12

12

டென்மார்க்கில் இருந்து வவுனியா வைத்தியசாலைக்கு மருந்துப் பொருட்கள் விநியோகம் : லிற்றில் எய்ட்

Little_Aid_Med_Deliveryபிரித்தானியாவில் பொது அமைப்புகளின் ஆணைக்குழுவின் கீழ் பதிவு செய்யப்பட்ட லிற்றில் எய்ட்1140 கிகி (1.12 தொன்) எடையுள்ள மருந்தப் பொருட்களை வவுனியா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளது. இவ்வளவு தொகையான மருந்துகளும் டென்மார்க்கில் உள்ள மருத்துவ பொது அமைப்பான எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பினரால் அன்பளிப்புச் செய்யப்பட்டு இருந்தது. இம்மருந்துகளின் காலாவதிக் காலம் யூலை 2011. வவுனியா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள இம்மருந்துப் பொருட்கள் பரவலாக உள்ள நோய்களுக்கான 7 வகையான மருந்துகளை உள்ளடக்கி இருந்தது. வலி நிவாரணம், மன அழுத்தம் மன உளைச்சல், இதய எரிவு, வயிற்று அல்சர், உயர் கொலஸ்திரோல் ஆகியவற்றிற்கான மருந்துகள் இந்த மருந்துத்தொகுதியில் உள்ளடங்கி இருந்தது. இம்மருந்துப் பொருட்களின் மதிப்பீடு 16,000 பவுண்கள் (30 லட்சம் ரூபாய்.) டென்மார்க்கில் உள்ள இனிசியேறிவ் 2009 என்ற அமைப்பு எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்புடன் தொடர்புகளை ஏற்படுத்தி இந்த மருந்துப்பொருட்கள் அன்பளிப்புச் செய்யப்படுவதை உறுதிப்படுத்தியது. லிற்றில் எய்ட், இனிசியேற்றிவ் 2009, எல்லைகளற்ற மருத்துவர்கள் குழுவாக ஒரு நோக்குடன் செயற்பட்டு மருந்துப் பொருட்களை வவுனியாவுக்கு கொண்டு சென்று கொடுத்தனர்.

Little_Aid_Med_Deliveryசெப்ரம்பர் 16ல் விமானமூலம் இந்தப் பொருட்கள் கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு ஒக்ரோபர் 6ல் வவுனியா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கபட்டது. லிற்றில் எய்ட் சார்பில் டொக்டர் நிமால் காரயவாசம், திரு மார்க் பெர்னான்டோ ஆகியோர் இம்மருந்துத் தொகுதியை வவுனியாவுக்கு எடுத்துச் சென்றனர். வவுனியா மருத்துவமனையின் உயர் அதிகாரியான டொக்டர் பவானி பசுபதிராஜா வவுனியா உதவி அரசாங்க அதிபர் சம்பந்தர் முன்னைலையில் டொக்டர் நிமால் காரியவாசம், திரு மார்க் பெர்னான்டோ ஆகியோரிடம் இருந்து உத்தியோகபூர்வமாக மருந்துப் பொருட்களைக் கையேற்றார்.

இந்த மருத்துவத் திட்டம் வெற்றிகரமாக முடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இனிசியேற்றிவ் 2009, மற்றுமொரு 7000 கி கி எடையுள்ள மருந்துப் பொருட்களை நோர்வேஜிய நிறுவனம் ஒன்றினூடாக பெற்றுக்கொள்வதை உறுதிப்படுத்தி உள்ளது. இம்மருந்துப் பொருட்களை வவுனியா, புத்தளம் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் உள்ள இடம்பெயர்ந்த மக்கள் வாழும் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்க லிற்றில் எய்ட் விரும்புகின்றது.

