02

02

ஜனவரி 26ம் திகதி; நன்றிக் கடன் செலுத்தும் தினம்

நாட்டை பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து விடுதலை பெற்றுத்தந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நன்றிக்கடன் செலுத்துகின்ற தினமாக ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் நாளை கிழக்கு மாகாண முஸ்லிம்கள் கருதவேண்டுமென கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம். எஸ். சுபைர் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் சமூகம் நன்றியுள்ள சமூகம் என்பதை இத் தேர்தல் மூலம் வெளிக்காட்ட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். மஹிந்த சிந்தனை – மீள் எழுச்சித் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு ஆறுமுகத்தான் குடியிருப்பு ஹிதாயத் நகர் பிரதேச மக்களுக்கு வாழ்வாதாரத் தொழில் முயற்சிக்கான கடனுதவி வழங்கும் நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

எம். எஸ். சுபைர் மேலும் பேசுகையில்: கடந்த காலங்களில் முஸ்லிம் சமூக்தைச் சேர்ந்த பலர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டதையும் கப்பம் கொடுத்து வாழ்ந்த சூழ்நிலையினையும் எம்மால் மறந்துவிட முடியாது. அந்த வகையில் இவ்வாறான நிலைமையினை மாற்றியமைத்து பயங்கரவாதத்தை பூண்டோடு அழித்தவர் எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே.

தற்போது எங்கும் சுதந்திரமாக அச்சமின்றி பயணம் செய்யக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எனவே நாம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பிரதி உபகாரம் செய்ய வேண்டிய கடமை இருக்கிறது. முஸ்லிம் சமூகம் நன்றியுள்ளதொரு சமூகம் என்பதை வெளிக்காட்டவும் ஜனாதிபதிக்கு நன்றிக்கடன் செலுத்தும் சந்தர்ப்பமாகவும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலைப் பயன்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.