2009ஆம் ஆண்டின் சமாதானத்துக்கான நோபல் பரிசு அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமாவுக்கு வழங்க நோபல் பரிசுக் குழுவின் தீர்மானம் இன்று 09ஆம் திகதி முற்பகம் 11 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இது சமாதானத்துக்கான 89ஆவது நோபல் பரிசாகும்.
உத்தியோகபூர்வ பரிசுவழங்கும் வைபவம் டிசம்பர் 10ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
சர்வதேச அரசியல், சூழலியல், ஜனநாயகம் விடயத்தில் அவரின் பாத்திரத்தை கருத்திற்கொண்டே இவ்விருத்தினை வழங்குவதற்கான ஆராய்வுகள் இடம்பெற்றதாக இந்த அறிவிப்பை வெளியிட்டவேளை பரிசுக்குழு தெரிவித்துள்ளது.
சமாதானத்துக்கான நோபல் பரிசு பெறும் 3வது அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா ஆவார். ஏற்கெனவே, 1906இல் தியடோர் ரூஸ்வெல்ட்டுக்கும், 1919இல் வூட்ரோ வில்ஸனுக்கும் வழங்கப்பட்டது. ஆனால் அவர்கள் பதவியில் இல்லாத காலத்திலேயே நோபல் பரிசு வழங்கப்பட்டிருந்தது. பதவியிலிருக்கும் போதே வழங்கப்பட்டது இதுவே முதன்முறை.
2007ஆம் ஆண்டுக்கான பரிசு அமெரிக்கவின் முன்னாள் உதவி ஜனாதிபதி அல்கோருக்கு வழங்கப்பட்டது. சூழலியல் குறித்த அவரது சேவையை கருத்திற்கொண்டே அது வழங்கப்பட்டிருந்தது.
இது குறித்து அமெரிக்க விவகாரங்களில் நிபுணத்துவமுள்ள ஒஸ்லோ பல்கலைக்கழக பேராசிரியர் ஊலே மோன் கருத்து தெரிவிக்கையில், தான் இது குறித்து அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்ததாகவும், பரக் ஒபாமாவை நோபல் பரிசுக்காக கணிப்பதற்கான காலம் போதாது என்றும், அவரின் குறுகிய கடமை காலத்தைக் கொண்டு கணித்தது சரியானதல்ல என்றும், ஆனால் மரபான அமெரிக்க தலைமையிலிருந்து மாறுபட்ட திசையில் சவாலினை எதிர்கொண்டபடி அவரது பயணத்தை இது ஊக்குவிக்கலாம் என்றார்.
இதே கருத்துபட வேறு பல அரசியல் நிபுணர்களும் உடனடியாகவே ஊடககங்களுக்கு கருத்து வெளியிட்டிருக்கிறார்கள்.
சமீப கால அவரது முயற்சிகளாக பேசப்பட்டுவரும் அணுஆயுதக் குறைப்பு, குவாத்தனாமோ முகாம் குறித்த விடயங்களிலும் அவரது முயற்சி உலக அளவில் அவருக்கான ஆதரவு அதிகரித்திருப்பதையும் அவர்கள் குறிப்பிடத் தவறவில்லை.
நோர்வேஜிய பிரதமர் தனது உரையில் இப்பரிசு அவர் முன்னால் உள்ள கடமைகளுக்கு உறுதுணையாய் இருக்கும் என அறிவித்திருக்கிறார்.
ஏறத்தாழ 150 தொடக்கம் 200 பேர் வரையிலானவர்களை இப்பரிசுத் தெரிவுக்காக ஆண்டு தோறும் ஆராயப்படும். சென்ற தடவை 205 பேர் ஆராயப்பப்பட்டார்கள். இதுவரை காலத்தில் அதிகமானோர் முன்மொழியப்பட்டது இந்த ஆண்டுதான். இம்முறை இப்பரிசுக்காக ஆராயப்பட்டவர்கள் வரிசையில், சிம்பாபே பிரதமர் மோர்கன் சுவாங்கிரய், கொலம்பிய அரசியலாளர் இங்கிரிட் பெத்தான்கோர்ட், ஆப்கானிய மனித உரிமை ஆணையகத்தின் தலைவர் சீமா சமார். ரஸ்ய மனித உரிமையாளர் ஸ்வெத்லானா கன்னுஷீனா. சீன மனித உரிமை செயற்பாட்டாளர் ஹ ஜியா.