லிற்றில் எய்ட் பதிவு செய்யப்பட்ட பொது அமைப்பு. மே 18 2009ல் பிரித்தானிய பொது அமைப்புகள் ஆணைக்குழுவின் கீழ் பதிவு செய்யப்பட்டது. கடந்த 5 மாதங்களில் மரக்கறிகள், குழந்தைகளுக்கான பால்மா, துணிவகைகள் ஆகியவற்றை தம்புல்லவில் இருந்து செட்டிகுளம் முகாம்களுக்கு அனுப்பி வைத்தது. மேலும் அம்பேபுச முகாமில் உள்ள முன்னாள் போராளிகளின் புனர்வாழ்வில் அவர்களுக்கு இசைப் பயிற்சி வகுப்புகளை லிற்றில் எய்ட் மேற்கொண்டிருக்கின்றது. இத்திட்டம் தற்போது முடிவடையும் தருவாயில் உள்ளது. இத்திட்டம் சட்ட மற்றும் மறுசீரமைப்பு அமைச்சின் ஒத்துழைப்புடன் லிற்றில் எய்ட் இனால் மட்டுமே மேற்கொள்ளப்படுகின்றது.

தமிழ் மக்கள் மத்தியில் பொது அமைப்புகளின் செயற்பாடுகளை வெளிப்படையாகவும் கணக்குகளைத் திறந்த புத்தகமாகவும் வைத்திருக்கும் பழக்கத்தையும் லிற்றில் எய்ட் ஏற்படுத்தி உள்ளது. அதன் இணையத்தளத்தில் சகல விபரங்களையும் காணலாம்.

மேலதிக விபரங்களுக்கு : www.littleaid.org.uk

ரி கொன்ஸ்ரன்ரைன்
தலைவர்
லிற்றில் எய்ட்.

உலக‌த்தை ஏமா‌ற்றவே த‌மிழக எ‌ம்.பி.க்க‌ள் இல‌‌ங்கை பயண‌ம்: வைகோ

16-vaiko.jpgமுள்வேலி முகாம்களில் அவதிப்படும் ஈழத்தமிழர்களின் மனித உரிமை அவலங்களை மூடி மறைக்கவும், உலகத்தை ஏமாற்றவும் தமிழக நாடாளும‌‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌ள் குழு இலங்கை சென்றிருப்பதாக ம.தி.மு.க பொதுச் செயலர் வைகோ குற்றம் சா‌ற்‌றியுள்ளார்.

செ‌ன்னை‌யி‌ல் இ‌ன்று செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய அவ‌ர், தமிழக அரசு என் மீது ஒரே குற்றச்சா‌ற்றுக்காக 2 முறை வழக்கு தொடர்ந்திருப்பது விசித்திரமானது. இது அரசியல் சட்டத்திற்கு எதிரானது. தமிழக அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகளை ம.தி.மு.க அற வழியில் எதிர்கொள்ளும். அவற்றை கண்டு கவலைப்பட மாட்டோம்.

இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட போது, யுத்தத்தை நிறுத்த வேண்டும் என்று உலக நாடுகள் வலியுறுத்தின. சென்னையிலும் வழக்கறிஞர்கள் அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது மிருகத்தனமாக தாக்குதல் நடத்தி தமிழக அரசு அந்த அறப்போராட்டத்தை ஒடுக்கியது.

இலங்கையில் நடைப்பெற்ற போரை நிறுத்த வேண்டும் என்று உலக நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தின. தமிழக சட்டமன்றத்திலும் இந்த கோரிக்கையை முன்வைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இந்திய அரசு ஒப்புக்காகக்கூட போரை நிறுத்த வேண்டும் என்று கூறவில்லை.

ஏனென்றால், அந்தப் போரை நடத்தியதும், போருக்கு திட்டமிட்டதும், போரை வழிநடத்தியதும் இந்தியாதான். ஈழத்தமிழர்கள் ஒவ்வொருவரின் சாவுக்கும் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுதான் பொறுப்பாகும். யுத்தத்தை நிறுத்த குரல் கொடுக்காத மத்திய அரசு, தற்போது ஈழத்தமிழர்களின் ரத்தம் தொய்ந்த கரத்தையுடைய ராஜப‌க்சேவின் அழைப்பை ஏற்று தமிழக எ‌ம்.‌பி.‌க்க‌ளி‌ன் குழுவை இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளது.

