பாகம் 6
தேர்தலும் வாக்களிப்பும்
தேர்தல் என்பது குறைந்த பட்சத்தில் மக்களது பொதுமைப் படுத்தப்பட்ட இறைமைகள் குறித்த அரசியல் பங்கீடுகள் பற்றியது. இதனை அரிதான அளவிலாவது தரக்கூடியது, இன்று நடைமுறையில் மட்டுமின்றி, உலகளாவிய அழுத்தத்தின் பால் உள்ளது, முதலாம் நாடுகளில் கடைப்பிடிக்கப்படும் மிதவாத ஜனநாயக வழிமுறை ஒன்றேதான்.
இறைமை என்பது சமூகத்தினதும் தனிமனிதனதும் உடமைகள் பற்றியவை.
உடமை என்பது பணம் காணி பூமி எனச் சம்பாதித்த வெறும் சடப்பொருட்கள் பற்றியவை மட்டுமல்ல.
அவற்றைவிட, அவனுக்கு அத்தியாவசியமான உயிர், உடல், வாழ்வு என்பவற்றின் உத்தரவாதங்கள் பற்றியவை மட்டுமே என்பதும் அல்ல. இவற்றிலும் மேலாக, அவனது மொழி, சமூக-மனோவியல் இயல்புகளால் கொண்ட தத்துவார்த்தங்கள் சித்தாந்தங்கள், அவற்றின் பேரிலான நோன்புகள் சம்பிரதாயங்கள், காலாகாலமாக இயம்பப்பட்டு வந்த பாரம்பரிய இதிகாசங்கள் புராணக்கதைகள், சகாசவீரர்கள் சமுதாயத் தலைவர்கள் தந்த அறிவு அவற்றாலான உணர்வுகள், என்பன யாவும் அவனது உடமைகளே. இவற்றுடன் இணைந்த நிலத்துடன் அவன் கொண்ட உற்பத்தி உறவுகளில் தங்கிய சரித்திரமும் அவனது உடமைகளைப் பூரணமாக்கும்.
இவ்வகையில், தனி-மனிதனாக முதற்படியாக தற்பாதுகாப்பிற்கும், அடுத்தபடியாக தனதும் தன் குடும்பம் அல்லது பரந்த-குடும்பம் பற்றிய பொருளாதார முன்னேற்றத்தை நாடும் போதும், ஒரு குலத்தின், இனத்தின், நாட்டின் அங்கத்தவனாக அடையாளம் காட்ட வேண்டிய அத்தியாவசியத்தால், அதன் நுகர்வுகளைப் புரிந்தமையால், தனது தனிப்பட்ட இறைமைகளை மனிதன் பொதுமைப்படுத்துகிறான்.
தனிமனிதனாக கட்டுப்பாடுகளின்றி வாழ்வதற்கும், ஒரு சமூகத்துள்ளே விதிகள் நோன்புகளுடன் வாழ்வதற்கும் இடையிலான வேற்றுமைகளை, இறைமைகளை மாற்றீடு செய்யும் உரிமைகளின் மட்டுப்படுத்தல்களை உணர்ந்தும், தனது மேன்மையை நோக்கிய போக்கையும் அதற்கான இழப்புகளைப் புரிந்துமே அவன் இந்நிலை எய்துகிறான்.
இவ்வாறாக மனிதனது சமூக-பொருளாதார வளர்ச்சியின் வாஞ்சையும் அதற்கான உத்தரவாதங்கள் பற்றிய போராட்டங்களும் இணக்கங்களும் புதிய உறவுகளுமே, என்றுமே பரிணாமம் கண்டு கொண்டுள்ள அவனது உடமைகள் பற்றிய விளக்கத்தையும், அவற்றின் அடிப்படையிலான பொதுமைப் படுத்தப்பட்ட இறைமையின் அர்த்தத்தையும் அதன் வீச்சினையும் நிர்ணையம் செய்கின்றன.
எனவே, தேர்தல் என்பது மனிதன் தனியவனாகவும் கூட்டாகவும் தனது இறைமைகளின் பெறுமதியை மாற்றீடு செய்வதற்கான ‘சமூக-பொருளாதார-அரசில் சந்தைப்படுத்தலின்’ வழிமுறையாகும் என்பதில் ஐயம் இருக்க முடியாது.
இவ்வாறு பொதுமைப்பட்ட இறைமைகள் பற்றி இல்லாத வரைவுகளுள் இருந்தபடி ஏதாவது தேர்தலை அணுகுபவர்கள் மேற்படி அமைந்த சந்தைப்படுத்தலின் அழையா விருந்தாளிகளே. ஆகவே, பொது இறைமைகளது அவை தங்கிய உடமைகளது உறவுகளை ஏற்பாடு செய்யக் கூடிய வல்லமை கொண்டவராகவோ, அவற்றின்பால் கருமம் ஆற்றக் கூடிய செயலாளராகவோ இருக்க மாட்டார் என்பது திண்ணம்.
எனவே இந்த அரசியல் சந்தைப்படுத்தலில் “விற்பவர் யார்? வாங்குபவர் யார்?” என்ற கேள்வி நியாய பூர்வமாக எழுகிறது.
முதலாம் உலக நாடுகளில் வாழும் சாதாரண மனிதரது (1) நுகர்வுத் தன்மையும் (2) கொள்வனவுத் தன்மையும் (3) உற்பத்தித் தன்மையும் சுமுகமான சமாந்தர நிலமையை எய்தி உள்ளது. ஆதலால், அங்கே எல்லாம் விற்பவர்-வேண்டுபவர் என்ற உறவுகளில் சாதாரணரிடையே பாரிய வேறுபாடுகள் இல்லை எனலாம்.
இவர்களிடமிருந்து சொத்துக்களை பல வகைகளில் சேகரித்து தமது மூலதனத்தை அதிகரிக்க வைத்துக் கொண்டிருக்கும் முதலாளித்துவர்களை நாம் பிரித்தே பார்க்கிறோம் என்பதை சகலரும் புரிந்து கொள்ளவர்.
