மே 16ம் திகதிவரை வெள்ளான் முள்ளிவாய்க்காலிலிருந்து பின் இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசம் வந்துள்ள என் ஊராரையும், உறவினரையும் பார்ப்பதற்காக அண்மையில் வவுனியா சென்றேன். புறப்படுமுன் லண்டனிலிருந்து வெளிவந்த செய்திகள் எம்மை சற்று சிந்திக்க வைத்தாலும் இவையெல்லாம் உண்மைதானா என்பதை நேரே சென்று அறியவேண்டும் என்ற ஆவல் எம் பயணத்தை தொடரும்படி தூண்டியது.
விமானத்திலிருந்து வெளியேறும்போது எனக்குள்ளே சற்று தயக்கம். காரணம் பிரித்தானிய கடவுச்சீட்டு கொழும்பு விமானநிலையத்தில் விரும்பப்படாத ஒன்றென்றும், பலர் இம்சைப்படுத்தப்பட்டு வருவதாகவும் புலம்பெயர் ஊடகங்களின் விடாது தொடர்ச்சியான செய்திகளாக இருந்தன.
விமானநிலையத்தின் உள்ளே சென்றதும் swine flu வை அறியும் camera முன்னே வரிசையாக செல்லும்படியான அறிவித்தல் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் செய்யப்பட்டது. அதிகாரிகள் monitor முன் இருந்து எமது உடல் வெப்பத்தை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
பிரமாண்டமான புத்தர் சிலை ஒன்று எம்மை வரவேற்பதுபோல் குடிவரவு அதிகாரிகளின் இருக்கைக்குப் பின்னால் வைக்கப்பட்டிருந்தது. கடவுச்சீட்டை கையளித்தபோது எந்த விதமான முகமாற்றமும் இல்லாது தனது கடமையை செய்துவிட்டு கடவுச்சீட்டை கையளித்தார் அந்த அதிகாரி.
விமான நிலையத்திலிருந்து hotel சென்றபோது இரவு 11 மணி இடையிடையே இராணுவமும் பொலிசும் எம்மை நிறுத்தி சோதனை செய்தார்கள். எந்த இடையுறுமில்லாது நடந்து கொண்டார்கள்.
மறுநாள் காலை வவுனியா செல்வதற்காக கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு சென்றோம். காலை 5.45 மணிக்கு யாழ்தேவி புகையிரதம் கோட்டையிலிருந்து புறப்பட்டது. புறப்படுமுன் அத்தனை அறிவிப்புகளும் சிங்கள மொழியிலேயே செய்தார்கள் எனக்கு எதுவுமே புரியவில்லை. புகையிரதம் மதவாச்சியை அடைந்தபோது அனைவரையும் அவரவர் பொதிகளுடன் வெளியே வருமாறு கேட்கப்பட்டோம். அத்தனை பொதிகளையும் சோதனை செய்தபின் என்னை அந்த அதிகாரி ‘வவுனியா போகமுடியாது’ என்று கூறிவிட்டார். ‘வெளிநாட்டு கடவுச்சீட்டுக்கு MOD (ministry of Defence) அனுமதி வேண்டும்’ என்றார். அந்த அதிகாரியின் கடமை உணர்வை புரிந்துகொண்டு கடவுச்சீட்டுக்குள்ளே வைத்துக் கொடுத்தேன் என்னை வவுனியா செல்வதற்கு அனுமதித்தார்.
1985 ம் ஆண்டு லண்டன் செல்வதற்காக வவுனியா புகையிரத நிலையத்தில் நின்றபோது என் நண்பர் கொக்காவில் இராணுவமுகாம் தாக்குதலில் கொல்லப்பட்ட செய்தி கிடைத்தது. புகைவண்டி வவுனியாவை அடைந்தபோது அந்த ஆண்டு என் கண்முன்னே வந்து போனது. 25 ஆண்டுகால நகர்வு ஓர் சினிமாவை பார்த்தது போன்ற உணர்வை கொடுத்தது.
