10

10

கிழக்கு லண்டன் வர்த்தகப் பிரமுகர் திலக் யாழில் ஹொட்டல் கட்ட ஒப்பந்தம்

Tilko_Property_Servicesகிழக்கு லண்டன் வர்த்தகப் பிரமுகர் திலக் என்று அறியப்பட்ட திலகராஜா தவராஜா யாழ் நகரின் மையப்பகுதியில் 340 பேர்ச் நிலத்தில் ஹொட்டல் அமைப்பதற்கான அனுமதியைப் பெற்றுள்ளார். Board of Investment – BOI of Sri lanka  திலகராஜா தவராஜா முகாமைத்துவ இயக்குனராக உள்ள Tilko Jaffna City Hotels (Private) Limitedக்கு அந்த அனுமதியை வழங்கி உள்ளது.BOI யின் சார்பில் அதன் தலைவர் தமிக்க பெரேரா கையொப்பமிட்டு அதற்கான அனுமதிப்பத்திரத்தை வழங்கி உள்ளார். திலகராஜா தவராஜா கிழக்கு லண்டனில் உள்ள ரில்கோ புரப்பட்டி சேர்வீஸ், பிரியா உணவகம் ஆகியவற்றின் உரைமையாளர். 

திலகராஜா தவராஜா கிழக்கு லண்டனில் எஸ்டேட் ஏஜென்ட்களை நிறுவி தனது வர்த்தகத்தை வளர்த்துக் கொண்டவர். தமிழீழ விடுதலைப் புலிகள் வட மாகாணத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த வேளையிலேயே முதலீடுகளை ஆரம்பித்தவர். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு குறிப்பிடத்தக்க நிதிப் பங்களிப்பை வழங்குபவர்கள் அவர்களுடைய நிதிப் பங்களிப்பிற்கு ஏற்ற வகையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்களைச் சந்தித்து அவர்களுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ள வாய்ப்பளிக்கப்பட்டது. அந்த வகையில் திலகராஜா தவராஜா தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைச் சந்தித்து புகைப்படமும் எடுத்துக் கொண்டவர். ‘அப்படத்தை தனது பொக்கற்றினுள் வைத்து சுற்றத்தவர்களுக்குக் காட்டுவதில் பெருமைப்பட்டுக் கொண்டவர்’ என அப்படத்தை பார்த்த அவருடைய நண்பர் ஒருவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

யாழ் நகரத்தின் மையத்தில் அமையவிருக்கும் இந்த உல்லாசவிடுதி 33 அறைகளையும் இரு கொட்டேஜ்களையும் கொண்டிருக்கும் என்றும் உல்லாசப் பயணிகளுக்கு சொகுசான தங்குமிடத்தை வழங்கும் என்றும் திலகராஜா தவராஜா தெரிவித்துள்ளார். இந்த உல்லாச விடுதியில் உணவகம், உடற்பயிற்சிக்கான இடம், மாநாடுகளை மேற்கொள்வதற்கான இடம் என்பனவும் அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சொகுசான தங்குமிடங்களுக்கு பற்றாக்குறையுள்ள நிலையில் இந்த உல்லாச விடுதி பெரும்பாலும் வர்த்தக சமூகத்தையும் உல்லாசப் பயணிகளையும் புலம்பெயர்ந்த தமிழர்களையும் கருத்தில் வைத்து அமைக்கப்படுவதாக திலகராஜா தவராஜா தெரிவித்துள்ளார்.

Tilko_Property_Servicesதமிழீழ விடுதலைப் புலிகளுடனான முதலீட்டில் ஆணிவேர் படத்திற்கான முதலிட்டையும் திலகராஜா தவராஜா செய்திருந்ததாகவும் ஆனால் அதில் அவரது நிறுவனப் பெயரைப் போட தமிழீழ விடுதலைப் புவிகள் விரும்பியிருக்கவில்லை என்றும் தெரியவருகிறது. அதேசமயம் மற்றுமொரு படத்தில் தயாரிப்பாளராக இவரது நிறுவனத்தை போடுவதற்கு சம்மதித்ததாகவும் அப்படம் பூர்த்தியாக முன்னரேயே தமிழீழ விடுதலைப் புலிகள் முள்ளிவாய்க்காலைச் சந்தித்ததாகவும் தெரியவருகின்றது.

ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த உல்லாச விடுதியின் நிர்மாண வேலைகள் 2010 பெப்ரவரியில் திறந்த வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வடக்கு கிழக்கில் முதலீடுகளுக்கான தேவை மிக அதிகமாக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ள திலகராஜா தவராஜா முதலீட்டாளர்களின் நம்பிக்கை உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய தமிழ் ஆவணக் காப்பகமும் ஆய்வு நிறுவனமும் – ஓர் அறிமுகம் : என் செல்வராஜா

ETDRC_Logoஐரோப்பிய தமிழ் ஆவணக் காப்பகமும் ஆய்வு நிறுவனமும்
(European Tamil Documentation and Research Centre – ETDRC)

தமிழர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் வாழ்ந்த போதும் கணிசமான தொகையில் தமிழர்கள் பரந்துள்ள நாடுகள்:
01 – இந்தியா 02 – இலங்கை 03 – மலேசியா 04 – சிங்கப்பூர் 05 – அவுஸ்திரேலியா 06 – தென் ஆபிரிக்கா 07 – பிரித்தானியா 08 – பிரான்ஸ் 09 – ஜேர்மனி 10 – சுவிஸ்லாந்து 11 – இத்தாலி 12 – நோர்வே 13 – சுவிடன் 15 – அமெரிக்கா 14 – கனடா

புலம்பெயர் தமிழ்ச் சமூகத்திற்கான அறிவியல் வளங்கள்:
1. பல்கலைக் கழகம்
 1.1 SOAS : School of Oriental and African Studies
 1.2 ஒக்ஸ்போர்ட் – கேம்பிரிட்ஜ் நூலகங்களின் தெற்காசியப் பிரிவு

2. பொது நூலகங்கள்
 2.1 பிரித்தானிய நூலகம் (British Library)
 2.2 லண்டன் உள்ளுராட்சி சபை நூலகங்கள்

3. சிறப்பு நூலகங்கள்
 3.1 தமிழர் தகவல் நடுவம் – லண்டன் (அரசியல் மற்றும் சமூகவியல் துறை)
 3.2 உலகத் தமிழர் நூலகம் (ஒன்ராரியோ, கனடா)

4. தனியார் நூல் சேகரிப்புகள்
 4.1 முல்லை அமுதனின் சேகரிப்புகள்
 4.2 என் செல்வராஜாவின் சேகரிப்புகள்
 4.3 இன்னும் பலர் …..

தமிழ்ச் சமூகத்தின் அனைத்துத் தகவல் வளங்களையும் இந்த நூலகங்கள் கொண்டிருக்கின்றனவா ? 
தமிழ்ச் சமூகத்திற்கான இந்த அறிவியல் வளங்களை ஒரு ஆய்வாளர் எளிதில் பயன்படுத்தும் வாய்ப்பு உள்ளதா ?
தமிழரல்லாத ஒரு ஆய்வாளரால் தமிழ்ச் சமூகம் சார்ந்த ஒரு ஆய்வை மேற்கொள்ள இந்நூலகங்கள் போதிய பின்புலத்தை கொண்டுள்ளனவா?

இல்லை!!!

இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட புலம்பெயர்ந்த தமிழரின் சமூக, அரசியல், கலாச்சார, பொருளாதார, வரலாற்று ஆய்வுகளை மேற்கொள்ள முன்வரும் எந்தவொரு தமிழ் அல்லது தமிழரல்லாத ஆய்வாளருக்கும் தேவையான தகவல் வளங்களையும் அத்தகவல்களைப் பெறுவதற்கான வழிகாட்டலையும் வழங்குவதற்கு தமிழர்களின் வாழ்வியல் பின்புலத்தில் அமைக்கப்பட்ட அறிவுசார் தகவல் களஞ்சியங்களே பொருத்தமானவையாகும்.

இந்த எண்ணக்கருவில் பிறந்ததே ஐரோப்பிய தமிழ் ஆவணக் காப்பகமும் ஆய்வு நிறுவனமும் (European Tamil Documentation and Research Centre – ETDRC) ஆகும்.

நோக்கங்கள்:

* தமிழ், தமிழர் தொடர்பான நூல்களையும் ஆவணங்களையும் ஆய்வேடுகளையும் ஒளி, ஒலிப் பதிவுகளையும் சேகரித்து பாதுகாத்தல்.

* தமிழ், தமிழர் தொடர்பான ஆய்வுகளுக்குத் தேவையான மூலாதாரங்களை அடையாளம் கண்டு ஆய்வாளருக்கு வழிகாட்டுதல்.

* இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் தமிழர்களின் நூல்களுக்கான காப்பகமாக செயற்படுதல்.
 
* சர்வதேச ஆய்வு நிறுவனங்களுடன் தொடர்பினை மேற்கொண்டு இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் புலம்பெயர்ந்த தமிழர்கள் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ள ஊக்குவித்தல்.

* சர்வதேச பல்கலைக்கழக நூலகங்களின் தமிழியல் பிரிவினருடன் தொடர்பினை ஏற்படுத்தி நூலக வளங்களைப் பகிர்ந்துகொள்ளல்.