போருக்கு பிறகு ஐ.நா பார்வையாளர்களும், சர்வதேச பொது மன்னிப்பு சபையும் முள்வேலி முகாம்களில் உள்ள தமிழர்கள் அடிப்படை மனித உரிமைகள் மறுக்கப்பட்டு சொல்ல முடியாத துயரங்களை அனுபவித்து வருவதாக தெரிவித்துள்ளனர். முள்வேலி முகாம்களில் அவதிப்படும் ஈழத்தமிழர்களின் மனித உரிமை அவலங்களை மூடி மறைக்கவும், உலகத்தை ஏமாற்றவும் இப்போது தமிழக எ‌ம்.பி.க்க‌ள் குழு இலங்கை சென்றிருக்கின்றனர்.

இவர்களை அங்குள்ள அனைத்து முகாம்களுக்கும் செல்ல சிங்கள அரசு அனுமதிக்கப் போவதில்லை. இந்த குழுவின் பயணத்தால் ஈழத்தமிழர்களுக்கு எந்த பயனும் ஏற்படப்போவதில்லை இக்குழுவின் பயணம் ஒரு கண்துடைப்பு நாடகம் என்று வைகோ கூ‌றினா‌ர்.

அமெரிக்கா ஆராய்ச்சியாளர்கள் இருவருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு

Alfred_Nobelபொருளா தாரத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் எலினர் ஆஸ்ட்ராம் மற்றும் ஆலிவர் வில்லியம்சன் ஆகியோருக்கு கிடைத்துள்ளது.

இண்டியானா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளரான ஆஸ்ட்ராம், பொருளாதார நிர்வாகம் குறித்த – குறிப்பாக சாமான்ய மக்களுக்கான- ஆராய்ச்சிக்காக இந்த பரிசு வழங்கப்படுகிறது.

அதேபோன்று கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வில்லியம்சனுக்கும் பொருளாதார நிர்வாகம் குறித்த – நிறுவனங்களின் எல்லைகள் பற்றிய – ஆராய்ச்சிக்காக இந்த பரிசு வழங்கப்படுகிறது.

பரிசு தொகையான 1.4 மில்லியன் டாலரை இருவர்ம் பகிர்ந்து கொள்வர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இடம்பெயர் முகாம்கள் குறித்து தமிழகக் குழு பாராட்டு

இடம் பெயர்ந்தோருக்கான முகாம்களில் செய்யப்பட்டுள்ள வசதிகளைத் தமிழகத்திலிருந்து வந்துள்ள திமுக -காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளின் எம்.பிக்கள் குழு பாராட்டியுள்ளதாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன செய்தியில் தெரிவித்ததாக இந்திய இணையத் தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்த இஒகூ செய்தியில், “தமிழகத்திலிருந்து வந்துள்ள பத்து பேர் கொண்ட குழுவினர் வவுனியாவில் உள்ல நலன்புரி மையங்களுக்கு விஜயம் செய்தனர். அதிபர் ராஜபக்ஷவின் அழைப்பின் பேரில் இவர்கள் இலங்கை வந்துள்ளனர். இந்தக் குழுவின் பிரதிநிதிகள், நலன்புரி மையங்களில் உள்ளோருக்கு செய்யப்பட்டுள்ள வசதிகளைப் பாராட்டினர்.

மேலும் இந்த மையங்களுக்குத் தேவைப்படும் உதவிகளைச் செய்யவும் அவர்கள் ஒப்புக் கொண்டனர்.

தங்களது ஐந்து நாள் பயணத்தின்போது இலங்கை அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு திட்டங்களையும் இந்தக் குழுவினர் பார்வையிடவுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக அந்த இணையத் தளம் செய்தி வெளியிட்டிருக்கின்றது.

தமிழகக் குழுவினர் இன்று மலையகத்துக்கு விஜயம்!

12kanimoly.jpgதமிழ கத்தின் முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பாலு தலைமையில் இலங்கை வந்துள்ள 10 பேர் அடங்கிய குழுவினர் இன்று மலையகப் பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர். அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் அழைப்பின் பேரில் மலையகத்திற்கு வருகை தந்த இக்குழுவில் டி.ஆர்.பாலு, கலைஞரின் மகள் கனிமொழி, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் உட்பட பலரும் அடங்குகின்றனர்.
 
