17

17

இலங்கையரான உலகப் புகழ்பெற்ற அமெரிக்க வர்த்தகர் கைது

3333raj-rajaratnam.jpgவர்த்தக மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் இலங்கையரான, புகழ் பெற்ற அமெரிக்க தமிழ் வர்த்தகர் ராஜ் ராஜரட்னம் கைது செய்யப்பட்டுள்ளார்.  உலகப் பிரசித்தி பெற்ற கெலொன் நிறுவனத்தின் உரிமையாளரும், உலக செல்வந்த வரிசையில் 559ஆம் இடத்தை வகிப்பவருமான ராஜ் ராஜரட்னம் நேற்றைய தினம் அவரது இல்லத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.

பங்குச் சந்தை மற்றும் நிதிச் சந்தை கொடுக்கல் வாங்கல்களின் போது மோசடியான முறையில் இலாபமீட்டியுள்ளதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

2006ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரையில் நடைபெற்ற இவ்வாறான சட்டவிரோத வர்த்தக நடவடிக்கைகளின் மூலம் 20 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு மறுவாழ்வு அளிக்க நிதி உதவி வழங்குவதாக ராஜரட்னம் ஒப்புக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

உலக வறுமை ஒழிப்பு நாள் (International Day for the Eradication of Poverty) – புன்னியாமீன்

171009.jpgஉலக வறுமை ஒழிப்பு நாள் (International Day for the Eradication of Poverty) ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் 17 ஆம் திகதி சர்வதேச ரீதியில் அனுஸ்டிக்கப்படுகிறது. உலக வங்கியின் தரவுகளின்படி 1.4 பில்லியன் மக்கள் மிகவும் வறுமைக்கோட்டின் மிகவும் அடிமட்டத்தில் வாழ்கின்றார்கள். இவர்களின் நாள் வருமானம் 1.25 டொலர் ஆகும்.

சர்வதேச ரீதியில் வறுமை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன்,  வறுமை காரணமாக மரணமடைந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும்,  பசிக்கொடுமையில் இருந்து மக்களை விடுவிப்பதற்காகவும் ஐக்கிய நாடுகள் சபை 1992 ஆம் ஆண்டு வறுமை ஒழிப்புத் தினத்தை உத்தியோக பூர்வமாக அறிவித்தது. ‘வறுமைக்கு எதிரான குழந்தைகள் மற்றும் குடும்பங்களின் வேண்டுகோள்”,  2009 ஆம் ஆண்டின் சர்வதேச வறுமை ஒழிப்பு நாளின் தலைப்பாகும்.

இந்நாள் முதன் முதலாக 1987 ஆம் ஆண்டு பிரான்சின் பாரிஸ் நகரில் கடைப்பிடிக்கப்பட்டது. பசி,  வறுமை,  வன்முறை,  பயம் என்பவற்றுக் பழியானோரை கௌரவிக்கும் வகையில் சுமார் பத்தாயிரம் மக்கள் ‘டொர்கேட்ரோ’வின் மனித உரிமைகள் மற்றும் விடுதலை சதுக்கத்தில் ஒன்றுகூடினர். இவர்கள் உலகளாவிய ரீதியில் வறுமை நிலை ஒழிக்கப்பட வேண்டும் என்ற கோசத்தினை முன்வைத்தனர்.

வறுமை நிலை காரணமாக உலகளாவிய ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ வேண்டியதன் அவசியம் குறித்து அனைத்து தரப்பினரின் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்துடன் வறுமை ஒழிப்பு தினத்தில் பல்வேறு வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஒரு நாட்டின் அல்லது இடத்தின் அடிப்படை வாழ்க்கைத் தரத்துக்குக் கீழ் வாழும் மக்களை ஏழ்மை நிலையில் அல்லது வறுமைக் கோட்டின் கீழ் வாழ்பவர்கள் என வரைவிலக்கணப்படுத்தலாம். பொதுவாக ஒரு குறிப்பிட்ட அளவு வருமானத்தை வைத்தே வறுமை நிலை அளவு சார்ந்து மதிப்பிடப்படுகின்றது. தீவிர வறுமை நிலை என்பது நாளொன்றுக்கு 1.25  டாலர்களுக்கும் குறைவான தொகையில் ஒருவர் வாழ்க்கை நடத்துவது என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது நாட்டுக்கு நாடு வேறுபடலாம். பொதுவாக வறுமை நிலை உணவு,  சுத்தமான நீர்,  உடை, உறையுள்,  கல்வி,  சுகாதாரம்,  சமூக வாய்ப்புக்கள்,  மனித அரசியல் உரிமைகள்,  பிற சமூகங்களுடன் தொடர்புகள் அற்ற அல்லது மட்டுப்படுத்தப்பட்ட ஒரு நிலையைக் குறிக்கின்றது.

