06

06

ரூபாவதி கேதீஸ்வரனுக்கு கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் பதவி – திங்கட்கிழமை பதவியேற்பு

061109rupawathy.jpgமட்டக் களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக கடமையாற்றி வரும் ரூபாவதி கேதீஸ்வரன் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபராக நேற்று நியமிக்கப்பட்டுள்ளார். பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு இந்த நியமனத்தை வழங்கியுள்ளது.

 ரூபாவதி கேதீஸ்வரன் கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணை யாளராகவும் மட்டக்களப்பு மாவட்ட உதவி அரசாங்க அதிபராகவும் சுனாமி வேலைத்திட்டத்திற்கான மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராகவும் கடமையாற்றியதுடன் தற்போது மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக கடமையாற்றுகின்றார்.
 
கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ள இவர் எதிர்வரும் திங்கட்கிழமை அதற்கான கடமையை பொறுப்பேற்கவுள்ளார்

“ஒபரேஷன் என்ரபே”யை விடவும் கே.பியை கொண்டுவந்தது சாதனை

இஸ்ரேலிய படையினரின் ‘ஒபரேஷன் என்ரபே’ நடவடிக்கையைவிட மிகத் திறமையாகச் செயற்பட்டு இலங்கைப் படையினர் கே.பியை (குமரன் பத்மநாதனை) கொழும்புக்கு கொண்டு வந்தார்களென்று அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

வெளிநாட்டில் இருந்த கே.பியைக் கொழும்புக்குக் கொண்டு வந்ததே பெருஞ்சாதனை. விசாரணையை ஆறுதலாகச் செய்துகொள்ளலாம். ஐ.தே.க.வினர் இப்போது முட்டாள்தனமாகக் கேள்வி கேட்கிறார்கள். அவற்றுக்கெல்லாம் பதிலளிக்க முடியாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் “கே.பி மீதான விசாரணையை அரசு கைவிட்டுவிட்டதாக ஐ.தே.க. எம்.பி அகில விராஜ் காரியவசம் கூறுகிறாரே” என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த அமைச்சர் யாப்பா, “ஐ.தே.க. ஜனாதிபதி ஆர். பிரேமதாசவின் காலத்தில் புலிகளுக்கு ஆயுதம் வழங்கியது தொடர்பாக அவரின் செயலாளராகவிருந்த கே. எச். ஜே. விஜேதாச தமது நூலில் குறிப்பிட்டுள்ளார். அந்தச் சீரழிவு இன்னமும் தொடர்ந்தே வருகிறது”

“இஸ்ரேலிய படையினர் உகண்டாவிலிருந்து விமானத்தை மீட்டு வருவதற்காக ‘ஒபரேஷன் என்ரபே’ நடவடிக்கை மேற்கொண்டார்கள். அதன்போது உயிரிழப்புகளும் ஏற்பட்டன. ஆனால், நமது இராணுவத்தினர் ‘என்ரபே’ நடவடிக்கையைவிடத் திறமாகச் செயற்பட்டு கே. பி. யைக் கொண்டுவந்தார்கள்” என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அமெரிக்க ராணுவ முகாமில் வீரர் வெறியாட்டம்! – 12 வீரர்கள் பலி; 30 பேர் காயம்

0611us_soldies.jpgஅமெரிக்க ராணுவ முகாமில் வீரர் ஒருவர் வெறியாட்டத்துடன்  நடத்திய  துப்பாக்கிச் சுட்டில்; 12  வீரர்கள் பலியானதுடன் 30 பேர் காயமுற்றனர். இந்த வெறியாட்டத்தில் ஈடுபட்ட வீரர் ஈராக் பாதுகாப்பு பணிக்காக செல்ல தயாராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.  இவர் மனநல மருத்துவரும் கூட. அமெரிக்காவில் டெக்சாசில் கில்லின் அருகே போர்ட்ஹ_ட் ராணுவ முகாமில் வீரர்கள் வழக்கம்போல் பயிற்சியில் ஈடுபட்டிருந்த வேளையில்; வந்த சக வீரர் ஒருவர் அங்கிருந்த வீரர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார்.

