07

07

2009 ம் ஆண்டுக்கான சமாதானத்துக்கான நோபல் பரிசு தமிழர்களான ராஜன் கூல் சிறிதரனுக்கு? : நட்சத்திரன் செவ்விந்தியன்

Rajan_Hoole_UTHRSritharan_K_UTHR2009 ம் ஆண்டுக்கான சமாதானத்துக்கான நோபல் பரிசு இந்த வெள்ளிக்கிழமை பிரித்தானிய ஜி.எம்.ரி நேரம் காலை 9 மணிக்கு அறிவிக்கப்படவுள்ளது. இதில் மிக முக்கியமான விடயம் என்னவென்றால் இலங்கையைச் சேர்ந்தவருக்கு அதிலும் குறிப்பாக தமிழர் ஒருவருக்கு இம்முறை இவ்விருது கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது என்பதே. இவ்வகையில் மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க உறுப்பினர்களான ராஜன் கூல்லுக்கும் கோ.சிறிதரனுக்கும் இவ்வருட சமாதான நோபல் பரிசு பெறும் வாய்ப்பு அதிகமிருக்கிறது.

நோபல் பரிசுகளில் அதிகம் சர்ச்சைக்குரியது சமாதானத்துக்கான பரிசுகளே. ஏனைய பரிசுகள் துறைசார்ந்த அறிஞர்களால் தெரிவுசெய்யப்பட சமாதானத்துக்கான பரிசோ நோர்வே பாராளுமன்ற அரசியல்வாதிகளாலும் அவர்களை ஏய்க்கும் அமெரிக்க அரசாலுமே உண்மையில் தெரிவு செய்யப்படுகிறது. இந்த வகையில் அரசியல் மயப்படுத்தப்பட்ட விருது சமாதானத்துக்கான நோபல் பரிசு. இதனுடைய அர்த்தம் பரிசு பெற்ற அனைவருமே தகுதியற்றவர்கள் என்பதல்ல. ஹென்றி கிசிங்கர் சில இஸ்ரேலிய அரசுத்தலைவர்கள் சில அமெரிக்க அரசுத் தலைவர்கள் அன்வர் சதாத் முதலியவர்களுக்கு வழங்கப்பட்ட சமாதானப் பரிசுகள் ஏளனத்துக்கும் சர்ச்சைக்கும் உரியது என்றால் முகமட் யூனுஸ் வங்கரி மாதாய் கொபர்ச்சேவ் ஆங் சாங் சூ கீ போன்றவர்களுக்கு வழ்ஙகப்பட்டவைகள் மிகப்பொருத்தமானவைகள்.

சமாதானத்துக்கான நோபல் பரிசுகளில் தகுதி தகுதியின்மை மட்டுமன்றி வழங்கப்படுகின்ற கால நேரங்களும் மிகுந்த சர்ச்சைக்குரியவை. தலாய் லாமாவுக்கான விருது 1988 ம் ஆண்டுக்கு முதலே வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் சீன மாணவர் எழுச்சியை அடுத்து நடந்த தியனமென் சதுக்கப்படுகொலைகள் நடந்த 1989 ம் ஆண்டிலேயே தலாய் லாமாவுக்கு விருது வழங்கப்படுகிறது. கிழக்கு தீமோர் பாதிரியார் கார்லோஸ் பெலோ விடுதலைப் போராளி ராமோஸ் ஹோட்டா போன்றவர்களுக்கும் 1996 ம் ஆண்டுக்கு முதலே வழங்கப்பட்டிருக்க வேண்டும். மறுதலையாக கிளின்ரன் நிர்வாகத்தில் இந்தோனேசியா தொடர்பான கொள்கை மாற்றத்தை நாடி பிடித்துப் பார்த்த பின்னரே தீமோர்க்காரர்களுக்கு வழங்கப்பட்டது. ராப்லோயிட் பத்திரிகைகளுக்குரிய சூடு சுவாரசியம் பரபரப்பு என்பனவும் இப்பரிசுத்தெரிவில் உண்டு.  ஒரு பெரும் போர் முடிந்த பின்னர் சம்பந்தப்பட்ட இரு தரப்பிலிருந்தும் ஆட்களை தெரிவு செய்து “வஞ்சகமில்லாமல்”; பரிசு கொடுப்பார்கள். உதாரணம் வியட்னாம் போரை அடுத்து கிசிங்கருக்கும் வியட்னாமிய தலைவர் டக் தோவுக்கும் வழங்கப்பட்ட விருது. விவசாய மரபணு விஞ்ஞானி நோமன் போர்லோக் 1956 ம் ஆண்டிலேயே மெக்ஸிக்கோவில் பெரு விளைச்சலை நிறுவி சாதித்து விட்டார். ஆனால் 1965 இலிருந்து 1970 வரை அவர் “பஞ்சம் பிழைக்கும் பரதேசமாம்” இந்திய துணைக்கண்டத்துக்கு வந்து “படங்காட்டும்” வரை நோபல் மன்று அவரை கணக்கெடுத்துப் பார்க்கவில்லை.