உலகளாவிய ரீதியில் வறுமை சடுதியாக அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வாஷிங்டனில் நடைபெற்ற நிதி மற்றும் வளர்ச்சித் துறை மாநாட்டில் (2009) எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் மேலும் பல நாடுகள் பொருளாதார நெருக்கடியின் பாதிப்பை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ள அதேவேளை,  வறிய நாடுகளுக்கான உதவிகளை செல்வந்த நாடுகள் தொடர்ந்தும் வழங்க வேண்டுமென அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

உலக வங்கியின் 185 உறுப்பு நாடுகளினதும் அமைச்சர்கள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் கலந்து கொண்ட நிதி மற்றும் வளர்ச்சித் துறை மாநாட்டில் நிதி நெருக்கடி நீண்டகாலத்திற்கு நீடிக்கும் பட்சத்தில் உலக வங்கிக்கான வளங்களை மேலும் அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்படலாமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2015 இற்குள் வறுமையை ஒழிப்பதற்கு உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஐ.நா. வின் இலக்குகளை இந்நிதி நெருக்கடி தடம்புரளச் செய்து விடுமெனவும் இதில் கலந்துகொண்ட அமைச்சர்கள் எச்சரிக்கை விடுத்தமை இங்கு அவதானிக்கத்தக்க விடயமாகும்.

மனிதப் பேரழிவைத் தடுப்பதற்கு நாம் தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தியுள்ள உலக வங்கியின் தலைவர் (2009) ரொபேர்ட் ஷோலிக் ஐ.நா.வின் மிலேனியம் அபிவிருத்தி இலக்குகளான வறுமை,  பட்டினி,  கல்வி,  சமத்துவம்,  தொற்றுநோய் மற்றும் சிசுமரணம் போன்றவற்றில் பெரும்பாலானவையை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும் பொருளாதார நெருக்கடியால் வறிய நாடுகளிலுள்ள சமூகங்களுக்கு செலவிடப்படும் தொகைகள் பாதிக்கப்படக் கூடாதெனத் தெரிவித்துள்ள ஷோலிக் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கான கடனை 100 பில்லியன் வரை அதிகரிக்கும் திட்டத்தை அமைச்சர்கள் அங்கீகரிக்க வேண்டுமெனவும் கோரியுள்ளார்.

அத்துடன்,  பொருளாதார நெருக்கடியில் கவனத்தை செலுத்துவதை விட்டு அது வறுமையை எவ்வாறு பாதிக்குமென்பதில் கவனம் செலுத்த வேண்டுமெனக் கோரியுள்ளார். ஷோலிக் தென் அமெரிக்கா மற்றும் ஆசிய நாடுகளின் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போது சுகாதாரம்,  கல்வி மற்றும் உணவு போன்றவற்றுக்கு செலவிட வேண்டிய தொகையை முன்பு குறைத்த தவறை மீண்டும் செய்யக் கூடாதெனச் சுட்டிக் காட்டியுள்ளார்.

வறுமை ஒழிப்பு,  உணவு பாதுகாப்பு உள்ளிட்ட புத்தாயிரம் ஆண்டின் மேம்பாட்டு இலக்கை (Millennium Development Goals – MDG) திட்டமிட்டபடி திட்டமிட்டபடி எட்டுவதற்கான முயற்சிகளை பலப்படுத்துவது என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும்,  ஐ.நா. பொதுச் செயலர் பான் கீ மூனும் ஒப்புக் கொண்டுள்ளனர். அமெரிக்க அதிபராக பராக் ஒபாமா பொறுப்பேற்றதற்குப் பின்னர்,  2009 மார்ச்சில் முதல் முறையாக ஐ.நா. பொதுச் செயலர் பான் கீ மூனை ஐ.நா. அவை அலுவலகத்தில் சந்தித்துப் பேசிய போதே மேற்படி இணக்கப்பாடு ஏற்பட்டது. 2000ஆவது ஆண்டின் ஆரம்பத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட புத்தாயிரம் மேம்பாட்டு இலக்குகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்துள்ளனர். மூன்றாம் உலக நாடுகளில் நிலவும் உணவுப் பஞ்சம்,  பிணி,  வறுமை,  வேலையின்மை ஆகியவற்றை ஒழிக்க அபிவிருத்தியடைந்த நாடுகள் வழங்க ஒப்புக் கொண்டுள்ள நிதி உதவிகளை நிறுத்தக் கூடாது என்றும்,  உறுதியளிக்கப்பட்ட உதவிகளை தொடர்வதன் மூலமாக உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது,  புவி வெப்பமடைதலால் ஏற்படும் பாதிப்பை தவிர்க்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வது என்று இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.

