14

14

நோர்வேயின் கவனத்திற்கு கடல்கடந்த தமிழீழ விவகாரம்!

rohitha-bogollagama_s.jpgநோர் வேயில் நடைபெற்று வருகின்ற முன்னெடுப்புக்கள் தொடர்பில் நோர்வேயின் கவனத்திற்கு வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம கொண்டு வந்துள்ளார்.
 
அமைச்சர் ரோகித்த போகொல்லாகமவுக்கும் இலங்கைக்கான நோர்வேயின் தூதுவர் டோர் ஹெட்ரமுக்குமிடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றது.

இச்சந்திப்பின்போதே வெளிவிவகார அமைச்சர் இவ்விடயம் தொடர்பில் இலங்கை அரசின் கவலையயையும் அதிருப்தியையும்  தெரிவித்ததோடு இந்த விவகாரம் தொடர்பாக கூடுதல் கவனம் செலுத்துமாறு கோரிகை விடுத்தார்
 

இந்தோனேசியாவில் பிடிபட்ட கப்பலில் உள்ளவர்கள் கப்பலை வெடிக்கவைக்கப் போவதாக அச்சுறுத்தல்

14indonesia.jpgஅவுஸ்தி ரேலியாவுக்கு செல்லும் போது இந்தோனேசிய கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கப்பலில் உள்ள இலங்கையர்கள் (பெருமளவானோர் தமிழர்கள்)  தாம்  கப்பலை வெடிக்கவைக்கப் போவதாக அச்சுறுத்தியுள்ளனர்.  தம்மை கப்பலில் இருந்து இந்தோனிசிய கடற்படையினர் இறக்க முற்பட்டால், தம் வசம் உள்ள சிலிண்டர்களை வெடிக்க வைக்கப் போவதாக அவர்கள் அச்சுறுத்தியுள்ளனர்.
 
இந்த கப்பலில் பயணித்த, ஒவ்வொருவரும், தலா 15 ஆயிரம் அமெரிக்க டொலர்களை முகவர்களிடம் செலுத்தியுள்ளனர்.
 

தமிழக எம்.பிக்கள் பாதுகாப்புச் செயலாளாருடன் சந்திப்பு!

தமிழக எம்.பிக்கள் குழுவினர் நேற்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.
 
தமிழகத்தை சேர்ந்த ரி.ஆர் பாலு தலைமையில் பாதுகாப்பு அமைச்சில் நடந்த இச்சந்திப்பில் இந்திய உயர் ஸ்தானிகர் மற்றும் பிரதி உயர் ஸ்தானிகர் உட்பட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

இலங்கையின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைää இடம்பெயர்ந்தோரின் துரித மீள்குடியேற்ற நடவடிக்கைகள் உட்பட மற்றும் பல விடயங்கள் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முரளிதரனின் பெயரில் இலங்கை மாணவர்களுக்கு பிரிட்டனில் புலமைப் பரிசில்கள்!

14murali_.jpgஉலகப் புகழ்பெற்ற இலங்கையின் நட்சத்திர சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் பெயரில் இலங்கை மாணவர்களுக்கு பிரிட்டனில் புலமைப் பரிசில்கள் வழங்கப்படவுள்ளன.

பிரிட்டனின் பொல்கொன் பல்கலைக்கழகத்தில் இத்திட்டம் உத்தியோகபூர்வமாக கடந்த வியாழக்கிழமை அங்குரர்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட இப்புலமைப்பரிசில் திட்டத்தின்கீழ் இலங்கை மாணவர்கள் ஆறுபேர் பிரிட்டனின் பொல்கொன பல்கலைக்கழகத்தில் கல்வி கற்பதற்கு அனுமதிக்கப்படுவரென்று தெரிவிக்கப்பட்டுள்ளது

தீபாவளி விசேட ரயில் சேவை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் 17ஆம் 18ஆம் திகதிகளில் விசேட ரயில் சேவைகளை நடத்த ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.  இதன்படி கொழும்பில் இருந்து பதுளைக்கும்,  பதுளையில் இருந்து கொழும்பிற்கும் இரு விசேட ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.
 
வுழமையாக மேற்கொள்ளப்படும் ரயில் சேவைகளுக்கு மேலதிகமாக எதிர்வரும் 16ஆம் திகதி மாலை 6.50 ற்கு பயணமாகும் விசேட ரயில் மறுநாள் அதிகாலை 3.25 மணியளவில் பதுளையை சென்றடையும்.

இதேவேளை எதிர்வரும் 18 ஆம் திகதி அதிகாலை 6.30 மணிக்கு பதுளையிலிருந்து கொழும்புக்கான விசேட ரயில் சேவையொன்றும் இடம்பெறவுள்ளதாக ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

மஹாபொல கண்காட்சி இன்று ஆரம்பம்!

மஹாபொல புலமைப்பரிசில் கண்காட்சி இன்று பெலியத்தை ருஹ{னு விஜயபா வித்தியாலயத்தில் ஆரம்பமாகின்றது.

