28

28

58000 க்கும் மேற்பட்டவர்கள் மீள் குடியேற்றம் – அமைச்சர் ரிசாத் தெரிவிப்பு

281009rishad.jpgஇம்மாத முடிவுக்குள் 58 ஆயிரம் இடம்பெயர்ந்த மக்களை தமது சொந்த இடங்களில் மீள்குடியேற்றுவதாக இந்திய எம்.பிக்களிடம் ஜனாதிபதி உறுதியளித்திருந்த போதும் அதனைவிட கூடுதலான மக்கள் மீள் குடியேற்றப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்தார்.

இடம்பெயர்ந்த மக்களை மீள் குடியேற்றுவது தொடர்பாக நேற்று அமைச்சில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்.

எதிர்வரும் சில தினங்களில் முல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்தில் மேலும் 8 ஆயிரம் பேர் மீள்குடியேற்றப்பட உள்ளதுடன் யாழ்ப்பாணத்தில் இருந்து இடம்பெயர்ந்த மக்களை தமது சொந்த இடங்களில் மீள்குடியேற்றும் நடவடிக்கைகள் இந்த மாத முடிவுக்குள் பூர்த்தி செய்யப்பட உள்ளன.

யாழ்ப்பாணத்தில் இருந்து சுமார் 50 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்துள்ளதோடு அந்த மக்கள் தினமும் கட்டம் கட்டமாக சொந்த இடங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். கடந்த 25ஆம் திகதி 2955 பேரும் 26ஆம் திகதி 2874 பேரும் சொந்த இடங்களுக்கு அனுப்பப்பட்டனர். வவுனியா நகரில் இருந்து இடம்பெயர்ந்த 2144 பேர் நேற்று மீள்குடியேற்றப்பட்டனர்.

கிழக்கு மாகாணத்தில் இருந்து இடம்பெயர்ந்த சகல மக்களும் சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர். வவுனியா தெற்கு தமிழ் பிரதேசம், வவுனியா தெற்கு சிங்களப் பகுதி,  செட்டிக்குளம் ஆகிய பகுதிகளில் இந்த மாத இறுதிக்குள் மீள்குடியேற்றப் பணிகள் பூர்த்தி செய்யப்படும். வவுனியா வடக்கு பகுதியில் மிதிவெடி அகற்றும் பணிகள் பூர்த்தியடையவில்லை.

வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள மக்களை மீள்குடியேற்றுவதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 15 ஆயிரம் பேர் இதற்காக விண்ணப்பித்துள்ளதோடு அவர்களை மீள் குடியேற்றுவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

சில நாடுகள் மீள்குடியேற்றம் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகிற போதும் இந்திய அரசாங்கம் ஒருபோதும் எம்மீது அழுத்தங்கள் பிரயோகித்தது கிடையாது. ஆரம்ப முதலே மீள்குடியேற்ற பணிகளுக்கு இந்தியா உதவி வருகிறது. மேலும் 500 கோடி உதவி வழங்கவும் இந்தியா முன்வந்துள்ளது. இந்திய எம்.பிக்களின் இலங்கை விஜயம் மூலம் அவர்களின் முன்னைய நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்றார்.

இந்திய இராணுவ குழுவும் பாதுகாப்பு செயலாளரும் சந்திப்பு!

000gotabhaya_rajapaksa.jpgஇலங்கை வந்துள்ள உயர் கட்டளை கற்கைநெறியை பயிலும் இந்திய இராணுவ அதிகாரிகள் குழு பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. கொழும்பில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் இந்த் சந்திப்பு இடம்பெற்றது. பிரிகேடியர் மொனி சன்டி தலைமையில் பதினான்கு அதிகாரிகள் அடங்கிய இந்தக் குழுவில் இந்தியாவின் இராணுவ மற்றும் விமானப்படை உயர் அதிகாரிகள் அடங்குகின்றனர்.

பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுவிட்டதென ஓய்வெடுத்துக் கொள்ள முடியாது – ஜனாதிபதி

290909mahinda.jpgபயங்கர வாதம் ஒழிக்கப்பட்டுவிட்டதென நாம் ஓய்வெடுத்துக் கொள்ள முடியாது. தேசிய பாதுகாப்பையும் அரசியல் நிலைப்பாட்டையும் பலப்படுத்துவது மிக முக்கியமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஒற்றுமை மூலமே தேசிய பாதுகாப்பையும் அரசியல் நிலைப்பாட்டையும் பலப்படுத்த முடியுமென தெரிவித்த ஜனாதிபதி, தேசிய ஒற்றுமை பற்றி சிந்திக்காத கடந்த கால பாடங்கள் எமக்கு சிறந்த முன்னுதாரண மாகுமெனவும் தெரிவித்தார்.

ஜெனரல் சேர் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. முப்படைகளின் தளபதிகள், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது :-

தேசிய பாதுகாப்பு என்றும் மறக்க முடியாதது. கடந்த காலங்களில் தேசிய பாதுகாப்புக்கு முக்கியத்துவமளிக்காமையே பல்லாயிரக்கணக்கான உயிர்களின் அழிவுக்கும் வளங்களின் அழிவுக்கும் காரணமாயின. இதனால் நாட்டைக் கட்டியெழுப்பும் பல சந்தர்ப்பங்கள் கைநழுவிப் போயின. உலகப் படத்தில் கீழ் நிலைக்கு நாடு வர நேர்ந்தது.எம்மை முந்திக் கொண்டு உலகில் பல நாடுகள் வெகுவாக முன்னேறிய போதும் எமது பின்னடைவுக்கும் அதுவே காரணமாகியது.

மீண்டும் அந்நிலை உருவாவதற்கு நாம் இடமளிக்க முடியாது.பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டுவிட்டதென நாம் ஓய்வடைய முடியாது.  உலகப் படத்தின் முன்னணிக்கு தாய்நாட்டை உயர்த்த வேண்டியது அவசியம். இதற்கான பெரும் பங்கு படைத்தரப்பினருக்கு உள்ளது. நாட்டின் இறைமை ஆட்புல ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் படையினர் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டியுள்ளது. சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக பரிசளிப்பு விழாவுக்கு நான்காவது தடவையாக இம்முறை நான் வருகை தந்துள்ளேன். எனினும் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு அமைதி நிலவும் சூழலில் இம்முறை இவ்விழாவில் கலந்துகொள்கிறேன்.

நாட்டில் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது. எனினும் உலகில் மிகக் கொடூரமான பயங்கரவாதத்திடமிருந்து தாய் நாட்டை மீட்ட பாதுகாப்புப் படையினர் மீதான கெளரவம் அவர்கள் மீதான நம்பிக்கை மற்றும் அன்பில் எதுவித மாற்றமுமில்லை.

உலகின் புகழைப் பெற்ற திறமையான வீரர்களே எமது நாட்டுப் படையினர். அவர்களின் திறமையும், முதிர்ந்த அறிவும் ஆக்கபூர்வமான செயற்பாடுமே கொடிய பயங்கரவாதத்தை வெற்றிகொள்ள உறுதுணையாக அமைந்தது. உலகில் இடம்பெற்றுள்ள பயங்கரவாத யுத்தத்தை நோக்கும்போது மிகக் குறைந்த பாதிப்பினூடாகவே பயங்கரவாதத்தை எமது இராணுவத்தினர் வெற்றிகொண்டு ள்ளனர்.

சிவில் மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் யுத்தம் செய்வதில் அவர்கள் மிகுந்த கவனம் செலுத்தினர். பாதுகாப்புப் படையினரின் தொழில் என்றுமே முடிவுறுவதல்ல. அப்பணி என்றும் தொடரக்கூடியது. படையில் இணைந்து கொண்ட எமது இளைஞர்களில் பெரும்பாலானோர் தூரத்துக் கிராமத்தவர்களே. இவர்கள் கற்றுத் தேர்ந்தவர்களல்ல. எனினும், இவர்களுக்கான முறையான பயிற்சிகள் வழங்கப்பட்டன. அவர்கள் இன்று உலகின் சிறந்த படை வீரர்களாகத் திகழ்கின்றனர்.