ஆனால் உலகில் தற்பொழுது நிலவும் பொருளாதார பின்னடைவின் காரணமாக முன்னேறிய நாடுகளில் நிலவும் பொருளாதாரச் சூழல் புத்தாயிரம் முன்னேற்ற இலக்குகளை எட்டவதில் பெரும் முட்டுக்கட்டையாக இருக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். பொருளாதார பின்னடைவினால் ஏற்பட்டுள்ள நெருக்கடியின் உச்சக்கட்டத்தை சந்திக்கப்போகும் 2009ஆம் ஆண்டில் ஒன்று ‘செய் அல்லது விடு’ என்ற உறுதிப்பாட்டுடன் சிக்கலை எதிர்நோக்கிச் செயல்படப் போவதாக ஒபாமா அரைகூவல் விடுத்தமையையும் இவ்விடத்தில் நினைவு கூரல் வேண்டும். 

இவ்வாறாக திட்டங்கள் தீட்டப்பட்டாலும் கூட, அரைகூவல்கள் விடுக்கப்பட்டாலும் கூட வறுமை காரணமாக பள்ளிக்கு செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை 12 கோடிக்கு மேல் என சில புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. உலக நாடுகள் இராணுவ தளவாடங்கள் வாங்கும் செலவில் ஒரு சதவீதத்தை ஒதுக்கினால் கூட உலகில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி கிடைக்க வழி செய்து விடலாம் என திட்டமிடப்பட்டது. எனினும் அனைவருக்கும் கல்வி என்பது உலகளாவிய ரீதியில் இன்று வரை கனவாகவே உள்ளது.

வசதிபடைத்தவர் மற்றும் ஏழைகளுக்கு இடையேயான இடைவெளி வரவர அதிகரித்துக்கொண்டே வருகிறது. அபிவிருத்தியடையாத 48 நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, உலகின் முதல் மூன்று பணக்காரர்களின் சொத்து மதிப்பை விட குறைவு என மதிப்பிடப்பட்டுள்ளது. உலக பணக்காரர்களில் 20 சதவீதம் பேர் உலகின் மொத்த வளங்களில் 86 சதவீதத்தை கைப்பற்றியுள்ளனர். மீதமுள்ள 80 சதவீத மக்களுக்கு கிடைப்பது வெறும் 14 சதவீதம் மட்டுமே.

ஏழ்மைக்கு முக்கிய காரணமாக ஊழல் உள்ளது. வரிய நாடுகளின் முன்னேற்றத்துக்கு தடையாக உள்ள ஊழலை வளர்ந்த நாடுகளின் பன்னாட்டு நிறுவனங்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கின்றன. அதிகாரிகளை வளைக்கவும்,  ஒப்பந்தங்களை கைப்பற்றவும் முறைகேடான வழிகளில் பணத்தை செலவிடும் இந்த நிறுவனங்கள் ஏழை நாடுகளின் குடிமக்களின் வரிப்பணத்தை தெரிந்தே சுரண்டுகின்றன. குற்றங்கள் அதிகரிக்க வறுமையும் ஒரு காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை. வறுமையும்,  ஏற்றத்தாழ்வுகளும் நிறைந்த சமூகத்தில்,  வன்முறையையும்,  குற்றங்களையும் தவிர்க்க முடியாது.

உலகளாவிய ரீதியில் மக்கள் தொகை கூடிய நாடான சீனாவில் வறுமை ஒழிப்பு சாதனை,  உலகின் வறுமை ஒழிப்பு முன்னேற்றப் போக்கைத் தூண்டி,  உலக வறுமை ஒழிப்புப் பணிக்குப் பெரிய பங்காற்றியது. என  சீன அரசவையின் வறுமை ஒழிப்பு மற்றும் வளர்ச்சிக்கான தலைமைக் குழுவின் அலுவலகத் தலைவர் Fan Xiaojian  அண்மையில் வெளியிட்ட கட்டுரையில் சுட்டிக்காட்டியிருந்தார். ஐ.நாவின் புத்தாயிரமாண்டு வளர்ச்சி இலக்குகளில்,  வறிய மக்கள் தொகையைப் பாதியாகக் குறைப்பது என்ற இலக்கை முன்கூட்டியே நனவாக்க முனையும் ஒரு நாடாகவே சீனா உள்ளது.

அதே நேரம் இந்தியாவும் வறுமை ஒழிப்புக்காக வேண்டி பாரிய பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றன. வறுமையில் வாடும் குடும்பங்களை ஒரே தேவையுள்ள குழுக்களாக (Common Interest Groups – CIG)  ஒன்றிணைத்து அவர்களின் முழுமையான  மேம்பாட்டிற்கான நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை அளிக்கும் மாவட்ட வறுமை ஒழிப்புப் திட்டத்தை உலக வங்கியின் ஆலோசனையின் பேரி்ல் 2000வது ஆண்டு முதல் மத்திய பிரதேச அரசு செயல்படுத்தி வருகின்றது. மத்தியப் பிரதேசத்தின் 14 மாவட்டங்களுக்கு உட்பட்ட 2, 900 கிராமங்களில் வாழும் 3, 25, 000 மக்களை 52, 000 குழுக்களாக ஒன்றிணைத்து உதவிகள் வழங்கப்பட்டுவருகின்றன. வறுமை கோட்டிற்கு கீழேயுள்ள குடும்பங்களின் வருவாய் 65 விகிதமாக உயர்ந்துள்ளது என்றும், விவசாய  உற்பத்தி 149 விகிதமாக உயர்ந்துள்ளது என்றும்,   விவசாயத்திற்கான பாசனப் பரப்பு 27 விகிதமாக அதிகரித்துள்ளது என்றும் சில புள்ளி விபரங்கள் எடுத்துக் காட்டுகின்றன.