செயற்பாடுகள்:

இதன் அடிப்படையில்
* ஐரோப்பிய தமிழ் ஆவணக் காப்பகமும் ஆய்வு நிறுவனமும் (European Tamil Documentation and Research Centre – ETDRC)  என்ற அறிவியல் நிறுவனம் Charity Commissionஇன் கீழ் பதிவு செய்யப்பட்டு உள்ளது. பதிவிலக்கம் : 1127365

* தற்போது ETDRC தற்காலிகமாக 48 Hallwicks Road, Luton, LU2 9BHஇல் இயங்குகிறது.

* நூலகவியலாளர் என் செல்வராஜாவின் தனிப்பட்ட சேகரிப்பான 3000 நூல்களுடன் ETDRC தற்போது இயங்குகிறது. நிர்வாகக் கட்டட வசதி ஏற்பட்டதும் மேலும் பலர் தங்களின் தனிப்பட்ட சேகரிப்புகளை வழங்குவதற்கு முன் வந்து உள்ளனர்.

* மட்டுப்படுத்தப்பட்ட வளங்களுடன் தற்போது ETDRCஇன் சேவைகள் ஆய்வாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

எம்முள் எழும் சில வினாக்கள்:

இன்றைய போர்க்காலச் சூழலில் இது அவசியமா?
முன் எப்போதும் இல்லாத அளவில் தமிழர்களின் அடையாளம் இப்பொழுது கேள்விக்கு உள்ளாக்கப்பட்டு உள்ளது. அதனால் தமிழர் பற்றிய வாழ்வியல் மற்றும் வரலாற்றுப் பதிவுகளை அரசியல் மற்றும் கொள்கை முரண்பாடுகளுக்கு அப்பால் சேகரித்து பாதுகாப்பதும், அதை தமிழர்களும் தமிழர்கள் அல்லாதவர்களும் அறிவியல் சார்ந்து ஆய்வு செய்ய வேண்டிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது இன்றைய காலத்தின் கட்டாயமாகும்.

தமிழர்களுக்கான ஆவணக் காப்பகம் தாயக மண்ணில் அல்லவா உருவாக்கப்பட வேண்டும். ஐரோப்பாவில் எதற்கு?
1981ல் யாழ்ப்பாண நூலகமும் பின்னர் ஹாட்லி கல்லூரி நூலகமும் எரியூட்டப்பட்டதன் பின்னர் அங்குள்ள அரசியல் சூழ்நிலையில் தமிழர்களுக்கான ஒரு ஆவணக் காப்பகத்தை இலங்கைக்கு வெளியே உருவாக்குவது அவசியமானது.

தாயகத்தில் ஏற்கனவே தேசிய நூலகமும் பிராந்திய பொது நூலகங்களும் இயங்கி வந்த போதிலும் வெளிநாட்டு ஆய்வாளர்களுக்கு அவற்றை இலகுவாகப் பயன்படுத்த எவ்வித வசதியும் இல்லை.

3.2 மில்லியன் இலங்கைத் தமிழர்களில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் புலம்பெயர்ந்து மேற்கு நாடுகளில் வாழ்கிறார்கள். இவர்கள் பற்றிதும் இவர்களின் அறிவியல் தேவைகளுக்குமான ஆவணக்காப்பகமும் ஆய்வு நிறுவனமும் மேற்கு நாடொன்றில் அவசியம். அது உலகின் தலைநகரான லண்டனில் அமைவது மிகவும் பொருத்தமானது.

புலம்பெயர்ந்த தமிழர்களின் இரண்டாம் தலைமுறைக்கு தமிழ் தெரியாத நிலையில் இந்த தமிழ் நூலகம் அவசியமா?
முதலில் ETDRC ஒரு பொதுநூலகம் அல்ல. அது தமிழ் நூலகமும் அல்ல. தமிழர்கள் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ளும் தமிழர்களுக்கும் தமிழர் அல்லாதவர்களுக்குமான ஒரு ஆய்வு நிறுவனம்.

இரண்டாம் தலைமுறையினருக்கு கல்வி மொழியாகத் தமிழ் இல்லை. எதிர்காலத்தில் தமது வேர்களை தேட முற்படும் இத்தலைமுறையினருக்கும் இவ்வாறான காப்பகங்கள் அவசியம்.

புலம்பெயர்ந்த தமிழர்களிடையே இந்த அறிவியல் நோக்கம் கொண்ட அமைப்பு தழைத்து வளர்வதற்கு உங்கள் உதவி முக்கியமானது.

சிறுதுளி. பெரு வெள்ளம்!

நிறுவனத்தின் சேகரிப்பினை வளர்த்தெடுக்க உங்களால் முடிந்த வரையில் நூல்களையும் ஆவணங்களையும் வழங்குங்கள்!
மாதம் ஒர் சிறு தொகையை ஐரோப்பிய தமிழ் ஆவணக்காப்பகத்திற்கு உங்கள் வங்கிக் கணக்கினூடாக சென்றடைவதற்கான ஒர் ஒழுங்கை ஏற்படுத்துங்கள்!

Bank  :  Abbey
Account Name :  ETDRC
Sort Code :  09-01-27
Account No :  24459051

நிறுவனத்தின் நிதிவளம் செழிப்பின் தனியானதொரு கட்டிடத்தில் விரைவிலேயே செயற்பட வாய்ப்பு ஏற்படும்.

எதிர்காலத்தில் உங்கள் சந்ததியினர் எமது தமிழ் வேர்கள் பற்றி அறிய வேண்டாமா ?
புலம்பெயர் நாடுகளில் வாழும் எமது தமிழர் வாழ்வியல், வரலாறு, கலாச்சாரம் பற்றிய அறிவியல் தகவல்களை பன்னாட்டவரும் அறிய வழிவகை செய்ய வேண்டாமா ?
முடிவு உங்கள் கைகளில்.
சிந்தியுங்கள்! செயற்படுங்கள்!

நன்றி!!!

._._._._._._.

ஐரோப்பியத் தமிழ் ஆய்வு நிறுவனமும் ஆவணக்காப்பகமும் நடாத்தும் விருந்துபசார நிகழ்வு டிசம்பர் 12ல் நடைபெறவுள்ளது. ஐரோப்பியத் தமிழ் ஆய்வு நிறுவனத்தினதும் ஆவணக் காப்பகத்தினதும் வளர்ச்சிக்கான நிதியைத் திரட்டும் வகையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வுக்கான உங்கள் ஆதரவை வழங்குவதன் மூலம் ஐரோப்பியத் தமிழ் ஆய்வு நிறுவனத்திற்கும் ஆவணக் காப்பகத்திற்கும் காத்திரமான பங்களிப்பை வழங்க முடியும்.

நிகழ்வு விபரம்:
Doors Open – 6:30 pm till late

32 Raliway Approach, Harrow Middlesex HA3 5AA

Contact: N Selvarajah : 07817 402 704 or 01582 703 786

 

மனிக்பாம், புதுக்குடியிருப்புப் பகுதிகளுக்கு ஜனாதிபதி நேற்று திடீர் விஜயம்

manik.jpgஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று முல்லைத்தீவு புதுக்குடியிருப்புக்கும் வவுனியா மனிக்பாம் நிவாரணக் கிராமங்களுக்கும் திடீர் விஜயம் மேற்கொண்டார். இந்தப் பிரதேசங்களுக்கு விஜயம் செய்த அவர் நிலைமைகளைப் பார்வையிட்டார்.

மனிக்பாம் நிவாரணக் கிராமங்களுக்குச் சென்ற ஜனாதிபதி, அங்கு மக்களோடு தமிழில் உரையாடி குறைநிறைகளைக் கேட்டறிந்து கொண்டார். இங்கு கருத்துத் தெரிவித்த அவர், “ஜனவரி 31 ஆம் திகதிக்கு முன்னர் நீங்கள் சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தப்பட்டு விடுவீர்கள்” என்று கூறினார்.

புதுக்குடியிருப்பில் மனிதாபிமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட படையி னரைச் சந்தித்த ஜனாதிபதி, யுத்தம் முடிவுற்றதை நினைவு கூரும் வகை யில் நினைவுத் தூபியொன்றையும் அங்குரார்ப்பணம் செய்து வைத்தார். இத் திடீர் விஜயம் நேற்றுக் காலை இடம்பெற்றதுடன் ஜனாதிபதியுடன் பாதுகாப்பமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ, முப்படைத்தளபதிகள் மற்றும் பாதுகாப்புத்துறையின் முக்கிய உயரதிகாரிகளும் உடன் சென்றிருந்தனர்.

புதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் மனிதாபிமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட படையினரைச் சந்தித்து அவர்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி, மீட்கப்பட்டுள்ள தாய் நாட்டைக் கட்டியெழுப்பும் செயற் பாடுகளில் படையினரின் முழுமையான ஒத்துழைப்புத் தமக்குக் கிட்டுமென நம்பிக்கை தெரிவித்தார்.

ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது:- நாட்டை ஐக்கியப்படுத்தும் நடவடிக்கைகளில் முதற்கட்டமாக படையினரினதும் நாட்டு மக்களினதும் மன உறுதியைக் கட்டியெழுப்புவதே எமது பணியாகியது.

இதற்கிணங்க படையினர் சுதந்திர மனப்பாங்குடனும் துணிவுடனும் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு அரசாங்கத்தால் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்க முடிந்துள்ளது.

