10

10

10 பேர் கொண்ட தமிழக பாராளுமன்றக் குழு இன்று இலங்கை வருகை – டி. ஆர். பாலு, கனிமொழி, திருமாவளவன் உட்பட 10 பேர் பங்கேற்பு

baalu.jpgஇலங்கை நிலைவரம் குறித்து ஆராயவென தமிழகத்திலிருந்து பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழுவொன்று இன்று இலங்கை வருகிறது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பை ஏற்று இந்திய பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தமிழக உறுப்பி னர்களைக் கொண்ட குழுவினரே இன்று இலங்கை வரவுள்ளனர். தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பணிப்பிற்கமைய குழுவினர் இலங்கை வருகின்றனர்.

திராவிட முன்னேற்றக்கழகத்தின் உறுப்பினரான அமைச்சர் டி. ஆர். பாலு தலைமையில் வரும் இக்குழுவில் 10 பேர் அங்கம் வகிக்கின்றனர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அமைச்சர் டி. ஆர். பாலு, தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியின் புதல்வியும், இலங்கை விவகாரம் தொடர்பாக கலைஞரின் ஆலோசகருமான கனிமொழி, எம்.பிக்களான ரி. கே. எஸ். இளங்கோ, ஏ. கே. எஸ். விஜயன், கெலன் டேவிட்சன் ஆகியோரும் தமிழக காங்கிரஸ் கட்சியின் சார்பில் என். எஸ். வி. சித்தன், என். சுதர்ஷன நாச்சியப்பன், ஏ. கே. எஸ். அழகிரி, ஜே. எம். ஹருண் ஆகியோரும்,

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோரும் இன்று இலங்கை வருகின்றனர். இன்று காலை இலங்கை வரும் இவர்கள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலரும் அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமானுடன் திருகோணமலை, மட்டக்களப்பு பகுதிகளுக்கு விஜயம் செய்யவுள்ளனர்.

நாளை மேற்படி குழுவினர் யாழ். மற்றும் வவுனியா பகுதிகளுக்கு விஜயம் செய்து நிலைமைகளை நேரில் கண்டறிவர். நாளை மறுதினம் இலங்கையிலுள்ள அரசியல் கட்சிகளுடன் சந்திப்புக்களை நடத்தவுள்ளனர். இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடனும் முக்கியஸ்தர்களுடனும் சந்திப்புகளை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது-

இன்று காலை 8.50க்கு பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தை வந்தடையும் இல. 1 x 621 ரக ஏயார் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் தமிழக குழுவினர் வருகின்றனர். அங்கிருந்து கிழக்கு மாகாணம் செல்லும் குழுவினர் வாகரையில் மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்ட பகுதியை பார்வையிடுகின்றனர்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட கிழக்கு மாகாண சபை அமைச்சர்கள், உறுப்பினர்களை சந்தித்து பேசவுள்ளனர். மட்டக்களப்பு மேயர் சிவகீதா பிரபாகரனுடனான சந்திப்பு இடம்பெறுவதுடன் இந்திய உதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட ரயில், பஸ் திட்டப் பகுதிக்கும் விஜயம் செய்வர். இன்று திருகோணமலையில் தங்கியிருக்கும் மேற்படி தமிழக குழுவினர் நாளை ஞாயிற்றுக்கிழமை யாழ். நகர் செல்லவுள்ளனர்.

வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரையும் தமிழக குழுவினர் சந்திக்கவுள்ளனர். இடம்பெயர்ந்துள்ள மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள பகுதிக்கும் விஜயம் செய்யும் குழுவினர், மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களையும் சந்தித்து பேசுவர்.

தமிழகத்திலிருந்து வழங்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் வழங்கப்படுவது குறித்தும் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஸ்தானிகராலய பிரதிநிதிகளையும் சந்திக்கும் இக்குழுவினர் யாழ். மாநகர சபையின் புதிய மேயர் உட்பட மாநகர சபை உறுப்பினர்களையும் சந்திக்கவுள்ளனர்.

யாழ். பொது நூலகம், விளையாட்டரங்கு, யாழ். பல்கலைக்கழகம் போன்ற பகுதிகளுக்கும் தமிழக குழுவினர் விஜயம் செய்வர். யாழ். பல்கலைக்கழக துணை வேந்தருடனான சந்திப்பின் பின்னர் நிவாரணக் கிராமங்களிலிருந்து பல்கலைக்கழகத்துக்கு வந்த மாணவர்களையும் சந்தித்து உரையாடவுள்ளனர்.

