”குறிக்கோள் இல்லாத வாழ்க்கை முகவரியில்லாத கடிதத்திற்குச் சமம்” என்பர். இது போல் தான் மாணவ சமூகமும் குறிக்கோள், இலட்சியம் இல்லாமல் இருந்தால் எதிர்காலம் ஓர் இருண்ட பாதை என்பதை ஆரம்ப காலத்தில் இருந்தே மாணவ மனதில் நன்கு பதிய வைத்து மாணவர்களை சீரிய வழியில் வழிநடத்துவதில் ஆசிரியர்களின் பங்கு விசாலமானவை. தனது வழிகாட்டலின் மூலம் கிடைக்கும் வெற்றியை பார்க்கும் ஆசிரியர்களின் மனதில் தோன்றும் மகிழ்ச்சியை அளவிட முடியாது. தன்னிடம் ஒப்படைக்கப்படும் மாணவனை நல்ல மாணவனாக ஆக்குவதோடு, நல்ல மனிதனாக மாற்றும் பொறுப்பும் ஆசிரியர்களுக்கு இருக்கிறது. அதே போல் ஆசிரியர்கள் என்பவர்கள் மாணவ சமூகத்தை உருவாக்குபவர்கள் அல்ல, மாறாக உயிரூட்டுபவர்கள் என்றாலும் மிகையாகாது.
இன்று அக்டோபர் மாதம் 6ஆந் திகதி – அனைத்துலக ஆசிரியர் தினத்தை உலகில் பெரும்பாலான நாடுகள் கொண்டாடுகின்றன. ஆசிரியர் தினம் சில நாடுகளில் விடுமுறை நாளாகவும், சில நாடுகளில் பணி நாளாகவும் உள்ளது.
1994ஆம் ஆண்டு முதல் இன்றைய தினத்தை ‘உலக ஆசிரியர்கள் தினமா’க கொண்டாடி வருகின்றனர். ஆசிரியர்களின் மேன்மையை வருங்கால சந்ததியினரும் உணரும் விதமாகவும், அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் இது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அதேநேரம், சில மேற்கத்தைய நாடுகள் அக்டோபர் 5ஆந் திகதியை ஆசிரியர் நாளாக கொண்டாடுகின்றன. இந்தியா செப்டம்பர் 5ஆந் திகதியை இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும் முனைவருமான சர்வபள்ளி இராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் திகதியை ஆசிரியர் நாளாகக் கொண்டாடுகின்றது. பொதுவாக ஆசிரியர் தினம் வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு நாட்களில் கொண்டாடப்பட்டாலும்கூட, இத்தினத்தின் நோக்கம், குறிக்கோள் பொதுவானதே. இலங்கையில் அக்டோபர் 6ஆந் திகதி ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகின்றது.
ஆசிரியர் தினம் என்பது பயிற்றுவிக்கும் ஆசான்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் கொண்டாடப்படும் ஒரு நாளாகும். மாணவனுக்கு ஞானத்தின் சுடரை ஏற்றுகிற பணி ஆசிரியருடையது. அவர்களை நன்றியுடன் நினைவு கூரவும், அவர்களின் பணி தொடர வாழ்த்துவதுமே ஆசிரியர் தினம் கொண்டாட்டங்களின் பிரதான எதிர்பார்க்கையாகும்.
மனிதனை மனிதனாக, உருவாக்கும் சிற்பிகள் என்று ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகளைச் சொல்வதுண்டு. மனிதனை முதன்மைப் படுத்த உரமாக இருப்பவர்கள் ஆசிரியர்கள் என்றால் அது மிகையாகாது. தன்னிடம் ஒப்படைக்கப்படும் மாணவர்களை வாழ்க்கை என்றால் என்ன? இதில் மாணவ, மாணவி சமூகத்தின் பங்கு எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு தெளிவை ஆசிரியர்கள் தான் கற்றுக் கொடுக்கின்றனர்.
ஆசிரியர்களின் பணியைக் கொண்டாட ஒரு தினத்தை மட்டும் ஒதுக்குவது முறையல்ல என்றும் சிலர் வாதிடுவர். ஏனெனில், இவர்களின் பணி நாள்தோறும் பல்வேறுபட்ட கோணங்களில் பல்வேறுபட்ட பரிணாமங்களை தோற்றுவித்துக் கொண்டே இருக்கின்றன. எனவே, இந்நிமிடம் வரை உலகில் நிகழும், நிகழ்த்தப்படும் மாற்றங்கள், வியப்புக்கள் அத்தனையும் நிகழ்த்தப்படுவது எங்கோ ஒரு மூலையில் தன்னலம் கருதாமல் ஓர் ஆசானால் உருவாக்கிய அந்த மாணவச் சமூகத்தினால் தான் என்பதை வைத்தே அதனை ஒரு தினத்துக்கு மாத்திரம் மட்டுப்படுத்தக்கூடாது என்பது இவர்களின் வாதமாகும். உலகில் வாழ்ந்த, வாழும், வாழப்போகும் ஒவ்வொரு ஜீவனுக்கும் பின்னால் ஓர் ஆசான் இருந்தான், இருக்கிறார், இருப்பார் என்பதே யதார்த்தமாகும்.
