நாட்டின் இறைமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் கௌரவத்திற்கும் பாதிப்பு ஏற்படாத வகையிலேயே ஜீ.எஸ்.பி.வரிச்சலுகையை நீடிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என ஏற்றுமதி அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று காலை நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பிரத்தியேகமாகக் கலந்துகொண்டு உரை நிகழ்த்திய போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்;. அவர் தொடர்ந்து கூறுகையில்.
ஜீ.எஸ்.பி. வரிச்சலுகை இல்லாமல் ஒன்றுமே செய்ய முடியாது. எனவே அதற்காக வேண்டி எது வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் ஒருபோதும் இல்லை என்றும் இதற்காக கெஞ்சப்போவதில்லை என்றும் திட்டவட்டமாகக் கூறிக்கொள்கறேன். ஜீ.எஸ்.பி. வரிச்சலுகைக்கான காலத்தை மேலும் நீடிக்கச் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் அமைச்சரவை அமைச்சர்கள் நான்கு பேரைக் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இநதக்குழு ஐரோப்பிய ஒன்றியத்துடன் தொடாந்து பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றது.
இலங்கை தொடர்பான வெளிநாடுகளின் விமர்சனங்களை அரசாங்கம் ஒரு போதும் ஏற்றுக்கொள்வதில்லை. விமர்சனங்களுக்கு ஏற்ற விளக்கங்களை ஐரோப்பிய ஒன்றியத்துக்கு நாம் வழங்கி வருகின்றோம்.
ஊதாரணத்துக்கு ஒரு விடயத்தைக் கூறுகின்றேன். நாட்டில் நீதி நிலைநாட்டப்படவில்லை என்றும் சட்டத்தில் சுயாதீனம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்ட விமர்சனத்துக்கு தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டது. பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக வீதி சோதனைச் சாவடிகள் போடப்பட்டன. இவ்விடயத்தில் தலையிட்ட உயர் நீதிமன்றம் அவற்றை நீக்குமாறு உத்தரவிட்டது. அதன்படி அரசாங்கம் உடனடியாக அவற்றை நீக்கிவிட்டன. அதன் மூலம் சட்டத்தை அரசாங்கம் கடைபிடிப்பதும் நீதிமன்றங்கள் சுயாதீனமாக இயங்குவதும் சுட்டிக்காட்டப்பட்டது. இவ்வாறு பல விடயங்களுக்கு தெளிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன. மேலும் மூன்று வருட காலத்துக்கு இந்தச் சலுகையைக் கேட்டுள்ளோம் அது தொடர்பான விளக்கத்துக்கான தகவல்களை பிரஸல்ஸ் நகரிலுள்ள இலங்கைக்கான தூதுவர் ஊடாக வழங்கி வருகின்றோம்.
வெளிநாடுகள் எதிர்பாராத வகையில் ஜனாதிபதி பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவந்து நாட்டில் அமைதியை நிலவச்செய்துள்ளதுடன் பாரிய அபிவிருத்திக்கான வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளதையும் சுட்டிக்காட்டி உள்ளோம். இதனை ஊக்குவிக்கும் வகையில் வரிச்சலுகையை வழங்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்தைக் கேட்டுள்ளோம்.
இந்த வரிச்சலுகையால் ஆடை தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு நன்மை கிட்டுகிறது. கிராமப் புறங்களிலேயே இத்தொழிற்சாலைகள் உள்ளன. கிராமப் பெண்களே இதனால் கூடுதல் பயனடைந்து வருகின்றார்கள். அவர்களின் நன்மை கருதி ஜீ.எஸ்.பி. வரிச் சலுகை வழங்கப்பட வேண்டும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.