ஈரான் ஜனாதிபதி அஹ்மெதி நெஜாத் நேற்று திங்கட்கிழமை பிரேஸில் பயணமானார். இஸ்ரேல், அமெரிக்கா ஆகிய நாடுகளின் கடுமையான விமர்சனங்களுக்கு மத்தியிலும் பிரேஸில் ஜனாதிபதி ஈரான் ஜனாதிபதியை வரவேற்கவுள்ளார். பிரதான வர்த்தக உடன்படிக்கையில் இருதலைவர்களும் கையெழுத்திட்ட பின்னர் நடைபெறவுள்ள முக்கிய நிகழ்ச்சிகளில் ஈரான் தலைவர் பங்கேற்கவுள்ளார்.
பிரேஸில் பல்கலைக்கழகத்தில் உரையாற்றவும் பத்திரிகையாளர் மாநாட்டில் கலந்து கொள்ளவும் பிரேஸில் காங்கிரஸில் உரையாற்றவும் ஈரான் ஜனாதிபதி அழைத்துச் செல்லப்படவுள்ளார். மேற்கு நாடுகளின் அழுத்தங்கள் அதிகரித்து வரும் நிலையில் பிரேஸிலுடனான உறவை வளர்ப்பதில் ஈரான் அக்கறை செலுத்தியுள்ளது.
இஸ்ரேல் ஜனாதிபதி ஷிமோன் பெரஸ் அண்மையில் பிரேஸில் சென்ற வேளை இவரது விஜயத்தை எதிர்த்துப் பாரிய ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். ஈரான் யுரேனியத்தை மின்சாரத் தேவைக்காகவும் அமைதியான முறையிலும் கையாள்வதாக கடந்த செப்டம்பர் மாதம் ஏ. எப். பி. செய்திச் சேவைக்கு பிரேஸில் ஜனாதிபதி தெரிவித்தார். இதிலிருந்து இவ்விரு நாடுகளினதும் உறவுகள் விரிவடைய ஆரம்பித்துள்ளன.
பிரேஸில் பயணம் குறித்து ஈரான் ஜனாதிபதி கடந்த வெள்ளிக்கிழமை கூறியபோது இருநாடுகளினதும் பல்வேறுபட்டதுறைகளுக்கு இரு நாடுகளினதும் ஒத்துழைப்பு அவசியம் என வலியுறுத்தினார். மேற்கத்தேய நாடுகள் ஏனைய நாடுகளின் விஞ்ஞான வளர்ச்சியைத் துண்டிக்க முயற்சிப்பதாகவும் அஹ்மெதி நெஜாத் குறிப்பிட்டார்.
பிரேஸில் மக்கள் உள்ள பக்கம் ஈரான் மக்கள் உள்ளனர். அப்பாவிப் பொது மக்களுக்கெதிரான ஷியோனிஸவாதிகளின் தாக்குதல்களைக் கண்டிக்கும் விடயத்தில் பிரேஸிலியர்களும் ஈரானியர்களும் ஒற்றுமையுடனுள்ளதாகவும் ஈரான் ஜனாதிபதி குறிப்பிட்டார். மேற்கு நாடுகளின் அழுத்தங்கள் அச்சுறுத்தல்களைப் பொருட்படுத்தாத ஈரான் ஜனாதிபதி தென்னமெரிக்க நாடுகளுடனான உறவை வளர்ப்பதில் அக்கறையுடனுள்ளார். யுரேனியத்தை செறிவூட்டும் ஈரான் ரகசியமாக அணு ஆயுதங்களைத் தயாரிப்பதாக இஸ்ரேலும் மேற்குலக நாடுகளும் சந்தேகிக்கின்றன.
இவ்வாறான நிலையில் பிரேஸில் ஈரானுடன் உறவு கொள்வதை அந்நாடுகள் கடுமையாக விமர்சித்துள்ளன. பொருளாதார நெருக்கடியிலிருந்து பாதுகாப்புப் பெற பிரேஸில் ஈரானுடன் தொடர்புகளைப் புதுப்பிப்பதாகவும் விமர்சிக்கப்படுகிறது. 2010 ல் ஈரானுக்கு வருமாறு பிரேஸில் ஜனாதிபதியை அஹ்மெதி நெஜாத் அழைப்புவிடுப்பார்