December

December

ஈராக்கின் கர்பலா நகரில் பலத்த பாதுகாப்பு!

iran_mosq.jpgஈராக்கின் தலைநகர் கர்பலாவில் ஆஷ{ரா தினத்தைக் கொண்டாடுவதற்கு பல்லாயிரக்கணக்கான ஷியா முஸ்லிம்கள் குவிந்து வருகின்றனர். இங்கு ஆயுத்தாரிகளின் தாக்குதலை தடுத்து நிறுத்துவதற்காக சுமார் இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட பொலிஸார் பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.

பெண் தற்கொலைத்தாரிகளை தடுத்து நிறுத்துவதற்காக நூற்றுக்கணக்கான பெண் பொலிஸாரும் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். சோதனை சாவடிகளில் மோப்ப நாய்களும் பயன்படுத்தப்படுகின்றன. சமீப நாட்களில் ஈராக்கில் ஷியா முஸ்லிம்களை குறிவைத்து பல தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன

5வது ஒரு நாள் போட்டி: ஆட்டம் நிறுத்தம்?

இந்தியா இலங்கை அணிகள் இடையிலான 5 வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடி வருகிறது.

delhi.bmpஇந்நிலையில் ஆடுகளம் மோசமாக இருப்பதால் இலங்ணை அணியினர் ஆட்டத்தை நிறுத்தினர். ஆடுகளம் பற்றி போட்டி நடுவர்களிடம் இலங்கை அணி கேப்டன் சங்கக்கரா புகார் கொடுத்துள்ளார். சங்கக்கரா புகார் செய்ததையடுத்து, போட்டி நடுவர்களும் ஆடுகளத்தை பார்வையிட்டு ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது இலங்கை கிரிக்கெட் அணி 23.3 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 83 ரன்கள் எடுத்துள்ளது.

வடக்கு முஸ்லிம்கள் மே மாதம் முழுமையாக மீள்குடியேற்றம்

presi_election.jpgவடக்கி லிருந்து வெளியேற்றப்பட்ட சகல முஸ்லிம்களும் மே மாதமளவில் சொந்த இடங்களில் முற்றாக மீள்குடியேற்றப்படுவரென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இதற்கு வசதியாக புத்தளத்திலிருந்து மன்னார் செல்லும் பாதை அடுத்த மாதம் திறந்து வைக்கப்படுமெனவும் ஜனாதிபதி கூறினார்.

அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் வடமாகாண மாநாடு நேற்று புத்தளம் ஆலங்குடாவில் நடைபெற்றது. அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையில் நடந்த இந்த மாநாட்டில் சுமார் ஐம்பதினாயிரம் பேர் கலந்து கொண்டனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். இங்கு தமிழில் உரையாற்றிய ஜனாதிபதி:- முஸ்லிம் மக்களை பணயக் கைதிகளாக வைக்க நாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். முஸ்லிம்களை நாம் முழுமையாகப் பொறுப்பேற்கிறோம்.

முஸ்லிம்கள் எனது சகோதரர்கள். என்னை முழுமையாக நம்புங்கள். முஸ்லிம்கள் தொடர்பாக என்மீது பல்வேறு அபாண்டமான குற்றச்சாட்டுக்கள் எதிர்க் கட்சிகளால் சுமத்தப்பட்டன. ஐந்து வேளைத் தொழுகையை நான் நிறுத்தி விடுவேனெனக் கூறினார்கள். இப்போது உண்மை நிலையை நீங்கள் புரிந்திருப்பீர்கள். அவ்வாறான பொய்களெல்லாம் எதிர்க் கட்சிகளினாலும் அதன் தலைவர்களினாலும் பரப்பப்பட்டவை. அவர்களை நம்பாதீர்கள். அவர்கள் உங்களை ஏமாற்றப்பார்க்கிறார்கள்.

நான் கடந்த தேர்தலில் கூறியவைகளை முழுமையாக நிறைவேற்றி இருக்கிறேன். நீங்கள் கடந்த 19 வருடங்களாக இந்தப் பகுதிகளில் அகதிகளாக வாழ்கின்aர்கள். நீங்கள் பட்ட கஷ்டங்களை நான் நன்கறி வேன். அவற்றை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளேன். முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் புலிகளோடு ஒப்ப ந்தம் செய்தார். அதன் பின்பு, வடக்கிலிருந்து முஸ்லிம்கள் விருப்பத்துடன் தான் வெளி யேறினரென்று ஹக்கீமும் அவரது சகபாடி களும் கூறினர். அதன்பின்பு உங்களைப் பற்றி அவர்கள் எவ்வித அக்கறையும் கொள்ளவில்லை. இப்படிப்பட்டவர்கள்தான் இப்போது உங்கள் மத்தியில் பேச வருகிறார்கள். இ வர்களை நீங்கள் அடையாளம் காண வேண்டும்.

இப்படியானவர்கள்தான் இரு இனங்களையும் பிளவுபடுத்த முயன்றனர். அது பலிக்கவில்லை. முஸ்லிம்களின் நிம்மதியைக் கெடுத்து அகதிகளாக்கியவர்களை நீங்கள் ஒருபோதும் நம்பவேண்டாம்.

வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட உங்களது கஷ்டங்களை நான் நன்கறிவேன். அதனால்தான் ஐக்கிய நாடுகள் வரை சென்று பேசினேன். அதேநேரம், மஹிந்த சிந்தனையிலும் வடக்கு முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பாகவும் குறிப்பிட்டிருக்கிறோம்.

ஆகவே, தேர்தல் காலங்களில் வந்து பொய் கூறுபவர்களை நம்பாதீர்கள். பொய்களுக்கு என்றுமே அடிபணிந்து விடாதீர்கள். என்றுமே நான் உங்கள் நண்பன். இந்த நட்பு என்றும் தொடரும். என்னை முழுமையாக நம்புங்கள் என்றார் ஜனாதிபதி.