இத்தகைய நோபல் சமாதானப் பரிசின் வரலாற்றை கூர்ந்து நோக்குகிற போதுதான் இம்முறை நம்மவர்க்களுக்கான முறை என்பது தெரிகிறது. அதிக அளவில் இவ்வாண்டில் உலகப் பத்திரிகைகளில் அடிபட்ட செய்தி இலங்கை அரசு வெல்ல முடியாது என்று நம்பப்பட்ட மரபு சாரா போர்க்காரர்களான விடுதலைப் புலிகளை வெற்றிகொண்டது. தென்னாசியாவுக்கு வெளியே புலம்பெயர்ந்து வாழ்கின்ற எட்டு இலட்சம் தமிழர்களில் பெரும்பாலானோர் செம்மறி ஆடுகளாக விடுதலைப் புலிகளின் மந்திரத்தை ஓதி உலக நாடுகளில் ஈழத்தில் ஒரு இனப்படுகொலை நடக்கிறது என தப்பாட்டம் ஆடியும் உலக ஊடகங்களின் கவனத்துக்கு வந்தார்கள். போதாக்குறைக்கு நோர்வேக்காரர்களும் சமாதான ஒப்பந்த மத்தியஸ்தர்களாக இங்கு சிக்குப்பட்டிருக்கிறார்கள். நோபல் மன்றத்திற்கு இது உத்தமமான பொருத்தம்.

உலக நாகரிகத்தின் முக்கியமான யூத முஸ்லீம் கிறிஸ்தவ மதங்கள் தோன்றிய பலஸ்தீனத்தின் பிரச்சனையே “தீர்த்துவைத்தோம்” என்று நோர்வேக்காரர்கள் 1994 ம் ஆண்டில் அரபாத்துக்கும் அப்போதைய இரு இஸ்ரேலியத் தலைவர்களுக்கும் நோபல் பரிசு கொடுத்து உலகத்தின் சமாதான மொத்த வியாபாரிகள் தாங்களே என்று உலகின் காதில் பூச்சுற்றினார்கள். ஆனானப்பட்ட அவர்களுக்கு ராஜபக்ஷ அரசாங்கம் முகத்தில் கரிபூசியது மட்டுமின்றி கன்னத்தில் அறைந்தும் அனுப்பியிருக்கிறது. மிகவும் நொந்து போயிருக்கிறார்கள் எரிக் சொல்கைம் போன்ற சர்வதேச சமாதான யாவாரிகள். இப்போதைக்கு அவர்களுக்கு ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு தாங்களும் பதிலுக்கு கரிபூச வேண்டும். அதற்கு ராஜபக்ஷவை அம்பலப்படுத்தி அவமானப்படுத்தும் ஒருவருக்கு நோபல் விருது கொடுக்க வேண்டும்.