படையினரின் பிள்ளைகளுக்காக பாடசாலைகளை நிர்மாணிப்பது படையினருக்கான வீடமைப்புத் திட்டம் உட்பட படையினரின் எதிர்காலம், அவர்களது பிள்ளைகளின் எதிர்காலம் தொடர்பாக சிந்தித்து முழு நாட்டையும் வெற்றியின் பாதையில் இட்டுச் செல்லும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டது என்றார்.

பயங்கரவாத நடவடிக்கைகளினால் இடம்பெயர்ந்து நிவாரண கிராமங்களில் தங்கியுள்ள அனைத்து மக்களும் எதிர்வரும் ஜனவரி 31ஆம் திகதிக்குள் அவர்களது சொந்த இடங்களில் வசிக்கும் வாய்ப்பு ஏற்படுத்தப்படுவதுடன் அவ்வாறு மீள் குடியமர்த்தப்படுவோருக்கு வழங்கப்படும் 25 ஆயிரம் ரூபா நிதியுதவி 50 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்படும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

மனிக்பாமிற்கு விஜயம் செய்த அவர் தமிழில் உரையாற்றினார். ஜனாதிபதி அங்கு பேசியபோது மேலும் கூறியதாவது :-

இந்த நாட்டில் வாழும் அனைவரையும் பாதுகாப்பது எனது பொறுப்பு. அது எனது கடமையுமாகும். அதை நான் நிச்சயமாக நிறைவேற்றுவேன். இந்த நாட்டில் வசிக்கும் அனைவருக்கும் பயமின்றி, சந்தேகமின்றி சுதந்திரமாக வசிக்கமுடியும். அனைவரும் சம உரிமையுடன் வாழ வேண்டும். துப்பாக்கிக் கலாசாரம் மீண்டும் தலை தூக்காதவாறு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பல வருடங்களாக மேற் கொள்ளப்படாதிருந்த அபிவிருத்தி செயற் பாடுகள் வடக்கு வசந்தத்தின் மூலம் இப் போது நடைமுறைப்படுத்தப்படுகின்றன. உங்கள் அனைவருக்கும் வீட்டு வசதி உட்பட அனைத்து வசதிகளும் கிடைக்கும். உங்கள் பிள்ளைகளே உங்கள் சொத்து. அவர்கள் நன்றாக படிக்க வேண்டும். எதிர் காலத்தில் இந்த நாட்டில் அவர்கள் முக்கிய பதவிகளை வகிக்க வேண்டும் என்றார்.

நிவாரண கிராமத்தில் உள்ள மாண வர்களுக்காக 23 ஆயிரம் தொகுதி பாடசாலை உபகரணங்களை ஜனாதிபதி பகிர்ந்தளித்ததுடன் நிவாரண கிராமத்தில் இருந்தவர்களுடன் சுமுகமாக உரையாடினார்.

க. பொ. த. (சா. தர) பரீட்சார்த்திகளுக்கு 3 இலட்சம் அடையாள அட்டைகள் விநியோகம்

schools_stu.jpgஇவ்வருடம் நடைபெறவுள்ள க. பொ. த. (சா.தர) பரீட்சைக்கு தோற்றும் பரீட்சார்த்திகளில் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்துள்ளவர்களுக்கான தேசிய அடையாள அட்டைகள் விநியோக்கப்பட்டு விட்டதாக ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஏ. பி. தர்மதாஸ தெரிவித்துள்ளார். இதன்படி நேற்று முன்தினம் (08) வரை 3,10,405 தேசிய அடையாள அட்டைகள் பரீட்சார்த்திகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி தேர்தலுக்கு மேலும் இருவர் கட்டுப்பணம்

vote.jpgஜனாதி பதித் தேர்தலில் போட்டியிடு வதற்காக நேற்றும் ஒரு அரசியல் கட்சியும், சுயேச்சை வேட்பாளரும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

இதன்படி ஜனவரி மாதம் 26 ஆம் திகதி நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவென ஒன்பது அரசியல் கட்சிகளும், ஒரு சுயேச்சை வேட்பாளரும் நேற்று வரையும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

க. பொ. த (சா/த) பரீட்சை நாளை: ஏ எச்1என்1 பீடிக்கப்பட்ட மாணவர் பரீட்சைக்கு தோற்ற தடை

influenza-a.jpgக.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் நாளை 11 ஆம் திகதி ஆரம்ப மாகும்போது ஏ எச்1என்1 வைரஸ் பீடிக்கப்பட்ட பரீட்சார்த்திகள் இருப் பின் அவர்களுக்கு பரீட்சைக்குத் தோற்ற இடமளிக்கப்படமாட்டாது என பரீட்சைகள் ஆணையாளர் அனுர எதிரிசிங்க தெரிவித்தார்.

எனினும், இன்றுவரை அவ்வாறு எந்தவொரு மாணவரும் ஏ. எச்1என்1 வைரஸ் பாதிக்கப்பட்டிருப்பதாக தனக்கு அறிவிக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

மேற்படி வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களால் பரீட்சைக்குத் தோற்ற முடியாமல் போகும் அத்து டன் இதனால் ஏனைய பரீட்சார்த்திக்கும் பரவ வாய்ப்புண்டு என்பதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், இவ்வைரஸால் பீடிக்கப்பட்டுள்ள பரீட்சார்த்திகள் பற்றிய எவ்வித அறிவித்தல்களும் பரீட்சைத் திணைக்களத்துக்கோ வலய கல்விப் பணிப்பாளருக்கோ அறியக்கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

போருக்கான நோபல் பரிசு கொ(கெ)டுப்பு! : நோர்வே நக்கீரா

obama-nobel.jpgசுவீடன் நாட்டில் அல்பிரெட் நோபல் என்பவர் 21.10.1833இல் இமானுவேல் அல்பிரட்டுக்கு மூன்றாவது பிள்ளையாக பிறந்தார். இவருக்கு தந்தையை அதிகம் பிடிக்காது. தாயின் செல்லப் பிள்ளையாகவே வளர்ந்தார். இரசாயனவியலில் திறமைகளைக் கொண்டு இவரே டைனமைட்டை கண்டுபிடித்தார். இதனூடாக பெருந்தொகையான செல்வம் குவிந்தது. அப்பணத்தின் ஒருபகுதி சுவீடனில் இரசாயனவியல், பௌதீகவியல் போன்றவற்றுக்கான நோபல் பரிசாகக் கொடுக்கப்பட்டாலும் சமாதானத்துக்கான பரிசை நோர்வே நாடுதான் கொடுக்கவேண்டும் என அல்பிரட் நோபல் அவர்கள் முன்மொழிந்திருந்தார். நோவேயிய ஆட்சிமன்றத்தால் தெரிவு செய்யப்படும் குழுவே சமாதானத்துக்கான நோபல் பரிசை யாருக்குக் கொடுப்பது என்பதைத் தீர்மானிக்கும்.

ஒபாமாவுக்கு எதற்கு?
2009ம் ஆண்டுக்கான 108 ஆவது சமாதானப்பரிசை ஏன் அமெரிக்க அதிபர் பராக் உபாமாவுக்கு கொடுக்கிறோம் என்பதை நோபல்குழு நோகாமலே சொன்னது. அதாவது சர்வதேச ரீதியாக இராஜதந்திரத்தைப் பலப்படுத்தியதற்காகவும் மனித ஒத்துழைப்பை ஊக்குவித்ததற்காகவுமே இப்பரிசு இவ்வருடம் வழங்கப்படுகிறது. முக்கியமாக அணுவாயுதமற்ற உலகை உருவாக்குவதற்கான ஒபாமாவின் நோக்கமும் இதில் அடங்குகிறது.

இப்பரிசுக்கான முன்மொழிவைக் கேட்டதுமே பலர் அதிர்வடைந்தனர். இது காலமுதிர்வுக்கு முன்னரே கொடுத்து விட்டார்கள் ஒபாமா வாக்களித்தபடி எதையுமே செய்யவில்லை என்று பல நோவேயிய மக்கள் குழம்பிக் கொண்டனர்.

ஒபாமா தகுதியுடையவரா?
எதையும் மிகச்சுலபமாகச் சொல்லலாம் ஆனால் செய்வது என்பதுதான் கடினமானது. சர்வேதேச ரீதியில் இராஜதந்திரத்தை ஏற்படுத்தினார் என்றால் எங்கே, எப்போ என்பதற்கான போதிய தகுந்த ஆதாரங்கள் கிடையாது. கூடிப்பேசலாம் ஆனால் நடந்தது என்ன? ஈராக்போர் முடிந்ததா? ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவுகிறதா? புஸ்சினால் தொடக்கி வைக்கப்பட்டு சர்வதேச சித்திரவதை முகாம் முற்றாக செயலிழந்ததா? சிலவேளை இவரது இராஜதந்திரம் இலங்கையில் பலித்திருக்கிறது எனலாம். கடைசி நேரத்தில் புலிகளுக்குக் கைகொடுப்பேன் என்று கைவிட்டது ஒரு நல்ல இராஜதந்திரி தானே. இதுபற்றி நோர்வே உயர்மட்ட இராஜதந்திரிகள் தான் நன்கறிந்திருப்பார்கள். இவர்கள் ஒபாமாவுக்கு பரிசளிப்பது ஆச்சரியத்துக்குரியது அல்லவே. இந்தப்பரிசு தனக்குத் தகுதியுடையதா? இல்லையா என்பதை உணரமுடியாத ஒபாமாவுக்கு இது பரிசல்ல, பரிசுகெடுப்பாகும். தன் சொந்தநாட்டிலே தான் கொடுத்த வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்த முடியாமல் ஆடிக்கொண்டிருக்கிறார். இவரது சுகாதார மீழ்கட்டமைப்பு ஊர்ந்து கொண்டிருக்கிறது.