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பற்றிக் குறிப்பிட்ட ஜனாதிபதி, வடக்கு முஸ்லிம் மக்களுக்காக அயராது பாடுபடும் ஒரு செயல்வீரன் ரிஷாட். அவரது பணிக்கு என்றும் உறுதுணையாக இருப்பேன். எனது ஆலோசனையின் பேரில் இடம்பெயர்ந்து நிவாரணக் கிராமங்களிலிருந்த சுமார் 3 இலட்சம் தமிழ் மக்களை மிக கண்ணியமாக நடாத்தி அம்மக்களின் தேவைகள் அனைத்தையும் பூரணமாக நிறைவேற்றிக் கொடுத்தவர் அமைச்சர் ரிஷாட்.  இதனால் எனக்கும் எனது அரசுக்கும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நல்லபிப்பிராயம் ஏற்படுவதற்கு வழியேற்படுத்திக் கொடுத்தார்.

அவருக்கு இச்சந்தர்ப்பத்தில் அவரது மக்களின் முன்னிலையிலேயே நன்றி தெரிவிக்கிறேன். மிக இளவயதில் அமைச்சராக உயர்ந்து இன்று வடமாகாண முஸ்லிம்களின் அன்பையும் ஆதரவையும் பெற்றுள்ளார். எனது அரசாங்கத்தில் இவர் அமைச்சராக இருப்பது ஒரு சிறப்பான விடயமாகும் என்றும் கூறினார்.

குவைத்திலுள்ள இலங்கையர்களுக்கு தூதரகத்தின் வேண்டுகோள்

employing.jpgகுவைத்தில் பணியாற்றும் இலங்கையர்கள் ஏதாவது பிரச்சினையின் காரணமாகத் தொழில் செய்யும் இடத்திலிருந்து வெளியேற நேரிட்டால், நேரடியாகக் குவைத்திலுள்ள இலங்கைத் தூதரகத்திற்கு வருமாறு தூதுவர் கே. எஸ். சீ. திஸாநாயக்க அறிவித்துள்ளார்.

அவ்வாறில்லாமல் நண்பர்கள், தெரிந்தவர்கள் இடத்தில் தங்கியிருப்பதன் மூலம் பொலிஸ் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்குவதாகத் தூதுவர் தெரிவித்துள்ளார்.

நேரடியாகத் தூதரகத்திற்கு வருவார்களாயின், அவர்களின் பிரச்சினைகளைத் தொழில் வழங்குநர்களுடன் கலந்துரையாடித் தீர்த்து வைப்பதுடன் விரும்பும் பட்சத்தில் அவர்களை இலங்கைக்குத் திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் தூதுவர் குறிப்பிட்டார்.

பணிபுரியும் வீடுகளிலிருந்து தப்பிவந்த 210 பேர் இன்னமும் தூதரகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள தாகக் கூறிய தூதுவர், அவர்களையும் பொலிஸ் நிலையங்களில் தடுத்து வைக்கப் பட்டுள்ளவர்களையும் நாட்டுக்குத் திருப்பியனுப்ப நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் தூதுவர் கூறினார்.

குவைத்தில் பணியாற்றுவதற்காக வரும் இலங்கையர்கள் வந்த ஓரிரு வாரங்களிலேயே தொழில் செய்ய முடியாமல், வீடுகளிலிருந்து தப்பியோடுகின்றனர். அவ்வாறு தப்பியோடு வோருக்கு எதிராக வீட்டுரிமையாளர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்கின்றனர். இதன் விளைவாக அவர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி இறுதியில் நாடு கடத்தப்படுகின்றனர்.

மலையகப் பெருந்தோட்டங்களில் முகவர் தபால் நிலையங்கள் உப தபாலகங்களாக மாற்றம்

மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் முகவர் தபால் நிலையங்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட கட்டடங்களை அர சாங்கத்தின் உப தபாலகங்களாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரைகளுக்கமைய, இது தொடர்பில் விசேட குழுவொன்று ஆராய்ந்து வருவதாகத் தபால், தொலைத் தொடர்புகள் பிரதியமைச்சர் எம். எஸ். செல்லச்சாமி தெரிவித்தார். மலையகத் தோட்டங்களில் முகவர் தபால் நிலையங்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட 126 கட்டடங்கள் பல வருடங்களாகத் திறக்கப்படாமல் உள்ளன. எனவே, இவற்றை உப தபாலகங்களாக மாற்றியமைத்துத் திறந்து வைப்பதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்படுவதாகப் பிரதியமைச்சர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்திலேயே மலையகத் தோட்டப்புறங்களில் 150 வருடகாலத்திற்குப் பின்னர் நேரடித் தபால் விநியோகம் ஆரம்பித்து வைக்கப்பட்டிருப்பதாகக் கூறிய பிரதி அமைச்சர் செல்லச்சாமி, தபால் துறையில் புதிய பரிமாணம் தோற்றுவிக் கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர் மலையகப் பெருந்தோட்டங்களில் மேலும் 100 தபால் ஊழியர்களை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பிரதியமைச்சர் கூறினார்.

தபால் ஊழியர்களாக 500 பேருக்கு நியமனம் வழங்க நடவடிக்கை எடுத்தபோது 400 பேர் மாத்திரமே கடமைகளைப் பொறுப்பேற்றனர். சில தோட்டங்கள் விடுபட்டதால், 100 பேருக்கு நியமனம் கிடைக்கப்பெறவில்லை. இவர்களுக்குத் தேர்தலுக்குப் பின்னர் நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. மேலும், மலையகத்திலுள்ள அனைத்துத் தபாலகங்களையும் சகல வளங்களையும் கொண்டதாக அபிவிருத்தி செய்யவும் நடவடிக்கைகள் முன்னெடு க்கப்பட்டு வருவதாகவும் பிரதியமைச்சர் கூறினார்.