புகையிரத நிலையத்திலிருந்து வீடுசென்ற போது இது வவுனியாவோ இல்லை யாழ்ப்பாணமோ என்ற குழப்பம் எனக்குள்ளே. பார்க்குமிடமெல்லாம் பசுமையான வயல்களும் குளங்களுமாக வேலிகளேயில்லாமல் இருந்த வவுனியா நகர்ப்புறம் இன்று வயல்களும் குளங்களும் மண்ணால் நிரப்பப்பட்டு மேட்டு நிலங்களாகவும் நான்கு பக்கமும் கிடுகுகளால் மூடி அடைக்கப்பட்ட வேலிகளாலும், ஒலிபெருக்கி மூலம் இரவுபகலாக ஓலமிடும் இந்துக் கோயில்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதை உணர்ந்தேன்.
வவுனியாவை யாழ்ப்பாண இந்து மயமாக்கும் திட்டமிட்ட செயல்பாடோ இதுவென்று என்மனம் என்னையே கேட்டது. அடங்காத் தமிழன் சுந்தரலிங்கம் வாழ்ந்த காலப்பகுதிக்கு வவுனியா தள்ளப்பட்டு விட்டதென்று முணுமுணுத்தார் என்னை கூட்டிச்சென்ற நண்பர்.
சில நாட்களே வவுனியாவில் தங்கிநிற்கக் கூடிய நிலையிருந்ததால் கிடைக்கின்ற பொழுதெல்லாம் அவர்களிடமிருந்து தகவல்களைப்பெறும் நோக்கில் அவர்களோடு பேசிக்கொண்டேன்.
“எம்மை யாருமே காப்பாற்றவில்லை கடவுள்தான் காப்பாற்றினார்” என்று ஆரம்பித்தார்கள். நடந்தவற்றை அறியும் ஆவலில் கடந்த ஒரு வருடமாக தொடர்ச்சியாக நடந்த சம்பவங்களை மிகவும் ஆவலுடன் கேட்டுக்கொண்டேன்.
மன்னாரில் நடந்த போரில் பல போராளிகள் கொல்லப்பட்டதாகவும், ”கிளிநொச்சியை இராணுவம் அண்மித்ததும் பொதுமக்கள் மீது விடுதலைப் புலிகள் பலாத்காரத்தை பிரயோகிக்கத் தொடங்கிவிட்டார்கள்” என்று கூறினார்கள்.
”எதற்காக பொதுமக்கள் மீது பலாத்காரத்தை செலுத்தினார்கள்” என்று கேட்டபோது ”இழந்த பிரதேசங்கள் இராணுவத்திடம் பறிபோகுமென்று அவர்கள் என்றுமே எண்ணியதில்லை, பறிபோனதால் அவர்கள் மனஉளைச்சலுக்கு தள்ளப்பட்டு விட்டார்கள்” என்றனர். தளபதி திலீபனிடம் ”எதற்காக மக்கள்மீது இப்படி பலாத்காரம் செய்கிறீர்கள்” என்று கேட்க ”இது மேலிடத்து உத்தரவு” என்றாராம்.
பலாத்காரமாக பிள்ளைகளைப் பிடிக்க வரும்போது பெற்றோர் அவர்களை எதிர்த்தால் அவர்களை அவ்விடத்திலேயே சுட்டுவிட்டு பிள்ளையை பிடித்துச்சென்ற சம்பவங்களை சிலர் கூறினார்கள். பிள்ளை மறுத்தால் பெற்றோருக்கு முன் பிள்ளையை சுட்டுவிட்டு இப்போ என்ன செய்வீர்கள் என்று கேட்டுவிட்டுப் போவார்களாம் போராளிகள்.
”பலாத்காரமாக இயக்கத்தில் இணைத்துக் கொண்ட போராளிகளே தோல்வியின் முதல்காரணி” என்றார்கள். ஒருவாரகால ஆயதப் பயிற்சியோடு களம் இறக்கி விடுவார்களாம். அவர்கள் எப்போதும் இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துள் தப்பிச் செல்லவே விருப்பம் கொண்டிருந்தார்களாம்.
தளபதி தீபன் இறப்பதற்கு முன்னதாக மிகப்பாரிய இராணுவ ஊடறுப்பொன்றை செய்வதற்காக சொர்ணம் தலைமையில் சென்றதாகவும், சென்ற வழியில் இராணுவத்தினர் முன்கூட்டியே நிலையெடுத்திருந்ததால் அதில் 450 க்கும் மேற்பட்ட போராளிகளையும், சொர்ணம் தனது காலையும் இழந்ததாக குறிப்பிட்டார்கள்.