ஹெலிகொப்டர் மூலம் நோர்வூட் மைதானத்திற்கு வந்த இக்குழுவினர் அங்கிருந்து ஹட்டனை நோக்கி வாகனத்தில் பயணித்தனர். ஹட்டன் நகரை இன்று காலை 10.45 மணியளவில் வந்தடைந்த இக்குழுவினருக்கு ஹட்டன் நகர் வர்த்தகர்கள், பொதுமக்கள் திரண்டு வந்து வரவேற்பளித்தனர்.

கனிமொழியைச் சுழ்ந்து கொண்டு மக்கள் அவரை மலர்மாலைகள் அணிவித்து வரவேற்றனர்.கலைஞர் வாழ்க, தமிழ்நாடு வாழ்க என உற்சாக கோஷங்கள் எழுப்பினர். மலையக மக்களின் வரவேற்பில் திக்குமுக்காடிப்போன கனிமொழி உள்ளிட்ட குழுவினரைப் பாதுகாப்பு பிரிவினர் மிகுந்த சிரமத்துக்கு மத்தியில் மறுபடி வாகனங்களில் ஏற்றி அங்கிருந்து அழைத்து செல்ல முயன்றனர்.

இந்நிலையில் வாகனத்தைச் சுழ்ந்து கொண்ட மக்கள் கனிமொழி மற்றும் திருமாவளவனின் பெயர்களை உரக்க உச்சரித்து வாழ்த்துத் தெரிவித்தனர். சுமார் ஒரு மணிநேரம் இம்மக்களின் அன்புப் பிடியில் சிக்கிக் கொண்ட குழுவினர் கொட்டகலைக்குச் சென்றனர். இவர்களுக்கு அங்கும் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்தியாவின் அணு ஆயுதம் ஏந்திச் செல்லும் ஏவுகணை சோதனை வெற்றி!

தரையி லுள்ள ஒரு இலக்கிலிருந்து மற்றொரு தரை இலக்கை துல்லியமாக தாக்கும் வல்லமை கொண்ட பிரிதிவி -2 ஏவுகணையை இந்தியா இன்று ( திங்கட் கிழமை)  வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி சோதனை நடத்தியது.
 
ஐந்து நிமிட இடைவேளையில் இரண்டு ஏவுகணைகள் அடுத்தடுத்து சோதனை செய்யப்பட்டுள்ளன. சரியாக காலை 10.28 க்கு முதல் ஏவுகணையும், 10.33 க்கு இரண்டாவது ஏவுகணையும் ஏவப்பட்டு சோதனை செய்யப்பட்டன.

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பிரிதிவி -2 ஏவுகணை ஒரு குறுகிய தூர ஏவுகணையாகும். 9 மீட்டர் நீளமும் 1.1 மீட்டர் அகலமும் கொண்ட இந்த ஏவுகணைää  250 கி.மீ.ää வரை சென்று தாக்கும் வல்லமை கொண்டதாகும்.

திரவ எரிபொருளில் இயங்கக்கூடிய இந்த ஏவுகணையில்ää ஆயிரம் கிலோ எடை கொண்ட  வெடிகுண்டுகளை  பொருத்த முடியும்.   அணு ஆயுதங்களையும் தாங்கிச்செல்லும் இந்த ஏவுகணைகளை கடலில் பயணிக்கும் கப்பலில் இருந்து கூட தரை இலக்கை தாக்கும் வகையில் ஏவலாம்.

கடந்த 1996ம் ஆண்டு இந்தியா, முதன்முறையாக பிருத்வி-2 ரக ஏவுகணையை சோதித்து பார்த்தது. பின்ää 1999ம் ஆண்டு இந்திய விமானப்படையில்ää இந்த ஏவுகணை சேர்க்கப்பட்டது.  தொடர்ந்து ஜூன் 2000ää  மார்ச் 2001ää டிசம்பர் 2001ää ஜனவரி 2004 மற்றும் மார்ச் 2004 ஆகிய ஆண்டுகளில் பிருத்வி-2 சோதித்துப்பார்க்கப்பட்டது.

கடைசியாக கடந்த 2006ம் ஆண்டு வெற்றிகரமாக பிருத்வி சோதித்துப்பார்க்கப்பட்டது. இந்தியாவிடம் இதுவரை 70 பிருத்வி -2 ரக ஏவுகணைகள் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 10 முதல் 30 ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. கடந்த அக்டோபர் 1ம் திகதி, சீனா தனது தேசிய தினத்தின் போது,  52 வகையான புதிய ஆயுதங்களை முதன்முறையாக உலகின் பார்வைக்கு வைத்து அசத்தியது.