இலங்கை புறப்படுவதற்கு முன்ன தாக ரி. ஆர். பாலு தலைமையிலான தமிழக குழுவினர் கலைஞர் கருணா நிதியை நேற்று மாலை சந்தித்து உரையாடினர். இலங்கைக்கு புறப்ப டுவதற்கு முன்னதாக முதல்வர் கலை ஞர் கருணாநிதியின் ஆலோசனையை பெறுவதற்காகவே இவர்கள் முதல் வரை சந்தித்தனர். 

பிலிப்பைன்ஸில் கடும் புயல், நிலச்சரிவு! : 153 பேர் பலி

280909.jpgபிலிப் பைன்ஸ் நாட்டில் ‘பார்மா’ என்ற புயல் கடுமையாகத் தாக்கியது. இதனையடுத்துப் பலத்த மழை பெய்தது.

இதனால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக பலத்த சேதம் ஏற்பட்டது. நிலச்சரிவும் ஏற்பட்டதால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.  ஏராளமானோர் பலியானார்கள். வெள்ளம் வடிந்த பிறகும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.

வடக்கு பிலிப்பைன்ஸ் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்ட ஒரு மலைக் கிராமத்தில் இன்று மீட்பு பணி நடந்தது. அப்போது மண்ணுக்குள் புதைந்துக் கிடந்த 153 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.

இன்று தென் மாகாண சபைத் தேர்தல் – 53 உறுப்பினர்களை தெரிவு செய்ய 1091 பேர் களத்தில்

vote.jpgதென் மாகாண சபைத் தேர்தல் இன்று சனிக்கிழமை 10ம் திகதி நடைபெறுகிறது. காலை ஏழு மணி முதல் மாலை நான்கு மணிவரை வாக்குப் பதிவு நடைபெறும்.

இரு போனஸ் உறுப்பினர்கள் அடங்களாக 55 பேரைத் தெரிவு செய்வதற்காக நடைபெறும் இந்தத் தேர்தலில், 18 அரசியல் கட்சிகளிலும் 13 சுயேச்சைக் குழுக்களிலுமாக 1,091 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.

காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 17 இலட்சத்து 61 ஆயிரத்து 859 பேர் வாக்களிக்கவென 1479 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தேர்தலை நீதியாகவும், நேர்மையாகவும், அமைதியாகவும் நடாத்துவதற்கென பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இராணுவத்தினருக்கு மேலதிகமாக சுமார் ஏழாயிரம் பொலிஸார் கடமையில் அபமர்த்தப்பட்டுள்ளனர்.

சூழ்நிலைகளைப் பொறுத்து வாக்குச்சாவடிகளுக்குப் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படுமென பொலிஸ் தலைமையக ஊடகப் பிரிவு தெரிவித்தது. தேர்தல் கடமைகளில் பத்தாயிரம் அரச ஊழியர்கள் அமர்த்தப்பட் டுள்ளனர். வாக்குச் சாவடிகளுக்கு நேற்றுக் காலையே வாக்குப் பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டன. வாக்குச் சாவடிகளுக்குக் கையடக்கத் தொலைபேசிகள் கமராக்கள் கொண்டு செல்வதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொது மக்களை நேரகாலத்துடன் சென்று வாக்களிக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் கேட்டுக் கொண்டுள்ளார். சிறு சிறு சம்பவங்கள் அறிவிக்கப்பட்ட போதிலும், பாரிய வன்முறைச் சம்பவங்கள் இடம்பெறவில்லையெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணையாளரின் அறிவுறுத்தலுக்கமைய, அமைதியான தேர்தலை நடத்தும் பொருட்டு, பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

காலி மாவட்டத்தின் பலப்பிட்டிய, அம்பலாங்கொடை, கரந்தெனிய, பெந்தர-எல்பிடிய, ஹினிதும, பத்தேகம, ரத்கம, காலி, அக்மீமன, ஹபராதுவ ஆகிய 10 தொகுதிகளில் 761,815 பேர் 670 நிலையங்களில் வாக்களிக்கின்றனர்.

மாத்தறை மாவட்டத்தின் தெனியாய, ஹக்மன, அகுரஸ்ஸ, கம்புறுபிட்டிய, தெவிநுவர, மாத்தறை, வெலிகம ஆகிய தேர்தல் தொகுதிகளைச் சேர்ந்த 578,858 பேர் 436 நிலையங்களில் வாக்களிக்கின்றனர்.அம்பாந்தோட்டை மாவட்டத்தின் முல்கிரிகல, பெலியத்த, தங்காலை, திஸ்ஸமஹராம ஆகிய நான்கு தேர்தல் தொகுதிகளைச் சேர்ந்த 421,186 வாக்காளர்கள் 373 நிலையங்களில் வாக்களிக்கின்றனர்.

தபால் மூலம் வாக்களிப்பதற்கு 31,158 அரச ஊழியர்கள் 85% வாக்களித்துள்ளனர்.