நெஞ்சின் தோள்பகுதியில் குண்டுபட்ட தீபன் இரண்டு நாட்களாக களத்தில் நின்று போராடி மூன்றாம் நாள் எறிகணை பட்டு இறந்ததாகவும், பங்கர் வாசலிலே படுத்திருந்த விடுதலைப் புலிகளின் நிதிப்பொறுப்பாளர் தமிழேந்தி மீது செல் விழுந்து வெடித்து அவர் மரணித்துள்ளார்.
இறந்த உடல்கள் ஆங்காங்கே நாட்கணக்கில் துர்நாற்றம் வீசியபடி கிடந்த காட்சியையும், காயப்பட்டவர்கள் மருத்துவ வசதியின்றி ஆங்காங்கே கிடந்ததாகவும்; துர்நாற்றமெடுத்து ஈ மொய்க்கின்ற காட்சி சர்வசாதாரணமாக இருந்தது என்றார்கள்.
இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் தப்பிவர முனைந்த பலர் புலிகளினால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவங்களை சிலர் விபரித்தனர்.
இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான மோட்டார் சைக்கிளை கொடுத்து இரண்டு தேங்காய் வாங்கிய கதையை கூறிய அதேவேளை ஓரு இலட்சம் வரையான நெல் மூட்டைகளை விடுதலைப் புலிகள் அப்படியே இராணுவத்திடம் கைவிட்டு வந்ததாக கூறியபோது உணர்ச்சிவசப்பட்டார்கள்.
ஓவ்வொரு இடப்பெயர்வின் போதும் கைவிட்டுச்சென்ற தமது உடைமைகளையும் இழந்த உறவுகளையும் எண்ணி கண்ணீர் வடித்தார்கள். பார்க்குமிடமெல்லாம் பிணங்களும், கேட்பதெல்லாம் மரணஓலங்களுமாக பல வாரங்கள் கழிந்தன என்று தேம்பித் தேம்பி அழுதார்கள்.
பங்கருக்குள் இருந்தபோது விடுதலைப் புலிகளின் ஆலோசகர் திருநாவுக்கரசு கடந்த இரு வருடங்களாக பிரபாகரனுக்கு சித்த சுவாதீனம் பிடித்து விட்டதென்று கூற அங்கிருந்த மற்றய விடுதலைப் புலிகளின் விசிறிகள் அவரோடு கைகலப்பிற்கு சென்று விட்டார்களென்று ஒருவர் தெரிவித்தார்.
இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வந்தபோது எப்படி இராணுவம் நடந்து கொண்டது என்று விடுதலைப் புலிகளின் மிகவும் நெருக்கமானவரிடம் கேட்க ”என் மனச்சாட்சியை தொட்டுச் சொல்கிறேன் மனிதர்களைப்போல் நடந்துகொண்டார்கள்” என்றார்.
அடுத்தநாள் வவுனியா நகரைப் பார்ப்பதற்காக சென்றோம். 25 ஆண்டுகால போரின் அழிவுகளை மக்கள் முகங்கள் மட்டுமல்ல வவுனியா நகரும் காட்டிக் கொடுத்தது.
நகருக்கு அண்மையில் உள்ள சிங்களப் பாடசாலையான காமினி மகாவித்தியாலயத்தில் போராளிகளை மட்டும் வைத்து பராமரிக்கிறார்கள். வெறும் முட்கம்பிகளால் அடைக்கப்பட்ட வேலிக்குள் அவர்கள் மிகவும் லாவகமாக நடமாடுகிறார்கள்.
உறவினர்கள் முட்கம்பிக்கு வெளியே நின்று பேசிக்கொண்டிருந்தார்கள். கிடுகுகளால் வேயப்பட்ட கொட்டகைகளுக்குள் ஏதோ வகுப்புகள் நடந்துகொண்டிருந்தன.
முகாமிலிருந்து சில நாட்களுக்கு முன் வெளியேறிய சிலருடன் பேசியபோது முகாமுக்குள் பல குழந்தைகள் திடீர் திடீரென இறந்து போவதாகவும், இந்த இறப்புக்கு அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பொலித்தீன் கூரைகளே காரணம் என்று வைத்தியர்கள் சந்தேகப்படுவதாக கூறினர்.