இதனையடுத்து, இன்று ( 12 ம் தேதி திங்கட்கிழமை ) பிருத்வி-2 ஏவுகணை,  ஒரிசாவிலுள்ள சண்டிப்பூர் ஏவுகணை சோதனை மையத்திலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. இந்தச்சோதனை வெற்றிகரமாக நடந்தது தொடர்ந்து,  பிரம்மோஸ், கே-15 மற்றும் அக்னி -2 ஏவுகணைகளும் விரைவில் சோதிக்கப்படவுள்ளன.

இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம்

000cricket.jpgஇந்தி யாவில் இலங்கை அணி அடுத்த மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அச்சுற்றுப்பயணத்தின்போது இந்திய அணியுடன் 5 ஒருதினப் போட்டிகளிலும், 2 டுவென்டி20 போட்டிகளிலும், மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட உ ள்ளது.

போட்டிகள் நடைபெறும் இடங்களை கிரிக்கெட் வாரியத்தின் சுற்றுப்பயணத் திட்டக் குழு உறுதிசெய்தது.

டெஸ்ட் போட்டி நடைபெறும் இடங்கள்: மும்பை, கான்பூர் மற்றும் ஆமதாபாத்

ஒருதினப் போட்டி நடைபெறும் இடங்கள்: கட்டாக், ராஜ்கோட், விசாகப்பட்டினம், தில்லி மற்றும் கோல்கத்தா டுவென்டி20 போட்டி நடைபெறும் இடங்கள்: மொஹாலி மற்றும் நாக்பூர்.

போட்டி நடைபெறும் தேதிகள் குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என பி
சிசிஐ செயலர் ஸ்ரீனிவாசன் தெரிவித்தார்.
 

தென் மாகாண சபை தேர்தல் முடிவு அரசின் எதிர்கால தோல்விக்கான அறிகுறியாகும் : ஐ.தே.க. செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க

தென் மாகாண சபைத் தேர்தல் முடிவு அரசாங்கத்திற்கு பாரிய ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. 90 வீதமான வாக்குகளைப் பெற்று சரித்திரம் படைப்போம் எனக் கூறிய அரசாங்கத்தின் இந்த சரிவானது எதிர்கால தோல்விக்கான அறிகுறியாகும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

அரசாங்கம் கட்டம் கட்டமாக தேர்தல்களை நடத்தி வந்துள்ளதால் 1300 மில்லியன் ரூபா வீணடிக்கப்பட்டுள்ளது. அது மாத்திரமல்லாமல் தென் மாகாண சபைத் தேர்தலில் பாரிய அளவு அரச சொத்துக்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளன எனவும் அவர் கூறினார். தென் மாகாண சபைத் தேர்தல் முடிவுகள் தொடர்பில் விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்தில் இடம்பெற்றது. அதன் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் அவர் கருத்து கூறுகையில், ஜனாதிபதியின் குடும்ப அரசியலுக்கும் ஜனநாயகத்திற்கு விரோதமான அரசின் செயற்பாட்டிற்கும் எதிராக மக்கள் வாக்களித்துள்ளனர். தென் மாகாண மக்களின் இந்தத் தீர்ப்பு ஏனைய மாகாண மக்களுக்கும் தைரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இராணுவ வெற்றியையும் தென் மாகாணத்தில் பல அபிவிருத்தி வேலைத் திட்டத் திட்டங்களையும் முன்வைத்தே அரசாங்கம் இந்தத் தேர்தலில் களமிறங்கியது. இதன் மூலம் பாரிய வெற்றியை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் எதிர்பார்த்திருந்தது. ஆனால், எதிர்பார்த்தளவு வாக்குகளை அரசாங்கத்தால் பெற முடியவில்லை. குறிப்பாக ஜனாதிபதி பிறந்த மாவட்டமான அம்பாந்தோட்டையில் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பெற்றுக் கொண்ட வாக்குகளை விட இத்தேர்தலில் குறைந்த வாக்குகளே பெறப்பட்டுள்ளன.