மேலும் ராஜபக்ஷ பிறப்பால் அமெரிக்கரோ அல்லது யூதரோ இல்லை என்பதால் வியட்னாம் போர் முடிவு போல இரு தரப்பினருக்கும் பரிசு கொடுக்க முடியாது. எனவே இங்கு “போரில் தோற்ற” தமிழர் பிரதிநிதிகளான  மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க உறுப்பினர்களுக்கு பரிசு கொடுக்கலாம் என்றால் அதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. 2002 ம் ஆண்டு அமுலுக்கு வந்த போர் நிறுத்தத்தில் நோர்வேக்காரர்களான தங்களது மத்தியஸ்தத்தை அதிகம் விமர்சித்தது அதே யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமே. அதிஸ்ரவசமாக புலிகளின் மங்கு சனி காலத்திலிருந்து புலிகள் மடிந்ததுவரை மேற்குறித்த சங்கத்தின் அறிக்கைகள் அதிகமாக ராஜபக்ஷ அரசாங்கத்தையே விமர்சித்து வந்துள்ளன.

உண்மையைச் சொல்லப்போனால் 2005 ம் ஆண்டிறுதியில் தெரிவு செய்யப்பட்ட ராஜபக்ஷ அரசாங்கத்தின் ஜனநாயக விரோத போக்குகளை உலகுக்கு அம்பலப்படுத்தியது மேற்கூறிய மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க அறிக்கைகளே. திருமலையில் 5 மாணவர் மற்றும் 17 பிரெஞ்சு தொண்டர் நிறுவன உறுப்பினர் படுகொலை என்பனவற்றை நிகழ்த்திய இலங்கை இராணுவத்தினரை அம்பலப்படுத்தியது யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமே. புலிகள் துவம்சம் செய்யப்பட்ட பின்னர் யாழ் சங்கக்காரர் ராஜபக்ஷ அரசாங்கத்திலிருந்தே உயிராபத்தை எதிர்நோக்கியுள்ளார்கள். இதன் காரணமாகவே இவர்கள் இப்போது வெளிநாடுகளிலிருந்து இயங்குகிறார்கள். மேற்கூறிய காரணங்கள் காரணமாகவே நோர்வே மன்றின் கடைக்கண் பார்வை சங்கத்தின் மீது விழுந்துள்ளது.

பிறப்பால் ஒரு தமிழர் என்றாலும் ராஜன் கூல்லின் எழுத்துக்களுக்கூடாகவும் வாதங்களுக்கூடாகவும் வெளிப்படுவது ஒரு சமாதான இலங்கைக்கான சாத்தியமான திட்ட வரைவே. (பார்க்க அவரின் ஆங்கில நூலான The arrogance of power)

மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்துக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசு பெறும் அனைத்து தகுதிகளும் இருக்கிறது. இவ்விருது உண்மையிலேயே இவர்களுக்கு வழங்கப்பட்டடால் ஒரு மோசமான பாழாட்சியை நோக்கி இலங்கையை ஓட்டிச்செல்லும் ராஜபக்ஷ நிர்வாகத்துக்கு இது பேரிடியாக அமையும். காலத்தின் தேவையும் அதுதான்.

பங்குச் சந்தையில் பாரிய வளர்ச்சி; பிரதமர் நேரில் சென்று பாராட்டு

071009stock_mkt.pngஇலங்கையின் பங்குச் சந்தை என்றுமில்லாதவாறு மிகவும் சிறப்பாக இருந்ததென அறிவிக்கப் பட்டுள்ளது. சந்தையில் நேற்று ஆகக் கூடிய முதலீடு 1000 பில்லியன் ரூபாவாக இருந்தது. இலங்கை பங்குச் சந்தை வரலாற்றில் இது முதற்தடவை யாகும்.

பணவீக்கமும், வங்கி வட்டி வீதங்களும் குறைந்ததே இதற்கு காரணமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பங்குச் சந்தையில் ஏற்பட்டுள்ள இந்தப் பாரிய வளர்ச்சி நாட்டில் அபிவிருத்தி வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதையே காட்டுகிறது.