இக கண்காட்சி இன்று முதல் எதிர்வரும்; 18ஆம் திகதி வரையான ஐந்து நாட்களுக்கு தொடர்ந்து நடைபெறவுள்ளது.   இளைஞர்களுக்கான நாளை அமைப்பினூடாக இளைஞர் யுவதிகளுக்கான களியாட்ட நிகழ்வுகள்ää விளையாட்டுக்கள் பொழுதுபோக்கு ஏற்பாடுகள் என்பனவும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.  பொதுமக்களுக்கான வர்த்தக நிலையங்கள் மற்றும் இராணுத்தினரின் ஆயுதக் கண்காட்சி என்பனவும் இடம்பெறவுள்ளது. 

வந்தபின் கவலைப்படுவதை விட வருமுன் காப்பது மேல் – புன்னியாமீன்.

141009tsunami.jpgஉலகளாவிய ரீதியில் நோக்குமிடத்து காலத்துக்குக்காலம் ஏதோவொரு வகையில் மனிதகுலத்துக்கு பேரழிவுகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன. இப்பேரழிவுகளை பல கோணங்களில் இனங்காட்டலாம். மனிதனால் மனிதனுக்கு செய்யப்படும் செயற்பாடுகள். குறிப்பாக மனிதனால் உருவாக்கப்பட்ட ஆயுதங்களினால் ஏற்படக்கூடிய அழிவுகள். யுத்த அழிவுகளை இங்கு கோடிட்டுக்காட்டலாம். மனிதனால் உருவாக்கப்பட்ட அணுகுண்டு உட்பட நவீன ரககுண்டுகள் நொடிப்பொழுதில் பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலிகொள்ளத்தக்கவை. செயற்கைக் காரணிகளைத் தவிர இயற்கைக் காரணிகளாலும் உலகளாவிய ரீதியில் பேரழிவுகள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கின்றன.

வரலாற்றுக்காலம் முதல் இயற்கைக் காரணிகள் ஏற்படுத்திய அழிவுகள் குறிப்பிடப்பட்டாலும் கூட, நவீன காலத்தில் உலகளாவிய ரீதியிலான சனப்பெருக்கமானது இத்தகைய இயற்கை அழிவுகளினால் பல்லாயிரக்கணக்கான உயிர்களை உடனடியாக காவு கொள்வதினால் அவற்றின் விளைவுகள் முன்னைய காலங்களைவிட இக்காலத்தில் விசாலமாகத் தென்படுகின்றது.

இயற்கை அழிவுகள் எனும்போது மனிதனின் சக்திக்கப்பாட்பட்டது. கொள்ளை நோய்கள்,  சூறாவளிகள்,  நில அதிர்வுகள்,  எரிமலை வெடிப்புக்கள்,  கடும் மழை,  வெள்ளம்,  கடும் வரட்சி…. இவ்வாறு இயற்கை அழிவுகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

இயற்கைக் காரணிகளால் ஏற்படக்கூடிய பேரழிவுகள் ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தை அல்லது பல பிரதேசங்களை அல்லது பல நாடுகளை ஒரே நேரத்தில் தாக்கக் கூடியதாகவும் இருப்பதை நாம் காண்கின்றோம். இப்படிப்பட்ட நிலையில் இயற்கை அழிவினை எம்மால் முழுமையாக கட்டுப்படுத்த முடியாதுவிடினும்கூட, இயற்கை அழிவுகளிலிருந்து ஓரளவேனும் பாதுகாப்பினை எவ்வாறு பெற்றுக் கொள்ளலாம் என்பது குறித்தும் அது குறித்த நடவடிக்கைகளை நாம் எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக ஆண்டுதோறும் உலகப் பேரழிவுத் தடுப்புதினம் ஒக்டோபர் 14ஆம் திகதி அனுஸ்டிக்கப்படுகின்றது. இயற்கையை வெல்ல முடியாவிடினும்கூட,  இயற்கையால் ஏற்படக்கூடிய அழிவுகளிலிருந்து ஓரளவாவது பாதுகாப்பைப் பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது இத்தினத்தின் குறிக்கோளாகவுள்ளது. 2009ஆம் ஆண்டுக்கான உலக பேரழிவுக் குறைப்புத் தினத்தையொட்டி ஐக்கிய நாடுகள் சபை இத்தகைய பேரழிவுகளால் ஏற்படக்கூடிய மக்களுக்கு வைத்திய வசதிகள் செய்து கொடுப்பதை விசேட அடிப்படையாகக் கொண்டு நிகழ்ச்சித்திட்டங்களை வகுத்திருந்தன.