ஒபாமா இப்பரிசை மறுத்துரைத்து தான் சொன்னதை, சமாதானத்துக்கான பங்களிப்பை செய்த பின்பு எனக்கு இந்த சமாதானப்பரிசைத் தாருங்கள் என்று கூறியிருந்தால் ஒபாமா மதிப்புக்கும், மரியாதைக்கும் உரியவரே. நோபல் குழுவாவது தன்பிழைகளை உணர்ந்திருக்கும். தான் கொடுத்த வாக்குகளை நிறைவேற்ற முடியாது என்பதை அவர் உணர்ந்திருக்க வேண்டும், இதனால் கடைசிவரையும் கிடைக்க முடியாத ஒன்றை எப்படியாவது எடுத்து விடவேண்டும் என்று எண்ணினாரோ என்னவோ?

அல்பிரெட் நோபலின் சமாதானப் பரிசுக்கான முன்மொழிவில் முக்கியமானது இராணுவம், இராணுவத் தளபாடங்கள், இராணுவப்பலக் குறைப்பு என்பது. இதை ஒபாமா செய்தாரா? ஈராக்கில் இருந்து தன் இராணுவத்தை வெளியில் எடுப்பேன் என உறுதியளித்தவர் இன்னும் அதற்காக பெருமுயற்சியை செய்யவில்லை, மாறாக 15 000 அமெரிக்கப் போர்வீரர்களை நவீன இராணுவத் தளபாடங்களுடன் அனுப்பி வைத்துவிட்டு நோர்வேக்கு நோபல்பரிசு வாங்க வருகிறார். இவர் எந்தவிதத்திலும் மற்ற அரசியல்வாதிகளில் இருந்து வித்தியாசப்படவில்லை. இது பரிசளிப்பா? பரிசு அழிப்பா? பரிசு கெடுப்பா? இப் பரிசுகெட்ட பரிசைவாங்க ஒரு பரிசளிப்பு விழாவா?

ஒரு சமாதானத்துக்கான பரிசை வாங்கவரும் ஒருவரின் பாதுகாப்புக்காக பலமில்லியின் குரோண்கள் பாவிக்கப்படுகிறது. தெருவிலே கிடக்கும் அள்ளுறுகளின் வாய்மூடிகள் உலோகங்களால் ஒட்டப்படுகிறது. பலமுக்கிய வீதிகள் போக்குவரத்துக்குத் தடைசெய்யப் படுகின்றன. ஒஸ்லோவின் முக்கிய இடங்களில் நுழைவனுமதி மறுக்கப்படுகிறது. இவர் தங்கியிருக்கும் கிராண் கொட்டல் முற்றாக வெற்றிடமாக்கப்பட்டு ஒபாமாவுடன் வந்திருப்பவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கிறது. கொட்டலுக்கு வெளியே ஒபாமா வந்து கையசைக்கும் வேளை யாரும் சுடாதிருக்க குண்டுகள் துளைக்கா கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளது. ஒபாமாவின் பாதுகாப்புக்காக அமெரிக்காவிலிருந்து தனிவிமானத்தில் எடுத்து வரப்படுகிறது லீமுசீன் எனும் மோட்டார் வண்டி. இந்த மோட்டார் வண்டியை எந்தச் சன்னமும் துளைக்காது. குண்டுகள் உடைக்காது. 13மிமீ தடிப்புடைய சிறப்புத் தயாரிப்புக் கார் கண்ணாடியை பசுக்காவே நொருக்காது. இப்படியான பாதுகாப்புகளுடன் வரும் ஒபாமாவுக்கு ஏன் மில்லியன் பணச்செலவில் பாதுகாப்பு. பரிசை எல்லாம் வெள்ளை மாளிகையில் கொடுத்துவிட்டு செலவுசெய்யும் பணத்தைப் பிரயோசனமாக வறியநாடுகளின் வளர்ச்சிக்கோ ஏன் அமெரிக்காவில் வறுமைக் கோட்டின் கீழ்வாழும் கறுப்பின மக்களின் தொழில் வாய்ப்புக்கோ பயன்படுத்தியிருக்கலாமே.

இவர் வந்து இறங்கும் விமானநிலையத்தில் இருந்து ஒஸ்லோ வரை இராணுவப்பாதுகாப்பு. இப்பகுதிகளில் அசையும் கதலிகள் (இராடார்கள்) இராணுவ வாகனங்களில் பூட்டப்பட்டு தயார் நிலையில் உள்ளது. எந்த விமானமும் எல்லைக்குள் நுழையுமுன்னரே முன்னரே சுட்டுவிழுத்தக் கூடியவாறு பீரங்கிகள் மூக்கை நீட்டிக்கொண்டு நிற்கின்றன. இவ்வளவும் எதற்கு? சமாதானப்பரிசு பெறவரும் ஒபாமாவால் நோர்வே போர்கோலம் பூண்டிருக்கிறது எனலாம்.

இராணுவத்தையோ துப்பாக்கிகளையோ தெருவில் காணாத எமது பிள்ளைகள் பயப்படுகின்றனர். இப்படியான இராணுவ பொலிஸ் நடமாட்டத்தைக் கண்டு நோபல் பரிசே அழுகிறது, நாறுகிறது. சமாதானப் பரிசுக்கே போர் பயம் என்றால் சமாதானம் எங்கே? இது பரிசா? பரிசு கெடுப்பா? ஒருவனின் வருகைக்காக நாடே போர் வேடம் தாங்குகிறது என்றால் அவன் போரைக் கொண்டுவாறான் என்றுதானே அர்த்தம். இந்தப் பரிசு கெடுப்பை எப்படி யாரிடம் சொல்லுவது. பரிசைக் கொடுத்து சமாதானத்தைப் பரிசு கெடுக்கிறார்களே.

Related News: அமெரிக்க ஜனாதிபதிக்கு நோபல் பரிசு ? : என் எஸ் குமரன்

‘தேசம்நெற்’ இணையத் தடங்கல்

thesamlogo892.jpgதேசம்நெற் சில மணி நேரங்களாக இயங்காததற்கு எமது மனவருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். ‘தேசம்நெற்’ இன் இணையத்துக்கான சேவைகளை வழங்கும் நிறுவனத்திற்கு ஆண்டுச் சந்தா வழங்க ஏற்பட்ட தாமதத்தால் தேசம்நெற் இணையம் சில மணி நேரங்களாக இயங்கவில்லை. இது தொடர்பாக எம்முடன் பல வழிகளிலும் தொடர்புகொண்ட தேசம்நெற் நண்பர்களுக்கு எமது நன்றிகள். எதிர்காலத்தில் இவ்வாறான தடங்கள்கள் ஏற்படாமலிருக்க முயற்சி செய்கின்றோம்.

– தேசம்நெற் நிர்வாகம்.

சர்வதேச மனித உரிமைகள் தினம்.- International Human Rights Day : புன்னியாமீன்

every-human-has-rightsசர்வதேச மனித உரிமைகள் தினம் ஆண்டு தோறும் டிசம்பர் 10ஆம் திகதி அனுஸ்டிக்கப்படுகிறது. இரண்டாம் உலகமகா யுத்தம் நடைபெற்றபோது நடந்த சொத்திழப்புக்கள்,  மனிதப்படுகொலைகள், அட்டுழியங்கள் மற்றும் மனிதப்பேரழிவுகளின் பின்னர் தோன்றிய ஐக்கிய நாடுகள் சபையால் பிரகடனப்படுத்தப்பட்டதே இந்த மனித உரிமைப் பிரகடனமாகும்.

1945 -ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்டது. . ஐக்கிய நாடுகள் சபையின் உருவாக்கத்தையடுத்து 1946 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் ‘மனித உரிமை ஆணைக் குழு” உதயமாகியது. ஐம்பத்து மூன்று அங்கத்துவ நாடுகளைக் கொண்ட இம் மனித உரிமை ஆணைக்குழு, தனது முதல் வேலைத்திட்டமாக ‘சர்வதேச மனித உரிமைப் பிரகடனத்தை உருவாக்குவதற்கு அமெரிக்க ஜனாதிபதியின் மனைவி எலினா ரூஸ்வெல்ட் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. ஐம்பத்து மூன்று அங்கத்துவ நாடுகளின் பிரதிநிதிகளைக் கொண்ட இந்த குழுவின் சிபாரிசின் படி 30 பிரிவுகளின் கீழ் மனித உரிமைகள் இனங்காணப்பட்டு அனைத்துலக மனித உரிமைகள் (Universal Declaration of Human Rights) பிரகடனம்  ஐக்கிய நாடுகள் சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டது. டிசம்பர் 10, 1948-ஆம் ஆண்டு பிரான்ஸின் தலைநகரான பாரிஸில் உள்ள “பலேடு சாயிலோற்’ என்ற மண்டபத்தில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் இந்தப் பிரகடனத்திற்கு 58 நாடுகள் அங்கீகாரம் வழங்கியது.