அமைதிக்கான நோபல் பரிசு சுவீடனின் வேதியியல் ஆராய்ச்சியாளரும் தொழிலதிபருமான ஆல்பிரட் நோபல் அவர்களால் நிறுவப்பட்ட ஐந்து நோபல் பரிசுகளில் ஒன்றாகும். அவரது உயிலின்படி அமைதிக்கான பரிசு “யாரொருவர் நாடுகளினிடையே சகோதரத்துவத்தை வளர்க்க சிறந்த முயற்சி எடுப்பவரோ நிலவும் இராணுவத்தினை நீக்கவோ அல்லது குறைக்கவோ முயற்சி எடுத்தவரோ அமைதி மாநாடுகள் நிகழ காரணமாக இருக்கிறாரோ” அவருக்குக் கொடுக்கப்பட வேண்டும்.
நோபல் பரிசுப் பதக்கம்
ஆல்பிரட் நோபலின் உயிலின்படி இப்பரிசை நோர்வேயின்நாடாளுமன்றம் தேர்ந்தெடுத்த ஐவர் குழு கொடுக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் நோபலின் நினைவு நாளான டிசம்பர் 10 அன்று நோர்வே தலைநகர் ஓஸ்லோவில் நார்வே நாட்டு மன்னர் முன்னணியில் இப்பரிசு வழங்கப்படுகிறது. மற்ற நான்கு பரிசுகள் சுவீடனின் தலைநகர் ஸ்டொக்ஹோமில் வழங்கப்படும்போது இப்பரிசு மட்டுமே நோர்வேயில் வழங்கப்படுகிறது. நோபல் பரிந்துரை குழுவின் தலைவரிடமிருந்து நோபல் பரிசு பெறுபவருக்கு ஒரு பட்டயம்இ ஒரு பதக்கம் மற்றும் பரிசுப்பணத்தை உறுதிசெய்யும் ஆவணமும் வழங்கப்படுகிறது.
இந்தப் பரிசுக்குழுத் தலைவருடன் வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள் பிரேத்தியமாக அழைத்து சந்தித்து உரையாடியிருந்தோம்.. அதன் போது இத்தெரிவு குறித்த எதிர்ப்புகளை ஒப்புக்கொண்டார். பரிசு அறிவிக்கப்பட்ட தினத்தில் வெளிவந்த மக்கள் கருத்து இத்தெரிவு குறித்த தமது அதிருப்தியை நோர்வேஜியர்கள் பலர் வெளிக்காட்டி வருவதை வெளிப்படையாக்காண முடிகிறது.
வழமையான நோபல் பரிசுத் தெரிவில் அமெரிக்காவின் பங்கு இருப்பதான குற்றச்சாட்டில் எந்தவித உண்மையும் இல்லையென்றும், ஆனால் நோபல் கமிட்டியில் உள்ளவாகளுள் அரசியல் கருத்துடையவர்கள் இருப்பதை ஏற்றுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்திருந்தார் நோபல் பரிசுக்குழுத் தலைவர். ஏற்கெனவே 50களில் மகாத்மா காந்திக்கு பரிசு வழங்குவதனை எடுமையாக பிரித்தானியா எதிர்த்ததில் அது ஒத்தி வைக்கப்பட்டதையும் கடந்த வருடம் நோபல் பரிசுக் குழுத் தலைவருடனான உரையாடலின் போது அறிவித்திருந்ததை குறிப்பிட விரும்புகிறேன்.