அரசாங்கம் படை வீரர்களை கெளரவப்படுத்துவதிலும் அவர்களது நலன்புரி விடயங்களுக்குமென பல்வேறு திட்டங்களை வகுத்துச் செயற்படுத்தி வருகிறது. பாதுகாப்பமைச்சின் நேரடி கண்காணிப்பின் கீழ் சகல மாவட்டங்களிலும் விசேட செயற்திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றன.

பயங்கரவாதத்தை ஒழிப்பது மட்டுமன்றி நாட்டைப் பாதுகாப்பதிலும் நாட்டை அபிவிருத்தியில் கட்டியெழுப்புவதிலும் படையினருக்கு முக்கிய பொறுப்பு உள்ளது. அதை அர்ப்பணிப்புடன் நிறைவேற்றுவது அவசியம்.

பயங்கரவாதத்தை ஒழித்து அமைதியான நாட்டை உருவாக்க அர்ப்பணிப்புடன் பாடுபட்ட படைவீரர்கள் மற்றும் அவர்களது பெற்றோருக்கும் பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியிலும் நாட்டின் தலைவர் என்ற வகையிலும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

முதலாவது ஹஜ் குழு இன்று பயணம்; இலங்கையர் 5800 பேருக்கு அனுமதி

hajj.jpgபுனித ஹஜ் கடமையை நிறை வேற்றச் செல்லும் முதலாவது இலங்கை ஹஜ் யாத்திரிகர் குழு இன்று மக்காவுக்கு பயணமாகிறது.முதலாவது ஹஜ் குழுவில் சுமார் 50 பேர் செல்லவுள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்தது.

இம்முறை இலங்கையில் இருந்து 5800 யாத்திரிகர்கள் புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக செல்ல உள்ளனர். ஹஜ் யாத்திரிகர்களை உத்தியோ கபூர்வமாக வழியனுப்பிவைக்கும் வைபவம் நவம்பர் முதலாம் திகதி காலை 10.30 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் நடைபெறும்.

அன்றைய தினம் 210 யாத்திரிகர்கள் மக்கா செல்ல உள்ளனர்.

அரச வங்கிகளில் கடன் வட்டிவீதம் இன்று முதல் குறைப்பு 8% – 12%

அரச வங்கிகள் ஊடாக வழங்கப்படும் கடன்களுக்கு அறவிடப்படும் வட்டிவீதத்தை 8% – 12% வரை உடனடியாகக் குறைக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரச வங்கிகளின் தலைவர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இந்தத் தீர்மானம் இன்று (28ம் திகதி) முதல் அமுலுக்குவரும் வகையில் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

நாட்டின் பொருளாதார துறையின் முன்னேற்றத்திற்கு அரசாங்க வங்கிகளின் பங்களிப்பைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்க வங்கிகளின் தலைவர்களுடன் நேற்றுப் பேச்சுவார்த்தை நடாத்தினார். அலரி மாளிகையில் நடைபெற்ற இப்பேச்சுவார்த்தையின்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு அறிவுறுத்தல் வழங்கினார்.

கடனை பெற்றுக்கொண்ட ஒருவருக்கு தவணை அடிப்படையில் கடனை செலுத்துகையில் வட்டிவீதம் குறைவடையும் அனுகூலத்தையும் கடன் பெறுபவருக்கு கிடைக்கச் செய்யவேண்டும் என்றும் ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு விவசாயம், சுற்றுலா, கைத்தொழில், மீன்பிடித் துறை உள்ளிட்ட சிறிய மற்றும் மத்திய தர வர்த்தகத்துறைகளையும் மற்றும் நிர்மாணத் துறையையும் ஊக்குவிக்கும் நோக்கில் இந்தத் தீர்மானத்தை எடுத்ததாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது வழங்கப்பட்டுள்ள கடன்களுக்கான வட்டி வீதங்களும் குறைக்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். இந்த அறிவுறுத்தல்களுக்கு அமைய புதிய வட்டி வீதங்களுக்கு ஏற்ப செலுத்த வேண்டிய திருத்தப்பட்ட தவணைக் கடன் தொகை விரைவில் வாடிக்கையா ளர்களுக்கு அறிவிக்கப்படும்.