பங்குச் சந்தையில் திடீர் வளர்ச்சி ஏற்பட்டதையடுத்து பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க நேற்று கொழும்பு பங்குச் சந்தைக்கு திடீர் விஜயம் செய்தார்.  கொழும்பு உலக வர்த்தக நிலையத்திலுள்ள அலுவலகம் சென்ற பிரதமர் அங்கு அதிகாரிகளுட னும் பங்குச் சந்தை ஆணை யாளர் உதய சிறி காரிய வசத்தையும் சந்தித்துப் பேசினார். இலங்கையின் பங்குச் சந்தை 30 வருடங்களுக்குப் பின்னர் இந்தப் பாரிய வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.  இதற்காக உழைக்கும் அதிகாரிகள், மற்றும் ஊழியர்களை பிரதமர் ரட்ணசிறி பாராட்டினார்

தமிழருக்கு வேதியலுக்கான நோபல் பரிசு

071009venkatraman-ramakrishnan.jpgதமிழகத்தில் சிதம்பரத்தை பிறப்பிடமாகக் கொண்ட வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் அவர்களுக்கு இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.  தற்போது அமெரிக்க குடியுரிமையை பெற்றுள்ள அவருக்கு வேதியல் பிரிவுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

ரிபோசோம் கட்டமைப்பு மற்றும் செயல்பாடு தொடர்பில் அவர் செய்த ஆய்வுக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. மற்றோரு அமெரிக்க விஞ்ஞானிக்கும், இஸ்ரேலிய விஞ்ஞானிக்கும் இதே பிரிவுக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

தேர்தல் முடிவுகள் இரத்து செய்யப்படும் சாத்தியம் – தேர்தல் ஆணையாளர்

071009ec-com.jpgஅம்பாந் தோட்டை மாவட்டத்தில் இரு பகுதிகளில் தேர்தல் பிரசாரங்களிற்காக ஒட்டப்பட்ட பிரசுரங்கள் இன்னும் அகற்றப்படவில்லை என தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க இன்று பிற்பகல் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

அவை அகற்றப்படாவிடின் எதிர்வரும் 10 ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில் இரு பகுதிகளிற்குமான முடிவுகள் இரத்துச் செய்யப்படுமெனவும் தேர்தல் ஆணையாளர் இதன் போது எச்சரித்துள்ளார். 

மௌலவி ஆசிரியர் நியமனம் நவம்பரில்! கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தகவல்

210909ramzan.jpgமௌலவி ஆசிரியர் நியமனம் எதிர்வரும்  நவம்பர் மாதம் வழங்கப்படும் என கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். 
 
காலி ஆளுநர் கேட்போர் கூடத்தில் அண்மையில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றிலேயே இவ்வாறு தெரிவித்த அமைச்சர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,  இந்நியமனங்களை வழங்குவதற்கான  சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ள போதிலும் தென்மாகாண சபைத் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் இடம் பெற்று வருவதால் இந்நியமனத்தை உடனடியாக வழங்க முடியாதுள்ளது. இத்தேர்தல் முடிவடைந்ததும் இந்நியமனங்கள் வழங்கப்படும்.

மௌலவி ஆசிரியர் நியமனமனத்தை கடந்த 20 ஆண்டு காலமாக ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் வழங்க மறுத்து வந்துள்ளது. ஆனால் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் அதனை வழங்க முன்வந்துள்ளது. இதனால் இந்நாட்டு முஸ்லிம்கள் நன்றியுடன் செயற்பட வேண்டும்.

அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாட்டினர் ஜனாதிபதியை அலரி மாளிகையில் சந்தித்த போது விடுத்த வேண்டுகோளுக்கிணங்கவே இந்நியமனங்கள் வழங்கப்படவுள்ளன என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து நாவாலசிரியை ஹிலாரி மேன்டலுக்கு புக்கர் பரிசு

booker.jpgபுக்கர் பரிசை இங்கிலாந்தை சேர்ந்த நாவலாசிரியை ஹிலாரி மேன்டல் பெற்றுக்கொண்டார்.57 வயதான இவருக்கு 16வது நூற்றாண்டைச் சேர்ந்த கதையான உல்ப் ஹால் நூலுக்காக இந்த பரிசு கிடைக்கப்பெற்றுள்ளது. 1520களில் நடந்த நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்ட நாவல் உல்ப் ஹால் நூல் ஆகும்.லண்டனில் நேற்று இரவு இடம்பெற்ற நிகழ்ச்சியில் 50 ஆயிரம் பவுண்டு மதிப்பிலான புக்கர் பரிசை அவர் பெற்றுக் கொண்டார்.