இந்த புனித நாள் 1950 -ஆம் ஆண்டிலிருந்து டிசம்பர் 10 ஆம் திகதி ‘சர்வதேச மனித உரிமைகள் தினமாக” (International Human Rights Day) கொண்டாடப்பட்டு வருகிறது. ‘சகல மனிதப் பிரஜைகளும் சமத்துவமானதும், விட்டுக் கொடுக்க முடியாததுமான உரிமைகள் மற்றும் அடிப்படைச் சுதந்திரங்களுடனேயே பிறக்கின்றனர்” என்ற உண்மையை உணர்த்தும் வகையிலான நிகழ்வுகளும்,  செயற்திட்டங்களும் இத்தினத்தில் முழு உலகிலும் முன்னெடுக்கப்படுகின்றன. இன்று மனித உரிமைகளைப் பேணிக்காத்து மேம்படுத்துவதற்கான உலகளாவிய ஒரு நியமமாக இந்தப் பிரகடனம் மாறிவிட்டது.

இந் நிகழ்வுகளின் பிரதான நிகழ்ச்சி இத்தினத்தில் நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நடைபெறும். அதே நேரத்தில் உலகளாவிய ரீதியில் அரசுகளும்,  மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களும் இந்நாளையொட்டி பல்வேறு முக்கிய நிகழ்வுகளை நடத்துவது வழக்கமாகும். மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதை அனைத்து தரப்பினருக்கும் வலியுறுத்தும் வகையிலும், மனித உரிமைகள் தொடர்பான விடயங்களை மக்களுக்கு தெளிவுபடுத்தும் நோக்கத்துடனும் இத்தினம் உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படுகின்றது. ஒவ்வொரு வருடமும் சர்வதேச மனித உரிமைகள் தினத்துக்கென தொனிப் பொருள் ஒன்று நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த 2008ம் ஆண்டுக்கான  தொனிப்பொருள் “எங்கள் எல்லோருக்குமான கௌரவமும் நீதியும்’ (dignity and justice for all of us) என்பதாகும்.
 
1776 ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்க சுதந்திரப்பிரகடனத்தின், ‘எல்லாப் பிரஜைகளும் சமமாகவே படைக்கப் பட்டிருக்கிறார்கள், அவர்கள் வாழும் உரிமை, சுதந்திரம், மகிழ்ச்சியை நாடும் உரிமை போன்றன அவர்களிடமிருந்து பிரிக்கமுடியாத உரிமைகளாகும்.” என கூறப்பட்டிருந்தது. எனவே மனித உரிமை என்பது, எல்லா மனிதர்களுக்கும் உரித்தான அடிப்படை உரிமைகளும், சுதந்திரங்களும் ஆகும். மனித உரிமைகள் என்பதனுள் அடங்குவதாகக் கருதப்படும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுள், வாழும் உரிமை, சுதந்திரம், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், சட்டத்தின் முன் சமநிலை, பண்பாட்டு உரிமை, உணவுக்கான உரிமை, வேலை செய்யும் உரிமை, கல்வி உரிமை என்பன முக்கியமானவையாகக் கருதப்படுகின்றது.

மனித உரிமைகளின் சுருக்க வரலாறு.

மனித உரிமையின் வரலாறு பல நூறு ஆண்டுகளைக் கொண்டது. பதிவு செய்யப்பட்ட வரலாற்றுக் காலம் முழுவதிலும் சமய, பண்பாட்டு, மெய்யியல், சட்டம் ஆகிய துறைகளின் வளர்ச்சிகளினால் இது விரிவு படுத்தப்பட்டுள்ளது. கிமு 539 இல் பாரசீகப் பேரரசன் சைரஸ் என்பவனால் வெளியிடப்பட்ட ‘நோக்கப் பிரகடனமும்,”  கிமு 272-231 காலப்பகுதியில் இந்தியாவின் அசோகப் பேரரசனால் வெளியிட்ட ‘அசோகனின் ஆணையும்”; கிபி 622 இல் முகமது நபி அவர்களால் உருவாக்கப்பட்ட ‘மதீனாவின் அரசியல் சட்டமும்” விதந்து கூறக்கூடியவை. ஆங்கிலச் சட்ட வரலாற்றில் 1215 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட “சுதந்திரத்துக்கான பெரும் பட்டயம்” (Magna Carta Libertatum) முக்கியத்துவம் பெறுகின்றது.

மறுமலர்ச்சிக் காலத்தில் 1525 ஆம் ஆண்டில் விவசாயிகளின் கோரிக்கைகள் தொடர்பாக ஜெர்மனியில் வெளியிடப்பட்ட “கருப்புக் காட்டின் பன்னிரண்டு அம்சங்கள்” (Twelve Articles of the Black Forest) என்னும் ஆவணமே ஐரோப்பாவின் மனித உரிமை தொடர்பான முதல் பதிவு எனக் கூறப்படுகின்றது. 1689 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ‘பிரித்தானிய உரிமைகள் சட்டமூலமும்”, 1789 ஆகஸ்ட் 26 ஆம் திகதி பிரான்சின் தேசியசபையால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ‘மனிதர்களுக்கும், குடிமக்களுக்குமான உரிமைகள் அறிக்கையும்”. 1776 ம்ஆண்டு ஐக்கிய அமெரிக்க சுதந்திரப் போராட்டத்தை அடுத்து முன்வைக்கப்பட்ட ‘ஐக்கிய அமெரிக்க விடுதலை அறிக்கையும்”, 1789ம்ஆண்டு  பிரான்ஸியப் புரட்சியை அடுத்து ‘மனிதர்களுக்கும் குடிமக்களுக்குமான உரிமைகள்” அறிக்கையும். முக்கியத்துவம் பெறுகின்றன. மேலும் அனைத்துல செஞ்சிலுவைச் சங்கக் குழு நிறுவப்பட்டமை, 1864 ஆம் ஆண்டின் “லீபர் நெறிகள்” 1864 ஆம் ஆண்டின் முதலாம் ஜெனீவா மாநாடு என்பன அனைத்துலக மனிதாபிமானச் சட்டங்களுக்கு அடிப்படையாக அமைந்ததுடன் இரண்டு உலகப் போர்களுக்குப் பின்னர் அச் சட்டங்கள் மேலும் வளர்ச்சி பெற உதவின.

முதலாம் உலகப் போரின் பின்னர் உருவான வொர்சாய் ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, 1919 ஆம் ஆண்டில் ‘சர்வதேச சங்கம்” உருவானது.  இச்சங்கம், மீண்டும் ஒரு உலக மகா யுத்தம் நடைபெறக்கூடாது,  என்பதைக் குறிக்கோலாகக் கொண்டிருந்தது. இந்த அடிப்படையில் ஆயுதக் களைவு, கூட்டுப் பாதுகாப்பு மூலம் போரைத் தவிர்த்தல்; நாடுகளிடையேயான முரண்பாடுகளை; கலந்துபேசுதல், இராஜதந்திர வழிமுறைகள், உலக நலன்களை மேம்படுத்துதல் என்பவற்றின் மூலம் தீர்த்துக்கொள்ளுதல் போன்றவற்றை நோக்கங்களாகக் கொண்டிருந்தது. இம்முயற்சிகள் பூரண வெற்றியினைத் தரவில்லை. ஆனாலும்,  மனித உரிமைகளுடன் இத்திட்டங்கள் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டுள்ளன. இவை இன்றைய உலக மனித உரிமைகள் அறிக்கையிலும் உள்வாங்கப்பட்டுள்ளன.

மனித உரிமைகள் பற்றிய உலகப் பிரகடனம்

1948ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட ‘சர்வதேச மனித உரிமை சாசனம்” 30 உறுப்புரைகளைக் கொண்டது. உலகளாவிய ரீதியில் நாடுகளின் அரசியல் திட்டங்கள் மனித உரிமைகள் பற்றிய உறுப்புரைகளை ஐ.நா.வின் மனித உரிமைகள் சாசனத்துக்கு இசைவாகவே அமைக்கப்பட்டுள்ளன. மேலும், இவ்வுறுப்புரைகள் தற்போது விரிவான செயற்பாடுகளை மையமாகக் கொண்டு காலத்துக்குக் காலம் விரிவுபடுத்தப்பட்டதாக பிற்சேர்க்கையாக இணைக்கப்பட்டுள்ளதாகவும் உள்ளன. உதாரணமாக 1993ஆம் ஆண்டு வியன்னா நகரில் நடைபெற்ற மனித உரிமைகள் தொடர்பான உலக மாநாட்டுப் பிரகடனத்தில் “மனிதனின் மதிப்பிலிருந்தும், கண்ணியத்திலிருந்தும் விளைவதே மனித உரிமைகள்”  என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மனிதர்கள், மனிதர்களாகப் பிறந்த காரணத்தினால் அவர்களுக்குக் கிடைத்த அடிப்படையான, விட்டுக் கொடுக்க முடியாத, மறுக்க முடியாத  உரிமைகளை நாம் மனித உரிமைகள் என்று அழைக்கிறோம். மனித உரிமைகள் என்பது யாராலும் உருவாக்கப்பட்டதல்ல, அதுபோல் மனித உரிமைகள் எவராலும் வழங்கப்பட்டதுமல்ல. எனவே தான் மனித உரிமைகள் எவராலும் பறிக்கப்பட முடியாத உரிமைகள் எனக் கூறப்படுகின்றது.

