05

05

இலங்கை போர்க் குற்றவாளிகளை காப்பாற்ற இந்தியா முயற்சி: பழ. நெடுமாறன்

0511nedu.jpgஇலங்கை போர்க் குற்றவாளிகளை காப்பாற்ற இந்தியா உதவி செய்வதாகக் கூறி, இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து, அவர் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

இலங்கையில் போரின் போது தமிழர்களுக்கு எதிராக அந்நாட்டு ராணுவம் இழைத்த குற்றங்கள் குறித்தும், இதில் ராஜபக்சவின் சகோதரரும் இலங்கை பாதுகாப்புத் துறை செயலருமான கோத்தபய ராஜபக்சவின் பங்கு குறித்தும் அமெரிக்க அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்போது அமெரிக்காவில் இருக்கும் இலங்கை படைகளின் கூட்டுத் தளபதி சரத் பொன்சேகாவிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளதாக தெரிகிறது. இந்த விசாரணையைத் தடுத்து நிறுத்தவும், தனது சகோதரரைக் காப்பாற்றவும் இலங்கை அதிபர் ராஜபக்ச, இந்தியாவின் உதவியை நாடியுள்ளார்.

இதற்காக அனுப்பப்பட்ட தூதர்கள் தில்லியில் பிரதமரையும், உயர் அதிகாரிகளையும் சந்தித்துப் பேசியதாக செய்திகள் கிடைத்துள்ளன. இலங்கையில் ஒரு லட்சம் தமிழர்களை கொன்று குவித்த போர்க் குற்றவாளிகளைக் காப்பாற்ற இந்திய அரசு உதவுவது தமிழர்களுக்கு எதிரான செயல் மட்டுமல்ல. மனித நேயமற்ற செயலும் ஆகும்.

ஏற்கெனவே, ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கை அரசு மீது கொண்டுவரப்பட்ட கண்டனத் தீர்மானத்தைத் தோற்கடிக்க இந்தியா வரிந்துகட்டிக் கொண்டு செயல்பட்டது. இப்போதும் அதேபோல செயல்படுமானால், தமிழர்களின் ஒட்டுமொத்த எதிர்ப்புக்கு ஆளாக நேரிடும் என்று தெரிவித்துள்ளார் பழ. நெடுமாறன்.

பிரதி கல்வி அமைச்சர் தலைமையிலான குழு யாழ். விஜயம்

யாழ். தீவகப் பிரதேசங்களிலுள்ள பாட சாலைகள் மற்றும் அரச கல்வி நிறுவனங்களின் கல்வி மேம்பாடு, பெளதிக, ஆளணி மற்றும் இதர பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடல்களை மேற்கொள்ளும் முகமாக பிரதிக் கல்வி அமைச்சர் எம். சச்சிதானந்தன் தலைமையிலான குழுவொன்று எதிர்வரும் 06, 07, 08, 09 ஆகிய திகதிகளில் யாழ். நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு, புங்குடுதீவு, வேலணை, காரைநகர், எழுவைதீவு உள்ளிட்ட தீவகப் பிரதேசங்களுக்கு விஜயம் செய்யவுள்ளது.

வடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்தின் கீழ் யாழ். தீவகப் பிரதேசங்களிலுள்ள மாணவர்களின் கல்வித்துறையை மேம்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை, மேற்கொள்வதற்காக செல்லவுள்ள இக் குழுவில் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர், பணிப்பாளர்கள், வடக்கின் வசந்தம் பிரிவின் அதிகாரிகள், பிரதிக் கல்வி அமைச்சர் அலுவலகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் இடம்பெற்றுள்ளார்கள்.