இதேவேளை இவ்வருடம் அரசாங்க வங்கிகளில் கடன் பெற விண்ணப்பித்திருக்கும் சகல அரச ஊழியர்களுக்கும் டிசம்பர் 10ம் திகதிக்கு முன்னர் கடன் வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்திருக்கின்றார். கடனை தவணை அடிப்படையில் திருப்பி செலுத்தத் தவறுபவர்களுக்கு விதிக்கப்படும் அபராத வட்டி வீதத்தை உடனடியாக ரத்துச் செய்யுமாறும் ஜனாதிபதி அரசாங்க வங்கித் தலைவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். சாதாரண மக்கள் கடனைத் திரு ப்பி செலுத்தும் போது ஏற்படும் தவிர்க்க முடியாத காரணங்களைக் கருத்தில் கொண்டு நிலுவை வட்டி வீதத்திலும் அவர்களுக்கு நிவாரணம் வழங்குமாறும் ஜனாதிபதி ஆலோ சனை வழங்கியுள்ளார்.

அதேபோல் கடனைப் பெற்றுக் கொடுப்பதற்காக முன்வைக்கப்படும் பிணை தொடர்பில் மீளாய்வு செய்யவும் அதற்காகத் தற்போது கடைப்பிடிக்கப்படும் நடைமுறைகளைப் பார்க்கிலும் மிகவும் நெகிழ்வுப் போக்கைக் கடைப்பிடிப்பது குறித்தும் இந்தப் பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் கடனை வழங்குகையில் கடன் தொகையில் மீன்பிடித்துறை, விவசாயம், சுற்றுலாத்துறை போன்ற மேம்படுத்தப்பட வேண்டிய துறைகளில் கூடிய கவனம் செலுத்து மாறும் ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை மீளாய்வு செய்வதற்காக எதிர்வரும் 30ம் திகதிக்கு முன்னர் கூட்டமொன்றை நடாத்தவும் ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

அரச வங்கிகள் ஊடாக கடன் வழங்கும் போது மக்களை ஊக்குவிக்கும் வகையிலும் திருப்திப்படுத்தும் வகையிலும் அதன் செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

இப்பேச்சுவார்த்தையில் அமைச்சர் ரன்ஜித் சியம்பலாப்பிட்டிய, ஜனாதிபதி செயலாளர் லலித் வீர துங்க, நிதியமைச்சினதும் திறை சேரியினதும் செயலாளரான கலாநிதி பி.பி. ஜயசுந்தர மற்றும் அரச வங்கிகளின் தலைவர்களும் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

கிழக்கு முதல்வரின் ஜீப் மரத்தில் மோதி விபத்து மெய்ப்பாதுகாவலர் இருவர் உட்பட மூவர் பலி

கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் ஜீப் வண்டி விபத்துக்குள்ளானதில் அவரது பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த இரண்டு இராணுவ வீரர் உட்பட மூவர் உயிரிழந்துள்ளதுடன் மற்று மொருவர் காயமடைந்துள்ளார்.

குருநாகல், கொக்கரல்ல தியநுரு பிரதேசத்தில் நேற்று அதிகாலை இந்த விபத்துச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிமல் மெதிவக்க தெரிவித்தார்.

இந்த விபத்தின் போது முதலமைச்சர் வாகனத்தில் இருக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

முதலமைச்சரின் குண்டு துளைக்காத “லேன்ட் ரோவர்” ரக கறுப்பு நிற வாகனம் பழுதடைந்துள்ளது. அதனை பழுதுபார்ப்பதற்காக முதலமைச்சரின் பாதுகாவலர்களும், சிவிலியன் ஒருவரும் திருகோண மலையிலிருந்து கொழும்புக்கு எடுத்து வந்துள்ளனர்.

வாகனம் கட்டுப்பாட்டையிழந்து வீதியை விட்டு விலகி பாரிய மரம் ஒன்றில் மிகவும் வேகமாக மோதியதாலேயே இவ்விபத்து நேர்ந்துள்ளது.

காயமடைந்தவர் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ள்ளார்.