ஒரு சிறந்த ஆசிரியர்களின் பண்புகள், குணங்களை பார்க்கும் மாணவ, மாணவிகளின் மனதில் அப்படியே பதியும். அதனால் ஆசிரியர்கள் தங்களை மாணவர்களின் காலக் கண்ணாடி என்ற எண்ணத்தில் தான் பணியாற்றி வருகின்றனர். அப்படி பணியாற்றுவதன் மூலம் கடினமாக உழைத்து வாழ்வில் ஒளிரும் மாணவ சமூகத்திற்கு ஆசிரியர்கள் உரிமையாளர்களாக மாறுகின்றனர். குரு, ஆசான், ஆசிரியர், வாத்தியார், இப்படி பல அவதரங்கள் கொண்ட மொத்த உருவம் ஆசிரியர். உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் வார்த்தைக்கு வார்த்தை எதிர்ப்பதம் உண்டு. ஆனால் ஆசான் என்ற ஒரு வார்த்தைக்கு இலக்கண வித்தகர்கள் எதிர்மறை வார்த்தை தரவில்லை.
ஒரு சமூகம், அதி உன்னத நிலை அடைந்து இருந்தால், நிச்சயமாக அதன் பின்னால் ஆசிரியர் சமூகம் இருப்பதாக அர்த்தம். ஒரு சமூகம் தாழ்ந்து போனால், ஆசிரியர் சமூகம், தனக்கான பணியை சரிவர செய்திடவில்லை என அர்த்தம். வேறு எந்த துறையை விடவும் அதிக பொறுப்புகளும், அதிக முக்கியத்துவமும் நிறைந்தது அவர்கள் பயணம். மாணவர்களுக்கு அதிகம் தேவைப்படுவது, என்றென்றுமான ஊக்கமும், தன்னம்பிக்கையும், நன்னெறிகளும்…. இதை சரியாக வழங்கி விட்டால் அங்கே ஆசிரியர் வேலை அதன் முழு நிறைவை எட்டியதாக அர்த்தம். ஒரு மாணவன் ஆசிரியரை சேரும் தருணத்தில், வெறும் மண் கலவையாய் மட்டுமே உள்ளான். அவனை தேவையான வடிவில் வார்ப்பது ஆசிரியனின் பணியாக உள்ளது.
தெளிவான, சிறப்பான மாணவ சமூகத்தை உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்கு முதன்மையானது என்பதை இங்கு யாரும் மறுக்கமுடியாது. அதிலும் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களின் உழைப்பினை தான் நாம் அதிகம் பாராட்ட வேண்டும். சிறு குழந்தைகளுக்குச் பாடங்களை அடித்தோ, அல்லது மிரட்டியோ கற்றுக் கொடுக்க முடியாது. அப்படிச் சொல்லிக் கொடுத்தாலும் அவர்களுக்கு ஏறாது. குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் பொழுது அசிரியர்கள் குழந்தைகளாகவே மாறிவிட வேண்டும். அப்பொழுது தான் அவர்கள் தங்களின் முழுக்கவனத்தையும் ஆசிரியர்கள் மீது விழும். அப்படி குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் பொழுது அவர்களின் மழலை பேச்சும், மழலைச் சிரிப்பையும் காணும் பொழுது புதிய உலகிற்குச் சென்ற ஓர்; உன்னத உணர்வு மனதில் ஏற்படும். அதே போல் கிராமத்தில் இருக்கும் பள்ளிகளில் பணியாற்றுவதில் கிடைக்கும் மகிழ்ச்சி சற்று வித்தியாசமானது. அங்கு ஆரம்பப் கல்வி படிக்கும் மாணவன் பின் வாழ்வின் எத்தகைய உயர்ந்த நிலைக்குச் சென்றாலும் அப்பள்ளியையும் ஆசிரியர்களையும் மறப்பது இல்லை.