மனித உரிமை பிரகடனம் முப்பது உறுப்புரைகளை உள்ளடக்கியுள்ளது. இதில் முதலாவது உறுப்புரை சுதந்திரமாக பிறக்கும் மனிதர்கள் யாவரும் சமமானவர்களெனவும் மதிப்பையும் நியாயத்தையும் கொண்டவர்களெனவும் கூறுகின்றது.  இரண்டாவது உறுப்புரை இன, மத, மொழி, பால், நிறம், அரசியல் வேறுபாடுமின்றி, சமூக வேறுபாடுமின்றி இப்பிரகடனம் சகலருக்கும் உரித்தானதாக கூறப்படுகின்றது. உறுப்புரை மூன்றிலிருந்து இருபத்தொன்று (3 – 21) வரை உள்ளவற்றில் மனித இனத்தின் சிவில், அரசியல் உரிமைகள் பற்றி கூறப்படுகின்றது. அதாவது பாதுகாப்பு, அடிமைத்தனம், சித்திரவதை, சட்டத்தின் முன்னால் சமத்துவம், வேறுபாடு, அடிப்படை உரிமைகள், கைது, நீதி, நிரபராதி, அரசியல் தஞ்சமும் துன்புறுத்தல், திருமணம், சொத்துரிமை, சிந்தனை உரிமை, பேச்சு சுதந்திரம், தகவல் பரிமாற்ற உரிமை, ஒன்று கூடும் சுதந்திரம் போன்றவற்றை பற்றி அவை கூறுகின்றன. மற்றைய சரத்துகளான இருபத்தியிரண்டிலிருந்து இருபத்தியேழு  வரையானவை (22 – 27) மனித இனத்தின் பொருளாதார சமூக கலாசார உரிமைகளை உள்ளடக்கியுள்ளன. அதாவது வேலை, உடை, உணவு, தங்குமிடம், மருத்துவ பராமரிப்பு, கல்வி போன்ற விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதில் இறுதி சரத்துக்களான இருபத்து எட்டிலிருந்து முப்பதுவரை இச் சாதனத்தின் நடைமுறை, பொறுப்பு, உரிமை ஆகியவற்றை உள்ளடக்கியதாக் காணப்படுகிறது. இந்த சர்வதேச மனித உரிமை பிரகடனத்தை சரியான முறையில் கடைப்பிடிக்க வேண்டும் என்ற கடமைப்பாடு ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத்துவம் வகிக்கும் ஒவ்வொரு நாட்டுக்கும் உரியது.

every-human-has-rightsசர்வதேச மனித உரிமை சாசனம் 30 உறுப்புரைகளும் கீழே சுருக்கமாகத் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.

உறுப்புரை 1
சமத்துவ உரிமை – சகல மனிதர்களும்   சுதந்திரமாகவே பிறக்கின்றனர். அவர்கள் பெருமானத்திலும், உரிமைகளிலும் சமமானவர்கள், அவர்கள் நியாயத்தையும், மனச்சாட்சியையும் இயற்பண்பாகப் பெற்றவர்கள்.

உறுப்புரை 2
ஏற்றத்தாழ்வுகள் காட்டப்படாமல் இருப்பதற்கான உரிமை – இனம், நிறம், பால், மொழி, மதம், அரசியல் மற்றும் தேசிய அல்லது சமூகம்,  பிறப்பு அல்லது பிற அந்தஸ்து என்பன எத்தகைய வேறுபாடுகளுமின்றி இப்பிரகடனத்தில் தரப்பட்டுள்ள அனைத்து உரிமைகளுக்கும், சுதந்திரங்களுக்கும் அனைவரும் உரித்துடையவராவர். அதாவது நிறத்தில், பாலினத்தில், மதத்தில், மொழியில் வேறுபாடு இருப்பினும் அனைவரும் சமமே!

உறுப்புரை 3
வாழ்வதற்கும், சுதந்திரத்திற்கும், பாதுகாப்பிற்கும் ஆளெவருக்குமான உரிமை. அதாவது சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வாழும் உரிமை அனைவருக்கும் உண்டு.

உறுப்புரை 4 
அடிமை நிலை, அடிமை வியாபாரம் அவற்றில் எல்லா வகையிலும் விடுபடுவதற்கான சுதந்திரம். அதாவது உங்களை அடிமையாக நடத்த எவருக்கும் உரிமை இல்லை. அதேபோல ‘யாரையும் அடிமையாக நடத்த உங்களுக்கும் உரிமை இல்லை”.

உறுப்புரை 5
சித்திரவதைக்கு, மனிதத் தன்மையற்ற அல்லது இழிவான நடாத்துகைக்கு உள்ளாகாமல் இருப்பதற்கான சுதந்திரம்.

உறுப்புரை 6
சட்டத்தின் முன் ஆளாக கணிக்கப்படுத்துவதற்கான உரிமை. அதாவது சட்டத்தால் சமமாக நடத்தபடுவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு

உறுப்புரை 7
சட்டத்தின் முன் அனைவரும் சமன். பாரபட்சம் எதுவுமின்றி சட்டத்தின் பாதுகாப்புக்கும் உரித்துடையவர்கள்.

உறுப்புரை 8
ஒவ்வொரு நாடுகளிலும் அரசியலமைப்பினால், அல்லது சட்டத்தினால் அவர்களுக்கு அளி்க்கப்பட்ட அடிப்படை உரிமைகளை மீறும் செயல்களுக்காக தகுதியான நியாய சபை முன் பரிகாரம் பெறுவதற்கான உரிமை. அதாவது ஒருவரது உரிமை மதிக்கப்படாத போது சட்ட உதவியை நாடும் உரிமை.

உறுப்புரை 9
சட்டத்துக்குப் புறம்பாக கைது செய்யப்படுதல், தடுத்து வைக்கப்படுதல், நாடுகடத்தல் ஆகியவற்றுக்கு எவரும் ஆட்படுத்தப்படலாகாது. அதாவது நீதிக்கு புறம்பாக உங்களை காவலில் வைக்கவோ, உங்கள் தேசத்தில் இருந்து நாடு கடத்தவோ உரிமை இல்லை.

உறுப்புரை 10
நீதியான, பகிரங்கமான விசாரணைக்கான உரிமை

உறுப்புரை 11
1. தண்டனைக்குரிய தவறுக்குக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளோர் குற்றம் நிரூபிக்கப்படும் வரை சுத்தவாளியென ஊகிக்கப்படும் உரிமை. அவ்விளக்கத்தில் அவர்களது எதிர்வாதங்களுக்கு அவசியமான எல்லா உறுதிப்பாட்டு உத்தரவாதங்களும் அவர்களுக்கிருத்தல் வேண்டும்.
2. தேசிய,  சர்வதேசிய நாட்டிடைச் சட்டத்தின் கீழ் ஏதேனும் செயல் அல்லது செய்யாமை புரியப்பட்ட நேரத்தில் அச்செயல் அல்லது செய்யாமை தண்டணைக்குரிய தவறொன்றாக அமையாததாகவிருந்து அச்செயல் அல்லது செய்யாமை காரணமாக, எவரும் ஏதேனும் தண்டணைக்குரிய தவறுக்குக் குற்றவாளியாகக் கொள்ளப்படலாகாது. அத்துடன், தண்டணைக்குரிய தவறு புரியப்பட்ட நேரத்தில் ஏற்புடையதாகவிருந்த தண்டத்திலும் பார்க்கக் கடுமையான தண்டம் விதிக்கப்படலாகாது.

உறுப்புரை 12 .
அந்தரங்கத்துவம், குடும்பம், வீடு, அல்லது தொடர்பாடல்களில் எவரும் தலையிடாமல் இருப்பதற்கான சுதந்திரம். அனைவருக்கும் நமது அந்தரங்கத்தை காத்துக்கொள்ள உரிமை உண்டு.

உறுப்புரை 13
1. ஒவ்வொரு நாட்டினதும் எல்லைக்குள்ளும் சுதந்திரமாக நடமாடுவதற்கான, நாட்டை விட்டு வெளியேற, திரும்பி வருவதற்கான உரிமை 

உறுப்புரை 14
ஆபத்து காலத்தில் பிற நாட்டில் தஞ்சம் கேட்க உரிமை உண்டு
1. வேறு நாடுகளுக்குச் செல்வதன் மூலம் துன்புறுத்தலிலிருந்து புகலிடம் நாடுவதற்கும்,  துன்புறுத்ததலிலிருந்து புகலிடம் வழங்குவதற்கும் எவருக்கும் உரிமையுண்டு.
2. அரசியற் குற்றங்கள் அல்லாத குற்றங்கள் சம்பந்தமாகவும், அல்லது ஐக்கிய நாடுகள் சபையின் நோக்கங்களுக்கும்,  நெறிகளுக்கும் முரணான செயல்களிலிருந்து உண்மையாக எழுகின்ற வழக்குத் தொகுப்புகள் சம்பந்தமாகவும் இவ்வுரிமை கேட்டுப் பெறப்படலாகாது.

உறுப்புரை 15
1. ஒவ்வொரு பிரஜைக்கும் ஒரு தேசிய இனத்தினராகவிருக்கும் உரிமை உண்டு.
2. எவரினரும் தேசிய இனத்துவம் மனப்போக்கான வகையில் இழப்பிக்கப்படுதலோ அவரது தேசிய இனத்துவத்தை மாற்றுவதற்கான உரிமை மறுக்கப்படுதலோ ஆகாது.