அதே அடிப்படையில் மாவட்ட வறுமை ஒழிப்புத் திட்டம் – 2 என்ற பெயரில் 5000 கிராமங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதற்காகவே உலக வங்கியின் தனி நபர் மேம்பாட்டு கணக்குத் திட்டத்தின் கீழ் (Individual Development Account – IDA) 100 மில்லியன் டாலர் கடன் கொடுக்க முடிவு செய்துள்ளதாக உலக வங்கியின் இந்தியக் கிளையின் இயக்குனர் ராபர்ட்டோ ஜாகா மும்பையில் அண்மையில்  தெரிவித்திருந்தார். இத்திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் நிதியைக் கொண்டு சுய உதவிக் குழுக்களைப் போல கூட்டுத் தொழில் செய்யவும் இக்குழுக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். அப்படி பல குழுக்கள் செய்து பலன் பெற்றும் உள்ளன என்று உலக வங்கி அறிக்கை கூறுகிறது.

 மக்களை பசிக்கொடுமையிலிருந்து வெளிக்கொண்டுவர வளர்முக நாடுகள் மேற்கொண்டுவரும் முயற்சிகள் தொடர்பில் அக்ஸன் எய்ட் நிறுவனம் 2009 இறுதிப்பகுதியில் வெளியிட்டுள்ள ஓர் ஆய்வறிக்கையில் இந்தியாவைக் கடுமையாக விமர்சித்திருந்தது. ஆனால் அந்த அறிக்கை பிரேசிலையும் சீனாவையும் பாராட்டியிருந்தது.

உலகில் மிகவேகமாக வளர்ந்துவரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா அமைந்திருந்தாலும்,  தொண்ணூறுகளின் மையப்பகுதியிலிருந்து நாட்டில் போஷாக்கின்மையால் வாடுவோரின் எண்ணிக்கை 3 கோடியால் அதிகரித்துள்ளது என்று அக்ஷன் எய்ட் நிறுவனத்தின் அறிக்கை கூறுகிறது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்துவருவதாக கூறப்படுகிறது. வறுமை ஒழிப்பில் சிறப்பாக செயல்பட்டுள்ள பிரேசில் அரசாங்கத்தை, அதன் நிலச் சீர்திருத்த திட்டங்களுக்காகவும்,  ஏழைகளுக்கு இலவசமாக உணவு வழங்கும் திட்டங்களுக்காகவும் இந்த அறிக்கை பாராட்டியுள்ளது. சீனா தனது விவசாயிகளுக்கு உதவித் திட்டங்களை அறிவித்து 5 கோடியே 80 லட்சம் பேரை பசிக் கொடுமையிலிருந்து வெளிக்கொணர்ந்துள்ளதாக இதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

முன்னைய நிலைகளுடன் ஒப்பு நோக்கும் போது ஆசியாவின் வறுமை ஒழிப்பு ஓரளவு முன்னேற்றம் இருந்த போதிலும் கூட ஆபிரிக்க நாடுகளில் நிலமை மிகமிக மோசமாகவே இன்று வரை காணப்படுகிறது. 2008 ஆம் ஆண்டு உலக வறுமை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட அறிக்கையில் “உலக நாடுகளை பீடித்திருக்கும் நிதி நெருக்கடிகளால் மேலும் 10 கோடி மக்கள் வறுமையில் தள்ளப்படலாம்” என்று அச்சம் தெரிவித்திருந்தது.

தற்போது சுமார் 1.4 பில்லியன் மக்கள் தீவிர வறுமையில் வாடுவதாக தெரிவித்துள்ள ஐ. நா.,  உணவு மற்றும் எரிபொருள் விலைகள் வானளாவ சென்றால் மேலும் 10 கோடி பேர் வறுமையில் தள்ளப்படுவார்கள் என்றும் கூறியுள்ளது.

“வறுமையை ஒழிக்கும் நமது பணி மனித உரிமைகள் மற்றும் மானுட மரியாதை ஆகியவற்றிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும்” என்று ஐ. நா. பொதுச் செயலர் பான் கி மூன் தெரிவித்தார். 2015-ற்குள் வறுமையை ஒழிப்பதாக ஐ. நா. இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆனால் ஏழை நாடுகள் பல இத்திட்டத்தில் மிகவும் பின் தங்கியுள்ளதாக அவர் தெரிவித்த கருத்தை இவ்விடத்தில் மீட்டுப்பார்ப்பது பொறுத்தமாக இருக்கும்.