இயற்கைப் பேரழிவுகளை எடுத்துநோக்கும்போது அண்மைக்காலங்களில் நாம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட இயற்கை நிகழ்வாக சுனாமிப் பேரலைத் தாக்கம் அமைந்திருந்ததை அவதானிக்கலாம். இக் கட்டுரையை எழுதப்படும் நேரத்திலும்கூட,  (2009 ஒக்டோபர் இல்) சிட்னி: பசிபிக் பெருங்கடல் தீவான சமாவோவில் ஏற்பட்ட சுனாமி தாக்குதல் காரணமாக  194க்கும் அதிகமானோர் பலியானதுடன்,  பல கிராமங்கள் முற்றிலும் நாசமாகின. மேலும்,  நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

பசுபிக் பெருங்கடலில் நியூசிலாந்துக்கு வட கிழக்கே இருக்கும் இந்த குட்டி தீவின் தென் கிழக்கே 120 கிமீ. தொலைவில் கடலுக்கடியில் ஏற்பட்ட மாபெரும் நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோளில் 8.3 புள்ளிகள் அளவுக்குப் பதிவானதாக குறிப்பிடப்படுகின்றது. அருகில் இருக்கும் டோங்கா தீவிலும் சுனாமி தாக்கி பலர் பலியானார்கள். இந்த சமோவா தீவு அமெரிக்காவின் கட்டு்ப்பாட்டில் உள்ள நாடாகும்.

எனவே,  சுனாமி பற்றி சிறு விளக்கமொன்றினை இவ்விடத்தில் பெற்றுக் கொள்வது பொறுத்தமானதாக இருக்கலாம். ஜப்பானிய நாட்டில் மீனவர்களின் மீன்பிடித் துறைமுகங்களைத் தாக்கி பெருமளவு சேதங்களை விளைவித்த துறைமுக அலைகளையே அவர்கள் சுனாமி என்று அழைத்தனர். சுனாமி என்பது ஜப்பானிய மொழியில் உள்ள வார்த்தை (சுனாமி:津 波.)  ‘ட்சு’ சுனாமி. தான் சுனாமி. ‘ட்சு” என்றால் துறைமுகம், ‘னாமி” என்றால் பேரலை என்று பொருள். சுனாமி என்பது துறைமுக பேரலை. சில நிமிடங்கள் முதல் சில நாட்கள் வரை கூட,  அதுவும் பல்லாயிரக்கணக்கான இராட்சத அலைகளை உருவாக்கக்கூடியது தான் சுனாமி.

இந்த ஜப்பானிய சொல்லை உலகளாவிய ரீதியில் இன்று அனைத்து நாடுகளும் பயன்படுத்துகின்றன. அலையாக வந்து அழிவுகளை ஏற்படுத்தும் கடல் உண்மையில் வெளியிலிருந்து தனக்குப் பாதிப்பு ஏற்படும் வரை அமைதியாகவே இருக்கும். கடல் நம்மைத் தாக்கும் போது அது வேறொரு வகையில் தாக்கத்திற்குள்ளாவதை நம்மில் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

அண்மைக்கால சுனாமி பேரலைகளை நோக்குமிடத்து கடலில் ஏற்பட்ட புகம்பங்களே காரணமாக அமைந்திருந்தன. பூகம்பம் என்பது நிலப்பகுதியில்,  கடல் பகுதியில்,  மலைப்பகுதியில் ஏற்படும். நிலப்பகுதியில் ஏற்பட்டால் ஏற்பட்ட நிலப்பரப்பில் உள்ளவை அதிர்ந்து சேதமாகின்றது. கடலில் ஏற்பட்டால் கடலின் ஆழ்பகுதியில் ஏற்படக்கூடிய அதிர்வு சிலநேரங்களில் சுனாமிப் பேரலைகளைத் தோற்றுவிக்கின்றன. மலைப் பிரதேசங்களில் ஏற்பட்டால்  மலையில் எரிமலையாக உருவெடுக்கிறது.

பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஒரே நிலப்படையில் தான் புவியிருந்ததாக குறிப்பிடப்படுகின்றது. இயற்கையில் ஏற்பட்ட பல்வேறு தாக்கங்கள் காரணமாக புவி கண்டங்களாக பிரியப்,  பிரிய, அதன் தட்ப,  வெப்ப,  இயற்கை சூழ்நிலைகளுக்கு ஏற்ப,  பல்வேறு நிலப்படைகள் உருவாயின. இந்த நிலப்படைகள் மீது தான் ஒவ்வொரு கண்டமும் அமைந்துள்ளன. நிலம்,  கடல் எல்லாவற்றையும் தாங்கி நிற்பது இந்த நிலப்படைகள் தான். இதைத் தான் ‘டெக்டானிக் பிளேட்கள்’ என்று புவியியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