சங்ககராவின் முடிவு தவறானது : ஷேவாக்

catak.jpgஇலங்கைக்கு எதிராக கொல்கத்தாவில் நடந்த 4-வது ஒரு நாள் போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  316 இலக்கை இந்திய அணி 11 பந்துகள் எஞ்சி இருந்த நிலையில் எளிதில் எடுத்தது. இந்த வெற்றிக்கு காம்பீர் (137 பந்தில் 150 ரன். 14 பவுண்டரி), வீரட் கோக்லி (114 பந்தில் 107 ரன். 11 பவுண்டரி, 1 சிக்சர்) ஆகியோரின் அதிரடி ஆட்டமே காரணம். இருவரும் 3-வது விக்கெட்டுக்கு 214 பந்தில் 224 ரன் எடுத்தது ஆட்டத்தின் முக்கிய அம்சமாகும்.

இந்த வெற்றி மூலம் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. தொடர்ந்து 5-வது முறையாக இலங்கைக்கு எதிராக தொடரை வென்றது.

வெற்றி குறித்து இந்திய அணியின் பதில் கேப்டன் வீரேந்தர் ஷேவாக் கூறியதாவது, இலங்கை கேப்டன் “டாஸ்” வென்று முதலில் பேட்டிங் செய்ய எடுத்த முடிவு தவறானது. ஏனென்றால் பனி பொழிவில் பந்து வீச்சாளர்கள் சரியாக வீச இயலாது. பந்தை “கிரீப்” செய்வது கடினம். 2-வது பவுலிங் செய்தால் இந்த நிலைமை இருக்கும் என்று ஏற்கனவே அறிந்து இருந்தோம். நான் “டாஸ்” ஜெயித்து இருந்தாலும் முதலில் பீல்டிங்கைதான் தேர்வு செய்து இருப்பேன். தொடக்கத்தில் எந்தவித ஈரப்பதமும் இல்லாததால் எங்களது சுழற்பந்து வீரர்கள் சிறப்பாக வீசினார்கள்.

315 ரன்னை மிகப்பெரிய ஸ்கோராக நான் நினைக்கவில்லை. ஏனென்றால் எங்களது பேட்டிங் வரிசை பலமாக இருந்தது. ஆனால் எங்களது தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. நானும், தெண்டுல்கரும் எளிதில் ஆட்டம் இழந்துவிட்டோம். காம்பீரும், கோக்லியும் சிறப்பாக பேட்டிங் செய்தனர். இருவரது ஆட்டம் மிகவும் பாராட்டும் வகையில் இருந்தது. தனக்கு கிடைத்த வாய்ப்பை கோக்லி சரியாக பயன்படுத்திக் கொண்டார். ஏற்கனவே அவர் இந்த தொடரில் அரைசதம் அடித்து இருந்தார். சாம்பியன் டிராபி போட்டியில் இலங்கைக்கு எதிராக சிறப்பாக ஆடி இருந்தார்.

இளம் வீரர்களான கோக்லி, ரெய்னா, ஜடேஜா தங்கள் திறமையை நிரூபித்து வருகிறார்கள். இதே நிலை நீடித்தால் 2011-ம் ஆண்டு உலக கோப்பையை நம்மால் வெல்ல முடியும். கோக்லி திறமையானவர். அவருக்கு காம்பீர் ஆலோசனை வழங்கினார். இதற்காக நன்றி தெரிவிக்கிறேன். தனக்கு கிடைத்த ஆட்ட நாயகன் விருதை காம்பீர் கோக்லிக்கு வழங்கியதை பாராட்டுகிறேன். தெண்டுல்கரின் ஆலோசனைப்படி தில்சானை தொடக்கத்திலேயே “அவுட்” செய்தோம். அவர் பந்தை இடது கால் பகுதியில் போடுமாறு கூறினார்.

இலங்கைக்கு எதிரான தொடரை வென்றது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. அடுத்த போட்டிக்காக காத்திராமல் கொல்கத்தாவிலேயே வென்று தொடரை வெல்ல விரும்பினேன். நான் விரும்பியபடி நடந்தது. ஏனென்றால் டெல்லி ஆடுகளம் குறித்து உறுதியாக எதுவும் சொல்ல இயலாது. கடைசி போட்டியில் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. இலங்கைக்குதான் நெருக்கடி என்றார்.

தோல்வி குறித்து இலங்கை கேப்டன் சங்ககரா கூறும்போது, எங்களது பந்து வீச்சு சரியில்லை. நேர்த்தியாக வீசவில்லை என்றார்.

இந்தியா-இலங்கை அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி இன்று டெல்லி பெரோசா கோடலா மைதானத்தில் நடக்கிறது.

அமெரிக்க விமானத்தை தகர்க்க முயற்சித்ததாக நபர் கைது

flight-02.jpgஐரோப்பா விலிருந்து அமெரிக்கா சென்ற ஒரு விமானத்தை வெடிவைத்து தகர்க்க முயற்சி செய்ததாக குற்றம்சாட்டப்படும் நைஜீரிய பயணி ஒருவர் அமெரிக்காவில் விசாரிக்கப்பட்டுவருகிறார்.  நார்த்வெஸ்ட் ஏர்லைன்ஸைச் சேர்ந்த விமானம் வெள்ளியன்று ஆம்ஸ்டெர்டாம் நகரிலிருந்து கிளம்பி டெட்ராய்ட் நகரில் தரையிறங்கும் நேரத்தில் இந்த நபர் ஏதோ ஒன்றை வெடிக்க முயற்சி செய்துள்ளார் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்நபர் செய்த முயற்சி முறியடிக்கப்பட்டு அவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த நபர் இலண்டனில் தங்கியிருந்தவர் என்று தகவல்கள் வெளியானதை அடுத்து புலன் விசாரணைகளில் பிரிட்டிஷ் பொலிசார் உதவிவருகின்றனர். நைஜீரியர் ஒருவர் மீது குற்றம்சாட்டப்படுவது தங்களது அரசாங்கத்தை சங்கடப்படுத்தியுள்ளது என நைஜீரிய தகவல்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