அரசுக்கும் சரத் பொன்சேகாவுக்குமிடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக பொய் பிரசாரம்: வதந்தி பரப்புவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை – இராணுவப் பேச்சாளர்

udaya_nanayakkara_brigediars.jpg ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கும் அரசுக்கும் இடையே பிளவுகள் ஏற்பட்டுள்ளதாக பிரசாரங்கள் செய்வதை உடனடியாக நிறுத்தவேண்டும். இல்லையேல் இவ்வாறு செயற்படுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.

பிரதம பாதுகாப்பு அதிகாரியான ஜெனரல் சரத் பொன் சேகா இன்னமும் இலங்கை இராணுவத்தின் உயர்பதவியை வகித்து வருகிறார். அவருக்கும் அரசுக்கும் இடையே முரண்பாடுகளும், பிளவுகளும் ஏற்பட்டுவருவதாக ஆதாரமற்ற பிரசாரங்கள் செய்யப்படுகின்றன. இவை அனைத்தும் பொய்யான பிரசாரங்களே.

சிலரது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக இவ்வாறான பிரசாரங்களை செய்வதுடன், மக்களையும் குழப்ப முயற்சிக்கின்றனர். இவற்றை அவர்கள் நிறுத்த வேண்டும். சில ஊடகங்களிலும், இணையத்தளங்களிலும், போஸ்டர்கள் மூலமாகவும் செய்யப்பட்டுவரும் பிரசாரங்கள் யாவும் உண்மைக்கு புறம்பானவை. இவ்வாறான பொய்ப்பிரசாரங்களை நிறுத்த வேண்டும். இல்லையேல் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

கடந்த சில தினங்களாக சில ஊடகங்கள் இவ்வாறான பிரசாரங்களை செய்து வருவதை முன்னிட்டே பிரிகேடியர் உதய நாணயக்கார மேற்கண்ட அறிவித்தலை விடுத்தார்.

அரசியலில் ஈடுபடுமாறு யாரும் இதுவரை அழைக்கவில்லை: சரத் பொன்சேகா

அரசியலில் ஈடுபடுமாறு இதுவரையில் எவரும் தமக்கு அழைப்பு விடுக்கவில்லை என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தகவல் வெளியிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது பொது வேட்பாளராக சரத் பொன்சேகா போட்டியிடுவார் என வெளியான செய்திகள் குறித்து கேள்வி எழுப்பிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தம்மைப்பற்றி ஊடகங்களில் பல்வேறு செய்திகள் வெளியாகி வருவதாகவும் அது பற்றி தம்மால் கருத்து கூற முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இராணுவத் தளபதியாக கடமையாற்றிய காலத்திலும் இவ்வாறு ஊடகங்களில் பல்வேறு செய்திகள் வெளியானதாகவும், தாம் இது குறித்து கவலைப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசியல் குறித்து இதுவரையில் எவரும் தம்முடன் பேசவில்லை எனவும், இதனால் அரசியல் விவகாரங்களைப் பற்றி கருத்து தெரிவிப்பதில் அர்த்தமில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொரு. நெருக்கடி ஏற்படுவதை தவிர்க்க ஆசியாவில் இணைந்த செயற்பாடு அவசியம் – அமைச்சர் போகொல்லாகம

rohitha-bogollagama_s.jpgமீண்டும் ஒரு பொருளாதார நிதி நெருக்கடி தலைதூக்காமலிருக்க ஆசிய நாடுகளின் இணைந்த செயற்பாடு கள் அவசியமென வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லா கம தெரிவித்தார்.

உலகின் 70 சதவீத வெளிநாட்டு நாணய மாற்று ஒதுக்கத்தைக் கொண்டுள்ள ஆசியா 2030ம் ஆண்டளவில் அபிவி ருத்தியடைந்து உள்நாட்டு உற்பத்தியில் 50 வீதத்தை விஞ்சியிருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில் அதற்கான இணைந்த செயற்பாடுகள் அவசியமெனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

சர்வதேச பயங்கரவாதம் நாடுகளுக்குள்ளும் நாடுகளுக்கிடையேயும் ஒரு பொது அச்சுறுத்தலாகியுள்ளது. உலக நலனுக்குக் குந்தகம் விளைவிக்கும் அதனை தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் உரிய செயற்பாடுகள் அவசியம் என்பதையும் அமைச்சர் வலி யுறுத்தினார்.

ஆசிய ஒத்துழைப்பு உரையாடலுக்கான அமைச்சரவை மாநாட்டில் ஆரம்ப உரையை நிகழ்த்திய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் போகொல்லாகம தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது, ஆசிய ஒத்துழைப்பு உரையாடல் அமைப்பின் நாடுகள் உலகின் மூன்றில் இரண்டு மனித வளத்தைக் கொண்டுள்ளன. இயற்கை வளங்களாகிய எரிபொருள், நிலக்கரி, வாயு, அலுமினியம், செம்பு மற்றும் சுரங்க தாதுப் பொருட்களையும் கொண்டுள்ளன. இது அங்கத்துவ நாடுகளின் பொருளாதார ஆற்றல் திறனை துல்லியமாக எடுத்துக் காட்டுகின்றது. இவை ஆசிய நாடுகளுக்கான சிறந்த பொருளாதார வாய்ப்பைத் தெளிவுபடுத்துகின்றன.