மேலும், சமூக-பொருளாதார சந்தைப்படுத்தல் முதலாம் நாடுகளில் உச்சக் கட்டத்தில் உள்ளமையால், ஒரு நாட்டின் உள்ளே அவ் உறவினிடையே உருவாகும் ஏற்றத் தாழ்வுகளை சுமாராக்க நாடுகளின் அரசுகள் ஒரு புறத்தில் முதலாளித்துவத்தின் பாதுகாவலனாகவும், மறுபுறத்தில் உற்பத்தி உறவுகளை சீர் செய்யும் வகையில் தனிமனித சமூக அத்தியாவசியங்களைப் பூர்த்தி செய்யமுயலும் கருவியாகவும் இயங்குகின்றன.
இதனைவிட ஒருபடி மேலாக இந்நாடுகள் பிராந்திய ஜனநாயகத்தை ஏற்று நடை முறைப் படுத்துவதால், ஒரு புறத்தில் சமூகங்களது ஏற்றத் தாழ்வுகளை முன்நிலைப் படுத்தி சீர்திருத்தம் கோருகின்றன அமைப்புகளை ஏற்றுக் கொள்பவையாகவும், மறுபுறத்தில் மத்திய அரசின் முதலாளித்துவ உற்பத்தி உறவுகளின் யாப்புகளை நடைமுறைப் படுத்தி நிலைமைகளை ஒருமுகப் படுத்தும் கருவிகளாகவும் அமைகின்றன.
ஆகவே, முதலாம் நாடுகளில் இந்த அரசியல் சந்தைப்படுத்தலானது, சாதரணரிடையே ஓரு ‘பண்டமாற்று’ முறையாக, ஒருவரிடம் மற்றவர் பெறுவதற்கும் விற்பதற்கும் விடயங்கள் இருப்பதாலான செயற்பாடகவும் அமைகிறது எனலாம்.
இவ்வாறான ஜனநாயகம் போர்த்த சமூக-அரசியல் மாதிரியானது 60 பதுகளில் மேற்கு ஐரோப்பியா பூராக பரவலாக்கப்பட்டு இன்று, சோவியத் அரசுகளின் வீழ்சியின் பின்னர், கிழக்கு ஐரோப்பியாவையும் உள்வாங்கும் திட்டம் ஆக்கப்பட்டுள்ளதையும்தான் நாம் அறிவோம்.
அதாவது, நாம் வரைவு செய்யும் அரசியற்-சந்தைப்படுத்தலானது பல்வேறு வடிவங்களில், இன்று ஐரோப்பாவில் ஓரிரு நாடுகள் தவிர்ந்த யாவற்றையும் உள்ளடக்கியதாக உருவாகி வருவதை காணலாம் என்கிறோம்.
மூன்றாம் நாடுகளிலோ நிலைகள் நேர்மாறானவை.
மனிதன் தனியவனாகவும் கூட்டானவனாகவும் ‘நாடு’ என்ற ரீதியில் தமது இறைமைகளைப் பொதுமைப்படுத்த முடியாதவனாகவே இன்றும் இருக்கிறான். அவனது ‘நாடுகள்’ இன்றும் பல சமுதாயங்களை உள்ளடக்கிய தன்-அடையாளம் அற்றவையாக, காலனத்துவர் விட்டுச் சென்ற நில-வரைவுகளுடன் மட்டுமே தங்கியவையாகவும், அவற்றினை வியாபிக்க விஸ்தரிக்க முடியாதவையாகவுமே உள்ளன.
சிறுபான்மைச் சமுதாயங்களைச் சேர்ந்தவனோ, தனது சமூக உடமைகளை பாதுகாக்க முடியாதவனாக, அத்து மீறிய செயற் திட்டங்களுடாக பெரும்பான்மை இனத்தினுடைய சொத்தாக சுவீகரிக்கப்படுவதை தடுக்க முடியாதவனாக, அன்றாட இம்சைகளுக்கு உட்பட்டவனாக வாழ்கின்றான்.
காலனித்துவர் விட்டுச் சென்ற அரச-அமைப்பின் அதிகாரங்களை, குருட்டுத்-தனமாகவும் மூர்க்க-தனமாகவும் குரோதத் தன்மையுடன் பேரினவாதக் குழுக்களும், இன வேறுபாடுகளைச் சாதகமாக்கித் தத்தமது மூலதனத்தை வளர்த்திடும் வர்க்கங்களும், அவை சார்ந்த குடும்பங்களும், பிரயோகமாக்கிடும் சூட்ச்சிகளுள் தவிக்கின்றான். அவற்றிக்கு எதிர் முகம் கொடுக்கும்போது பாரிய பின்னடைவுகளையே அவன் சந்திக்கிறான்.
மாற்றாரது உடமைகள் தனது பெயரில் சுவீகரிக்கப்பட்டு, பொதுவில் சொத்துக் படைத்தவனாக காட்டப்படும் போதிலும் தனது இறைமைகளைக் கூட பொதுமைப்படுத்த முடியாதவனாகவே பெரும்பான்மை இனத்தில் மிக மேலதிகமானவன் இன்றும் உள்ளபோது, சிறுபான்மை மனிதனோ தனது இறைமைகளை எவ்வாறு நிரூபித்துக் கொள்வது என்ற கேள்வியில் மட்டுமே தங்க வேண்டியவனாக இருக்கிறான்.
அவன் இருக்கும் ‘நாடுகள்’ எந்த இனத்தவனது உயிருக்கும் உத்தரவாதம் தர முடியாதவையாகவும், மாறாக அவனது உயிரை ‘நாட்டின்’ எதிரியாக அல்லது பாதுகாவலனாக பணயம் பேசியே தமது அடையாளத்தையும் ஸ்திரத்தையும் நிலை நாட்டுவனவாகவும் உள்ளன.