மேலும் சில நாட்கள் தங்கியிருந்துவிட்டு யாழ்தேவி மூலம் கொழும்பை வந்தடைந்தோம். மறுநாள் லண்டன் பயணிப்பதற்காக விமான நிலையம் சென்றபோது உள்ளேயும் வெளியேயும் விமானப்படை அதிகாரிகள் மிகவும் கண்ணியமாக நடந்துகொண்ட முறை என்னை 2005 ம் ஆண்டு புலிகளின் புளியங்குள விசா காரியாலயத்தோடு ஒப்பிட வைத்தது.
2005ம் ஆண்டு யாழ் செல்வதற்காக தரைவழியாக புளியங்குளம் சென்றோம். வாகனத்தை விட்டு இறங்கியதும் “அ” க்கு போங்கள் “இ” க்கு போங்கள் “பு” க்கு போங்கள் என்று பயணிகளையும் வாகன உரிமையாளர்களையும் மந்தைகள் போல் நடாத்திய காட்சி என் கண்முன்னே வந்துபோனது.
கிளிநொச்சியிலுள்ள விசா காரியாலயத்துக்கு சென்றபோது அந்த இளம் அதிகாரி ”லண்டனிலே விடுதலைப் புலிகளிற்கு பணம்கொடுத்த ரசீது இருக்கிறதா?” என்றார். ”இல்லை” என்றேன். ”அப்படியென்றால் விசா கிடைக்காது” என்றார். ”விசா எடுக்க வேண்டும் என்ற நோக்கில் எவரும் பணம் கொடுப்பதில்லை” என்றேன்.
”அப்படி அறிவதாயின் உங்கள் area பொறுப்பாளருடன் தொடர்புகொண்டு அறியுங்கள்” என்றேன். என்னை கூட்டிச் சென்றவரின் முகமாற்றம் என்னை தொடர்ந்து பேசவிடாது தடுத்தது. அப்போது எம் நீண்ட இருக்கையின் மூலையில் ஒருவர் காத்திருந்தார், அவரைக் காட்டிய அந்த அதிகாரி ”அதோ பாருங்கள் அந்த நபர் லண்டனிலிருந்து வந்தவர். இரு வாரங்களாக இங்கே வந்து போகிறார். இவர் லண்டனில் விடுதலைப் புலிகளிற்கு எதிராக பிரச்சாரம் செய்தவர். அதனால் அவருக்கு தண்டனை இது” என்று சொன்னார்.
”சுனாமி அடித்தபோது புலம்பெயர் தமிழ் மக்களிடம்தானே பணம் பெற்றீர்கள். இப்போது ஏன் அவர்களை இப்படி நடாத்துகிறீர்கள்?” என்று கேட்டேன். ”தமிழீழத்துக்கு உல்லாசப் பயணியாக எந்தத் தமிழனும் வரத்தேவையில்லை” என்றார் இறுமாப்போடு. ”அப்படி உல்லாசப் பயணிகள் தேவையென்றால் நாம் ஐரோப்பியரை அழைப்போம் இங்கே” என்றார்.
நடந்தவற்றை அன்று பல விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களுக்கு தெரியப்படுத்தினேன். அதை அன்று அவர்கள் விடுதலைப் புலிகளின் வளர்சியாகவே பார்த்தார்கள். மே18 வரை அதே நம்பிக்கையோடு வாழ்ந்தார்கள்.
அதனால்தான் அவர்களால் இன்றுள்ள உண்மை நிலையை ஏற்றுக்கொள்ள முடியாமல் தொடர்ந்தும் புனை கதைகளை கட்டவிழ்த்து விட்ட வண்ணம் உள்ளனர்.
இந்தக் கலையை கற்றுக் கொடுத்தவர்கள் நம்முடைய TULF என்பது அனைவரும் அறிந்ததே. 1977 ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தில் ‘கல்தோன்றி மண்தோன்றாக் காலத்து முன்தோன்றிய மூத்தகுடி’ என்றார்கள். ‘ஆண்ட பரம்பரை மீண்டுமொருமுறை ஆளநினைப்பதில் என்னதடை’ என்றார்கள். இவ்வாறே என் மனம் அங்குமிங்கும் போய்வர விமானம் லண்டனை வந்தடைந்தது.