ஆசிய பிராந்தியத்தைப் பொறுத்தவரை தொடர்பாடல் போதாமை கவனிக்கத்தக்க ஒரு விடயமாகும். பெளதிக, உள்ளக கட்டமைப்பு, இலத்திரனியல் தொலைத் தொடர்புத் துறைகளின் மேம்பாடுகள் கவனத்திற்கொள்ளத்தக்கதாகும்.

கடந்த நூற்றாண்டில் ஆசிய பிராந்தியம் அபிவிருத்தியில் பின்னடைந்து காணப் படுகிறது. வளர்ச்சியடைந்த நாடுகளை முன்னுதாரணமாகக் கொண்டு நாம் பொருளாதார வளர்ச்சிபெற வேண்டுமெனில் விரிவானதும் மேம்பாடு மிக்கதுமான வர்த்தகம், முதலீடுகள் மற்றும் கூட்டு வர்த்தக முயற்சிகளில் உச்ச அளவில் கரிசனை செலுத்துவது அவசியமெனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

2000 பேர் சொந்த இடங்கள் அனுப்பிவைப்பு

chals_.jpgநிவாரணக் கிராமங்களிலிருந்து மக் களை படிப்படியாக சொந்த இடங்களுக்கு அனுப்பும் நடவடிக்கையின் கீழ் நேற்றும் 2000 பேர் அனுப்பி வைக்கப்பட்டனர். நிவாரணக் கிராமங்களிலிருந்து மக்களை படிப்படியாக சொந்த இடங்களுக்கு அனுப்பும் நடவடிக்கையின் கீழ் நேற்றும் 2000 பேர் அனுப்பிவைக்கப்பட்டனர்.

35 பஸ் வண்டிகளில் நேற்றுக் காலை முதல், கட்டம் கட்டமாக இவர்கள் யாழ். நகருக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

இவர்களது உடைமைகள் அனைத்தும் 15 லொறிகளில் ஏற்றப்பட்டு பஸ் வண்டிகளுடனேயே அனுப்பி வைக்கப்பட்டதாக வவுனியா அரச அதிபர் திருமதி பீ. எம். எஸ். சார்ள்ஸ் தெரிவித்தார். நேற்று முன் தினம் அனுப்பப்பட்ட 3220 பேருக்கும், நேற்று அனுப்பப்பட்ட 2000 பேருக்கும் தேவையான உலர் உணவுப் பொருட்கள் என்பனவும் வழ ங்கப்பட்டன.

பயங்கரவாத இருள் நீங்கி சமாதான ஒளி பிறக்கட்டும் – ஜனாதிபதி தீபாவளி வாழ்த்து

121009.jpgதீபத் திருநாளான இத்தீபாவளித் திருநாள் எமது நாட்டிலிருந்து பயங்கரவாத இருளைப் போக்கி சமாதான ஒளியேற்ற வேண்டுமெனப் பிரார்த்திக்கிறேனென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது தீபாவளி வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அந்தச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது;

தீபத்திருநாளான தீபாவளி பண்டிகை தீயவற்றை நீக்கி நன்மையையும் அறியாமையை நீக்கி அறிவுடைமையையும் வெற்றிகொள்வதைக் குறிப்பதாக அமைகிறது.

உலகெங்கிலுமுள்ள இந்துக்களால் கொண்டாடப்படும் தீபாவளிப் பண்டிகை இந்து மதத்தின் மிக உயர்ந்த ஆன்மீகப் பெறுமானங்களுக்கு ஏற்ப ஒரு சிறந்த வாழ்க்கையை கட்டியெழுப்புவதற்கான உண்மையான போராட்டத்தில் மானிடர்கள் பெற்ற முன்னேற்றத்தையும் குறித்து நிற்கின்றது. இந்தவகையில், இது மக்களின் ஆன்மீக சுபீட்சத்தின் ஒரு கொண்டாட்டமாகவும் உள்ளது.

இன்று எமது மக்கள் இந்தீபத் திருநாளை அவர்களை மிக நீண்டகாலமாகப் பிரித்து வைத்திருந்த இன, மத, மற்றும் ஏனைய எல்லா வேறுபாடுகளையும் மறந்து அவர்கள் மத்தியில் அன்பையும் புரிந்துணர்வையும் கட்டியெழுப்பும் ஐக்கிய உணர்வுடன் கொண்டாட முடிந்துள்ளது.