இதில் சம்பவ இடத்திலேயே 11 பேர் இறந்தனர். 30 பேர் காயமுற்றனர். ஒருவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய வீரர் மேஜர் நைடால் மாலிக் ஹசன் ( 39 )  இரண்டு துப்பாக்கிகளுடன் வந்து சுட்டதாகவும் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த துப்பாக்கிச்சுடு சம்பவம் காரணம் குறித்து இன்னும் தெரியவில்லை என்றும் விசாரணைகள் தொடர்வதாகவும் லெப்டினன்ட் ஜெனரல் ரொபர்ட் பாப்கோன் தெரிவித்துள்ளார். 

மேலதிக வரிச்சுமை ஏற்படுத்தாமலேயே ஜனவரியில் சம்பள அதிகரிப்பு

0611siyambalapitiya.jpgமேலதிக வரி அதிகரிப்பை எந்தவிதத்திலும் மேற்கொள்ளாத வகையில் நவம்பர் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வை வழங்க நிதி பெற்றுக் கொள்ளப்படும் என்று நிதி மற்றும் அரச வருவாய்த்துறை அமைச்சருமான ரன்ஜித் சியம்பலாப்பிட்டிய நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

எதிர்க்கட்சிப் பிரதம கொறடா ஜோசப் மைக்கல் பெரேரா எம்.பி. சபையில் விசேட அறிக்கை விடுத்து எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அமைச்சர் ரன்ஜித் சியம்பலாப்பிட்டிய தொடர்ந்தும் உரையாற்றுகையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்தபடி அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படும். 2009ம் ஆண்டு நவம்பர் முதல் செயற்படும் வகையில் 2010ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் சம்பள உயர்வு வழங்கப்படும். இது விடயத்தில் அரசாங்கம் தீர்க்கமான முடிவை எடுத்திருக்கின்றது. அமைச்சுக்களுக்கும், திணைக்களங்களுக்குமாக ஒதுக்கங்களின் பயன்பாடு வருடத்தின் இரண்டாவது நான்கு மாதங்களின் தொடக்கத்தில் வேகமடைய ஆரம்பிக்கும்.

அந்த வகையில் தற்போது இடைக்கால கணக்கறிக்கை மூலம் அமைச்சுக்களுக்கு நிதியொதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த ஒதுக்கீடு சம்பள அதிகரிப்புக்குப் போதுமானது. சில சமயம் இந்த ஒதுக்கீடு போதாது போனால் நிதி திட்டமிடல் அமைச்சின் கீழ் தேசிய வரவு செலவுத் திட்ட திணைக்களத்தின் வெவ்வேறு செலவுகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியைப் பயன்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த திணைக்களத்திற்கு 7000 மில்லியன் ரூபா மேலதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது.

2009ம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்தின் மூலம் அமைச்சுக்களுக்கு நிதியொதுக்கீடு மேற்கொள்ளப்பட்டது. அதற்கு ஒதுக்கப்பட்ட குறைநிரப்பு மதிப்பீட்டில் மூன்றிலொரு பங்கு இடைக்கால கணக்கறிக்கை மூலம் அந்தந்த அமைச்சுக்களுக்கு நிதியொதுக்கப்பட்டிருக்கின்றது. அதேநேரம், பாதுகாப்பு அமைச்சுக்குக் கூட கடந்த வருடம் வரவு – செலவுத் திட்டம் மற்றும் குறைநிரப்பு பிரேரணை மூலம் ஒதுக்கப்பட்ட நிதியில் மூன்றிலொரு பங்குக்குச் சமமான நிதி இப்போது ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் மனிதாபிமான நடவடிக்கைக்காக கடந்தாண்டுகளைப் போன்று 2010 இலும் செலவிட நேரிடாது. ஆகவே அந்நிதியைக் கொண்டு பாதுகாப்பு படையினருக்குச் சம்பள உயர்வு வழங்கவும், நலன்புரி நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் செலவிடப்படும்.