இந்த மாகாணத்தில் பாரிய அளவு தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. தேர்தல் தினத்தன்று கூட கட்டவுட், பெனர், போஸ்டர் என தேர்தல் விளம்பரங்கள் நீக்கப்படாமல் இருந்தன. 7 ஆம் திகதி நள்ளிரவுடன் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் முடிவடைகின்றன என அறிவிக்கப்பட்ட போதிலும் 9 ஆம் திகதி வரை அரசாங்க தரப்பினர் தேர்தல் பிரசாரப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். இவ்வாறு சட்டத்தை மதிக்காது செயல்படும் இவர்களால் மக்களை சட்டத்தை மதித்து செயல்படுமாறு எப்படிக் கூற முடியும்? மக்கள் இப்போது தெளிவடைந்துள்ளார்கள். தொடர்ந்தும் இவர்களால் மக்களை ஏமாற்ற முடியாது. . அரசாங்கம் கூறுவதைப் போல மக்கள் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைக்கவில்லை. எனவே அரசாங்கம் உடனடியாக பொதுத் தேர்தல் ஒன்றை நடத்த வேண்டும். அதனை எதிர்கொள்வதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம் என்றார்

ஜனாதிபதி மஹிந்தவே நோபல் பரிசுக்கு தகுதி – கனடா நஷனல் போஸ்ட்

Alfred_Nobelசமாதானத் திற்கான நோபல் பரிசுக்குத் தகுதியானவர் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவேயன்றி அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அல்ல என்று கனடா நெஷனல் போஸ்ட் ஆங்கிலப் பத்திரிகை தெரிவித்துள்ளது.

இந்தப் பரிசை அமெரிக்க ஜனாதிபதிக்கு வழங்குவது வேடிக்கையான விடயம் என்றும் அந்த பத்திரிகை சுட்டிக் காட்டியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி எதிர்காலத்தில் ஆற்ற விருக்கும் பணிகளுக்காகவே இப் பரிசு இப்போது வழங்கப்படுவதாக அப் பத்திரிகையின் ஆசிரியர் ஜொனதன் கேனியா குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை ஜனாதிபதி சமாதானத்திற்கான நோபல் பரிசுக்குத் தகுதியானவர் என்பதை செயற்பாடு மூலம் உறுதிப்படுத்தியுள்ளார் என்றும் அப்பத்திரிகை தெரிவித்திருக்கின்றது.

மூன்று தசாப்தங்களாக இலங்கை குடி மக்கள் முகம் கொடுத்த குரூரமான பயங்கரவாதத்திலிருந்து அம் மக்களை விடுவித்து, அவர்களுக்கு சுதந்திரத்தை பெற்றுக் கொடுத்திருப்பதற்காக அவர் இப் பரிசுக்குரிய தகுதியைப் பெற்றிருக்கின்றார் எனவும் அப்பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.

விலங்கியல் பூங்காவில் பொலிதீனுக்குத் தடை!

கொழும்பு தெஹிவளையிலுள்ள தேசிய விலங்கியல் பூங்காவிற்குள் சுற்றுலாப் பயணிகள் பொலிதீன் கொண்டு செல்வதைத் தடை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களம் தெரிவிக்கின்றது.
 
அதன் அடிப்படையில் விலங்கியல் பூங்காவிற்குள் பிரவேசிக்கும் சுற்றுலாப் பயணிகள் மீது சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. பூங்காவிலுள்ள விலங்கினங்களைப் பாதுகாக்கும் ஒரு நடவடிக்கையாக இந்தத்திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.

பூங்காவிற்கு வருகை தருகின்றவர்கள் விலங்கினங்களுக்கு பொலிதீன் கவர்களுடன் உணவுப்பொருட்களை வழங்குவதைத் தடுப்பதே இதன் நோக்கமாகும்.

அன்மையில் பூங்காவில் காணப்பட்ட மிகவும் அரிதான ஒரு விலங்கு எதிர்பாராத விதமாக உயிர்நீத்தது. சோதனையின் போது அதன் வயிற்றிலிருந்து ஒன்றரைக் கிலோ பொலிதீன் கண்டெடுக்கப்படடுள்ளது.