியில் வெற்றியீட்டிய ஹேமால் குணசேகர அமைச்சரவை சாரா பெருந்தெருக்கள் அமைச்சராக நியமிக்கப்படக் கூடுமெனவும்  எதிர்வரும் 21ம் அல்லது 22ம் திகதிகளில் அவர் பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல்களில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை வழிநடத்தும் நோக்கில் பசில் ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினர் இராஜினாமா செய்யவுள்ளார்.

ஆறு வருடங்களில் சீனி உற்பத்தியில் நாடு தன்னிறைவு – அமைச்சர் சீ.பி.ரத்னாயக்க தெரிவிப்பு

181009cbrathnayakesss.jpgஎதிர்வரும் ஆறு வருடங்களில் சீனி உற்பத்தியில் நாட்டை தன்னிறைவு அடையச்செய்ய எதிர்பார்ப்பதாக அமைச்சர் சீ.பி.ரத்னாயக்க நம்பிக்கை தெரிவித்தார். கரும்பு ஆராய்ச்சி நிறுவனத்துக்கு 25 வருடங்கள் பூர்த்தி அடைந்ததை முன்னிட்டு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அண்மையில் நடைபெற்ற வைபவத்தில் உரையாற்றிய போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து கூறுகையில்.

நாட்டின் கரும்புச் செய்கையின் மேம்பாட்டுக்காக பல ஆக்கபூர்வமான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கரும்புச் செய்கையில் சிறந்த அறுவடையைப் பெறுவதற்கான நவீன தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்குப் பெற்றுக்கொக்கும் திட்டம் ஒன்றை கரும்பு ஆராய்ச்சி நிறுவனம் ஆரம்பித்துள்ளது.

தற்போது நாட்டில் 15000 ஏக்கர் நிலப்பரப்பில் கரும்புச் செய்கை மேற்கொள்ளப்படுகிறது. இதில் கூடுதலான உற்பத்தி மொனராகலை மாவட்டத்திலேயே இடம்பெறுகின்றது. கரும்பு உற்பத்தியை மேலும் நான்கு மாவட்டங்களுக்கு வியாபிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக மேலதிக பயிர்ச்செய்கை தொடர்பான அமைச்சர் சீ.பி.ரத்னாயக்க தெரிவித்தார்.

அதன்படி அம்பாறை,  பதுளை, அநுராதபுரம்,  குருணாகல் ஆகிய மாவட்டங்களிலும் கரும்புச் செய்கை விஸ்தரிக்கப்படவுள்ளது. இப்பிரதேசங்களில் 5 தொழிற்சாலைகள் அமைக்கப்படவுள்ளன. கரம்புச்செய்கைக்கு ஏற்ற மண்வளம்கொண்ட வடக்கின் கிளிநொச்சி பகுதியையும் தெரிவு செய்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இதேவேளை கரும்புச் செய்கையின் இடைக்கால உற்பத்திகளான எத்தனோல் எரிபொருள்,  உரம் மற்றும் விலங்கின உணவுப் பொருள் உற்பத்திகளை அதிகரிக்கவும் இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது.

கரும்பு உற்பத்திக்கான செலவினங்களைக் குறைக்கும் வகையில் கரும்பு ஆராய்ச்சி நிறுவனம் நவீன உபகரணங்களையும்; வெளிநாட்டு உயிரி நோய் தடுப்பு நடவடிக்கையையும் அறிமுகம் செய்துள்ளது.

இவ்வாறான திட்டத்தின் மூலம் இன்னும் 6 வருடங்களில் சீனி உற்பத்தியில் நாட்டை தன்னிறைவு அடையச் செய்யலாம் என அமைச்சர் தெரிவிக்கின்றார்.
 

புத்தளம் மாவட்ட குளங்கள் புனரமைப்பு!

sri-lanka.jpgபுத்தளம் மாவட்டத்தில் உள்ள கருவெலகஸ்வௌ பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தூர்ந்து போயுள்ள சிறிய நீர்ப்பாசனக்குளங்கள் புனரமைக்கப்படவுள்ளன.  தேசத்தை கட்டியெழுப்பும்  தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு இந்த புனரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் எதாவெட்டுறுவௌ, கோண்கஸ்வௌ,  கொலம்பகஸ்வௌ,  கோன்வௌ, பளுகஸ்வௌ போன்ற குளங்களே புனரமைக்கப்படவுள்ளன.