இலங்கை வாழ் இந்துக்கள் மகிழ்ச்சி பொங்கும் இத்தீபாவளித் திருநாளின் மகிழ்ச்சியில் உலகெங்கிலும் வாழும் தமது இந்து சகோதரர்களோடு இணைந்து கொள்கின்றனர். இந்து சமூகம் எதிர்நோக்கிய பல்வேறு சிரமங்களையும் கடந்த காலத்தோடு மறந்து தங்களது சொந்த வீடுகளில் அமைதி, அன்பு, சுபீட்சத்தோடு வாழமுடியுமானதொரு புதியதோர் யுகத்தில் நாம் இன்று இருக்கின்றோம்.

தேர்வுக் குழுவினரின் எதிர்ப்பையும் மீறி ஒபாமாவுக்கு நோபல் பரிசு – நோர்வே பத்திரிகை தகவல்

Alfred_Nobelதேர்வுக் குழுவின் பெரும்பான்மை எதிர்ப்பையும் மீறி அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு உள்ளதாக நோர்வே பத்திரிகை தகவல் வெளியிட்டு இருக்கிறது.

2009ம் ஆண்டு உலக அமைதிக்கான நோபல் பரிசை அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு கடந்த வாரம் வழங்குவதாக நோபல் பரிசு குழு அறிவித்தது. நோர்வே பாராளுமன்றத்தால் நியமிக்கப்பட்ட தேர்வுக் குழு நோபல் பரிசுக்கு ஒபாமாவை தேர்ந்தெடுத்தது.

நோபல் பரிசுக்கு, ஒபாமாவின் தேர்வு ஒரு மனதான முடிவு என்று தேர்வுக்குழுவின் செயலாளர் கெர் லுன்டெஸ்டாட் அப் போது கூறினார். எனினும், ஜனாதிபதி பதவி ஏற்று 9 மாதங்கள் கூட முழுமை யடையாத நிலையில் ஒபாமா நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டது, சர்ச்சையை உருவாக்கியது. அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டிருக்க கூடாது என்றும் பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்தனர்.

இந்த நிலையில் நோபல் பரிசு குழு வின் பெரும்பான்மை உறுப்பினர்களின் எதிர்ப்பையும் மீறி ஒபாமாவுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருப்பது தற்போது தெரியவந்துள்ளது.

நோர்வேயில் இருந்து வெளிவரும் வெர்டென்ஸ் காங்க் என்னும் பத்திரிகை இந்த அதிர்ச்சித் தகவலை வெளியிட்டு இருக்கிறது.

இது குறித்து அந்தப் பத்திரிகையில் கூறப்பட்டிருப்பதாவது, நோபல் பரிசு தேர்வுக்குழு (ஐவர் குழு) உறுப்பினர்கள் பெரும்பான்மையானோரிடம் வெர்டென்ஸ் காங்க் தொடர்பு கொண்டு கருத்து கேட்டது. இந்த உறுப்பனர்கள் முதலில் உலக அமைதிக்கான நோபல் பரிசுக்கு ஒபா மாவை தேர்வு செய்வதை விரும்பவில்லை.

தேர்வுக் குழுவில் இடம்பெற்றிருந்த முன்னேற்ற கட்சி என்ற இடது சாரி கட் சியை சேர்ந்த இங்கெர்-மேரி யெட்டர்ஹார்ன் என்ற பெண் தலைவர்தான் முதன் முதலில் ஒபாமாவுக்கு நோபல் பரிசு வழங்கக் கூடாது என்று எதிர்த்தவர்.  ஒபாமா, தான் அளித்த வாக்குறுதிகளை நிறை வேற்றினாரா? என்பதை தெரிந்து கொள்ளும் முன்பாகவே நோபல் பரிசு வழங்குவது குறித்து அவர் கேள்வி எழுப்பியும் இருக்கிறார்.

எனினும், நோபல் பரிசு தேர்வுக்குழுவின் தலைவர் தோர்ப்ஜோயர்ன் ஜாக்லாண்ட், சிஸெல் ரோயன் பெக் இருவரும் ஒபாமாவுக்கு நோபல் பரிசு வழங்கலாம் என்று தீவிரமாக சிபாரிசு செய்தனர். இவர்கள் இருவரும் தொழிலாளர் கட்சியின் பிரதிநிதிகள் ஆவர். தேர்வுக் குழுவின் தலைவரே தீவிர ஆதரவு தெரிவித்ததால் முடிவில் ஒபாமாவுக்கு நோபல் பரிசு வழங்குவதென தீர்மா னிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

படையினருக்கு இடர்காலக்கடன் கொடுப்பனவாக ரூ. 700 மில்லியன்

படையினர் கோரியிருந்த இடர்காலக் கடன்களுக்கென 700 மில்லியன் ரூபாவை உடனடியாக இலங்கை இராணுவத்துக்கு அரசாங்கம் வழங்கியுள்ளது.படையினர் கோரியிருந்த இடர்காலக் கடன்களுக்கென 700 மில்லியன் ரூபாவை உடனடியாக இலங்கை இராணுவத்துக்கு அரசாங்கம் வழங்கியுள்ளது என பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரிய, வன்னி பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டபோது அங்குள்ள படைவீரர்கள், தாம் கோரியிருந்த இடர்கால கடன் (10 மாத கொடுப்பனவு) இதுவரை கிடைக்க வில்லை என இராணுவத் தளபதியின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