2005ம் ஆண்டில் அரச ஊழியர்களின் ஆகக் குறைந்த சம்பளம் ரூ. 8140.00. இதனை நாம் 2009ம் ஆண்டாகும் போது ரூ. 11,730.00 ஆக்கியுள்ளோம். இதேநேரம் சகல அரச ஊழியர்களுக்கும் ரு. 4500.00 படி வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு வழங்கப்படுகின்றது.

சச்சின்; புதிய உலக சாதனை – ஒருநாள் போட்டிகளில் 17 ஆயிரம் ஓட்டங்கள்

06-sachin.jpgஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 17 ஆயிரம் ஓட்டங்களை எடுத்து சச்சின் டெண்டுல்கர் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

ஹைதராபாதில் நேற்று நடைபெற்ற அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 5-வது ஆட்டத்தின்போது 7 ஓட்டங்கள்  எடுத்திருந்தபோது இந்த சாதனை மைல்கல்லை சச்சின் எட்டினார். மேலும் இதே ஆட்டத்தில் அவர் அபாரமாக ஆடி சதமும் அடித்தார்.

ஒரு நாள் கிரிக்கெட்டில் இதுவரை எந்தவொரு வீரரும் 14 ஆயிரம் ஓட்டங்களைக் கூட கடக்காத நிலையில் சச்சின் 17 ஆயிரம் ஓட்டங்களைக் குவித்து உலக சாதனையைப் புரிந்துள்ளார். 36 வயதான சச்சின் இதுவரை 435 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இந்த ஓட்டங்களை அவர் எடுத்துள்ளார். இதில் 45 சதம், 91 அரை சதம் அடங்கும்.

சிங்களப் படத்தில் சூர்யா நடிக்கக் கூடாது: பழ. நெடுமாறன்

0511nedu.jpgஇலங் கையில் சிங்கள இயக்குநரின் இயக்கத்தில் தயாராகும் சிங்கள திரைப்படத்தில் தமிழ் நடிகர் சூர்யா நடிக்கக் கூடாது என இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

சிங்கள திரைப்படத்தில் நடிக்க சூர்யா ஒப்புக்கொண்டிருப்பதாக வெளியான செய்தி தமிழர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. கலைஞர்கள் நாடு, இனம் கடந்தவர்கள் என்பது ஒருபுறம் இருந்தாலும், அண்மையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்களைக் கொன்று குவித்து, 3 லட்சத்துக்கு மேற்பட்ட தமிழர்களை வதை முகாம்களில் அடைத்து கொடுமை செய்யும் நாட்டில் சிங்களரால் தயாரிக்கப்படும் சிங்களப் படத்தில் தமிழர் ஒருவர் நடிப்பதை எண்ணிக்கூடப் பார்க்க முடியவில்லை.

மும்பையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட மிகக் கொடுமையான படுகொலைகளுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் விளையாட புறப்பட்ட இந்தியக் குழுவை மக்களின் ஒன்றுபட்ட எதிர்ப்பு தடுத்து நிறுத்தியது. எனவே, தமிழ் மக்களின் கோபத்திற்கு ஆளாகாத வகையில் நடிகர் சூர்யா சிங்களப் படத்தில் நடிப்பதைக் கைவிட வேண்டும் என நெடுமாறன் கேட்டுக் கொண்டுள்ளார்.

தென்மாகாண சபையின் முதலாவது அமர்வு பலத்த சர்ச்சையின் பின் தவிசாளர் தெரிவு

தென் மாகாண சபையின் முதலாவது கூட்ட அமர்வு நேற்று இடம்பெற்றபோது சபையின் தவிசாளரை தெரிவு செய்வதில் பலத்த சர்ச்சை ஏற்பட்டது. தவிசாளர் பதவிக்கு பிரேரிக்கப்பட்ட ஒரு உறுப்பினர் சபையின் நடுவில் நின்று சட்டபூர்வமாக தவிசாளர் பதவிக்கு நியமிக்கப்பட்டவர் அவரது பதவிக்குரிய ஆசனத்தில் அமரவிடாது தடுத்ததுடன் கூச்சல் குழப்பத்திலும் ஈடுபட்டார். இதனையடுத்தே சர்ச்சை நிலை ஏற்பட்டது.