யுரேஷியன் பிளேட்,  ஆஸ்திரேலியன் பிளேட் இரண்டும்,  இந்தோனேசியாவின் வடக்கே சுமத்ரா தீவில் மோதியது. அதனால் பூகம்பம் ஏற்பட்டது. அதன் அலைகள் தான் இந்துமா சமுத்திரத்தில் சுனாமியை ஏற்படுத்தியுள்ளதாக புவியியல் ஆதாரங்கள் மூலமாக அறியமுடிகின்றது. அதேநேரம்,  சுனாமி பேரலைகள் ஏற்பட பல காரணங்கள் குறிப்பிடப்படுகின்றன.  கடலாழத்தில் ஏற்படும் எத்தகைய பாதிப்புக்களின்போதும், கடலாழ பூகம்பம் தோன்றும்போதும்,  கடலை ஒட்டிய நிலப்பகுதியில் பூகம்பம் தோன்றும்போதும்,  மலையில் எரிமலைகள் தோன்றும்போதும்,   வானில் கிரகங்களின் செயல்பாடுகள் மாறும் போதும்,  (இது இன்னும் உறுதிப்படுத்தப் படவில்லை) கடலில் பௌதீக மாற்றங்கள் ஏற்படும் போதும்,  விண்ணிலிருந்து கற்கள் போன்ற கனமான பொருட்கள் கடலில் விழும் போதும்.  கடலில் காணப்படும் பனிப் பாறைகள் உருகுவதால் நீர்மட்டத்தின் அளவு வேறுபடும் போதும். தகுந்த கரையோரப் பாதுகாப்பு அரண்கள் இல்லாமையால் ஏற்படும் பாரிய கடலரிப்புகளின் போதும் சுனாமிப் பேரலைகள் ஏற்படுமென குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட இயற்கைக் காரணங்களைத் தவிர தற்காலத்தில் பன்னாட்டு விஞ்ஞானிகளாலும் கடலில் நடத்தப்படும் அணுவாயுதப் பரிசோதனைகளின் பக்கவிளைவுகளாலும் ஏற்படலாம்.

கி.மு.,  365ம் ஆண்டு ஜூலை மாதத்தில் கிழக்கு மத்திய தரைக்கடலில் தோன்றி,  எகிப்தில் அலெக்சாண்டிரியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதை தற்போதைய கண்டுபிடிப்புகளுக்குட்பட்ட வகையில் முதல் சுனாமி என ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 

சமீப கால நிகழ்வுகளை எடுத்துக் கொண்டால்,  முதன்முதலில் 1755ம் ஆண்டு,  நவம்பர் 1ம் தேதி போர்த்துக்கல் நகரான லிஸ்பனில் ஏற்பட்ட பயங்கர பூகம்பம்,  போர்த்துக்கல்,  ஸ்பெயின்,  மொராக்கோ நாடுகளில் சுனாமி பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.

1883ம் ஆண்டளவில் ஜாவா சுமத்ரா இடையே கிரகோடா என்ற பகுதி எரிமலைப் பகுதியாக திகழ்ந்தது. அங்கு ஏற்பட்ட பூகம்பத்தில் அணுகுண்டை விட 10 ஆயிரம் மடங்கு சக்தி வாய்ந்த வெடிசம்பவம் நடந்தது. பல்லாயிரம் கிலோமீட்டர் தூரத்துக்கு அப்போது சத்தம் கேட்டதாக தகவல் கூறுகிறது. 35 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவ்வாறாக ஜப்பான் பகுதியிலும் அடிக்கடி சுனாமித் தாக்குதல்கள் இடம்பெற்று வந்துள்ளன. 1964ம் ஆண்டு அலாஸ்கா வளைகுடாவில் மிகப் பயங்கர சுனாமி ஏற்பட்டது. அதன் விளைவாக, அலாஸ்கா, வான்கூவர் தீவு (பிரிட்டீஷ் கொலம்பியா), அமெரிக்காவில் கலிபோர்னியா,  ஹவாய் பகுதிகளை தாக்கியது.

21ஆம் நூற்றாண்டில் உலகளாவிய ரீதியில் ஏற்பட்ட மாபெரும் இயற்கை அனர்த்தங்களுள் 2004 டிசம்பர் 26 ஆம் திகதி சுனாமியே இதுவரை பதிவாகியுள்ளது. இச்சுனாமி இலங்கை வரலாற்றிலும் பாரிய அழிவை ஏற்படுத்திய ஒன்றாக திகழ்கின்றது. 2004 டிசம்பர் 26 ஆம் திகதி முழு உலகையும் துன்பத்தில் ஆழ்த்திய சுனாமிப் பேரலை இலங்கை உட்பட இந்தியா,  இந்தோனேஷியா போன்ற நாடுகளில் பேரழிவை ஏற்படுத்தியது. இலங்கையின் கரையோரப் பகுதிகளில் பெரும்பாலான மாவட்டங்கள் இச்சுனாமியின் கொடூர அழிவுகளைச் சந்தித்தன. உயிர் அழிவுகளுடன் பல வருடங்களாகத் தேடிய தேட்டங்களும் சில நொடிகளில் இயற்கையின் சீற்றத்தால் அழிந்து போயின.

இச்சுனாமி இலங்கையில் ஏற்படுத்திய அழிவுகளைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம். உயிர்ச்சேதங்கள்,  பொருட் சேதங்கள்,  உட்கட்டமைப்புச் சேதங்கள்,  வாழ்வாதாரத் தொழிற்சேதங்கள். இச்சேதங்கள் இலங்கைக்கு மட்டும் உரியதல்ல. சுனாமியால் பாதிக்கப்பட்ட அனைத்து நாடுகளுக்குமே உரியன.