ஆதலால், தேர்தல் என்பது ஒரு பேரின-வழக்காகவும் சகலரதும் இறைமைகளையும் கொச்சைப்படுத்தும் பெரும்-தேசியவாத அரசியல் வர்க்கங்களது “குடியானவர்-ஜனநாயகமாகவே” மூன்றாம் உலக நாடுகளில் உள்ளன.
சிறுபான்மை இனத்தவனுக்கோ, “தனது ‘நாட்டில்’ தன்-பங்கு என்ன என்பதை தானே முடிவு செய்ய முடியாத நிலையில் உள்ளபோது, தேர்தலில் தன்-பங்கு என்ன முடிவைத் தரும்?” என்ற கேள்வி வெறும் எண்கணிதப் பரீட்ச்சையே அன்றி வேறெதுவுமல்ல.
எனவே, மொத்தத்தில் மூன்றாம் நாடுகளில் தேர்தல் எனும் அரசியல் சந்தைப்படுத்தல் அதிகாரமயப்படுத்தப்படாத (un-empowered) சகல மனிதனும் அவன் சமூகங்களும் சமுதாயங்களும், அதிகாரத்தில் உள்ளவனுக்கு தனது இறைமைகளை சிறிது சிறிதாக தாரைவாரத்துத் தந்த வண்ணம் உள்ளன. கைமாறாக அதிகார வர்க்கத்தினர், பொதுவாக சில குடும்பங்களைச் சார்ந்தவர்கள், பண்டைய பெருமைகளையும் எதிர்காலக் கனவுகளையும் இலகுவாக வழங்குவதை நன்றியுடன் பெறவேண்டிய நிலையலேயே அவன் உள்ளான்.
எனவே, தேர்தல் எனும் அரசியற்-சந்தைப்படுத்தலில் அதியாரமயப்படுத்தப்படாத சகல மனிதனும் ‘வாக்குகளால்’ தமது இறைமைகளை ஊர்ஜிதம் செய்திடலாம் என்ற போலியான வாதத்துள் அவனது ‘தலைவர்களால்’ இட்டுச் செல்லப்படுகிறான்.
அரசாங்கத்தின் அல்லது அரச எதிர்க்-கட்சியின் ஆதரவாளனாக, அதிகாரவர்க்கங்களின் தயவிலேயே தமது ‘வாழ்வுக்கும்;’ சாவிற்கும் தங்கியிருப்பவர், அதிகாரமயப்படுத்தப்படாத தமது மக்களுக்கு உண்மையான தலைமையை எப்படிக் கொடுக்க முடியும் என்பது சமூக-பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கிய சகல மூன்றாம் உலக நாடுகளிலும் பரந்து காணப்படும் ஒரே கேள்வியாகும்.
இந்நிலையைச் சீர் செய்ய, தனது இறைமைகளை தமதென ஊர்ஜிதம் செய்திட, தனது சமுதாயத்தினை தேசியவாதம் அல்லது இராணுவமயப்படுத்தல் என்பவற்றுள் உட்படுத்துவதே மாற்றுத் தலைமைகளது மேலெழுந்தவாரியான பதிலாக இன்றுவரை இருந்து வந்துள்ளது.
இவ்வழிகள் இன்று, உலகளாவிய-சந்தைப்படுத்தலின் காலகட்டத்தில் 9/11 நிகழ்வின் பின்னடியில், பல பிரதேசங்களில் சர்வதேசியத்தை நிர்வாகம் செய்பவர்களால் மிக வன்முறையாக நிராகரிக்கப்படுகின்றன என்பதை உணர்ந்தாக வேண்டும்.
உணர்ந்து கொள்வதற்கும் ஏற்றுக் கொள்வதற்கும் பாரிய இடைவெளி உண்டு என்பதையும் புரிந்தும்தான் நாம் காரியமாற்ற வேண்டும்.
இவையாவும், பரந்துபட்ட சகல சமூகங்களுக்கும் பொதுவானவை என்பதுடன், எமது ஆய்வுகளின் தேடலின் பிரகாரம் நாம் காணும் பொது-அறிவும் ஆகும்.
அதாவது, இவை வெற்றுப் பொதுப்-புத்திகளிலோ, இலட்சியக் கோட்பாடுகளற்ற புத்தி-ஜீவித-சுத்தியற்ற போலி அரசியல் அவதானிப்புகளிலோ தங்கிய தத்துவங்கள் அல்ல. எனவே, இவை முகமோ முறையோ பாராது, நாட்ட ஓட்டங்களைத் தாண்டி, இலட்சியக் கணிப்புகளைக் கொள்ள முனைபவன் கருத்தில் கொள்ள வேண்டிய வரையறுப்புகள் ஆகும்.
இவற்றிலான வரைவினுள் இருந்தபடி சிறீலங்காவின் ஜனாதிபதித் தேர்தலை எப்படி நோக்குவது?
வெற்று அரசியல் விஞ்ஞாபனம்
வெளிநாடுகளில் புலிகளுக்காக ‘வேலை’ செய்தவர்கள், தமிழீழத் தேசியவாதிகள், மகிந்தா அரசினை ‘இன ஒழிப்பு’ குற்றச்சாட்டில் சர்வதேசிய மனிதாபிமானக் கோட்டில் நிறுத்துவோம் என அமரிக்க-வழக்கறிஞர் ஒருவரை கூட்டித் திரிந்தவர்கள், புலிகள் இயக்கமாக அழிக்கப்பட்ட பின்னர் ராஜபக்ஷா சகோதரர்களை சந்திக்க வரிசையில் நிற்கிறார்கள் என்பதைச் சாடும் பலத்த விமர்சனங்களை நாம் காண்கிறோம். இவற்றை நாமும்தான் செய்திடலாமா என்ன?
2001 இல் ரணில் அரசுடன் புலிகள் புரிந்துணர்வு ஏற்பாடு கண்டபின் ‘சமாதானம்’ ஒன்று நிலவியது. நிலமைகள் சமாதானம் என்று கூடப்பட்ட போதிலும் பின்னணியில் கொலைகளும், மீண்டுமொரு போருக்கான ஏற்பாடுகளும் நடந்த வண்ணம் இருந்த காலமுமிது.