தென்மாகாண சபையின் முதலாவது கூட்ட அமர்வு நேற்றுக் காலை 9.30 மணிக்கு மாகாண சபையின் அவைச் செயலாளர் தயானந்த தலைமையில் கூட்டப்பட்டது. மாகாண சபை கூட்ட அறிவித்தலை அவைச் செயலாளர் சபைக்கு அறிவித்தார். அத்துடன், ஆறாவது தென் மாகாண சபைக்கான புதிய தவிசாளர் ஒருவரை தெரிவு செய்யும் படி அவர் கேட்டுக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து தென்மாகாண சபையின் முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வா, மாகாண சபையின் புதிய தவிசாளர் பதவிக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி உறுப்பினர் மொஹான் பீ. சில்வாவை நியமிக்குமாறு பிரேரித்ததுடன் அதனை மாகாண சபை உறுப்பினர் அருண குணரத்ன ஆமோதித்தார்.

மாகாண சபைக்கு புதிய தவிசாளர் பதவிக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி உறுப்பினர் நிசாந்த முதுஹெட்டிகமவை நியமிக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் மனுச நாணயக்கார பிரேரித்ததுடன், அதனை அதே கட்சியைச் சேர்ந்த மைத்ரி குணரத்ன ஆமோதித்தார். இதனையடுத்து சபையில் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.

தென்மாகாண சபையின் முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வா சபையில் எழுந்து முதுஹெட்டிகம இதுவரையில் சட்டரீதியாக சத்தியப் பிரமாணம் செய்யவில்லை என்பதால் அவரது பெயரை ஒதுக்கி விட்டு, மோஹான் பீ சில்வாவை மாகாண சபையின் புதிய தவிசாளராக தெரிவு செய்துள்ளதாக அறிவிக்குமாறு அவைச் செயலாளரிடம் கேட்டுக் கொண்டார்.

அதனையடுத்து மொஹான் பீ சில்வா தென்மாகாண சபையின் புதிய தவிசாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக பிரகடனம் செய்யப்பட்டது.

புதிய தவிசாளர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ள மொஹான் பீ சில்வா மாகாண சபையின் தவிசாளர் ஆசனத்துக்கு செல்ல முற்பட்டதும் நிசாந்த முதுஹெட்டிகம ஓடிச் சென்று தவிசாளர் ஆசனத்தில் பலாத்காரமாக அமர்ந்து கொண்டார்.

இந்நிலையில் மாகாண சபையின் ஆளும் தரப்பு உறுப்பினர்கள் பலர் மிகவும் கஷ்டப்பட்டு முதுஹெட்டிகமவை தவிசாளர் ஆசனத்திலிருந்து ஒதுக்கியதுடன் கூச்சல்களுக்கு மத்தியில் புதிய தவிசாளர் அவரது தவிசாளர் பதவிக்கான தலைமை ஆசனத்தில் அமர்ந்து சபையின் நடவடிக்கைகளை முன்னெடுக்க முற்பட்டார்.

அப்போது நிசாந்த முதுஹெட்டிகம அவரது ஆசனத்திலிருந்த ஒலிவாங்கியை உடைத்தெடுத்த வண்ணம் முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வாவையும் மாகாண சபையின் அவை செயலாளரையும் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினார். அப்போது அங்கு பொலிஸாரும் வரவழைக்கப்பட்டனர்.

இக்கூச்சல்களுக்கு மத்தியில் மாகாண சபையின் பிரதித் தவிசாளர் பதவிக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் மாத்தறை மாவட்ட உறுப்பினர் திரு விஜய தஹநாயக்காவின் பெயரை முதலமைச்சர் பிரேரித்தார். அதனை, அம்பாந்தோட்டை மாவட்ட ஆளும் தரப்பு உறுப்பினர் ஆனந்த விதானபத்திரண ஆமோதித்தார்.