புக்கர் பரிசை இந்தியாவைச் சேர்ந்த சல்மான் ருஷ்டி, அனிதா தேசாய், அரவிந்த் அடிகா, அருந்ததி ராய் ஆகியோர் முன்பு பெற்றுள்ளனர் எனப்து குறிப்பிடத்தக்கது.

இலங்கை முகாம்களில் உள்ள அகதிகளை உடனடியாக மீள்குடியமர்த்த முடியாது – இந்திய வெளிவிவகார அமைச்சர் கிருஷ்ணா கூறுகிறார்

krushnak.jpgஇலங்கை முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள 2.5 லட்சம் தமிழர்களை அவர்களின் சொந்த இடங்களில் உடனடியாகக் குடியேறச் செய்யமுடியாது என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தெரிவித்துள்ளார். பெங்களூரில் நடை பெற்ற செய்தியாளர் மாநாடொன்றில் கலந்து கொண்டு பேசுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கை அகதிகள் தொடர்பில் மேலும் அவர் கூறுகையில், இலங்கை அகதிகளுக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்கவேண்டும் என்று தமிழக முதல்வர் கருணாநிதி கோரியுள்ளார் இலங்கைத் தமிழர்கள் இரண்டரை இலட்சம் பேர் அங்குள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மறு வாழ்வு வழங்கும் படி இலங்கை அரசை வலியுறுத்தி கேட்டுள்ளோம். இலங்கையும் இதற்கு ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால் இதனை உடனடியாக செயற்படுத்த முடியாது..

இலங்கைத்தமிழர் வாழும் பகுதிகளில் பருவ மழை பெய்து வருகின்றது.மேலும் கண்ணி வெடிகளை அகற்றும் பணிகளும் நடை பெற்று வருகின்றன. இந்த பகுதிகளில் மீண்டும் குடி யேறலாம் என்று திருப்தி தெரிவிக்கும் பட்சத்திலேயே அவர்களின் குடியேற்றம் சாத்தியமாகும் என்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கூறினார்.

வரவு செலவுத் திட்டத்திற்குப் பதிலாக இடைக்கால கணக்கறிக்கை – அமைச்சரவை தீர்மானம்

அடுத்த ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத் திற்குப் பதிலாக இடைக்கால கணக்கறிக்கையொன்றைச் சமர்ப்பிக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

எம்பிலிப்பிட்டியவில் நேற்றுக் கூடிய விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். முதல் மூன்று மாதங்களுக்கான இடைக்கால கணக்கறிக்கையாகவே இது இருக்குமெனவும் அவர் கூறினார்.

வரவு செலவுத் திட்டம் அடுத்த மாதம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப் படவிருந்தது ஆயினும் பாராளுமன்றத்தின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு முற்பகுதியில் முடிவடைவதால் மேற்படி தீர்மானம் எடுக்கப் பட்டுள்ளது. 

தவறான போராட்ட வழிமுறைகள் தமிழ்பேசும் மக்களுக்கு அழிவையே தந்தது – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கருத்து

duglas.jpgகடந்த காலத்தில் முன்னெடுக்கப்பட்ட தவறான போராட்ட வழிமுறைகள் தமிழ்பேசும் மக்களுக்கு அழிவைத் தான் பெற்றுத் தந்துள்ளது என்பதனை இன்று அனைவரும் உணரக்கூடியதாக உள்ளது. ஆகவே மக்களின் விமோசனத்திற்காகத் தம்மை முழுமையாக அர்ப்பணித்துச் சேவையாற்றும் அரசியல் தலைமைகளை இனங்கண்டு அவர்களை வெற்றி பெறச் செய்வதன் மூலமே தமிழ்பேசும் மக்களின் எதிர்காலம் நிரந்தரமானதாகவும் நிம்மதியானதாகவும் அமையும் என சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறினார்

யாழ்.மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் ஒன்றியத்தின் 11 ஆவது ஆண்டு விழா யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் முன்பள்ளி ஆசிரியர்கள் ஒன்றியத்தின் செயலாளர் திரு.செல்வராஜா தலைமையில் இன்று (06) நண்பகல் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது,

முன்பள்ளி ஆசிரியர்களின்  பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை மூன்று முதல் ஆறு மாத காலத்திற்குள் மேற்கொள்வேன். முன்பள்ளி ஆசிரியர்கள் இந்த ஒன்றியத்தின் மீது நம்பிக்கை வைத்துச் செயற்பட வேண்டும்

மாகாண சபைக்கு ஊடாகவும் மாகாணக் கல்வியமைச்சின் மூலமாகவும் வடமாகாண ஆளுநருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதன் ஊடாகவும் முன்பள்ளி ஆசிரியர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும்.