இலங்கையில் மாத்திரம் உத்தியோகபூர்வ தகவல்களின்படி 30, 977 பேர் சுனாமியின் கோரப்பிடியில் சிக்குண்டு பரிதாபமாக உயிரிழந்தனர். குழந்தைகள் உட்பட 5, 644 பேர் காணாமற் போயுள்ளனர். 15, 197 நபர்கள் உடல் ஊனமுற்றோர் அல்லது குறிப்பிடத்தக்க பாதிப்புக்கோ உள்ளாகியுள்ளனர். சுனாமியினால் பாதிக்கப்பட்ட மற்றைய நாடுகளுடன் ஒப்பீட்டளவில் இது குறைவாக இருந்த போதும் சின்னஞ்சிறு நாடான எமக்கு இது பேரழிவாகவே உள்ளது. இச்சுனாமியில் மாத்திரம் மொத்தமாக 2 இலட்சத்து 75 ஆயிரம் உயிர்களுக்கு மேல் காவுகொள்ளப்பட்டுள்ளன.

உயிர்ச் சேதங்கள் ஒருபுறமிருக்க சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் சொல்லில் அடங்காது. இலங்கையில் நாடளாவிய ரீதியில் எடுக்கப்பட்ட கணக்கின்படி 78, 387 வீடுகள் முற்றிலுமாக அழிந்துள்ளன. 60, 197 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்தன. இவ்வீடுகளுடன் சேர்ந்து மக்களின் பரம்பரைச் சொத்துக்கள் பலவும் அழிந்து போயின. வாழ்நாள் முழுவதும் தேடிய தேட்டங்கள் அனைத்தையும் சிலமணி நேரத்தில் இழந்த இம்மக்கள் கரையோர மாவட்டங்கள் பலவற்றிலும் உட்கட்டமைப்புக்களில் பெரும்பாலானவற்றைச் சுனாமி அழித்தொழித்தது. அம்பாறை,  மட்டக்களப்பு,  அம்பாந்தோட்டை,  காலி,  யாழ்ப்பாணம்,  முல்லைத்தீவு மாவட்டங்கள் அதனால் பெரிதும் பாதிப்புக்குள்ளாயின. 161 பாடசாலைகள் முற்றாகவும் 59 பாடசாலைகள் பகுதியளவிலும் நாடு முழுவதிலும் சேதமடைந்துள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இவற்றை விட வணக்கஸ்தலங்கள்,  வைத்தியசாலைகள்,  மக்கள் மண்டபங்கள்,  பொதுச் சந்தைகள் போன்ற பல சொத்துக்களும் முற்றாகவும் பகுதிகளாகவும் அழிந்து போயின. மின்சாரம்,  தொலைபேசி, குடிநீர் போன்றவற்றின் இணைப்புக்கள் முற்றாக சீர்குலைந்தன. வீதிகள்,  பாலங்கள் பலவும் போக்குவரத்திற்குதவாதவாறு சேதமடைந்தன.

மக்களின் வாழ்வாதாரங்கள் பலவும் சுனாமியினால் அழித்தொழிக்கப்பட்டன. பாதிப்புக்குள்ளான மாவட்ட மக்களின் வேளாண்மை உட்பட அனைத்துப் பயிர்களையும் கோழி வளர்ப்பு,  கால்நடை வளர்ப்பு என அனைத்தையும் சுனாமி அழித்துச் சென்றது. சிறு முதலீடுகள் மட்டுமின்றி பாரிய முதலீடுகளை மேற்கொண்டிருந்த வர்த்தகர்கள் அனைவரும் நிர்க்கதிக்குள்ளாயினர்.

ஒரு மணித்தியாலத்திற்கும் குறைவான நேரத்தில் பாரிய அழிவை ஏற்படுத்திச் சென்ற இச்சுனாமியினால் ஆண்டாண்டு காலம் தங்கள் இருப்பிடங்களில் வசித்த 154, 963 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்தனர். இதைவிட 235, 145 குடும்பங்கள் முற்றாகப் பாதிப்புக்குள்ளாயின. வரலாற்றில் முன்னொரு போதும் கண்டிராத இப்பேரழிவைக் கண்ட இலங்கை அரசு சந்தித்தது.

சுனாமி என்றால் ஜப்பான்தான் என்ற நிலை மாறி 2004ஆம் ஆண்டு சுனாமியை உலகளாவிய நாடுகளுக்கே ஒரு எச்சரிக்கையை விடுத்தது. சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சர்வதேச சமூகமும் சர்வதேச அமைப்புகளும் உதவிகளை வழங்கியபோதிலும்கூட,  இழப்புகளை ஈடுசெய்ய முடியாது. சுனாமி கற்றுத் தந்த பாடம் இயற்கைப் பேரழிவுகளிலிருந்து எவ்வாறு எம்மைக் காக்கலாம் என்ற உணர்வினை மக்கள் மத்தியில் தோற்றுவித்தது.  

சுனாமி அறிவித்தல் முன்னேற்பாடாக மேற்கொள்ளப்பட்டுள்ள சில நடவடிக்கைகளை நோக்குவோம்.  அமெரிக்காவில் உள்ள ஹவாய் தீவில்தான் முதன் முதலாக பசுபிக் பெருங்கடல் பிராந்திய சுனாமி எச்சரிக்கை அமைப்பு நிறுவப்பட்டது. அதற்கு காரணம் 20ஆம் நூற்றாண்டில் சுனாமியால் தாக்கப்பட்ட முதல் இடம் ஹவாய் என்பதினாலாகும்.

அமெரிக்கா 1949ல் அங்கு பசிபிக் கடல் சுனாமி எச்சரிக்கை அமைப்பை நிறுவியது. அப்போது விடுக்கப்பட்ட எச்சரிக்கைகளில் 75 சதவீதம் தவறாக அமைந்தது. இதனால் பொது மக்கள் மூட்டை முடிச்சுகளை எடுத்துக் கொண்டு இடம் பெயர்வதும் மீண்டும் பழைய இடத்துக்கே திரும்புவதும் சலிப்பை ஏற்படுத்தின. செலவும் ஆனது. அதனால் சுனாமி அலை உருவானால் மட்டும் கடலில் இருந்து தகவல் கொடுக்க கருவி வேண்டும் என்பதை உணர்ந்து கண்டுபிடிக்கப்பட்டதுதான் ‘சுனாமி மிதவை கருவி’.

1960ல் சிலியில் ஏற்பட்ட பூகம்பத்தால் ராட்சத அலைகள் ஹவாயை தாக்கின. இதனால் 12 ஆண்டுக்குப்பின் அங்கு மீண்டும் சுனாமி ஏற்பட்டது. முன்னரே உஷார் தகவல்கள் அனுப்பப் பட்டதால் அங்கு 61 பேர் மட்டுமே பலியானார்கள். அப்போது ஜப்பான்,  பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட பசுபிக் கடல் நாடுகளுக்கும் எச்சரிக்கை அமைப்பு வேண்டும் என்று உணரப்பட்டது. 1963ல் சர்வதேச சுனாமி எச்சரிக்கை மையம் அமைக்கப்பட்டது. இதில் உறுப்பினராக 26 நாடுகள் உள்ளன. உறுப்பினராக சேர்ந்துள்ள நாடுகளுக்கு மட்டுமே எச்சரிக்கைத் தகவல்களை அனுப்ப வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

ஆஸ்திரேலியா,  கனடா,  சிலி,  கொலம்பியா,  குக் ஐலண்ட்ஸ்,  கோஸ்டரிகா,  தென் கொரியா,  வடகொரியா,  ஈக்வேடார்,  எல்சல்வடார்,  பிஜி,  பிரான்ஸ்,  குவாதமாலா,  இந்தோனேஷியா,  ஜப்பான்,  மெக்சிகோ,  நியூசிலாந்து,  நிகரகுவா,  பெரு,  பிலிப்பைன்ஸ்,  ரஷ்யா,  சமோவா,  சிங்கப்பூர்,  தாய்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு மட்டுமே சுனாமி பேரலைகள் பற்றிய தகவல் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இம்முறை மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. 

கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டவுடன்,  சுனாமி அலைகள் கடலில் ஏற்படுகின்றனவா என்பதை அறிய சுனாமி எச்சரிக்கைக் கருவிகளால் மட்டுமே முடியும். அவற்றில் உள்ள பிரத்யேக கருவிகள்,  கடலில் நீர் இயக்கத்தில் ஏதாவது மாற்றம் இருக்கிறதா என்பதை தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இருக்கும். நிலநடுக்கம் ஏற்பட்ட உடன் கடல் அலைகள் தோன்றினால்,  அந்த அலைகள் உருவாக்கும் அழுத்த மாறுபாட்டை ஒலி அலைகளாக மாற்றி, அவற்றை சிக்னல்களாக வானில் உள்ள செயற்கைக் கோள்களுக்கு அனுப்பிவைக்கும். அங்கிருந்து தரையில் உள்ள மையங்கள் சிக்னலைப் பெற்றுக் கொள்ளும். அலையின் தன்மையை விஞ்ஞானிகள் அறிந்து அது பாதிப்பை ஏற்படுத்துமானால் எச்சரிக்கைத் தகவல்களை அனுப்புவார்கள்.

இத்தகவலை சுனாமி உருவான 3 நிமிடத்தில் வெவ்வேறு நாடுகளில் உள்ள அலுவலகங்களுக்கு சென்றுவிடும். ஆனால்,  சுனாமி அலைகள் உருவான இடத்துக்கும் கரைப் பகுதிக்கும் உள்ள தூரத்தைப் பொறுத்துத்தான் அலைகளின் தாக்குதல் வேகம் மற்றும் நேரம் அமையும்.