இந்நிலையில் மீண்டும் பிரதித் தவிசாளர் பதவிக்கு நிசாந்த முதுஹெட்டிகமவின் பெயரை ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் மனுஷநாணயக்கார பிரேரித்ததுமே முதுஹெட்டிகம சபையில் சப்தமிட்டு சபையை விமர்சிக்கத் தொடங்கினார். அதனைத் தொடர்ந்து ஜே.வி.பி. உறுப்பினர் நலின் ஹேவகே சபையில் உரையாற்றிக் கொண்டிருக்கையில் மீண்டும் மீண்டும் கூச்சலும் குழப்பமும் அதிகரித்தது.

தவிசாளர், மொஹான் டி சில்வா மாகாண சபையின் பிரதி தவிசாளராக விஜய தஹநாயக்கா தெரிவு செய்யப்பட்டுள்ளதாக சபைக்கு அறிவித்ததுடன் கூட்ட அமர்வை எதிர்வரும் 19ம் திகதி வரை ஒத்திவைத்தார். நேற்றைய தினம் தென் மாகாண சபையின் கட்டடம் அமைந்துள்ள காலி கலேகான், போபே வீதி உட்பட அப் பிரதேசமெங்கும், பொலிஸாரும், இராணுவத்தினரும் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

நிஷாந்த முதுஹெட்டிகம, ஜனாதிபதியின் ஆலோசகரும் பிரபல ஜோதிடருமான சுமனதாஸ அபேகுணவர்தன (அகில இலங்கை சமாதான நீதவான்) முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டிருந்தார் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என சபையில் தெரிவிக்கப்பட்டது. இறுதியாக தென்மாகாண சபை தவிசாளரின் உத்தியோகபூர்வ அறையில் நிஷாந்த முதுஹெட்டிகம தென்மாகாண சபை உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

அடுத்துவரும் தேர்தல் வெற்றிகள் அரசின் ஸ்திரத்தை மேலும் உறுதிப்படுத்தும்

061109pm.jpgதேவையான போது தேவையான தேர்தலை நடத்த அரசாங்கம் தீர்மானிப்பதுடன் எந்தத் தேர்தலானாலும் அதனை நடத்தவும் அதனை எதிர்கொள்ளவும் அரசாங்கம் தயாராகவே உள்ளதென பிரதமர் ரட்ணசிற விக்கிரமநாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அரசாங்கம் பாரிய அபிவிருத்தியை முன்னெடுத்து மக்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றியுள்ளது. மக்கள் மாகாண சபைத் தேர்தல் மூலம் அதற்குப் பதிலளித்தனர். அடுத்துவரும் தேர்தல் வெற்றிகள் அரசாங்கத்தின் ஸ்திரத்தை மேலும் உறுதிப்படுத்தும் எனவும் பிரதமர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று அரசாங்கத்தின் இடைக்கால கணக்கறிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது, நாடு முழுவதும் பாரிய அபிவிருத்திகள் இடம்பெற்று வருகின்றன. அரசாங்கம் மக்கள் சேவையை நிறைவேற்றுவதில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறது. இதற்குப் பிரதிபலனாக அடுத்து என்ன தேர்தல் வந்தாலும் மக்கள் உரிய பதிலளிப்பர்.

அரசாங்கத்தின் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். அதேபோன்று அரசாங்கம் மக்கள் மீது அசையாத நம்பிக்கை கொண்டுள்ளது. இந்த நம்பிக்கையுடன் அரசு தொடர்ந்து முன்னேறுவது உறுதி. அரசாங்கத்தின் எதிர்கால அபிவிருத்திப் பயணத்தில் மேலும் பல பில்லியன் ரூபா நிதிச் செலவில் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. தற்போது நடைமுறையிலுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் பல அடுத்தடுத்த வருடங்களில் நிறைவு பெறுவதுடன் அதன் பயனை மக்கள் அனுபவிப்பர்.