அப்போது அமைச்சராக இருந்த ஒரு ஜெயவர்த்தனாவை யாரும் நினைவில் வைத்திருக்க மாட்டார்கள். ஆனால், அவர் A9 சாலையை புதுப்பிப்பதற்கான வர்த்தக ஒப்புதல்களுக்கு பொறுப்பானவர், மற்றும் இறக்குமதி தொடர்பான சான்றுப் பத்திரிகைகளை வழங்குபவர் என்பதால் அவருடன் ‘பிசினஸ்’ செய்த தமிழர்களோ அவரை மறந்திருக்க மாட்டார்கள். அவர் இங்கிலாந்து வந்தபோது பல இடங்களில் எடுப்பு எடுத்து, மாலைகள் போட்டு அமைச்சருடன் ‘போட்டோ’ பிடிக்க போட்டா போட்டி போட்ட புகலித் தமிழர்களும் இலகுவில் மறந்திருக்க மாட்டார்கள்.
இம்மாதிரியான அன்றைய நிகழ்வுகள் இன்று நடப்பவற்றின் முன்காட்டிகள். ‘தொப்பி பிரட்டிகள்’ என இஸ்லாமிய தமிழ் சமூகத் தலைவர்களை ‘தமிழ் அறிஞர்கள்’ வர்ணித்த போது, தம்மைத் தெரிந்தும் உணர்ந்திராத தமிழரது நடுத்தர வர்க்கங்களின் அரசியற் கலாச்சரமும் இது.
எனவே, சமூக-அரசியல் அறிவினை சுயசிந்தனையை கொண்டவர்கள், தமிழீழக் கோரிக்கையின் அரசியல் வரலாற்றைப் புரிந்தவர்கள், இவற்றினால் ஆச்சரியமோ ஆத்திரமோ கொள்ள முடியாது.
தமிழீழக் கோரிக்கை கொழும்பின் அரசியல் அதிகாரத்தில் பங்கு பெறுவதற்கான ஒரு பேச்சுவார்த்தையின் உச்சவரம்பை ஸ்திரமாக்கும் யுக்தியாகவே நடுவர்க்கங்களால் முன் நிறுத்தப்பட்டது.
அக் கோரிக்கையில் தமிழரது உடமைகள் குறித்தோ அல்லது தமிழ் பேசுவோரது பிராந்திய ஜனநாயகம் குறித்தோ ஆழமான கருத்துகள் இருக்கவில்லை. பலகலைக்கழக நுளைவிற்கான தரப்படுத்தலே தனிநாட்டுப் போராட்டத்தின் பிரதான காரணம் என்று தமிழீழவாதிகள் கூறுவதிலிருந்து அவற்றினைப் புரிந்து கொள்ளலாம்.
அக் கோரிக்கையை, நடுத்தர வர்கங்களைச் சார்ந்த இளைஞர்கள் சிலரும் அவ்-வர்க்க அபிலாசைகளால் உள்வாங்கப்பட்ட மற்றைய சமூகத்து இளைஞர்களும் இலட்சியக் குறிக்கோளாக ஏற்ற பின்னரே அவர்களது இரத்தத்தாலும் தியாகங்களாலும் அதனை ஒரு அரசியற் சித்தாந்தமாக மாற்றி அமைக்கும் முயற்சியும் இடம் பெற்றது.
நிலமைகள் பாரதூரமானபோது இயக்கத்து உட்பிரச்சனை அல்லது மாற்று இயக்கத்துடனான பிரச்சனை காரணமாக நடுத்தர வர்க்கத்து இளைஞர்கள் பெரும் திரளாக “தமிழீழப் போரிலிருந்து” வெளியேறியதில் இருந்தே இக்கோரிக்கையின் இரு-இளை அவிழ்வினைக் கண்டு கொண்டிருக்கலாம்.
எனவே, நடுத்தர வர்க்கங்களால் தமது அபிலாசைகளைப் பூர்த்தி செய்வதற்கான யுக்தியாக முன்வைக்கப்பட்ட தனிநாட்டுக் கோரிக்கையும் அதன் பேரிலான யுத்தமும் சமூகத்தில் பின்தங்கியவரது பாரமாகச் சுமத்தப்பட்டு அவர்களது இலட்சியமாகவும் அழுத்தப்பட்டது. (இவைபற்றிய விரிவு வேறொரு தடவையில்)
இவற்றை கூர்ந்து அவதானித்து வந்தவர்கள் நடுத்தரவர்க்கத் தமிழரது அரசியல் கலாச்சாரம், ‘போரின்’ முடிவில் பழைய நிலையை மீண்டும் எய்திடும் என்பதை எதிர்பார்த்தே இருந்திருப்பர். ஆனால், அப் போர் சடுதியாக, அதிலும் உலக அரசுகளின் இணக்குடன் முடிவுக்கு வரும் என்றோ, பின்னோக்கும் அரசியற் கலாச்சாரம் அவர்களை டட்லி-பண்டாரநாயக்க காலத்து நிலைப்பாடுகளுக்கு இழுத்துச் செல்லப் போகிறது என்று முன்கூறிடுவது இலகுவான விடயமல்ல.
ஆனால், இந்த அரசியல் வர்க்கத்தினரோ தேர்தல் என்றதும் குட்டையைக் கண்ட தாரா போலாகி உள்மனதுள் குதூகலம் கண்டிடுவர் என்ற விடயமோ சுலபமாக யாரும் கொள்ளக் கூடிய எதிர்பார்ப்பு.