நிலநடுக்கம் ஏற்படும் போதெல்லாம்,  சுனாமி குறித்த பயம் இனி ஆசிய நாடுகளின் கடலோர பகுதி மக்களுக்கு ஏற்படும். இதைத் தடுக்க தெற்காசியாவுக்கான சார்க்,  தென்கிழக்கு ஆசிய நாடுகளான பிம்ஸ்டெக்,  ஆபிரிக்க-ஆசிய கூட்டமைப்புகள் இந்தியாவுடன் இணைந்து கடலில் சுனாமி எச்சரிக்கை அமைப்புகளை நிறுவ வேண்டும். அதை சர்வதேச சுனாமி எச்சரிக்கை அமைப்புக்கு கீழ் கொண்டு வரவேண்டும். எதிர்காலத்தில் பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய நாடுகளை பட்டியலிட்டு அந்நாடுகள் அனைத்தையும் இந்த பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரவேண்டும்.

உலக பேரழிவு விழிப்புணர்வு தினமான 2009 ஒக்டோபர் 14ஆம் திகதி  ஒரேநேரத்தில் 18 நாடுகளில் இந்த சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகையை மேற்கொண்டன. இந்து சமுத்திரத்திலுள்ள 18 நாடுகளில் ஒரே நேரத்தில் சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது. இலங்கையிலும் அம்பாந்தோட்டை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும்; சுனாமி முன்னெச்சரிக்கை பயிற்சிகள் நடத்தப்பட்டன.

உலக அழிவுகளை குறைக்கும் தினத்தை முன்னிட்டு இந்தோனேஷியாவை மையமாகக் கொண்டு இந்த ஒத்திகை நடத்தப்பட உள்ளது. இந்த ஒத்திகையில் இலங்கை,  இந்தியா,   இந்தோனேஷியா,  மலேசியா,   அவுஸ்திரேலியா உட்பட 18 நாடுகள் பங்கேற்றன.

இந்தோனேஷியாவில் இருந்து 18 நாடுகளுக்கும் ஒரேநேரத்தில் சுனாமி முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டது. அறிவித்தல் கிடைத்து எவ்வளவு நேரத்தில் சுனாமி எச்சரிக்கை குறித்த நாட்டை வந்தடையும்,  எவ்வளவு நேரத்தில் மக்களுக்கு அறிவிப்பது எவ்வளவு நேரத்தினுள் மக்களை வெளியேற்றுவது என்பன குறித்தும் இவ்வொத்திகையில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

எத்தகைய முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் ஏற்படுத்தப்பட்டாலும்கூட,  மக்கள் இதனை ஏற்றுக் கொள்ளக்கூடிய நிலை உருவானால் மாத்திரமே இவை வெற்றியளிக்கலாம். அண்மைக்காலங்களாக அடிக்கடி சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருப்பதனால் மக்கள் சோர்வடைந்துள்ளதை காணமுடிகின்றது. சிலர் இவற்றை இன்னும் விளக்கமே இன்றி காணப்படுகின்றனர். கருவிகள் பொருத்துவது மாத்திரமல்ல. அவற்றின் செயல்பாட்டின் நிலை பற்றிய உணர்வுகளை மக்கள் மனங்களில் பதிக்க வேண்டியதும் ஒரு முக்கியமான தேவையாகும்.

http://thatstamil.oneindia.in/cj/puniyameen/2009/1014-international-day-for-natural-disaster1.html

‘ருபெல்லா’ ஏற்றிய மாணவி மரணம் – தடுப்பூசி ஏற்றுவது இடைநிறுத்தம்

vaccine.jpgருபெல்லா தடுப்பூசி ஏற்றப்பட்ட பாடசாலை மாணவி ஒருவர் மரணமானதையடுத்து தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை உடனடியாக நிறுத்தப்பட்டுள்ள தாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளதுஅதேநேரம், வாரியப்பொல மினுவான்கெட்டே வித்தியாலயத்தைச் சேர்ந்த 13 வயது மாணவி நேற்று மரணமான சம்பவத்தை விசாரிக்க விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு கூறியது.

நான்கு பேர் கொண்ட இந்தக்குழு இன்று காலை விசாரணைகளை ஆரம்பிக்குமென பொதுச் சுகாதார பிரதிப் பணிப்பாளர் டொக்டர் பாலித மஹிபால தெரிவித்தார். டொக்டர் மனோரி சேனநாயக்க, டொக்டர் ரஜீவ டி சில்வா, டொக்டர் ஆனந்த சமரசேகர, டொக் டர் சிறியானி திஸாநாயக்க ஆகிய நால்வருமே மேற்படி குழுவின் அங்கத்தவர்களாவர்.

வாரியப்பொல மினுவான் கெட்டே வித்தியாலயத்தில் நேற்று முன்தினம் மாணவிகளுக்கு ருபெல்லா தடுப்பூசி மருந்து ஏற்றப்பட்டது.