காலி மாவட்டத்தில் 23 உறுப்பினர்களும், மாத்தறை மாவட்டத்தில் 18 உறுப்பினர்களும், அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 12 உறுப்பினர்களும், இரண்டு போனஸ் உறுப்பினர்களுமாகத் தென்மாகாணத்தில் 55 பேர் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

வாக்குகளை எண்ணுவதற்காக 168 நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் தபால் மூலம் அளிக்கப்பட்ட வாக்குகளை எண்ணுவதற்காகப் 15 நிலையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் மின்துண்டிப்பு: தொழில்நுட்ப கோளாறு காரணம்

091009ecb.jpgகொலன்னாவ, களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக நாடு முழுவதும் மின் துண்டி ப்பு ஏற்பட்டது. இம்மின் துண்டிப்பினால் நாட்டின் சில பகுதிகளைத் தவிர்ந்த ஏனைய சகல பிரதேசங்களும் இருளில் மூழ்கியதுடன் மக்கள் பெரும் அசெளகரிய ங்களுக்கு முகங்கொடுக்க நேர்ந்தது.

இதேவேளை, இம் மின் துண்டிப்பிற்கு நாசகார சதி முயற்சிகள் எதுவும் காரணமில்லையெனவும் இயந்திர தொழில்நுட்பக் கோளாறே இதற்குக் காரணமெனவும் இலங்கை மின்சார சபை தெரிவித்தது.

மேற்படி விவகாரம் தொடர்பில் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடொன்றை நேற்று நண்பகல் மின்சார சபை ஒழுங்கு செய்திருந்தது. சபையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இம்மாநாட்டில் மின்சார சபையின் தலைவர் ஈ. ஏ. எஸ். கே. எதிரிசிங்க பொது முகாமையாளர் திருமதி பீ. ஜயவீர ஆகியோர் கலந்துகொண்டு விளக்கமளித்தனர்.

இது தொடர்பில் விளக்கமளித்த மின்சார சபையின் தலைவர் எதிரிசிங்க; நேற்று அதிகாலை 1.30 மணியளவில் களனி திஸ்ஸ கொலன்னாவை மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தென்மாகாணத்தைத் தவிர்ந்த நாட்டின் சகல பகுதிகளிலும் மின் துண்டிப்பு ஏற்பட்டது. இம் மின்நிலையத்தின் மூலம் 1,32,000 மெகாவாட் மின்சாரம் விநியோகிக்கப்பட்டுவருகிறது.

இம் மின் துண்டிப்பினை முழுமையாக சரிசெய்வதற்குப் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும் நேற்றுக் காலை 9,15 மணிக்கே இதனை சரிசெய்ய முடிந்தது. 60 வருட மின்சாரசபையின் வரலாற்றில் இத்தகைய நீண்ட மின் துண்டிப்பொன்று இடம்பெறவில்லையென தெரி வித்த அவர், நேற்று மதியமளவில் நாடு முழுவதிற்கும் 95 வீதம் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

தோல்வியைச் சமாளிக்க காரணம் தேடுகிறது ஐ.தே.க சபையில் அமைச்சர் நிமல்

26parliament.jpgதென் மாகாண சபைத் தேர்தலில் (இன்று நடைபெறும்) படுதோல்வி அடைய விருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியினர் அதற்கான காரணங்களை முன்கூட்டியே தயாரிப்பதாக சபை முதல்வரும் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றம் நேற்றுக் காலை 9.30 மணிக்குக் கூடியது. சபை அமர்வின் வழமையான ஆரம்ப நிகழ்வின் வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தில் குருநாகல் மாவட்ட ஐ.தே. க. எம். பி. தயாசிறி ஜயசேகர எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இன்று நடைபெறும் தென் மாகாண சபைத் தேர்தலில் வாக்களிப்பு பெட்டிகளை வாக்குகள் எண்ணும் நிலையத்திற்கு எடுத்துச் செல்லும் பஸ் வண்டிகளில் எதிர்க்கட்சி பிரதிநிதிகள் செல்லுவதற்கு அனுமதிக்கப்படாதது குறித்து எம். பி. ஜயசேகர கேள்வி எழுப்பினார்.

இக்கேள்விக்கு மேற்கண்டவாறு பதிலளித்த அமைச்சர் நிமல் சிறிபால டி. சில்வா, ஐ. தே. க. ஏற்கனவே ஏழு மாகாண சபைகளுக்கான தேர்தல்களிலும் படுதோல்வி அடைந்திருக்கின்றது என்றார்.