இது வெறும் தனித் தமிழீழம் பேசித் தடம் புரண்ட தேசியவாதிகளை மட்டும் கொண்ட கூட்டம் அல்ல. பலவிதமான புரட்சிகள் பேசி மற்றவர்களைப் புரட்டி எடுத்து, முடிவில் தம்மைப் பலதடவை பிரட்டிப் பிரட்டிப் பிதட்டிக் கொள்பவர்களும், நடத்தையில் செயற்பாடுகளில் அகராதி-வார்த்தைகளில் சற்றே வேறுபட்டவர்களாகக் காணப் பட்டாலும், அரசியல் முடிவுகளில் அதே இடத்தில்தான் காணப்படுட்டவர்.
தம்மைப் பரிசீலனை செய்வது, சுயவிமர்சனம் செய்து தமது பழைய நிலைப்பாடுகளுக்கு அவற்றையொட்டிய செயற்பாடுகளுக்கு, மற்றவர் மீதான கடுமையான வார்த்தைகளுக்கு வன்முறைகளுக்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்வது என்பதெல்லாம் கிண்டலுக்கு இடமான அவசியமற்ற விடயங்கள் இவர்களுக்கு.
எனவே, இரகசியப் பேச்சுவார்த்தைகள் உடன்பாடுகள் என்பவற்றிலேயே அவசர நாட்டமும் நம்பிக்கையும் கொண்டவர்களாக இவர்கள் என்றும் இருப்பர். மேலும் தம் முரண்பாடுகளுக்கு, தாம் சற்று முன்னே கூறியவற்றிக்கும் தற்சமய நிலைப்பாட்டிற்கும் உள்ள வேறுபாடுகளுக்கு, அவ்வப்போது மற்றவர்களது நடத்தைகளால் ‘விளக்கம்’ கொடுப்பதையே ஆய்வாகவும் கற்பிப்பர் இவர்.
எனவே, மற்றவரது சமூக-பொருளாதார அரசியல் அகராதிகளுள் ஒழிந்து வாழும் இவர்களது தனிப்பட்ட அரசியல் அகராதியில் எஞ்சிவிடுது ‘யதார்த்தம்’ என்ற ஒரு சொல்லு மட்டுமே.
இறுதியில் இதுவே இவர்களது அரசியல் விஞ்ஞாபனம்.
தேர்தல் பண்டி(கை)க் காச்சல்
இலங்கைத் தீவின் அரசியல் அங்கு வாழும் சாதாரணர்களின் கைகளில் இல்லை என்பதற்கு இன்று போலியாக கத்தி எழுப்பப்படும் தேர்தல் காச்சலே அத்தாட்சி.
சிங்கள நாட்டு அரசாங்கத்தின் உத்தியோக எதிர்க் கட்சியினர் தமது வேட்பாளரை நிர்ணையம் செய்ய முடியாதபடி, அரசின் இராணுவத் தளபதியையே பொது வேட்பாளனாக முன்நிறுத்தப்பட வேண்டியதிலிருந்து தேர்தலின் போலித் தன்மையை ஊகித்துக் கொள்ளலாம். அதே தருணம் இலங்கை அரசியலின் ஓட்டத்தின் போக்கினையும் கணிப்புடன் குறித்துக் கொள்ளலாம்.
இந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பேசும் சமுதாயங்களது பங்கு என்ன என்று அங்கலாய்த்துக் கொள்வதுதான் இன்று எமது அரசியல் கட்சிகளது செயற்பாடாக உள்ளது.
புலிகள் பலாத்காரமாக தமிழரதும் தமிழ் பேசும் சமூகங்களதும் அரசியலை தம்வசம் எடுத்தமையும், காலப்போக்கில் சடுதியான அவர்களது மறைவும் எப்படியான விளைவுகளை ஏற்படுத்தி உள்ளன என்பதை இப்போதுதான் சிலர் உணரத் தொடங்குகிறார்கள்.
புலிகளின் பலாத்கார அரசியலின் நேரடி விளைவாக இஸ்லாமிய மதத்தைச் சார்ந்த தமிழ் பேசும் சமூகங்கள் தம் சுயஇயல்பை ரத்து செய்து சிறீ லங்கா அரசுடன் போவதின்றி வேறு வழி இல்லை என்ற நிலைமையை ஏற்க வேண்டியவரானார்கள். மேலும், இஸ்லாமிய மதவாரியான தேசியச் சித்தாந்தங்கள், பல ஆதி ராகங்களைக் கொண்டிருந்தாலும், கீதங்களாக உருப்பெற காரணகர்த்தர்களும் புலிகளே என்கின்றன அதன் சார்பான எழுத்துக்கள்.
புலிகளது வஞ்சகங்களுக்கும் படுகொலைகளுக்கும் உட்படுத்தப்பட்ட தமிழ் அமைப்புகளோ தமக்கு வேறு வழி இல்லை, பாதுகாப்பிற்காக கொழும்பில் உள்ளோம், புலிகள் இல்லாது போகின் எமது அரசில் நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என்றார்கள். இது நடக்கக் கூடிய காரியமோ இல்லையோ அவர்களது-பாதுகாப்பு என்ற விடையத்தையும், புலிகளது அட்காசத்தையும் உணர்ந்தவர்கள் ‘ஒரு வேளை?’ என்ற கணிப்புடன் காலா அவகாசத்தைக் கொடுத்தார்கள்.
இன்று புலிகளோ இல்லை. அவர்களது ஆதரவாளர் என்று இருந்தவர்களும் எவ்வளவு தூரம் தமது தமழீழ நிலைப்பாடுகளைவிட்டு ஓட முடியுமோ ஓடுகிறார்கள். ஏன், அவர்களது அங்கத்தவரே அரசியல் வரம்புகளை மறந்து வக்கற்று தமது ‘பிசினஸ் இன்ரறஸ்டுகளைக்’ காப்பாற்ற மகிந்தா குடும்பத்தினரிடம் போய்ச் சேர்கிறார்கள்.
இந் நிலையில், “(புலிகளுக்கு) மாற்று-அரசியல் பேசியவர்களது நிலைப்பாடுகள்தான் என்ன?” எனக் கேட்டால், வெவ்வேறு திக்கில் அரசுடன் நிற்கும் அவர்களது ‘யதார்த்த நியாயங்கள்தான்’ காதுகளை நெருக்குகின்றன.