ஆசிரிய நியமனத்தில் முறைகேடு: 4 கல்விப் பணிப்பாளர்கள் சப்ரகமுவயில் பணி நீக்கம்

மலையக ஆசிரிய நியமனத்தின் போது சப்ரகமுவ மாகாணத்தில் முறைகேடுகளில் சம்பந்தப்பட்ட தாகக் குற்றஞ்சாட்டப்பட்ட நான்கு கல்விப் பணிப்பாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சப்ரகமுவ மாகாணத்தின் மேலதிகக் கல்விப் பணிப்பாளர் ஒரு மாதத்திற்கு முன்பு பணிநீக்கம் செய்யப்பட்டதுடன் ஒரு பிரதிப் பணிப்பாளரும், இரண்டு வலய உதவிப் பணிப்பாளர்களும் சில தினங்களுக்கு முன்னர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மாகாண கல்வித் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழ் மக்கள் வாக்குகள் யாருக்கு?: குலன்

Sivajilingam_M_Kஎதிர்வரும் தை மாதம் இலங்கைக்கான ஜனாதிபதித் தேர்தலில் சிவாஜிலிங்கம் நிற்கதான் வேண்டுமா? இதனால் ஏற்படும் நன்மை தீமைகள் என்ன? என்னவிதமான எதிர்வுகளை நாம் எதிர்பார்க்கலாம்? சிவாஜிலிங்கம் நிற்பதனால் அரசியல் உலகிற்கு நாம் காட்டும் கணக்கு என்ன? எதை மக்கள் விரும்புகிறார்கள்? என்பது போன்ற தகவல்களை என் அறிவுக்கு எட்டிய வரையில் தேசம்வாசக வட்டங்களுக்குச் சமர்ப்பிக்கலாம் என்று எண்ணுகிறேன்.

தமிழர் தேசிய கூட்டமைப்பு (த.தே.கூ-ரிஎன்ஏ) தனது பிரதிநிதி ஒருவரை ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தாத பட்சத்தில் தான் சுயேட்சையாகத் தேர்தலில் நிற்பேன் என்று கொடுத்தவாக்கைக் காப்பாற்ற சிவாஜிலிங்கம் (சிவாஜி) தேர்தலில் நிற்கிறார். அரசியல்வாதிகள் கொடுத்த வாக்குகளைக் காப்பாற்றுவது என்பது ஒரு பெரியவிடயம். சிவாஜியின் கூற்றுப்படி நிச்சயமாக ஒரு தமிழன் தேர்தலில் நிற்கவேண்டுமா? ஏன்? வெற்றி பெறமுடியாத தேர்தலில் நிற்பதால் என்ன பலன்?

தேர்தல் வெறும் வெற்றிக்காகவும் ஜனாதிபதியாவதற்கும் நடத்தப்படும் ஒன்றல்ல. மக்களின் கருத்தையும், நிலைப்பாட்டையும், தேவைகளையும், அபிலாசைகளையும், உரிமைகளையும் வெளிக்கொணரும் உண்மை ஊடகமே தேர்தல். த.தே.கூட்டணியினர் கடைசி நிமிடம்வரை அரசியல் நிலைப்பாடு எதுவுமின்றி சரியான தெளிவான முடிவின்றி நின்ற வேளைதான் சிவாஜி தன்முடிவை எடுத்தார். இதுகூட எமக்கு ஒரு சரியான பதிலைச் சொல்கிறது. த.தே.கூ யிடம் இன்னும் சரியான அரசியல் போக்கும், தெளிவும் இல்லை என்பது தெளிவாகச் சுட்டிக் காட்டுகிறது. இத்தேர்தலில் நிற்பதாலும், மறுப்பதாலும் எற்படும் நன்மை தீமைகளை தமிழ்மக்களுக்கத் தெளிவுபடுத்த வேண்டிய கடமை தமிழர்களின் பெருங்கூட்டமைப்பான த.தே.கூட்டமைப்புக்கு உண்டு. இதை இவர்கள் சரியாகச் செய்யவில்லை. மாறாக வன்னியில் எம்மக்களை கொன்று குவித்து இரத்தம் தோய்ந்த கைகளுடன் நிற்கும் மகிந்த, சரத்துடன் பேச்சுவார்த்தைகள் நடத்தியிருக்கிறார்கள். பேச்சுவார்த்தையைப் பிழை எனக்கூறவில்லை. இது இராஜதந்திர நடவடிக்கைகளின் முன்னெடுப்பாக இருந்தாலும் மக்கள், மனம், மானம், எதிர்காலம், உணர்வென்றும் பலவிடயங்கள் இருப்பதை மறந்து விட்டார்கள்.

மனுத்தாக்கல் முடிந்து தேர்தல் பிரசாரங்கள் முடுக்கி விடப்பட்ட நிலையிலும், இன்னும் த.தே.கூ தன்முடிவு என்ன? நிலைப்பாடு என்ன? மக்கள் என்ன செய்ய வேண்டும்? தாம் யாரை ஆதரிக்கப் போகிறோம்? தேர்தலை நிராகரிக்கப் போகிறோமா? என்ற எந்த வினாக்களுக்கும் பதில் இல்லாமாலேயே நிற்கிறார்கள். இப்படியான நொண்டிக் குதிரைகளை நம்பி தமிழ்மக்கள் எப்படி அரசியல் ஆற்றைக் கடப்பது?

30 000 தமிழ்மக்களின் ஆண்டுத்திவசம் முடியுமுன்னரே உதிரம் தோய்ந்த முகங்களுடனும், வெட்டி வீழ்திய வாள்களுடனும் வோட்டுக் கேட்டு வந்து நிற்கும் இருபெரும் சிங்களக் கட்சிகளுக்கு எந்த மனத்துடன், எந்த முகத்துடன் வோட்டுப் போடமுடியும்? தமிழ்மக்கள் வேட்டுப் போட்டால் அவர்கள் செய்த கொலைகளை, சர்வதேச போர்குற்றங்களை தமிழர்கள் சேர்ந்து மூடிமறைக்கிறீர்கள் என்று ஆகாதா? தமிழர்களுக்கென்று ஒரு அரசியல் தேவையில்லை, சிங்களப் பேரினவாத்திற்கு தலைவணங்கி, தலைகுனிந்து, வெட்டுவாள்களுக்கு இரையாகத் தயார் என்று சொல்லாதா? இப்பெருங் கட்சிகளை விட்டால் வேறு எந்தக்கட்சிக்கு தமிழ் மக்கள் வாக்களிப்பது? விக்கிரமபாகுவின் நவசமாசக்கட்சிக்கு வாக்களிக்கலாம் என்கிறீர்களா? அதுவும் வெற்றி பெறமுடியாத கட்சியல்லவா?

தமிழர்களைத் தீவீரவாதிகளாக, திராவிடராக துவேசிக்கும் தெற்கில் தனித்து நின்று தமிழ்மக்களின் தனியுரிமை, தேசியம், சுயநிர்ணயம், மனிதம் என்பவற்றைப் பற்றிப் பேசியவர் போராடியவர் விக்கிரமபாகு. இவருக்கு தமிழர்களின் வாக்குக்கள் போவதால் எந்த ஒரு பெருமாற்றத்தையோ திடமான செய்தியையோ யாருக்கும் சமர்பிக்காது. சில தமிழ் சிங்கள வாக்குகளால் திடமான ஒரு முடிவுக்கு வரமுடியாத நிலை தென்படும். இதனால் சிவாஜி நிற்பதால் புலம்பெயர் தமிழர்களுக்கும், அரசியல் அரங்கிற்கும் தமிழர்களின் செய்தியை வெளிக்கொணர உதவும். அங்குள்ள தமிழ்மக்களின் தீர்ப்புத்தான் எம்மரின் தீர்பாக இருக்கவேண்டுமே அன்றி புலம்பெயந்தவர்களின் எண்ணங்களும் கருத்துக்களும் ஈழம்வாழ் தமிழ்மக்களின் தீர்வாக இருக்கமுடியாது. இருப்பினும் புலத்துப் பொழுதுபோக்குகள் தேர்தல் விஞ்ஞாபனங்களை உருவாக்கி விளையாடுகிறது. புலி சிதைந்து பூனையாகி பின் பூனைக்கு விளையாட்டு சுண்டெலிக்குச் சீவன் போகும் நிலைதான் இன்று இருக்கிறது.

சிவாஜி தேர்தலில் நிற்பதால் த.தே.கூட்டணியினரும் தமிழ் மக்களும் மகிழ்ச்சியடைய வேண்டியவர்களே. இன்நிலையில் த.தே.கூ தன் நடுநிலையைப் பேணி நாளை வெற்றிபெறும் ஜனாதிபதியுடன் இராஜதந்திரத் தொடர்புகளைப் பேணி தமிழ்மக்களின் உரிமைகளை, அபிலாசைகளை வென்றெடுக்க இன்று சிவாஜி தேர்தலில் நின்று களம் ஒன்று திறந்தது சிறந்ததே. இதை ஏன் த.தே.கூ விளங்கிக் கொள்கிறார்கள் இல்லை. சிவாஜியின் தேர்தல் நிலைப்பாடு இரண்டு பெரும் சிங்களக் கட்சிகளுக்கும் ஈபிடிபி, கருணா, பிள்ளையான் போன்றோருக்கும் பெரும் பிரச்சனை ஏற்படுத்தியுள்ளது. காரணங்கள் பின்வருமாறு:

தமிழர்களின் வாக்குகளுக்காகவே ஈபிடிபி, கருணா, பிள்ளையானை மகிந்த வைத்திருக்கிறார். தமிழரின் வாக்குக்கள் பிரிக்கப்பட்டோ அன்றேல் மொத்தமாக சிவாஜிக்குப் போடப்பட்டாலோ மகிந்தவின் செல்வாக்கை மேற்கூறியவர்கள் இழப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. தமிழர்களின் வாக்குகள் சிதறுண்டு போவதால் 50வீதத்தை ஒரு தனிக்கட்சி எதுவும் பெறாமல் போகும். வோட்டுப்போட்டோர் தொகை அதிகரித்திருக்கும் ஆனால் வோட்டுகள் சிதறிப்போயிருக்கும் 50விதத்தை எப்படித் தேடிப்பொறுக்குவது. இன்னுமொரு காரணம் 22 கட்சிகள் தேர்தலில் நிற்பதால் சிங்கள வாக்குகளும் சிதறுண்டு போகும். அங்கேயும் எப்படி 50வீதத்தைத் தேடுவது? சிவாஜியின் எண்ணம் எதுவாக இருந்தாலும் தேர்தலைக் குழப்பி, கலக்கி விட்டிருக்கிறார் என்பதை யாரும் மறுக்க முடியாது. சிவாஜி தான் இன்றை தேர்தல் கீரோ. இவர் ஜனாதிபதியாகப் போவதில்லை என்பது திண்ணம். ஆனால் அரசியல் உலகிற்கும், புலம்பெயர் தமிழர்களுக்கும், பிராந்திய வல்லாதிக்கங்களுக்கும், சர்வதேசத்துக்கும் சுட்டிக் காட்டப்போகும் சமிஞ்ஞைகள் பல. சுருங்கக் கூறின் ஒரு தேர்தல் கலகக்காரனும், பலிக்கடாவும் ஜனாதிபதித் தேர்தலில் நின்ற தமிழனும் சிவாஜி ஆகும்.

வெள்ளைக்காரன் நாட்டைவிட்டு போனதின் பின்பு தமிழர்களின் தலைகளை உருட்டியே இலங்கையில் தேர்தல் வெற்றிகள் இருந்தன. தமிழ்ஒழிப்பு, சிங்கள சிறீ அமைப்பு, பிராந்தியக் குடியேற்றங்கள், கலகங்கள், கலவரங்கள், போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம், சமாதானத்துக்காகப் போர் இப்படியெல்லாம் தமிழர்கள் தலைகளை உருட்டித்தான் சிங்களப்பேரினவாத அரசியல்கட்சிகள் தேர்தலில் தன்தலையை நிமிர்த்தின. இந்தத் தேர்தல் அதைவிட மோசமான ஒன்றே. இம்முறை தாமாகவே தமிழர்களைக் கொன்று குவித்துவிட்டு, மார்புதட்டிப் பெருமைகொண்டு எம்மக்களிடமே வந்த போடு வோட்டு என்று கேட்பதுதான் வேதனைக்குரியது. உன்தாயை, உன்சகோதரனை நான்தான் கொன்றேன் எனக்கு வோட்டுப் போடு என்று கேட்கிறார்கள் போடப்போகிறீர்களா? இவர்களை எப்படி நம்பப் போகிறீர்கள்? எம்மைப் போட்டி போட்டுக் கொன்று பெருமை கொண்டவர்களுக்கு போய் போடுவோமா வோட்டு அல்லது வேட்டு?

வன்னியில் அகற்றப்படாத பிரேதங்கள் இன்றும் மணத்துக் கொண்டுதான் இருக்கின்றன. அகதியாய் அடைக்கப்பட்டவர்கள் இன்னும் தம்மனத்தை உடைத்துக் கொண்டு வெளியில் வரவில்லை. சரத், மகிந்த இருவரின் கைகளில் இருக்கும் உங்கள் உறவுகளின் உதிரங்கள் உலகின் கண்ணில் காட்டப்படமுன் மறைத்து, குற்றவாளிகளை மன்னித்து, எறிவதை எடுத்து நக்கி நீங்களே உங்கள் உறவுகளின் உதிரத்தைக் களுவப்போகிறீர்களா?

இன்று சிவாஜி தேர்தலில் நிற்பதால் எமக்குக் கிடைக்கும் சமிஞ்ஞைகளும், அறிந்து கொள்ளக்கூடிய உண்மைகளும்:
1.த.தே.கூட்டமைப்பின் அரசியல் நிலைப்பாடு தெளிவாகத் தெரிகிறது. அரசில் தெளிவும், எதிர்காலத் திட்டமும், தீர்க்க தசிசனமும், முடிவெடுக்கும் திறனும் அவர்களிடம் இன்னும் இல்லை என்பது. எதிர்கால அரசியற்பயணம் அவர்களுக்குப் பயமாகவே இருக்கிறது.
2.சிங்களக் கட்சிகளுக்கு எம்மக்கள் பழக்கப்படாது வைத்திருப்பதற்கும் ஒரு வழிசமைக்கப்பட்டிருக்கிறது.
3.சிவாஜி தானே பலிக்காடா ஆவதனால் த.தே.கூட்டமைப்பு தன்னை தமிழர்களின் பிரதிநிதியாகவும் நடுநிலை வாதியாகவும் காட்டிக்கொள்வதூடு நாளை வெற்றிபெறும் ஜனாதிபதியுடன் பகைமை உணர்வின்றி இராஜதந்திர உறவுகளை தமிழர்களுக்காகப் பேணலாம்
4.தமிழர்களின் வோட்டுக்கள் எம்மக்களைக் கொன்ற உதிரம் தோய்ந்த கைகளுக்குப் போகாமல் காக்கலாம்.
5.சிவாஜிக்கு விழும் வோட்டுகளை வைத்து இன்று தமிழ்மக்களின் மனோநிலை, எதிர்கால எண்ணம், வாக்களிக்காத வாக்களிக்க முடியாதவர்கள் நிலை, போர்குற்றவாளிகளை எப்படித் தமிழ் மக்கள் பார்க்கிறார்கள் என்ற சமிஞ்சைகளை நாம் பெறலாம்.
6.தமிழீழம் வேண்டுமா? வேண்டாமா என்று சாட்டுக்கு வோட்டுக்கேட்டு திரியும் புலம்பெயர் அரசியல் பொழுது போக்காளர்களுக்கும் பதில்கள் இங்கே கிடைக்கும். அங்கே வாழும் மக்களின் மனங்களைகளை ஊகிப்பதற்காவது இத்தேர்தல் உதவும். (அங்கே உள்ள மக்களின் தேவையை அறியாமல் இங்கே தேர்தல் வைப்பது அங்கே பசிப்பவனுக்கு இங்கே நாம் சாப்பிடுவது போன்றது. இதனால்தானோ என்னவோ புலத்தில் ஆடடித்துக் கூடிக் குடிக்கிறார்கள். இவர்கள்தான் அன்று பிரபாகரனை மேதகுவாக்கிய மேன்மையாளர்கள். அவதாரமாகக் கருதிய அரைகுறைகள். சூரியதேவன் என்று வர்ணித்த வக்கிரகங்கள்.)
7.சிவாஜி, விக்கிரமபாகுவுடன் இணைந்த தேர்தலில் நிற்பது நாம் சிங்கள மக்களுடன், அரசில்வாதிகளுடனும் இணைந்து ஒருஐக்கிய இலங்கைக்குள்ளும் செயற்படமுடியும் என்ற சமிஞ்ஞையை தெளிவாகக்காட்டுகிறது. இது உடனடியான சரியான விளைவுகளைத் தராவிட்டாலும் எதிர்காலத்தில் சிங்கள மக்களையும், அரசியல்வாதிகளையும் சிந்திக்கத் தூண்டும். நாளை தோன்ற இருக்கும் வர்க்கப்போராட்டத்திற்கு தமிழர், சிங்களவர் இருசாராரும் கைகோர்த்து நின்று போராடத் தூண்டும். (இப்படியான இணைவுப்போரைப் புலிகள் நிச்சயமாகச் செய்திருக்கவேண்டும். செய்யவில்லையே!!! செய்திருந்தால் உலகமயமாதில் தமிழீழக் கோரிக்கை உடைக்கப்படாது வர்க்கப் போராட்டமாய் இலங்கை முழுதும் வியாபித்திருந்திருக்கும்.)
8.சிவாஜி, விக்கிரமபாகுவை ஆதரிப்பதால் தமிழர்களின் சிலவாக்குகள் சிதறிப்போனாலாலும் கொடுக்கப்படும் சமிஞ்ஞைகள் தெளிவாத்தானே உறுதியாகவுமல்லவா இருக்கப் போகிறது.
9.வாக்குக்கள் சிதறுவதனூடாக நிச்சய வெற்றி உறுதியற்று விடும். இரண்டாம் தெரிவுச் சுற்றில் சிறுபான்மை இன, மத வாக்குக்களே ஜனாதிபதியைத் தீர்மானிக்கப் போகிறது. இங்கே சிவாஜியின் பங்கு மிக மிகப்பெரியதே.
10.மக்களின் பாவங்களைச் சுமந்த யேசுபோல், தான் கறுப்பாடாகி தமிழ்மக்களை நிர்கதியாக விட்டுப்போன புலிகளுக்குத் தோள்கொடுத்து குச்சு விளக்கொன்றைக் கொண்டு வந்திருக்கிறார் சிவாஜி.
11.இருபெரும் சிங்களக்கட்சிகளுக்கு தமிழ்மக்கள் வாக்களிக்க வேண்டிய தேவையின்றி, போர்க்குற்றங்களை மன்னித்தோம் என்ற சமிஞ்ஞைகளின்றி, தமிழ்மக்களின் கருத்துக்களைத் தெளிவாக வைப்பதற்கு சிவாஜி களம் தந்திருக்கிறார்.
12.எமது அபிப்பிராயங்களை, அபிலாசைகளை சிங்களஅரசியல் சார்ந்துதான் செய்யவேண்டும் என்று இன்றை நிலையை சிவாஜி உடைத்திருக்கிறார்.
13.தமிழ்மக்கள் சிங்களத்தமிழ் அரசியல்வாதிகளால் மட்டுமல்ல போராட்டம் என்ற போர்வையில் இயக்கங்களாலும் ஏமாற்றப்பட்டே வந்திருக்கிறார்கள். இனியாவது சிந்தித்து சுயமாக முடிவெடுத்து இந்த அரசியல் களத்தில் ஊடகங்களின் உண்மை நிலை அறிந்து இம்முறையாவது சிவாஜி திறந்து வைத்த களத்தில் களமாடுவார்களா? சிவாஜிக்குத்தான் வோட்டுப் போடுங்கள் என்று கூறவில்லை. அங்குள்ள மக்களின் சரியான களமாடல் புலத்துத் தமிழர்களுக்கும், சர்வதேசத்துக்கும் சிங்களமக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் சரியான செய்தியைச் செல்லும்.
14.தேர்தலைப் பகிஸ்கரித்திருக்கலாம் என்கிறீர்களா? பகிஸ்கரிப்பதனால் மகிந்த, சரத்துக்கு ஒருபெரும் தலையிடி குறைந்துவிடும். கட்சியில் இன்று தொங்கும் தமிழ்குழுக்களின் மதிப்பும் மங்கிவிடும். ஆனால் தேர்தலைப் பகிஸ்கரிப்பதனால் தமிழர்களைப் பற்றிச் சிந்திக்க வேண்டிய அவசியம் சிங்களக்கட்சிகளுக்கு இருக்காது போய்விடும். சிங்கள மக்களின் வோட்டுக்களில் அவர்கள் தங்கியிருப்பதால் தேர்தலின் முன்னும் பின்னும் தமிழர்களின் குரல்களுக்குச் செவிமடுக்க வேண்டிய தேவை அற்றுவிடும். தமிழர்கள் பகிஸ்கரிப்பதனால் வோட்டுக்கள் எந்தப்பக்கமும் போய் எதிரியைப் பலப்படுத்தாது என்பதை சிங்கள இருபெருங்கட்சிகளும் உணர்ந்திருக்கும். அதனால் வெற்றியை நிர்ணயிப்பவர்கள் தனிச்சிங்களவர்களாகவே இருப்பார்கள். ஆதலால் தமது கவனத்தையும், ஜனாதிபதியான பின் தம் நன்றிக்கடனையும் சிங்கள மக்களுக்கே செய்வார்கள். தமிழர்கள் தேவையற்றவர்களாக எதிரிகளாவே தொடர்ந்து பார்க்கப்படுவார்கள். இன்றைய நிலையில் பேரினவாதக்கட்சிகளின் கவனம் தமிழர்களின் வோட்டுகளில் இருக்கிறது. முக்கியமாக யாழில் மகிந்தவிற்கு டக்லஸ் ஊடாக விழும் வாக்குக்கள் சிவாஜியால் தடுக்கப்படப் போகிறது. இது சிவாஜியின் உயிருக்கு உலைப்பாகவும் இருக்கலாம்.
15.அன்றைய போர், இன்றைய தேர்தல் பலாற்காரம் எல்லாம் மக்களுக்கு என்ன சொல்கிறது வெற்றிக்கு வழி பலாற்காரமே என்று. ஆதனால் மக்கள் தொடர்ந்து பலாற்காரத்தின் பாதையிலேயே பிரச்சனைகளுக்கு முடிவு காண முயல்வர். இது மனோவியல் உண்மை. இதன் தொடர்ச்சியான வளர்ச்சி இன்னுமொரு ஆயுதப் போராட்டமாக உருப்பெறும். 72ல் செகுவேரா, 76ல் நாங்கள். செகுவேராவின் ஆயுதப்போராட்டம் 70தின் கடைசிப்பகுதியில் முற்றாக முறியடிக்கப்பட்ட போதும் அந்த ஆயுதங்களை குறுகிய காலத்தில் நாம் எடுத்தோமல்லவா. இதைத் தவிர்க்க சரியான அரசியல் அடித்தளத்தை நிறுவுவது சிங்களவரசின் கடமையாகும்.
16.சிவாஜியின் கொள்கைகளோ, கோட்பாடுகளோ, கடந்தகால அரசியலோ சரி என்று நான் கருதவில்லை. சுயேட்சையாக ஒரு வேட்பாளர் நிற்பது தவறும் இல்லை என்கிறேன். சிவாஜி நிற்பதனால் வோட்டுப் போடுவர்கள் தொகை கூடப்போகிறது. சிங்களப் பெருங் கட்சிகளுக்கு விழும் வோட்டுக்கள் பிரியப்போகிறது. இதனால் 50வீதம் சாத்தியமற்று விடப்போகிறது. இப்போ இவ்விரு பேரினவாதக்கட்சிகளும் தமிழர்களைப் பற்றிச் சிந்திக்காமல் இருக்க முடியுமா?
17.சிவாஜி கடந்தகாலத்தில் என்ன அரசியலைக் கொண்டிருந்தார் என்பதை விட இன்றைய அரசியல் சூழ்நிலைதான் களத்தைத் தீர்மானிக்கிறது, தீர்மானிக்க வேண்டும்.
18.சிவாஜிக்கு விழப்போகும் வோட்டுக்கள் எமக்கு பல விடயங்களைச் சொல்லும்.

•தமிழ்மக்கள் போர் வெறியர்களை மன்னித்தார்களா?
•சிங்களப் பேரினவாத அரசியலுக்குப் பயந்து பணிகிறார்களா? விரும்பித்தான் இணைகிறார்களா?
•இராமன் ஆண்டாலும் சரி இராவணன் ஆண்டாலும் சரி என்று இருக்கப் போகிறார்களா?
•புலிகளின் போக்கை தொடர்ந்தும் ஆதரிக்கிறார்களா?
•தேசியமா? தமிழ்தேசியமா? தமிழர்களின் தெரிவு?
•எதிர்காலத்தில் தமிழர்களின் பாதை எப்படி வகுக்கப்படவேண்டும் என்பதற்கான ஆரம்பம்
•வட்டுக்கோட்டை தமிழ்ஈழமா இல்லையா என்ற புலம்பெயர் தமிழர்களுக்கான பதில்…
•பலபிரதமரைக் கொண்ட சுழற்சிமுறை ஜனாதிபதியாட்சி முறையை மக்கள் அறிவதற்கான வாய்ப்பு

பலகேள்விகளுக்கு விடை இத்தேர்தலில் இருக்கிறது. இதில் சிவாஜி பலிக்கடாவாகி ஒருகளம் திறக்கப்பட்டிருக்கிறதே தவிர தேர்தலின் பதில் என்ன என்பது தான் எமது எதிர்பார்ப்பு. ஈழத்துச் செய்திகளின்படி வன்னிமக்கள் மனங்களில் போரின் கொடுமையும், கடுமையும் இன்னும் விடவில்லை. தேர்தல் அவர்களுக்கு வந்தாலும் சரி, விட்டாலும் சரி என்ற நிலை. தேர்தலுக்கு வோட்டுப்போடப் போவதற்கே நல்ல உடுப்பில்லா நிலை. சில பின்தங்கிய தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் பகுதிகளில் அரசு சில உதவிகளை டக்லஸ் மூலம் செய்வதால் அவர்கள் மகிந்தவுக்கு வோட்டுப் போடுவார்கள் என்று தெரியவருகிறது. யாழ்பாணம் வெளிநாட்டுப்பணங்களின் களியாட்ட கூடமாய் ஆகிவிட்டபடியால் சாப்பிடமட்டும் வாய்திறக்கும் நிலையில் சிலர். கூத்தடிக்கும் நிலையில் பலர். வன்னிமக்கள் அழிவைப்பற்றி யாழ்மக்கள் ஆதங்கப்படுவதாகத் தெரியவில்லை. தமிழ்பகுதிகளில் மகிந்தவுக்கும் பலம் இருப்பது போன்று தெரிகிறது. சரத்தும், சிவாஜிலிங்கமும் அதிகசக்தியை அங்கே பயன்படுத்த வேண்டியிருக்கும். மட்டக்களப்பு துப்பாக்கி அமைச்சர்களால் வாய் பூட்டப்பட்டு இருக்கிறது. அங்கும் அடாவடி வாக்குகள் மகிந்தவின் பக்கமே இருப்பதற்கான சந்தர்பமே அதிகமுண்டு. சரத் தன்பலத்தை தென்பகுதியில் இருந்தே பெறவேண்டியிருப்பதால் சரத் ஜனாதிபதியாக வந்தாலும் தம்மினத்துக்கு மட்டுமே நன்றியுள்ளவராக இருக்கக்கூடிய நிலைதான் தென்படுகிறது. எந்தநேரமும் இன்நிலைகள் மாற்றப்படலாம். அரசியல் ஒரு சதுரங்கமே!.

என்கருத்தைச் சொல்லிவிட்டேன் உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.

-உங்கள் குலத்திலும் நிலத்திலும் ஒர் குலன்-

பாப்பரசரை மோதிய பெண்

25122009.jpgகிறிஸ்தவர் களின் தலைமை பீடமான வத்திக்கானில் உள்ள புனித பீட்டர் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி போப் ஆண்டவர் சிறப்பு பிரார்த்தனை வந்த நேரத்தில் யாரும் எதிர்பாராத வகையில் இளம் பெண் ஒருவர் தடுப்பு கம்பியை தாண்டி குதித்தார். பிறகு அதேவேகத்தில் போப் ஆண்டவர் மீதி மோதி அவர் அணிந்திருந்த அங்கியை பிடித்துக் கொண்டார். இதில் போப் ஆண்டவர் பெனடிக்ட் நிலை குலைந்து கீழே விழுந்தார்.

கண் இமைக்கும் நேரத்துக்குள் நடந்து விட்ட இந்த சம்பவத்தால் புனிதபீட்டர் ஆலயத்துக்குள் பரபரப்பு எற்பட்டது. பாதுகாவலர்கள் ஓடி வந்து அந்த பெண்ணை பிடித்துச் சென்றனர். கீழே விழுந்து கிடந்த போப் ஆண்டவரை தூக்கி விட்டனர். அதிர்ஷ்டவசமாக அவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. சம்பவம் நடந்த சில மணிநேரங்களில், பாப்பரசர் தமது வருடாந்த கிறிஸ்துமஸ் செய்தியை வழமை போல் வாசித்தார். போப் ஆண்டவர் மீது மோதிய பெண் சிவப்பு நிற மேலாடை அணிந்திருந்தார். அவரிடம் வத்திக்கான் சிட்டி பொலிஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த பெண் யார் என்ற விவரம் உடனடியாக வெளியிடப்படவில்லை. தற்போது அந்த பெண்மணியின் மனநலம் குறித்து மருத்துவ ஆய்வுகள் செய்யப்படுகின்றன.