அடுத்து வரும் ஆண்டு ஒரு தேர்தல் ஆண்டாக இருப்பதினால் உங்களது பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான திறவுகோல் உங்கள் கைகளிலேயே இருக்கின்றது. சரியான ஜனநாயகத் தலைமைக்கு வாக்களிப்பதன் மூலமே அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும்.

வரப்போகும் காலங்களில் கிடைக்கும் சந்தர்ப்பங்களை சரியாகப் பயன்படுத்த முன்வர வேண்டும் அதனால் எதிர்காலம் நிரந்தரமானதாகவும் நிம்மதியானதாகவும் அமையும் என்றார்

முன்பள்ளி ஆசிரியர்களில் சேவை மூப்பு அடிப்படையில் யாழ்.மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தேர்வு செய்யப்பட்ட  முன்பள்ளி ஆசிரியர்களுக்கு சான்றிதழ்களையும் பரிசில்களையும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கினார்

க.பொ.த. சா/த பரீட்சை: நிவாரண கிராமம்: 20ஆம் திகதிக்கு முன் விண்ணப்பங்களை ஒப்படைக்குமாறு வேண்டுகோள்

021009-dep-of-edu.jpgவவுனியா நிவாரணக் கிராமங்களில் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் முகாம் கல்வி இணைப்பாளர்களிடம் கையளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

நிவாரணக் கிராமங்கள், சரணடைந்தவர்களது புனர்வாழ்வு முகாம்கள் என்பவற்றிலிருந்து இம்முறை சுமார் 6,300 பேரளவில் க.பொ.த. சா/த பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.

பாடசாலை மாணவர்கள் அல்லாத தனிப்பட்ட பரீட்சார்த்திகள் தமது விண்ணப்பப் படிவங்களுடன் பரீட்சைக்குரிய கட்டணத்தை செலுத்த வேண்டியதில்லை. இவர்களுக்கு கட்டணம் அறவிடப்படாமலேயே பரீட்சைக்குத் தோற்ற சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது.

விண்ணப்பப் படிவங்கள் நான்கு விதமாக வழங்கப்பட்டுள்ளன.

1. புதிய பாடத் திட்டத்தின் கீழான பாடசாலை மாணவர்களுக்குரிய விண்ணப்பப்படிவம்.

2. பழைய பாடத் திட்டத்தின் கீழான பாடசாலை மாணவர்களுக்கான விண்ணப்பப்படிவம்.

3. பழைய பாடத்திட்டத்தின் கீழான தனிப்பட்ட பரீட்சார்த்திக்கான விண்ணப்பப்படிவம்.

4. புதிய பாடத் திட்டத்தின் கீழான தனிப்பட்ட பரீட்சார்த்திக்கான விண்ணப் பப்படிவம் என்பனவாகும்.

அத்துடன் இன்று வரை நிவாரணக் கிராமங்களிலிருந்து வெளியேறி வவுனியா மாவட்டத்தில் உறவினர்களுடன் தங்கியிருக்கும் மாணவர்களும் தாம் இணைகின்ற பாடசாலையின் ஊடாக க.பொ.த. சா/த பரீட்சைக்கு தோற்ற முடியும் எனவும் வவுனியா வலய கல்வி பணிப்பாளர் அலுவலகம் தெரிவிக்கிறது.

வவுனியா காமினி வித்தியாலயம், பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாம், பம்பை மடு புனர்வாழ்வு முகாம், வைரவ புளியங் குளம் முகாம் உட்பட அனைத்து நிவாரணக் கிராமங்களிலிருந்தும் சுமார் 6,300 பேரளவில் இப்பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.