இவற்றிலிருந்து புலிகளது நடத்தைகளால் ஏற்பட்டுள்ள பாதிப்பு எவ்வளவு ஆழமானவை என்பது துலக்கமாகிறது.
புலிகள் தம்கைகளில் அதிகாரத்தை மட்டுமின்றி, அதற்காக தமிழரது மிடுக்கை மட்டுமின்றி, அவற்றின் அடிகோலிகளாக இருக்கும் மக்கள், பொருளியல், மனோவியல் என்ற சகல தளங்களையுமே கைப்பற்றி வைத்திருந்ததால் இன்று தமிழ் மக்கள் மட்டுமல்ல, கூடவே மற்றைய தமிழ் பேசும் சமூகங்களும் அரசியற் தளமற்ற பேதைகள் ஆகி உள்ளார்கள்.
எனவே, சிலகாலங்களுக்கு இச்சமூகங்களது தலைமைகள் பட்டியுள் அடைபடப் போகும் ஆடுகள் போல மேயவைத்து சாய்த்து செல்லப்படுவது, சகிக்க வேண்டிய எதிர்பார்த்த விடயமே.
ஆனால், காலப்போக்கில் தமது சமுதாயங்களின் உண்மையான பலம்-பலவீனம், அடிப்படை நிலைப்பாடுகள், தமிழ் பேசும் சமூகங்கள் இடையேயான ஒத்துழைப்பு-போட்டி, சிங்கள அரசுடனான சர்ச்சை-உறவின் அவசியம், வௌ;வேறு பிரதேசங்களில் தமிழ்-சிங்களம் பேசும் சமூகங்கள் இடையேயான உறவுகள்-போட்டிகள், பற்றிய நிலைப்பாடுகளை சமூக-சுயநிலை பெற்றபின் எடைபோட்டு முடிவுகளை எடுக்கும் சமூகத்-தலைவர்கள் உருவாகுவர் என்பதில் ஐயமே இல்லை.
ஆனால், அதற்கு பல அரசியற் கட்டங்களைத் தாண்ட வேண்டியவையாகவே இச்சமூகங்கள் உள்ளன என்பதையும் ஏற்றாக வேண்டும்.
அரசியற் பிரதிநிதித்துவம்
அதிகாரமயப்படுத்தப்படாத மக்களுக்கு ‘அதிகாரத்-தலைமை’ கொடுப்பதற்கான இரு வழிகளும் அதாவது, தேசியவாதம் இராணுவத்துவம் என்பவை, தவிர்க்கப்பட வேண்டிய நிலையில், தலைமைகள் என்பது வெற்றுக் கோதானவே என்பது தத்துவார்த்த உண்மை மட்டுமல்ல, யதாரத்தங்களின் யதார்த்தமுமே.
எனவே, ஜனநாயகப் பிரதிநிதித்துவம் என்பது தேசியத்தை அண்டிய சித்தாங்களின் கூட்டான வடிவங்களையே தங்கி இருக்க முடியும். அவைகள் அற்றுப் போகும்போது அப்பிரதிநிதித்துவங்கள் வெறுமையானவை என்பதை யாரும்தான் கண்டு கொள்ளலாம். இதனை ஜேவிபியினரது வர்க்கப் போரின் தோல்வியின் பின்னர் தம்மை சிங்களத் தேசியக் கொடியால் போர்த்துக் கொண்டதிலிருந்தும், புலிகள் போனபின் வாயற்று நிற்கும் சகல தமிழ் அரசியற் கட்சிகளது அரசியல் நடத்தைகளிலிருந்தும் அறிந்து கொள்ளலாம்.
அதாவது, வளர்ச்சியற்ற மூன்றாம் உலக நாடுகளில் தேசியவாதம், தேசியத்துவம் என்பவையே இன்றும் மக்களை அணி திரட்டும் வாதங்களாக உள்ளன. சமூக-பொருளாதாரம், பிராந்திய அல்லது சமூக ஜனநாயகங்கள் பற்றியவை இரண்டாம்தர விடயங்களாகவே இடம்பெறுகின்றன. இதனை அவற்றை முன்னெடுக்கும் வர்க்கங்களைக் கொண்டு அடையாளம் காணக்கூடிய போதிலும், பெரும்பான்மையினரது முன்னெடுப்புகளாலான குளப்ப நிலையும் காரணிகளாகின்றன.
எனவே, இங்கெல்லாம் அரசியல் அதிகாரத்தை தேர்தலூடாகவோ பலாத்காரமாகவோ கைப்பற்றிக் கொள்பவர்கள் தேசியவாதத் தன்மை அற்ற நிலையில் பிரதிநிதுத்துவம் மறுக்கப்பட்டவராகவும் ஆழுமை அற்றவராகவும் காணப்படுகிறார்கள்.
இந்நிலையில் தனது சமுதாயத்தையாவது சமூகமாக மாற்றிக்காட்டிட வேண்டிய நிர்ப்பந்தத்தை உணர்ந்தவர் ஆகி புதிய வடிவங்களில் செயலாற்ற முயல்கிறார்கள்.
இச்சூழலில், பெரும்பான்மையினரின் ஜனாதிபதித் தேர்தலில் பேரம் பேசி மக்களது உடமைகளை அவைபாலான இறைமைகளை இவர்களால் பெற்றுத் தரமுடியும் என நம்புவோர் புலிகளது தனிநட்டையும் உமாவின் ‘பொங்கலுக்கு தமிழீழத்தையும்’ காத்திருந்த பேதைகளிலும் பேதைகளாவர். மேலும், சிங்கள ஜனாதிபதிகளை கடந்த மூன்று தடவைகளில் நிர்ணையம் செய்த புலிகளுக்கு என்ன நடந்தது என்பதும் ஒரு பாடம்.