ஒரு நாட்டின் எதிர்கால தலைவிதி ஒவ்வொரு வகுப்பறைகளிலும் உருவாக்கப்படுகிறது என்பதை ஆசிரியர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். சிறந்த ஆசிரியர்கள் என்பவர்கள் செயலுக்கும் சொல்லுக்கும் இடையிலான இடைவெளியை குறைப்பவர்களாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் ஆசிரியர் பணி சிறப்பாக போற்றப்படும். அதே போல் மாணவர்களை சிறந்த பண்போடு உருவாக்க நினைக்கும் ஆசிரியர்கள் முதலில் ஒழுக்கமாக இருக்க வேண்டியது அவசியம். ஒரு ஆசிரியர் தவறு செய்தால் எட்டின அளவிற்கு எதிர்கால சந்ததிகள் பாதிக்கப்படுவர் என்று ஒரு கருத்து இருக்கிறது இதனை உணாந்து செயல்பட்டால் ஆசிரியர் பணி சிறக்கும், அதனால் நாடு, சிறக்கும்.
பிற பணிகளில் இல்லாதது ஆசிரியர் பணியில் இருக்கிறது. மாதா பிதா குரு தெய்வம் என்று தான் சொல்கிறோம். தமிழ் சிறப்பாயிரம் பாடலில் சொன்னது போல் அன்னையும் தந்தையும் ஒரு குழந்தையை உலகிற்கு தருகின்றனர். ஆனால் ஒரு ஆசிரியன் உலகத்தையே குழந்தைகளுக்கு தருகிறான். இந்த உண்மைகள் நிலைத்து நிற்க வேண்டும். ஆசிரியர் சமூகம் மேன்மேலும் வளர வேண்டும் என்று அனைவருமே நினைக்கின்றனர். மொத்தத்தில் இறந்த பிறகும் மண்ணில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் வரிசையில் ஆசிரியர்களுக்கு முதல் இடம் உண்டு என்பது ஓர் யாதார்த்த உண்மை.
ஒரு சமயம் அரிஸ்டாட்டில் தம் மாணவருடன் ஆற்றின் கரைக்கு வந்தார். மாணவர்களை கரையில் நிற்க வைத்தவர், நான் ஆற்றின் அக்கறை வரையில் சென்று ஆற்றில் ஏதாவது சுழல்கள் உள்ளதா என பார்த்து வருகிறேன் என்றார். அவர் ஆயத்தம் கொண்ட சமயம், அவரின் ஒரு மாணவர் தண்ணீரில் நீந்தி செல்வதை கண்டார். மறு கரை வரை சென்று திரும்பிய மாணவர், குருவே, சுழல்கள் இல்லை, நாம் தைரியமாய் ஆற்றை கடக்கலாம் என்றார். அந்த நிலையில், அரிஸ்ட்டாட்டில், உன்னை சுழல்கள் எடுத்து சென்றிருந்தால் என்னவாகி இருக்கும் என்றார். அதற்கு அந்த மாணவன், இந்த இந்த அலக்சாண்டர் போனால், ஆயிரம் அலேக்சாண்டர்களை உருவாக்கும் வல்லமை உள்ளவர் நீங்கள். ஆனால் ஒரு அரிதான குருவை இழந்தால் நாங்கள் பரிதவித்து போவோம் என்றான். அப்படி ஆசிரியர் மாணவர் உறவு அமைவது நல்ல சமூகத்துக்கு புது சுவாசத்தை கொணரும்.
ஆசிரியர் பணி எவ்வளவு தூய்மையாகக் காணப்பட்டாலும்கூட, அண்மைக் காலங்களில் ஆசிரியர்களைப் பற்றி தரக்குறைவான சில சம்பவங்களும் ஊடகங்களில் வெளிவருவதை நாம் காண்கின்றோம். விசேடமாக சில பாடசாலை ஆசிரியர்கள், அதிபர்கள் தமது மாணவிகளை பாலியல் துஸ்பிரயோகத்திற்குட்படுத்தும் செய்திகளை சில மேற்கத்தைய நாடுகளில் சில ஆசிரியைகள் மாணவர்களை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தும் செய்திகளையும் காண்கின்றோம். அதேபோல மாணவர்களை தவறான வழிக்கு இட்டுச் செல்லும் பல்வேறு சம்பவங்களையும் காண்கின்றோம். உண்மையிலேயே இது வேதனைப்படக் கூடிய ஒரு விடயமே. இத்தகைய சம்பவங்கள் மிக மிக சொற்பமாக இடம்பெற்றாலும்கூட, ஆசிரியர் சமூகத்தை இழிவுபடுத்தும் இவர்களை துஸ்பிரயோகம் செய்துவிட முடியாது. ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விசம் என்பர். எனவே, இத்தகைய ஆசிரியர்களை இனங்கண்டு சட்டரீதியாக கடுமையாக தண்டனைகளை வழங்கி ஆசிரிய தொழிலின் மாண்பினைப் பேண வேண்டியது சட்டத்துறையினரதும், நீதித்துறையினரதும் கடமையாகும்.
ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் தம்மை, தாம் முதலில் உணர வேண்டும். ஆசிரியசேவை மனதால் உணரப்பட வேண்டியது. ஏதோ விடுமுறைகள் நிறைந்த இலகுவான தொழில் என்று எண்ணாமல் தியாக உணர்வுடன் செய்யப்பட வேண்டிய சேவை என்பதை புரிந்து கொள்வது இன்றியமையாதது. ஆசிரியர்களான நாம் எப்போதும் எம்மை திருத்திக் கொள்ளும் மனப்பாங்கை வளர்க்க வேண்டும். மாற்றமே ஆசிரியரின் செயற்பாட்டு ரீதியான அடிப்படை வளர்ச்சியாகும். நாம் எதை செயற்படுத்த விரும்புகிறோமோ அதை முதலில் நாம் மாணவர்களுக்கு முன்மாதிரியாக செய்துகாட்ட வேண்டும்.
ஆசிரியர்களின் வார்த்தைகளையும், வர்ணிப்புகளையும் மாணவர்கள் கவனிப்பதை விட அவர்களின் நடத்தை, முக பாவம் என்பவற்றையே மாணவர்கள் முழுமையாக கிரகிக்கிறார்கள்.
ஆசிரியரின் நடத்தை தான் மாணவர்களின் நடத்தை ரீதியான மாற்றத்திற்கு முன்மாதிரியாக அமைகிறது. வாழ்க்கைக் கற்றலில் மாணவர்கள் 80% ஆசிரியர்களின் நடத்தை, செயற்பாட்டில் கற்றுக் கொள்கின்றனர். புத்தகக் கல்வி மட்டுமல்ல கல்வி சிறந்த பண்பாட்டு விழுமியங்கள், ஒழுக்கம், இணைப்பாடவிதானச் செயற்பாடுகள், சமூக தொடர்புகள் போன்ற அத்தனை துறைகளிலும் மாணவர்களை வழிகாட்ட வேண்டும். இங்கே ஆசான் பல்துறை வல்லுவனாக இருத்தல் அவசியம். அப்போது தான் மாணவர்களுக்கு எம் மீது மதிப்பும் மரியாதையும் ஏற்படும்.
வெற்றிகரமான ஆசிரியர் எனப்படுபவர், சகல வசதிகளையும் கொண்ட வகுப்பறையில் சிறந்த குடும்பப் பின்னணியையும் சிறந்த உள நிலையையும் கொண்ட மாணவனுக்கு கற்பித்து அம் மாணவனை முன்னேற்றுவதல்ல. மாறாக தான் கற்பிக்கும் ஒவ்வொரு மாணவனையும் பற்றி சகல விடயங்களையும் அறிந்து, பொருத்தமற்ற சுழலில், கல்வியறிவு குறைந்த பின்னணியில் இருந்து வரும் மாணவனை வளப்படுத்துவதே வினைத்திறன் மிகு ஆசிரியருக்கு வேண்டியது. இதுவே ஓர் ஆசானின் வெற்றியும், பெருமையுமாகும்.
நவீன காலத்தில் ஆசிரியர் தொழில் பணத்துடன் பின்னிப் பிணைக்கப்பட்டிருப்பது மிகவும் வேதனைக்குரிய விடயமாகும். குறிப்பாக இக்கால கட்டத்தில் பணத்தை மையமாகக் கொண்டு கல்வி விலைபேசப்படுகின்றது. இந்நிலை எதிர்காலத்தில் பெரும் சாபக்கேட்டை உருவாக்கலாம். பணத்தை சேகரிப் பதற்கான கல்வியை மட்டும் வழங்காது நல்ல பண்பாட்டு ரீதியான, ஒழுக்க விழுமியங்களை நிலை நாட்டும் நிறை கல்வியை ஆசிரியர்கள் வழங்குவது காலத்தின் தேவையாகும்.
ஆசிரியர் தொழில் புனிதத்துவம் மிக்கவை. தெய்வீகமானவை. எனவே, இத்தொழில் மகத்மீகத்தை உணர்ந்து ஒவ்வொரு ஆசிரியர்களும் செயற்பட வேண்டியது மிகவும் இன்றியமையாததாகும். ஏற்னகவே குறிப்பிட்டதைப்போல் “ஒரு குடத்துப் பாலுக்கு ஒரு துளி விசமாக” ஆசிரியர்கள் மாறுவதும் தவிர்க்கப்பட வேண்டும். இத்தினத்தில் இது குறித்து திடசங்கற்பம் பூணுவோமாக!