ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுவிலிருந்து கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் ஆசாத் சாலியை நீக்கியமைக்கு அவரது ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கட்சி மேற்கொண்ட தீர்மானம் தவறானதென்றும் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆசாத்சாலியை ஐ. தே. க. நீக்கியது தொடர்பாக நேற்று (29) அவரது தலைமையில் கூடி ஆராயப்பட்டது. இதன் போது தமது ஆதரவாளர்கள் இந்த முடிவுக்கு வந்தாக அசாத்சாலி தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சியில் அசாத் தொடர்ந்து இருந்து செயற்படுவதற்கான சூழல் இல்லாதபட்சத்தில், அவர் அரசியலைவிட்டு விலகி விடாமல், அரசியலில் தொடர்ந்து நீடிப்பதற்காக மேற்கொள்ளும் எந்தத் தீர்மானத்தையும் ஆதரிக்கத் தயாரென நேற்றைய கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. முள்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா, சிறுபான்மையினங்களுக்கு எதிரானவர் என்பதால், அவரைவிடுத்து ஐ. தே. க.வின் சார்பில் வேறொருவரை தேர்தலில் நிறுத்தும்படி ஆசாத் சாலி ஐ. தே. க.வைக் கோரியிருந்தார். ஆனால், இந்த கருத்து ஏற்கப்படாமல் கட்சியிலிருந்து அசாத் சாலியை நீக்கியமை தவறானதென்பது அவரின் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஜெனரல் சரத் பொன்சேகா கடந்த காலங்களில் தமிழ் பேசும் சிறுபான்மை மக்கள் தொடர்பில் நடந்து கொண்ட விதமும் அந்த மக்கள் குறித்து உள்ளூரிலும் சர்வதேச ரீதியாகவும், தெரிவித்து வந்த கருத்துகளும் ரகசியமானவை அல்ல.இந்த நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் பொது வேட்பாளராக ஜெனரல் சரத் பொன்சேகாவை நியமிப்பதென அறிவித்திருப்பது வேடிக்கையானதொரு விடயமே என்று தெரிவித்த சாலி,
சிறுபான்மை மக்களுக்கு எதிரான ஐக்கிய தேசியக் கட்சியின் விரோதப் போக்கையே காட்டுகிறது. ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக ஒருவரை நிறுத்துவது ஆராயந்தபோது ஜெனரல் சரத் பொன்சேகாவை பொது வேட்பாளராக நிறுத்துவதென கட்சியின் உயர்பீடம் தெரிவித்தது. ஆனால் நானும் மேலும் இருவரும் இந்த முடிவை வன்மையாக எதிர்த்தோம். தமிழ் பேசும் சிறுபான்மை மக்களுக்கெதிரான நிலைப்பாட்டைக் கொண்டுள்ள சரத் பொன்சேகாவை பொதுவேட்பாளராக நிறுத்தினால் ஐக்கிய தேசியக் கட்சி மீது சிறுபான்மையின மக்கள் நம்பிக்கை இழந்து விடுவார்களென்றும் அந்த மக்கள் நிச்சயமாக ஜெனரலை ஆதரிக்க மாட்டார்களென்றும் தெரிவித்தேன்.
இலங்கையில் இனப்பிரச்சினை இல்லை. பயங்கரவாதப் பிரச்சினையே நிலவுகிறது. அதனை இல்லாமல் செய்து விட்டால் எல்லாம் சரியாகிவிடும். அதன் பின்னர் எந்தப் பிரச்சினைக்குமே தீர்வு காண வேண்டிய அவசியமில்லை. தமிழர்கள் இலங்கைக்குச் சொந்தமானவர்களல்லர் என்றெல்லாம் தமிழ் மக்கள் விரோதக் கருத்துக்களைப் பரப்புரை செய்து வந்த ஒருவரை ஐக்கிய தேசியக் கட்சி தனது ஜனாதிபதி பொது வேட்பாளராக தெரிவு செய்வதனை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாதென வலியுறுத்தினேன்.
ஆனால் நடந்தது என்ன? தமிழ் பேசும் மக்கள் சார்பில் என்னால் முன்வைக்கப்பட்ட கருத்துகள் புறந்தள்ளப்பட்டதுடன் என்னையும் கட்சியின் செயற்குழு உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் நீக்கினர். தமிழ் பேசும் சிறுபான்மை மக்களுக்காகக் குரல் கொடுத்த எனக்கு ஐக்கிய தேசியக் கட்சி தந்த பரிசுதான் இது.
ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம். ஜனாதிபதி தேர்தலில் சரத் பொன்சேகா வெற்றி பெறவே மாட்டார். அவருக்குத் தமிழ் பேசும் சிறுபான்மை மக்கள் வாக்களிக்கப் போவதுமில்லை. அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியைப் பொறுத்தவரை அந்தக் கட்சி சிறுபான்மை மக்ககளின் நம்பிக்கையை இழந்து விட்டது என்றும் அவர் தெரிவித்தார்.
சரத் பொன்சேகாவின் கூற்றுக்கு எதிரான அறிக்கையில், நான் (அசாத் சாலி) மங்கள சமரவீர, திஸ்ஸ அத்தநாயக்க, ரவூப் ஹக்கீம், மனோ கணேசன் ஆகியோரும் கைச்சாத்திட்டோம். ஆனால், இன்று அவர்கள் எல்லாவற்றையும் மறந்துவிட்டார்கள் என்றார்.