கொழும்பில் இருக்கும் அதிகாரத்தில் பங்கு கேட்பவர்கள் கொழும்பிலேயே தங்கிவிவதும், அங்கேயே தமது அரசியல்-பொருளாதார மூலதனங்களை அமைத்துக் கொள்வதும் தற்செயலான விடயங்களல்ல. சிங்களவாதக் குழுக்கள் பிராந்தியங்களில் ஆரம்பித்திருந்தாலும் கொழும்பு அரசைக் கைப்பற்றுவதையும் அதனை காத்துக் கொள்வதையுமே தமது இறுதிக் கருமங்கள் ஆக்கிக் கொள்கின்றன என்பதும் புதுமையானவை அல்ல.
ஜேவிபியினர் கொழும்பிற்கு அப்புறமானவர்கள் என்பதும், தமிழ் தேசிய வாதிகளாயினும் பிரதேச விடுதலை கேட்டு உயிர் நீர்த்த புலிகளும் அவர்களின் கிழக்கு மாகாண மீதியான TMVP யினரும், கொழும்பைத் தாண்டியவர்கள் என்பதும் தொடர்புகள் இல்லாத விடயமல்ல.
கொழும்பும் அது அமைந்துள்ள மேற்கு மாகாணமும் பொருளாதாரத்தில் இலங்கைத் தீவின் மற்றைய பிராந்தியங்களிலும் பாரியளவில் வேறுபட்டவை என்பதும், அவ்வகையில் பின் தங்கியவர், அதிகாரமயப்படுத்தப் படாதவர்கள், யாவரும் புவியியல் ரீதியில் வறண்ட வலையத்துள் (dry zone) வாழ்பவர்கள் என்பதும் கவனத்திலிருந்து இலகுவில் புறம்பாக்கிடும் விடயமுமல்ல.
சிறீலங்கா அரசுக்கு எதிரான ஆயுதம் தாங்கிய கிளர்ச்சிகள் நகர்புறப்படுத்தப்பட்ட (urbanised) தொழிலாளர்களிடமிருந்து எழவில்லை என்பதும், அவை குடியானவர் சமுதாயங்கள் சமூகங்களது இளைஞர்கள் வசமிருந்தே இதுவரை எழுந்துள்ளன என்பதும் சாதாரண விடயமல்ல.
வெள்ளையரிம் இருந்து பெற்ற விடுதலையின் உற்சாகம் சில வருடங்களே தங்கிற்று. அதன்பின் 60 ஆண்டுகளுக்கு மேலாக சிங்கள மக்கள் பேரில் அரசாங்கத்தைக் கைப்பற்றிக் கொண்ட சிங்களவாதக் குழுக்கள் தீவினை அழிவிற்கே இதுவரை இட்டுச் சென்றுள்ள போதிலும் கொழும்பின் பொருளாதாரம் வளர்ந்த வண்ணமே உள்ளது.
இந்நிலைகளையெல்லாம் ஒருமைப்படுத்தி அவற்றுள் இருந்து கணிப்புகள் சொல்பவன், வறண்ட வலையத்து மக்கள் அதிகாரமயப்படுத்தப்பட வேண்டியவர்கள் என்ற முடிவுக்கே முதலில் வர முடியும்.
அடுத்து அவனது கேள்வி, “அதனை எப்படி நிஜமாக்குவது?” என்பதாகவே அமையும்.
“நாம் இனங்களாகவே அதனை செயற்படுத்த முடியும்” என்பது தேசியவாதத்தின் நியாயமான பதில்.
ஆனால், அதற்கோ உட்சூழலோ ஒருபோதும் சாட்சியமாக இருக்கவில்லை. சரி, இது தர்க்கத்திற்குரிய விடயமென தற்செயலாக ஏற்றுக் கொண்டாலும், புறச் சூழலோ தேசியவாதத்தின் தனிநாட்டிற்கு இடம் கொடுப்பதாக எப்போதும் இல்லை.
“அப்படியானால், வெளியாரது நிர்ப்பந்தம் என்ற ஒரே காரணத்தால், தேசியம் என்ற அபிலாசை அதனூடாக அடையக் கூடிய உடமைகளின் இறைமைகள் எல்லாவற்றையும் மக்கள் மறந்து போகவேண்டியது தானா?”
முடியாது! ஆனால், பாறைக் கல்லுகளுடன் மோதியபடி தாவரங்கள் அவற்றிடையே வளர்வதில்லை. சர்வதேச- சந்தைப்படுத்தலும், பிராந்திய பூகோள-அரசியலும் தேசியவாதத்தின் தனிநாட்டிற்கு சாதகமாக இல்லாது போகினும், பிராந்திய-ஜனநாயகத்தை அவை எதிர்க்கின்றன அல்லது மறுக்கின்றன என்பது தவறு. எனவே தேசியவாதத்தின் தனிநாட்டுக் (separate state) கோரிக்கைக்கும் தேசியத்துவத்திற்கும் (statehood) இடையிலான விளக்கங்களைக் புரிந்தாக வேண்டும். இங்கேதான், ‘காந்தியப் போராட்டத்தின்’ பின்னணியில் தெலுங்கான தேசியத்துவத்தை இந்திய மத்திய அரசு இன்று ஏற்றுக் கொண்டதை நாம் அவதானிக்க வேண்டும்.
ஆனால், இதற்கான அரசியற்-காரணங்கள் பலவென ஒப்பிக்கப்பட்டாலும், ஆந்திராவின் பொருளாதார வளர்ச்சியும் அதனுள்ளான பிரதேசவாத ஏற்றத்தாழ்வுகளுமே அடிப்படைக் காரணிகள் என்பதை நாம் மறந்து போகலாகாது.
ஆகவே, அதிகாரமயப்படுத்தப்படாதவரிடம் பரந்துபட்ட ஓரணிப்போக்கு இடம்பெறும் போதே, அதனுள் தேசியத்துவங்களையும் சமூக-அடையாளங்களையும் அவைசார்ந்த உடமைகளையும் பேணிடலாம் என்பதும், காலப்போக்கில் அவற்றின் இறைமைகளையும் ஊர்ஜிதம் செய்திடலாம் என்பதும் எமது வாதம்.