உறுப்புரை 16
விரும்பிய ஒருவரை திருமணம் செய்துகொள்ள குடும்ப பாதுகாப்பிற்கான உரிமை
1. பராய வயதையடைந்த ஆண்களும், பெண்களும், இனம், தேசிய இனம் அல்லது சமயம் என்பன காரணமாக கட்டுப்பாடெதுவுமின்றி திருமணம் செய்வதற்கும்,  ஒரு குடு்ம்பத்தை கட்டியெழுப்புவதற்கும் உரிமை உடையவராவர். திருமணஞ் செய்யும் பொழுதும் திருமணமாகி வாழும் பொழுதும், திருமணம் கலைக்கப்படும் பொழுதும் அவர்கள் ஒவ்வொருவருக்கும் சம உரிமையுண்டு.
2. திருமணம் முடிக்கவிருக்கும் வாழ்க்கைத் துணைவோரின் சுதந்திரமான, முழுச் சம்மதத்துடன் மட்டுமே திருமணம் முடிக்கப்படுதல் வேண்டும்.
3. குடும்பமே சமுதாயத்தில் இயற்கையானதும் அடிப்படையானதுமான அலகாகும். அது சமுதாயத்தினாலும் அரசினாலும் பாதுகாக்கப்படுவதற்கு உரித்துடையது.

உறுப்புரை 17
சொத்து வைத்துக்கொள்ளும் உரிமை
1. தனியாகவும்,  கூட்டாகவும் ஆதனத்தைச் சொந்தமாக வைத்திருப்பதற்கு ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு.
2. எவரினதும் ஆதனம் ஒருதலைப்பட்ச மனப்போக்கான வகையில் இழக்கப்படுதல் ஆகாது.

உறுப்புரை 18
மதம் மற்றும் நம்பிக்கையை பின்பற்றுவதற்கான சுதந்திரம்
சிந்தனைச் சுதந்திரம், மனச்சாட்சிச் சுதந்திரம், மதச் சுதந்திரம் என்பவற்றுக்கு ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு. இவ்வுரிமையினுள் ஒருவர் தமது மதத்தை அல்லது நம்பிக்கையை மாற்றுவதற்கான சுதந்திரமும், போதனை, பயிலல், வழிபாடு, அநுட்டானம் என்பன மூலமும் தத்தமது மதத்தை அல்லது நம்பிக்கையைத் தனியாகவும், வேரொருவருடன் கூடியும், பகிரங்கமாகவும் தனி்ப்பட்ட முறையிலும் வெளிப்படுத்துவதற்கான சுதந்திரமும் அடங்கும்.

உறுப்புரை 19
கருத்து, தகவலிற்கான சுதந்திரம். கருத்துச் சுதந்திரத்துக்கும் பேச்சுச் சுதந்திரத்துக்கும் எவருக்கும் உரிமையுண்டு. இவ்வுரிமையானது தலையீடின்றிக் கருத்துக்களைக் கொண்டிருப்பதற்கும், எவ்வழிவகைகள் மூலமும், எல்லைகளைப் பொருட்படுத்தாமலும், தகவலையும் கருத்துக்களையும் நாடுவதற்கும்,  பெறுவதற்கும் பரப்புவதற்குமான சுதந்திரத்தையும் உள்ளடக்கும்.

உறுப்புரை 20
எந்த ஒரு கூட்டத்திலும் கலந்து கொள்ள, சங்கத்தில் உறுபினராக உரிமை உண்டு
1. சமாதான முறையில் ஒன்று கூடுவதற்கும் இணைவதற்குமான சுதந்திரத்துக்கு உரிமையுண்டு.
2. ஒரு சங்கத்தில் சேர்ந்தவராகவிருப்பதற்கு எவரும் கட்டாயப்படுத்தப்படலாகாது.

உறுப்புரை 21
அரசியல் உரிமை – அரசாங்கத்தில், சுதந்திரமான தேர்தலில் பங்குபற்றவும், பொதுச்சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்குமான உரிமை
1. ஒவ்வொருவருக்கும் தத்தம் நாட்டின் ஆட்சியில் நேரடியாகவோ அல்லது சுதந்திரமான முறையில் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் மூலமாகவோ பங்குபெறுவதற்கு உரிமையுண்டு.
2. ஒவ்வொருவருக்கும் தத்தம் நாட்டிலுள்ள அரசாங்க சேவையில் சமமான முறையில் அமர்த்தப்படுவதற்கு உரிமையுண்டு.
3. மக்களின் விருப்பே அரசாங்க அதிகாரத்தின் எல்லையாக அமைதல் வேண்டும். இவ்விருப்பானது, குறித்த காலத்தில் நீதியாகவும், நேர்மையாகவும் நடைபெறும் தேர்தல்கள் மூலம் வெளிப்படுத்தப்படல் வேண்டும்.

உறுப்புரை 22 
சமூகப்  பாதுகாப்பிற்கும், தன் திறன்களை வளர்த்துக்கொள்ளவும் கூடிய உரிமை –

உறுப்புரை 23
தொழில் புரியவும், ஊதியத்தைப் பெறுவதற்குமான உரிமை
1. ஒவ்வொருவரும் தொழில் செய்வதற்கான, அத்தொழிலினைச் சுதந்திரமான முறையில் தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கும், தொழிலின்மைக்கெதிரான பாதுகாப்பு உடையோராயிருப்பதற்கான உரிமையை உடையர்.
2. ஒவ்வொருவரும் வேறுபாடெதுவுமின்றி, சமமான தொழிலுக்குச் சமமான சம்பளம் பெறுவதற்கு உரித்துடையவராவர்.
3. வேலை செய்யும் ஒவ்வொருவரும் தாமும் தமது குடும்பத்தினரும் மனித மதிப்புக்கிணையவுள்ள ஒரு வாழ்க்கையை நடத்துவதனை உறுதிப்படுத்தும் நீதியாவதும் அநுகூலமானதுமான ஊதியத்திற்கு உரிமையுடையோராவர். அவசியமாயின் இவ்வூதியம் சமூகப் பாதுகாப்பு வழிமுறைகளினால் குறை நிரப்பபடுவதாயிருத்தல் வேண்டும்.
4. ஒவ்வொருவருக்கும் தத்தம் நலன்களைப் பாதுகாப்பதற்கெனத் தொழிற் சங்கங்களை அமைப்பத்தற்கும். அவற்றில் சேர்வதற்குமான உரிமையுண்டு.

உறுப்புரை 24
இளைப்பாறுவதற்கும், ஓய்வெடுக்கவும் உரிமை –
இளைப்பாறுவதற்கும், ஓய்விற்கும் ஒவ்வொருவரும் உரிமையுடையவர். இதனுள் வேலை செய்யும் மணித்தியால வரையறை, சம்பளத்துடனான விடுமுறைகள் அடங்கும்.

உறுப்புரை 25
நல்ல வாழ்க்கை தரத்திற்கான உரிமை
1. ஒவ்வொருவரும் உணவு, உடை, உரையுள், மருத்துவக் காப்பு, அவசியமான சமூக சேவைகள் என்பன உட்பட தமதும் தமது குடும்பத்தினாலும் உடனலத்துக்கும் நல்வாழ்வுக்கும் போதுமான வாழ்க்கைத்தரத்துக்கு உரிமையுடையவராவர். அத்துடன் வேலையின்மை, இயலாமை, கைம்மை, முதுமை காரணமாகவும் அவை போன்ற அவரது கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட பிற சூழ்நிலை காரணமாகவும் வாழ்க்கை வழியில்லாமை ஏற்படும் சந்தர்ப்பங்களில் பாதுகாப்புக்கும் உரிமையுடையவராவர்.
2. தாய்மை நிலையும் குழந்தைப் பருவமும் விசேட கவனிப்பிற்கும் உதவிக்கும் உரித்துடையன. சகல குழந்தைகளும் அவை திருமண உறவிற் பிறந்தவையாயினுஞ்சரி அத்தகைய உறவின்றிப் பிறந்தவையாயினுஞ்சரி, சமமான சமூகப் பாதுகாப்பினைத் அனுபவிக்கும் உரிமையுடையன.

உறுப்புரை 26
கல்விக்கான உரிமை
1. ஒவ்வொருவருக்கும் கல்வி கற்பதற்கான உரிமையுண்டு. குறைந்தது ஆரம்ப அடிப்படைக் கட்டங்களிலாவது கல்வி இலவசமானதாயிருத்தல் வேண்டும். ஆரம்பக் கல்வி கட்டாயப்படுத்தல் வேண்டும். தொழில் நுட்பக் கல்வியும் உயர் தொழிற் கல்வியும் பொதுவாகப் பெறப்படத்தக்கனவாயிருத்தல் வேண்டும். உயர் கல்வியானது யாவருக்கும் திறமையடிப்படையின் மீது சமமான முறையில் கிடைக்கக் கூடியதாக்கப்படுதலும் வேண்டும்.
2. கல்வியானது மனிதனின் ஆளுமையை முழுதாக விருத்தி செய்யுமுகமாகவும் மனிதவுரிமைகளுக்கும் அடிப்படைச் சுதந்திரங்களுக்குமான மரியாதையை வலுப்படு்த்துமுகமாகவும் ஆற்றப்படுத்தப்படல் வேண்டும்.

உறுப்புரை 27
தங்கள் சமூகத்தின் பண்பாட்டு அறிவியல் வளர்சியை பகிர்ந்து கொள்ளும்
உரிமை –
1. சமுதாயத்தின் பண்பாட்டு வாழ்க்கையிற் சுதந்திரமாகப் பங்குகொள்வதற்கும், கலைகளைத் தூய்ப்பதற்கும் அறிவியல் முன்னேற்றத்திலும், அதன் நன்மைகளிலும் பங்கெடு்ப்பதற்கும் எவருக்கும் உரிமையுண்டு.
2. அறிவியல், இலக்கிய, கலைப் படைப்பின் ஆக்கியற் கர்த்தா என்ற வகையில் அப்படைப்புகள் வழியாக வரும் ஒழுக்க நெறி, பருப்பொருள் நலங்களின் பாதுகாப்பிற்கு அத்தகையோர் ஒவ்வொருவருக்கும் உரிமை உடையவராவர்.