சுமார் 900 க்கும் அதிகமான விண்ண ப்பங்கள் இராணுவ தலைமையகத்துக்கு கிடைத்திருந்தபோதும் நிதி பற்றாக்குறை காரணமாக உடனடியாக இக் கடனை வழங்க முடியாமல் போனது. இவ்விடயம் தொடர்பாக இராணுவத் தளபதி ஜனாதி பதியுடனும், பாதுகாப்பு செயலாளருடனும் பேச்சு நடத்தியதன் பயனாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 700 மில்லியன் ரூபா வை உடனடியாக வழங்குமாறு திறைசேரிக்கு பணிப்புரை வழங்கினார். தற்போது திறைசேரி 700 மில்லியன் ரூபாவை இராணுவத்துக்கு வழங்கியுள்ளதுடன் இடர்காலக் கடன்கள் தற்போது வழங்கப்பட்டும் வருகிறது என்றும் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

நற்சிந்தனை கொண்ட சிறந்த மக்கள் சமூகமொன்றை உருவாக்குவோம் – தீபாவளி வாழ்த்தில் பிரதமர்

171009rathnasiri.jpgவெற்றி கொண்ட சுதந்திரத்தை நிரந்தரமாகத் தக்க வைத்துக் கொள்வதற்கு மனிதத்துவத்தை மதித்து, நல்ல சிந்தனைகளைக் கொண்ட சிறந்த மக்கள் சமூமொன்றை உருவாக்குவது அவசியம். அதற்கு இத்தீபாவளித் திருநாள் வழி வகுக்குமென பிரதமர் ரட்ணசிறி விக்கிரம நாயக்க தெரிவித்துள்ளார். தீபாவளித் திருநாளை முன்னிட்ட வாழ்த்துச் செய்தியிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- உலகெங்கிலுமுள்ள இந்துக்கள் கோலாகலமாகக் கொண்டாடும் தீபாவளித் திருநாள் சுபீட்சமான மனித வாழ்வின் மகத்துவத்தை சமூகத்துக்கு எடுத்துக் காட்டும் பண்டிகையாகும்.

அநீதியைத் தோற்கடித்து நீதியை வெற்றிபெறச் செய்யும் இறைசிந்தனையை அடிப்படையாகக் கொண்டு தீபங்களை ஏற்றும் இத்தீபாவளித்திருநாள் இருளை வென்று மனித மனங்களில் பரந்த சிந்தனை எனும் ஒளியை உருவாக்கும் பெறுமதியை உலகுக்கு உணர்த்துகிறது. தீயவர்களுடைய செயற்பாடுகளினால் எமது சமூகம் 30 வருடகாலமாக பீடனைகளுடன் கழித்த காலங்களை நாம் மறந்துவிட முடியாது. தற்போது புதுயுகமொன்று உருவாகியுள்ளது.

நற்குணம் படைத்த மனிதர்களினால் இலங்கைத் திருநாடு நிரம்ப வேண்டும். அதற்கு இத்திருநாள் வழிவகுக்கட்டும் என வாழ்த்துவதாகவும் பிரதமர் தமது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்

சென்னைப் பல்கலைக் கழகத்தில் கலைஞர் சிந்தனைகள் என்ற பிரிவில் பட்ட மேற்படிப்பு

karunanithi.jpg இந்தியாவின் தொன்மையான பல்கலைக் கழகமான சென்னைப் பல்கலைகக் கழகம், பெரியார் சிந்தனைகள், அண்ணா சிந்தனைகள், கலைஞர் சிந்தனைகள் என்ற பிரிவுகளில் முதுகலைப் பட்டப்படிப்புகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுவருகிறது.

காந்திய சிந்தனைகள் மற்றும் அம்பேத்கார் சிந்தனைகள் போன்ற கற்கை நெறிகள் ஏற்கனவே பல பல்கலைக் கழகங்களில் எம் ஏ பாட திட்டத்தில் இருப்பதாகவும், அதே போல தற்போது இந்தப் பாடத் திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதாகவும் சென்னை பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் டாக்டர் திருவாசகம் அவர்கள் தெரிவித்தார்.

ஆனால் கலைஞரைப் பற்றிய விமர்சனங்கள் இந்தப் பாடத்திட்டத்தில் இருக்காது என்றும் பிற தலைவர்களின் வாழ்க்கை குறிப்புகளை ஒட்டிய முதுகலைப் பட்டங்கள் வரும் ஆண்டுகளில் துவக்கப்படலாம் என்றும் அவர் தெரிவித்தார்.