நாட்டை சுய உற்பத்தியில் தன்னிறைவடையச் செய்து வெளிநாட்டிற்குச் செல்லும் நிதியைக் கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாட்டின் பிரதான பாலங்கள் பல புனரமைக்கப்பட்டும் புதிதாக நிர்மாணிக்கப்பட்டும் உள்ளன.

இதற்கு 4,94,378 மில்லியன் ரூபாவை அரசாங்கம் செலவிட்டுள்ளதுடன் அடுத்த வருடத்திற்குள் நாட்டில் நூற்றுக்குத் தொண்ணூறு வீதமான மக்களுக்கு மின்சாரம் வழங்கும் திட்டத்தையும் நடைமுறைப்படுத்தி வருகிறது. நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் முதற்கட்ட நிர்மாணப் பணிகள் 2011ம் ஆண்டில் நிறைவு பெறுவதுடன் இதற்கென தேசிய நிதி 1500 மில்லியன் ரூபாவும் வெளிநாட்டு நிதி 8456 மில்லியன் ரூபாவும் செலவிடப்பட்டுள்ளன.

மேலும் சீன அரசாங்கத்தின் 50,000 மில்லியன் நிதியுதவியுடன் இத்திட்டம் நிறைவுபெறவுள்ளது. அதேபோன்று திருகோணமலையில் 52,000 மில்லியன் ரூபா செலவில் புதிய மின் உற்பத்தி நிலையம் நிர்மாணிக்கப்படவுள்ளது.

மேல் கொத்மலை நீர்மின் உற்பத்தி நிலையத்தின் நிர்மாணப் பணிகள் அடுத்த வருடத்தில் நிறைவடைகிறது. இதற்கென அரசாங்கம் 5952 மில்லியன் ரூபாவைச் செலவிட்டுள்ளது. இதற்கென கடந்த வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்கம் 4,000 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதுடன் 32,267 மில்லியன் ரூபாவை ஜப்பானிய அரசாங்கம் வழங்கியுள்ளது.

இத்தகைய பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் நாடெங்கிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் மூலம் மக்கள் அரசாங்கத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கை அதிகரித்துள்ளது. அரசாங்கம் மக்கள் நம்பிக்கையுடன் தமது பயணத்தைத் தொடரும் எனவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

அழகியற் கல்வியில் பட்டம் பெற்ற 3174 பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனம் வர்த்தமானி அறிவிப்பு அடுத்த வாரம்

அழகியற் கல்வியில் பட்டம் பெற்ற 3174 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. இதற்கான அரசாங்க வர்த்தமானி அறிவித்தல் அடுத்த வாரம் வெளியிடப்படும் என கல்வி அமைச்சு அறிவிக்கிறது.

தற்போது தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் 3175 அழகியற் கல்வி ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பும் நோக்கத்துடனேயே கல்வி அமைச்சு மேற்படி வர்த்தமானி அறிவித்தலை வெளியிடவுள்ளது.

சித்திரம், நடனம், சங்கீதம், நாடகம் போன்ற அழகியற் கல்வித் துறைக்கு மேற்படி 3174 பட்டதாரிகளும் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர்.

இதன்படி தேசியப் பாடசாலைகளுக்கு சேர்த்துக் கொள்ளும் பட்டதாரிகள் கல்வி அமைச்சினூடாகவும், மாகாண பாடசாலைகளுக்கு மாகாண கல்வி அமைச்சினூடாகவும் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர். இதன் படியே வர்த்தமானி அறிவித்தல் வெளி யிடப்படும்.

அழகியற் கல்வியில் பட்டம் பெற்ற பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு சேர்த்துக் கொள்வதற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.

கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த இதற்கான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்திருந்தார்.

இவ்வாறு புதிய ஆசிரியர் நியமனங்கள் நிரப்பப்படுவதற்கு முன்ன தாக பாடசாலைகளில் நிலவும் மேலதிக ஆசிரியர்கள் தொடர்பாக விபரங்கள் பெறப்பட்டு நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் ஆசிரியர்களின் சமநிலை பேணவும் கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது.