ஆரம்ப காலங்களில் இருந்து நடந்தது என்னவென்றால் எமது மக்களுக்காக போராட புறப்பட்ட எல்லோரும் நாம் எதைநோக்கி புறப்பட்டோம் என்பதற்கு கொடுத்த நேரத்தைவிட உட்கட்சிப் போராட்டத்திற்கு கொடுத்த நேரம் அதிகம். இது அமிர் – இராசதுரை, உமா – பிரபா, உமா –மாணிக்கதாசன், ரட்ணா – சங்கர்ராஜி, வரதர் – டக்ளஸ், பொபி – தாஸ், பிரபா – கருணா, கருணா – பிள்ளையான், சம்பந்தர் – சங்கரி, உருத்திரகுமார் – நெடியவன் இப்படியே நீண்டு செல்கிறது.
இவர்கள்தான் இப்படியென்றால் இவர்கள் கட்சிகள் அதையும்மீறி TELO – சிறீTELO, EROS – EROS (பிரபா), EPRLF – EPRLF(நாபா) எனப் பிரிந்துள்ளது. இது EPRLF(நா), EPRLF(பா) என்று முடிந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. கொஞ்சம் நிறுத்துங்கள்.
தீர்வுவை தீர்வுவை இல்லாட்டி வோட்டு போட மாட்டோம் என்று 50 வருடமாக தீர்வு கேட்கிறோம் அவர்களும் தாற மாதிரித் தெரியவில்லை. நாங்களும் விட்டமாதிரித் தெரியவில்லை. தந்தை செல்வா தொடங்கி தனயன் பல்லி வரை தீர்வு கேட்கிறோம் என்னய்யா தீர்வு.. வட்டுக்கோட்டையா? ஈழமா? தமிழ்ஈழமா? நாடுகடந்த தமிழ் ஈழமா? தேசியமா? சுயநிர்ணய உரிமையா?……
இப்போது 50 வருடம் கழித்து இவ்வளவு உயிர்களையும் சொத்துக்களையும் பறிகொடுத்தபின் ஆரம்பித்த வட்டுக்கோட்டைக்கே வந்து நிற்கிறோம். வெட்கமாக இல்லையா? நோர்வேயில் வோட்டுப் போட்டால் நீர்வேலியில் வாழை குலை போடாது.
உண்மையான தீர்வு வந்த நேரத்தை நழுவ விட்டுவிட்டு இப்ப ‘தீர்வுவை தீர்வுவை. இல்லாட்டி வோட்டு போடமாட்டம்’ என்றால் எந்த பிரயோசனமும் இல்லை. ஒரு பெரிய நாட்டின் மத்தியஸ்தத்தோடு இலங்கை – இந்திய ஒப்பந்தம் வடக்கையும் கிழக்கையையும் தமிழ்த் தாயகமாக இணைத்து அதிகார பரவாலாக்கல் மூலம் என்று தீர்வு வந்ததே அதை கோட்டை விட்டுவிட்டு இப்ப வடக்கையும் கிழக்கையும் பிரித்து வைத்துக்கொண்டு ‘தீர்வுவை’ என்றால் என்ன நிலை.
சங்கரியார் மாதிரி கடிதம் எழுதி எழுதியா தீர்வு காணப்போகிறோம். இலங்கையில் இப்போது ஒரு காந்தியோ ஒரு நெல்சன் மண்டேலாவையோ ஒரு பிடல் கஸ்ரோவையோ தேடி கண்டுபிடிக்க முடியாது. கொஞ்சமாவது அப்படி இருந்தவர்களையும் தொலைச்சுப்போட்டு நிற்கிறோம். அப்படியாயின் இப்போது இருக்கிற பேய்க்குள்ளே கொஞ்சம் நல்ல பேயை கண்டுபிடிச்சு அவங்கள் மூலமாக (நல்ல பேய்கள் கூட்டு சேர்ந்தாலும் நல்லது.) அரசாங்கத்திடம் இருந்து அதிகாரப் பரவலாக்கல் மூலம் எமது மக்களுக்கு என்னென்ன செய்ய முடியுமோ அதை முதலில் செய்வோம். இதைவிட்டுவிட்டு அமெரிக்காவும் இந்தியாவும் எங்களோடை விளையாடுகின்றது என்று அதற்கு ஆராய்ச்சிக் கட்டுரை வேற எழுதுவானேன்.
ஏன் அமெரிக்காவும் இந்தியாவும் சீனாவோடும் சிங்கப்பூரோடும் விளையாடுகிறாங்கள் இல்லை. இருக்கிற நாங்கள் ஒழுங்காக இருந்தால் அவங்களும் ஒழுங்காக இருப்பாங்கள் தானே. முதலில் நாங்கள் தமிழர்கள் தான் எங்கள் நாடு இலங்கை என்பதை ஒத்துக்கொள்வோம்.
நாங்கள் முன்புவிட்ட பிழையே இதுதான். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் ‘மட்ச்’ நடந்தால் நாம் இந்தியாவின் பக்கம் எனென்றால் அவன் சிங்களவன். இந்தியாவுக்கும் தென்ஆபிரிக்காவிற்கும் ‘மட்ச்’ நடந்தால் நாங்கள் தென் ஆபிரிக்காவின் பக்கம் ஏனென்றால் வடக்கத்தையன் ஏமாத்திட்டான். நமீதாவும் நயன்தாராவும் ஆடினால் அழகாக ரசிப்போம். மாலினியும் ரூபகலாவும் வந்து ஆடினால் யாழ்ப்பாணத்தை கெடுக்கிறாங்கள் என்போம். முதலில் இந்தத் துவேசத்தை நிற்பாட்ட வேண்டும்.
வெளிநாட்டில் எங்கள் பிள்ளைகளுக்கு இரண்டாம் மொழி மூன்றாம் மொழி எல்லாம் படிப்பிப்போம் ஆனால் இலங்கையில் சிங்களம் படித்தால் குற்றமா? அவர்களும் தமிழ் படிக்கட்டும் நாங்களும் சிங்களம் படிப்போமே. இதை பள்ளிக்கூடங்களில் கட்டாயக்கல்வி என்று கொண்டுவந்தால்தான் என்ன குற்றம். இந்தியாவிலேயே தமிழ் அரசகரும மொழியல்ல. ஆனால் இலங்கையில் தமிழ் அரசகரும மொழி எனினும் இது சரியாக அமுல்படுத்தப் படவில்லை ஒத்துக் கொள்வோம்.
எல்லாவற்றுக்கும் விமர்சனம் செய்ய மட்டும்தான் விளைந்தவர்கள் என்றில்லாமல் நடந்த நன்மைகளையும் தட்டிக்கொடுத்து எழுதலாமே. என்னதான் சொன்னாலும் கடந்த ஆறு மாதமாக குண்டுவெடிப்பு இல்லை கரும்புலித் தாக்குதல் இல்லை. விமானம் வந்து குண்டு போடவில்லை. கிபீர் வந்து சனத்தை வெருட்டவில்லை. ரிவியில் கொடூரமான இறந்த கோரக் காட்சிகளைக் காணவில்லை இது தொடர வேண்டாமா. இந்த 6மாத காலத்திற்குள் அப்துல்கலாமாக வரக்கூடிய எத்தனை பிஞ்சுக் குழந்தைகள் தப்பியிருக்கிறார்கள் இது தொடர வேண்டாமா.
வடக்கு வழமைக்குத் திரும்புகிற யதார்த்தத்தை புரிந்து கொள்ளத்தானே வேணும். இதுதானே தொடர வேணும். இதோ நாடு சுபீட்சம் அடைந்துவிட்டது என்று சொல்லவில்லை. படிப்படியாகத்தானே சாதனைகளைப் படைக்க முடியும். இது நாங்கள் இங்கிருந்து செய்த சாதனை அல்ல. அவர்கள் செய்த சாதனை. அதைப் பாராட்டித்தானே ஆகவேண்டும். அதை விட்டுவிட்டு மகிந்தா அடிக்கிறான். கோத்தபாய சுருட்டுறான் டக்ளஸ் வெருட்டுறான் என்றதை மட்டும் எழுதாமல் மற்றைய பக்கத்தையும் எழுதலாமே. அதற்காக மகிந்தாவுக்கு ஆலவட்டமும் டக்ளஸ்ற்கு சாமரமும் வீசுவது என்பதல்ல அர்த்தம்.
ஜனநாயக சூழல் உருவாகி ஒழுங்கான எதிர்க்கட்சிகள் உருவானால் இவர்கள் பிழையென்றால் இவர்களையும் தூக்கி எறியும் அதற்கான சூழலை உருவாக்குமே. கையிலே தேன் வடிந்தால் யாரெண்டாலும் நக்கத்தான் பார்ப்பார்கள். அதை மட்டுமே எழுதாமல் அந்த மக்களும் நிம்மதியாக வாழ வழி எழுதுவமே.
சுவிஸ்சிற்கு வந்து சுயநிர்ணயம் கதைத்தால் சுன்னாகச் சந்தை கொடிகட்டிப் பறக்காது. வயலுக்குள் அவன் இறங்குவதற்கு தேவை நல்ல விதையும் உரமுமே. அதைக் கொடுங்கள். அவன் தானாக நிமிர்ந்து காட்டுவான்.
கிழிந்து போன வலையுடன் கடலுக்குப் போனால் சுறா பிடிக்கலாமா. அவன் சும்மாதானே திரும்புவான். வேண்டிக் கொடுங்கள் நல்ல வலையை அவன் சுறாவல்ல திமிங்கிலமும் கொண்டு வருவான். அவனுக்குத் தேவை உங்கள் தேசியமல்ல. உங்கள் தேசியமும் சுயநிர்ணய உரிமையையும் விடுத்து அவர்களை முதலில் வாழவிடுங்கள்.
அழகான இலங்கையை வழமான நாடாக மாத்துவோமே.
முன்னைய பதிவு : மானாட மயிலாடா : ஜெயராஜா (பிரான்ஸ் – தேசம்நெற் வாசகர்)