41 அரச நிறுவனங்களுக்கு ரூ. 204 கோடி குறைநிரப்பு பிரேரணை – அரச தரப்பு பிரதம கொறடா தினேஷ் சமர்ப்பிப்பு

வரவு-செலவுத் திட்ட உதவிச் சேவைகள் மற்றும் அவசர தேவைப்பாடுகள் பொதுக் கருத் திட்டத்தின் கீழ் 41 அரசாங்க நிறுவனங்களுக்கென 204 கோடியே 13 இலட்சத்து 95 ஆயிரத்து 532 ரூபாவுக்கு குறை நிரப்பு பிரேரணை நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்தக் குறை நிரப்பு பிரேரணையை ஆளும்கட்சி பிரதம கொறடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன சபையில் சமர்ப்பித்தார்.

பாராளுமன்றம், சபாநாயகர் தலைமையில் நேற்று காலை 9.30 மணிக்கு கூடியது. சபை அமர்வின் ஆரம்ப நிகழ்வின் போது சபாநாயகரின் அனுமதியைப் பெற்று அமைச்சர் இந்தக் குறை நிரப்பு பிரேரணையை சபையில் முன்வைத்தார்.

அமைச்சுக்கள், மாகாண சபைகள், அரசாங்க திணைக்களங்கள் அடங்கலான 41 அரச நிறுவனங்களுக்காகவே இக்குறைநிரப்பு பிரேரணை முன்வைக்கப்பட்டது.

எதிர்க்கட்சித் தலைவரின் பாதுகாப்பு வாகனத்தைத் திருத்துவதற்கென ஒரு கோடியே பத்து லட்சத்து 81 ஆயிரத்து 882 ரூபாவும் இக்குறைநிரப்பு பிரேரணைக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளது.

மலையக தோட்டங்களிலிருந்து வீட்டு வேலைக்கு சென்றோரின் விபரம் திரட்டும் பணி ஆரம்பம்

091009puttirasigamani.jpgமலையகப் பெருந்தோட்டங்களிலிருந்து வெளி இடங்களுக்கு வீட்டு வேலைக்காரர்களாகச் சென்றுள்ளவர்கள் தொடர்பான விபரங்களைத் திரட்டும் பணிகளை இவ்வாரம் ஆரம்பித்துள்ளதாக நீதி, சட்ட மறுசீரமைப்பு பிரதி அமைச்சர் வீ.  புத்திரசிகாமணி தெரிவித்தார்.

தகவல்களைத் திரட்டுவதற்காகக் குழுக்களை நியமித்துள்ளதுடன், அதற்கெனத் தனியான ஒரு படிவத்தை அச்சிட்டு வெளியிட்டுள்ளதாகக் கூறிய அவர் எதிர்வரும் தீபாவளிப் பண்டிகைக்குத் தோட்டங்களுக்குத் திரும்புவோரின் தகவல்களைத் திரட்டும் வகையில் விபரப் படிவங்களை விநியோகிக்க குழுக்களை நியமித்து நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறினார்.

90 தேயிலை தொழிற்சாலைகளை நவீன மயப்படுத்த முடிவு

மஹிந்த சிந்தனையின் கீழ் 90 தேயிலைத் தொழிற்சாலைகள் நவீனப்படுத்தப்படவுள்ளன என்று ஆளும் கட்சி பிரதம கொறடாவும், அமைச்சருமான தினேஷ் குணவர்தன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

தேசிய விவசாய வாரம்

maithripalasirisena.jpg தேசிய ஏர்பூட்டு விழா தம்புள்ளை கண்டலம வயல் வெளியில் எதிர்வரும் 12ஆம் திகதி நடைபெறுவதை முன்னிட்டு இம்மாதம் 11ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை தேசிய விவசாய வாரம் அனுஷ்டிக்கப்படவுள்ளதாக விவசாய அபிவிருத்தி. கமநல சேவைகள் அமைச்சு அறிவித்துள்ளது. 

தேசிய விவசாய வாரத்தை அமைச்சர் மைத்திரிபால சிறிசேன இம்மாதம் 11ஆம் திகதி மத வழிபாட்டு நிகழ்வுகளுடன் பொலன்னறுவையில் ஆரம்பித்து வைக்கவுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மறைந்த 2 எம்.பிக்களுக்கு சபையில் நேற்று அனுதாபம்

முன்னாள் எம்.பிக்களான மறைந்த டப்ளியு. எம். ராஜாவெலேகம மற்றும் எச். பி. வன்னிநாயக்கா ஆகியோருக்கான அனுதாபப் பிரேரணை மீதான உரைகள் நேற்று பாராளுமன்றத்தில் இடம்பெற்றன.

இந்த அனுதாபப் பிரேரணைகள் மீதான உரைகளைச் சபை முதல்வரும், அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா ஆரம்பித்து வைத்தார். இந்த அனுதாப பிரேரணைகளில் எதிர்க் கட்சி பிரதம கொறடா ஜோசப் மைக்கல் பெரே ராவும் உரையாற்றினார்.