ஆகவேதான், இலங்கையில் வறண்ட பிரதேசத்திற்குரிய ஒரு பொருளாதாரத் திட்டமும், அதற்கேற்ற போருளாதார-முன்னேற்றத் திட்டமும் வேண்டும் என்கிறோம்.
இவற்றினை இந்த ஜனாதிபதித் தேர்தலும் அதன் வேட்பாளர்களும் விரும்பினால்கூட தர முடியாதவை என்பதையும் நாம் அறிவோம். ஏனெனில், அவர்களுக்கு அதற்கான சமூக-பொருளாதாரச் சிந்தையோ, தொலைநோக்கோ, அதற்கான ஞானமோ இல்லை என்பது பட்டவாரத்தனம்.
இல்லாவிடில் ‘சுதந்திரம்’ பெற்ற 60 ஆண்டுகளில் 40 வருடங்களை உள்நாட்டுப் போர்களில் களித்திருக்கமாட்டார், தமது வங்கிச் சேகரிப்பை பல்லாயிர மடங்காக மாற்றி இருக்க மாட்டார். 50 வருடங்களின் பின்னர் இன்னுமொரு தடவை, இராணுவம் அரசைக் கைப்பற்றப் போகிறது எனக் கூக்குரல் போடமாட்டார்.
ஆனால், இவை அனைத்தையும்விட, இவர்களோ இவர்கள் நடத்தும் அரசாங்களோ சுதந்திரமாக அரசியல் முடிவுகளை எடுக்கும் நிலையை இழந்துவிட்டமையே அதற்கு முக்கிய காரணமாகும் என்கிறோம்.
புலிகளை அழிப்பதற்கு பேரம் பேசியதில் தமது நாட்டின் இறைமைகளை அடகு வைத்தார்கள், நாட்டின் சுய இயல்பின் பெரும் பகுதியை இழந்தனர்.
புலிகளை தோற்கடிப்பது என்ற பேரில் தமிழர்களை அழித்தமையால் மனிதாபிமானத்தையும் தன்-ஞானத்தையும் இழந்தனர், அதனாலும் சுய இயல்பு அற்றவராகினர், இனிமேல் வெளியார் அழுத்தங்களிலேயே முடிவுகள் கொள்பவருமாகினர்.
இலங்கையின் சமுதாய அணிகளை (civil society) எல்லாம் ஒழித்து எஞ்சியவற்றை அரசாங்கத்தை ஆழும் குடும்பங்களின் கைக்கூலிகளாக இராணுவமயப்படுத்தி விட்டதால், சமூக-நீதி அரச-நீதி என்பவை அடியொட்ட அற்றுப் போய், ஆழுமை என்பதும் அரசின் இறைமை என்பதும் தொடர்பற்றவை என்றாக்கினர்.
பொருளாதார ரீதியில் மற்றைய அரசுகளிடம், குறிப்பாக சீனாவிடம் வட்டிக்-கடன் வாங்கிச் ‘சீவனம்’ செய்யும் சிறீ லங்கா தனது எந்தப் பிரதேசத்தையும் பொருளாதாரத்தில் வளர்த்திடும் சுய-வக்கற்றது. ஏன், 2001 இன் பின்னர் கொழும்பிலும் அதனைச் சுற்றியும் இடம்பெற்ற மூலதனத்தில் 40% மேலான பங்கு வெளிநாட்டுத் தமிழர்களது என புள்ளி விபரங்கள் சொல்வதில் பல உள்ளார்த்தங்கள் உண்டு.
ஆகவேதான் அரசும், அதிகார வர்க்கங்களும் கூட அதிகாரமயப்படுத்தப்பட வேண்டியவை ஆகிவிட்டன எனலாம்.
இவ்வாறு, அரசிடமோ அரசாங்கத்திடமோ உண்மையான அதிகாரம் இல்லாத நிலையையே தூர்ந்துபோன-அரசு (failed state) என வர்ணிக்கிறோம்.
எனவேதான், இத்தேர்தல் வெளியாருக்கான காட்சியே அன்றி இலங்கைவாழ் மக்களது முடிவில் தங்கியவை அல்ல என்கிறோம். இவற்றினால் ஏற்படப்போகும் ஏதாவது விளைவுகள் ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டவை என்றும் கருதுகிறோம்.
சர்வதேசிய நிர்வாகிகளுக்கு புலிகளை அழிப்பதற்கான முடிவை எடுப்பதற்கும் அதனை நடைமுறைப் படுத்துவதற்கும் குறைந்தபட்சம் 15-20 வருடங்கள் எடுத்தன என்றால், சிறீ லங்காவை தம்வழி கொண்டுவர சிலகாலம் எடுக்கும் என்பதை புரியாதவர்கள் அல்லர் அவர்கள். அதற்கு அரசியற் குடுப்பங்களது அதிகாரங்கள் பறிக்கப்பட வேண்டும் என்பதையும் பல புதிய ஜனாதிபதிகளை உருவாக்கவும் வேண்டும் என்பதையும் தெரிந்தவர்கள் அவர்கள்.
எனவே, தேர்தலில் நாமும் ஏதாவது சொல்லிட வேண்டும் என்ற அவாவோ, அறிவிலாமையால் எழும் செருக்கோ, எம்மிடம் இல்லை.
தமிழ் பேசும் மக்களும், அவர்கள் போலவே அதிகாரமயப்படுத்தப்படாத சிங்கள மக்களும், இந்நிலைப்பாட்டினை எடுத்துக் கொள்வாரேயாகின், குறைந்தபட்சம் தமது ‘அரசியற்-தலைவர்கள்’ போலாகாது, தத்தமது சுயமரியாதைகளையாவது காப்பாற்றியவராக எஞ்சுவர்.
நன்றி.
ரவி சுந்தரலிங்கம்
12 மார்கழி 2009
Academic Secretary- ASATiC
E-mail: academic.secretary@gmail.com