இத்தடுப்பூசி மருந்தின் ஒவ்வாமை காரணமாக மூன்று மாணவிகள் பாதிக்கப்பட்டு வாரியபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டனர்.

இவர்களில் ஒரு மாணவி மிக ஆபத்தான நிலையில் குருணாகலை வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டார்.  இங்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் இம்மாணவி நேற்றிரவு மரணமடைந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்தது.

இலங்கையில் தமிழர்கள் திட்டமிட்டு பிரிக்கப்பட்டு சிதைக்கப்பட்டுள்ளனர் – திருமாவளவன்

இலங்கையில் தமிழர்கள் திட்டமிட்டு பிரிக்கப்பட்டு சிதைக்கப்பட்டுள்ளனர். உள்நாட்டில் பிரிக்கப்பட்டுள்ள அனைத்து தமிழ் பேசும் மக்களும் புலம் பெயர்வாழ் தமிழர்களும் ஒன்று பட்டு கூட்டு அரசியல் தலைமைத்துவத்தினை உருவாக்கினால் மட்டுமே இலங்கைத் தமிழர்களின் பாதுகாப்பும் உரிமையும் உறுதிப்படுத்தப்படும் என்று இலங்கை வந்துள்ள தமிழக பாராளுமன்ற குழுவின் உறுப்பினரும் விடுதலைச் சிறுதைகள் அணியின் தலைவருமான தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

நலன்புரி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள் தம்மை உடனடியாக விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கதறி அழுது கண்ணீர் மல்கி எம்மிடம் மன்றாடி கேட்டுக்கொண்டனர்.

இலங்கை விஜயம் தொடர்பாகவும் அகதிமுகாம்களில் மக்களின் உண்மை நிலை குறித்தும் விளக்கி தமிழக முதலமைச்சரின் ஊடாக இந்திய மத்திய அரசுக்க அறிக்கையினை சமர்ப்பிப்போம். இதனை விட விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் தனியான அறிக்யொன்றினையும் நான் சமர்ப்பிப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

விருப்பு வாக்குகளில் ஆட்சேபனை இருந்தால் வழக்கு தொடர முடியும்

000dayananda-dissanayake.jpgவிருப்பு வாக்கு முடிவுகள் தொடர்பில் ஏதும் வேட்பாளருக்கு ஆட்சேபனையிருந்தால் அது தொடர்பில் வழக்குத் தொடர முடியும்.

அதனை விடுத்து குறித்த மாவட்டத்துக்குப் பொறுப்பான தெரிவத்தாட்சி அதிகாரியை குற்றஞ்சாட்டவோ அச்சுறுத்தவோ எந்தவொரு வேட்பாளருக்கும் உரிமை கிடையாதென தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

காலி மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிக்கு காலி மாவட்ட ஐ.ம.சு. முன்னணி வேட்பாளர் நிசாந்த முதுஹெட்டிகம, கடந்த 12 ஆம் திகதி கொலை அச்சுறுத்தல் விடுத்தது தொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள ஆணையாளர், குறித்த சம்பவம் குறித்து பொலிஸாரும் குறித்த வேட்பாளரை பிரதிநிதித்து வப்படுத்தும் கட்சியும் உரிய நடவ டிக்கை எடுக்க வேண் டும் எனவும் கேட்டுள்ளார்.

ஐ.ம.சு. முன்னணி வேட்பாளர் நிசாந்த முது ஹெட்டிகம கடந்த மாதம் 28 ஆம் திகதி காலி மாவட்ட தேர்தல் காரியாலயத்துக்குச் சென்று அங்கிருந்த உத்தியோகஸ்தர்களை ஏசி அவர்களின் கடமைகளை செய்ய தடங்கல் செய்துள்ளார்.

இது குறித்து பொலிஸில் முறையிடப் பட்டுள்ள தோடு கடந்த 12 ஆம் திகதி விருப்பு வாக்கு தொடர்பில் குற்றஞ்சாட்டி காலி மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியை அச்சுறுத்தியுள்ளார். இது குறித்தும் பொலிஸில் முறையிடப்பட்டுள் ளதாக ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

வாக்குகள் தொடர்பிலோ விருப்பு வாக்குகள் குறித்தோ திருப்தி அடையா தவர்களுக்கு சட்டரீதியான நடவடிக்கை எடுக்க முடியும். இது தவிர வாக்குகள் எண்ணும் மண்டபத்தில் வைத்து மீள எண்ணுமாறு கோர அனு மதியுள்ளதாக குறிப்பிட்டுள்ள ஆணையாளர் வாக்குகள் எண்ணும் போது எந்த கட்சி பிரதிநிதியும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் விருப்பு வாக்கு விவகாரம் தொடர்பாக தெரிவத்தாட்சி அதிகாரியை அச்சுறுத்தியதை தேர்தல் திணைக்களம் வன்மையாக கண்டிப்பதாகவும் இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் ஆணையாளர் குறிப்பிட்டார்.