உறுப்புரை 28
மனித உரிமைகளை உறுதிசெய்யும் சமூக முறைமையில் பங்குபற்றும் உரிமை
இப்பிரகடனத்தில் எடுத்துக் காட்டப்பட்டுள்ள உரிமைகளும் சுதந்திரங்களும் முழுமையாக எய்தப்படக்கூடிய சமூக, சர்வ தேசிய நாட்டிடை அமைப்பு முறைக்கு ஒவ்வொருவரும் உரித்துடையவராவர்.

உறுப்புரை 29
ஒவ்வொருவரும் பிறரது உரிமையை மதிக்க வேண்டும்
1. எந்த ஒரு சமூகத்தினுள் மாத்திரமே தத்தமது ஆளுமையின் கட்டற்ற பூரணமான வளர்ச்சி சாத்தியமாகவிருக்குமோ அந்தச் சமூகத்தின்பால் ஒவ்வொருவருக்கும் கடமைகள் உண்டு.
2. ஒவ்வொருவரும் அவரது உரிமைகளையும் சுதந்திரங்களையும் பிரயோகிக்கும் பொழுது இன்னொருவரின் உரிமைகளுக்கும் சுதந்திரங்களுக்குமுரிய அங்கீகாரத்தையும் மதி்ப்பையும் பெற்றுக் கொடுக்கும் நோக்கத்துக்காகவும், சனநாயக சமுதாயமொன்றின் ஒழுக்கசீலம், பொது மக்கள் ஒழுங்கமைதி, பொது சேமநலன் என்பவற்றுக்கு நீதியான முறையில் தேவைப்படக் கூடியவற்றை ஏற்படுத்தல் வேண்டுமெனும் நோக்கத்துக்காகவும் மட்டுமே சட்டத்தினால் தீர்மானிக்கப்படும் வரையறைகளுக்கு மாத்திரமே கட்டுப்படுவராயாமைதல் வேண்டும்.
3. இவ்வுரிமைகளும் சுதந்திரங்களும் ஐக்கிய நாடுகள் சபையின் நோக்கங்களுக்கும் நெறிகளுக்கும் முரணாக எவ்விடத்திலேனும் பிரயோகிப்படலாகாது.

உறுப்புரை 30
இந்த பிரகடனத்தில் குறிபிட்டுள்ள எந்த ஒரு உரிமையையும் நீக்கும் உரிமை கிடையாது
இப்பிரகடனத்திலுள்ள எவையும். இதன்கண் எடுத்துக்காட்டப்பட்டுள்ள உரிமைகள், சுதந்திரங்கள் ஆகியவற்றிலுள்ள எவற்றையும் அழிக்கும் நோக்கத்தையுடைய ஏதேனும் முயற்சியில் ஈடுபடுவதற்கும் அல்லது செயலெதனையும் புரிவதற்கும் எந்த ஒரு நாட்டுக்கோ குழுவுக்கோ அல்லது ஒருவருக்கோ உட்கிடையாக யாதேனும் உரிமையளிப்பதாகப் பொருள் கொள்ளப்படுதலாகாது.

மனித உரிமை என்பது, எல்லா மனிதர்களுக்கும் உரித்தான அடிப்படை உரிமைகளும், சுதந்திரங்களும் ஆகும்.

தற்கால உலக அரசியல் அரங்கில் குடியியல், அரசியல் உரிமைகள் சம்பந்தமாகவோ, பொருளாதார, சமூக, கலாசார உரிமைகள் சம்பந்தமாகவோ, எந்த விடயத்தை எடுத்துக் கொண்டாலும், மனித உரிமைகள் என்பதே பிரதான அம்சமாகத் திகழ்கிறது. மனித உரிமைகள் பற்றிய இந்தப் புதிய அக்கறை எழுச்சிபெற்ற மானுடத்தின் வெளிப்பாடு என்பது தெளிவானதே. இவ்விடத்தில் 1998 மார்ச் 18ம் திகதி ஜெனீவாவில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 54வது அமர்வில் அப்போதைய செயலாளர் நாயகம் கோபி அன்னான் நிகழ்த்திய உரை மனித உரிமைகள் தொடர்பான புதிய விளக்கத்தை வழங்குகின்றது. அதாவது ‘ சகல மக்களும் வன்முறை, பட்டினி, நோய்,  சித்திரவதை, பாகுபாடு ஆகிய பயங்கரவாதப்பிடியிலிருந்து விடுதலை பெற்று சுதந்திரமாக வாழவே விரும்புகின்றனர்.”

1979 இலிருந்து பல நாடுகள் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக கண்காணிப்புக்குட்படத் தொடங்கின. 1995 இல் எல் சல்வடோர், கம்பொடியா, ஹெயிட்டி, ருவண்டா, புரூண்டி ஆகிய நாடுகளில் ஐ. நா தன் கவனத்தைச் செலுத்தியது. 1993 ஜுன் 14 இல் வியட்னாமில் நடந்த 2வது மனித உரிமைகள் மகாநாடு பெண்கள் உரிமைகள் பற்றி கவனம் செலுத்தியது. இலங்கையில் யுத்த நிலையின் போது உரிமை மீறல்கள் தொடர்பாக கவனத்தில் எடுத்தது.

இலங்கை இப்பிரகடனம் ஐக்கிய நாடுகள் சபையினால் நடைமுறைப்படுத்தப்பட்ட வேளையில் இலங்கை ஐ.நா.வில் அங்கத்துவம் பெற்றிருக்கவில்லை. ஆனால் ஆங்கிலேய காலனித்துவத்திடமிருந்து இலங்கை அதே ஆண்டில் தான் சுதந்திரத்தை பெற்றுக் கொண்டது. நாம் ஏற்கெனவே பார்த்த சர்வதேச மனித உரிமை பிரகடனத்தின் சரத்தில் எவற்றை இலங்கைத் தீவில் வாழும் மக்களுக்கு சாதகமாக இலங்கை ஆட்சியாளர் பாவித்துள்ளார்கள்? உண்மையை கூறுவதானால் சர்வதேச மனித உரிமை பிரகடனத்தில் குறிப்பிட்டுள்ள அத்தனை சரத்துக்களையும் இலங்கை மீறியுள்ளதற்கான ஆதாரங்கள் பலதை உதாரணப்படுத்தலாம்.

மனித உரிமைகள் என்பது சமாதானத்துக்கும்,  பாதுகாப்புக்கும், பொருளாதார அபிவிருத்திக்கும், சமூக சமத்துவத்துக்கும், பூரணத்துவம் வாய்ந்த ஊடகமாக உள்ளது. ஐ. நா. தாபனம இந்த மனித உரிமைகளை வெளிப்படுத்தவும், மேம்படுத்தவும், பாதுகாக்கவும் ஒரு மையமாகச் செயல்படுகிறது. இலங்கை சுதந்திரம் பெற்ற வேளையிலே குடியுரிமை, வாக்குரிமை பற்றி எடுத்துக் கூறும் இருபத்தியோராம் உறுப்புரையை மீறியது. அதாவது மலையகத் தோட்டத் தொழிளாலர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டது.  இதை தொடர்ந்து 1956 ஆம் ஆண்டு சிங்களச்சட்டம் மூலம் சரத்து 2 உம் 3 உம் மீறப்பட்டன. 1956 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட இனக் கலவரங்கள் மூலம் சாரம் 3, 5, 12, 17 ஆகியவை மீறப்பட்டுள்ளன.

நூறு ஆண்டுகளுக்கு மேலாக பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்த மக்களை 1964 ஆம் ஆண்டு சிறிமா சாஸ்திரி ஒப்பந்தம் நாடு கடத்தியதன் மூலம் சாரம் 4, 15, 23 ஆகியவை மீறப்பட்டுள்ளன. தமிழ் மாணவர்கள் சம கல்வி மறுக்கப்பட்டு தரப்படுத்தல் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் சாரம் 26 மீறப்பட்டுள்ளது. தொடர்ச்சியான அவசரகால நிலையுடன் கூடிய பயங்கரவாதச் சட்டம் மூலம் சரத்துக்கள் 2, 3, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 மீறப்பட்டுள்ளன. இவ்வாறு அடிக்கிக் கொண்டு போகலாம். இந்நிலை யுத்தகாலத்தில் மிகைத்திருந்தது. இலங்கை போன்ற நாடுகளில் இனப்படுகொலை, சிறுபான்மையினர் ஒதுக்கப்படல், கல்வி, வேலை வாய்ப்புக்களில் அசமத்துவ நிலை, எதேச்சையாகக் கைது செய்யப்படல், காணாமற் போதல்,  தடுப்புக்காவல் தண்டனைகள், சிறைக்குள் படுகொலை, ஆகிய மனித உரிமை மீறல்கள் இனிமேலும் நடைபெறாதவாறு ஐ.நா சட்டரீதியான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். மனித உரிமைகள் ஜனநாயகத்தின் ஆணிவேர், உயிர் நாடி, அது சகலராலும் மதிக்கப்பட அது பற்றிய விழிப்புணர்வு தேவை.